ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் 10


                                          கீதைப் பதிவு அத்தியாயம் 10
                                          ---------------------------------------

அண்மையில் கோகுலாஷ்டமி போது கண்ட குட்டிக் கிருஷ்ணன்



விபூதி யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது.
பாகுபலசாலீ,மேலாம் எம்மொழியை மீண்டும் கேளாய்;கேள்வியில் உவகையுடைய உனது நலம் கருதி அதை நான் நவிலுகிறேன்.(1)
வானவர் கூட்டங்களும் மாமுனிவரும் என் உற்பத்தியை உணரார். ஏனென்றால் வானவர்க்கும் மாமுனிவர்க்கும் முற்றிலும் முதற்காரணம் நானே(2)
ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகுக்குத் தலைவன் என்றுமென்னை அறிகிறவன் மானிடருள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்கள் அனைத்தில் இருந்தும்  விடுபடுகிறான்.(3)

புத்தி ஞானம் மயக்கமின்மை, பொறுமை, சத்தியம்,அடக்கம், அமைதி, இன்பம் துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மன நடுவு,திருப்தி .தபசு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி, ஆகிய பலவித பாங்குகள்,உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன.(4,5)
மஹரிஷிகள் எழுவரும், முன்னை மனுக்கள் நால்வரும் என் ப்ரபாவத்தோடு என் மனதில் உதித்தார்கள்.உலகில் உயிர்கள் யாவும் அவர்களிடத்து இருந்து வந்தவைகள்.(6)( ஏழு ரிஷிகள்= பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர்.நான்கு மனுக்கள்=சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்)
எனது விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறவன் அசையாத யோகத்தைச் சார்ந்திடுவான். இதில் சந்தேகமில்லை.(7) (விபூதிகள்= விரிவுகள்.)
நான் அனைத்திற்கும் பிறப்பிடம் யாவும் என்னிடத்திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் என்னை அன்புடன் வழுத்துகின்றனர்.(8)
சித்தத்தை என்பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவர்க்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், யாண்டும் என்னைப் புகழ்ந்து பேசியும் , மன நிறைவை யடைந்தும் மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.(9)
என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை வழுத்துபவர்களுக்கு புத்தி யோகம் வழங்குகிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்(10)

நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, அந்தக் கரணத்தில் வீற்றிருந்து, மெய்ஞானச் சுடர் விளக்கால் அக்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன்(11)
அர்ஜுனன் சொன்னது
மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர்.எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர்,தேவலர் வியாசர், ஆகியவரும் உம்மை நித்தியமானவன், திவ்ய புருஷன், ஆதி தேவன், பிறவாதவன், எங்கும் நிறை பொருள் என்று இயம்புகின்றனர். தாமும் அப்படியே பகர்கின்றீர்,(12,13)
கேசவா, நீர் எனக்கு ஓதுவது யாவும் உண்மை என்றெண்ணுகிறேன்.பகவானே உமது தோற்றத்தைத் தேவர்களும் அறியார், தானவர்களும் அறியார்,(!4)
புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவா, உயிகளுக்கு இறைவா, தேவ தேவா, அண்ட நாயகனே, உம்மை உம்மால் நீரே உள்ளபடி அறிவீர்(15)
எந்த விபூதிகளைக் கொண்டு இவ்வுலகங்களை நிரப்பி உள்ளீரோ, மேலாம் அவ்விபூதிகளை மிச்சமின்றி நீரே வர்ணித்தருள்க.(16)

யோகீ, யாண்டும் உம்மையே சிந்தித்து நான் உம்மை அறிவது எப்படி? பகவானே என்னென்ன பாங்குகளில் நீர் என்னால் சிந்திக்கத் தக்கவர்,?(17)
ஜனார்த்தனா, உமது யோகத்தையும், விபூதியையும், மீண்டும் விரித்து விளக்குவீராக. ஏனென்றால் உமது அமுத மொழி எனக்குத் தெவிட்ட வில்லை.(18)
ஸ்ரீ பகவான் சொன்னது
நல்லது, குருகுலப் பேராளா, என் மேலாம் மஹிமைகளில் முக்கியமானவைகளை உனக்கு மொழிகிறேன்.ஏனெனில் என் விபூதியின் விஸ்தரிப்புக்கு ஒரு முடிவில்லை.(19)
விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20)
ஆதித்தியர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளுள் கதிர் நிறைந்த ஞாயிறு நான். மருத்துக்களுள் மரீசி, நட்சத்திரங்களுள் சந்திரன்.(21)
வேதங்களுள் நான் ஸாமவேதம், தேவர்களுள் இந்திரன், இந்திரியங்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே.(22)
ருத்திரர்களுள் சங்கரனாகவும், யக்ஷரக்ஷசர்களுள் குபேரனாகவும், வஸுக்களுள் அக்னியாகவும், மலைகளுள் மேரு மலையாகவும் நான் இருக்கிறேன்,(23)
பார்த்தா, புரோகிதர்களுள் முக்கியமான பிருகஸ்பதி நான் என்று அறிக. சேனைத்தலைவர்களுள் நான் முருகக்கடவுள்.நீர்நிலைகளுள் நான் கடல்(24)
மஹரிஷிகளுள் நான் பிருகு, வாக்குகளுள் ஓரெழுத்தாகிய பிரணவம் நான், யக்ஞங்களுள் நான் ஜப யக்ஞம். ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்.(25)
மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரச மரம், தேவரிஷிகளுள் நான் நாரதர், கந்தர்வர்களுள் சித்திரரதன், சித்தர்களுள் நான் கபில முனி. (26)
குதிரைகளுள் அமிர்தத்துடன் உண்டான உச்சைசிரவஸ் என்றும், யானைகளுள் ஐராவதம் என்றும், மக்களுள் வேந்தன் என்றும் என்னை அறிக,(27)
ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம், பசுக்களுள் காமதேனு, பிறப்பிப்பவர்களிடத்து நான் மன்மதன், பாம்புகளுள் நான் வாசுகியாக இருக்கிறேன்.(28)
நாகங்களுள் நான் அனந்தன், ஜலதேவதைகளுள் நான் வருணன்,பித்ருக்களுள் நான் அரியமான், அடக்கி ஆள்பவர்களுள் நான் யமன் ஆவேன்,(29)
தைத்தியர்களுள் (கச்யபருக்கு மனைவியான திதி மூலம் பிறந்த மக்கள்)  நான் பிரஹலாதன், கணிப்பவர்களுள் காலம்,விலங்குகளுள் சிம்மம், பறவைகளுள் கருடன் ஆகவும் நான் இருக்கிறேன்,(30)
தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும் நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்.(31)
அர்ஜுனா, சிருஷ்டிப் பொருள்களுக்கு நான் ஆதி நடு அந்தமாகிறேன். வித்தைகளுள் நான் ஆத்ம வித்தை,தர்க்கிப்பவர்கள் பால் நான் வாதமாகிறேன்(32)
எழுத்துகளுள் நான் அகரம், கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு, ஓயாத காலம் நானே, எங்கும் பரந்திருந்து வினைப்பயனை வழங்குபவன் நானே.(33)
அனைத்தையும் அழிக்கும் மரணம் நான், செல்வந்தர்களின் வளர்ச் செல்வம் நான், பெண்மைகளுள் நான் புகழ். திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கிறேன்.(34)
மேலும் நான் ஸாம கானங்களில் பிருஹத் ஸாமம், சந்தங்களில் காயத்ரீ, மாஸங்களில் மார்கழி, பருவங்களில் வஸந்த காலம் நான்.(35)
வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான், தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான், வெற்றியாகவும் முயற்சியாகவும், சாத்விகர்களுடையசத்துவ குணமாகவும் நான் இருக்கிறேன்.(36)
விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் வியாசர், கவிகளுள் நான் சுக்கிறன்.(37)
தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல், வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி, ரகசியங்களுள் நான் மௌனம், ஞானிகளுடைய ஞானமும் நானே.(38)
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோஅது நான். என்னையன்றி ஜங்கம ஸ்தாவரங்களில் வாழ்வது ஒன்றுமில்லை.(39)
எதிரியை வாட்டுபவனே, என் திவ்ய விபூதிகளுக்கு முடிவில்லை.என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால் இயம்பப் பட்டது(40)
மஹிமையுமழகும் வலிவும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் பிரபையின் ஒரு பகுதியில் உண்டானது என்று அறிக.(41)
அர்ஜுனா, இதைப் பலவிதமாகப் பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன.?எனது ஓர் அமசத்தால் உலகு அனைத்தையும் தாங்கி இருக்கிறேன்.(42)
                 விபூதி யோகம் நிறைவு.    .    .           



    .
 

 
 
  

15 கருத்துகள்:

  1. விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே

    கர்ணன் படத்தில் மரணத்தின் தன்மையை கண்ணதாசன் அற்புதமாக விளக்கியிருப்பார். “ மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா.பாடல் மனதில் ஒலிக்கிறது.

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
    மரணத்தின் தன்மை சொல்வேன்;
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
    மறுபடிப் பிறந்திருக்கும்;
    மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
    வீரத்தில் அதுவும் ஒன்று;
    நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
    வெந்து தான் தீரும் ஓர் நாள்.
    என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
    எனதென்றும் அறிந்து கொண்டாய்;
    கண்ணன் மனது கல் மனதென்றோ
    காண்டீபம் நழுவ விட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே, மக்களும் நானே,
    மரம் செடி கொடியும் நானே;
    சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
    துணிந்து நில் தர்மம் வாழ.

    புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
    அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே.

    கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
    கண்ணனே கொலை செய்கின்றான்.
    காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
    இக்களமெலாம் சிவக்க வாழ்க!

    பரித்ராணாய சாதூனாம்,
    விநாசாய சதுஷ்க்ருதாம்;
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
    சம்பவாமி யுகே யுகே.

    பதிலளிநீக்கு
  2. //சித்தத்தை என்பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவர்க்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், யாண்டும் என்னைப் புகழ்ந்து பேசியும் , மன நிறைவை யடைந்தும் மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.(//

    முயற்சி செய்யணும்! எங்கே மனது தான் அலை பாயுமே! :(

    பதிலளிநீக்கு
  3. கீதையின் விபூதி யோகம்!..
    இதுவே விஸ்வரூப திருக்காட்சி!...

    தொடர்கின்றேன்.. ஐயா..

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஐயா.

    வணக்கம். என்னுடைய சிறிய கருத்தை உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

    பொதுவாக இதுபோன்ற புராணத் தொடர்பான செய்திகளை எழுதும்போது அதனை அவ்வாறே எழுதுவதில் நான சற்று முரண்படுகிறேன். இதன் பொருள் கீதையின் கருத்தில் அல்ல. சொல்லப்படும் முறையில். எனவே ஒவ்வொரு அத்தியாயத்தையும் நீங்கள் உள்வாங்கியிருக்கிறீர்கள். எனவே அதற்கான பொருளை உள்வாங்கி உங்கள் நடையில் எளிமையான சொற்புரிதலோடு சொன்னால். அவை ரத்தினச் சுருக்கமாகக் கூட இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஐயா

    இதுவே நாளைக்கு கீதைக்கான உங்களின் எளிய உரையாகக் கூட அமைந்து நலம் பயக்குமல்லவா?

    பதிலளிநீக்கு

  6. @ ஸ்ரீராம்
    தொடர்வதற்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  7. @ இராஜராஜேஸ்வரி
    ஒருபதிவு எவ்வளவு எண்ணங்களைத் தூண்டி விடுகிறது....! கண்ணதாசன் போன்றவர்கள் தங்கள் பாடல்களுக்கு தாராளமாகவே இறை இலக்கியங்களின் துணை நாடியிருக்கிறார்கள். பாருங்கள் ஒரு திரைப் படத்தில்பாடலாக ஒலிக்கும் போது அது மக்களைச் சென்றடைகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. @ கீதா சாம்பசிவம்
    பயிற்சி செய்ய வேண்டும் என்று இன்னொரு இடத்தில் வருகிறது. வருகைக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  9. @ துரை செல்வராஜு
    இது விபூதி யோகம் அடுத்து வரும் விஸ்வரூபம். வருகைக்கும் கருத்துக்கும்நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  10. @ வெ. நடனசபாபதி
    தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  11. @ ஹரணி.
    வணக்கம் ஐயா. உங்கள் மேலான கருத்துக்களின் படி பதிவு எழுதும் முன்பே சிந்தித்து இருக்கிறேன். இதை எழுதுவதின் நோக்கமே கீதையை அதில் இருக்கும் விதத்தில் வார்த்தைகளை விடாமல் தமிழில் ஒரு முறையாவது வாசிக்கும் வாய்ப்பை அளிப்பதுதான். நான் அதில் இருப்பதை உள்வாங்கி எழுத முயன்றால் என்னை அறியாமலேயே என் சிந்தனைகளும் கருத்துக்களும் பதிவில் வரும் வாய்ப்புண்டு. அதை நான் தவிர்க்கவே இப்படி. கீதைக்கு ஒரு முன்னுரை என்று இத்தொடரைத் தொடங்கும் முன் எழுதி இருக்கிறேன் . இத் தொடர் முடிந்தபின் இது சார்ந்த என் கருத்துக்களை பதிவாக்கவும் எண்ணம்.ஆன்மீக விஷயங்களில் என் சிந்தனையின் போக்கு மாறுபட்டது. அதையே நான் இது என் ஏரியா அல்லவே என்று குறிப்பிட்டிருந்தேன் மற்றபடி நீங்கள் சொல்வது போல் பதிவிடுவது கீதைக்கு ஒரு அடையாளம் இல்லாதவனின் விரிவுரை போல் இருக்கும்.கீதையை அதைச் சிதைக்காமல் எல்லோரும் ஒரு முறையேனும் வாசிக்கும் வாய்ப்பு கருதியே இப்பதிவுகள். உங்கள் மேலான கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் என்று செவி சாய்க்கும் எண்ணமுடையவனின் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  12. @ கரந்தை ஜெயக்குமார்
    தொடர் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு