தொடர்பயணம் இராமேஸ்வரம் -2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்பயணம் இராமேஸ்வரம் -2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தொடர்பயணம் இராமேஸ்வரம் -2


                          தொடர்பயணம் இராமேஸ்வரம் -2
                          ------------------------------------------------------
இரண்டாம் நாள் அதிகாலையிலேயே ஸ்படிகலிங்க தரிசனம் ஆளுக்கு ரூ.50/- டிக்கெட் என்று கூறி இருந்தான் மச்சினன் இராமநாதஸ்வாமியைத் திரை போட்டு மறைத்து அதன் முன்னே ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்திருந்தார்கள் அதைக்காண என்று கூட்டமோ கூட்டம் சிதம்பரத்தில் தினமும் பக்தர்கள் முன்னிலையில் ஸ்படிக லிங்க அபிஷேகமே நடைபெறுகிறது தனியே பணம் ஏதும் வசூலிப்பதில்லை இராமேஸ்வரத்தில் ஸ்படிகலிங்கத்தை காணவே வசூல்  எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததுஎன் கணக்குப் படி சுமார் மூவாயிரத்துக்கும் மேலானவர் கட்டணம் செலுத்தி ஸ்படிக லிங்க தரிசனம் செய்திருப்பர். கோவிலுக்கு வருமானத்துக்கு இதுவும் ஒரு வழியோ.?
அன்று அக்னிதீர்த்தம் என்னும் கடலில் நீராடி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலிருந்தும் வாளி வாளியாக நீராட்டப்பட்டோம் அதற்குப் பின் அறைக்குச் சென்று குளித்தோம்  அவர்கள் சொல்படி இவ்வாறு நீராடியதால் எங்களுக்கு எல்லா வளமும் சம்பவிக்க வேண்டும்  காலை உணவு உண்டு சுற்றுலா கிளம்பினோம்
இதற்கு முன்பே இரு முறை இராமேஸ்வரம் வந்திருக்கிறேன்சென்ற முறைகளில் தனுஷ்கோடி வரை செல்ல முடியவில்லை. ஆகவே இந்த முறையாவது தனுஷ் கோடி வரை சென்று அழிந்து போன சின்னங்களின் மிச்சத்தையாவது காண வேண்டும் என்றிருந்தது.
 தனுஷ்கோடி வழி போகும் போது கெந்தமான பர்வதம் என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் ராமர் பாதங்களை தரிசிக்கக் கூட்டிச் சென்றார் ஓட்டுனர் ஒரு சிறிய குன்றின் மீது இரு கருங்கல் பாதங்களைக் காண்பித்து ராமர் பாதம் என்கிறார்கள் இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல்  வெளிப்படுகிறான் சிறிய குன்றின் மீதேறி அங்கிருந்து காண முடியும் காட்சிகளை ரசித்தேன் வெயிலுக்கு இதமாக தர்பூஸ் துண்டங்களை விற்கிறார்கள் நாவுக்கும் தொண்டைக்கும் இதமாய் இருந்தது தனுஷ் கோடி வரை செல்ல தார் பாதை போட்டிருந்தும் அதில் பயணிக்க அது அதிகார பூர்வமாகத் திறக்கப்படாததால் அனுமதி இருக்கவில்லை. கடலோரம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினோம் .அங்கு பயணிக்க சில வான்கள் இருக்கின்றன. ஆனால் அதில் செல்வது உசிதமல்ல என்றும் மேலும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் கேட்கிறார்கள் இன்னுமொரு வாய்ப்பு இருந்தால் தனுஷ் கோடி செல்லலாம்  என்று காற்று போன பல்லூன்  போல் திரும்பினேன்

இந்தமுறை சென்றபோது அங்கும் ஒரு பாபா கோவில் வந்து பிரபலமாகி வருவது தெரிந்தது. 2012-ம் ஆண்டு கட்டப்பட்ட பாற்கடலைக் கடையும் சிற்பங்கள் கொண்ட முகப்புடன் கூடிய ஒரு கிருஷ்ணன் கோவில் புதுமையாக நன்றாக இருக்கிறது சென்று மகிழ்ந்தோம் கண்ணாடி கூண்டுக்குள் அசையும் மற்றும் அசையாத சிற்பங்கள் எல்லாமே குகையைக் குடைந்து கட்டியதுபோல் இருக்கிறது (கடந்த பதிவுகளில்  நான் எடுத்திருந்த காணொளிகள் சில திறக்காததால் காணொளிகளை முதலில் யூ ட்யூபில் இணைத்து பின் இங்கு பதிவிடுகிறேன்  அந்தப் பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன் )
ராமர் பாதத்திலிருந்து ஒரு காட்சி
   
ராமர் பாதம் இருக்கும் குன்று
பிரசித்தி பெற்றுக் கொண்டிருக்கும் சாய்பாபா கோவில் 
கிருஷ்ணன் கோவில் முகப்பு 
கோவர்த்தன கிரிதாரி 
ராமர் லிங்கம் வடிக்கிறார் 
பசுவின் மடியிலிருந்து நேராக.....!
காளிங்க நர்த்தனன் 
கண்ணனின் விளையாட்டு
கிருஷ்ண பிரேமிகள்.... !
கண்ணனும் குசேலனும் 









அதன் பின் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோவிலில்  மிதக்கும்  கற்கள் ராமர் பாலம் கட்ட உபயோகப்பட்டவை என்று கூறி கற்களைக் காட்டி அவற்றைப் பூசை அறையில் வைத்து வழிபடச் சொல்லி விற்கிறார்கள் பலரும் வாங்கியும் போகிறார்கள் இராமேஸ்வரத்துக்கு வட இந்திய யாத்திரிகர்களின் வரவே அதிகமாகி இருக்கிறது நம்மைவிட பக்தி மிகுந்தவர்கள் போல் தென்படுகின்றனர். அங்கிருந்து லக்க்ஷ்மணதீர்த்தம் ராமர் தீர்த்தம் என்று இரண்டு தடாகங்களைக் காட்டுகிறார்கள்  செய்த பாப விமோசனத்துக்காக நீராடிய/ நீராடப்படவேண்டிய  தீர்த்தங்கள் என்கிறார்கள்
மாலையில் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூவின் மேல்தளம் சென்று இராமேஸ்வரத்தின் பல பகுதிகளையும் கண்டு ரசித்தோம் அதன் பின் 
 அப்துல் கலாமின் குடும்பத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டு  பேசப்படும் க்யூரியோஸ் கடையில்  ஷாப்பிங் செய்யப்பட்டது. இப்படியாக இராமேஸ்வரத்தில் இரண்டாம் நாளும் சென்றது 


ஹோட்டலின் மேல் தளத்தில்
  
ஹோட்டலின் மேல் தளத்தில் இருந்து ஒரு காட்சி 
எங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு காகம் 
சுற்றுப்புறத்தைக் கவர் செய்து எடுத்த காணொளி இதை முதலில் யூ ட்யூபில் ஏற்றிப்பிறகு பதிவில் ஏற்றி யிருக்கிறேன்  இல்லாவிட்டால் காணொளி திறப்பதில்லை  ஏன் என்று வித்தகர்கள் கூறலாமே 


     ( தொடரும்  )