சில எண்ணங்கள் சிந்திக்கவும் கதையாகவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில எண்ணங்கள் சிந்திக்கவும் கதையாகவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

வேதாளமும் நானும்


                                                             


வேதாள்மும் நானும்
-------------------


“ நீ விக்கிரமாதித்யன் கதைகள் படித்திருக்கிறாயா.? அதில் வரும் வேதாளம் தெரியுமா உனக்கு.?உன் கண்ணால் காணமுடியாது, ஆனால் உன்னால் உணர முடிகிறது .இல்லையா.

அதிகாலையில் எழுந்திருக்கும்போதே என் முதுகில் ஏதோ கனமாக உணர்ந்தேன், இது ஏதடா புதிய வலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், காதருகே கேட்டது குரல்
.
ஆஹா..இது என்ன புதிய அனுபவம்.?பதில் கூற வேண்டுமென்றாலும் யாரிடம் கூறுவது. நான் நினைப்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் அந்தக் குரல்

அதே வேதாளம்தான் . நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்

“ பதில் தெரியாமல் , சொல்லாவிட்டால்...?

“ அதை அப்போது பார்ப்போம். ஆனால் பதில் தெரிந்து சொல்லாமல் மட்டும் இருக்கக் கூடாது. பின் விளைவுகள் விபரீதமாயிருக்கும்

“ விளைவுகள் உன் கதையையும் கேள்வியையும் பொறுத்தது.என்றேன்

வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
“ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்

“ ஊரில் ஒருவன் மட்டும்தானா இருந்தான்.?
குறுக்கே பேசக் கூடாது

“ அது எப்படி.? நீதான் கடைசியில் கேள்வி கேட்பாயே. சரியாக விளங்கிக்கொள்ள வேண்டாமா.?என்றேன்
.
“அதி புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொள்ளாமல் சொல்வதைக் கேள் “ என்று சொல்லித் தொடர்ந்தது வேதாள்ம்.

“ஒரு ஊரில் ஒருவன் இருந்தானாம்.... அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம். சிறுவயதிலேயே அவனது குறை அறிந்து அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர் காது மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவனது பெற்றோரும் அவனை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.அவர் ஒரு கருவியை சிறிது தட்டி அவன் காதருகே வைத்து சப்தம் கேட்கிறதா என்று கேட்டார். இவன் சற்று நேரம் யோசித்துவிட்டு  சப்தம் அடுத்த காதில் கேட்கிறது என்றான் டாக்டர் அதே கருவியைத் தட்டி மறு காதருகே வைத்து ‘சப்தம் கேட்கிறதாஎன்றார். இவனோ மறு காதில் கேட்கிறதுஎன்றான். டாக்டருக்குக் குழப்பமாகிவிட்டது. அவர் அதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்ய , இவனும் கருவி இருக்கும் காதுக்கு மறு பக்கம் உள்ள காதில் கேட்கிறது என்றே சொல்லிக் கொண்டு வந்தான். டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. இவனது பெற்றோர்களிடம் ‘இவனை முதலில் ஒரு மனோ வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள்என்றார்.இவனிடம் இந்தக் காதில் ஒலிக்கும் ஒலி எப்படி மறுகாதில் கேட்கிறது என்றாய் என்று கேட்டபோது அது அப்படித்தானே. இந்தக் காதில் வைத்தால் அதே காதில் எப்படி ஒலிக்கும் ‘என்று தர்க்கம்செய்தானாம்

இப்படியாக இவன் காதின் குறைபாடு குறையாமலேயே வளர்ந்து வந்தான். பள்ளியில் படிக்கப் போனால் அங்கு ஆசிரியர் சொல்வது ஏதும் கேட்காது. கண் இமைக்காமல் அவரது உதடுகளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவர் இன்னதுதான் சொல்லி இருப்பார் என்று இவனாகவே கற்பனை செய்து கொள்வான். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்து பெற்றோரிடம் அடி வாங்குவான்..புத்தி வளரவில்லை என்றாலும் உடல் வளர்ந்தது.பதினைந்து பதினாறு வயதிலேயே நன்றாக வளர்ந்திருந்தான். ஒரு முறை கட்டிடம் கட்டும் இடத்தில் சித்தாள்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் என்ற புகார் வந்தது. இவனை அவர்களிடம் அடி வாங்காமல் மீட்டு வருவதற்குள் போடும் போதும் என்றாகி விட்டது

மாற்றுத் திறனாளி ( handicapped)  என்ற தகுதியில் ITI  பயிற்சி பெற்றான். சில நாட்களில் எப்படியோ அரசின் கழிவு நீர் வாரியத்தில் ஒரு வேலையும் கிடைத்தது. பிறகென்ன. ? திருமணமும் நடந்தது. பெண்ணும் ஏதோ கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றாள். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. இவனுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றியே பேசுகிறார்கள் என்னும் நினைப்பு வரும். இது இப்படியே தொடர்ந்து இவனுக்கு வயது 50-ம் நிறைந்து விட்டது.
இவனுடைய எண்ணங்கள் யாருடனும் பகிர முடியாது. ஒரு வித தனி உலகில் வாழ ஆரம்பித்தான். வேலைக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் பணத்தேவையால் போகாமலும் இருக்க முடியவில்லை. திடீரென்று ஒரு ஞானோதயம் இவனுக்கா இல்லை இவன் மனைவிக்கா தெரியவில்லை. வேலைக்கே போகாமல் பாதி சம்பளம் கிடைக்கும் வழி கண்டு பிடித்தார்கள்.. இவன் வேலைக்குப் போவதுபோல் போய் கையெழுத்துப் போட்டு வருவான். இவனது வேலைகளை இன்னொருவன் செய்து முடிப்பான். அவனுக்கு இவன் பாதி சம்பளம் கொடுப்பான். இன்னும் வயதான பிறகு பென்ஷன் முழுவதும் இவனுக்குத்தானே.

இப்போது கதையின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். இவன் மனசில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடும். அழகான பெண்களைப் பார்த்தால் மனம் தறிகெட்டு ஓடும் ஆனல் எதையும் செய்ய பயம் இடம் கொடுக்காது. வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் தேட ஒரு வழி கண்டு பிடித்தான். நெருங்கிய
உறவில் இருந்த ஒரு பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்தது. பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து அவள் எண்ணுக்கு ஃபோன் செய்வான். எடுத்ததும் கீழ்த்தரமான கொச்சை ஆசைகளை வெளிப்படுத்துவான், பாவம் அந்தப் பெண்பரிதவித்துப் போகும்மெல்லவும் முடியாமல் சொல்லவும் கூச்சப் பட்டு உழன்றது அந்தப் பெண். பொது தொலை பேசி இடங்களில் இருந்தௌ கால் வந்ததால் ஆளைப் பிடிப்பது கஷ்டமாயிருந்தது. ஒருமுறை இந்த மாதிரி தொடர்பு வந்தபோது அவள் போனை அருகில் இருந்த அவள் உறவினரிடம் கொடுத்தாள். நாராசமான கொச்சை வார்த்தைகளின் ஊடே அவனது குரல் மூலம் இன்னாரோ என்ற சந்தேகம் வந்தது.. காவல் துறைக்குச் சொல்லி அசிங்கப்படுவதை விட இதை வேறு மாதிரி கையாளலாம் என்று எண்ணினர். சந்தேகம் ஏற்பட்ட பிறகு ஓரிரு முறை டெலிபோன் வந்ததும் மாறி மாறி உறவினர்கள் கேட்டு குரலை ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.

இவன் வீட்டுக்கு ஒரு நண்பனை மஃப்டி போலிஸ் என்று சொல்லச் சொல்லி அனுப்பினர். போனவன் ஆஜானுபாகு. போலீசை விட போலீஸ் மாதிரி நடித்து  அவன் வீட்டுக்குச் சென்று “ இந்த மாதிரி செய்வது நீதான் என்று காவல் துறைக்குப் புகார் வந்திருக்கிறது. உன்னை கட்டி இழுத்துப் போய் முட்டிக்கு முட்டி தட்டவா?என்று பயமுறுத்தவே அவன் மிரண்டு போய்  தவறை ஒப்புக் கொண்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவனை தற்சமயம் மன்னிப்பதாகக் கூறி இனி இது தொடர்ந்தால் காவல்தான் தண்டனைதான் என்று மிரட்டி விட்டு வந்தார்.

சரி. கதையை நன்றாகக் கேட்டாயா.? இதோ என் கேள்வி.இவன் இம்மாதிரி நடந்து கொள்ளக் காரணங்கள் என்ன.?பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் ......

விளைவு என்ன. ? என்று கேட்டு . “ எதையும் யூகிக்க விரும்பவில்லை. என் பதிவில் எழுதுகிறேன். வாசிப்பவர்கள் என்னைவிட புத்திசாலிகள். அவர்களிடமிருந்து சரியான பதில்கள் வரும். அதுவரைப் பொறுத்துக்கொள் “ என்றேன்.

வேதாளம் எனக்கு இரண்டு நாள் சிறிது அவகாசம் கொடுத்திருக்கிறது. உங்கள் பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.பதில் சொல்லாவிட்டால்...........? வேதாளம் என் முதுகில் இருந்து இறங்க பதில் சொல்லுங்களேன் ......! எனக்குக் கஷ்டம் என்றால் நீங்கள் தாங்கிக் கொள்வீர்களா.?.
---------------------------------------------------------