Thursday, June 27, 2013

ஐடி கம்பெனி வேலை.... உண்மை நிலை என்ன..?


                    ஐடி கம்பெனி வேலை.... உண்மை நிலை என்ன....?
                    ------------------------------------------------------------------அன்று ஒரு நாள் என் மகனுடன் பேசிகொண்டிருந்தேன். அவன் சொல்லும் செய்திகள் பலவும் எனக்குப் புதிது. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையில் பணி ஆற்றும் நபர்கள் பலரும் நிம்மதியாய் இருப்பதில்லை.ஆண்டொன்றுக்கு ஆயிரக் கணக்கில் கல்லூரிகளில் இருந்து பணிக்காகப் படையெடுக்கிறார்கள். கேம்பஸ் இண்டெர்வியூவில் தேர்வாகி இருப்பவர்கள் வேறு எங்கும் வேலை தேடாமல் தேர்வு செய்த கம்பனியிலிருந்து ஆர்டர் வரும் என்று காத்திருந்தே சோர்ந்து போகிறார்கள். அப்படியே தேர்வு ஆனவர்களுக்கு ஆர்டர் வந்தாலும் மூன்று மாதம் பயிற்சி என்று அமர்த்தப் படுகிறார்கள். பிறகு அவர்களுக்காக ப்ராஜெக்ட் கிடைக்கும் வரை பெஞ்சில் இருக்க வேண்டுமாம். ப்ராஜெக்ட் இல்லாமல் பெஞ்சில் இருக்க நேர்ந்தால் வேலை பறிபோகும் சாத்தியக் கூறு அதிகமாம். முன்பெல்லாம் இருந்ததுபோல் கம்பனிக்காக லாயல்டி என்று எதுவும் இல்லையாம். அதனால் இவர்களும் வேலையை மாற்றிக் கொண்டு இருப்பார்களாம் ஐ. டி .கம்பனிகளில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாம். படித்து வேலைக்குப் போகும் ஒருவன் திருமணமாகி வாழ்வில் செட்டில் ஆக நினைப்பதே அரிதாம். இந்த ஒரு காரணமே கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகக் காரணமாம். முன்பு போல் இப்போதெல்லாம் ஐடி கம்பனிகளில் ப்ராஜெக்ட்டுகளும் இல்லையாம். ஓரளவு இந்த மாதிரி கம்பனிகளின் வேலை முறைகளைத் தெரிந்து கொண்டவர்கள் அயல் நாடுகளில் செட்டில் ஆகி . இங்கிருக்கும் நிலையை அவர்களுக்குச் சாதகமாக உபயோகிக்கிறார்களாம் ஒரு பக்கம் நிறைய மேன்பவர் , இன்னோரிடம் ப்ரெயின் ட்ரெயின் ஆக இளைஞர்கள் நிலையில்லாத உத்தியோகத்தால் தவிக்கிறார்களாம். இது ஒரு பக்கம் இருக்க இவர்களது வேலை நேரம்.. பெரும்பாலும் இரவுகளில் பணி செய்ய வேண்டும். சம்பாதிக்கும்பணத்தைச் செலவு செய்யவும் நேரமில்லாததால்’” இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் இவர்கள் வாழ்க்கை என்றாகிறதாம். வாரக் கடைசி நாட்களில் வாழ்க்கையை அனுபவிக்கிறோம் பேர்வழிகள் என்று பலரும் நெறிதவறி வாழ்க்கை நடத்தத்தூண்டும் விதமாக வாழ்க்கை மாறிப் போகிறதாம்

இருக்கும் நிலையை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லையாம். குடும்பத்தாரோ ஐடி கம்பனியில் கை நிறைய சம்பளம் என்று மகிழ்ந்திருக்கும்போது கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வது முடியாத காரியமாகி விடுகிறது/ அப்படியே பகிர்ந்து கொள்வதானாலும் நம்புவார் இல்லையாம்.

 எனக்கு இது பற்றிய முழு அறிவும் இல்லை. மகனிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டதைப் பகிர்கிறேன் படிப்பவர்கள் விவாதிக்கலாமே.  

ஒரு சீரியஸ் வாசிப்புக்குப் பிறகு ரிலாக்ஸ்  செய்ய. 

 


       
                                            

Monday, June 24, 2013

நதிமூலம்.... ரிஷி மூலம்....


                                நதி மூலம்...... ரிஷி மூலம்......( சிறு கதை.)
                                ------------------------------------என்னுடைய மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இந்த சம்பந்தம் கைகூடிவர எத்தனை எத்தனைத் தெய்வங்களைப் பிரார்தித்திருப்பேன். .ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாளிப்புகள். பெண் படித்திருக்கிறாளா, லட்சணமாய் , அழகாய் இருக்கிறாளா என்பதைப் பார்ப்பதை விட்டு குலம் என்ன கோத்திரமென்ன , அப்பா யார் அம்மா யார் என்பதோடு நிறுத்திக் கொண்டால் போதாதா. ? தாத்தா யார், பாட்டி யார் ஊர் என்ன வீடு என்ன அப்பப்பா  போதுமடா சாமி.... இவ்வளவு சலிப்பு ஏன். ? உள்ளதை உள்ளபடி சொல்லிப் போனால் என்ன.? முடியவில்லையே... எனக்கே நான் யார் வந்த வழி என்ன என்று யோசித்துப் பார்த்தால் எங்கோ இடிக்கிறமாதிரி இருக்கிறதே..

சின்ன வயதில் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதே அபூர்வம்., சொந்தங்கள் பந்தங்கள் என்று குழுமும்போது எல்லோரிடமும் ப்ழக வேண்டும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து தவிக்கும். ஆனால் அப்பா ஏதாவது காரணங்கள் சொல்லி தவிர்த்து விடுவார். என்னுடைய தாத்தா பாட்டி என்று எல்லோரும் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்த்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பார்த்த நேரங்களிலும் அவர்களிடம் இருந்து பாசம் என்றால் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாது. இரண்டு வழி தாத்தா பாட்டிகளுமே ஒருவித காழ்ப்பினைக் காட்டி வந்தார்கள். அந்த வயதில்  பட்டும் படாமலும் யாராவது பேசுவதைக் கேட்டு ஒன்று மட்டும் தெளிவாகி இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள், அதனால் உறவுகளால் தூற்றப்பட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது. ஆனால் அது என் மகள் திருமணத்திலும் பாதிப்பு உண்டாக்கும் என்பது எதிர்பாராதது.

படித்து முடித்து உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்த பிறகு ஜாடை மாடையாக அப்பாவிடம் அவர் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பேன்.
YOU DON’T WORRY ABOUT ANYTHING.  VALUES IN LIFE CHANGE WITH EVERY GENERATION” என்று கூறி என் வாயை அடைத்துவிடுவார். ஆக அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வாழ்வின் மதிபீடுகளில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும் என்று எண்ண வைத்தது.

எனக்கும் நம் உறவுகள் யார் , என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமிருந்தது. நான் அவர்களிடம் தொடர்பு கொள்ளலாமா  என்று அப்பாவைக் கேட்ட போது. “ நீ வளர்ந்து விட்டாய் . உன்னைத் தடுத்து நிறுத்துவதில் அர்த்தம் இல்லை. ஆனால் யார் என்ன பேசினாலும் பிடிக்காவிட்டால் அங்கிருந்து விலகி வந்துவிடு. எதையும் நியாயப் படுத்தும் செயல்களில் ஈடுபடாதே “ என்று மட்டும் கூறினார்.

அப்பாவின் அம்மாவுக்கு ஒரு நிக் நேம் இருந்தது. அவர்களை GOD MOTHER  என்று அழைத்தார்கள். அந்தப் பெயர்க் காரணம் புரியவில்லை. ஒருவேளை எல்லோரும் தன் பேச்சுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ என்னவோ.... பட்டும் படாமலும் பலர் பேசக் கேட்டதிலிருந்து  எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. ‘ இவர் என் அப்பாதானா.?இந்தக் கேள்வியே அபத்தமாக இருப்பதுபோல் தோன்றியது. எப்பவுமே அம்மா அம்மாதான்... அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். எல்லாமே நம்பிக்கைதான். மேல் நாட்டில் திருமணம் ஆவதும் மணமுறிவு ஏற்படுவதும்  மறு மணம் புரிவதும் வெகு சகஜமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும்போது .என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு ஆடுகிறார்கள் “ என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும், ஆனால் நம் நாட்டில் அப்படிப் பேசுவது அநேகரது புருவங்களை உயர்த்தும்.

அங்கும் இங்கும் கேள்விப்பட்டதைப் பொருத்திப் பார்க்கும்போது, என் அப்பா அம்மா வாழ்க்கையில் சமகால புரிதல்களை மீறி ஏதோ நடந்திருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்க மனசு ஒப்பவில்லை. என்னதான் இருந்தாலும் அப்பாவிடமும் அவரது அந்தரங்க வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியுமா. ? இருந்தாலும்  உறவுகளில் இருக்கும் ஒரு stigma  தாங்க முடியாமல் இருக்கவே கேட்டு விட்டேன்.

“ அப்பா. உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்க்றாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா. நானும் வளர்ந்து விட்டேன் இல்லையா

“ நிச்சயம் நீ இந்தக் கேள்வியோடு வருவாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய திருமணத்தின்போதே இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். நல்ல காலம் காதல் திருமணம் ஆனதால் பல கேள்விகள் கேட்கப் படாமலேயே போயிற்று.. நீ காதலித்துத் திருமணம் செய்து கொண்டாயே. காதலிக்கப் போகும் முன்னால் உன் காதலியின் பின் புலம் பற்றி எல்லாம் கேட்டுத்தான் காதலித்தாயா.?

“ கண்டோம் காதலினால் கட்டுண்டோம். கல்யாணமும் உங்கள் சம்மததோடுதானே நடந்தது. “

“ சமதித்திருக்காவிட்டால் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டீர்களா.?

IT IS A HYPOTHETICAL QUESTION.”

எப்படி எதையும் கேட்காமல் காதலித்தீர்களோ . அது போலத்தான் நானும் உங்கம்மாவும் காதலித்தோம்.

“ அதற்காக எதிர்ப்பு இருந்ததா?


“ ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. நான் உங்கம்மாவைக் காதலிக்கத் துவங்கும்போது . உங்கம்மாவுக்கு ஏற்கனவே மணமாகி கணவனும் இருந்தார்.

கதை முற்றிலும் எதிர்பார்க்காத திசையில் செல்வது கண்டு  காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்டேன்.

VERY INTERESTING !. PLEASE BEGIN FROM THE BEGINNING. “

ஊர் பேர் எதுவும் வேண்டாம். நான் படித்து முடித்து வேலைக்குப் போன ஊரில் என்னுடைய அத்தை மகனும் இருந்தான். புதிதாக போகும் ஊரில் எல்லாம் சரிபட்டு வரும் வரை அவன் வீட்டிலேயே தங்கலாம் என்றான்
நானோ மிகவும் சங்கோஜி. யாருடனும் பழக மாட்டேன். திருமணமாகிக் குழந்தையோடு இருக்கும் அத்தை மகன் வீட்டில் தங்குவது முதலில் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சைத்தான் குடி இருந்திருக்க வேண்டும். அத்தை மகனின் மனைவி அங்கும் இங்கும் போகும் போது மனசில் பளீரென ஏதோ வெடிக்கும். தப்புடா தப்பு என்று மனசு சொன்னாலும் அதையும் மீறி ஒரு வேட்கை எழுந்தது நிஜம். அத்தைமகனுக்கு சம்பாத்தியம் குறைவு. நான் அங்கு ஒரு பேயிங் கெஸ்ட் ஆக இருந்ததால் அவனுக்கு  ஓரளவு வசதியாய் இருந்தது. அவன் ஆரோக்கியமும் அவ்வளவு சரியாய் இருக்க வில்லை. அடிக்கடி மருத்துவம் பார்க்கவும் அவனுக்கு சிசுருக்ஷை செய்வதுமாக உன் அம்மா இருந்தாள்

“ என்னது...? என் அம்மாவா....? அப்போ......

“ ஆம் உன் அம்மாதான். என் அத்தானின் மனைவிதான்.

என் உள்ளத்தின் உள்ளே ஏதேதோ உணர்ச்சிகள் எழுந்தன. எதுவுமே புரியாதது போலும் எல்லாமே புரிந்தது போலும் தோன்றியது.

“ அப்படியானால் என் அப்பா...?

“ இருக்கிறார். ..நல்ல மனுஷன். ஒரு வாலிப வயது மாமா பிள்ளை. இவனே வாவென்று வரவழைத்துத் தங்கச் செய்தது. மனைவிக்கும் மாமா மகனுக்கும் இருந்த ஈர்ப்பைப் புரிந்து கொண்டு  விலகி சென்று விட்டார் குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. GOD MOTHER  நொறுங்கியே போய்விட்டார். உன் அம்மாவுக்கும் எனக்கும் ஏற்பட்டத் தொடர்பின் விளைவாக.ஒரு குழந்தையும் பிறந்தது. இனி  உறவை மூடிவைத்தால் பலரது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டி இருந்திருக்கும். உன் அப்பா.... நல்ல மனுஷன் ஒதுங்கிப் போய்விட்டார். இப்போது சொல் என்றைக்காவது எங்கள் உறவு குறித்து நீ சந்தேகப் பட்டிருக்கிறாயா. எங்கெல்லாம் யார் யாருடைய நாக்கு நீண்டு பேசுவதைத் தவிர்க்கவே  உறவுகளைப் புறக்கணித்து வந்தோம். எனக்கும் இப்போது மனப் பாரம்குறைந்தது போல் இருக்கிறது.
 என்று கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

இனிமேல் எனக்கே எங்கோ இடிக்கிறமாதிரி தோன்றாது. எல்லாம் தெரிந்து விட்டதே.   நம்மை நமக்காகவே விரும்பி திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் ஓக்கே.. என் மகளுக்கு என்று இனிமேல் ஒருவன் பிறக்கப் போவதில்லை. .இந்தத் திருமணம் நடக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது.          

 Tuesday, June 18, 2013

வீடு கட்டலும், வருமான(மும்) வரியும்


                                  வீடு கட்டலும் வருமான(மும்) வரியும்
                                  ------------------------------------------------------எனக்கு அடிக்கடி எழும் சந்தேகம், எப்படி மாத வருமானம் உள்ளவர்கள் வீட்டுமனை வாங்கி வீடு கட்டுகிறார்கள் மற்றும் வருமான வரி வேறு கட்டுகிறார்கள், இன்னும் மேலாக ஓய்வு பெற்றவர்களும் வருமானவரி கட்டுகிறார்கள் என்பது போன்றவை

சற்று விளக்கமாகவே எழுதுகிறேன். நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு பொறுப்புள்ள உத்தியோகத்தில் இருந்தேன். ஆரம்ப காலத்தில் குடும்பத்தில் இருப்போரின் வாய்க்கும் வயிற்றுக்கும் வழி காண்பதே முழி பிதுங்கும் நிலையாயிருந்தது. நாளாவட்டத்தில் குடும்பத்தில் இளையவர்கள் தலையெடுக்கத் துவங்கினதும் நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. அதற்குள் எனக்கென ஒரு குடும்பமும் உருவாகி இருந்தது. பலரும் சொல்வதுபோல் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.கடன் வாங்காமல் காலம் கழித்தலே நிறைவாய்த் தோன்றும்.

இந்த நிலையில் நமக்கென்று ஒரு இடம் வேண்டாமா என்று மனைவி புலம்புவாள். நான் அவளை சமாதானப் படுத்துவ்தே அலாதியாய் இருக்கும். பொதுத்துறையில் இருக்கும் வரை நமக்கென இடப் பிரச்சனை இருக்காது. இருக்கக் குடியிருப்போ, இல்லை அதற்கான வாடகையோ நிறுவனம் பொறுப்பேற்கும். 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு மிஞ்சிப் போனால் ஆறேழு வருடங்கள் உயிரோடிருக்கலாம்( இந்திய சராசரி வயதுப்படி). அந்தக் காலத்தை ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணத்தைக் கொண்டு காலம் கடத்தி விடலாம். வீட்டு மனை சொந்த வீடு என்று எண்ணுவது அர்த்தம் இல்லாதது என்று ஏதேதோ கூறுவேன். நாங்கள் விஜயவாடாவில் இருக்கும்போது (1976-1980) என் மாமியார் பெங்களூரில் ஒரு வீட்டு மனை விலைக்கு வாங்கிப்போட மிகவும் வற்புறுத்த என் மனைவியும் சேர்ந்து என்னை நச்சரிக்க இப்போது நாஙகள் இருக்கும் இடத்தை அங்கும் இங்கும் கடன் என்று புரட்டி ரூ.8000/-க்கு வாங்கினோம். அப்போது இந்த இடம் ஒரு barren land ஆக இருந்தது.

எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் எப்போதும் என்னிடம் ஒரு சொந்த வீட்டின் அவசியத்தை எடுத்துக் கூறுவான் அவனிடமும் என்னுடைய பழைய லாஜிக்கையே கூறி வந்தேன். 1985-ம் ஆண்டு ( அப்போது நாங்கள் திருச்சிக்கு மீண்டும் மாற்றலாகி வந்திருந்தோம்) என் மாமனார் எங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் எங்களுடைய இடத்தை யாரோ ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் என்றும் உடனடியாக நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதெப்படி நம் இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பது என்று பதறி பெங்களூர் ஓடி வந்தோம். எங்கள் மனைக்குப் பக்கத்து மனைக்காரர் வீடு கட்டிக் கொண்டிருந்தார். செங்கல் மணல் போன்றவற்றைக் கொட்டி பாதுகாப்புக்காக ஒரு கூரையும் போட்டிருந்தார். நாங்கள் வந்து கேட்டபோது அது ஒரு தற்காலிக கூரை என்றும் அவர் வீடு கட்டி முடித்ததும் அகற்றப்படும் என்றும் கூறினார். அப்போது ஓரளவுக்கு சமாதானம் அடைந்தாலும் மனசில் ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. இந்த நிலையைக் கேள்விப்பட்ட என் நண்பன், மீண்டும் என்னை brain wash செய்யத் துவங்கினான். சரி. வீடு கட்டப் பணம் வேண்டுமே. அந்தகால நிலவரப்படி குறைந்தது ஒன்றரை லட்சமாவது வேண்டும் மனைவியின் நகை, கோவாப்பரேடிவெ பேங்கிலிருந்து கடன், ப்ராவிடெண்ட் ஃபண்டிலிருந்து கடன். இன்சூரன்ஸிலிருந்து கடன் உறவினரிடம் இருந்து கடன் என்று என்னவெல்லாமோ செய்து வீடு கட்ட வேண்டியதுதான் என்று தீர்மானித்தோம். இன்சூரன்ஸ் ப்ராவிடெண்ட் தவிர எல்லாக்கடன்களும் திருப்பி செலுத்த வேண்டியவை. ( மனைவியின் நகை உட்பட) என்ன செய்வது என்று ஒரே திகைப்பாய் இருந்தது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழிகாண்பதில் சற்றே பயிற்சி இருந்ததால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இருந்தது திருச்சியில். வீடு கட்ட வேண்டியது பெங்களூரில். பெங்களூரில் ஒரு ஒப்பந்ததாரரைப் பிடித்து முழுப் பொறுப்பும் அவரது என்று கூறி ஒப்பந்தம் தயாரித்தோம். இப்போது நினைத்தாலும் என்னுடையை அறியாமையை நினைத்துக் கொள்வேன்(.How naïve I was.!) அந்த காண்ட்ராக்டரிடம் ஒரு ஒப்பந்தம் எழுதினேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு எந்த நீதி மன்றத்தையும் அணுகமுடியாது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஒப்பந்தம் ஒரு வெற்றுத்தாளில் எழுதியது. எங்கள் நல்ல காலம் அந்த காண்ட்ராக்டர் ஒரு நல்ல நம்பிக்கையான மனிதன். நாங்கள் திருச்சியில் இருக்க அவர் இங்கே பெங்களூரில் எங்கள் வீட்டைக் கட்டினார்.ஒன்று சொல்ல மறந்து விட்டது. அப்போது இங்கு நீர் சப்ளை என்பதே கிடையாது ஆழ்துளைக் கிணறுதான் ( borewell)  தோண்டவேண்டும். 60x30 அடி இடத்தில் எங்கு நீர் கிடைக்குமென்று நினைப்பது Water diviner களின் உதவியை நாடலாம் என்றார்கள். ஒரு வேளை அவர் இங்கு நீர் வராது என்று சொல்லிவிட்டாலோ, அல்லது இடத்தின் நடுவே எங்காவது காட்டினாலோ என்ன செய்வது. இடத்தின் ஒரு ஓரமான பகுதியில் bore போடுவது , நடப்பது நடக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று ஆழ் துளைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினோம். என் மனைவி வேண்டாத தெய்வம் இல்லை. தினமும் குளிக்கும்போது கங்கை, காவிரி, கோதாவரி யமுனை என்று வேண்டிக்கொண்டு குளிப்பவள் அந்த நதிகளின் நீர் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் வேண்டிகொள்வாள். அவள் வேண்டுதலோ, எங்கள் அதிர்ஷ்டமோ 90 அடி ஆழ்த்தில் பாறை தென்பட்டு நீர் வரத்தொடங்கியது. எதற்கும் சேஃப் சைடாக இருக்கட்டும் என்று 150 அடி ஆழம் குழித்தோம். ந்ல்ல நீர். மனசுக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு அடி பம்ப் நிறுவினோம். வீடு கட்டிய பிறகு மோட்டார் பம்ப் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அப்போது அந்த போரிலிருந்து அக்கம் பக்கம் இருப்போர் எல்லாம் நீர் எடுத்து உபயோகித்துக் கொண்டனர்.

எங்கிருந்து பார்த்தாலும் என் வீடு தனியாகத் தெரிய வேண்டும் என்று எண்ணி நான் ஒரு கார் போர்டிகோ திட்டமிட்டேன். அதாவது ஏறத்தாழ பத்து அடியிலிருந்து பதினைந்து அடிவரை cantilever  அமைப்பில் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் இருந்தது. மாதம் ஒருமுறை பெங்களூர் வந்து வீட்டு வேலை எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று பார்த்துச் செல்வோம்.ஐந்து மாத முடிவில் ஒரு சிறிய வீடு எங்களுடையதாக கட்டிமுடிக்கப் பட்டது.
இவ்வளவு விலாவாரியாக நான் எழுதுவதன் காரணமே இந்த வீடுதான் நான் VRSல் வந்தபோது அடைக்கலம் கொடுத்தது என் மகன் திருமணமாகி ( அப்போது அவனுக்கு பெங்களூரில் வேலை) குடித்தனம் துவங்கியதும் இந்த வீட்டில்தான். நான் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு வந்த பிறகு மாடியில் வீடு கட்டினேன். ஒரு உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வீடு தான் எனக்கு சோறு போடுகிறது  விருப்ப ஓய்வின் போது கிடைத்த பணம் மாடிவீடுகட்டவும்  வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதிலும் செலவாகி விட்டது.

என்னை பொறுத்தவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை இதுபோல்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நிலைமை இப்படி இருக்க வருவாய் வரி என்று பேசும்போது வருவாய் இருந்தால்தானே வரி கட்ட வேண்டும்.நான் பணியில் இருந்தபோது வருவாய் வரியை அவர்களே பிடித்துக் கொண்டு மீதியைத்தான் தருவார்கள். இப்போது கிடைக்கும் வாடகைப் பணத்தில் வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் எப்படி வரிகட்ட முடியும் அந்த அளவு வரவு எங்கிருந்து வருகிறது.?  ஒன்று குடும்ப சொத்து இருந்து வருமானம் வரவேண்டும் இல்லை மாமனார் வீட்டிலிருந்து வருமானம்வேண்டும் நிறுவனப் பணியாளராக இருந்து சொத்து சேர்க்க முடியுமா.? சேர்த்திருக்கிறேனே... ஆம் இப்போதைய என் இடம் ப்ளஸ் வீட்டின் மதிப்பு சில லட்சங்கள் தேறும் இதையே வருவாய்க்கு மீறிய சொத்து என்பார்களோ.? பல விஷயங்கள் இவ்வளவு வயதாகியும் புரிவதில்லை.ஒன்று சொல்ல வேண்டும். எங்கள் தேவைக் குறைபாடுகளை எங்கள் மக்கள் அகற்றுகிறார்கள். என்னை வீடு கட்டு என்று தூண்டிய நண்பனை அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.             

    

Saturday, June 15, 2013

கருணைக் கொலை...?


                                                  கருணைக் கொலை. ..?
                                                  ------------------------------சென்றமாதம் நாங்கள் நாராயணீயம் பாராயணத்துக்காகக் குருவாயூர் சென்றிருந்தோம். மூன்று நாட்கள் ஊரிலிருக்கவில்லை.  நாங்கள் பெங்களூரில் இல்லாதிருந்தபோது  இரண்டு நாட்களுக்கு அடை மழை பெய்திருந்தது. பல வருடங்கள் காணாத முன் மாரி மழை என்றார்கள். எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் (முன்புறம் ஒன்று பின் புறம் ஒன்று)  ஒரு மாமரம் இருக்கின்றன. அவை எல்லாமே பயன் தருபவை. தென்னை மரத்தில் தேங்காய்க் குலைகளும் மாமரத்தில் மாங்காய்களும் நல்ல ஈல்ட் கொடுப்பவை. அவற்றை பறிக்க ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஒரு தென்னை மரத்தில் ஒரு முறை ஏற ரூ. 150/ கேட்பார்கள். அதுவும் தக்க சமயத்தில் கிடைக்க மாட்டார்கள். அப்படியே பறித்த காய்களைமட்டை எடுத்து வெட்டிக்கொடுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை. எங்களுக்காக இந்த மாதிரி வேலைகளை செய்து கொடுத்துக்கொண்டிருந்த பையன் கத்தார் போய் விட்டான். அதே போல் மாமரக் காய்களை பறிக்கவும் மிகவும் சிரமம்ம்
மரம் வெட்டல் நன்றி - கூகிள் இமேஜெஸ்

.
 நிலைமை இப்படி இருக்கையில், நாங்கள் ஊரிலில்லாத போது பெய்த மழையின் போது பின் புறத்தில் இருந்த தென்னை மரத்தின் மேல் இடி விழுந்ததாம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். நாங்கள் வந்து பார்த்தபோது தென்னையின் உச்சியில் மட்டைகள் சரிந்து தொங்கிக் கொண்டிருந்தன. என்னேரமும் மட்டைகள் விழுந்து விடுவது போல் இருந்தது. நாங்கள் முதலில் சாய்ந்திருந்த மட்டைகளை வெட்டி இருக்கும் காய்களைப் பறிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் தகுந்த ஆட்கள் கிடைக்க வில்லை. வந்து பார்த்துப் போகிறவர்கள் எல்லாம் மரம் பட்டு விட்டது வெட்டி விட வேண்டும் என்றார்கள். நான் அவசரப் படவேண்டாம் , இன்னும் சிறிது காலம் பார்க்கலாம் மறுபடி துளிர்க்கிறதா என்று பார்த்து பிறகு முடிவு செய்யலாம் என்று சொன்னேன். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சாலையில் போவோருக்கும் மரம் ஒட்டி யிருக்கும் வீட்டாருக்கும் அதனால் ஆபத்து என்று சொல்லவே மரத்தை வெட்ட முடிவு செய்தோம். எனக்கோ, அந்த மரத்துக்கு உயிர் இருப்பது போலவும் பட்டுப்போய் சாகும் தருவாயிலிருப்பது போலவும் தோன்றியது. என்ன எண்ணி என்ன பயன்.? இன்றில்லாவிட்டால் நாளை வெட்ட வேண்டியதுதானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு அதை வெட்ட ஆட்கள் கிடைப் பார்களா என்று விசாரிக்கத் துவங்கினோம். மரம் வெட்ட ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. ஓரிருவர் வந்து பார்த்து அதை வெட்டி , மரத்தை எங்காவது கொண்டு போட ரூ.7000/ - கேட்டனர். எங்களுக்கு மயக்கம் வராத குறை. இந்த மாதிரி மரம் வெட்டிகளுக்கு என்று ஒரு சிண்டிகேட்  இருப்பதுபோல் தோன்றுகிறது. யாரிடம்சொல்லி விசாரித்தாலும் முன்பு வந்தவர்களையே காட்டுகின்றனர். அந்த மரத்திலிருந்து இதுவரை அந்த அளவு வரவு இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அக்கம் பக்கத்தோர் என்று பலரையும் கூட்டி பேரம் பேசினோம். ரூ.3000/- கொடுப்பதாகவும் வெட்டிய மட்டை மரம் முதலியன அங்கிருந்து அகற்றப் பட்டு எங்காவது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. ஐந்து பேர் வந்தார்கள். டீசல் போட்டு இயக்கும் ஏதோ இயந்திரத்தில் ரம்பம் போல் எதையோ சேர்த்தார்கள். உச்சியில் இருந்து அறுத்துக் கொண்டு வந்தார்கள் எல்லா வேலையும் சுமார் மூன்று மணி நேரத்தில் செய்து விட்டார்கள். எனக்கு மட்டும் ஒரு வேளை அந்த மரத்துக்கு உயிர் இருந்திருந்தால் நாங்கள் செய்தது கொலை அல்லவா என்று தோன்றுகிறது. இருந்தாலும் அது கருணைக் கொலையே என்று சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.  .  

.    .    
 

Tuesday, June 11, 2013

பதிவுலகில் மூத்த பதிவர்கள்


                                      பதிவுலகில் மூத்த பதிவர்கள்.
                                      ----------------------------------------என்ன பதிவு எழுதுவது என்று மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது. சீரியஸாகவும் இருக்கக் கூடாது;மொக்கையாகவும் இருக்கக் கூடாது.என்னைப் போல் எழுதுவதற்கு பொருள் தேடி பதிவர்கள் சிந்திப்பது தெரியும். இன்று காலை என்னுடைய மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுப்புத் தாத்தா, என்கிற சூரி சிவா என்கிற சூரியநாராயண சிவா, என்னைப் போல் ஒரு இளைஞர் அமேரிக்காவில் நியூ யார்க் சென்று செம ஜாலியாகப் பதிவு ஒன்று போட்டிருப்பது கண்களில் பட்டது. உடனே எனக்குள் ஒரு பொறி தட்டிற்று. பதிவுலகில் ( மன்னிக்கவும்; த்மிழ் பதிவுலகில் )என் போன்றோர் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்று சிந்தனை ஓடியது. அதுவே எனக்கு ஒரு பதிவுக்கு வழி செய்து விட்டது.


நான் ரெகுலராகப் படிக்கும் பதிவுகள் சொற்பமே.அவ்வப்போது வலைகளில் மேய்வேன். Cross section of Tamil bloggers  என் மனதில் ஓடியது. இப்போது வயது முதிர்ந்த பதிவாளர்கள் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. வயது முதிர்ந்தவர்கள் என்று நான் குறிப்பிடும் போது எழுபது வயதைத் தாண்டியவர்கள் எழுதுவதுதான் விசேஷம். பெரும்பாலும் பலதரப்பட்ட உடல் உபாதைகளால் சிரம மேற்படுத்தும் வயது. இதையெல்லாம் மீறி எழுதுகிறார்கள் ( என்னையும் சேர்த்துத்தான்) என்றால் ஏதோ ஒரு உந்து சக்தி இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எழுதுமுன் என்னை எழுத வைப்பது எது என்று யோசித்தேன். பல காரணங்கள் நான் முன்னே நீ முன்னே என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன. உண்மையை பேச வேண்டும் என்று நினைப்பவன் நான். உடல் நலக் குறைவால் ( 2010-ல்ஆஞ்சியோ ப்லாஸ்டி செய்தர்ர்கள் ) ஓய்வில் இருந்தேன். நேரம் போக வேண்டும், ஏதாவது உருப்படியாகச் செய்யலாமே என்று தோன்ற என் சுயசரிதை எழுதத் துவங்கினேன். ( சுய சரிதை எழுதும் அளவுக்கு நீ என்ன அவ்வளவு பிரபலமா என்று யாரும் கேட்கக் கூடாது.)ஒரு சாதாரணன் எப்படி எப்படி வாழ்க்கையை சந்தித்தான் என்பது அந்த சாதாரணனின் சந்ததிகளுக்கே தெரிய வேண்டும் அல்லவா, அதற்கான ஒரு முயற்சியே அது.. அப்போதுதான் இணையத்தில் வலைப்பூவில் எழுதலாம் என்று ஆனந்த விகடன் மூலம் அறிந்தேன். என்னுள் உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளன் விழித்துக் கொண்டான். என் சுய திருப்திக்காக அன்றெல்லாம் கொஞ்சம் எழுதுவேன். அவற்றை தூசிதட்டி படித்துப் பார்த்தபோது துவக்கத்துக்கு இவை உறுதுணையாய் இருக்கும் என்று தோன்றியது. கணினி அறிவு சிறிதுமே இல்லாத நான் ஆரம்பத்தில் (                   ஆரம்பத்தில் என்ன  இப்போதும் கூடத்தான் ) வெகுவாகவே சிரமப் பட்டேன்.
ஏதோ ஒரு உந்துதலில் எழுத ஆரம்பிப்பேன். எழுதி முடிக்கும்வரை என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியாது. பிறகு படித்துப் பார்த்தால் பல நேரங்களில் எனக்கு நானே ( பிறர் தராவிட்டால் என்ன ) ஷொட்டுக் கொடுத்துக் கொள்வேன்.சும்மா சொல்லக் கூடாது பல படைப்புகள் என் பெருமையை பறை சாற்றி இருக்கின்றன.பாராட்டுகளில் மயங்கி நின்றதும் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேரவில்லையா இல்லை மற்றவர்களுடைய WAVE LENGTH-க்கு தக்கபடி எழுதவில்லையா என்று யோசிப்பதுண்டு, நான் எனக்கு சரியென்று பட்டதை எழுதுகிறேன். அதற்கு வலைப்பூ ஒரு வடிகால் தருகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம்.தமிழ்ப் பதிவுலகில் என் கண்ணில் பட்ட எழுபது வயதைத் தாண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போமா. முதலில் இந்தப் பதிவுக்கு வழிவகுத்தவர் சூரி சிவா. அவ்வப்போது அவர் எழுதியதைப் படித்ததில் இருந்து அவரது வயது 71 அல்லது 72 இருக்கலாம். மிகுந்த நகைச் சுவை மிகுந்தவர். இசையில் ஆர்வம் கொண்டவர். மெத்தப் படித்தவர். பல விஷயங்களில் யாரும் எண்ணாத கோணத்தில் எழுதுபவர். சென்னையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தபோது அங்கே என்னை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தாராம். அவர் நினைத்தாலும் பாடுவதை அவரால் தவிர்க்க முடியாது என்று எழுதி இருந்தார். சிவகுமாரன் கவிதைகள் பலவற்றைப் பாடி ஆடியோ வாக அனுப்புவார். ஒரு முறை கன்னட நாட்டுப்பாடல்  ஒன்றைத் தமிழ்ப்படுத்தி ( மாத்தாடு மாத்தாடு மல்லிகே) எழுதி இருந்தேன் . அதைப் பாடி எனக்கு ஆடியோ அனுப்ப வேண்டி இருந்தேன். எந்த ஒரு தகவலும் இருக்க வில்லை. பிறிதொரு சமயம் நான் எழுதிய ஒரு பாட்டுக்கு மெட்டமைத்துப் பாடி அதன் ஆடியோவை அனுப்பி இருந்தார். முன்பு நான் கேட்டு எழுதிய பாடல் பாட மனம் ஒப்பவில்லை என்று எழுதி இருந்தார்.அப்பாதுரையின் பதிவுகளுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன்.அவர் பதிவில் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது “ இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் நாளை நன்றாகவே இருக்கும் என்று நம்புங்கள்ஏறத்தாழ இதுவே அவரை அடையாளம் காட்டும்.

 அடுத்தவர் திரு. காஸ்யபன் என்பவர். நாக்பூரில் வசிக்கிறார்.என்னைவிட இராண்டு வயது மூத்தவராக இருப்பார் என்று தோன்றுகிறதுஇந்த வயதிலும் இவரை எழுத வைப்பது எது என்று சிந்திக்கையில் அவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். எழுத்துவது அவர் தொழிலாக இருந்தது.இருந்தாலும் இப்போது எழுத வைப்பது அவரது கொள்கைப் பிடிப்பே என்று தோன்றுகிறது. பொதுவுடமைவாதி. முன்பொரு பதிவில் சில நடைமுறை வழக்கங்களுக்குத் தெளிவு கேட்டு எழுதி இருந்தேன். அதன் பின்னூட்டத்திலவர் “I am a non believer, but I believe those who believe in God, because of the simple reason , they are my fellow beings” என்று எழுதி இருந்தார். ஒரு முறை பசுவதைச்சட்டம் பற்றி அவரது வலையில் வந்தது. அதற்கு நானும் பின்னூட்டம் எழுதீருந்தேன். அந்தப் பதிவு வேறு ஒருவர் எழுதியதை இவர் பிரசுரித்து இருந்தார். அந்தப் பதிவருக்கு என் வலையின் முகவரியைக் கொடுத்து அவர் எனக்கு நன்றி கூறி எழுதியிருந்தார். என்னுடைய சில எழுத்துக்களை இன்னார் படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்போது அவருக்கு அந்தப் பதிவை அனுப்பி வைப்பேன். அது மாதிரி கடவுள் அறிவா உணர்வாஎன்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்கு அவரது கருத்தை கேட்டு எழுதி இருந்தேன். கடவுள் என்பது ஒரு கான்செப்ட் என்று தொடங்கி விரிவான பின்னூட்டம் எழுதி இருந்தார்.மற்றும் ஓரிரு பதிவுகளுக்கு கருத்து கேட்டு எழுதியிருந்தேன். எனக்கு அஞ்சலில் அந்தப் பதிவுகள் திறப்பதில்லை என்றும் கணினிக்கு எதிராகப் பல வருஷங்கள் போராடியவர். இப்போது அதனுடன் மல்லுக் கட்ட சிரமமாய் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.

அடுத்து நான் கூறப்போவது கோவையில் இருந்து சாமியின் மன அலைகள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி என்பவரைப் பற்றி. நான்  வலையில் எழுதத் துவங்கிய காலம் முதல் என் பதிவுகளைப் படித்துக் கருத்து எழுதுபவர்.  ஊக்கம் கொடுத்து வருபவர். பின்னூட்டங்கள் மிகவும் க்ரிஸ்ப்பாக ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். எந்த விஷயமாவது யாராவது சொல்லி விட்டால் அது பற்றி அவர் பதிவு எழுதி விடுவார். நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களைஅதன் முக்கியத்துவம் தெரிந்து எழுதுவார். போர்த்திக்கொள்ளும் போர்வையின் தலைமாடு கால்மாடு அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் பாணியில் எழுதி விடுவார். சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள் எழுவதுண்டு. மனிதன் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர் என்பதே என் அனுமானம்.

ஒருமுறை நான் சிதம்பரம் ஆனித்திருமஞ்சனம் விழா காணச் சென்றிருந்தேன். சிவ பெருமானைக் கைலையோடு ராவணன் தூக்குவதை சுவாமி உற்சவத்தின் போது ரதத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். அதில் ராவணனுக்குப் பத்து தலைகள் இல்லாமல் ஒன்பதே இருந்தது என்று எழுதி இருந்தேன். டாக்டர் கந்தசாமி கதையுடன் விளக்கம் கூறி எழுதி இருந்தார். புராணக் கதைகளையும் விட்டு வைக்கவில்லை அவர். கொங்கு நாட்டுக் கல்யாண சடங்குகளையும் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

வலையுலகில் எழுத்தாளர்களை மிகவும் நேசித்துப் படிப்பவர் ஜீவி என்ற பெயரில் பூவனம் என்னும்வலைப்பூவில் எழுதி வருபவர். நான் அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இசை ஞானம் இருப்பவர். ராகங்கள் இசை என்பன வற்றில் தேர்ந்தவர். தெரிந்தவற்றைக் கதையில் அனுபவித்து எழுதுபவர். செய்யாத குற்றம் என்னும் என் பதிவுக்கு அவர் பின்னூட்டமாகஉள்ளம் உடல் எனும் இரட்டை மாட்டுச் சவாரியில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவுதானே தவிர பிரிதுப் பார்க்க முடியவில்லை “ என்று எழுதி இருந்தார். அவர் பல எழுத்தாளர்களை படித்து விமரிசனம் செய்யும் பாங்கு கண்டு என் சிறுகதை வாழ்வின் விளிம்பில் கதையையும் அவர் விமரிசிக்கக் கேட்டேன். எழுதியிருந்தார். ஒரு முறை நான் பின்னூட்டத்தில் ஒரு பதிவரைக் குறித்து எழுதியதை உடன் படித்து அதை நீக்குவது நல்லது என்றார். நானும் என் பிழை உணர்ந்து அதற்குக் கட்டுப்பட்டு நீக்கி நன்றி கூறி எழுதி இருந்தேன்.

1எனக்கு ஒரு மூத்த பதிவரின் வலைத்தளத்துக்கு  கீத மஞ்சரி அறிமுகப் படுத்தினார் . அவர் பெயர்  சொ.ஞானசம்பந்தன்.என்னைவிட 12 வயது மூத்தவர். இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் எழுதுகிறார் ஆங்கிலம் ஃப்ரென்ச், லத்தீன் போன்ற பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர். பிறபிலேயே உயர்வு தாழ்வு பண்டைக்காலத்தில் இருந்தது என்று பழைய பாடல்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். பெரும்பாலும் இலக்கியப் பதிவுகளே. மிகவும் குறைவாகவே எழுதுகிறார். இந்த வயதிலும் எழுதும் ஆர்வம் போற்றத்தக்கது.

கடைசியாக நான் கூறப்போகும் மூத்த எழுத்தாளர் புலவர் சா.இராமானுசம்.
பலருக்கும் பரிச்சயமான மூத்த எழுத்தாள்ர். முன்பெல்லாம் என் பதிவுகளுக்குத் தவறாமல் வருகை தந்து ஊக்கப் படுத்துவார். எனக்கு நான் எழுதுவது கவிதையில் சேராது என்ற எண்ணம் கவிதையின் இலக்கணங்களையாவது கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கவிதை கற்கிறேன் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னூட்டமாக பாதை தெரிந்து விட்டது. பயணம் போகத் தயங்காதீர் “ என்று எழுதி உற்சாகப் படுத்தினார். பின்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் புலவன் சொல்கிறேன் நீங்கள் எழுதுவது கவிதைதான் என்று எழுதி ஊக்கப் படுத்தினார்.
பதிவுலக வாழ்வில் பலரும் அவர்களைப் பற்றிய பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. இன்னும் மூத்த பதிவர்கள் இருக்கலாம் அறிமுகப் படுத்தினால் மகிழ்வேன். பதிவுலகில் பெண்கள் பலரும் எழுதுகிறார்கள்.  அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதலாமா.? ,
.    .    
 
Saturday, June 8, 2013

எல்லோரும் ஒரு விதம்.


                                           எல்லோரும் ஒரு விதம்
                                            ---------------------------------
                                                     காணொளி
                                                     ---------------

கண்டு மகிழ எந்த விளக்கமும் தேவை இல்லை.

 

Wednesday, June 5, 2013

ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி - தீர்வுண்டா.?


                   ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி- தீர்வுண்டா.?
                   ------------------------------------------------------------------ 


ஏற்ற தாழ்வு பற்றி ஓரளவுக்கு நிறையவே எழுதிவிட்டேன். ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயதில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் கூறி இருக்கிறேன் சமுதாய சீர்கேட்டுச் சித்தாந்தங்களால் இழி குலத்தோர்  என்று பல்லாண்டுகள் முத்திரை குத்தப்பட்டு வாழ்வின் அடிமட்டத்திலேயே உழன்றவர்களின் சந்ததிகளும் அதே நிலையில் இருக்கவேண்டுமா.?காலங்கள் மாற வேண்டாமா.? மாற்றக் கூடிய சக்தி எது என்று சிந்தித்தால் கல்வி ஒன்றுதான் என்று பதில் வருகிறது. இது எனக்கு மட்டும் உதித்த ஞானம் அல்ல. EDUCATION  IS A GREAT LEVELER என்று தெரிந்துதான் கல்வி கிடைக்கப் பெற முடியாதவர்களுக்கு ( ஏன் கல்வி கிடைக்கப் பெறமுடியாதவர்கள் ஆனார்கள் என்று ஆராயப் போனால் பலருக்கும் வருத்தம் ஏற்படும் விஷயங்களைக் கூற வேண்டி இருக்கும்) இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டுவந்த ஒதுக்கீடுகளினால் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்யவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப் பட்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சலுகைகளுக்காக தவறான அணுகுமுறைகளையும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இது போதாதென்று நாட்டில் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயிப்பது பணம் ஒன்றுதான் என்று அநேகமாக எல்லோரும் நம்புகின்றனர். கல்வி ஒன்றுதான் சமன் செய்யும் என்று எண்ணினால் அதுவும் வியாபாரிகளிடம் சிக்கி இருக்கிறது. கல்வி அமைப்புகளிலும் சமம் இல்லை. ஏழைக் கல்வி பணக்காரன் கள்வி என்றாகி விட்டது. இதையும் அறிந்துதான். ஓரளவுக்காவது சரிகட்ட எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறைந்தது 25% ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்போதுள்ள கல்வி வியாபாரிகள் இந்த சட்டத்தை மதிப்பதாகவே தெரியவில்லை. ஒரு குழந்தையை ஆரம்பக் கல்விக்காக பள்ளியில் சேர்க்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் தொகை மயக்கம் வர வைக்கிறது. பள்ளிக் கூடங்களின் பிரக்யாதியைப் பொருத்து ரூபாய் 50,000/ முதல் ஒரு லட்சம் வரைக் கேட்கிறார்கள். இந்த நிலையில் 25% ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றால் அதனால் ஏற்படப் போகும் நஷ்டத்தை அரசாங்கம் ஈடு செய்ய முடியுமா.?ஆகவேதான் எனக்கொரு எண்ணம் எழுகிறது. அரசாங்கம் ஏதேதோ செய்தாலும் அவை எல்லாம் அரை வேக்காடாய்ப் போகிறது. கல்வி கற்பிப்பதை அரசாங்கம் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். இப்படி அரசுடைமை ஆக்கினாலும் ஏற்ற தாழ்வுகள் குறைந்து போகுமா.? ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மாறுமா.? அதையும் மாற்ற கல்வி பயிலும் அனைவருக்கும் மதிய உண்வு சீருடை சமச் சீர் கல்வி என்பது எல்லாம் அரசாங்கமே பொறுப்பு ஏற்படுத்தினால் . இப்போதில்லாவிட்டாலும் வருங்காலச் சந்ததியினராவது பேதங்கள் தெரியாமல் வளர்ந்திருப்பர். பசித்திருப்பவனுக்கு மீன் கொடுப்பதைவிடமீன் பிடிக்கக்கற்றுக் கொடுத்தலே


சிறந்தது. பேதமற்ற கல்வி அறிவு அவர்கள் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வரும்.

இதை எழுதுமுன் வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்என்னும் குறள நினைவுக்கு வந்தது. சரி, இணையத்தில் இது பற்றி என்னென்ன கருத்துக்கள் நிலவுகின்றன என்று பார்க்கப் போனால் வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலைமைகளையே சொல்லிச் செல்கிறார் என்று தெரிகிறது. கீழே சில குறள்களைத் தருகிறேன். அவற்றின் பொருள் குறித்து பல எண்ணங்கள் கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் படித்ததை இங்கு எடுத்துக் கூறினால் காப்பி பேஸ்ட் செய்கிறேன் எனும் குற்றச் சாட்டு எழலாம். இருந்தாலும் வெவ்வேறு முறையில் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் ஒரு முறை எழுதி இருக்கிறேன். எனக்குத் தமிழ் தெரியாது. தெரிந்தவர்கள் விமரிசிக்கலாமே.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவா னெனின்

சிலர் எழுதும் பதிவுகளில் இந்த சாதி குல வேறுபாடுகள் பண்டைக் காலத்தில் இருக்க வில்லை என்றும் இவை எல்லாவற்றுக்கும் ஆங்கிலேயர்களே காரணம் என்பதுபோலவும் எழுதுகின்றனர். இருந்துவந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் அப்போது கல்வி கற்க அனுமதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்குத் துணை போனார்கள் என்பதுமே என் கட்சி. யார் காரணம் என்று ஆராய்வதில் குணமில்லை என்று கருதியே என் சிற்ற றிவுக்குப் பட்ட தீர்வைக் கூறி உள்ளேன்


கல்வி குறித்து நான் முன்பெழுதிய பதிவின் இணைப்பைப் படிக்க “இங்கே” சொடுக்குங்கள்

 

 
 

Saturday, June 1, 2013

தங்கமான நேரங்கள்.


                                                தங்கமான நேரங்கள்.
                                                ------------------------------

தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். எனக்கு விளங்க வில்லை.நிறைய விலங்குகள் ஓடி வருகின்றன. ஒருவன் தன் கையைஇடவலமாக அசைக்கிறான். ஓடி வரும் விலங்குகள் பாதை மாற்றிப் போகின்றன. அடுத்து  டைனோசரஸ் போன்ற மிருகம் வாயைப் பிளக்கிறது/ ஒருவன் அதன் வாய் அருகே கை வைத்து மூடச் செய்கிறான். இன்னும் இதே போல் விளங்காத விஷயங்கள். புரியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். என் பேரன் அருகில் இருந்தான் எனக்கு விளக்கினான். அது ஒரு டிவி விளம்பரம். சைகைகளின் மூலமும் சொல்வதன் மூலமும் சானலை மாற்ற முடியும் அதன் விலை என்ன தெரியுமா. ? ஒரு கோடி ரூபாய் “ அவன் அதை ஆங்கிலத்தில் சொன்ன விதமே அலாதி. நான் அவனிடம் ஒரு கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று தெரியுமா என்று கேட்டேன். அவன் I don’t know . But it is an awesome big  money”  என்றான். எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. ! அவன் எங்களுடன் நான்கு நாட்கள் தங்கி இருந்தான். மகிழ்ச்சியான தருணங்கள்.
என் இடது கை மோதிர விரலில் நான் ஓட்டுப் போட்டதன் அடையாளமான  மைப் புள்ளியைப் பார்த்து என்ன என்றுகேட்டான். ஓட்டுப்போட்டதன் அடையாளம் என்றேன். ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்றான். நான் அவனுக்கு எளிய முறையில் விளக்கினேன்.
“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.?
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.?
பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
அவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க சேவை  செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து  அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் இருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்‌ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.
Is that not cheating , appa.?”  என்று கேட்டானே பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும் பழக்கமும் வர வேண்டும் என்று நினைப் பவன். “புத்தகங்கள் படிப்பாயா “ என்று கேட்டேன். பெரிய எழுத்து ராமாயணம் மஹாபாரதம் போன்ற புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு வந்தது எனக்குத் தெரியும்.அவன் என்னிடம் “  Have you read  GERONIMO  STILTON”S books ? Awesome  books. I have read many books .You are an author, no..? You must read them.” என்று கூறினான் நான் வலையில் பதிவுகள் எழுதுவது அவனுக்குத் தெரியும். அவனிடம் “Who is GERONIMO.” என்று கேட்டேன்.
He writes stories  about mouses , and he assumes himself as a mouse. Oh.! He is awesome.”
அவனுடன் கழித்த நேரங்கள் இனிமையானவை இவனை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை சென்னையில் இவன் பிறந்த நாளுக்கு வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ய வந்தான். அவன் அறிமுகம் செய்ய வந்த சிறுவன் மலையாளம் பேசுபவன். அவனிடம் இவன் “ You know , he is Tamil..Speak to him in Tamil or English “ என்றான். என் மகன் வீட்டில் அவன் தமிழ் பேச , அவன் மனைவி மலையாளம் பேச குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்.
இவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறேன். இப்போதும் அவன் கதை கூறக் கேட்டதும் நான் சொல்ல ஆரம்பித்தால் “ ஓ... இது நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய். எனக்குத் தெரியும் “ என்றுசொல்லி கதையை அவன் சொல்லுவான். பிரகலாதன் கதையில் நான் ”இரண்ய கசிபு” என்று என்று சொல்லியிருந்த பெயரை அவனது வேறு ஒரு நண்பன் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தபடி அந்தப் பெயரை “இரண்ய காஷ்யப்” என்று சொல்ல இவன் என் தாத்தா சொல்லியிருந்ததுதான் சரி என்று சண்டைக்குப் போக.......

ஏற்கனவே இவனைப் பற்றி இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஐந்து வயதில் .இவனது செய்கையைக் கண்டு வியந்து மகிழ்ந்து காக்கக் காக்க என்று எழுதியது இங்கே பார்க்கவும்.இன்னொரு முறை இவன் பேசியது கேட்டு கேள்விக்கென்ன பதில் என்று எழுதி இருந்தேன்
பிறிதொரு முறை அவன் என்னிடம் பொறாமைப் பட்டுப் பேசியதும் எழுதினேன் (அவனைப் போல் பள்ளி இல்லை படிப்பு இல்லை கேள்வி கேட்க ஆளில்லை டிவி பார்க்கத் தடையில்லை, உன்னைப்போல் நான் ஆவது எப்போ) இதை சொடுக்கவும்
மூத்த பேரன் பேத்தியுடன் கழிதத நேரங்கள் போல் இவனிடம் கழித்ததில்லை.இவனும் பத்து வருடங்களுக்கு முன் பிறந்திருந்தால்....Wish ful thinking.!  ( பேத்திக்கும் இவனுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம்.!) 

  .