சூரனின் சதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரனின் சதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 அக்டோபர், 2016

நானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்

                          நானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்
                          -----------------------------------------------------------------
( அதிகம் பறந்து பார்த்து  அறியாத  மயிலின் பறக்கும் படங்கள் பதிவிட்டிருந்தேன். அதையொட்டிக் கவிதை புனையவும்  வேண்டி இருந்தேன். என் துரதிர்ஷ்டம் வாசகர்களின் வலைத் தளங்களில் படங்கள் தெரிவதில்லை எனக் குறைபட்டு பின்னூட்டங்கள். இருந்தன ஆகவே அதையே சென்ற பதிவில் மீள் பதிவாக வெளியிட்டேன்  இந்த முறை பலரும்  கவிதைகள் எழுதி பின்னூட்டமிட்டது  மகிழ்ச்சி அளித்தது சென்ற முறை கவிதைகள் வராததால் நானே ஒரு கவிதை போல் ஒன்று எழுதி இருந்தேன்  அதையே இங்கு மீள் பதிவாக்குகிறேன்  நான்  சற்றே வித்தியாசமானவன்  என்  கற்பனையும்  ஒரு வித்தியாச  கோணத்தில்  ஆத்திக சிந்தனை உள்ளவர்கள் பொறுக்க வேண்டுகிறேன் )


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.


முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்

காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம் ?? 

கடந்த முறை பதிவிட்டிருந்தபோது வந்த ஒரு பின்னூட்டமும்  என்னை ஈர்த்தது (எதிர்ப் பாட்டா) ஆகவேதான் ஆத்திக சிந்தனை உள்ளவர்கள் பொறுக்க வேண்டும்  என்று மேலே எழுதி இருக்கிறேன் இதோ அந்தப் பின்னூட்டம் 


பறந்தறியா மயில்தான்நீ யென்றாலும் சூரனே
பறந்துன்னைப் பிடித்திழுத்துப் பூவுலகம் கொணர்ந்ததுவும்
அதன்பின்னே மரமாகி நின்றவனை வேலாற்பிளந்து
பாதியுயிர் தன்னுள்ளே தனதாக்கிக் கொண்டுவிட்டப்
பறந்தறியா மயில்மீது பறந்துலகைச் சுற்றிவந்து
கனியதனை அண்ணனுக்குத் தரச்செய்த சூராதிசூரன்
கந்தனவன் செய்திட்ட மாயமன்றே நீயறிவாய்!

ஆருக்கும் கிட்டாத மாங்கனியை அண்ணற்கீந்து
பாருலகைக் காக்கவென்றோர் ஆண்டியாய்ப் பழநியிலே
சீராக நின்றிடவே செய்ததுவும் கந்தலீலை!
ஊரார் இதையறிவார்! நீயுந்தான் நன்கறிவாய்!
பறக்கவொணாப் பறவையும் பறந்திடுமே திருவருளால்!
அதைக்காட்ட வன்றோதான் வாகனமாய் நினைக்கொண்டான்
கந்தனவன் பேர்சொன்னால் நடவாதும் நடந்திடுமே
வானேறிப் பறப்பதென்ன விந்தையிங்கு சொல்மயிலே!

முருகனருள் முன்னிற்கும்!