Tuesday, December 31, 2013

புத்தாண்டுச் சிந்தனைகள்


                               புத்தாண்டுச் சிந்தனைகள்.
                               ------------------------------------



புத்தாண்டு பிறக்கிறது

நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.
இன்று மட்டும் இது என்ன புதிதா.?
பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்
புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு
பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்
சற்றே சிந்தித்துப்  பார்க்கிறோமா.
சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக் கூறுமுன் கடந்து சென்ற
ஆண்டை நினைத்துப் பார்க்க வேண்டாமா.
கடந்த ஆண்டு என்ன செய்ய நினைத்தோம்
நினைத்ததெல்லாம் செய்து முடித்தோமா?

நம்பிக்கைகள் வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.
அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்
அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,
வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்
எல்லாம் காலத்தின் குறியீடுகள் இவற்றின்
ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்
நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்
இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து நிகழப்
போவது யாரே அறிவார். யாரும் யாரையும்
காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா

புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு
கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி
வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......
பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-( இருமுடி
எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம் இருத்தல்போல்
விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள் ).
பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால் போதுமா.?.
கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல் வேண்டாமா.?.
இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுதத் நொடி
காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்
அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்
ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக  அன்பர்களே
என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sunday, December 29, 2013

கோவிலும் கோவிலைச் சார்ந்தும்


                     கோவிலும் கோவிலைச் சார்ந்தும். .....
                     --------------------------------------------------




வலைப் பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இடைவெளிக்குப் பின் எழுதும் போது கடவுள் பற்றியும் கோவில் பற்றியும் எழுதினால் பலரும் படிப்பார்கள் என்று தோன்றுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதி ஏறத்தாழ ஒரு மினி கேரளா என்று சொல்லலாம்.மலையாளிகளுக்கு பகவதிக்கு அடுத்தது ஐயப்பன் வழிபாடு பிரதானம் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஐயப்பன் கோவில் உண்டு.பெங்களூரில் சற்று பிரசித்தியானது. ஜலஹள்ளி ஸ்ரீஐயப்பன் கோவில் என்று பெயர். வழக்கம் போல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப சீசன் களை கட்டி விட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் கோவிலில் மாலை போடுவதும் இருமுடி கட்டுவதும் சபரிமலைக்குப் பயணம் செய்வதுமாக இவற்றையெல்லாம் பார்க்கும் போது என் குதர்க்க புத்தி மீண்டும் எனக்குள் கேள்விகள் கேட்கிறது.
பொதுவாக சபரிமலைக்குப் போகிறவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு மண்டல காலம் விரதம் இருந்து  இருமுடிகட்டி சபரிமலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த ஒரு மண்டல கால விரதம் அவர்களை மனசும் உடலும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வைக்க உதவும் உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு. இந்திரியங்களை கட்டுக்குள் வைத்தல் ஆண்டவன் நாமஸ்மரணம் போன்றவை அனுஷ்டிக்கப் பட்டால் மற்ற காலங்களிலும் அது நம்மை நாமே அடக்கியாள உதவும் என்பது பொதுவாக அறிந்து கொண்டது. மலைப் பயணம் கடினமாக இருக்கும் என்பதால் காலணி இன்றியும், மிதமாக உணவருந்தியும் , மற்றவர்களுக்கு இந்த மாதிரி விரதம் இருப்பவர்  என்பதைத் தெரியப் படுத்தவும் வேண்டி  கருப்பு உடை அணிந்து முக ஷவரம் செய்யாமல் இருப்பது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் மாலை அணிந்து மறுநாளே மலைக்குப் பயணிக்கிறார்கள். சபரிமலை ஐயப்ப தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது.  விரதமிருப்பது என்பது போயே போச். ஒரு மண்டல விரதம் என்றால் கார்த்திகை முதல் நாள் தொடங்கினால் மார்கழி மாதம் பத்தாம் தேதிவாக்கில்தான்  முடிவடையும் பயணம்  மேற்கொள்ள முடியும். சபரி மலை ஐயப்பதரிசனத்தில்  practically , everything  is compromised.  எது எப்படியோ இருக்கட்டும் , இதனால் சபரிமலைக்குப் போவோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடிவிட்டது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் பலன் பலருக்கும் போய்ச் சேருகிறதே. அது போதாதா. ?
ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் விழாவுக்கு வருவோம். டிசம்பர் மாதம் பதினாறாம் நாள் எங்கள் ஏரியா பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது.அருகில் இருக்கும் கருமாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலம். வாணவேடிக்கைகள் சூழ கேரளத்தின் பாரம்பரிய கலைகள் ,  காட்சிகளுடன் பஞ்ச வாத்தியங்களுடன் கொட்டு மேளம் முழங்க பெண்குழந்தைகள் தாலத்தில் விளக்கு வைத்து ஏந்திவர ஸ்ரீஅயப்பன் தேரிலும்  யானை மீதும் வருவதைப் பார்க்கும் போது ஒருபுறம் இப்படியாவது பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப் படுவது மனசுக்கு இதமளிக்கிறது. , நகரங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினர் கண்டு உணர ஒரு வாய்ப்பு, என் கைபேசியில் எடுத்த சிலகாணொளிகளை இத்துடன் வெளியிடுகிறேன். தரமாக இல்லை என்றாலும் ஒரு ஐடியா கிடைக்கும். முதலில் ஏரியா பூஜை முடிந்து கொடி யெற்றம் . அதன் பிறகு தினமும் சுற்றுவட்டார மக்களின் பூஜைகள் தினமும் நடக்கும். 16-ம் தேதி துவங்கிய விழா  22-ம் தேதி பள்ளிவேட்டை, 23-ம் தேதி ஆராட்டு என்று நடந்து 26-ம் தேதி மண்டல விளக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.
இப்பொழுதெல்லாம் கோவிலில் மதியம் தினமும் அன்னதானம் நடக்கிறது, விழாக்காலங்களில் தினமும் விருந்தே படைக்கின்றனர்.
மலைக்கு போவோர் வசதிக்காக கோவிலிலேயே எல்லாவிதப் பொருட்களும் கிடைக்கும் படியாக ஒரு கடையும் இயங்குகிறது. சபரிமலைக்குப் போவோர் வசதி கருதி கட்டு நிறைத்தலுக்காகவும் வசதிகள் இருக்கின்றன. கோவில் ட்ரஸ்டின் மேற்பார்வையில் சகல வசதிகளுடன் கூடிய பள்ளி இறுதிவரை படிக்க வசதியாக கல்விக்கூடங்களும் இருக்கிறது. ஒரு திருமண மண்டபம் ஒரு மருத்துவமனை எல்லாம் இருக்கிறது. இப்போது கோவிலை விஸ்தரிக்க ஒரு அடி நிலம் அளிக்க வேண்டியும் கோரிக்கை இருக்கிறது. கோவிலை அடுத்துள்ள இடத்தை வாங்கும் முயற்சியே இது. ஒரு அடி நிலம் ரூ.7000-/ ஆகிறது
முன் காலத்தில் கோவிலைச் சுற்றியே எல்லா வளர்ச்சிகளும் இருந்ததாக அறிகிறோம்  அதேபோல் இங்கும் கோவிலை மைய்யமாகக் கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது. 

 .    


(மேற்கண்ட காணொளிகள் 2010-ம் ஆண்டைய விழாவின் போது எடுத்த்து இந்த ஆண்டு யானை வரவில்லை. ஆனால் இன்னும் சிறப்பான ஊர்வலம் நடந்தது.)

Friday, December 20, 2013

கடந்து வந்த பாதை -திரும்பிப் பார்க்கிறேன்


                 கடந்து வந்த பாதை-திரும்பிப் பார்க்கிறேன்.
                 ----------------------------------------------------------


சில நாட்களாக நான் எழுதிய பதிவுகளையே திரும்பிப் பார்க்கிறேன் ஆகஸ்ட் மாதம் 2010-ல் தொடங்கிய என் பதிவுலகப் பிரவேசம்இன்று வரை தடையேதுமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.என்றால் அதற்கு முக்கிய காரணம் என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து வந்து என்னை உற்சாகப் படுத்தியவர்களின் பங்கும் அதிகம் உண்டு என்று தெரிகிறது. புதுத் துடைப்பம் நன்கு சுத்தம் செய்யும் என்பது போல என் ஆரம்பகால எழுத்தும் சுமாராக இருந்திருக்கிறது. மேன் மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கம் அளித்த பதிவுலக வாசக நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம். நானும் எழுத முடியும் என்று நம்பவைத்து ஊக்கப் படுத்திய நண்பர்களை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன் உங்களிடமும் பகிர்கிறேன் ( என் எழுத்துக்கான பின்னூட்டங்கள்--எனக்கானது அல்ல.) பதிவுக்குத் தலைப்பைச் சொடுக்கவும்.பதிவுகளைத் தேடிச் செல்ல வேண்டாம் உ-ம்
தலைப்பு -சில சந்தேகங்கள். இது அண்மையில் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கி இருக்கும் நண்பர்களுக்கு உதவும். எனக்கும் உதவும்...! 

"அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்"
"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது"....

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?

.

எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் 

மகிழ்ச்சி..வியப்பு..எண்ணங்களின் அதிர்வுகள் என உறைந்துபோய் நிற்கிறேன். ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயம் மிளிரும் சிலையைப்போல இந்தக் கட்டுரையைக் காண்கிறேன். உங்களின் அபாரமான எழுத்தாற்றலை உங்கள் பணி விழுங்கி செரித்திருக்கிறது பல்லாண்டுகளாக என்று உணர்ந்துகொள்கிறேன். எரிமலைபோல மனதுக்குள்ளே கனன்றுகனன்று இன்று வெடித்து பரவுகிறது. அருமையான சுய அனுபவத்தில் அனுபவித்த பொருண்மையை அல்லது அருகிருந்து பார்த்த பொருண்மையை இத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது அருமை. நல்ல கலைநயத்தோடு உண்மை பொறுப்புணர்ச்சியோடும் அலசப்பட்ட கட்டுரை இது.


எழுத்தை எழுத்தாகக் கொண்டு படித்தால் மனம் புண்படாது படிக்கலாம் என்பது என் எண்ணம். முகந்தெரியாதவரை காரணமில்லாமல் தாக்குவதில் எழுதுகிறவருக்கும் motive இல்லை என்பதை நம்புகிறவன் நான். எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால் படிப்பவரும் திறந்த மனதோடு, அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.



வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடையும் வேண்டாத போது கிடைத்த வரமும்.

>>>கிளிக்கு ஒரு நெல்
ஆகா!
 
வாழ்வின் விளிம்பில் 

இருத்தலையும் இல்லாதிருத்தலையும் இவ்விரண்டையும் மனமெனும் குறளி பார்ர்க்கும் பார்வையையும் எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலு சார்?

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.






அறிவியலையும், ஆன்மீகத்தையும் கேள்வி கேட்டு, அந்த இரண்டையும் குழைத்து கொடுத்திருக்கிறீர்கள். விடை தெரியா வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள்.

இதெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்வதில்லை, ஜிஎம்பீ சார்! அது இதுவோ என்று சலனமாக உணரப் படுவது.. உணர்ந்ததும் போக்குக் காட்டி இதுவில்லையோ என்று மயங்க வைப்பது. வார்த்தைகளால் விவரித்து இன்னொருத்தருக்குச் சொல்லமுடியாது, வியக்க வைப்பது. தானே தன்னுள் தோண்டி தானின் தரிசனம் காண்பது.

கேள்விக்குள் பதிலை மறைத்து பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும் உங்கள் பதிவு அருமை

தன்னுள் தோண்டி தானிiன் தரிசனம் காண விழையும்போது, தன்னுள் ஒரு தான் இருப்பதாக எண்ணிக்கொண்டே தேடுகிறோமோ?இதுவோ அதுவோ என்று போக்கு காட்டும் ஒன்றை தன்னுள் தேடுதல், இந்த வாழ்வில் இயலாதது. மனிதாலயத்தில் அரனாயிருந்த எனும்போது, ஏதோ ஒன்றை முடிவாய் நினைத்து தேடுதல் போலாகும் . என் கூற்றை சற்றே கவனமாய்ப் பாருங்கள் அண்டமே ஒன்றின் , இருட்டின் வியாபிப்பு என்ற மெய்ஞானப்படி தேடுவதும், உயிரென்பதும் ஆன்மா என்பதும் எண்ணிக்கையில் மாற்றமில்லாதிருக்க வேண்டும் என விஞ்ஞானப்படி அறிவதும், வரைந்து முடித்த வட்டத்தின் துவக்கப் புள்ளியை தேடுவது போன்ற பலன் தராத ஒன்று. ஆகவே இருளில் இருப்பதே சுகம், நம்பிக்கையே ஞாயிறின் ஒளி என்று கூறி என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த விடியலுக்காக காத்திருக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
 
தேடலின் நிழல் நீண்டு செல்கிறது ஒளி தேடி.பின் ஒளி மங்கி நிழல் மடிந்து ம்ற்றொரு விடியலுக்காய்க் காத்திருக்கிறது.

அது எதுவென நினைக்கிறோமோ அது அதுவில்லை.

புதிரும் விடையும் ஒன்றில் ஒன்றெனப் பிணைந்து படரும் இவ்வாழ்க்கையின் சக்கரத்தை நான் என் மகனிடம் கொடுத்துச் செல்வேன்.அவன் கேள்விகள் மேலும் தொடர அவன் மகனிடம் கொடுத்துச் செல்ல மெல்ல உருளும் நில்லாச் சக்கரம்.
 

மற்றெல்லா உணர்ச்சிகளையும் போலத்தான் காதலும்.

காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.

இந்த மாதிரியான குணங்கள் கொண்ட இருவரில் ஒருவர் பேசினால்-ஒருவர் சிந்தித்தால்-போதும் என்ற அளவில் ஒத்த சிந்தனை நிலவும்.

ஆதலினால் மானிடரே எல்லாவற்ரையும் காதல் செய்வீர்.காதல் என்ற வார்த்தைக்குள் அடைபடாத காதல் செய்வீர்.

நல்ல பதிவு. "காதல்" என்ற வார்த்தையைக் கண்டதும் உங்கள் பதிவின் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை..காதல் என்ற வார்த்தைக்கே அத்தனை வலிமை இருக்காக்கும் :))
 
//குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.//

இது உண்மை ஐயா...ஜெமினி கணேஷன் முதல் மனைவி பாப்ஜி அவர்கள் கிட்டே அவங்க பெரிய பொண்ணு கமலா கேட்டு இருக்காங்க..."எப்படியம்மா ...இந்த அப்பாகிட்டே சகிச்சுட்டு குடும்பம் நடத்தின...உன் காதலை துச்சமாக்கிட்டு எத்தனை பொண்ணுங்களை கட்டிக்கிட்டு வரார் னு"...அதுக்கு பாப்ஜியம்மா சொல்லி இருக்காங்க..." நான் அவரை மிகவும் காதலிக்கிறேன்...காதல் என்பது குறைகளையும் தாண்டி நேசிப்பது தான்....பெண்களிடம் சபலப்படுவது அவர் குறை...ஆனால் அந்த குறையவும் தாண்டி அவரை காதலிக்கிறேன்..." அப்படி னு சொல்லி இருக்காங்க...(இதை நான் ஒரு புத்தகத்தில் படிச்சேன் பாலு ஐயா...நீங்க அந்த வரிகளை சொல்லும்போது இந்த சம்பவம் தான் மனதில்.

ஐயா... கொட்டியிருக்கிறீர்கள். அன்பின் வழியது உயர்நிலை என்பார்கள் ஆன்றோர்கள். அன்புதான் அழியாக் காதல். அது மனதின் ஊடாட்டத்தால் வருவது. யாயும் யாயும் யாராகியரோ...குறுந்தொகைப் பாடல் அற்புதமாய் காதலுக்கு விளக்கம் கூறும். இப்போது அதிக விழுக்காடு மெய்யின் புணர்ச்சிக்காகவே அலைபாய்கிறது காதல் எனும் பெயர் சூட்டி. இதுதான் இப்போது காணும் மெய். பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் பிள்ளைகளை ரவுடிகள் காதல் கொள்வதுபோல பல படங்கள் இந்த மண்ணில் காதலைக் குழிதோண்டிப் புதைக்க வழி செய்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எனும் பெயரால் அவை சீரழிவைத் தொடங்கி வைத்துவிட்டன கேவலமாய் பணத்தை ஈட்டிக்கொண்டு.
 
அன்பே சிவம் என்று திருமூலர் இன்னும் உயர்வாக உயர்த்தி வைத்தார். 47 வருட உங்கள் காதல்வாழ்விற்கு என்னுடைய பெருமைமிகு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள். காதல் இல்லாமல் காதலின் பொருண்மை புரியாமல் காதலை பெருமைப்படுத்தாமல் கௌரவப்படுத்தால் உயர்த்திப் பிடிக்காமல் அந்தப் பெயரை பலிபீடமாக வைத்துக்கொண்டு பல உயிர்கள் வதைபடுகின்றன நாள்தோறும். வருத்தம். மிக வருத்தம். சரியான நேரத்தில் சரியான பதிவு. இளையவர்கள் படிக்கவேண்டும். அனுபவம் நல்ல இலக்கைக் காட்டும் பாதையாகும்.
---------------------------------------------------------

..


 



 


 



 

Tuesday, December 17, 2013

கவிதை எழுதலாமே


                   கவிதை எழுதலாமே
                   ------------------------------
 சில மாதங்களுக்கு முன் சில படங்களை வெளியிட்டுக் கவிதை எழுதலாமே என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் படங்கள் தெரிய வில்லை என்று பலரும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அப்போது படங்களை வெளியிடும் நுணுக்கம் எனக்குத் தெரியவில்லை. இப்போது அதே படங்களை வெளியிடுகிறேன். மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது போட்டி ஏதுமில்லை. பொருள் கிடைத்து படமும் இருக்க எழுதுவது சிரமமிருக்காது. கவிதைப் பதிவுகளை எதிர்நோக்கி. எழுதுகிறவர்கள் என் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தினால் நலமாயிருக்கும்.

மரத்தில் மயில்
 
தோகைவிரித்த மயில்
பறக்கும்மயில்-1
பறக்கும் மயில்-2
பறக்கும் மயில்-3
பறக்கும் மயில்-4
படங்கள் தெரியாததால் கவிதைகள் ஏதும் வரவில்லை. பிறிதொரு பதிவில் நான் மயில் குறித்த கவிதை எழுதிப் பதிவிட்டிருந்தேன். அதையே இப்போது இங்கு மீண்டும் பகிர்கிறேன். 

                        சூரா உன் சதியா.?
                      --------------------------


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.




Sunday, December 15, 2013

வெற்றியும் தோல்வியும் மீண்டும்


                                வெற்றியும் தோல்வியும்  மீண்டும்
                                ------------------------------------------------



கனவுகளில் மூழ்கி இருக்கும்போது எல்லாமே இன்பமயமாய் இருக்கும்விழித்து எழுந்து விட்டால் கடமைக் கடலாய் நிற்கும் கடமைகளைச்செய்யும்போது வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரலாம்,.... வரும்....தோல்வி கண்டு துவளாமலும் வெற்றிக் களிப்பில் மிதந்து தன்னை இழக்காமலும் இருப்பது என்பது அநேகமாக நம்மில் பலரும் உணர வேண்டிய நிலை. பல நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனைப் படித்துப் பார்த்தபோது மீள் பதிவாக்கினாலும் குணம் குறையாது என்று தோன்றியது. வெற்றியையும் தோல்வியையும் நாம் எதிர்கொள்ளும்போது நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள் என்று தோன்றுகிறது

வெற்றியும் தோல்வியும் 
----------------------------------
           தீதும் நன்றும் பிறர் தர வாரா
               வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா 
               நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் --நல்ல
               படிப்பினையே யன்றி வேறொன்றோ  

தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல 


             விழுந்து எழுந்து முட்டி மோதி 
              இலக்கடைந்தால் கிடைப்பதன் அருமை கூடிவிடும். 
 
ஊர் கூடி வடம் பிடித்து தேரிழுக்க 
தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும்
நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும்
முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை
தேரோட்டந்தான் தோல்வியாமோ

            வாழ்வியலில் சந்திக்கும் சறுக்கல்களும் 
            தேரின் முட்டுக்கட்டைக்கு நேரன்றோ
            நட்பிடமும் உறவிடமும் வெற்றி தோல்வி 
            தேடாதே, நடப்பவை எல்லாம் அனுபவமே,
           ஆற அமர சிந்தித்தால் அறிவில் தெளிவைக் காண்போமே.

ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை 
நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை
விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்
விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ
நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய்.

             வாழ்வியலில் வீழ்ந்து பட்டாய்
             நீ ஆடித்தான் ஆகவேண்டும் -தேர்வு
             செய்யும் உரிமை இங்கில்லை உனக்கு. 

வேண்டுமென்றே தோற்பதும் சில சமயம்
சுகமாகத் தோற்பதும் உற்றாரின் வெற்றிக்கே -அது
மகனோ மகளோ, பெயர் சொல்ல வந்த பெயரனோ,
உற்ற நட்போ,காதல் ஜோடியோ, கடிமணத்துணையோ
யாரேனும் ஆகலாம் - அவர்கள் காணும் உவகையிலே
நீ  அடையும் மகிழ்ச்சிக்கே.


               தோல்வி தீதல்ல எனும்போதே
               வெற்றி என்றும், நன்றென்று ஆவதில்லை.
               வெற்றி என்றும் நன்று, என்றும் ஆவதில்லை.
              அதனை ஏற்கும் முறையே தீர்மானிக்கும்

வெற்றி சில சமயம் தலைக்கனம் ஏற்றும்
சுற்றில் நடக்கும் நிகழ்வுகள் கண்ணில் படாது,
கருத்தினில் படியாது,முயற்சிகளை முறியடிக்கும்,
கடந்து வந்த பாதை காணாது போகும்.    
வெற்றியின் உச்சியிலிருந்து வீழ்ந்து பட்டால்,
பின் மிச்சம் ஏதும் கிட்டாது மீண்டும் துவங்க.

              விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்
              உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
             "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"

 



 

Friday, December 13, 2013

ஆவிகள் உலகம் .........


                            ஆவிகள் உலகம்........ஒரு சிறுகதை
                          ------------------------  -----------------------
( சிறுகதை எழுதுவது என்பது சிலநேரங்களில் சிக்கலாய் இருக்கிறது. புனைவுதான் என்றாலும் உண்மைபோல் இருகக வேண்டும் அதற்கான கருவாக நான் தேர்ந்தெடுத்தது நம்பமுடியாத , நம்ப விரும்பாத ஒன்று. படித்துப் பாருங்களேன் )



இவனுக்குத் தூக்கத்தில் இருந்து திடீரென்று விழிப்பு வந்தது. ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தோமே , என்ன அது.?நினைவு படுத்திக் கொள்ள முயன்றால் ஏதோ மச மசவென்று காட்சிகள் விரிவது போல் தோன்றுகிறது. பிள்ளைகள் என்னவோ ஓஜா போர்ட் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
 இப்போது அந்த போர்டின் நினைவு ஏன் வர வேண்டும். கனவில் கண்ட காட்சிக்கும் இந்த ஓஜாபோர்டுக்கும் என்ன சம்பந்தம்.? இதெல்லாம் வேண்டாம் என்று படித்துப் படித்துச்சொன்னான் இவன். கேட்டார்களா.... எல்லாம் வயசுக் கோளாறு.. யாரோ ஆவிகளுடன் பேச முடியும் என்று சொன்னார்களாம். உடனே அதைச் செயல் படுத்திப் பார்த்துவிட வேண்டுமே. இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அப்படியே ஆவியுடன் பேச முடிந்தால் அது மனசை பாதித்துவிடும் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.


ஒரு அட்டையில் மேல் வரிசையில் ஒன்று முதல் ஒன்பது வரை எண்களை எழுதிக் கொள்கிறார்கள்.நடுவில் ஒரு சதுரத்துக்கு காலியாக இடம் விடுகிறார்கள்.அதைச் சுற்றிலும் ஆங்கில எழுத்துக்களை  வரிசையாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஆவியுடன் பேசப் போகிறோம் என்று நம்பிக்கை வேண்டுமாம்.நடுவில் உள்ள சதுரத்தின் நடுவே ஒரு ரூபாய் நாணயம் வைக்கவேண்டுமாம் அதன் மேல் ஒரு சின்ன டம்ப்ளரைக் கவிழ்க்க வேண்டுமாம்  ஆவியுடன் பேச ஆயத்தங்கள்தான் இவை.
  
ஆவியுடன் பேச நம்பிக்கை உள்ள இர்ண்டு பேர் வேண்டுமாம்.இந்த இரண்டு பேரும் அறிந்த இறந்த ஒருவரின் ஆவியைத்  தொடர்பு கொள்வது சிறிது எளிதாகலாமாம்
இருவரும் கண்மூடிப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். கவிழ்த்து வைக்கப் பட்ட டம்ப்ளர் மேல் இருவரும் லேசாகக் கை வைத்துக் கொண்டு ஆவியை அழைக்க வேண்டும் சற்று நேரத்தில் அவர்கள் கை லேசாக நடுங்கத் தொடங்குமாம். முதலில் வந்திருப்பது அவர்கள் கூப்பிட்ட ஆவியா என்று உறுதி செய்து கொள்கிறார்கள் மூன்றாவதாக இருப்பவர் நகரும் டம்ப்ளர் எந்தெந்த எழுத்தில் நிற்கிறதோ அதை குறித்துக் கொள்கிறார்


இவனுக்கு ஒரே சலிப்பு. நாம் ஏதாவது சொன்னால் கேட்டால்தானே. எதையும் செய்து பார்த்து விட வேண்டும் என்ற வேகம் இவனுடைய மகன் இந்த ஓஜா போர்ட் பற்றி சொன்னபோது இவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஆவியுடன் பேச முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று உறுதியாய் இருந்தான். மகனுடைய நண்பனின் தந்தை இறந்து போய் சில நாட்களே ஆகி இருந்தன. இறந்த மனிதர் இவனுக்கும் நல்ல நண்பன். அன்றுமாலை இவனுடைய மகன் வந்த போது முகமெல்லாம் வெளிறி மிகவும் பயந்தவன் போல் காட்சியளித்தான். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறதென்று இவனால் யூகிக்க முடிந்தது. என்ன விஷயம் என்று கேட்டாலும் ஒன்றுமில்லை என்னும் மழுப்பலே பதிலாய் வந்தது.

அன்றிரவு தூங்கப் போன இவனுக்கு திடீரென விழிப்பு வரவும் தன் மகன் பயந்து போனது போல் வந்ததும் நினைவுக்கு வந்தது.

காலையில் அவசர அவசரமாக இவனது மகன் எங்கோ போகத் தயாராகி இருந்தான். வீட்டில் அவன் தாயிடம் டேப் ரெகார்டர் கண்டிஷனில் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தான். என்ன செய்வது...! பிள்ளைகள் வளர்ந்து விட்டால் தோளுக்கு மேல் தோழன்தானே.கண்டிக்கவும் முடிவதில்லை. கவலைப் படாமலும் இருக்க முடிவதில்லை. இவனுக்கும் மகனின் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க விருப்பம்தான். பார்க்கலாம் சொல்லாமல் போய்விடுவானா என்று எண்ணிக் கொண்டே இவனது தினசரி அலுவல்களைக் கவ்னிக்கச் சென்றான். 


மாலை அலுவலகத்திலிருந்து வந்தவன் தன் ம்கன் வந்து விட்டானா என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான்.

மகன் வந்ததும்,என்ன இன்றைய அனுபபங்களையாவது சொல்லப் போகிறீரா இல்லை பயத்தில் அப்படியே இருக்கப் போகிறீர்களா.?

“ ஆவியாவது ஒன்றாவது என்று சொன்னீர்களே...! உஙகளுக்குத் தெரியாதது இல்லை என்றாகுமா

“ அதாவது நீ ஆவியுடன் தொடர்பு கொண்டாய்.. அதை நான் நம்பவேண்டும். சில சமயங்களில் மனப் பிராந்தியேகூட உண்மைபோலத் தெரியலாம்

மனப் பிராந்தியுமில்லை, விஸ்கியுமில்லை.  நாங்கள் ஆவியுடன் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது தெரியுமா... இவன் மகன் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினான். “ நேற்று  நாங்கள் அங்கிளின் ஆவியை வரவழைத்தோம். வந்திருப்பது அவர்தான் என்று நிச்சயம் செய்து கொண்டோம். அப்போது என் நண்பன் துக்கம் தாங்காமல் அழ ஆரம்பித்து விட்டான். இந்த மாதிரி ஓஜாபோர்ட் மூலம் பேசுவது கஷ்டம் . ஆகவே நாளைஇன்னும் நம்பிக்கையோடு வாருங்கள். சில விஷயங்களை உங்களில் ஒருவர் மூலம் நான் சொல்ல விரும்புவதை நீங்கள் கேட்கலாம்என்று சொன்னான். “அதற்காகத்தான் டேப் ரெகார்டரை எடுத்துக் கொண்டு போனேன்என்றும் சொன்னான்.


“ அவர் என்னதான் பேசினார் என்று நாங்களும் கேட்கிறோமேஎன்று இவன் சொன்னதும் “ இப்போது அது என்னிடம் இல்லை. அங்கிளின் மகன் அதை எடுத்துக் கொண்டு போய் விட்டான் ஓஜாபோர்டில் நாங்கள் அங்கிளைக் கூப்பிட்டதும் உடனே வந்தவர் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி எங்கள் இரண்டாவது நண்பனின் உடலில் புகுந்து விட்டார். அவனது உடல் ஒரு மாதிரி முறுக்கி கொண்டது. அப்போது அவன் பேசியது அங்கிள் பேசுவது போல் இருந்தது, நான் தயாராய் வைத்திருந்த டேப் ரெகார்டரை ஆன் செய்து அவர் பேசுவதைப் பதிவு செய்தேன். அங்கிளுக்கு அவர் மகன் நன்கு படித்து முன்னுக்கு வர வேண்டும் என்றும் மகளுக்குத் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற விருப்பமும் இருப்பதாகக் கூறினார்.பிறகு திடீரென்று எந்த வித முன் அறிவிப்பு மின்றிப் போய்விட்டார்.. பிறகு நாங்கள் ரெகார்டரை ஆன் செய்து ப்ளே செய்து பார்த்தால் அங்கிளின் குரலிலேயே அவர் சொன்னது பதிவாயிருந்தது. அங்கிளின் மகன் டேப்பை அவன் அம்மாவுக்குப் போட்டுக் காட்ட எடுத்துச் சென்றுவிட்டான் “என்று கூறினான்

.


இவனுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. இவனும் கூட இருந்திருந்தால் மரணத்துக்குப் பின் ஆவியுலகம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. மனசின் ஒரு ஓரத்தில் இறக்கும் முன் தான் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் ஒரு வேளை இப்படி ஆவியாகி அலையாதிருப்பாரோ என்றும் தோன்றியது.

--------------------------------------------------