சனி, 13 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிலிருந்த பயணம்-3


                         நினைவடுக்குகளில் இருந்த பயணம் -3
                       ----------------------------------------------------------
(எனது பதிவுகளை தமிழ் மணத்தில் நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள். தயவு செய்துவேண்டாமே.)

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் 8-ம் தேதி மாலை மதுராவில் இருந்து வாரணாசி நோக்கிப் பயணமானோம். ஏற்கனவே சொல்லி இருந்தபடி என் பெரிய அண்ணாவும் அண்ணியும் இப்போது எங்களுடன். அண்ணா தெரிந்த ஒருவர் மூலம் வாரணாசியில் சங்கர மடத்தில் தங்க ஒரு சிபாரிசுக் கடிதம்கொண்டு வந்தார். வாரணாசியில் நாங்கள் நேராக சங்கர மடத்துக்குச் சென்றோம். அது ஹனுமான் கட்டத்துக்கு அருகில் இருக்கிறது. ஆனால் மடத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு  ஒரே ஏமாற்றம். தங்குவதற்கு இடம் கிடைத்ததே தவிர படுக்கக் கட்டிலோ பாயோ தரப் படவில்லை. அங்கேயே ஒரு மாமி உணவு சமைத்துக் கொடுக்கிறார். முன்னாலேயே சொல்லி விட வேண்டும். அங்கு நாங்கள் சென்றிருந்தபோது உணவறையில் ஒரே கூச்சல். “ சித்தி “ வந்திருக்கிறார் என்ற பரபரப்பு. பார்த்தால் நடிகை ராதிகா அவர் கணவர் சரத் குமாருடன் வந்திருந்தார். அவர்கள் தம்பதி பூஜை செய்ய ஏற்பாடு செய்யவே அந்த வருகை.
என் அண்ணாவுக்குக் காசியில் சிரார்த்தம் செய்ய விருப்பம். என் குணம் தெரிந்து என்னைப் பார்த்தார். நான் எனக்கு எந்த ஈடுபாடில்லாவிட்டாலும் அண்ணா செய்வதில் ஆட்சேபம் இல்லை என்றேன். மறுநாள் காசி ஹனுமான் (g)காட்டில் ஒரு படகில் சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது.
 அதெல்லாம் முடிந்தபின் அங்கிருந்து ஒரு துழாவும் படகில் பிரயாகையில் உள்ள திருவேணி சங்கமத்துக்குப் பயணமானோம். இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாய் இருக்கிறது. படகில் நாங்கள் நால்வருடன் படகோட்டியும் ஒரு சாஸ்திரியும் மட்டும்தான். கங்கை ஆறில் படகில் பயணிக்கும் போது விலங்கு மற்றும் மனித சடலங்களும். நடு ஆற்றில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.... அது பற்றிய சிந்தனைகள் இப்போதே வருகிறது திருவேணி சங்கமம் அருகே படகை நிறுத்தினார்கள். அங்கிருந்து நங்கூரம் பாய்ச்சப் பட்ட இன்னொரு படகுக்கு மாறினோம். அதிலிருந்து இரு பக்கங்களிலும் கயிறால் கட்டப் பட்ட மூங்கில் கழியில் கால்களை வைத்தால் நம் கனத்தால் மூங்கில் கழி கீழே போகிறது. நாம் வெள்ளத்தில் இறங்குகிறோம். அப்போதே முழுக்குப் போட்டு மேலே வர வேண்டும். . இது எல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம். கங்கையில் மூழ்கும் முன் சிரார்த்தம் செய்தவர்களின் மனைவி சற்று முடியை வெட்ட வேண்டும் என்றார்கள். என் அண்ணி முதலில் பிடிவாதமாக, கணவர் இருக்கும் போது முடி வெட்டல் பாவம் என்று சொல்லி மறுத்து விட்டார். பிறகு அண்ணா மிகவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முடி நுனியில் சிறிது வெட்ட அனுமதித்தார் கங்கையில் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.
கங்கையில் படகில் சிரார்த்தம்
 
படகில் பிண்டம் தயாராகிறது
கங்கையில் படகிலிருந்து  ஸ்நான (G) கட்டங்கள்ஒரு காட்சி
கங்கையில் துழாவும் படகில் to பிரயாகை
பிரயாகை சங்கமத்தில் முழுக்கு
பிரயாகையில் அண்ணா


மறுநாள் காசி விசுவநாதர், அன்ன பூர்ணேஸ்வரி விசாலாட்சி சன்னதிகளில் தரிசனம் செய்தோம். காசி விசுவநாதரை நம் கைகொண்டு தொட்டு மகிழலாம். ஆனால் தரிசனத்துக்குப் போகும் போது செக்யூரிடி கெடுபிடிகள் மிகவும் அதிகம். வெளியே பிரயாணம் செய்யும்போது பழங்கள் வாங்கினால் நறுக்க என்று என் மனைவி ஒரு சிறுகத்தி வைத்திருப்பாள். பையை எல்லாம் துழாவித் துழாவி சோதனை இட்ட காவல் துறையினர் கண்களுக்கு அந்தக் கத்தி தென்படாதது அதிசயமே. அங்கு பைரவர் சன்னதியில் இருக்கும் பாண்டா, பிரசாதம் கொடுத்து பக்தர்கள் முதுகில் ஓங்கித் தட்டுகிறார். என் முறை வந்தபோது நான் ஆட்சேபம் தெரிவித்து தட்ட விடவில்லை. காசி விஸ்வநாதர் கோவிலும் ஒரு மசூதியை ஒட்டியே இருப்பதால் பதட்டம் நிலவுகிறது அங்கிருந்து வெளியே வரும்போது ஒரு புடவை கடைக்காரர் நாங்கள் தமிழ் பேசுவது கேட்டு விடாப்பிடியாக அவரது கடைக்கு அழைத்துச் சென்றார். போனவுடன் என் கால்களைப் பிடித்து விடுவதும் தடவிக் கொடுப்பதுமாய் எங்களை அவர் திக்கு முக்காடச் செய்து விட்டார். பேச்சின் ஊடே அவர் பெங்களூரு  ஹலசூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறி ஒரு விசிடிங் கார்டும் கொடுத்தார். எல்லாமே வியாபார தந்திரம் என்பது என் மனைவி அங்கு புடவை வாங்கியதில் தெரிந்தது மாலை கங்கை மாதாவுக்கு மஹா ஆரத்தி எடுப்பதைப் பார்த்தோம். கூட்டம் அதிகமாயிருந்ததால் நாங்கள் இருவர் செருப்புகளுக்குக் காவல் இருக்க மற்ற இருவர் அங்கிருந்த கங்கா மாதா கோவிலுக்குச் சென்று வருவதாகத் திட்டம் அப்போது கோவிலுக்குச் சென்ற எங்கள் அண்ணி காணாமல் போக நாங்கள் அவரைத் தேடத்துவங்கினோம். அவர் கோவிலை விட்டு எதிர் திசையில் சிறிது தூரம் சென்று விட்டார். புறப்பட்ட இடத்துக்கு வர வழி தெரியவில்லையோ என்றே எண்ணினோம் ஆனால் அது மறதி நோயின் ஆரம்பம் என்று அப்போது தெரியவில்லை. ,.
மறுநாள் 11-ம் தேதி முற்பகல் 11 மணி அளவில் அலஹாபாதுக்கு ரயில் ஏறினோம். அலஹாபாதிலும் ஒரு மடத்தில் தங்க அண்ணா ஏற்பாடு செய்திருந்தார். அன்றிரவு அங்கு கழித்தது மறக்க முடியாது. ஏதோ டஞ்சன் போல் ஒரு அறை. அதில் பல மூட்டைகளுக்கு நடுவே எங்களுக்கு இடம். இப்படி என்று தெரிந்திருந்தால் ஏதாவது ஹோட்டல் நாடிப் போய் இருக்கலாமே என்று காலம் கடந்து புத்தியில் உறைத்தது. இரவு நேரமாகி விட்டதாலும் ஊரில் எதுவுமே தெரியாது என்பதாலும் சரியாக திட்டமிடப் படாததாலும் அன்றிரவு எலிகளுடன் வாசம். அலஹாபாத் பயணமே ஹரித்த்வார் ரயில் ஏறத்தான். விசேஷமாக எதையும் திட்ட மிட்டிருக்கவில்லை. சாரனாத் போய் வரலாம் என்றால் ஹரித்வார் ரயில் கிளம்பும் முன் வரமுடியுமா என்ற சந்தேகத்தால் அதைக் கைவிட்டோம். அலஹாபாத் நகரைச் சுற்றிவரும் போது பண்டிட் ஜவஹர்லாலின் ‘ஆநந்த பவனைக் ‘கண்டோம்.அலஹாபாதிலிருந்து ஹரித்வார் போகும் வண்டி வருமுன்பே நாங்கள் ஏறவேண்டிய கோச் இதுதான் என்று போர்ட்டர் ஒருவர் கூறினார். என் அப்பா அம்மா போல் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தவறான செய்தி சொல்ல மாட்டேன் “ என்று அவர் சொன்னவிதம் திருப்தி அளித்தது. மறு நாள் ஹரித்வார் சென்றால் எங்கு தங்குவது என்று நாங்கள் பேசிக் கொண்டு இருந்தபோது சக பயணி ஒருவர். ஹர்த்வாரில் நிறையவே சத்திரங்கள் இருப்பதாகவும் நல்ல வசதிகள் இருக்கும் என்றும் கூறினார். அவரே எங்களை ஒரு நல்ல இடத்துக்குக் கூட்டிப் போவதாய்க் கூறினார். ஹரித்வார் ரயில் நிலையத்துக்கு எதிரே ஒரு இடத்துக்கு எங்களைக் கூட்டிப் போய் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்தார். நன்றாகவே இருந்தது. என்ன ஒரு குறை என்றால் எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப்பட்ட இடங்கள் இரண்டு தலங்களில் இருந்தது ஹரித்வார் அனுபவம் அடுத்த பதிவில்
( வாசக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் என் வீட்டில் சில மராமத்து வேலைகள் நடக்க இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு என்னால் கணினிப் பக்கம் வரமுடியாது. பின்னூட்டம் எழுத முடியாது.பதிவு எழுத முடியாது. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)                              :      .               .                                  .                                    
  

புதன், 10 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிளிருந்த ஒரு பயணம் -2


                              நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம்-2
                              ------------------------------------------------------


நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) என்று சென்ற பதிவை முடித்திருந்தேன்
நாங்கள் மதுரா வந்தபோது இருட்டி விட்டது. ரயில் நிலையத்தில் மின் வெட்டு காரணமாக விளக்குகளே இருக்கவில்லை. முன் பின் தெரியாத இடம் இருட்டு வேறு.ரயில் பெட்டிகளின் வெளிச்சத்தில் இறங்கினோம். நல்ல வேளை என் அண்ணாவும் அவரது மாப்பிள்ளையும் ரயில் நிலையம் வந்திருந்தார்கள். கண்டதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.
முதலில் திட்டமிட்டபோது மதுராவைப் பார்த்துவிட்டு ஆக்ரா சென்று அங்கிருந்து வாரணாசி செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் அண்ணா மதுராவிலிருந்தே ஆக்ரா சென்று வந்து மதுராவிலிருந்தே வாரணாசி பயணப் படலாம் என்றார். அதுவே சிறந்த ஐடியாவாகப் பட எங்கள் ரிசர்வேஷனை மதுராவிலிருந்து வாரணாசி என்று மாற்றினோம். அண்ணாவின் மாப்பிள்ளை ஊர் சுற்றிப் பார்க்க கார் ஏற்பாடு செய்திருந்தார். மதுராவும் சுற்றி உள்ள இடங்களும் கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடம் எனப் படுகிறது. ஆறாம் தேதி காலை முதலில் ஆக்ரா சென்று வருவதாகத் திட்டம் 
அண்ணா அண்ணியுடன் தாஜ் மஹால் முன்
தாஜ் மஹாலிலிருந்து யமுனை ஆறு ஒரு காட்சி.
ஆக்ராவில் டோங்கா ஓட்டினேன்
ஆக்ரா கோட்டை முன்பு.


ஆக்ரா பார்த்து முடித்தபின் ஃபடேபூர் சிக்ரி பயணமானோம் அக்பரின் மாளிகையும் கோட்டைத் தளமாகவும் இருந்தது காணக் கண்கொள்ளாக் காட்சி. படங்கள் எடுக்கத் தயார் ஆன நிலையில் காமிராவில் ஃபில்ம் தீர்ந்து விட்டிருந்தது தெரிந்தது. மிகவும் ஏமாற்றத்துடன்  சுற்றி வந்தோம். இப்போதுதோன்றுகிறது நம் வெங்கட நாகராஜ் மாதிரி இருப்பவர்கள் சென்றால் அதன் அழகு அத்தனையையும் சிறை பிடித்திருப்பார்கள். இப்போதைக்கு கூகிளில் சுட்ட படம் ஒன்றைப் பதிவிடுகிறேன் ஆக்ரா செல்பவர்கள் ஃபடேஹ்பூர் சிக்ரியை தவறாமல் காணச் செல்ல வேண்டும்
ஃபடெஹ்பூர் சிக்ரி ஒரு தோற்றம் ( கூகிள் உபயம்)
மதுராவில் ஒட்டக வண்டி


மறு நாள் 7-ம் தேதி மதுராவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.கிருஷ்ணன் பிறந்த இடம் எனப்படும் மதுரா கிருஷ்ணா கோவிலுக்குச் சென்றோம். ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. எங்களுடன் அண்ணா அண்ணி அவரது மகள் மற்றும் பேத்தியும் உடன் வந்தார்கள். கிருஷ்ணன் கோவிலுக்கு அருகே ஒரு சிறை போல் தோன்றும் இடமே கிருஷ்ணர் பிறந்த இடம் என்றனர். அந்தக் கோவிலைச் சுற்றி வரும்போது அண்ணாவின் பேத்தி பாத்ரூம் தேடித் தனியாகப் போய்விட்டாள். வர நாழியானதும் எல்லோரும் கவலைப் பட ஆரம்பித்தார்கள். இதற்கு நடுவில் என் அண்ணியும் சொல்லாமல் கொள்ளாமல் பேத்தியைத்தேடிச் சென்று விட்டாள். இந்தக் களேபரத்தில் எதிலும் மனம் லயிக்கவில்லை.அந்த நேரம் முதல்தான் என் அண்ணிக்கு  அல்ஜீமர் என்னும் மறதி நோய் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு வழியாக அண்ணியையும் பேத்தியையும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தார் அண்ணா.

மதுரா கிருஷ்ணன் பிறந்த்தாகச் சொல்லுமிடம் ஒரு மசூதியை ஒட்டி இருக்கிறது பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் அங்கும் காசி விஸ்வநாதர் கோவிலிலும்( இதுவும் ஒரு மசூதியை ஒட்டியே இருக்கிறது) ஒரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. அங்கு எந்த புகைப்படமும் எடுக்கவில்லைமதுரா கோவில் படத்தை கூகிளில் இருந்து எடுத்துப் பதிவிடுகிறேன்
ஸ்ரீ கிருஷ்ணா கோவில் மதுரா.



கோவிந்த்ஜி கோவில் பர்சானா
துவாரகா தேஷ்  கோவில்
வெண்ணை திருடும் கண்ணன்.

கிருஷ்ணர் கதையில் வரும் பெயர்களுள்ள ஊர்கள் எல்லாம் சுமார் 30 கிமீ வட்டத்துக்குள் வரும் முடிந்தவரை எல்லா இடங்களுக்கும் போனோம். மதுராவில் உள்ள இஸ்கான் பங்கி பிஹாரி கோவிலில் கிருஷ்ணரின் சில கதை நிகழ்வுகள் அசையும் பொம்மைகளாகக் கண்ணாடிக் கூட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கின்றன. எனக்கு மதுராவில் போகுமிடங்களில் எல்லாம் பலரும் உழைக்காமல் கண்ணன் பெயரைச் சொல்லியே யாசகம் கேட்டது மனதை வருத்தியது அவர்கள தங்களைப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள் நந்த் காவ்ன், பர்சானா, கோவர்தன், த்வாரகேஷ் என்னும் இடங்களில் எல்லாம் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டக வண்டிகளை எங்கும் காண முடிந்தது. யமுனை ஆறும் ஓடுகிறது சில புகைப் படங்களைப் பதிவிடுகிறேன் படங்கள் இடம் மாறி பதிவாகி இருக்கிறது
இஸ்கான் (B)பங்கி பிஹாரி கோவில் மதுரா
அண்ணாவின் பேத்தி.-கண்ணாடி தடுப்பின் உள்ளே யசோதா கிருஷ்ணன்
 
கம்ச வதம் -தடுப்புக்கு வெளியே அண்ணா.
   
ராதாராணி கோவில்- பர்சானா
 
 கோவர்தன் முன்னால் மதுரா
.
 
மத்ராவில் யமுனா நதி பிரம்ம கட்டம்
  மீதி அடுத்த பதிவில் 



     




  

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம் -1


                           நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம் -1
                      --------------------------------------------------------- 
   ( பொதுவாக  தமிழ் மணத்தில் என் இடுகைகளை நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள் வேண்டாமே.ப்ளீஸ்...)

நினைவடுக்குகளில் ஒரு பயணம்
வருடம் 2003. ஆகஸ்ட் கடைசியோ செப்டெம்பர் முதல் வாரமோ  சரியாக நினைவில்லை “பாலா காசிக்குப் போகலாம் என்று ஒரு திட்டம். நீயும் வருகிறாயா.?என் சின்ன அண்ணா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா.?எனக்குத்தான் பயணிக்கப் பிடிக்குமே. கலந்து ஆலோசித்தோம். அப்போது ரயில்வேயில் ரௌண்ட் ட்ரிப் செய்தால் டிக்கெட் பணம் டெலஸ்கோப் ரேட்டில் வசூலிப்பார்கள். அதற்கு ஒரு கண்டிஷன் . போகும் வழி ரூட்டும் வரும் வழி ரூட்டும் ஒன்றாய் இருக்கக் கூடாது.மொத்த தூரத்துக்குக் கட்டணம் கணக்குப் பண்ணி வசூலிப்பார்கள்.குறிப்பிட்ட நாட்களுக்குள் பயணத்தை முடிதுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கண்டிஷன்.அந்த வசதி இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. எங்களுக்கு எங்கள் பெரிய அண்ணாவையும் கூட்டிக் கொண்டு போக விருப்பம். ஆனால் அவர் இருந்தது மதுராவில் அவர் பெண்ணுடன். இந்த மாதிரிப் பயணம் நன்றாக திட்டமிடப் படவேண்டும் போகும் இடங்களுக்கு ரிசர்வேஷன் இல்லாவிட்டால் பாடு திண்டாட்டமாகும். நாங்கள் பெங்களூருவிலிருந்து முதலில் ஜெய்பூர் போய், அங்கிருந்து மதுரா, ஆக்ரா வாரணாசி, அலஹாபாத்  ஹரித்வார், ரிஷிகேஷ் டெல்லி போய் பிறகு நேராக பெங்களூரு திரும்புவதாகத் திட்டமிட்டோம். பெரிய அண்ணா எங்களுடன் மதுராவில் சேர்ந்து டெல்லியில் சின்ன பெண் வீட்டோடு பயணத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால் கடைசி நேரத்தில் சின்ன அண்ணாவின் மனைவிக்கு சில அசௌகரியங்கள் காரணமாக பயணத்தை ரத்து செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் ஒரு முறை திட்டமிட்டதை ரத்து செய்ய எனக்கு மனமில்லை. மேலும் இந்தப் பயண ஆசையைத்  தூண்டிவிட்டதே என் சின்ன அண்ணாதான். திட்டமிட்டபடி நானும் என் மனைவியும் முந்தைய டிக்கெட்டுக்களைக் கான்சல் செய்து எங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கினோம். பெரிய அண்ணா திட்டமிட்டபடி டிக்கெட் வாங்கி கொள்வதாகக் கூறினார்.
அப்போது இந்த ஆன் லைன் வசதி இருந்ததா தெரியாது. எங்கள் யாரிடமும் கணினியும் இருக்கவில்லை. ரயில்வே கைடை வாங்கி எந்த ட்ரெயின் எங்கிருந்து எங்கு  எத்தனை மணிக்கு என்று இரண்டு மூன்று நாள் பிரயாசைப் பட்டு தீர்மானித்தோம். அதன் பிறகு ரிசர்வேஷன் நாங்கள் பயணிக்க இருந்த எல்லா ரயில்களுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் செய்து கொண்டோம். . முதலில் பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூருக்கு அக்டோபர் இரண்டாம் தேதி புறப்பட்டோம். ஜெய்ப்பூரில் எங்கு தங்குவது என்ன என்ன பார்க்க வேண்டும் என்று ஒன்றுமே தெரியாது. என் மூத்த மகன் எக்சைட் கம்பனியில் வேலையிலிருந்தான். அவன் ஜெய்ப்பூர் ஏரியா மானேஜருக்குப் ஃபோன் செய்து எங்களை வரவேற்கவும் ஹோட்டல் வசதி செய்து தரவும் கேட்டுக் கொண்டான். எங்களை ஜெய்ப்பூர் ரயில் ந்லையத்தில் எங்கள் பெயர் கொண்ட தட்டியுடன் திரு முகேஷ் பார்கவா என்ற நண்பர் காத்துக் கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்துக்குள் ஒரு ஹோட்டலில் எங்களைத் தங்க ஏற்பாடு செய்தார். ஜெய்ப்பூரில் கோட்டை சேஷ் மஹல் அங்கு பிரசித்திபெற்ற கோவில்கள் ஹவா மஹல்  ஜல் மஹல் ஆல்பெர்ட் மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று வர டாக்சி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவ்வளவு தூரம் சென்றபின் ஷாப்பிங் இல்லாமலா. என் மனைவி டிப் அண்ட் டை வகையறாவில் ஒரு சாரிவாங்கினாள். ராஜஸ்தான் எம்போரியத்தில் ஒரு சில்க் குயில்ட்டும் வாங்கினோம். அங்கு சென்றிருந்த போது எடுத்த புகைப் படங்கள் சில மீட்டெடுத்தது,
ஜெய்ப்பூர் கோட்டை மதிலில்
ஜெய்ப்பூர் கோவிந்த் தேவ் கோவிலின் முன்  முகேஷ் பார்கவாவுடன்
ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் வெளியே
ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் உள்ளே
   
ஜெய்ப்பூர் ஹவா மஹலிலிருந்து ஒரு காட்சி
ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளே
ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளிருந்து ஒரு காட்சி
ஜெய்ப்பூர் ஜல் மஹல்( நீரில் மாளிகை)
ஆல்பெர்ட் மியூசியம் ஜெய்ப்பூர்
கமல் பாக்(g) தோட்டம் ஜெய்ப்பூர்
பெங்களூருவிலிருந்து அக்டோபர் 2-ம்தேதி காலை 11 1/2 மணிக்குப் புறப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி காலை 6 1/2 மணி அளவில் ஜெய்ப்பூர் சேர்ந்தோம். பிங்க் சிடி என்றழைக்கப் படும் ஜெய்ப்பூர் பார்க்கும் இடங்களெல்லாம் பிங்க் ஆகவே இருக்கிறது ஜெய்ப்பூர் மியூசியத்தில் காணும் சில வாசகங்கள் இந்திய அரசர்கள் ஆங்கிலேயரிடம் மிகவும் விசுவாசமாக இருந்ததைக் குறிப்பிடுவது போல் இருக்கிறது. ஜெய்ப்பூரில் கமல் தோட்டம் என்று பார்க்கவேண்டிய இடம் என்றதனால் பார்க்கப் போனால் மிகவும் ஏமாற்றமளித்தது. பெங்களூரு தோட்டங்கள் முன் அது நிற்க முடியாது.ஜல்மஹல் எனப்படும் நீரில் கட்டப் பட்ட மாளிகை தூரத்தில் இருந்தே பார்வையிட முடிந்தது
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் மிகவும் அனுசரணையாகவே இருந்தனர்.டீ கேட்டால் நம் கண்முன்னாலேயே பாக்கெட் பால் திறக்கப் பட்டு ஃப்ரெஷாக டீ போட்டுத் தந்தார்கள் சப்பாத்தியும் நம் விருப்பத்துக்கு ஏற்ப மெலிதாக இட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) .    



  

புதன், 3 டிசம்பர், 2014

உறவுகள்


                                                 உறவுகள்
                                                 --------------


இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்
திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்
ஆகியோரை இது பற்றி பதிவு எழுத வேண்டிக்கேட்கிறேன் என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். இனி என் பதிவு.

உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

உறவுகளில் தலையாயது, தாய்__மகன், மகள் உறவுதான். தொப்புள் 
கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 
சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 
வெளி வரும்போது, அதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 
வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 
என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 
கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க
மறுக்க முடியாத உண்மை.

ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால்
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும்
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை
நான் விவாதிக்க வரவில்லை.

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப்
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள்
இல்லாமல் குழந்தை இல்லை..ஆக, பிறந்த உடனே  சேய்,தன தாய்
தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின்
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும்.

 ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால்
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம்
எடுபடுவதில்லை.

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும்,
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள்
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள்.
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும்
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். உறவுகள்
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப்
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய்
விட்டதோ.?

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும்
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில்
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல்தானாக வருவதன்றோ.?

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 
மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )
என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 
அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 
மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டி, மீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள்
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன்
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில்
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வது, மிகவும்
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின்
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை.

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும்
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் , வேறு
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும்
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப் 
பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல்
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
அத்தை வீட்டு வாசலிலே, நித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால்
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும்
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன்
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காக, பெற்றவரை
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான்.
சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம்
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 
அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 
விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 
கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 
அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 
காப்போம். 
( இதைத் தொடர வேண்டியவர்களை ,விரும்பினால் பதிவைத் தொடரும் பெண்பதிவகளே குறிப்பிடலாம்)

  .