Thursday, March 24, 2011

ஹாப்பி பர்த் டே....விதை யாகிப்பின் விருட்சமாக... ...


                                                               ஹாப்பி  பர்த்   டே
                                                                ------------------------
    
     பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளுக்கு, 
     புத்தாடை உடுத்தலாம், 
     பள்ளிக்கு சீருடை வேண்டாம், 
     இனிப்போடு பள்ளி சென்றால் ,
     ஆயா முதல் அனைவரும் செல்லம் கொஞ்சுவர்
     மாலையில் கேக் வெட்டலாம் ,பரிசுப் பொருட்கள் ,
     குவியலாம், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், , 
     கனவுகள் ,கற்பனைகள், எதிர்பார்ப்புகள். 

            பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாடும் 
            பெற்றோருக்குப் பலப்பல கவலைகள், 
            திட்டங்கள் செயல்கள், அதுவும் அடுக்குமாடி 
            குடியிருப்பானால் கேட்கவே வேண்டாம். 

    எண்ணிக் கணக்கிட வேண்டும், 
    எத்தனை பேர் அழைப்பதென்று, 
    பிள்ளையின் நண்பர்களுடன் 
    குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், 
   கூடவே துணைக்கு வரும் பெற்றோர்கள், 
    புத்தாடை துவக்கம் ,இனிப்புப் பண்டங்கள், 
    காரவகைகள், கூடவே குடிக்க ஜூஸ் , 
    வைத்துக் கொடுக்க காகித தட்டுகளுடன் ,
    கப்புகளும், கைத் துடைக்க  டிஷுஸ் என்று 
   பார்த்துப் பார்த்து திட்டமிட வேண்டும். 
   அழகான வண்ணப் படங்களுடன் பெயரும் 
   எழுதிய பெரிய கேக் மிக மிக அவசியம்.
   பரிசுகள் பலப்பல தருவோருக்கு 
    மீள்பரிசுகளும்  மிகவும் முக்கியம். 
    பரிசு கொடுக்கும் சிறுவர்கள் 
    மீள்பரிசு  எதிர் பார்ப்பர்
    அவர்களை  ஏமாற்றக்கூடாது. 

            கண்மலர்ந்தெழும்  பிள்ளையை 
            கட்டியணைத்து முத்தமிட்டேழுப்பி ,
            வாழ்த்துக்கூறி, பள்ளிக்கு  இனிப்புடன் 
            வழியனுப்பி மாலைநேர  விழாவுக்கு 
            வெகுவாகக் காத்திருப்பர் பெற்றோர். 

    மாலை நேரத்தில் சந்தியா காலத்தில் 
    வண்ணக் காகித தோரணங்கள் பலூன்கள் 
    அலங்கரிக்க அழகாக நடு மேடையில் 
    அன்று வெட்டப்பட இருக்கும் புத்தம் புது கேக். 

              ஒருவர் இருவராய் அனைவரும் வர, 
              கொண்டாட்டம் ஆரம்பம், குழந்தைகள் உற்சாகம்.
              கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்து விட்டு, 
              அனைவரும் கூடியதும் வத்திச்சுடர் ஏற்றப்பட 
              ஊதி அணைக்கத்தயாராய்ப்  பிள்ளையும் , 
              பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
              கோரசுடன் முழங்க, கேக் வெட்டி, வாயில் ஊட்டி, 
              வந்தவர் அனைவரும் விருந்துண்டு வாழ்த்த, 
              பின் மீள்பரிசும்  கொடுக்கப்படும். 

     ஆரவாரமாய் ஆரம்பமான விழா, அடங்கியபின் 
     பார்த்தால் பெற்றோர் பையில் பெரிய ஓட்டைதான்  மிச்சம். 

             என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது எனக்கு. 
             பிறந்த நாள் விழா பண்போடு கொண்டாடக் கூடாதா...
             அயலவன் கொண்டு வந்த கலாச்சாரம் 
             ஆழமாய்க் காலூன்றி வேரூன்றி விட்டது.
             பிறந்தநாள் விழாவில் ஒளிரும் தீபச்சுடர், 
             அணைக்கப்பட வேண்டுமா.?
             அச்சானியமாகத்  தோன்ற வில்லையா..?
             சூழ்நிலைக் கைதிகளாக நாமிருக்க 
             இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால், 
             தீபச்சுடரை அணைக்காமல்  ஒளியேற்றிக் 
             கொண்டாடலாமே...!

     பிறந்த நாட்கள் நல்ல நெறி 
     கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
     பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும், 
     ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடவும் ,
     உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து 
     மகிழும் நாளாகப்  பழக்கப் படுத்தி, 
     பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின்  உதவும் எண்ணம் 
    விதையாகிப்   பின் விருட்சமாகாதா.?
==================================


  
  


 

         
 


  
 
  - 

-------.


Sunday, March 20, 2011

வாழ்வியல் பரிமாற்றங்கள்.... 

   
வாழ்வியல் பரிமாற்றங்கள் -   ஒரு ஆய்வு ..........
-------------------------------------------------------------

        சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்
என்று தோன்றும்போது CAUSE-EFFECT அறிய விழைந்தேன்.
THOMAS.A.HARRIS அவர்கள் எழுதிய I AM OK-YOU ARE OK என்ற
புத்தகம் படிக்க நேரிட்டது. மனோதத்துவ நிபுணர்களால்
ஆராயப்பட்ட ,அறியப்பட்ட முடிவுகள் ,தெளிவுகள் எல்லாம்
புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன. அதில் காணப்பட்டுள்ள
விஷயங்களை சுருக்கமாகத் தொகுத்து இந்தப் பதிவில் வெளி
இடுகிறேன்.இந்தப் புத்தகத்தைப் படித்தறிந்தவர்கள் என் புரிதலில் 
குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம். 

        விவசாயப் பட்டதாரி ஒருவன் விவசாயம் பற்றிய விவரங்கள் 
அடங்கிய புத்தகம் ஒன்றை விவசாயி ஒருவரிடம் அவர் அதை 
வாங்குவாரா என்று விசாரித்தான். அதற்கு அவர் "தம்பி ,எனக்கு 
விவசாயம் பற்றித் தெரிந்ததில் பாதி விவரங்களைக் கூட 
என்னால் சரியாக உபயோகிக்க முடிவதில்லை .புத்தகம் படித்து 
அறிந்தா இனி ....." என்றாராம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் 
ஏன் மக்களுக்கு நல்லது அல்லாதது என்று தெரிந்த விஷயங்கள்
அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவது
இல்லை என்பதை ஓரளவு அலசுவதுதான்.

        வாழ்க்கைமுறை  அமைவது அவரவர் குணாதிசயங்களைப்
பொறுத்தது.இந்த குணாதிசயங்கள் அமைவதன் காரணம் என்ன.?
இந்த குணாதிசயங்கள்தான் என்ன.?அதை மாற்ற முடியுமா எனப்
பல கேள்விகள் எழுகின்றன. வல்லுனர்களின் ஆராய்ச்சிகளின்
முடிவின்படி மனிதன் அவனது வாழ்வியல் பரிமாற்றங்களின்
(TRANSACTIONS) போது அவனை நான்கு விதமாக வெளிப்படுத்திக் 
கொள்கிறான். பரிமாற்றம் (transaction) எனப்படுவது, ஒருவரை 
ஒருவர் எதிர்கொள்ளும்போது உபயோகிக்கும் வார்த்தைகள் 
மற்றும் செய்கைகள் மூலம் புரிந்து கொள்வதாகும். இந்த நான்கு 
வித வெளிப்பாடுகளை 1.நான் சரியில்லை-நீ சரி (I AM NOT OK. -
YOU ARE OK.)  2. நான் சரியில்லை- நீ சரியில்லை (I AM NOT OK -
YOU ARE NOT OK.) 3.நான் சரி- நீ சரியில்லை.(I AM OK. -YOU ARE 
NOT OK) 4.நான் சரி- நீ சரி  (I AM OK YOU ARE OK ) என்ற விதமாக 
உளக்கூறு நிபுணர்கள் பிரித்திருக்கிறார்கள். 

      இந்த மாதிரி பரிமாற்ற வெளிப்பாடுகள்ஒருவனின் குணாதி
சயத்தைப் பொறுத்தே அமைகிறது..இந்த குணாதிசயங்கள் 
ஒருவனது மூன்று வயதுப் பிராயத்துக்கு உள்ளேயே அவனது 
மூளையிலும் ஆழ் மனதிலும் பதிவாகி விடுகின்றன .இந்த 
குணாதிசயங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியவன் 
(CHILD) பெரியவன் (PARENT) அறிந்தவன் (ADULT) என்ற 
முறையில்  பதிவாகி வெளிப்படுகிறது. 

       குழந்தை பிறந்தவுடன் அதன் உயிருக்கும் ,உடலுக்கும், 
வாழ்வுக்கும் அது பிறருடைய உதவியையே நம்பி இருக்கிறது. 
பெற்றோருடையவும் மற்றோருடையவும் அரவணைப்பு ,பாசம் 
ஊக்கம் ,கண்டிப்பு, பரிசு, தண்டனை எல்லாமே குழந்தையின் 
மூளையில் பதிவாகி விடுகிறது. இந்தப் பிராயத்தில் பதிவாகும் 
அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெறும் 
உணர்வுகளாகத்தான்(FEELINGS) இருக்கும்..உணர்வுகளாகப் பதிவு 
ஆகும்விவரங்கள் பிற்காலத்தில் காணப்படும் குணாதிசயங்களுள் 
முக்கிய பங்கு வகிக்கும். எதையுமே தன்னால் செய்ய முடியாத 
குழந்தையிடம் , உணர்வுகளால் உந்தப்பட்டு நான் சரியில்லை 
(I AM NOT OK.) என்ற உணர்வே மேலோங்கி நிற்கும் .இந்த 
குனாதிசயத்தின் வெளிப்பாடு பிற்பாடு வளர்ந்த வாழ்விலும் அவர் 
களிடம் சிறியவனாக (CHILD) தலை காட்டும்.

        மூன்று வயதுக்குள் பதிவாகும் உணர்வுகளால் நான் சரி
இல்லை என்று எண்ணும் குழந்தை தன்னைச் சுற்றி இருப்பவர்
பற்றிய அனுபவங்களையும் மூளையில் பதிவாக்கிக் கொள்கிறது.
இப்படிப் பதிவாகும் உணர்வுகள் சுற்றியிருப்பவர்களின் மொழி,
செய்கை முதலியவற்றால் உணரப்படுகிறது..குழந்தையை
அரவணைபபவர்கள்,அதன் ஆதாரத் தேவையான உணவு ,உடை
போன்றவற்றைக் கொடுப்பதும், கொஞ்சுதல், பரிவு, கண்டிப்பு,
பரிசு, தண்டனை போன்றவற்றின் வெளிப்பாடுகள் அவர்களது
எதிர்பார்ப்புகளை தெரியப் படுத்துவது, எல்லாம் அவர்களைப்
பற்றிய உணர்வுகளாக குழந்தையின் மூளையில் பெரியவர்களின்
(PARENT) அம்சமாக பதிவாகிறது. 

      குழந்தைகள்பிறந்துவாழ்க்கையில்சிலகாரியங்களை
தானாகச்செய்யத்துவங்குகின்றன. மல்லாக்கப் படுக்க வைத்த
குழந்தைகள் உருளவும், தவிழவும், எழவும் நடக்கவும் செய்யத்
தொடங்கும்போது, தன்னால் முடியும் என்ற உணர்வு குழந்தை
இடம் பதிவாகும். கண்ணில் கண்ட பொருள்களை எடுத்தும்,
பிடித்தும், சுவைத்தும் தானாகவே சில முடிவுகளை எடுக்கும்.,
உணர்வுகளும் குழந்தையிடம் பதிவாகும். இந்த குணாதிசயம் 
அறிந்தவன் (ADULT) என்று அறியப்படும்.

      பிறந்து வளர்ந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியவன் ,
பெரியவன், அறிந்தவன் (child,parent,adult) என்று எல்லோருடைய 
குணாதிசயங்களும் இருக்கும். இந்த உணர்வுகள் பெற்றோரால் 
கற்பிக்கப்பட்டதும் ,குழந்தையாக உணரப்பட்டதும் அல்லாமல் 
தானாகவே அறிந்து கொண்டதுமாகும். உதாரணமாக தொடாதே 
சுடும் என்பதை தொட்டுப்பார்த்து சுட்டுககொள்வது  போலவும் ,
போகாதே, விழுவாய் என்பதை பொய் விழுந்து அறிந்து கொள்வது 
போலுமாகும்.

        பெரும்பாலும் புற உலகத் தொடர்பாக குழந்தைகள் வார்த்தை
களாக இல்லாமல் செய்கைகளாலேயே தெரிவிக்கின்றன. 
பிற்கால வாழ்வியல் பரிமாற்றங்களில் ஒரு சிறியவனாக வெளிப் 
படுவது கண்ணீர், உதடுகள் துடிப்பது, முகம் கோணுவது, திடீர்க் 
கோபம் காட்டுவது, கண்களை உருட்டுவது, கீழ்நோக்கிப் பார்ப்பது ,
கேலி செய்வது, நகம் கடிப்பது, சிரிப்பது போன்ற உணர்வுகளே. 
வார்த்தைகளாக வெளிப்படுவது,எனக்குத் தெரியாது,நான் நினைக்
கிறேன்,எனக்குக் கவலையில்லை, நான் செய்யப்போகிறேன்
போன்றவையே.

        குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்களின் குணங்களாக
நெரித்த புருவம் ,கடித்த உதடு, சுட்டிக்காட்டும் விரல், தலை
ஆட்டல், கோபக் கண்கள், இடுப்பில் கை, மார்பில் கட்டிய கைகள் ,
பெருமூச்சுவிடல் , சப்புக்கொட்டுதல், போன்றவை சைகைகளாக
பதிவாகி இருக்கும். குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்
குணங்களாக அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் முக்கிய
மாக முட்டாள், போக்கிரி, உபயோகமில்லாதவன், சோம்பேறி,
ஐயோ பாவம் ,எத்தனை முறை கூறுவது, என்ன தைரியம்,
ஒரேயடியாய் நிறுத்துவேன், கட்டாயம் போன்றவைகளும்
பதிவாகி இருக்கும்.

      மேற்கூறிய சிறியவன், மற்றும் பெரியவர் குணாதிசயங்கள்
வாழ்வியல் பரிமாற்றங்களில் நான் சரியில்லை, - நீ சரி,
நான் சரியில்லை, -   நீ சரியில்லை என்ற முறையில் வெளிப்
படுகிறது.

       வாழ்வியலின் மூன்றாவது பரிமாற்ற நிலையான நான் சரி-நீ
\சரியில்லை (I AM OK, YOU ARE NOT OK), என்பதற்கான உணர்வு 
மூன்று வயதிற்குள்ளேயே எப்படி பதிவாகி இருக்க முடியும்.?
பொதுவாக இந்தப் பதிவு, குழந்தைகளை எடுப்பது ,கொஞ்சுவது, 
தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த்துவது குறைந்து, அடி, உதை
தண்டனை, கண்டிப்பு, போன்று குழந்தைகள், அலைக்கழிக்கப் 
படும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் 
நிலைக்கு தள்ளப்படும்போதும், அந்த துன்பங்களிலிருந்து மீளும் 
போதும் நான்சரி,என்னை விடு, நீசரியில்லை என்ற உணர்வைப் 
பெறுகிறார்கள்.இந்த நிலையில் இருந்தவன் ,பிற்காலத்தில் 
எல்லோருமே சரியில்லாதவர்கள் என்ற நிலையில் நீடிக்கவே 
விரும்புகிறான். அவனுள் பதிவாகி இருக்கும் பெரியவர் பற்றிய 
உணர்வு அவனுடைய செயல்களுக்கு அனுமதி அழிப்பது போல் 
இருக்கும்.

       இனி  வாழ்வியல் பரிமாற்றத்தில் (TRANSACTION)நான்காவது 
நான் சரி-நீ சரி (I AM OK-YOU ARE OK) என்ற நிலைக்கு 
வருவோம். இந்த நிலை மற்ற மூன்று நிலைகளில் இருந்து
மாறுபட்டது. மற்ற மூன்று நிலைகளும் அறியாப் பருவத்தில் 
அறியாமலேயே ஊன்றப்பட்டது. பெரும்பாலோர் குணம் முதல் 
நிலையையே நான் சரியில்லை, நீ சரி என்பதை ஒத்தே 
இருக்கிறது. பெரும்பாலும் மாறுவதில்லை. துரதிருஷ்டவசமாக 
சிலருக்கு இரண்டாம் நிலைக்கும், மூன்றாம் நிலைக்கும் மாறு 
கிறது. இந்த வாழ்க்கையின் பரிமாற்ற நிலைகள் மூன்றாவது 
வயதுக்குள்ளாகவே தீர்மானிக்கப்படுவதாக வல்லுனர்கள் 
கருதுகிறார்கள்.

       இந்த நிலைகள் குழந்தையில் உள்ள அறிந்தவன் (ADULT)
வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சி
யின் முடிவைத் தீர்மானிக்கிறது. முதல் மூன்று நிலைகளும் 
உணர்வுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நான்காவது நிலை 
எண்ணம், நம்பிக்கை, செயல்கள் மூலம் உருவாகிறது. முதல் 
மூன்று நிலைகள் ஏன் என்பதன் விடையாக இருக்கும். நான்காம் 
நிலை ஏன் கூடாது என்பதை செயல் படுத்துவதில் இருக்கும். 
ஆரம்ப கட்டத்தில் அவர்கள் சரி என்ற நிலைக்கு உட்படுத்தப்
பட்டு, அதை அவர்கள் காண்பிக்க வழிமுறைகளும் கொடுக்கப்
பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளே.

        நான் சரி - நீ சரி என்ற நிலை உணர்வுகளால் ஏற்படுவது
அல்ல. எண்ணங்களாலும் சோதனைகளாலும் எடுக்கப்படுவது.

      பரிமாற்றங்களில் சிறியவன் (CHILD) குணாதிசயம் ,பெரியவன்
) குணாதிசயம் வெளிப்படும்போது சாதாரணமாகத் தெரிய 
வரும் செய்கைகளையும் வார்த்தைகளையும் ஏற்கனவே 
பார்த்தோம். அதுபோல் அறிந்தவன் (ADULT) குணாதிசயம் அவன் 
கண்களிலும் காணலாம். ஆழ்ந்த தீர்க்கமான படபடப்பில்லாத 
நேரான பார்வை. வார்த்தைகளில் ஏன் , என்ன, எங்கு, எதற்கு, யார், 
எப்படி போன்றவற்றின் வெளிப்பாடாகவும், உண்மை, பொய், 
தவறு ,தெரியாது, நான் நினைக்கிறேன், என்பனவற்றின் மூலமும் 
வெளிப்படுத்தப் படுகிறது. ஏற்கனவே பெரியவனில் (PARENT), 
பதிவாகி இருக்கும் விவரங்களின் (DATA), அடிப்படையில் 
அறிந்தவன் (ADULT) பிரித்து எடுக்கிறான்.

       மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் கடந்து வந்திருந்தாலும் 
நம்மில் பலர்,சரியில்லைஎன்ற நிலைப்பாட்டுடன் கூடிய, ஏதுமே 
செய்ய இயலாத குழந்தையின் நிலையிலேயே வாழ்க்கையைக் 
கழிக்கிறோம். உணர்வுகளால் பதிவாக்கப்பட்ட நிலைப்பாடுகளில், 
நான்சரியில்லை என்ற சிறியவனின் (CHILD),அணுகுமுறையை 
ஏற்பவர்கள் நான் சரி,என்ற நிலைப்பாடுடைய அறிந்தவனின் 
(ADULT),பரிமாற்றத்தை சாதாரணமாகத் தவிர்க்கிறார்கள். 

      பரிமாற்ற அலசலில் மனிதர்களின் குணாதிசயங்களின்
காரணங்கள் தெரிய வரும்போது ,புரிதலும் அதிகரிக்கும்.
================================================  


     


  
   
    
    
        
  
           

    
                


 .

Friday, March 18, 2011

பெண் எழுத்து......தொடர்..

பெண் எழுத்து.......தொடர்
-----------------------------------

அன்புடன்  மலிக்கா,பெண் எழுத்து என்ற தலைப்பில் தொடர் 
எழுதி இருக்கிறார். தொடரைத் தொடர எதிர்மறையாக உள்ள 
ஆண்களிடம் கருத்து தொடர வேண்டி என்னையும் எழுத 
அழைத்துள்ளார். முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 
சாதாரணமாக எழுதுவது குறித்து எழுதச் சொன்னால் எழுதலாம்.
யாரும் கேட்காமலேயே எழுதியுமிருக்கிறேன். எழுதுபவர்களின்  
எழுத்துக்களையும் நோக்கங்களையும் விமரிசித்தும் இருக்கிறேன் 
அதில் ஆண் எழுத்தாளர்களும் பெண் எழுத்தாளர்களும் 
அடங்குவர்.(பார்க்க: பதிவு."எழுதுவது எழுதுவதின் நிமித்தம் --
படிப்பது படிப்பதின் நிமித்தம்")


எழுதுவதில் ஆண் எழுத்து பெண்எழுத்து எதுவும் இருப்பதாக நான் 
நினைக்கவில்லை. எழுத்துக்களின் வெளிப்பாடு எண்ணங்களின் 
வெளிப்பாடுதானே. அப்படிப் பார்க்கும்போது, சிந்திக்கும் விதமும் 
அணுகு முறையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம். 
மனிதனின் குணாதிசயத்தைப் பொறுத்தே சிந்தனை அமையும். 
இந்த சிந்தனைகள் எல்லாம் பிறந்த மூன்று வயதுக்குள்ளேயே 
நிர்ணயிக்கப் படுகின்றன. இதைப்பற்றிய விரிவான பதிவை நான் 
எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதற்கு அடுத்தது அதுதான். 
சிந்தனைக்கு எல்லைக்கோடு கிடையாது. சிந்தனைகளை வெளிப் 
படுத்துவதில் வேண்டுமானால் எல்லைக்கோடுகள் இருக்கலாம். 
அந்த எல்லைக்கோடும் அவரவர் வளர்ந்த முறை, இருக்கும் சூழ் 
நிலை, வாழ்வைப் பற்றி விதைக்கப்பட்ட எண்ணங்களின் தாக்கம் 
போன்றவற்றின் பேரில்தான் இருக்கும். அதற்கு ஆண் பெண் 
பேதம் கிடையாது. 


ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.
நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை
யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது  ஆனாலும் ஒன்றைக் குறிப்பிட
வேண்டும் .வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்
இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே
பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து
கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக இருக்கும், இல்லை
அவர்கள் வேறு மாதிரி எழுத விரும்புவதில்லை, இல்லை
எழுதத் தெரிவதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நான் அப்படிக்
குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் எழுச்சி மிக்க , துடிப்புள்ள,
பகுத்துப் பார்க்கும் சிந்தனையுள்ள பெண்களின் எழுத்துக்களையும்
பார்க்கிறேன்.


மொத்தத்தில் எழுத்தை ஆண் எழுத்து ,பெண் எழுத்து என்று பகுத்து
பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.    
   
.      .   

Monday, March 14, 2011

முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....
--------------------------------------------------------

           நாளும் பொழுதும் என் நாவில்
           தவறாது வந்தமரும் முருகா,
           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

முருகு என்றால் அழகு
அழகு என்றால் முருகன்
என் கண்ணுக்கும் சிந்தைககும்
இந்த அண்டமே அழகாகத் 
தெரியும்போது அது நீயாகத்தானே 
இருக்க வேண்டும், தெரிய வேண்டும். 

            அழகை ஆராதிப்பவன் உன்னை 
            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 
ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்
மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 
கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 
சமன்பாடு நன்றாகத் தெரிகிறது. 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
            உன் தாயின் பெயர் பார்வதி,
            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
            என் தந்தையும் மகாதேவன்
            என் தாயும் பார்வதி
            நானும் பாலசுப்பிரமணியம்.
            புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             பிரணவத்தின் பொருள் அறியா
             பிரம்மனின் ஆணவம் அடக்க
             அவனை நீ சிறை வைத்தாய்.
             உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
             என்றுன் அப்பன் உனைக்கேட்க
             பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             கதை எனக்குப் பிடிக்கும்.
             அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              நாவல் பழம் கொண்டு,
             அவ்வைக் கிழவியின் தமிழ்
             ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
             உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
             தமிழைக் குத்தகை எடுத்து
             கொள்முதல் செயவதாய்க் கருதும்
             சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

              ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
               காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
               நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
               தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
               எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================
 


 
  

           
   

Thursday, March 10, 2011

அதீத அன்பு......

அதீத அன்பு .......
-----------------
             இளையவன் வேலை மாற்றம் காரணம் அவனது 
             சென்னை வாசமும் மாற்றம் ஆகும். 
             சேதி கேட்டு சென்னை செல்ல விருப்பம் என்றேன்
            கூடவே என்றும் போல் என் மனைவியும்.

பயணச்சீட்டு வாங்காதீர்,
தபாலில் அனுப்புகிறேன் என்றே
தொலை பேசியில் தகவல் வந்தது. 

           நான் சாதாரணமானவன் ;பயணிப்பதும்
           விரும்புவதும் இரண்டாம் வகுப்பே. 
          என் மகனுக்கு அது ஒவ்வாது 
          பட்டது இதுவரை போதும் - இனி 
          பயணம் குளிர் வசதி வகுப்பில் -சதாப்தி 
          எக்ஸ்ப்ரஸில் என்றேஇட்டான் கட்டளை.
அழைத்துச்செல்ல வந்த மகனிடம் 
காரில் பயணிக்கையில் கூறிவிட்டேன் 
சென்னையில் செல்ல விரும்பும் இடங்கள்
இது இது என ஓர் பட்டியல்
 சரி சரி என்றே அவனும் தலையாட்டினான். 

            அவனுக்கென்று கிடைப்பது ஓய்வுக்காக
            வாரம் ஒரு நாள் விடுமுறை.
            அன்றவனை அலைக்கழிக்க விருப்பமில்லை
            நானே செல்லலாம் என்றால் முடியாது
            கூடவே வருவாள் என் துணைவி .           

காருக்கும் கால் டாக்சிக்கும் செலவு 
செய்ய என் மனம் ஒவ்வாது.  
என் காலே எனக்குதவி -அதற்கு
மேல் இருக்கிறது பேரூந்து வசதி
மேலும் செலவழித்தல் என் சக்திக்கு மிகுதி. 

            கூடவே கூடாது கூடிய வரை
            நான் கூட்டிப் போகிறேன் என்றே
           மகனும் உறுதி படக் கூறிவிட்டான்.
           நாளெல்லாம் பணி செய்து துவண்டு வரும் 
           மகன் முகம் கண்டால் எங்கும் 
           அழைத்துச் செல்ல கேட்காது மனசு .
          மனைவிக்கு போதும் ஆலயங்கள் தரிசனம்
          ஆங்கவளைக் கூட்டிச் செல்ல கூடவே
          நானும் வருதல் அவசியம்.
          அவள் பெரும் புண்ணியத்தில்
          எனக்கும் ஒரு பங்கு வேண்டாமா...

காருடன் ,வாகன ஓட்டுனருடன்
ஓரிரண்டு நாட்கள் உறவுகளைக்
காண ஒதுக்கப் பட்டது.

          நண்பர்களுக்கு என் வரவு அறிவிக்க
          வந்து காண அழைப்பு மேல் அழைப்பு வர
         கண்டிப்பாகக் கூறிவிட்டேன் -கைபேசி
         தொடர்பு போதாதென்றால் எனைக்காண
         அவர்கள்தான் வர வேண்டும் என்றேன். 

அன்பின் நெருக்கம் அவர்களை அழைத்துவர
அவர்களுடன் பயணித்தேன் என்னிலும்
மூத்த நண்பனைக் காண.

          ஈரைந்து நாட்கள் சென்னையில் வாசம்,
          பேரன் பேத்தியுடன் ஒரே உல்லாசம்.,
          மற்றபடி அது ஒரு ஜெயில் வாசம். 
    
நல்ல வேளை அங்கே இருந்தது ஒரு கணினி    
என்னிஷ்டம் போல் இயக்கவும் அனுமதி. 
வந்த நண்பர்க்கு காட்டினேன்
என் வலைப்பூ தரிசனம்
எனக்கு கொஞ்சம் எழுதவும் வரும்
என்றே அறிந்ததில் காட்டினர் ஆச்சரியம்
எழுதுவது நான்தானா இல்லை என்னுள்
இயங்கும் ஏதோ ஒரு குறளியா
என்றே காட்டினர் ஐயம். 

            எண்பத்தியேழு வயதிலும் ஓடியாடி
            வளைய வரும் அச்சுதானந்தன்
            கேரள முதல்வர்.
            குருவாயூர் அம்பலம் குழந்தைபோல்
            சுற்றி வந்த கருணாகரன் வயதோ
            தொண்ணூறு சொச்சம்.

எழுபத்திமூன்று வயதில் இளைஞன் என
உணரும் நான் காண்பவர் கண்ணுக்கு
தள்ளாத கிழவனாகத் தெரிகிறேன்.
எனக்கொரு வியாதியுமில்லை -உடல்
நலத்தில் ஒரு கேடும் இல்லை.
இருந்தாலும் என்னிஷ்டம்போல்
செயல்பட எனக்கு உரிமையில்லை.
வேகம் குறைந்தது ஒன்றே என் குறை.

          பூங்காவில் நடை பயின்று வர
          தாமதித்தால் கைபேசி அலறும்;
          இன்னும் சற்று தாமதமானால்
          ஆஜராயிருப்பான் அங்கே என் பேரன் 
          வீடு வந்தவுடன் பற்ற வைப்பான்
          தாத்தா நடக்கவில்லை ஓடுகிறார் என்று.
          குளிக்கையில் குழாய் நீர் கொட்டல் நின்று
          சில நொடித்துளிகள் ஆனதும்
          குளியலறைக் கதவு தட தடக்கும்.
          கனாக்கண்டு திடுக்கிட்டு விழித்தால்
          மூக்கருகே மனைவியின் கையோ என்று மயக்கம்

அதீத அன்பும் அக்கறையும்
சில நேரங்களில் திக்கு முக்காட்டுகிறது.   
சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது. 

          மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
          செய்யாத குற்றத்துக்கு என் வயோதிகம்
          என்னவெல்லாம் அனுபவிக்குமோ....
=====================================

Monday, March 7, 2011

வெற்றியும் தோல்வியும்.......

வெற்றியும் தோல்வியும் 
----------------------------------
               தீதும் நன்றும் பிறர் தர வாரா
               வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா 
               நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் --நல்ல
               படிப்பினையே யன்றி வேறொன்றோ  

தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல . 

              தோல்விகள் உன்னை பதப்படுத்தும் 
              மேலும் உழைக்க உரமேற்றும் 
              எல்லாம் எளிதில் அடைந்து விட்டால் 
              வாழ்வின் சுவையே குறைந்து விடும். 
             விழுந்து எழுந்து முட்டி மோதி 
             இலக்கடைந்தால் கிடைப்பதன் அருமை கூடிவிடும். 
 
ஊர் கூடி வடம் பிடித்து தேரிழுக்க 
தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும்
நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும்
முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை
தேரோட்டந்தான் தோல்வியாமோ

             வாழ்வியலில் சந்திக்கும் சறுக்கல்களும் 
             தேரின் முட்டுக்கட்டைக்கு நேரன்றோ
             நட்பிடமும் உறவிடமும் வெற்றி தோல்வி 
             தேடாதே, நடப்பவை எல்லாம் அனுபவமே,
             ஆற அமர சிந்தித்தால் அறிவில் தெளிவைக் காண்போமே.

ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை 
நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை
விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்; 
விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ
நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய். 

              வாழ்வியலில் வீழ்ந்து பட்டாய்
              நீ ஆடித்தான் ஆகவேண்டும் -தேர்வு
              செய்யும் உரிமை இங்கில்லை உனக்கு. 

வேண்டுமென்றே தோற்பதும் சில சமயம்
சுகமாகத் தோற்பதும் உற்றாரின் வெற்றிக்கே -அது
மகனோ மகளோ, பெயர் சொல்ல வந்த பெயரனோ,
உற்ற நட்போ,காதல் ஜோடியோ, கடிமணத்துணையோ, 
யாரேனு மாகலாம் -அவர்கள் காணும் உவகையிலே
நீ அடையும் மகிழ்ச்சிக்கே .

               தோல்வி தீதல்ல எனும்போதே
               வெற்றி என்றும், நன்றென்று ஆவதில்லை.
               வெற்றி என்றும் நன்று, என்றும் ஆவதில்லை.
               அதனை ஏற்கும் முறையே தீர்மானிக்கும். 

வெற்றி சில சமயம் தலைக்கனம் ஏற்றும்
சுற்றில் நடக்கும் நிகழ்வுகள் கண்ணில் படாது,
கருத்தினில் படியாது,முயற்சிகளை முறியடிக்கும்,
கடந்து வந்த பாதை காணாது போகும்.    
வெற்றியின் உச்சியிலிருந்து வீழ்ந்து பட்டால்,
பின் மிச்சம் ஏதும் கிட்டாது மீண்டும் துவங்க.

               விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால், 
               உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
             "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"
             -----------------------------------------------------------------

Thursday, March 3, 2011

பஞ்சாபில் நான்.

.பஞ்சாபில் நான். 
-----------------------
      
        சீக்கிசம் என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது  அதை படிக்க துவங்கும் முன்னும், படிக்கும் போதும்  நான்  சீக்கியர்களின் மாநிலமான  பஞ்சாபுக்கும்  அவர்களுடைய  புண்ணிய  தலங்களான  அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது.  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

       BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனி. பஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம். திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. தினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லை. தரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டது. நான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும். இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. மூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம். அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வாலி   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.

          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும். நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியது. அம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம். அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டது. பயத்தில் உறைந்து போனேன். கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்று, நான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர். அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள். உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள். வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.

         ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன். அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர். அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்தது. அந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லை, ஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார். மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.

        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போது, காந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறது. அங்குள்ள ஒரு ஓவிய, பட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறது. சீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பளிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறது. அதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

         ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் புண்ணிய தலங்களுள் ஒன்று. அங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர். அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. அதற்காக தனியே ஒரு பதிவு  வேண்டும். GOD WILLING, I WILL DO IT SOMETIME.
------------------------------------------------------------------------------

                   . 
  
 .