கீதை- பதிவுக்கு ஒரு முன்னுரை....
----------------------------------------------
முன்பு நான் ஒரு ஹிந்து என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் கிருஸ்துவர்களுக்கு ஒரு பைபிள், இஸ்லாமியருக்கு ஒரு குரான், என்பது போல்
ஹிந்துக்களுக்கான மத நூல் எது எனும் கேள்விக்கு மதநூல் என்று தனியாக ஏதுமில்லை
என்றும் ஸ்ருதிக்களும் ஸ்மிருதிக்களும் ,
வேதங்களும் உபனிஷத்துக்களும் கீதையும் ஹிந்துக்களின்
நூல்களாகக் கொள்ளலாம் என்றும் எழுதி இருந்தேன்.ஆனால் இவற்றில் எதையாவது நீ
கற்றிருக்கிறாயா என்னும் கேள்வி அவ்வப்போது மனதுக்குள் எழும். திருக்குறள் பற்றிப்
பலரும் பேசுகிறோம். கம்பராமாயணம் பற்றிப் பலரும் எடுத்துக்காட்டிப் பேசுகிறோம்.
இதேபோல் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறோம். இவற்றில்
எதையாவது நாம் முழுவதும் கற்றிருக்கிறோமா என்னும் கேள்விக்கு நெஞ்சில் கை வைத்து
உண்மையாக பதில் பேச பலருக்கும் இயலாதது. குறைந்த பட்சம் நாம் மேற்கோள் காட்டும்
பகுதிகளையாவது நாம் ஓரளவாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா.?
பல நூல்களை நாம் கற்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்று
அவற்றில் சொல்லி இருக்கும் விஷயங்கள் பலவும் நம்மால் கிரகிக்க முடிவதில்லை இரண்டு
நம் மொழி அறிவு. ( தமிழானால் பொருள் விளங்கா நடை, சம்ஸ்கிருதமானால் அது வழக்கில்
இல்லாததால் நம்மால் படிக்க முடியாமல் இருப்பது) மூன்று அவற்றை விளக்கி உரை
கூறுபவர்களின் வியாக்கியானங்கள் ஒருவருக்கொருவர் மாறு படுவது. இருந்தாலும் ஒரு
முறையாவது பொருள் புரிந்து படித்துக் கிரகிப்பது நலமாக இருக்கும் . இந்த
முயற்சியின் விளைவாக பகவத் கீதையை தமிழில் படிக்கத் துவங்கி இருக்கிறேன் நான்
படிக்கத் துவங்கி இருப்பது ஸ்வாமி சித்பவாநந்தரின் விரிவுரை.பல ஆண்டுகளாக என்னிடம்
இருக்கும் இந்த நூலை முதலில் எடுக்கவே தயக்கமாய் இருந்தது நான் சுவாமி
சின்மயாநந்தாவின் கீதையின் 18-நாள்
விளக்கச் சொற்பொழிவை 1960-களில் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறேன் கேட்கும்போது
விளங்குவது போல் இருந்தது நினைவு படுத்தும் போது தெளிவாகத் தெரிவதில்லை என்
வலையில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் தொடராக எழுத உத்தேசம். அது எப்படி
வரப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலில் நான் படித்துக்
கிரகிக்க வேண்டும் பின் அதை வலையில் பகிர வேண்டும். என் உள்மனது இது மீண்டும் உன்
ஏரியா அல்லவே என்கிறது. முதலில் முகவுரையாகச் சில கருத்துக்கள். கூடியவரை
எளிதாகவும் சுருக்கமாகவும் எழுத உத்தேசம் ( இந்தப் பதிவில் நான் என் கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை.படித்துக் கிரகித்ததை எழுதுகிறேன் சில வார்த்தைகளின் பொருள் முழுவதும் விளங்குவதில்லை. . ஒரு கனமான விஷயம் எழுதலாமா என்று தோன்றினாலும் துவங்கி விட்டேன்.)
வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டாலும் அவற்றிலிருந்து
தெள்ளி எடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெப்பொருள்
ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம்.
இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது இன்னொரு பெயர். உபநிஷதங்களில் உள்ள
கருத்துக்களையெல்லாம் தெளிவு பட வைக்கிறது பகவத் கீதை. பிரம்ம சூத்திரம்
உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகிய இம்மூன்று நூல்களும் பிரஸ்தானதிரயம் என்னும் பெயர்
பெறுகிறது. இந்து மத நூல்கள் எனும் கேள்வி எழும் இடத்தில் அவை பிரஸ்தானதிரயம்
என்று கூறலாம்.
பகவத் கீதை ஒரு கொலை நூல். அதைப் படிக்கலாகாது என்று
கூறுவோரும் உண்டு, எப்படியாவது எதையாவது பேசி அர்ஜுனனைப் போரில் புகுத்திவிட
வேண்டும் என்னும் நெருக்கடி நேரத்தில் கூறப் பட்டது கீதை. கொலை புரிதல்
பாதகர்களின் செயல். கொலை மறுத்தல் சமயக் கோட்பாடு. கொலை செய்வதும் கொலை மறுத்தலும்
ஒவ்வா. சமய நெறியினைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையாலும் தொடக்கூடாது என்பது
ஒரு வாதம். கீதை இக்கோட்பாட்டின் மூலத்தையே ஆராய்கிறது. இயற்கை முழுவதும் ஒரு
முடிவில்லாக் கொலைக் களம் என்கிறது கீதை. அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள்
நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும்
உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர்
உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை
அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர்
இறக்கிறது. உடலை உண்டுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள் படுகிறது.
சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப் படுகிறது..ஆக
படைத்தல் காத்தல் மறைத்தல் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. மரணத்தை உணர்ந்து
கொண்டால் மற்ற இரண்டும் எளிதாக விளங்கும்.
”இயற்கையைக் கொலைக் களன் என்றால் கீதையை கற்றுக் கொண்டே
ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்புவோர் கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள்
வந்தான பிறகு நீ கொலை செய்யாதிருக்க முடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி
நிற்காதே. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு எனும் போராட்டத்தை வெற்றிகரமாக
நிகழ்த்து.ஆயினும் அதனிடத்துப்பற்று வைக்காதே”. இயற்கை எனும் கொலைக்களத்தில் வாழ்வு
எனும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுவதற்கு பகவத் கீதை எனும் கொலை நூலை ஒவ்வொருவரும்
கற்க வேண்டியது அவசியம்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது கெட்டவர்கள் தோன்றி பெரிய
குழப்பத்தை கிளப்புவதற்கு கீதை ஆதரவு தருவது போல் தோன்றும் வெடிகுண்டு போட
முயலுபவருக்கு அது வெடி மருந்து போன்றது.கொல்லுபவன் கொலை
பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது.கருமம் மனிதனை பந்தப் படுத்தாது என்றும் அது
போதிக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்துவிட்டால்
என்னாவது என்பது கேள்வி.இவ்வாறு கீதையின் மீது ஆக்ஷேபம் கொண்டு வருவோர் உளர்.
(இதை எழுதும்போது என் நண்பன் ஒருவன் கூறியது நினைவுக்கு
வருகிறது. மனிதன் எந்தச் செயலைச் செய்தாலும் அது கீதையின்படி சரியே என்று justification செய்து தப்பித்துக் கொள்ள வழி இருக்கிறது என்பான்.)
கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கிறதா என்று வாசிப்பவர்கள்
தெரிந்து கொள்வது அவசியம். மதாச்சாரியர்களும் ,சமூகத்துக்கு நல்வாழ்வு
வழங்கியவர்களும் கீதா சாஸ்திரத்தைப் பின் பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான
போதனை உடையதாய் இருக்க முடியாது. அறிவிலிகள் ஒரு நூலை முழுவதுமாக அறிந்து கொள்ள
வில்லையானால் அது நூலின் குற்றமன்று. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக
சாஸ்திரத்தை கீழ் மக்கள் பொருள் படுத்துவார்களேயானால் அது அந்த சாஸ்திரத்தின்
குற்றமாகாது. பல்லாயிரம் மக்களுக்கு பரமார்த்திக வாழ்வுக்கு அது வழி
காட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதை செய்யவல்லது. புலனடக்கமும்
பக்தியும்தன்னலத் தியாகமும். தபசும் தொண்டும் புரிதலும் இல்லாத கீழ் மக்களுக்கு
கீதை உதவாது என்பது கோட்பாடு.
நல்ல கல்வி பெறல், நல்ல பயிற்சி பெறல் ராஜ்ஜியம் நிறுவுதல்,
திரவியம் தேடுதல்,போன்ற இம்மையில் இன்பமூட்டும் யாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர்.
நெருக்கடி நிலையில் செயலாற்ற அர்ஜுனன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படவில்லை.அவன்
அச்சுதனிடம் சிரேயஸ் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பிக்கிறான் அவனது மனநிலை
சிரேயஸைப் பெறுவதற்கு பண்பட்டிருந்தபோது கிருஷ்ணன் உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப்
புகட்டுகிறான் யோகமும் பக்தியும் ஞானமும் அடங்கப் பெற்றது சிரேயஸ்.. அது முக்தி
மார்க்கம்
பகவத் கீதையில் முதல் அத்தியாயத்தில் பகவானின் பேச்சு
ஒன்றுமில்லை.
இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களில் அவர் திருவாய்
மலர்ந்தருளுகிறார். வலிவு படைத்தவனே
வாழ்வுக்குரியவனென்பது கீதையின் கோட்பாடு.
மனிதனின் அறிவு எல்லாத் துறைகளிலும் வளர வளர வேறொரு
பேருண்மையும் உணரப் படுகிறது பரந்த அறிவு வளர வளர மேலும் அறிய வேண்டியது
அகண்டகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எதை அறிந்தால் அறிவு
பூர்த்தியாகும் அனைத்துக்கும் மூல காரணம் எது என்பதை சான்றோர்கள் அனுபூதியில்
உணர்ந்தனர். மூலதத்துவத்தை அறிந்த பின் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கிறது. மூலப்
பொருளைப் பற்றிய அறிவு பிரம்ம வித்தை என்று பெயர் பெறுகிறது. இந்த பிரம்ம
வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும் அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா பின்
வாங்குவதா என்று. இவ்ற்றில் ஒன்றைக் கூறுவதற்குப் பதில் பிரம்ம வித்தையை
எடுத்தியம்பினார். புது சந்தேகங்கள் பிறக்க இடமில்லாது அறவே அகற்றிவைப்பது சாலச்
சிறந்ததாகிறது.ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து
அளிக்கிறார்.
கீதையில் 18 அத்தியாயங்களில் உள்ள 18 யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடைத்து
வைக்கலாம்.கர்ம யோகம், ராஜயோகம், பக்தி யோகம்,மற்றும் ஞான யோகம் என்பவையே அவை.
ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகம் என்றும்,பிறகு ராஜயோகமாகப் பரிணமிக்கிறது என்றும்
அதிலிருந்து பக்தி யோகம் என்று ஓங்கி. இறுதியில் ஞான யோகமாக முற்றுப் பெறுகிறது
என்று பொருள் கொள்வது ஐதிகமாக வந்துள்ளது. இந்த நான்கினுள் வேற்றுமையோ தாரதம்யமோ
பாராட்டுகிற அறிகுறிகளைக் காண முடியாது.ஒரு யோகம் மற்றொன்றுக்கு முந்தியதுமல்ல
பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல. வாழ்க்கை எனும் ரதத்துக்கு அவர் நான்கு
யோகங்கள் எனும் குதிரைகளைப் பூட்டுகிறார். அவை வெண்குதிரைகளாக இருப்பது அவற்றின்
சாத்துவிக இயல்பையும் தூய்மைத் தன்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து
செலுத்துவதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும் நான்கு யோகங்களும் ஏக
காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப் படும்போது வாழ்க்கையின் ல்ட்சியம் இனிது
நிறைவேறுகிறது.
பகவத் கீதை மஹா வாக்கிய விளக்கமாக அமைந்திருக்கிறது மஹா
வாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்துமாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச்
சொல்கிறது. மஹாவாக்கியங்களுள் ஒன்று தத்
த்வம் அஸி
அதில் த்வம் –நீ, தத்-அதுவாக, அஸி-
இருக்கிறாய். என்று பொருள் படும்
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களும் த்ரிஷட்கம் அல்லது 3x6 என்று அறியப்படுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும் த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை,
அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம்
அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான
அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா
ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று
பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான
வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்.
பகவத் கீதைக்கு விளக்கங்கள் அல்லது பாஷ்யங்கள் எழுதியவர் பலர்.
அவற்றில் சில முரண்பாடுகள் இருக்கலாம் பாஷ்யக்காரர்களில் பெரும்பாலோர் அத்வைதம்
துவைதம் விசிஷ்டாத்துவைதம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருப்பர்.
கீதையின் தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவது அவர்கள் மனப்பான்மைக்கு ஏற்றபடி
மாறி வருகிறது. பகவத் கீதையை ஒரு கண்ணாடி என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷ்யமும்
அதில் தோன்றும் பிம்பம்போன்றது அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும்
தென்படுகிறது.கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது.அங்ஙனம்
ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக் கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்கியானம்
ஒன்றுக்கும் உதவாது. ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம்
எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய
பேச்செல்லாம்வெறும் பெயரளவில் என்றும்
கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது
புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை
பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப்
பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை
நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில்
அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும்
இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப்
பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன் உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள்
இருக்கின்றன. அவற்றை will, emotion,
cognition என்று
நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி
ஸ்வரூபிணியாக அன்னை பராசக்தியே எழுந்தருளி உள்ளார் என்பது கோட்பாடு. மனதில் இந்த
மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிர்தல் வேண்டும் அப்போதுதான் பண்பாடு
பூர்த்தியாகிறது. கீதா சாஸ்திரம் இவற்றை முறையாக இயம்புவதால் அது எல்லோருக்கும்
பொது நூலாகும்
. .
. இனி வரும் தொடர்களில் கீதையின் சுலோகங்களுக்கு தமிழில் பதவுரை போல் எழுத உள்ளேன். முதலில் தமிழில் transliterate செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் அதை என்னால் சரியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வித்தியாசமான பதிவு ஒரு வித்தியாசமான பதிவரிடமிருந்து.... பார்ப்போம் வரவேற்பு எப்படி என்று.
….
.
.
,
ரொம்பப் பெரிய பதிவு. விஷயமும் பெரிய விஷயம். என்றாலும் படிச்சேன். தொடரக் காத்திருக்கிறேன் இதுக்குக்கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஒண்ணும் தெரியாது. :))))
ReplyDeleteஒரு வித்தியாசமான பதிவு ஒரு வித்தியாசமான பதிவரிடமிருந்து....
ReplyDeleteபாராட்டுக்கள்..
சுவாமிஜியின் பகவத்கீதை வகுப்புகளுக்கு நான் சென்றபோது
அங்கிருந்தவர்களில் நாந்தான் வயதில் சிறியவள்..
எனவே ஆசிரியர் என்னை பேபி , என்றும் குழந்தை என்றும் விளித்து ஸ்லோகங்களைப் படிக்கச்சொல்லுவார்..
அந்த இனிய நினைவுகளை தங்கள் பதிவுகள் மீட்டெடுத்தன..
ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா..!
இது ஒரே நாளில் எழுதிய பதிவாகத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பலநாள் சேர்த்து கோர்த்த மணி ஆரம் போன்று தோன்றுகிறது. இன்னும் இரண்டு முறை படித்த பிறகுதான் என்னால் கருத்துரையைச் சரியாகச் சொல்ல முடியும்.
ReplyDelete****பல நூல்களை நாம் கற்க முடியாமல் இருப்பதற்குக் காரணம்****
ReplyDeleteஅன்றைய காலகட்டத்தில் நாம் இன்று வாழவில்லை. அதனால் ஒரு சிலரால் அன்றைய போதனைகளை இன்றைய வாழ்வில் ப்ராக்டிக்கலாக பயன்படுத்த முடியாது..
மதநூல் என்றாலே நியாயப்படுத்தல் என்றாகிவிடுகிறது.
தன் அம்மா தவறு செய்தால் அதை தவறுதான் என்று ஏற்றுக்கொண்டு அதை உலகிற்கு வருத்தத்துடன் சொல்லுமளவுக்கு மன்பக்குவம் உள்ள மனிதர்கள் உருவாகி விட்டார்கள். அப்படி மனிதன் எவால்வ் ஆகி இருக்கும் இச்சூழலில் யாரோ செய்த எழுதிய ஒரு வடக்கத்திய கலாச்சார நூல் ஒன்றை இந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டு நாம் அதை முழுக்க முழுக்க நம் வசதிக்காக நியாயப்படுத்தல் என்பதே பெரும் பிரச்சினை. அந்த காலகட்டத்தில் அது நியாயம் தர்மம். ஆனால் மனிதன் எவால்வ் ஆன இச்சூழலில் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதென்பதே கசப்பான உண்மை. அந்த உண்மையை மறைத்து எதை எடுத்தாலும் தன் மதநூலில் சொல்லியுள்ளது என்பதால் நியாயப்படுத்தல் என்பது ஒரு "boring concept"! அதனாலும் பலர் அதில் நேரம் செலவிடுவது இல்லை.
நாம் வாழும்நாட்கள் மிகக்குறைவே. நமக்குத் தெரிந்த மொழியில் உள்ள வற்றையே படிக்க நமக்கு நேரமில்லை. நீங்கள் கூறியதுபோல் திருக்குறள் மேலும் பல தமிழ் காவியங்கள். அச்சூழலில் இன்னொரு மொழியைப் படித்து, அதில் உள்ளவற்றை சரியாகப் புரிந்து கொண்டு (மற்றவர்கள் எழுதியதை எல்லாம் நம்ப முடியாது.. அவர்வர் வசதிக்கு எழுதி இருக்காங்கனு நீங்களே சொல்லி இருக்கீங்க- கண்ணாடி போல் தெரியுமென்று.) மேலும் அதை இன்றைய வாழ்வில் பயன்படுத்த முடியாத சூழல்..
மனிதம் என்பது எல்லாரிடமும் உள்ளது. ஆறறிவு உள்ள எல்லோருக்கும் நியாயம் அநியாயம் என்பது தெரியும். தனக்கு வலிதருவது மற்றவருக்கும் தரும் என்பதை உணர்வதென்ன அவ்வளவு கஷ்டமா? அதனால் மதநூல்கள் படித்துத்தான் ஒருவன் மனிதனாக வேண்டுமென்பதில்லை.
கதைபோல் படிக்கலாம். அப்படிப்படித்தாலும் அதில் உள்ள போதனைகளில் சில வற்றை தூக்கி எறிய வேண்டியதும் வரும். மதப் பற்று அதிகம் உள்ளவர்களால் இதுபோல் கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் கெடையாது. மதநூல்கள் படிக்காமலே மனதைக்குழப்பாமல் நல்ல மனிதனாக நிச்சயம் வாழ்ந்து சாகலாம். அதனாலும் மதநூல்களை பலர் புறக்கணிக்கிறார்கள்.
சாதிப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பதெல்லாம் பொதுவாக தனக்கென்று நியாயப்படுத்தல் நிறைந்தது..இப்பற்றுக்கள் மனிதன் மனசாட்சிப் படி நியாயங்களைப் பார்க்க விடாமல் வழிமறிக்கும் தடைக்கற்கள் என்பதே உண்மை!
நீண்ட பதிவு. தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteரொம்ப ஆழமான, கனமான, பலவிதமான நேர்மறை, எதிர்மறை கருத்துக்களை முன்வைக்கும் பதிவு. தங்களின் உழைப்பு அதில் பளிச்! கிரகிக்கும் சக்தி வேண்டும், எங்களைப் போன்றோருக்கு! இயன்ற அளவு கிரகிக்கின்றோம். முயல்கின்றோம்! தொடருங்கள்! தொடர்கின்றோம்!
ReplyDeleteபெரிய பதிவுதான் ஐயா
ReplyDeleteதங்களின் உழைப்பு தெரிகிறது
தொடருங்கள் தொடர்கிறேன்
எதைச் செய்தாலும் மாறுபட்ட கருத்துக்களை முன் வைத்து பின்னூட்டமிடும் மற்றவர்களோடு கருத்துப் பகிர்தல் நடத்தி இருபக்கமும் ஒரு புரிதலுக்கு ஆட்படும் நிலையில் தொடர்ந்து பதிவிடுங்கள்.
ReplyDeleteஒரு பதிவு நிறைவேற்படுத்தும் முன்
வேறுபட்ட கருத்தை வைத்தவரோடு கலந்து உரையாடல் நடத்தாமல் அடுத்த பதிவுக்கு அவசரமாகச் செல்ல வேண்டாம். இப்படியான போக்கு
உங்கள் எழுத்தை வாசித்து கருத்து இடுபவர்களுக்கு, சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள விழைந்து கேள்விகள் கேட்போருக்கு அயர்ச்சியையே ஏற்படுத்தும்.
ஆகச் சிறந்த செய்திகளைப் பற்றி எழுதும் பொழுது அந்த செய்திகள் கொடுக்கும் சாரத்தை சரியான தாத்பரியங்களோடு புரிந்து உணர்வதற்க்கான வாய்ப்பு வாசிக்கும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அந்த அளவுக்கு நீங்கள் எழுதும் செய்தியில் வாசிப்பு அனுபவமும்
புரிதலும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் தலைப்பிட்டிருக்கும் செய்தியில் துறை போகிய அறிவு கொண்டவர், முதல் பின்னூட்டம் இட்டிருக்கிறவர். அவரே 'எனக்கு ஒண்ணும் தெரியாது, தொடரக் காத்திருக்கிறேன்' என்று பின்னூட்டம் இடும் பொழுது உங்கள் புரிதலின் பொறுப்பு இன்னும் கூடுகிறது.
எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்றிருக்கும் ஆவல், ஆழத் தெரிந்து கொண்டு உணர்ந்து எழுதினால் தான் ஓரளவுக்காவது பூரணத்துவம் அடையக் கூடிய எல்லையையாவது நெருங்க முடியும்.
'உன் கருத்து அது; என் கருத்து இது' என்கிற ரீதியில் அமையும் எதுவும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த நிலைக்கே கொண்டு செல்லும். ஒரு பெரிய விஷயத்தைத் தொட்டு எழுத ஆசைப்பட்டிருப்பதால்
நான் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் இதையெல்லாம் சொல்ல நேர்ந்தது.
தொடர்ந்து வந்து நானும் தெளிவடையக் காத்திருக்கிறேன்.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//நீங்கள் தலைப்பிட்டிருக்கும் செய்தியில் துறை போகிய அறிவு கொண்டவர், முதல் பின்னூட்டம் இட்டிருக்கிறவர். அவரே 'எனக்கு ஒண்ணும் தெரியாது, தொடரக் காத்திருக்கிறேன்' என்று பின்னூட்டம் இடும் பொழுது உங்கள் புரிதலின் பொறுப்பு இன்னும் கூடுகிறது.//
ReplyDeleteஇப்படி ஒரு நினைப்பா என்னைப் பத்தி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா! அனைத்தும் கண்ணனுக்கே சமர்ப்பணம்! :)
இலக்கியப் பேருரை ஒன்றினைக் கேட்டது போல இருக்கின்றது. தங்களின் இலக்கியப் பணி தொடரட்டும் ஐயா..
ReplyDelete
ReplyDeleteஇதுவரை தெரியாதவற்றை தங்கள் பதிவின் மூலம் அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடருங்கள்.
இனி வரும் தொடர்களில் கீதையின் சுலோகங்களுக்கு தமிழில் பதவுரை போல் எழுத உள்ளேன். முதலில் தமிழில் transliterate செய்யலாம் என்று நினைத்தேன் //
ReplyDeleteநல்ல முயற்சி. காத்திருக்கிறேன்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
/ரொம்பப் பெரிய பதிவு விஷயமும் பெரிய விஷயம்/ தவிர்க்க முடியவில்லை. ஏறத்தாழ 900 பக்கங்கள் கொண்ட புத்தகம் precis எழுதுவதுபோல் எழுத முயற்சி செய்கிறேன். இத்தனையும் ஒரு முறையாவது கீதையைப் படித்து விட வேண்டும் என்னும் ஆவல்தான் உடனே பகிர வைக்கிறது. வருகைக்கு நன்றி மேடம்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி.
எந்த ஸ்வாமிஜியின் வகுப்புகள் என்று சொல்லவில்லையே. பாராட்டுகளுக்கு நன்றி மேடம்
ReplyDelete@ தி.தமிழ் இளங்கோ
/ஒரே நாளில் எழுதிய பதிவாகத் தெரியவில்லை. /ஒரே நாளில் எழுதியது அல்ல. சுவாமி சித்பவாநந்தரின் விரிவுரை. இரண்டு மூன்று முறைகள் படித்தேன் . இன்னும் படிக்கிறேன். பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். இதில் என் கருத்து எதையும் நுழைக்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ VARUN
VERY STRONG VIEWS. படிக்காமல் இருக்க என் பதிவில் இல்லாத ஒரு காரணம் மனப் பக்குவம் என்னும் போது நான் நினைப்பதைக் கூறிவிடுகிறேன் என் நிலை என்னவென்றால் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கூறும் போது விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது. ‘காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே “ இது ஆன்றோர் வாக்கு. ஒரு விஷடத்தை உள்வாங்கிக்கொண்ட பின் எப்படியானாலும் வாதம் செய்வது அவரவர் திறமை.கிட்டத்தட்ட ஒரு பட்டிமன்ற பேச்சாளர்போல் எப்படியும் வாதிடலாம்.வருகைக்கும் நீண்ட கருத்துப் பதிவுக்கும் நன்றி வருண்
ReplyDelete@ ஸ்ரீராம்
/நீண்டபதிவு/ தவிர்க்க முடியவில்லை ஸ்ரீ.இருந்தும் தொடர்ந்து வருவதற்கு நன்றி.
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
இதில் எழுதப் பட்டிருக்கும் எந்தக் கருத்தும் என்னுடையதல்ல. நானே படித்ததைக் கிரகித்து சுருக்கி எழுதி இருக்கிறேன். இனி வரும் பதிவுகள் கீதையின் சுலோகங்கள் கொண்டிருக்கும். கீதை சுலோகங்களை ஒரு முறையாவது முழுவதும் வாசிக்கும் வாய்ப்பாக வாசகர்கள் கருதலாம். வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
பெரிய பதிவு என்பதை ஒருஆழமான பதிவு என்றே பொருள் கொள்கிறேன். நீளம் தவிர்க்க முடியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ ஜீவி
பொதுவாக எந்த விஷயமானாலும் எளிதில் படிப்பவர் புரிந்து கொள்ளும்படி எழுத முயற்சிக்கிறேன் என் கருத்துக்களோடு மாறுபடும்போது. யார் கருத்திட்டாலும் அதைக் கூர்ந்து கவனிப்பேன். அதை வரவேற்கவும் செய்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் புரிந்து கொள்ளும்படி இருத்தல் அவசியம் எழுதுபவர் மனம் புண்படாமல் எழுத்தை எதிர்க்கலாம். கருத்துக் கூறும்போது எழுதியவரின் கோணத்தையும் புரிந்து கொண்டு கருத்திட்டால் பலன் இருக்கும் நான்கு வருடங்களுக்கும் மேலாக வலையில் எழுதி வருகிறேன். என்னை வாசிப்பவர்கள் எல்லோருக்கும் ஓரளவு என் எழுத்தின்போக்கு புரியும்.அது புரிவதால்தானோ என்னவோ இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எண்ணம் வந்திருக்கலாம். இந்தப் பதிவிலேயே நான் விளக்கி இருக்கிறேன்.
/அந்த அளவுக்கு நீங்கள் எழுதும் செய்தியில் வாசிப்பு அனுபவமும் புரிதலும் உங்களுக்கு இருக்க வேண்டும்/
/ஆழத் தெரிந்து கொண்டு உணர்ந்து எழுதினால்தான் ஓரள்வுக்காவது பூரணத்துவம் அடையக் கூடிய எல்லையையாவது நெருங்க முடியும்/
என்னை சீர்தூக்கும் கருத்தா இது? எனக்குப் புரியவில்லை
/துறை போகிய அறிவு கொண்டவர்/ என்று நீங்கள் கருதும் ஒருவர் ”எனக்கு ஒண்ணுமே தெரியாது. தொடரக் காத்திருக்கிறேன்” என்று சொல்லி இருப்பது அவரது அடக்கத்தை காட்டுகிறது. மற்றபடிஎனக்கு எதையும் தெரிவிக்கவில்லை. என்ன நினைத்து நீங்கள் கருத்திட்டிருந்தாலும் அது உங்கள் உரிமை என்றே கருதுகிறேன்.ஒரு உபயோகமான கருத்தாடல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே என் கருத்து. என் பதிவுக்கு வந்து கருத்திடுவோருக்காக நான் வெகுகாலம் காத்திருப்பதில்லை. அது என் அடுத்த பதிவின் நாளை நிர்ணயிப்பதுமில்லை.சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டி இருந்ததால் இந்த நீண்ட மறுமொழி.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிசார்
ReplyDelete@ துரை செல்வராஜு
இலக்கியப் பணி என்று கூறமாட்டேன். இதன் மூலம் பகவத் கீதையை ஒருமுறையேனும் வாசிக்கும் வாய்ப்பு கருதி பகிர்ந்திருக்கிறேன் ஐயா. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வே.நடனசபாபதி
எனக்குத் தெரியாதவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் போல் பலரும் இருக்கலாம் என்று நினைத்தே பதிவாக்குகிறேன் நன்றி சார்.
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்
இனிவரும் பகுதிகள் தமிழில் பதவுரையாக இருக்கும். இதையே விரும்பிப் படிப்பார்களா தெரியவில்லை. பதிவின் நீளம் கருதியும் வேறு எந்தக் கூடுதலான பலனும் இருக்காது என்று தோன்றுவதாலும் transliterate செய்யும் எண்ணம் இல்லை. வருகைக்கு நன்றி சார்.
//என்னை சீர்தூக்கும் கருத்தா இது? எனக்குப் புரியவில்லை..//
ReplyDeleteஉங்களை சீர்தூக்க நான் யார்? உங்களைப் போன்ற ஒரு பதிவர். அவ்வளவு தான். உங்கள் வயதொத்தவன். நீங்கள் வயதைப் போட்டுக் கொள்கிறீர்கள் நான் அதனால் ஏற்படும் அட்வாண்ட்டேஜைப் புறக்கணித்து வேண்டுமென்றே அதைப் போட்டுக் கொள்ளவில்லை. அவ்வளவுதான்.
கீதைக்கு நூற்றுக்கணக்கானோர் விளக்கவுரை எழுதியுள்ளனர். அதில் சித்பவானந்தரும் ஒருவர். கீதை போன்ற கருத்துப் பெட்டகங்களுக்கு கருத்துரை எழுதும் பொழுது ஒருவரின் விளக்கவுரை மட்டும் புரிதலுக்குப் போதாது. அதற்கென்றே ஒரு comparison study தேவைப்படுகிறது. அப்பொழுது தான் நீங்கள் எடுத்தாள எடுத்துக் கொண்டவர் சொல்ல வருவதை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
அது இல்லாமல் உங்கள் புரிதல் தவறாக இருந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த தவறான கருத்துக்கு சித்பவானந்தரே அதைத் தான் சொல்லியிருக்கிறார் என்று அவரைக் கேடயமாகவும் உபயோகப்படுத்த முடியாது. அதைத் தான் ஆழத்தெரிந்து கொண்டு உணர்ந்து எழுத வேண்டும் என்றேன்.
தவறு நேர்ந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் சொன்னதே இது தவிர இதில் வேறெந்த உள் அர்த்தமும் இல்லை.
சரி, அதைவிட்டு விட்டு விஷயத்திற்கு வரலாம்.
இப்பொழுது மேல்நாடுகளில் பகவத் கீதையை ஒரு Management study நூலாக கருத்தில் கொண்டு ஆராயத் துவங்கி விட்டார்கள். இதற்காக வென்றே பல study circle-கள் உலகெங்கும் உருவாகியிருக்கின்றன.
அவரவருக்குத் தேவையானதை பெற முக்குளித்து முத்தெடுத்து உபயோகப்படுத்திக் கொள்கிற காலம் இது. இதனால் அன்றைய காலகட்ட உபதேசம் என்கிற உண்மையறியா நிலையும் அடிபட்டுப் போகிறது.
போகப் போக இன்னும் நிறையச் சொல்லலாம். நீங்கள் எழுத ஆரம்பியுங்கள். உருப்படியான காரியம் இது. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ ஜீவி
நான் என் வயதை மட்டும் போட்டுக்கொள்ளவில்லை. என்னை ஒரு திறந்த புத்தகமாகவே காட்டி வருகிறேன் என் வயதை மறைத்தோ என் கருத்துக்களை மறைத்தோ incognito வாக இல்லை.என் புரிதலிலும் கருத்து வெளிப்பாட்டிலும் தவறு நேர்ந்துவிடக் கூடாதே என்னும் அக்கறைக்கு மிக்க நன்றி.
GMB Sir:
ReplyDeleteI just wrote why some people ignore reading "religious books". That's all. :)
-----------------------
நீங்கள் புரிந்ததை எழுதணும்னு ஆவலுடன் எழுதுறீங்க. கடவுளே எழுதினாலும் அவள் எழுத்திலும் ஒரு சில தவறுகள் வரத்தான் செய்யும். Yes, I meant the God him/herself! உங்கள் பிழைக்கு நீங்களே "ரெஸ்பாண்ஸிபிள்" என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை! வரும் சிறு தவறுகளை சரி என்று நீங்கள் வாதிடாதவரைக்கும் சிச்சிறு பிழைகளுடன் எழுதுவதில் தவறில்லை!
"Too much warning and caustions" about how cautiously you should be writing about "Geetha" kind of advice never encourages any writer. It is not warranted here imho! There are no articles in the world which are written flawlessly including Geetha itself. So, please go ahead and share what you learned about Geetha to the like-minded people! Wish you all the best!
//என்னை ஒரு திறந்த புத்தகமாகவே காட்டி வருகிறேன் என் வயதை மறைத்தோ என் கருத்துக்களை மறைத்தோ incognito வாக இல்லை.//
ReplyDeleteவயதை வெளிப்படுத்துவதால் எனக்குத் தெரிந்த அனுகூலமின்மையைத் தெரியப்படுத்துக்கிறேன்.
முதியவர்களின் வயதை வாசகர்கள் அறிவதால், ஒரு மரியாதையும் மதிப்பும் அவர் என்ன எழுதினாலும் சரி, அவர் எழுதிய எழுத்துக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே ஒரு பெரியவரின் கருத்து இது தன்னாலேயே ஒரு மதிப்பும் விலகலும் அவர்களிடம் ஏற்பட்டு விட நிறைய வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாமல் ஒரு 'ஐயா' நிலையில் அவர்கள் மனசில் நாம் சிம்மாசனம் இட்டுக் கொள்கிறோம். எழுத்தின் முதிர்வு சிறப்புக்கு வயது ஒன்றே காரணம் இல்லாமல் ஒருவர் அடைந்து உணர்ந்த அனுபவமும், அதை வெளிப்படுத்த நிறைய வாசிப்பு அனுபவமும் தான் காரணமாக இருக்கும் என்று நினைப்பவன் நான்.
நம் வயதின் முதிர்ச்சி வெளிப்படத் தெரிவதால் இளைஞர்களோடு ஒரே ஸ்டேஜில் அவரையும் ஒன்றாக இருத்திக் கொண்டு நம்மால் இணைய உலகில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இளைஞர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்று நினைத்து நாம் எழுதுபவை பலவற்றிக்கு நம் வயது ஒரு அகழியாக உருவெடுக்கலாம். அதற்காகவே நான் எழுதுவது சரியான-- சொல்லப் போனால் சரி சமமான நிலையில்-- போய்ச் சேரவேண்டுமென்கிற அக்கறையில் என் வயதை நான் போட்டுக் கொள்வதில்லை.
இது தான் இதுவரை என் வயதைத் தெரியப்படுத்தாதற்குக் காரணமே தவிர நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை.
//நான் படிக்கத் துவங்கி இருப்பது ஸ்வாமி சித்பவாநந்தரின் விரிவுரை.//
ReplyDeleteநீங்கள் எழுதவிருப்பது அவர் நூலின்
தமிழ் மொழியாக்கத்தை வைத்தா?
ReplyDelete@ ஜீவி
/இந்த முயற்சியின் விளைவாக பகவத் கீதையை தமிழில் படிக்கத் துவங்கி இருக்கிறேன் நான் படிக்கத் துவங்கி இருப்பது ஸ்வாமி சித்பவாநந்தரின் விரிவுரை/YES obviously.
பெரிய பதிவு மட்டுமல்ல ஆழமான பதிவும்கூட. கடந்த இரண்டாண்டுகளாக தினமும் ஒரு தேவாரப்பதிகமும், விடுமுறை நாள்களில் திவ்யப்பிரபந்தமும் சேர்த்து வாசித்துவருகிறேன். இவ்வாறான தங்களின் பதிவு என்னை கீதையின் பக்கம் இழுக்கிறது. வழக்கமான எனது வாசிப்புகள் நிறைவுற்றபின் கீதையைப் படிக்க ஆரம்பிப்பேன். நன்றி.
ReplyDeleteஆழ்ந்து படிக்கவேண்டிய பதிவு.கடமை செய் பலனை எதிர்பாராதே என்பதைத் தவிர வேறு எதையும் கீதையில் இருந்து அறிந்தாக நினைவில்லை. தங்கள் பதிவின் மூலம் கீத சாரத்தை ஓரளவிற்காவது எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஉங்கள் முயற்சி உண்மையில் பாராட்டுதலுக்குரியது ஐயா
வணக்கம் ஐயா. இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ReplyDeleteபார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_19.html
நன்றி.
sir,
ReplyDeleteமுன்னுரை படிக்க ஆரம்பித்துள்ளேன் . மிக எளிமையாக ஆனால் ஆழமாக எழுதி உள்ளீர்கள் . எனக்கு சற்று நேரம் எடுக்கிறது புரிந்து படிக்க . லிப்கோ பதிப்பகத்தாரின் புத்தகம் ஒரு முறை படித்துள்ளேன் . புரிந்து அறிந்து கொள்ள உங்கள் பதிவுகள் உதவும் . அவ்வபோது சந்தேகங்கள் எழும் போது உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும் .
ReplyDelete@ சசிகலா
/அவ்வப் போது சந்தேகங்கள் எழும்போது உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும் / மன்னிக்க வேண்டும் மேடம் .என் கருத்துக்கள் வெகுஜனக் கருத்தோடு ஒத்துப்போகாது . பதினெட்டு அத்தியாயங்களையும் படியுங்கள் என் கருத்துக்கள் வேண்டுமென்றால் பிடிஎஃப் இன் கடைசி அத்தியாயத்தைப் பாருங்கள் நன்றி.