பதிவுகள் எண்ணங்கள் அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுகள் எண்ணங்கள் அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நானும் என் ஆரம்பகாலப் பதிவுகளும்


                               என் பதிவுகளும் வரவேற்பும்
                                --------------------------------------



திரு. தமிழ் இளங்கோ அவர்கள் முதல் பதிவின் சந்தோஷம் எனும் தலைப்பில் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே என் கணினி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது முதல் பதிவின் சந்தோஷம் என்று எழுதுவதைவிட என் பதிவுகளும் வரவேற்பும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்


எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுதைப் போக்குவதற்கு மட்டுமல்ல. என்னை மனசளவில் மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம் நம் மக்களிடையே நிலவும் ஏற்ற தாழ்வுகள்தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் இது குறித்து எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்களென்பது புரியாத ஒன்று.. நான் எழுதுவதன் மூலம் என் எண்ணங்களைப் பதிவிடுவதன் மூலம் அது குறித்த பிறரின் சிந்தனைகளை அறியவும்., முடிந்தால் ஒரு ஆரோக்கியமான சர்ச்சைக்கு வழிவகுக்கவும் உதவும் என்று எண்ணினேன்.என் பதிவுகளை வெறுமே பிறர் பாராட்ட வேண்டும் என்று மட்டும் நினைத்ததில்லை.அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடவும், அதை எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஏற்கவும் தயாராயிருந்தேன்.. ஆனால் என் அனுபவத்தில் பதிவுகளை வாசிப்பவர்கள் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான கருத்துக்கும் வழி வகுத்து இருக்கிறது


ஆகஸ்ட் மாதம் 2010-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தேன். மூன்றாண்டுகாலம் ஆகிறது. 380 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதினேன். தமிழ் மணத்திலிருந்து தமிழில் எழுத வேண்டினார்கள்.MUSINGS எனும் பதிவு எழுதினேன். பதிவுலகில் சற்றும் அறியப்படாதவன். இருந்தும் ஏறத்தாழ 70 பேர் படித்திருந்தனர். ஒருவராவது கருத்துப் பதிவு செய்யவில்லை அதன் பின் போராட்டங்கள் ஒரு கண்ணோட்டம் என்று தமிழில் எழுதினேன். அதுவும் சுமார் நூறு பேர்களால் வாசிக்கப் பட்டது. அதற்கும் யாரும் கருத்துப்பதிவு செய்யவில்லை. போகட்டும் நமது குணாதிசயத்தைப் பற்றி எழுதுவோம் என்று மறதி போற்றுவோம் என்று எழுதினேன். இதற்கும் எந்தக் கருத்தும் பதிவாகவில்லை. அதன் பின் வலைப்பூவில் பதிவுகள் ஒரு விமரிசனம் என்று எழுதி இருந்தேன்.அதற்கு சில கருத்துக்கள் கிடைத்தன. திரு காளிதாஸ் ( இவர் இப்போது முகநூல் பக்கம் போய்விட்டார்) திரு அப்பாதுரை. திரு சுந்தர்ஜி போன்றோரின் பின்னூட்டங்கள் சற்றே தெம்பைக் கொடுத்தது.
அதுவரை அந்தக் காலத்தில் எழுதிய சில காதல் கவிதைகளையும் இடுகையாக இட்டுக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதல் தோன்றி செய்யாத குற்றம் என்ற ஒரு பதிவு எழுதினேன். . உண்மையைச் சொன்னால் அந்தப் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டங்கள் நான் எழுதுவதை வாசித்து ரசிக்கவும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.அந்தக் காலத்தில் வாசிக்காதவர்கள் இப்போது வாசித்தால் எந்த மாதிரிப் பின்னூட்டங்கள் வரும் என்று அறிய, அதையே ஒரு பதிவின் லிங்க்காகக் கொடுத்திருந்தேன். பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது அது.
அதற்கு அடுத்த பதிவாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இயலாமை என்று ஒரு பதிவு எழுதினேன். அது குறித்த விமரிசனமாக பிற்காலத்தில் ஒரு பின்னூட்டம் வந்ததைக் குறிப்பிடலாம்
எழுத் எழுத வாசகர் வட்டம் சற்றே அதிகரிக்க பின்னூட்டங்களும் வர ஆரம்பித்தன. RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்ற ஆங்கிலப் பதிவை தமிழாக்கி எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் என்று எழுதினேன்.

பின் என்ன ? சாதாரணன் ராமாயணம் என்னும் பதிவில் ஆறு காண்ட ராமாயணத்தை ஒரே வாக்கியத்தில் ஒரு அசாத்திய உந்துதலோடு எழுதினேன். பலரது பாராட்டுக்களைப் பெற்ற அதை நானா எழுதினேன் என்று சிலரைக் கேட்கவும் வைத்தது. இப்போது அதைப் படித்துப்பார்க்கும்போது எனக்கே அந்த சந்தேகமெழுகிறது....!இந்த நேரத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து எழுத வைத்தவர்களில் முக்கியமானவர்கள் சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். திரு. ஹரணி, திரு சுந்தர்ஜி, திருமதி.சக்தி பிரபா, டாக்டர் பழனி கந்தசாமி . அப்பாதுரை திரு ஜீவி ஆகியோருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அண்மைக் காலமாக திரு, திண்டுக்கல் தனபாலனை குறிப்பிட வேண்டும். எங்கோ ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!  

( சில பழைய பதிவுகளின் லிங்க் கொடுத்திருக்கிறேன்.படித்துப் பார்க்கலாமே. MUSINGS, மறதி போற்றுவோம், இயலாமை, எண்ணத் தறியில் எட்டுமணிநேரம் )    .