Monday, October 20, 2014

கீதைப் பதிவு-13


                                    கீதைப் பதிவு -13
                                    -----------------------

Image from VENKAT NAGARAJ'sblog

அத்தியாயம் -13



க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
அர்ஜுனன் சொன்னது.
பிரகிருதி புருஷன்,க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன், ஞானம், ஞேயமாகிய இவைகளை அறிந்து கொள்ள, கேசவா நான் விரும்புகிறேன்(பல பதிப்புகளில் இந்த சுலோகம் காணப்படுவதில்லை.)
ஸ்ரீ பகவான் சொன்னது.
குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(1)
அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை.(2)
அந்த க்ஷேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது, என்ன பிரிவுகளை உடையது, எதிலிருந்து உண்டானது,அந்த க்ஷேத்ரக்ஞன் யார்,அவன் மகிமை யாதுஇவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேள்,(3)
(இவ்வுண்மை) ரிஷிகளால்விதவிதமான சந்தஸ்களில்(இயல் இசைகளில்)பாங்காகப் பல வகைகளில் பாடப் பெற்றிருக்கிறது.யுக்தியால் நிச்சய புத்தியைத் தந்து, பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும்  பாடப் பெற்றிருக்கிறது.(4)
மஹாபூதங்கள் (ஆகாசம்,வாயு, அக்கினி, அப்பு, பிருதிவிஆகிய ஐந்து பூதங்களும் சூக்‌ஷுமமாக எங்கும் உள்ளபடியால் அவை மஹாபூதங்கள்)அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி, இந்திரியங்கள் பத்து,மனம் ஒன்று,இந்திரியார்த்தங்கள் ஐந்து, விருப்பு வெறுப்பு, இன்பம், துன்பம், உடலமைப்பு, உணர்வு, உறுதி, -இங்ஙனம் க்ஷேத்திரமும் அதன் தோற்றங்களும் சுருக்கமாகச் சொல்லப் பட்டன,(5.6) (அகங்காரம் பூதங்களின் காரணமாக எழும் இருக்கிறேன் என்னும் உணர்ச்சிஅகங்காரம் எனப் படுகிறது; புத்தி அகங்காரத்துக்குக் காரணம். மூலப்பிரகிருதி அல்லது அவ்யக்தம் புத்திக்குக் காரண்ம். இவையாவும் ஈசுவரசக்தி. பத்து இந்திரியங்கள் கண் முதலிய ஐந்து ஞாநேந்திரியங்கள் ஐந்து கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து; மனம் பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. இந்திரியார்த்தங்கள்-சப்த ஸ்பரிச, ரூப, ரச, கந்த வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்கள் .இச்சை ,துவேஷம் சுகம் ,துக்கம், சங்காதம்=உடலமைப்பு, உணர்வு, உறுதி, க்ஷேத்திரம் என்று உடலை முதல் சுலோகத்தில்சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரு சுலோகங்களில் வந்து அமைகிறது.)
தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை குரு சேவை, தூய்மை விடாமுயற்சிதன்னடக்கம்(7)
விஷயங்களில் விருப்பின்மை. அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்புபிணி துயரமாகியவைகளில் கேடுகாணுதல்(8)
பற்றின்மை, மகன் மனைவி, வீட்டைத் தனதென்று அபிமானியாதிருத்தல், வேண்டுவன வேண்டாதவை விளையு மிடத்து மனம் யாண்டும் நடு நிற்பது(9)
வேறு எதையும் எண்ணாத யோகத்தால், என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை(10)
ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி, -இவையாவும் ஞானமாம். இவற்றுக்கு அன்னியமானவை அக்ஞானம்(11)
அறியத்தக்கது எது, எதை அறிந்து ஒருவன் சாகாத்தன்மை எய்துகிறான், அதைப் பகர்கிறேன். அது ஆதியில்லாத பரப்பிரம்மம்.உளது இலது என வொண்ணாதது.(12)
அது எங்கும் கைகால்களை உடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது, எங்கும் காதுகளை உடையது, உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது(13)
இந்திரியங்கள் அனைத்தின் வாயிலாகஒளிர்வது, இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது, அனைத்தையும் பற்றித் தாங்குவது, குணங்களே இல்லாதது, எனினும் குணங்களை அனுபவிப்பது.(14)
பொருள்களுக்குப் புறமும் உள்ளும் உள்ளது,அது அசையாதது, அசைவது, நுண்மையானது ஆதலால் அறிய அரிது.எட்டவும் கிட்டவும் இருப்பது அது.(15)
அது பிளவு படாதது, பொருள்களில் பிளவு பட்டதுபோல் இருக்கிறது. பொருள்களைத் தாங்குவதும், விழுங்குவதும், தோற்றுவிப்பதும் அது என்று அறிக.(16)
ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது,இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப் படுகிறது.அறிவும் அறியப்படும் பொருளும், அறிவினால் அடையப் படுவதுமாகிய அது எல்லோரது உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது(17)
க்ஷேத்திரமும் ஞானமும் ஞேயமும் இங்ஙனம் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதை அறியும் என் பக்தன் என்னையடையத் தகுந்தவனாகிறான்.(18)
பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டுமே ஆதி இல்லாதவைகள் என்று அறிக.

வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகள் என்று உணர்.(19)
உடலுக்கும் இந்திரியங்களுக்கும் காரணம் பிரகிருதி எனப் படுகிறது.இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் ஜீவன் எனப்படுகிறான்.(20)
புருஷன் பிரகிருதியில் நின்று பிரகிருதியில் தோன்றிய குணங்களைத் துய்க்கிறான்.அவனுக்கு நலம் கேடு உடைய பிறவிகள்.அதற்குக் காரணம் குணப் பற்றே(21)
இத்தேகத்தில் உள்ள பரம புருஷ்னானவன் சாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் இப்படியெல்லாம் இயம்பப் படுகிறான்(22)

இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரகிருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மறுபடியும் பிறப்பதில்லை.(23)
த்யானத்தால் தெளிவடைந்த அறிவால்,சிலர் ஆத்மாவை உள்ளத்தில் உணர்கின்றனர். சிலர் ஞான யோகத்தாலும் இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் காண்கின்றனர்(24)
இன்னும் சிலர் இங்ஙனம் உண்மையை அறியாதவர்களாயினும் பெரியோர் சொல் கேட்டு அதில் பெருநம்பிக்கை வைத்தொழுகி மரணத்தை நிச்சயமாகக் கடக்கின்றனர்(25)
அர்ஜுனா, நிலைத்திணை இயங்கு திணையாகிய எவ்வுயிர் தோன்றி உள்ளதோ அது க்ஷேத்திர க்ஷேத்ரக்ஞனுடைய சேக்கையால் என்று அறிக.(26)
உயிர்கள் அனைத்திலும் சமமாய் இருக்கிறவனும் , அழிவனவுற்றுள் அழியாதவனும் ஆகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்.(27)
எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனைக் காண்போன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறானில்லை. அதனால் அவன் பரகதி அடைகிறான்.(28)
கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப் படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.(29)

தனித் தனியாக வாழும் பிராணிகள் ஒரே பொருளில் இருப்பதையும், அந்த ஒரு பொருளிலிருந்தே அவைகள் விரிவடைவதையும் காணும்போது அவன் பிரம்ம மாகிறான்(30)
குந்தி புத்திரா, ஆதி இல்லாததால், குணமில்லாததால், கேடில்லாத இப்பரமாத்மா சரீரத்தில் இருப்பினும், அது செயலற்றது, பற்றற்றது(31)
எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியமாயிருப்பதால் எப்படிக் களங்க மடைவதில்லையோ, அப்படியே தேகமெங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கம் அடைவதில்லை.(32)
ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுறச் செய்கின்றதோ, அப்படி அர்ஜுனா, பிரபஞ்சம் அனைத்தையும் பரமாத்மா பிரகாசிப்பிக்கிறான்(33)
இவ்வாறு க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமையையும் உயிர்கள் பிரகிருதியில் இருந்து விடுதலை அடைவதையும்ஞானக் கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர்.(34)
          க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ  விபாக யோகம் நிறைவு.       
  ( சுமார் பத்து நாட்களுக்கு வலைப் பதிவுகளில் இருந்து விடுமுறை எடுத்துக் கொள்கிறேன்  “ஓ. அப்பாடா என்று சிலர் விடும்பெருமூச்சு கேட்கிறது. )
 
 

Friday, October 17, 2014

மறக்க முடியுமா ? ( குரல்கள் )--1


                                    மறக்க முடியுமா.?
                                  ---------------------------

கடந்த ஜூலை மாதம் பழையன கழிவதாலும் புதியன புகுவதாலும் ஏற்படும் சில நிலைகளைக் கூறி ஆதங்கப் பட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன். பழைய புகைப்படங்களை பாது காப்பதிலும் டேப் ரெகார்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் குரல்களை மீண்டும் கேட்பதிலும் இருக்கும் சங்கடங்கள் குறித்த பதிவு அது. எனக்கு என் வீட்டுக்கு வரும் உறவினர் நண்பர்கள் இவர்களது குரல்களைப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. அப்படி 1970-களிலிருந்து பதிவு செய்து வைத்திருக்கும் குரல்கள் ஏராளம் எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்கிறேன். அதன் படி சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பதிவான குரலை நீக்கள் கேட்கப்போகிறீர்கள்.முயற்சியைத் தொடருவது குறித்து உங்கள் கருத்துக்களை வேண்டி விழைகிறேன் 

 1977 என்று நினைவு. விஜயவாடாவில் ஒரு முறை உடல் நலமில்லாமல் இருந்தபோது என் மக்களுக்காக அறிவுரையாக பதிவுசெய்தது. நானும் ஒரு தந்தைதானே. என் மூத்த மகனுக்கு பதினொரு வயது, இளையவனுக்கு ஒன்பது வயது. இதுவரை நான் விரும்பியபடி வாழ்கிறார்கள். இது எல்லா தந்தைகளின் ஆசையுமாயிருக்கும். ஆகவே பதிவினை வெளியிடுகிறேன். 
தொழில் நுட்ப தேர்ச்சி குறைவாய் இருக்கும். உங்கள் கருத்துக்களைப் பகிரலாமே. 

Wednesday, October 15, 2014

கீதைப் பதிவு-12


                                                               கீதைப் பதிவு--12
                                                              ------------------------   


 அத்தியாயம் -12                                      


பக்தி யோகம்
அர்ஜுனன் சொன்னது
இவ்வாறு யாண்டும் யோகத்தில் உறுதிப் பாடுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள், மற்று நிர்க்குண பிரம்மத்தை உபாசிப்பவர்கள் ஆகிய இவர்களுள் யோகத்தை நன்கு அறிந்தவர்கள் யார்.?(1)
ஸ்ரீபகவான் சொன்னது

என்னிடத்தில் மனதை வைத்து யோகத்தில் நிலைத்தவராய், பெருஞ் சிரத்தை உடையவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து(2)
ஆனால் யார் எங்கும் சம புத்தி உள்ளவர்களாய், இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி, சொல்லுக்கு அடங்காததும், கட் புலனாகாததும், மனதுக் கெட்டாததும், எங்கும் நிறைந்ததும் மாறாததும் , நகராததும், நிலைத்ததும், அழியாததும் ஆகிய பிரம்மத்தை நன்கு உபாசிக்கிறார்களோ, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள்(3,4)

நிர்க்குணப் பிரம்மத்தில் சித்தம் வைப்பவர்க்குப்பிரயாசை மிக அதிகம் ஏனென்றால் உடலுணர்ச்சி உடையவருக்கு நிர்க்குணப் பிரம்ம நிஷ்டை அடைதல் அரிதாம்,(5)
ஆனால் யார் வினையனைத்தையும் எனக்கு அர்ப்பித்து, என்னையே பரகதியாகக் கொண்டு, சிதைவுறா யோகத்தால் என்னை தியானித்து வணங்குகிறார்களோ, சித்தத்தை என்பால் வைத்த அவ்ர்களை, பார்த்தா, நான் மரண சம்சார சாகரத்தில் இருந்து  விரைவில் கரையேற்றுகிறேன்.(6,7)

என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக.பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.(8)
தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின், அப்பியாச யோகத்தால் என்னை அடைய விரும்பு..(9)
அப்பியாசத்தில் உனக்கு வல்லமை இல்லையாயின் என் பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக் கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்.(10)

இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தினவனாய், தன்னடக்கம் பயின்று கர்மபலன் முழுவதையும் எனக்கு அர்ப்பணம் செய்.(11)
அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்தினும் தியானம் மேலானது.தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது .தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது.(12)
உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களை சமமாகக் கருதி, பொறுமை படைத்து எப்போதும் சந்தோஷமாய் இருப்பவன், யோகியாய், தன்னடக்கம் உடையவனாய், திட நிச்சயம் உள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய், யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்(13,14)

யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ யார் உலகத்தினின்று இடர் படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், கலக்கம், இவைகளில் இருந்து விடு பட்டவனோ அவன் எனக்கு உவந்தவன்(15)
வேண்டுதல் இலனாய், தூயவனாய்த் திறமை உடையவனாய் ஓரம் சாராதவனாய், துயரமற்றவனாய்க் காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி பண்ணுபவன் எனக்கு இனியவன் ஆகிறான்(16)
மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுதலும் அவா உறுதலும் இன்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்(17)
பகையையும் நட்பையும் , அங்ஙனம் மானத்தையும் அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்பம் துன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மௌனி, கிடைத்ததில் திருப்தி அடைபவன் இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளம் உடையவன், -பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன்.(18.19)
சிரத்தை உடைய எந்த அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத் தர்மத்தை ஈண்டு உரைத்தபடி கடை பிடிக்கிறாரோஅவரே எனக்கு மிகவும் இனியவர்.(20)
                 பக்தி யோகம் நிறைவு       
 

   
  


 

 

 

 


Monday, October 13, 2014

இடைவேளையில்......


                                         இடைவேளையில்........
                                         ------------------------------
வழக்கம் போல் கீதைப் பதிவுகளுக்கிடையில் காணொளிகளும் புகை படங்களுமான பதிவு. எண்ணங்களை எழுத்தில் வடிக்கலாமே







மேலே உள்ள படங்களுக்குப் பொருத்தமான தலைப்பு தமிழிலோ, ஆங்கிலத்திலோ தர வேண்டுகிறேன்




Friday, October 10, 2014

கீதைப் பதிவு-11


                                   கீதைப் பதிவு -அத்தியாயம் 11
                                   ----------------------------------------
விசுவ ரூபம் --ஒருகற்பனை



கீதைப் பதிவு-11
விஸ்வரூப தர்சன யோகம்
அர்ஜுனன் சொன்னது
என்னைக் காத்தருளுதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறை பொருளுமாகியாஆத்ம தத்துவத்தைப் பற்றிய மொழியால் என் மயக்கம் ஒழிந்தது(1)
கமலக் கண்ணா,உயிர்களின் பிறப்பு, இறப்பு,  விரிவாக உம்மிடம் என்னால் கேட்கப்பட்டன;உமது முடிவற்றமஹிமையும் கேட்கப்பட்டது.(2)
பரமேசுவரா, தாம் தம்மைப் பற்றிப் பகர்ந்தது முற்றும் முறையே.( இனி) புருஷோத்தமா, உமது ஈசுவர வடிவத்தைக்காண விரும்புகிறேன்(3)
இறைவா,அதைப்பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின், யோகேசுவரா, உமது அழிவற்ற உருவத்தைக் காட்டி அருள்க.(4)

ஸ்ரீ பகவான் சொன்னது
பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவும் உடைய எனது தெய்விக உருவங்களை நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாய், இனிப் பார் பார்த்தா.(5)
ஆதித்தியர்களையும், வஸுக்களையும், ருத்திரர்களையும், அச்வினிகளையும் அங்ஙனமே மருத்துக்களையும் பார், முன்பு காணாத அதிசயங்கள பலவற்றைப் பார்.(6)
அர்ஜுனா, எனது இவ்வுடலிலே ஒன்று சேர்ந்துள்ள ஜங்கம ஸ்தாவரங்களாகிய ஜகத் முழுவதையும், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்போது பார்.(7)
ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது.உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். எனது ஈசுவர யோகத்தைப் பார்(8)
ஸஞ்ஜயன் சொன்னது
 வேந்தே, யோகத்துக்குப் பேரிறைவனாகிய ஹரியானவர், இங்ஙனம் உரைத்த பின்பு பார்த்தனுக்கு, தம் மேலாம் ஈசுவர வடிவத்தைக் காட்டி அருளினார்.(9)
அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது;பல அதிசயக் காட்சிகள் கொண்டது.தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்விக ஆயுதங்கள் பல ஏந்தியது.(10)
திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்ய கந்தம் பூசியது; பெரும் வியப்பூட்டுவது, பிரகாசிப்பது, முடிவற்றது, எங்கும் முகமுடையது.(11)
வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது அம்மஹாத்மாவின்  ஒளிக்கு ஒப்பாகும்.(12)
அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவ தேவனுடைய  தேகத்தில் ஒன்றுகூடி இருப்பதைப் பாண்டவன் பார்த்தான்/(13)
பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தேவனைத் தலையால் வணங்கிக் கை கூப்பிக் கூறுவானாயினன்(14)
அர்ஜுனன் சொன்னது.
தேவா. உமது உடலில் தேவர்கள் எல்லாரையும், உயிர்த் தொகுதிகள் அனைத்தையும், தாமரை மலர் மிசை இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் எல்லாரையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.(15)
உலக வடிவுடைய உலகநாயகா, எண்ணிறந்த கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள உடைய உமது அலகில்லா உருவத்தை எங்கும் பார்க்கிறேன். மேலும் உமது முடிவையோ, இடையையோ, துவக்கத்தையோ காண்கிறேனில்லை.(16)
கிரீடம் தரித்து. கதை தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிழம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன்.(17)
தாம் அழியாத பரம்பொருள்;அறியத் தகுந்தவர்இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடம் நீர்; மாறாதவர்; ஸநாதன தர்ம ரக்ஷகர்; என்றென்றும் உள்ள பரமாத்மா தாம் என என்னால் அறியப் படுகிறீர். (18)
ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவில்லாத சக்தியை உடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாக உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், தமது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன் (19)
மஹாத்மாவே விண் மண் உலகின் உடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உம்மாலே நிரம்பப் பட்டிருக்கின்றன.உமது இந்த அற்புதமான உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது.(20)
இவ்வானவர் எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர்.சிலர் அஞ்சிக் கை கூப்பி நின்னைப் புகழ்கின்றனர்,மஹரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர்..(21
உருத்திரர், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விசுவேதெவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இவர்கள் கூடி வியப்படைந்து உம்மையே பார்க்கிறார்கள்,(22)
நெடுந்தோளோய், பல முகங்கள் கண்கள், பல கைகள், துடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு,, உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.(23)
விஷ்ணுவே, வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய, கனல் வீசும் விசால்க் கண்களையுடைய  உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காண்கிறேன் இல்லை.(24)
தேவர் தலைவா, அச்சமூட்டும் கோரப் பற்களுடன் ஊழித் தீக்கு ஒப்பான உனது முகங்களைக் கண்டதும் எனக்குத் திசைகள் தெரியவில்லை.அமைதியும் அடைந்திலேன், வையகத்துக்கு வைப்பிடமே அருள புரிக.(25)
திருதராஷ்டிர புத்திரர் எல்லோரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும் பீஷ்மர், துரோணர், சூதபுத்திரனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும், பயங்கரமான கோரப் பற்களுடைய உமது வாய்களுள் பரபரப்புடன் பிரவேசிக்கிறார்கள், சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் இடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப் படுகிறார்கள்.(26,27)
பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் பல கடலையே நோக்கிப் பாய்வது போன்று, யாண்டும் வெந்தழல் வீசும் உமது வாய்க்குள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர்.(28)
நாசமடைதற்கு விட்டிற் பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீழ்வது போன்று, நானிலத்து மாந்தரும் நாசமடைதற்கே நும் வாய்களுள் நுழைகின்றனர்(29)
வெங்கதிர் வாய்களால் உலகனைத்தையும் விழுங்கி, யாண்டும் நக்கி ருசி பார்க்கிறீர்.விஷ்ணுவே உமது கொடுஞ்சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பிச் சுடுகின்றன.(30)
பயங்கர மூர்த்தியாகிய தாம் யார் என்று எனக்கு இயம்பும்.உம்மை வணங்குகிறேன். தேவர் தலைவா, அருள் புரிக.முதல்வனாகிய தம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உம் செயல் எனக்கு விளங்கவில்லை.(31)

ஸ்ரீபகவான் சொன்னது.
உலகங்களை அழிக்கவல்ல காலம்நான். உலகங்களை சங்கரிக்கத்(சம்ஹாரம் செய்ய) தலைப்பட்டிருக்கிறேன்.நீ போரினின்று பின் வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்(32)
ஆகையால் நீ எழுந்திரு.புகழைப்பெறு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த ராஜ்ஜியத்தை அனுபவி. இவர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இடது கையாலும் அம்பு எய்யும் வீரா, நீ நிமித்தமாக மாத்திரம் இரு,(33)
என்னால் கொலையுண்ட பீஷ்மரையும். துரோணரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ஙனம் மற்ற போர் வீரர்களையும் நீ(என் கருவியாய் இருந்து) கொல். அஞ்சி வருந்தாதே. போரில் பகைவரை வெல்வாய். போர் புரி(34)
ஸஞ்ஜயன் சொன்னது
கேசவருடைய இம்மொழி கேட்டு கிரீடியானவன் நடுங்கிக் கை கூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி மீண்டும் கிருஷ்ணனிடம் நாக்குளறி நவிலலுற்றான்(35)

அர்ஜுனன் சொன்னது
ஹிரிஷிகேசா, உமது புகழில் உலகம் இன்புற்று மகிழ்கிறது.ராக்ஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள், சித்தர் கணங்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் பொருத்தமானவைகளேயாம்(36)
மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவேசா, ஜகந்நிவாசா, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற்காரணமே உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியதும் தோன்றாததும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதும் அழியாப் பொருளும் நீரே(37)
எண்ணிலா வடிவங்களை உடையோனே, முதற்பொருளே, தொல்லோனும் இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாமே ஆவீர். அறிபவரும், அறியப்படு பொருளும், அருட்பெரு நிலமும் ஆவீர்.உம்மால் உலகம் யாவும் நிறைந்துள்ளது(38)
வாயு,யமன்,அக்கினி, வருணன் சந்திரன்,பிரஜாபதி, முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீர். உமக்குப் பன்முறை நமஸ்காரம். ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரம்.(39)
எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின் புறதிலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த  பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர். ஆதலால் நீரே யாவுமாயிருக்கிறீர்(40)
உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி “ஏ கிருஷ்ணா யாதவா, ஏ கூட்டாளி என்று பணிவின்றி எது பகரப் பட்டதோ, அச்யுதா  விளையாடியபொழுதும் படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உண வருந்துகையிலும், தனித்தோ பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும் , ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப் பட்டீரோ அதை எல்லாம் , அளப்பிலோய் மன்னித்தருள்க.(41, 42)
ஒப்பற்ற பெருமை உடையவரே தாம் இந்த சராசர லோகத்துக்குத் தந்தை. போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகிறீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மிக்கார் ஏது.?(43)
ஆதலால், தேவா, நான் காயத்தால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தை போன்றும், தோழனுக்குத் தோழன் போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக் கடவீர்.(44)
தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்ந்தவனாய் இருக்கிறேன்.மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது, முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஜகந்நிவசா அருள் புரிக.(45)
முன்போலவே கிரீடமும்,கதையும், கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளுடைய விசுவ மூர்த்தியே, நான்கு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக.(46)
ஸ்ரீபகவான் சொன்னது
அர்ஜுனா, அருள் நிறைந்த என்னால் யோக வலிவைக் கொண்டு, இந்த ஒளி நிறைந்ததும் முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலாம் விசுவரூபம் உனக்குக் காண்பிக்கப் பட்டது. உன்னைத்தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை.(47)
குருகுலப் பெருவீரா, மனுஷ்ய லோகத்தில் உன்னைத் தவிர வேறு யாராலும், வேதம் ஓதி அறிவதாலும் , யக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும் நான் இவ்வடிவத்துடன் காணக் கூடியவன் அல்லன்.(48)
இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக் கண்டு உனக்குக் கலக்கமும் மயங்கிய மன நிலையும் வேண்டாம். அச்சம் நீங்கி, மகிழ்ந்த மனதுடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.(49)
ஸஞ்ஜயன் சொன்னது
வாசுதேவர் இங்ஙனம் அர்ஜுனனுக்கு இயம்பிய பின்பு தனது சொந்த வ்டிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும்  தேற்றினார்.(50)
அர்ஜுனன் சொன்னது
 ஜனார்த்தனா, உமது இந்த இனிய மானுட வடிவங் கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கிறேன்.(51)
ஸ்ரீபகவான் சொன்னது
தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய் இந்த ரூபத்தை தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும் இச்சிக்கிறார்கள்.(52)
நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்(53)
எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் , காணவும் , அடையவும் கூடும்.(54)
பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறியாகக் கொள்கிறவனும் என்னிடத்து பக்தி பண்ணுபவனும், பற்றற்றவனும் எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனோ அவன் என்னை அடைகிறான்(55)
                 விசுவ ரூப தரிசனம் நிறைவு.          




     
  

 


 

Wednesday, October 8, 2014

கற்றது கடுகளவு


                                   கற்றது கடுகளவு
                                   -------------------------


கீதைப் பதிவு இட ஆரம்பித்தபிறகு இரு பதிவுகளுக்கிடையில் ஒரு லைட்டான தலைப்பில் ஒரு பதிவு எழுதுகிறேன். கனமான விஷயங்களுக்கு நடுவே ஒரு லேசான தலைப்பு. ஆனால் இந்தப் பதிவை அப்படி லேசானது என்று கூறமுடியாதுஆன்மீக தலைப்புகளில் கவர்ச்சிகரமாக பதிவு இடுபவர்கள் நடுவில் கிடைத்த தலைப்பை ஆன்மீகப் பதிவாக்காமல் என் மனம் சொல்லியதை எழுதுகிறேன் ரத பந்தனக் கவி என்னும் முறையில் இறை இலக்கிய கர்த்தாக்கள் ஆண்டவனை வித்விதமாகக் கவி புனைந்து ஏற்றி வைத்திருக்கிறார்கள். நான் அவ்வளவு  பக்தி உடையவன் அல்ல. இருந்தாலும் இவர்கள் எழுதி இருந்த விதம் என்னைக் கவர்ந்தது.அந்தமாதிரி ஒரு வகைக் கவிதான் திருவெழுக்கூற்றிருக்கை என்பது. இதைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்த எனக்கு அதன் வழிமுறைகளை விளக்கிய திரு.VSK அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன். சாதாரண வெண்பாவின் இலக்கண விதிமுறைகளையே முழுதும் அறியாத நான் இதன் மரபு வழியையும் அறிகிலேன். இருந்தாலும் என் வழியில் ஒரு கவிதை எழுதினேன். தலைப்பைக் கண்டே காத தூரம் ஓடியவர்கள் பலர் ஆகவே தலைப்பை மாற்றி அதையே மீள் பதிவாக இடுகிறேன்
ரத பந்தனக் கவி- பட விளக்கம்

திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் கோயிலிலும் இது எழுதி இருப்பது கண்டு, முன்பே ஒரு முறை விளக்கம் கேட்டு இடுகை இட்டிருந்தேன். சோமாயணம் கலாநேசனும் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அம்மாவும் இது குறித்து எழுதிய பின்னூட்டங்கள் மிகவும் உதவியாய் இருந்தன.

எனக்குள் நானும் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை  எழுதினால் என்ன என்று ஆசை எழுந்தது. என் தமிழ் தேர்ச்சி குறித்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்க முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.


முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.


இனி அடியேனின் பாடல்

 ஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.(121)

குலம் ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்றென்றே சாற்றுகின்றீர் ( 12321).

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.(1234321)


குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.(123454321)


ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.(12345654321)

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ ( 1234567654321)


எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ணால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?
 
சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி


ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.

பின் குறிப்பு:
( என் ஆசான் இதைப் படித்துப் பாராட்டினார். பின்னூட்டத்தில் இது சுவாமிமலை குருநாதனை போற்றிப் பாடும் அற்புதப் பாடல் என்று எழுதி இருந்தார். நான் எண்ணி எழுதாதது அவருக்கு அப்படித் தோன்றியது எப்படி.? விளங்கவில்லை.)