வியாழன், 24 மார்ச், 2011

ஹாப்பி பர்த் டே....விதை யாகிப்பின் விருட்சமாக... ...


                                                               ஹாப்பி  பர்த்   டே
                                                                ------------------------
    
     பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளுக்கு, 
     புத்தாடை உடுத்தலாம், 
     பள்ளிக்கு சீருடை வேண்டாம், 
     இனிப்போடு பள்ளி சென்றால் ,
     ஆயா முதல் அனைவரும் செல்லம் கொஞ்சுவர்
     மாலையில் கேக் வெட்டலாம் ,பரிசுப் பொருட்கள் ,
     குவியலாம், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், , 
     கனவுகள் ,கற்பனைகள், எதிர்பார்ப்புகள். 

            பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாடும் 
            பெற்றோருக்குப் பலப்பல கவலைகள், 
            திட்டங்கள் செயல்கள், அதுவும் அடுக்குமாடி 
            குடியிருப்பானால் கேட்கவே வேண்டாம். 

    எண்ணிக் கணக்கிட வேண்டும், 
    எத்தனை பேர் அழைப்பதென்று, 
    பிள்ளையின் நண்பர்களுடன் 
    குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், 
   கூடவே துணைக்கு வரும் பெற்றோர்கள், 
    புத்தாடை துவக்கம் ,இனிப்புப் பண்டங்கள், 
    காரவகைகள், கூடவே குடிக்க ஜூஸ் , 
    வைத்துக் கொடுக்க காகித தட்டுகளுடன் ,
    கப்புகளும், கைத் துடைக்க  டிஷுஸ் என்று 
   பார்த்துப் பார்த்து திட்டமிட வேண்டும். 
   அழகான வண்ணப் படங்களுடன் பெயரும் 
   எழுதிய பெரிய கேக் மிக மிக அவசியம்.
   பரிசுகள் பலப்பல தருவோருக்கு 
    மீள்பரிசுகளும்  மிகவும் முக்கியம். 
    பரிசு கொடுக்கும் சிறுவர்கள் 
    மீள்பரிசு  எதிர் பார்ப்பர்
    அவர்களை  ஏமாற்றக்கூடாது. 

            கண்மலர்ந்தெழும்  பிள்ளையை 
            கட்டியணைத்து முத்தமிட்டேழுப்பி ,
            வாழ்த்துக்கூறி, பள்ளிக்கு  இனிப்புடன் 
            வழியனுப்பி மாலைநேர  விழாவுக்கு 
            வெகுவாகக் காத்திருப்பர் பெற்றோர். 

    மாலை நேரத்தில் சந்தியா காலத்தில் 
    வண்ணக் காகித தோரணங்கள் பலூன்கள் 
    அலங்கரிக்க அழகாக நடு மேடையில் 
    அன்று வெட்டப்பட இருக்கும் புத்தம் புது கேக். 

              ஒருவர் இருவராய் அனைவரும் வர, 
              கொண்டாட்டம் ஆரம்பம், குழந்தைகள் உற்சாகம்.
              கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்து விட்டு, 
              அனைவரும் கூடியதும் வத்திச்சுடர் ஏற்றப்பட 
              ஊதி அணைக்கத்தயாராய்ப்  பிள்ளையும் , 
              பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
              கோரசுடன் முழங்க, கேக் வெட்டி, வாயில் ஊட்டி, 
              வந்தவர் அனைவரும் விருந்துண்டு வாழ்த்த, 
              பின் மீள்பரிசும்  கொடுக்கப்படும். 

     ஆரவாரமாய் ஆரம்பமான விழா, அடங்கியபின் 
     பார்த்தால் பெற்றோர் பையில் பெரிய ஓட்டைதான்  மிச்சம். 

             என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது எனக்கு. 
             பிறந்த நாள் விழா பண்போடு கொண்டாடக் கூடாதா...
             அயலவன் கொண்டு வந்த கலாச்சாரம் 
             ஆழமாய்க் காலூன்றி வேரூன்றி விட்டது.
             பிறந்தநாள் விழாவில் ஒளிரும் தீபச்சுடர், 
             அணைக்கப்பட வேண்டுமா.?
             அச்சானியமாகத்  தோன்ற வில்லையா..?
             சூழ்நிலைக் கைதிகளாக நாமிருக்க 
             இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால், 
             தீபச்சுடரை அணைக்காமல்  ஒளியேற்றிக் 
             கொண்டாடலாமே...!

     பிறந்த நாட்கள் நல்ல நெறி 
     கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
     பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும், 
     ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடவும் ,
     உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து 
     மகிழும் நாளாகப்  பழக்கப் படுத்தி, 
     பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின்  உதவும் எண்ணம் 
    விதையாகிப்   பின் விருட்சமாகாதா.?
==================================






 



 
  


 

         
 






 







 




 
  - 

-------.


14 கருத்துகள்:

  1. தீபச்சுடரை அணைக்காமல் ஒளியேற்றிக்
    கொண்டாடலாமே...!/
    அருமையான யோச‌னை ஐயா. பெற்றோர், பெரியோர்க‌ளை வ‌ண‌ங்கி
    ப‌ள்ளித் தோழ‌ர் தோழிக‌ளுக்கு (ஆசிய‌ர்க‌ளுக்கும்) இனிப்பு வ‌ழங்கி
    வாழ்த்து/ஆசி பெற்று பிற‌ந்த‌நாளைக் கொண்டாடி மகிழ்த‌ல் சுகமே.
    ப‌த்துப் ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து வ‌ரைதான் குழ‌ந்தைகளின் இந்த‌ பிற‌ந்த‌நாள் கொண்டாட்ட‌ம் கும்ப‌லாய். அத‌ன் பின் டீன் ஏஜ் ஆன‌தும் கொண்டாட்ட‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் விருப்ப‌மான‌ வ‌ழியாய் தொட‌ர்கிற‌து. கல்லூரி ப‌ருவ‌ம் வ‌ந்து விட்டால், அத‌ன் ஆட்ட‌ங்க‌ள் வேறு திசை மாறிவிடுகிற‌து.

    பதிலளிநீக்கு
  2. //உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து
    மகிழும் நாளாகப் பழக்கப் படுத்தி,
    பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...//
    நல்லது

    பதிலளிநீக்கு
  3. ஸ்கர்ட்,டை,ஷூ
    டாடி,மம்மி
    மேடம், நர்சரி,
    பெர்த்டே சாங்
    கேக்,கேண்டில்
    இத்தனையும் நமக்கு
    அவசியம் வேண்டும்
    ஊதி அணைத்தல் மட்டும்
    வேண்டாம் என்றால்
    எப்படி ஏற்க முடியும்?

    சைக்கிளை வேண்டுமானால்
    மிதிவண்டியென
    பெயர்மாற்றம் செய்யலாம்
    சைக்கிளைக் கழற்றினால்
    எப்பொருளுக்கும் தமிழ் பெயர்
    இல்லாமல்தான் போகும்

    அஸ்திவாரங்களைச் சரிசெய்யாது
    கீறலுக்கு வெள்ளையடித்தல்
    எந்த பயனும் தராது என்பது
    அடியேனின் எண்ணம்

    நல்ல சிந்தனையை பதிவின் மூலம்
    துவக்கி வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. பிள்ளையின் பிறந்த நாளில் முழு சுதந்திரமாய் அதன் மனபோக்கில் இயங்கவிடுங்கள். புழுதியில் புரண்டால்கூட புரளட்டும். அதன் வயதொத்த வறுமையில் புரளும் பிள்ளைகளின் வாழ்க்கையோடு அன்று ஒருநாள் அதன் வாழ்க்கையை இணைத்துவிடுங்கள். போதும்.

    பதிலளிநீக்கு
  5. பிறந்த நாட்கள் நல்ல நெறி
    கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
    பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும்,
    ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடவும் ,
    உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து
    மகிழும் நாளாகப் பழக்கப் படுத்தி,
    பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின் உதவும் எண்ணம்
    விதையாகிப் பின் விருட்சமாகாதா.?
    அருமையான வரிகள்! சிறு வயதில் விதைக்கும் நல் எண்ண‌ங்கள்தான் பின்னாளில் விருட்சங்களாகி மற்ற‌வர்களுக்கும் பலன் தருகின்றன! உலகமே இப்படி இயந்திர கதியில் போனாலும் இன்னும் சில இல்லங்களில் இப்படிப்பட்ட பிறந்த நாட்கள் இருக்கத்தான் செய்கின்றன!!

    பதிலளிநீக்கு
  6. முற்றிலும் உண்மைங்க.மாறவேண்டும்.
    நாம் சிந்தித்து நடந்தால் இது சாத்தியம்.
    மிக நல்ல சிந்தனையும் பகிர்வும்.
    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  7. சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி அங்கலாய்க்கலாம். வியாபாரிகள் சத்தமில்லாமல் கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்தும் விடுகிறார்கள்.
    அக்ஷய த்ருதியை, காதலர் தினம், ஆடித்தள்ளுபடி இப்படிப் பல புதுவரவுகளை நேசம் வளர்க்க ஏற்றுக் கொண்ட பிறகு குட்டியின் அடுத்தபிறந்த நாளை திட்டமிடுதலே யதார்தம்.சிந்தனையாளர்கள் கலாச்சாரத்தை மாற்ற முடியாது.
    லைப்லே இதெல்லாம் சகஜம் சார்!!!!

    பதிலளிநீக்கு
  8. அருமை GMB சார்.
    எங்கள வீட்டு பிறந்த நாள் விழாக்களில் விளக்கேற்றுவது தான் வழக்கம் , ஊதி அணைப்பதுமில்லை. ஊத்தி அடிப்பதுமில்லை .

    பதிலளிநீக்கு
  9. nalla pirantha naal valththu padaludan unmai kondadum vitham koduthththu arumai..vaalththukkal

    பதிலளிநீக்கு
  10. திரு, ரமணிக்கு, மம்மி, டாடி,கேக், பர்த்டே சாங், எல்லாம் தேவை என்று நான் குறிப்பிடவே இல்லையே. வாழும் சூழலில் சிலவற்றைதவிர்க்க முடியவில்லை என்றால் ஒளியை அணைப்பதைவிட ஏற்றி மகிழலாமே என்பதே என் கருத்து. அஸ்திவாரம் பலப்பட வேண்டும் என்பதே என் கருத்தும். என்னைப் புரிய வைக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நலமில்லா வழிமுறைகளையும் , வாழ்க்கை முறையையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டு இதெல்லாம் சகஜம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே, வெங்கட் சார்.சரி தவறு எது எது, என்று நாமே முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். மாறுபட்ட சிந்தனை கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. நல்ல பழக்கங்கள் வேரூன்றி விதைக்கப்பட்டால் அது விருட்சமாக வளர்ந்து பலன் தரும் என்ற என் கருத்துக்கு/ பதிவுக்கு, வருகை தந்த அனைவருக்கும் என் நன்றி

    பதிலளிநீக்கு
  13. //பிறந்த நாட்கள் நல்ல நெறி கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
    பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும், ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடவும், உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து மகிழும் நாளாகப் பழக்கப் படுத்தி,பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின் உதவும் எண்ணம் விதையாகிப் பின் விருட்சமாகாதா.?//

    பொன்னான வரிகள். நன்றி.

    பதிலளிநீக்கு