Wednesday, August 30, 2017

பதிவுலக வாசகர்களே என்ன நினைக்கிறீர்கள்


                              பதிவுலக வாசகர்களே என்ன நினைக்கிறீர்கள்
                              ------------------------------------------------------------------------
ஒரு சிறுகதை எழுதத் துவங்கினேன் வழக்கம் போல் கற்பனை மக்கர் செய்தது அப்போது உதித்த ஐடியாதான் இது. கதையின்  போக்கை கொண்டு இப்படித்தான்  முடிவு இருக்கும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யலாமே நானே ஒரு முடிவை யோசித்து வைத்திருக்கிறேன் எழுத சோம்பல் முடிவு பற்றியும்  சங்கேதமாகக் குறிப்பிட்டு இருக்கிறேன்  வாசகர்கள் முடிக்கலாமே ஒரு கதை பல வடிவில் கிடைக்குமே நன்றி

 காலையில் எழுந்ததிலிருந்து வேலை வேலை  அலுப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுக்க உடலைக் கிடத்தினாள் மாலதி  எப்படித்தான் இவர்களுக்கு மூக்கில் வேர்க்கிறதோ  தெரியலை  வாசல் கதவு தட தடவென்று  தட்டப்படும்  சப்தம்  அலுத்துக் கொண்டே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் மாலதி ,
தூங்கிக் கொண்டிருந்தீர்களா ? டிஸ்டர்ப் செய்து விட்டேனா “(டிஸ்டர்ப் செய்தாயிற்று .பின்  ஏன்  இந்தக்கேள்வி ) இருந்தாலும்  வலிய ஒருபுன்னகையைவரவழைத்துக் கொண்டு
 “ சேச்சே அதெல்லாம்  பரவாயில்லை “ என்றாள்
” உங்களிடம் மனம்  விட்டு பேச வேண்டும் இதைவிட நல்லநேரம்  எனக்குக் கிடைக்காது  மாலையில் என் மகனும்  வந்து விடுவான் உங்கள் கணவரும்  வந்துவிடுவார் மனம்விட்டுப் பேச முடியாது” பெரிய பீடிகையுடந்துவங்கினாள் கல்யாணி
என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயத்துடனும்    கொஞ்சம் ஆர்வத்துடனும் காது கொடுத்தாள் மாலதி
கல்யாணியின்  மகன் மாலதியின்  கணவரது அலுவலகத்தில்தான்  வேலை செய்கிறார் சொல்லப் போனால் அவர் மாலதியின்  கணவரின்  கீழ் வேலை பார்க்கிறார்
 “ நீ என் தங்கை மாதிரி. எனக்கு என் மன பாரத்தை யாரிடமாவது சொல்லணும்போல் இருக்கிறதுஇந்தக் காலத்துப் பெண்களுக்கு மாமியார் என்னும் மரியாதையே தெரிவதில்லை இத்தனை நால் பொத்திப் பொத்தி  வளர்த்த மகனை தாயிடமிருந்து பிரிப்பதில்தான்  குறி. மரியாதை மட்டு என்பதெல்லாம்கொஞ்சம் கூட இல்லை”

“பொதுவாகவே மாமியார்கள் சொல்லும் குறைதானே இது.விவரமாகச் சொன்னால்தானே புரியும்” என்றாள் மாலதி.

“அப்படி என்னதான் குசுகுசுவென்று பேசுவார்களோ தெரியவில்லை.  வீட்டுக்குப் பெரியவரகள் இருக்கும் போதே இப்படி தலையணை மந்திரமா. என்னவோ போம்மா எனக்கு ஒன்னுமே புரியலை
(உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலெ என்று நினைத்துக் கொண்டாள் மாலதி)
‘கார்த்தால எழுந்ததும்  குளிச்சுப்பூஜை செய்து மடியாய் இருக்க வேண்டாமா. விடிந்ததும் விடியாததும் தொடங்கிவிடும் கொஞ்சலும் குலாவலும்  நாம எல்லாம் இப்படியா இருந்தோம்” ( சந்தடி சாக்கில் கல்யாணி மாலதியையும் தன்னோடு இணைத்துக் கொண்டாள்) 
நான் என்ன செய்ய வேண்டும் மாமி சொல்லுங்கோ “
(இந்த மாமி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி விட்டுப்போனால் கொஞ்சமாவதுஅசரலாம் என்னும் நினைப்பும்மாலதிக்கு வந்தது)
இதப்பாரும்மா மாலதி என் தங்கை மாதிரி உன்னை நினைத்துக் கொண்டு என்  ஆற்றாமையை எல்லாம் உன்னிடம் கொட்டுகிறேன் நேரம்  வரும்போது அவளுக்கு நீ எடுத்துச்சொல்லு “ என்று கூறிக்கொண்டே எழுந்தாள்மாலதி இந்தமாமிக்கு நான் ஒரு வெயிலிங் வால் ( wailing wall) மாதிரி போல் இருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டே “ அவ்வப்போது வந்து போய்க் கொண்டுஇருங்கள் மாமி
 என்று வலிய வரவழைத்த புன்னகையோடு விடை கொடுத்தாள் மாலதி

இந்த கல்யாணி மாமிக்கு ஒரு மகன் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் ஏதோ காவேரிப்பட்டினம் என்றுசொன்னதாக மாலதிக்கு  நினைவு
மாமியும் மருமகளும் சரியான பொருத்தம்  மாமி வந்து போனது தெரிந்தால் மருமகள் வந்து விடுவாள்  அவள் பங்குக்கு ஒரு பாட்டம் கம்ப்ளெயிண்ட் செய்வாள் கணவனிடம்  வேலைசெய்பவரின் சொந்தங்கள்  கேட்காமல் இருக்கமுடியவில்லை
எல்லா மாமியார்களும் இப்படியா அவர்களும்  மருமகளாய் இருந்தவர்கள் தானே ஒருவருக்குஒருவர் அன்பு செலுத்தி அரவணைப்போடுஇருக்கக் கூடாதா
(உனக்கு என்ன தெரியும்  மாமியாருடனிருந்திருக்கிறாயா இல்லை மருமகள்களுடன்  இருந்திருக்கிறாயா/ எல்லாம் அனுபவிப்பவர்கள் பேச்சைக்கேட்டுத்தெரிந்து கொள்) மாலதிக்கு தனக்குத்தானே பேசிக் கொள்ளும் வழக்கம் உண்டு
கணவன் வரும்  நேரத்துக்கு முன் கல்யாணியின் மருமகள் வந்து விட்டாள்
வரும்போதே
 ”என் மாமியார் இன்றைக்கு என்னைப் பற்றிஎன்ன சொன்னார்கள்” என்று கேட்டும்வைத்தாள் ”

”இதப்பாரும்மா பெரியவர்களோடு சற்று  அனுசரித்துப் போகக் கூடாதா. இத்தனை வருஷம் வளர்த்து ஆளாக்கியவர் அல்லவா அவரை ஒதுக்க முடியுமா?”
”அக்கா உங்களுக்குத் தெரியாததா ( இவர்கள் பேசும்போது நம்மையும் அவர்கள் கட்சியில் சேர்க்கிறார்களே?)எப்போது பார்த்தாலும் ஏதாவது குற்றமும் குறையும்  சொல்லிக் கொண்டே இருப்பார்கள் உங்களுக்குத் தெரியுமா .நான் என்வீட்டுக்காரரிடம் மனம் விட்டுப் பேசக்கூட முடிவதில்லை பாவம் அவருக்கும் யார் பக்கமும் பேச முடியாத நிலை .” சொல்லிக் கொண்டே வந்தவள் கண்களைக் கசக்கத் துவங்கி விட்டாள் மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லைதான்  ஒரு குறை கேட்கும் ஜடமாகி விட்டோமோ என்றே தோன்றியது நல்ல வேளை அவளது கண்வன் வந்து விட்டான் உடனே கண்களைத் துடைத்துக் கொண்டு”நல்லா இருக்கீங்களா அண்ணா என்று சொல்லிக் கொண்டே கல்யாணியின் மருமகள் சென்று விட்டாள்
‘என்ன இன்றைக்கும்  கோர்ட்டா  வழக்கா  என்ன தீர்ப்பு சொன்னாய் “ மாலதியின் கணவன்  வம்புக்கு இழுத்தான்
“உங்களுக்கென்ன  நானல்லவா மத்தளம் மாதிரி இரு புறமும்  அடி வாங்குகிறேன் சின்னஞ் சிரிசுகள்  சிரித்துப்பேசினால்  இந்த மாமியார்களுக்கு ஆவதில்லை ஆனால் இதை கல்யாணி அம்மாவிடம்  சொல்ல முடிவதில்லை”
அடுத்த நாள் மருமகள் முன்னால் வந்து விட்டாள் வரும்போதே சொரியும் கண்களும் சிந்திய மூக்கும் விஷயம் ஏதோ பெரிசாகிவிட்டது போல் இருந்தது

 “அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று  என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க  வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
 வாசகர்கள் கதையைத் தொடரலாமே
            



Friday, August 25, 2017

சீரியசான மொக்கைகள் ( விநாயகச் சதுர்த்தி )


                          விநாயகச் சதுர்த்தி சீரியசான மொக்கைகள்

                                           பிள்ளையார் செய்ய வேண்டுமா?
   மொக்கைகளுக்கிடையே சில சீரியசான செய்திகளையும் பகிர்கிறேன்  பதிவு சற்றே நீண்டு விட்டது குட் நாட் ஹெல்ப்
பண்டிகைகள் வரும்போது பதிவுகளைத் தேற்றி விடலாம்  என்று ஒரு பின்னூட்டத்தில் எழுதி இருந்தேன் கணேச சதுர்த்தி என்றதும் பிள்ளையார் குறித்த பலநினைவுகள். அவற்றில் சிறு வயதில் கேட்டவை பல. சில செய்திகளைக் குறிப்பிடும்போது அதன்  சோர்ஸ் நினைவுக்கு வருவதில்லை பல பெயர்களும்  நினைவுக்கு வருவதில்லை சரி  பிள்ளையார் குறித்த சிலகதைகள்
சிவ பெருமானும் பார்வதியும்  யானை உருவத்தில் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தபோது இணைந்ததில் பிறந்த குழந்தையே யானை முகன்  விநாயகன்
விநாயகப் பெருமான் ஒரு முறை தன் மூஞ்சூறு வாகனத்தில் ஏறி இந்திரன் சபைக்குப் போய்க் கொண்டிருந்தாராம். இவர் உடல் எடை தாங்காமல் மூஞ்சுறு தடுமாற  இவர் கீழே விழுந்து விட்டாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரிக்க இவர் கோபமடைந்து தன்னுடைய தந்தங்களில் ஒன்றைப் பிய்த்து சந்திரனைத் தாக்கினாராம். அதனால்தான் இவருக்கு ஏக தந்தன் என்னும் பெயர் வந்ததாம்.
வியாசர் மஹாபாரதம் சொல்லச் சொல்ல  விநாயகர் எழுதினாராம் அவ்வாறு எழுத தன் தந்தங்களில்  ஒன்றை முறித்து எழுது கோலாக உபயோகித்தாராம்
 ஒரு சமயம் பார்வதிதேவி குளிக்கச் செல்லும்போது தன் உடலிலிருந்து ஒரு அழுக்கை உருட்டி உருக் கொடுத்து அதைக் காவலுக்கு நிற்கச் சொன்னார். பரமசிவனுக்கும் வழி கொடுக்காத அந்த உருவத்தின் தலையை ஈசன் கொய்தார்.பிறகு தன் தவறு தெரிந்து தன் பூதகணங்களிடம் முதலில் எதிர்ப்படும் எந்த ஜீவராசியின் தலையாவது கொண்டுவரப் பணித்தார். அவர்கள் கொண்டு வந்த யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். பிறகு குளித்து வெளியில் வந்த பார்வதி ‘இந்தப் பிள்ளை யார் ‘ என்று கேட்டாராம். அது முதல் இவருக்குப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம். சிவனுடைய பூத கணங்களுக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டார்/ அதனால் கணபதி ( கணங்களுக்கு அதிபதி) என்று பெயர் வந்தது.
விநாயகரைத் தென்னாட்டில் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கூறுவர். கார்த்திகேயனை வள்ளி தேவானை மணாளன் என்பர். ஆனால் வட நாட்டில் கணேசருக்கு இரு மனைவி. முருகன் பிரம்மசாரி.
ஓம் என்னும் எழுத்துப்போல் இருப்பதால் ஓங்காரஸ்வரூபன் என்றும் பெயர்.
கதைகள் எப்படி இருந்தால் என்ன. ?மனித நம்பிக்கையே முக்கியம். கதைகளுள் இருக்கும் சாரத்தை மட்டும் கவனிப்போம்.. ஏழை எளியவரும் நினைத்த மாத்திரமே அருள் பாலிக்கும் கடவுள் என்பது நம்பிக்கை
பல்லவ அரசன் ஒருவர்  வதாபியை வென்று பில்லையாரைக் கொடு வந்ததாகப் படித்த நினைவு கேரளத்தில் கொட்டாரக்கராவில் இருக்கும் கண்பதி கோவிலில் எப்போதும் சூடாக அப்பம்  தயாராகிக் கொண்டிருக்கும்  பக்தர்கள் நிவேதனம்செய்வதற்கும்  உண்பதற்கும்      
தென் நாட்டில் விநாயகர் வழிபாடு அவரவர் வீட்டில் அவரவர் சக்திக்கேற்றபடி நடந்து வந்தது. மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் கணபதி வழிபாடு பிரசித்தம். கடவுள் நம்பிக்கையைப் பயன் படுத்தி மக்களை ஒன்று திரட்டி , அவர்களுக்குள் சுதந்திர எண்ணங்களை எழுப்பியவர் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை indoctrinate  செய்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் துவங்கிய இந்த வழிபாட்டு முறை வளர்ந்து கூட்டு கணேச வழிபாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. தற்காலத்தில் அது தமிழ் நாட்டிலும் புகுந்து விட்டது. இதில் ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன என்றால் பெரும்பாலான கூட்டு வழிபாடுகளை முன் நின்று நடத்துபவர்கள் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பது தெரிகிறது.
மஹாராஷ்டிரத்தில் சுதந்திர உணர்வினை ஊட்டத் துவங்கிய இந்தக் கம்யூனிடி வழிபாடுகள் மத ஆதிக்கத்தை தூண்ட உபயோகப் படுத்தப் படுமோ என்னும் அச்சம் எழுகிறது.
எந்த ஒரு காரியம்  செய்யும்  முன்  விநாயகனை வழிபடவேண்டும்  என்பதும் ஒரு நம்பிக்கை
தேரில் சென்று கொண்டிருந்தவர் (அரசனோ சிவபெருமானோ நினைவுக்கு வரவில்லை) விநாயகனை வழிபடாததால் தேரின் அச்சு முறிந்து மேலே செல்ல முடியாமல் போன இடமே அச்சிறு பாக்கம் என்று அழைக்கப்படுகிறது
விநாயக வழிபாட்டில் பலரும்  கூறும் பாடல் ” “ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்துனக்கு நான் தருவேன்; கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் மூன்றும் தா.” இது போன்ற வேண்டுதல்கள் கடவுளிடம் பேரம்  பேசுவது போல் இருக்கிறது எல்லாம் தெரிந்தகடவுளுக்கு நமக்கு வேண்டுவது என்ன  தரக் கூடியது என்ன என்று தெரியாமலா இருக்கும்  நாம் உண்ண விரும்பியதைக் கடவுளுக்கு என்று படைத்து நாமே உண்பதும், நமக்கு வேண்டியது நடந்தால் காணிக்கை என்று உண்டியலில் பொன்னும் பண்மும் போடுவதும் கடவுளைக் குறித்த பக்குவப் பட்ட மனம் இல்லாதிருப்பதையே காட்டவில்லையா.?பண்டிகைகளும் விழாக்களும் உற்றமும் சுற்றமும் கூடி மகிழ என்பதால் உண்டு களிப்பதில் தவறிருக்காது. ஆனால் அதே சமயம் இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது அதைவிடச் சிறந்ததல்லவா.?.
 இன்னொன்று. இன்ன கடவுளுக்கு இது பிடிக்கும் என்பது நமக்கு எப்படித்தெரியும்   பிள்ளையாருக்கு  கொழுக்கட்டையும்  சுண்டலும்   கண்ணனுக்கு சீடையும் முறுக்கும்  ராமனுக்கு பானகமும் முருகனுக்கு அப்பமும்  பொரியும்  ஐயப்பனுக்குப் பாயசமும் படைக்கிறோம் முன்பே ஒரு பதிவில் ஏன்  என்று காரணங்கள் கேட்டிருந்தேன்   கதைகளுக்கா பஞ்சம்  தெரிந்தவர்கள்பகிரலாமே
இன்னுமொரு கதை ஔவைப் பாட்டி கைலாயத்துக்குச் செல்ல  விநாயகன்  துணையால் ஒரே எட்டில்  அடைந்ததாகக் கேட்டிருக்கிறேன்  சேரமான்  அரசன்  முன்  செல்வதை கண்ட ஔவை அகவல் பாடி வேண்டியதால் அப்படி செல்ல நேரிட்டதாகவும் படித்தநினைவு  சில கதைகள்கோர்வை யில்லாமல் நினைவுக்கு வருகிறது  சரி இப்போது ஔவையின் அகவலுக்கு வருவோம்   என் மனைவியின்  தூண்டுதலில் விநாயகர் அகவல் படித்தேன்   எனக்குபொருள் விளங்கவில்லை. ஆனால் என்னைப் போல் பலரும்  பொருள்விளங்காமல் பாராயணம் செய்வது தெரிகிறது  ஔவையின்   அகவல் கீழே.  தெரிந்தவர்  அதற்குப் பின் வரும்  வரிகளை மட்டும் படிக்கலாம்
 சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
 
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்


குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
முதல் பத்து பதினைந்து வரிகள் விநாயகனைப் போற்றியும் புகழ்ந்தும் எழுதப்பட்டவை  அதன் பின்  வரும்  வரிகள்  எனக்குப் பொருள் விளங்கவில்லை  அங்கிங்கு தேடி பொருள் கற்றேன்  இருந்தாலும் விளங்காதவையே அதிகம்  தெரியாததைத் தெரியாது என்கிறேன்  தெரியாமல் வாய் மட்டும் ஏதோ சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை  கற்றதைப் பதிவிட்டிருக்கிறேன்  தெரியாதவர் தெரிந்து கொள்ளலாம்  இல்லை தெரியாமலேயே ஓசை எழுப்பலாம் அவரவர் பாடு  இருந்தும்  இதை நான்  ஏன்  எழுதுகிறேன்  என்றால்நம்பிக்கையோடு பாராயணம் செய்வோர் பொருள் தெரிந்து செய்தால் நன்று என்று தோன்றுகிறது  ஆனால் வேண்டப்படுபவை நம்மால் அடைய முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி,தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து,கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம்2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4)அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,
இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி
உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.

கடவுளர் பற்றிய கதைகளில் சொல்லப் பட்ட பல சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் சக்கையை பிரதானமாக எண்ணுகிறோமோ என்னும் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பதிவு.
எல்லோருக்கும் அந்த விநாயகன் அருள் இருக்கட்டும்
,

                             -------------------------------------