செவ்வாய், 11 மார்ச், 2014

காதல் காதல் காதல் காதல் போயின் .( மீதிக் கதை)


காதல் காதல் காதல் காதல்  போயின் ( திடங்கொண்டு போராடு )
   -------------------------------------------------------------------------------------
என் பதிவில்/ இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடா” என்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும் என்று முடித்திருந்தேன்


( தொடர்ச்சி)



“இல்லை.  கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை”
பின் என்னைச் சந்திக்க ஓடோடி வந்தாயே .. ஏன்.”
உங்கள் மேல் காதல் கொண்டு ஓடி வந்தேன் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாக முடியுமா”
சந்தியா நான் ஆர்ர்வத்துடன் எழுதிக் கொடுத்த கடிதத்தை ஆவலுடன் வாசித்தாயே  அது பொய்யா.?
 வாசித்தேன் என்பது உண்மை. ஆவலுடன் வாசித்தேன் என்று எப்படி கூறுகிறீர்கள்”
பாபுவுக்கு சங்கடமாக இருந்தது. அழைப்பு விடுத்ததும் முன் பின் அறியாத பெண் ஏன் என்னைப் பார்க்க வந்தாள் என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா. கண்டவுடன் காதல் என்று எப்படி தீர்மானித்தேன் என்று மனம்புழுங்கினான் இவன்மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே உணர்ந்து கொண்ட சந்தியா
”பிறகு ஏன் வந்தேன் என்று எண்ணுகிறீர்கள் இல்லையா. பெண்கள் என்றாலே உங்களுக்கு எப்படியாவது அடைந்து விடலாம் என்ற எண்ணம். அதெப்படிக் கண்டதும் காதல்வரும் அதுவும் பெயர் கூடத்தெரியாத பெண்ணைக் காதல் என்று கூறி மயக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?நீங்கள் யரென்றே தெரியாத நான் உங்களை எப்படி விரும்ப முடியும்?இனக் கவர்ச்சி என்பது ஆண்களுக்கே உண்டு. பெண்கள் ஆழமானவர்கள்.  ஆழ்ந்தெரியாமல் காலைவிட்டு அவதிப்படும் காலம் அல்ல இது”
சந்தியா பேசப் பேச பாபுவுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. சந்தியா கேட்டதிலும் இருந்த நியாயம் அவனை நிலைகுலைத்தது. உண்மையில் அவன் இனக் கவர்ச்சியால் ஈர்ப்பு கொண்டு சந்தியாவை நாடியிருந்தால் அவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான் சந்தியாவிடம் தனக்கு ஏற்பட்டது புனிதமான காதல் என்று எப்படி அவளுக்குப் புரிய வைக்க முடியும்
“ சந்தியா என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய். அது உனக்கும் தெரியும் இருமனம் இணைந்தால் திருமணம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இருமனதிலும் இணைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவல்லவா உன்னை வரச் சொல்லிக் கூப்பிட்டேன். நீ வந்திருக்காவிட்டாலும் வருந்தி இருக்க மாட்டேன். ஆனால் வந்து என் புனிதமான அன்பைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறாயே அதைத்தான் தாங்க முடியவில்லை “ என்று கூறிக் கண்ணீர் வடித்தான்
“ அதெப்படி பாபு இருமனம் இணைந்தால் திருமணம் என்கிறீர்கள். நீங்கள் படித்தவர் என்றே எண்ணுகிறேன் தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லப் பட்டதை உங்களுக்குக் கூறுகிறேன்
”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.”
 இப்பொழுதும் இளமை வனப்பு வளமை கல்வி அறிவு எனப் பல பொருத்தங்களும் சேர்ந்த மண வாழ்வுதான் சிறக்கிறது இருமனம் இணைந்தால் திருமணம் என்பதே தவறான கான்செப்ட். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன். ஆனால் கண்டதும் காதல் என்று கூறி என் மயக்கம் தெளிவித்தீர்கள் குட் பை. நான் வருகிறேன்“
என்று சொல்லி அவ்விடம் விட்டகன்றாள்

அவள் அங்கிருந்து போனதும் பாபுவுக்கு இருட்டிக் கொண்டு வருவது போல் தடுமாற்றம் அவள் வராமலேயே இருந்திருக்கலாம் வந்து தன் காதலைக் கொச்சைப் படுத்திப் பேசியதை அவனால் தாங்க முடியவில்லைகடைசியில் தன் காதல் அரை அமர காதல்தானா என்று  தட்டுத்தடுமாறி வீடு போய்ச் சேர்ந்தான். சந்தியாவின் பேச்சு அவானை ஒரு முடிவுக்குத் துரத்தியது

அளவுக்கு மீறிய தூக்க மாத்திரைகளை விழுங்கி அவன் நித்திரையிலிருந்து எழவே இல்லை.....

.

(என் விளக்கம்

சிறு கதை என்பது கற்பனையில் தோன்றும் நிகழ்வுகளைச் சொல்லிப் போவது. கற்பனை என்பது கட்டுக்குள் அடங்காதது. ஆனாலும் கதைகளை சொல்லும்போது கற்பனையிலும் ஒரு யதார்த்தம் வேண்டும்.நிகழ்வுகளை குறிக்கும் போது கதாபாத்திரங்களின் மனோபாவம் வெளிப்பட்டிருக்க வேண்டும் கதைகளை இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற விதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கதாபாத்திரங்களைப் படம் பிடித்துக் காட்டும்போது இவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க இடமுண்டு. இவர்களின் நடவடிக்கைகள் இப்படியும் நடக்குமா என்பதை விட இப்படியும் நடக்கலாம் என்று சிந்தித்தே “காதல்,காதல், காதல், காதல் போயின்” என்னும் என் சிறுகதையின் முடிவை நிர்ணயித்தேன், இப்படி சிந்திப்பவர் இருக்கிறார்களா என்று அறியவே மீதிக்கதை எழுத வாசக நண்பர்களைக் கேட்டுக்கொண்டேன். நான் கதையில் பாபுவை எதையும் சிந்தித்து செயல் படாத ஒரு கோழை மனம் படைத்தவனாகக் காட்டினேன். கூடவே இக்காலப் பெண்கள் யதார்த்த வாதிகள் என்றும் கோடிகாட்டினேன். கதைகளை படித்துக் காதலுக்குப் புனிதத் தன்மை தரும் இளஞன் பாபு அப்படி அது நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்ததும் ஒரு தவறான முடிவை எடுக்கிறான் என்றும் முடித்திருக்கிறேன்  BOYS ARE IMPULSIVE: GIRLS ARE PRAGMATIC.) 

என் கதையைப் படித்து மீதிக்கதை எழுதி அனுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துக்கள்...!
திரு. பாலகணேஷ் என்ன சொல்கிறார் பார்ப்போம்.  


சனி, 8 மார்ச், 2014

மகளிர் தினம்

                  
                                                   மகளிர் தினம்
                                                   --------------------
மகளிர் தினத்தில் பலரும் எழுதி இருக்கிறார்கள். பெயரும் புகழும் பெற்ற பெண் மணிகள் விருது பெற்றோர் , மகளிர் தினத்துக்கு காரணமானவர்கள் என்று பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மூதாட்டி பற்றிய செய்தியைப் பகிர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் குறித்த செய்திகள்  சரியாக நினைவுக்கு வராததால் கணினியில் தேட முயன்றேன் வெற்றி பெறவில்லை. ஆகவே நினைவுக்கு வருவதைப் பகர்கிறேன் கர்நாடக மாநில மூதாட்டி வயது எழுபதுக்கும் மேல் (இப்போது) அவர் என்னதான் சாதித்து விட்டார். தனி ஒரு ஆளாக நூற்றுக் கணக்கில் மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். பெயர் சாலு மாரக்கா என்று நினைவு. கர்நாடக மாநிலத்தில் இவரது சேவை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டிருக்கிறார். அண்மையில் இவர் உடல் நலமில்லாதபோது அரசாங்கமே மருத்துவ உதவி செய்திருக்கிறது. படித்தவர் அல்ல. பாமரர். சுற்றுச் சூழல் பற்றிப் பேசியே காலங் கழிக்கும் நம்மிடையே ஒரு அசாதாரண தொண்டு மனம் படைத்தவர். இன்னுமிவர் பற்றி செய்திகள் தெரிந்தவர் பகிர்ந்து கொள்ளலாமே

தவறான பெயரில் தவறான இடத்தில் தேடி இருக்கிறேன், அவர் பெயர் சாலு மாரத திம்மக்கா. 285 ஆல மரங்களை நான்கு கிலோமீட்டர் இடையே நட்டு பராமரித்திருக்கிறார். இவருக்கு அனெரிக்க அரசின் பாராட்டும் கிடைத்திருக்கிறது குழந்தைகள் இல்லாத இவர் மரங்களை குழந்தைகள் போல் பாவித்திருக்கிறார்
 ஸ்ரீராமின் பின்னூட்டம்கிடைக்கு முன்பே நானும் பார்த்து விட்டேன். பதிவை சரி செய்தும் விட்டேன். ஸ்ரீராமுக்கு நன்றி.
( காதல் காதல் காதல் , காதல் போயின்” போட்டி மீதிக்கதைக்கு கடைசிநாள் 10-ம் தேதி. நினைவூட்டுகிறேன்)  

வெள்ளி, 7 மார்ச், 2014

வாழ்க்கை வாழ்வதற்கே


                                   வாழ்க்கை வாழ்வதற்கே
                                    ---------------------------------
 வாழ்க்கையில் மகிழ்வுடன் இருக்க சில குறிப்புகள்
-------------------------------------------------------------------------


 1 )மகிழ்வுடன் இருக்கத் தீர்மானம் செய்யுங்கள்
 2) நடக்க முடியாதது என்பதைக் கனவு காணுங்கள்
 3) பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள்
 4) செய்வதில் மனம் லயித்துச் செய்யுங்கள்
 5) உண்மையை பின் பற்றுங்கள்
 6) மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
 7) புதிதாய் ( மாற்றாக) சிந்தியுங்கள்
 8) உண்மையாய் இருங்கள்
 9) மன்னிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
 10) கவலைப் படுவதை தவிருங்கள்
 11) நகைச்சுவை உணர்வோடு இருங்கள்
 12) பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
 13) என்றும் கற்றுக் கொள்பவனாகவே இருக்கவும்
 14) மகிழ்ச்சியைப் பரப்புங்கள் 

சிந்திக்க ஒரு காணொளி

மகிழ்ச்சியைப் பரப்ப இரு காணொளிகள்





ஒரு western கௌ பாய் படத்தில்  ஒளிப்பதிவின் போது கதாநாயகன்  தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்த  ஒரு ஆப்பிளை அம்பு எய்தி வீழ்த்தினான். பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் How lucky என்றாராம் கதாநாயகன் அதிர்ஷ்டமல்ல கடும் உழைப்பு என்று கூறி அதேபோல் இன்னும் இரண்டு ஆப்பிள்களை வீழ்த்தினானாம் மேலே கண்ட பில்லியர்ட்ஸ் டேபிளில் அதே முனைப்பு தெரிகிறது அல்லவா..?
வாசக நண்பர்களே “ காதல் காதல் காதல்  காதல் போயின்  போட்டிக்கு மீதிக்கதை எழுதி விட்டீர்களா. நினைவு படுத்துகிறேன் கடைசி நாள் மார்ச் 10-ம் நாள்.   

புதன், 5 மார்ச், 2014

கண்ணா மணி வண்ணா---கற்பனையில்


                  கண்ணா மணி வண்ணா --கற்பனையில்
                   ----------------------------------------------------------



கண்ணா கருமை நிறக் கண்ணா
கண்ணால் காணாத உன்னைக்
கற்பனைக் கண்கொண்டு வர்ணிக்க
நான் என்ன செய்ய வேண்டும் ?

உனக்கே உனக்கென்று சில அடையாளங்கள்
இருக்கவே இருக்கிறது நானேன் புதிதாய்ச்
சேர்க்க வேண்டும்? கருநிறம் சுருட்டை முடி
ரத்தினம் அல்லது வைரம், ஏதோ பதிதத
தலையலங்காரம் , அதில் மயில்பீலி செருகி
இருக்க வெண்ணிற பிறை நெற்றி
மேல் நோக்கி வளையும் குறி
சரிதானா கண்ணா நான் சொல்வது.?

விபுவே..! அசைகின்ற புருவங்கள்
அதனடியில் அருள் தரும் கண்கள்
ஒளிவீசி அடியார் அகம் குளிர் விக்குமாம்
அடியேனும் அதில் ஒருவனா கண்ணா.?

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடர் விடும் மகர குண்டலங்கள்
செவ்விதழ் விரிகையில் பளீரிடும் முத்துப் பற்கள்
காணக்கண் கோடி வேண்டும் என்பர் இல்லையே
இருந்தாலென் கற்பனை செய்யலாமே கண்ணா...1

இரத்தினம் பதித்த கை வளை குலுங்க
வேணுவை செந்தளிர் விரல்கள் மீட்டப்
பொழியும் கர்ணாமிருத கானம் காற்றில்
மிதக்க நானும் என்னை மறப்பதெப்போ?

மென் கழுத்தில் மணி மாலைகள்
மலர் மாலைகள்-நிற மாலைகளில்
வண்டினம் பறந்தாட சந்தண மணம்
மேனியில் கமழ வையமே மனந் திளைக்க

மெல்லிடையோய் அதில் பட்டாடை சலசலக்க
கதிர்பரப்பும் மணிகள் அரைஞாணில் கலகலகக
கண்டு அடியார் மனம் மறந்து உனைத் துதிக்கக்
காணும் எனைக் கண்ணா நீயும் ஆட்கொள்வதெப்போ.

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அதை மறைக்கப் பட்டாடை தெரிவது
கணுக்கால் மட்டுமே பிடித்து வணங்க
அது போதுமே என்பதே உன் சித்தமோ

கழலடி தொழலே இன்பம் விளக்குமே
சரணாகதித் தத்துவம் அறியாமை ஆணவம்
அடக்கி ஆட்கொளல் உன் கடனன்றோ
துன்பங்கள் களைந்து காத்திடு கண்ணா மணி வண்ணா. 

(காதல் காதல் காதல்  காதல் போயின்... மீதிக்கதை எழுதி அனுப்ப நினைவூட்டுகிறேன் நன்றி)   



  

திங்கள், 3 மார்ச், 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே


               அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே  வந்ததே.......
                ---------------------------------------------------------



இவன் பயிற்சியில் சேர்ந்து பத்து மாதங்கள் ஆகியிருந்தது முதல் ஆறுமாதங்கள் கழிந்து மீதியுள்ள நாட்களை விடுதியில் தங்கித் தொடர வேண்டும் என்ற விதி
ஒரு நாள் அதிகாலை”எந்திரி, எந்திரி ஏந்திரி” என்னும் வழக்கமான கூப்பாடுடன் வார்டன் இவனது  அறைக் கதவைத் தட்டினார். காலையில் எழுப்பி காலைக்கடன்களை முடித்ததும் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் பின் காலை உணவுக்குப்பின் தொழிற்சாலைக்குச் சென்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடவேண்டும் இந்த மாதிரிப் பயிற்சியில் தொழிற்சாலையில் அநேகமாக எல்லா இடங்களிலும் என்ன செய்கிறார்கள் என்னும் ஐடியா கிடைக்கும்.
அன்றைக்கு இவன் மனசே சரியாக இருக்கவில்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் பயிற்சிக்காலம் பாக்கி இருந்தது. நாட்கள் ஆமை வேகத்தில் கழிவது போல் தோன்றிக் கொண்டிருந்தது. இந்தப் பயிற்சிக்காலம் முடிந்து எல்லாத் தேர்வுகளும் முடிந்து பணிக்கு அமர்த்தப் படும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் இவன்.  இவனுடன் பயிற்சியில் இருந்த அனைவரையும் மேலாளர் அழைத்தார். ”பயிற்சி முடிந்தால் உங்களைப் பணிக்கு அமர்த்தும் போது உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் தெரியுமா.?”
“தெரியும் சார்....நாளொன்றுக்கு  ஒரு ரூபாய் பத்தணா ப்லஸ் அலவன்ஸ் “என்று கோரசாகப் பதில் சென்றது
”பயிற்சி முடிந்து மெகானிக் வேலையில் அமர்வீர்கள் இல்லையா ? ஆனால் இதைவிட நல்ல பயிற்சி கொடுத்து சூபர்வைசராக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்” என்றார்
அங்கிருந்த சுமார் எண்பது பேர்களும் கலர் கலராக விழித்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்தார்கள், இவன் உட்பட.
“ஆனால்.....” மேலாளரின் இந்த இழுப்பு எல்லோரையும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது “ இந்த வாய்ப்பு உங்களில் பனிரெண்டு பேருக்கே கிடைக்கும் உங்கள் அனைவரையும் பலவித தேர்வுக்கு உட்படுத்துவோம் பிறகு உங்களில் பன்னிரெண்டு பேர்கள் தேர்வு செய்யப்பட்டு சூபர்வைசர் பொறுப்புக்கு பயிற்சி பெற அம்பர்நாத்துக்கு அனுப்பப் படுவீர்கள் தயாரா.?” என்றார். பலரது ஆர்வமும் பொங்கி வரும் பாலில் நீர் விட்டது போல் அடங்கி விட்டது. ஆணைக்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். வேறு வழி.?ஆக ஒரு சுப முகூர்த்த நாளில் அனைவரும் தேர்வுக்கு உட்படுத்தப் பட்டனர். பொறி இயலில் ட்ராயிங். கணக்கு. என்று பலவித தேர்வுகளுடன் ப்ராக்டிகல் என்னும் தேர்வும் நடந்தது தேர்வில் வெற்றி பெற்று அம்பர்நாத்துக்கு அனுப்பப் பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்து வெற்றியுடன் திரும்பினால் சூபர்வைசராக வேலை. அப்போது தொழிற்சாலைக்குள் நுழைய சில்வர் பாட்ஜ் கிடைக்கும் மெயின் கேட்டில் செல்லலாம். வருகையைப் பதிவு செய்ய அட்டையில் நேரம் குறிக்கும் மெஷினில் “தண்” என்று தட்ட வேண்டாம். மெகானிக்காகவே பயிற்சிமுடித்தால் சூபர் வைசர் ஆக குறைந்தது பனிரெண்டு ஆண்டுகளாவது ஆகும். தேர்வு செய்யப் பட்டால் அது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் இதையெல்லாம் அந்த வார இறுதி நாளில் வீட்டுக்குச் செல்லும் போது அப்பாவுக்குச் சொல்ல வேண்டும் . அவரும் மகிழ்வார்  இருந்தாலும் தேர்வு ஆக வேண்டுமே...
இரு தினங்களுக்குப் பின் மீண்டும் அனைவரும் அழைக்கப் பட்டனர். மனம் ”திக், திக் “என்று அடிக்கும் சப்தம் அந்த நிசப்தமான அறையில் எங்கும் கேட்டிருக்கும். மேலாளர் “ நான் குறிப்பிடும் சிலர் முன் வந்து நான் சொல்லும்படி இட பாகத்திலோ வல பாகத்திலோ நிற்கவேண்டும் “என்றார். பூரண அமைதியான அந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லப் போகிறார். யார் யார் தேர்வு செய்யப் படுவார்கள் என்னும் எண்ணங்களின் நடுவே அனைவரும் காத்திருந்தனர். முதல் பெயரை அழைத்து வலது பக்கத்தில் நிற்கச் சொன்னார் அடுத்து இரண்டு மூன்று என்று கூப்பிடக் கூப்பிட  இவனுக்கு நெஞ்சே வாய்க்குள் வந்து விடும் போலிருந்தது . ஆறாவதாக இவன் பெயர் வாசிக்கப் பட்டது .ஆனால் இவனை இடப் பக்கம் நிற்கச் சொன்னார் அதேபோல் பனிரெண்டு பெயரும் வாசிக்கப் பட்டு ஒன்பது பேர் வலப் பக்கமும் மூன்று பேர் இடப் பக்கமும் நிறுத்தப் பட்டனர் இத்ற்குள் மீதி இருந்தவர்கள் முகங்கள் களை இழந்து போய் இருந்தது.
இந்த இடப் பக்கம் வலப் பக்க நிற்க வைக்கப் பட்டவர்கள் அடுத்து என்ன செய்தி என்றூ ஆவலுடன் இருந்தனர். முன்பே பனிரெண்டு பேர் தேர்வு செய்யப் படுவார்கள் என்று தெரிந்து இருந்ததால் தேர்வு ஆகிவிட்டோம் என்னும் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த இட வல வேறுபாடு எதைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் மிகுந்திருந்தது இடப்பக்கத்தில் இருந்த மூவரும் ப்ரொவிஷனலி தேர்வு செய்யப் பட்டதாகச் சொன்னார். இவனை அழைத்து ”உன் பேச்சைக் குறைக்க வேண்டும். முந்திரிக் கொட்டை மாதிரி எங்கும் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது  ஒரு வார கால அவகாசம் “ என்று எச்சரித்தார் இருந்தாலும் இன்றுவரை இவனது அந்த முனைப்பு குறைந்துள்ளதா என்பது கேள்விக்குறியே. மற்ற இருவரும் அவர்களது குறைகள் எடுத்துக் கூரப்பட்டு எச்சரிக்கப் பட்டனர். தேர்வு ஆன பனிரெண்டு பேரும் cloud nine –ல் மிதந்தனர்.
அச்சமயம் இவனுடைய தந்தையார் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அந்த வார இறுதியில் ( வார இறுதியில் வீட்டுக்குச் செல்லலாம் )மருத்துவ மனையில் தந்தையைப் பார்த்து இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டான் . தந்தையும் இவன் வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் பெற்று முன்னுக்குவர வாழ்த்தினார். ஒரு கொசுவலையும் காலுக்கு நல்ல ஷூவும் வாங்க வேண்டும் என்றார் அதற்கான  ஏற்பாடாக அம்மாவிடம் பணம் கொடுக்கச் சொன்னார்.

இராண்டு நாட்கள் கழிந்திருக்கும் . இவன் பயிற்சியில் இருக்கும் போது மேலாளர் அழைப்பதாகச் செய்தி வந்தது. என்ன சொல்லப் போகிறாரோ ஒரு வேளை தேர்வு ஆகவில்லை என்று கூறுவாரோ என்ற பயத்துடன் அவரது அலுவலக அறையில் இவன் நுழைந்தான். என்றும் இல்லாமல் இவனை அவர்முன் அமரச் சொன்னார். இவன் குடும்பம் தந்தை பற்றியெல்லாம் விசாரித்தார். தந்தை மருத்துவ மனையில் இருப்பதாக இவன் கூறியதும் அவரை எப்போது பார்த்தான் என்று கேட்டார். “ உன் தந்தையின் நிலை சற்று கவலைக்கிடம்  நீ உடனே போய்ப் பார் “ என்றார். ஒரு வினாடி இந்த உலகமே சுழல்வது போல் தோன்றியது இவனுக்கு. வெளியே செல்ல எத்தனித்தவனிடம் “ மருத்துவ மனைக்குப் போகாதே . அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டது “ என்றார் அந்த நாள் 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி.

என் தந்தையார் G.S.Mahadevan


புதன், 26 பிப்ரவரி, 2014

கண்டது கேட்டது பகிர்வு


                                கண்டது கேட்டது பகிர்வு
                                -------------------------------------

இந்தப் பதிவு கண்டு கேட்டவற்றை கல்ந்து கட்டிய பகிர்வுப் பதிவு. முதலில் வரவேற்பு.






என்ன நண்பர்களே ர்சித்தீர்களா.


ஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை. ” காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.


மண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர்  LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.?

 An apple a day keeps the doctor away. ஆனால் An apple a day costs Rs1000-/  a month டாக்டருக்கு  அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க வேண்டும்.

”நான் கரைந்தால் விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்து  மகிழ்வார்கள்” என்று கோழி சொல்லி வருந்தியது.


 நீங்கள் ATM –ல் பணம் எடுக்கப் போகிறீர்கள் எதிர்பாராவிதமாக ஒருவன் உங்களை மிரட்டிப் பணம் அடுக்கச் செய்கிறான் உங்களுக்கும் வேறு வழியில்லை. போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு சிறந்த வழி என்று சொல்கிறார்கள். மிரட்டப் பட்டவுடன் பணம் எடுத்துக் கொடுத்தாக வேண்டிய நிலையில்  உங்கள் ATM  Card-ஐ மெஷினில் நுழைத்து உங்கள் பின் நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று அடியுங்கள். உங்களுக்குப் பணம் வரும். அதை மிரட்டுபவனிடம் கொடுத்துத் தப்பிக்கலாம் ஆனால் இந்த மாதிரி பின் நம்பர் மாற்றி உபயோகப்படும் செய்தி உடனே பொலீசுக்குத் தெரிவிக்கப் பட்டு அலர்ட் செய்யப் படுவார்கள். பின் நம்பர் மாற்றி உபயோகப் படுத்துவது போலீசுக்குத் தெரிவிக்க ஒரு முறை என்று சொல்லப் படுகிறது. தவறாக உபயோகித்து போலீசில் சிக்கினால் நான் ஜவாப்தாரி அல்ல. எனக்கு கிடைத்த தகவல் பரி மாற்றமே இது.

Two pieces of advice for married men 
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
  YOU ARE ONE OF THEM 
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
  YOUR WIFE IS ONE OF THEM 


 இனி ஒரு காணொளி

 



 



 



திங்கள், 24 பிப்ரவரி, 2014

மீண்டும் பதிவுகளில் தொடர......


              மீண்டும் பதிசுகளில் தொடர.......
             ------------------------------------------


அன்பு பதிவுலக நண்பர்களே
 வணக்கம். நான் சென்னைக்குப் போவதற்கு முன் காதலர் தினப் பதிவாக ஒரு சிறு கதையினை எழுதி முடிக்காமல்விட்டு பதிவுலக நண்பர்களை முடிக்கக் கேட்டு எழுதி இருந்தேன். நான் சென்னையில் இருந்தபோது என்னை அன்புடன் வந்து சந்தித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் சிறு கதையின் முடிவை திரு பாலகணேஷிடம் கொடுத்து அவரையே சரியான கதையைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதம் பத்தாம் தேதி வரை கதைகளின் முடிவை எழுதி அவரவர் வலைப் பூக்களில் பதிவிட்டு எனக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என் மின் அஞ்சல் முகவரி gmbat1649@ gmail.com
 சென்னையில் நான்  பதிவர்களைச் சந்திக்க வருகிறேன் என்று தெரிந்ததும் இடி இடிக்கவில்லை. மின்னல் வெட்ட வில்லை ஆனால் மழை பெய்தது.திரு கணேஷ் அவர்கள் நான் கடந்தமுறை வந்தபோதும் மழை பெய்து சந்திப்பு நடக்கவிடாமல் செய்ததை நினைவு கூர்ந்தார், திரு கணேஷுடன் திரு சீனு( திடங்கொண்டு போராடு)  திரு சரவணன் (ஸ்கூல் பையன் ) வந்திருந்தனர். வயதில் இளையவர்கள் வலையுலகில் கொடிகட்டிப் பறக்கின்றனர். நான் கேமரா எடுத்துச் செல்லாததால் படங்கள் எடுக்க முடியவில்லை சற்று நேரம் கழித்து மூங்கில் காற்று முரளிதரனும் சேர்ந்து கொண்டார். துடிப்பான இளைஞர். அவர் உருவத்துக்கும் பதிவுகளுக்கும் சம்பந்தமில்லை. மிகவும் சீரியசான சங்கதிகளை எழுது கிறார். மறு நாள் திரு கணேஷுன் சீனுவும் மீண்டும் என் இருப்பிடத்துக்கு வந்தனர் திரு செல்லப்பா யக்ஞசாமி எங்கள் ப்லாக் ஸ்ரீராம் மற்றும் கவியாழி கண்ண தாசன் போன்றோரின் வரவும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது
முகம் காணா பதிவுலக நட்புகளுடன் நேருக்கு நேர் உரையாடல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது

திரு செல்லப்பா வந்தபோது சுப்புத்தாத்தா என்று வலையுலகில் அறியப் படும் சூரி சிவா அவர்களின் விலாசம் கொடுத்தார். 20-ம் தேதி நாங்கள் செல்லவிருந்த திருமண மண்டபத்துக்கு அருகில் அவரது வீடு இருந்ததால்முஹூர்த்தம் முடிந்து மதிய உணவுக்கு இடைப் பட்ட வேளையில் நானும் என் மனைவியும் திரு சூரி சிவா வீட்டுக்குச் சென்று அவரையும் துணைவியாரையும் சந்தித்தோம். அவர் ஒரு சுவாரசியமான மனிதர். பழகவும் பேசவும் எளிமையான ,ஆனால் பல விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்.என்னைவிட வயதில் இளையவர்ர். ஆனால் அறிவில் முதிர்ந்தவர் எங்கள் ஐமபதாவது மண நாள் விழாவுக்கு அவசியம் வருவதாகக் கூறி இருக்கிறார்.சொல்ல விரும்புவதை சொன்னால்மனம் நோகக் கூடாதே என்று தெளிந்து சொல்கிறார்.அதே வளாகத்தில் என் பழைய நண்பர் திரு. பலராமன் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார். திரு பலராமனைப் பற்றி ஒரு செய்தி. அவர் என் வயதுக்காரரோ இல்லை எனக்கும் மூத்தவராகவோ இருக்கலாம்,அவரது வயது முதிர்ந்த தாயாரை அவர் மனம் கோணாமல் வைத்துக் காப்பாற்றுகிறார். ( மனைவியை இழந்தவர், தனி ஆளாக ) திரு பலராமனின் தாயாரை திருச்சி குடியிருப்பில் இருந்த போது கண்டு பழக்கப் பட்ட என் மனைவியை பார்த்தவுடன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது மனதை நெகிழ வைத்தது
அன்று மாலை எரிதழல் வாசன் வந்தார்.அவரது எழுத்துக்களில் ஒரு கனல் இருக்கும் மனிதர் பேசும்போதும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுகிறார் இந்த முறை சென்னைப் பயணத்தில் பல பதிவுலக நண்பர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். யாராவது பெங்களூர்  வருவதாயிருந்தால் எப்போதும் என் வீட்டுக்கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்கதைப் போட்டிக்கு நான் எதிர்பார்த்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை. ஏற்கனவே பாதிக்கதை எழுதி கற்பனைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி ஒரு போட்டி. சிரமத்தை உணர்கிறேன் . இருந்தாலும் கடினமான போட்டி அல்ல. மனம்வைத்தால் “உம்” என்பதற்குள் எதையும் எழுத வல்லவர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள். செய்தி எல்லோருக்கும் போய்ச்சேரவில்லை என்றே தோன்றுகிறது இந்த போட்டி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்
மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய சென்ற பதிவில் பாதிக்கதை இருக்கிறது. மீதிக்கதைஎழுதி முடிக்க வேண்டும். முடிவு நான் எழுதி உள்ளதுபோல் இருந்தால் பரிசு. இல்லையென்றாலும்  இதைவிட நல்ல முடிவு என்று நடுவர் கணேஷ் தீர்மானித்தால்  அந்தக் கதைக்கும் பரிசு. மார்ச் பத்தாம் நாள் வரை பங்கு கொள்ளலாம் அவரவர் பதிவுகளில் எழுதி எனக்குத் தெரியப் படுத்துங்கள், எல்லா விவரங்களும் கொடுதிருக்கிறேன் என்று நம்புகிறேன்
சரிதானே அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன் ஜீஎம்பி. 
 இன்று மெயிலைத் திறந்தபோது திரு.பாலகணேஷ் அனுப்பி இருந்த சில பிகைப் படங்கள். படங்கள் இல்லாமல் பதிவர்கள் சந்திப்பு முழுமை பெறுவதில்லை அல்லவா.?

திரு.செல்லப்பாவும்  சீனுவும்





நண்பர் ஸ்ரீராம்  அவர் படம் வெளியாவது விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். நான் மறந்து போய் வெளியிட்டு விட்டேன் சாரி ஸ்ரீராம் நீக்கிவிட்டேன்.