Monday, May 28, 2012

மீண்டும் பெண்கள்......!


                                              மீண்டும் பெண்கள்.......!
                                             -------------------------------பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?


 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.

பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.
                                 :      .               .                                  .                                    
            Saturday, May 26, 2012

ஊரைக் காட்ட.... வேரைக் காட்ட....

தேரில் ஏறும் என் பேரன்.
 ஊரைக்காட்ட ..   .வேரைக்
காட்ட..தேரைக் காட்ட
--------------------------------------

பாலக்காட்டில் கல்பாத்தி கிராமத்தை பாரம்பரிய கிராமமாக ( HERITAGE VILLAGE) அறிவித்திருக்கிறார்கள். ரத்தத்தில் ஊறி நிற்கும் நம்பிக்கை வெளிப்பாடுகளின், அடையாளமாக கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன..பாரம்பரியமும் கலாச்சாரங்களும், உலகம் வளர்கிற வேகத்திலும் , தொழில் நுட்பங்கள் நம் வாழ்வில் ஊடுருவி இருக்கும் விதத்திலும்,பலியாகின்றனவோ எனும் சந்தேகம் எழுகிறது. ஒருவனது வேரும் ஊரும் பற்றிய குறைந்த பட்ச விஷயங்களாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் , எனக்கு எங்கள் கிராமத்திலிருந்து கோவில் கும்பாபிஷேகம்  குறித்த அழைப்பு வந்ததும் எழுந்தது. என்னைப் பற்றிய எந்த அடையாளமும் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை. எப்படியோ என் விலாசம் பெற்று நேரிலும் அழைக்க வந்தது என் சிந்தனைகளைக் கிளறி விட்டது. நான் பத்து வயது பிராயத்தில் ஒரு வருடத்துக்கும் குறைவாகவே எங்கள் கிராமத்தில் என் தந்தை வழிப் பாட்டியுடன் இருந்திருக்கிறேன். அதன் பிறகு எங்கள் பூர்வீக வீடு விற்கப்பட்டு அந்த கிராமத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஆகிறது அறுபது வருடங்கள். சொல்லப் போனால் என் பெயரில் ஊரின் அடையாளமாக இருக்கும் எழுத்து (G ), என் பிள்ளைகளின் பெயரில் இப்போது இல்லை. THERE IS NO MOORING NOW.  அந்த என் செய்கை தவறோ என்று இப்போது தோன்றுகிறது.எது எப்படி இருந்தாலும் என் பிள்ளைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் எங்கள் ஊர் பற்றியும் நான் அங்கு வாழ்ந்த கால நினைவுகள் குறித்தும் அவ்வப்போது கூறுவதுண்டு. ஊர்க் கோவில் கும்பாபிஷேக அழைப்பு வந்ததும், கோவிந்தராஜபுரம் “ என்ற தலைப்பில் ஒரு பதிவும் எழுதி இருந்தேன். இந்த அழைப்பை முகாந்திரமாகக் கொண்டு என் குடும்பத்தாருக்கு எங்கள் ஊரைக் காண்பிக்க முடிவு செய்தேன்.23-ம் தேதி கும்பாபிஷேகம் என்றிருந்ததால் , பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கும் சமயம் என்பதா 11-ம் தேதி நடந்த பூத்தேர்த் திருவிழாவிற்கு போயிருந்தோம். கூடவே என் மனைவியின் குலக் கோவிலான பரியாம்பத்த பகவதி “ கோவிலுக்கும், எங்கள் குலக் கோவிலான “ மணப்புளி பகவதி “ கோவிலுக்கும் குருவாயூர் கிருஷ்ணன் கோவில், மற்றும் திருச்சூர் வடக்கு நாதர் கோவில், திருவம்பாடிக் கோவில் என்றெல்லாம் சென்றிருந்தோம். கோவில் மட்டும் போனால் இளைய தலைமுறையினர் விரைவில் சோர்ந்து விடுகிறார்கள் என்பதால். குருவாயூரில்
யானைத் தோட்டத்துக்கும் சென்றிருந்தோம். சில புகைப் படங்கள் எடுத்திருந்தோம்.         
                     

பூத்தேர்.
   .      
         கல்பாத்திவிசுவநாதர் கோயில் கீழிருந்து
கல்பாத்தி கோயில் மேலிருந்து
 கல்பாத்தி புழை
தேரில் பெருமாள்
தேரில் என் பேரன்
எங்கள் பூர்வீக வீட்டில்
எங்கள் பூர்வீக வீட்டில் தற்போது வசிப்பவருடன்
எங்கள் பூர்விக வீட்டின் பின் புறத்தில்
பூர்வீக வீட்டின் பின் புறத்தில்
வீட்டின் உள்- மச்சுக்குச் செல்ல படி
யானைத் தாவளத்தில் பேரனுடன் தாத்தா. 
யானையைக் குளிப்பாட்ட உதவும் பேரன்
குளிக்கும் நீரே குடிக்கவும்
வெய்யிலுக்கு இதமாக...
எங்கு நோக்கினும் யானைகள்.
ஆங்காங்கே எங்கும் யானைகள்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் தேருக்கு எடுத்துச் செல்லும்போது

குருவாயூர் அருகே இருக்கும் புன்னத்தூர் கோட்ட என்னும் யானைத் தாவள்ம்..அங்கே 62-/ யானைகள் கட்டிக் காக்கப் படுகின்றன.ஆண் யானைகளில் தந்தங்கள் இல்லாத யானைகளை “மோழை” என்று கூறுகிறார்கள். அங்கே எடுத்த சில புகைப் படங்கள்..யானையைக் குளிப்பாட்டும் “பாப்பான்கள்” நன்றாக ஆங்கிலம் பேசி விள்க்குகிறார்கள்.

எங்கள் குலக் கோயில் என்று கூறப்படும் மணப்புளி பகவதி கோயிலுக்கும் சென்றிருந்தோம். என் மனைவியின் குலக் கோயிலுக்கும் சென்றிருந்தோம். மாலை இருட்டி விட்டதால் புகைப் படங்கள் எடுக்க முடிய வில்லை. “ பரியாம்பத்த பகவதி காவு “என்று பெயர்.

. .
மணப்புளி பகவதி கோயில் முன் மகனுடன்


பகவதி கோயில் முன் மருமகள் பேரக் குழந்தைகளுடன்

தேரைக் காட்டவும் ஊரைக்காட்டவும் வேரைக் காட்டவும் நான் மிகவும் விரும்பினேன். அவர்கள் வளர்ந்து என் வயது வரும்போது நினைவுகளில் அசை போடும் போது இந்த அனுபவங்கள் மனத்திரையில் வந்து அவர்களின் இதழ்கள் புன்னகையில் விரிவதை நான் இப்போது எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.

எங்கள் பூர்வீக வீட்டில் சில மாற்றங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். திற்ந்த திண்ணை கிரில் கம்பிகள் போட்டு காட்சியளிக்கிறது. திண்ணை அடுத்த ரேழியில் இருந்த பத்தாயம் மூடப் பட்டிருக்கிறது. பின் வரும் தாழ்வாரத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. திறந்த முற்றம் காணவில்லை. கூரை வேய்ந்திருக்கிறர்கள் திண்ணை, ரேழி, தாழ்வாரம் முற்றம் ,மச்சு என்னும் பெயர்கள் கேட்டே பல காலம் ஆயிற்று. இப்போது அங்கு வசிக்கும் திரு. வெங்கடேஸ்வரன் குடும்பத்தாருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------  
  

Sunday, May 20, 2012

எழுதியது கடிதம்.....கடிதம் அல்ல.


                               எழுதியது கடிதம்....கடிதம் அல்ல.
                               -----------------------------------------------
                                                                          ( நண்பனுக்குக் கடிதம் )
அன்பு நண்பா,

              சில விஷயங்கள் நேரில் பார்க்கும்போது பேச முடிவதில்லை. எண்ணங்களை ஒருமுகப் படுத்தவோ, எண்ணுவதைக் கோர்வையாகக் கூறவோ முடிவதில்லை. செயல்களினாலும் நிகழ்வுகளாலும் தாக்கப் பட்டு , அதிலிருந்து மீளவே நேரம் இருக்கவில்லை. இருந்தாலும் இப்படி எழுதுவதன் மூலம் மனதளவில் பாதிக்கப் பட்டதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உனக்கும் எனக்கும் எத்தனை ஆண்டு பரிச்சயம். ஐம்பது வருடங்களுக்கும் மேலிருக்கும். என் திருமண நாளில் மேடையில் தோழனாக நின்று ஆதரவு கொடுத்தபோது நீ எந்த பணியிலும் இருக்கவில்லை. சில நாட்கள் கழித்து பணி தேடி நீ ஒரு வளைகுடா நாட்டுக்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டேன்.
நீ பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்றவனல்ல என்று எனக்குத் தெரியும். இல்லாவிட்டால் என்ன.? உழைக்கத் தயங்காதவன், வாழ்வில் உயர்வதை தடுக்க முடியுமா.? நானும் என் அல்லல்களுக்கிடையில் உன்னைப் பற்றிய செய்திகளை தேடிப் பெறவில்லை..கிடைத்த செய்திகள் நீ வெகுவாக வளர்ந்து ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பதைத் தெரிவித்தன. நீ எந்த அளவு வளர்ந்திருக்கிறாய் என்பதை ,நான் என் நண்பன் , உன் தம்பியின் மகனுடைய திருமணத்துக்கு வந்தபோது கண்டேன். வளைகுடா வேலையை விட்டு நீ நாடு திரும்பி இருந்தாய். என்னை உன் வீட்டுக்கு அழைத்தாய். வீடா அது.? ஒரு கல் கோட்டை அல்லவா கட்டியிருந்தாய். வீட்டின் தரை எல்லாம் இரண்டு அங்குல கனத்திற்கு கம்பளம் போட்டிருந்தாய். டாய்லெட்டில் சிறு நீர் கழிக்கவே தயக்கமாய் இருந்தது..(அங்கும் கம்பளம்.)வீட்டின் முன்னால் மெர்ஸ்டீஸ் பென்ஸ் கார். மலைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் நீ மட்டும் நீயாகவே இருந்தாய். செல்வ செழிப்பை எல்லாம் பறை சாற்றி கொண்டிருந்தன, அக்றிணைப் பொருள்கள். ஆனால் ஒரு வார்த்தையாவது பெருமையாக நீ பேசவில்லை. உன் எண்ணமெல்லாம் நினைவலைகள் தவறி (ALZEIMER ) ஆதரவு இல்லாமல் இருக்கும் சாதாரண மக்களுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே இருந்தது.

 அன்று உன்னிடம் பேசும்போது அதில் எவ்வளவு ஈடுபாடு இருக்கும் என்று நானும் சிந்திக்கவில்லை. என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவன் நீ. உள்ளம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்குமா என்று நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்ய முயன்றாலும் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் எவரையும் பல முறை சிந்திக்க வைக்கும்.

கடந்த வாரம் உன்னைச் சந்தித்தபோது, என்னையே என்னால் நம்ப முடியவில்லை. நினைத்ததை சாதிக்க வேண்டிய எல்லா தொடக்கப் பணிகளையும் துவங்கி, சாதனையின் படிக்கட்டில் இருக்கிறாய். என் இள வயதில் என்னென்னவோ செய்ய எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது, என்னால் முடிந்ததெல்லாம் கனவுகளைக் கதையாக எழுதியதுதான்.

இப்பொழுது உன் அரவணைப்பில் பத்து பேர் நினைவலைகள் தவறி ஆதரவு அற்றவர்கள்  பாதுகாப்பாக இருக்கிறார்கள். நான் அங்கு வந்திருந்தபோது ஒரு மூதாட்டி அவருக்கு தேனீர் தரவில்லை என்று புகார் எழுப்பிக் கொண்டிருந்தார். உண்டதும் குடித்ததும் கூட மறந்து விடும் பாவப் பட்டவர்கள், உன் அரவணைப்பில். உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன் நண்பா.!

வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சம்பாதித்தது விரயமாகிறது என்ற எண்ணத்தில் எதிர்ப்புத் தெரிவித்த வாழ்க்கைத் துணைவியையும்  விட்டுக் கொடுக்க முடியாமல் , கொண்ட கொள்கைப் பிடிப்பிலிருந்தும் வழுவ முடியாமல் உன் சொத்தில் பெரும் பகுதியை அவருக்குக் கொடுத்து  நீ தனியாக வந்து, நீ நடத்தும் “ காருண்ய “ இல்லத்திலேயே ஒருவனாக வாழ்க்கை நடத்துவது எஙஙனம் சாத்தியமாகிறது நண்பா.? அன்று நீ கூறியது இப்போதும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “என்றாய்..எனக்கு காந்திஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “ தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான் “

இப்போது இயங்கும் காருண்ய சிறகுகள் “ இன்னும் விஸ்தரிக்கப் பட வேண்டும் என்று அதற்கான பணிகளில் நீ ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். குறைந்தது ஐம்பது பேராவது தங்கும் வசதிக்காக கட்டிடப் பணிகள் துவங்கி இருக்கிறாய். உடன் மருத்துவ வசதி இருக்க வேண்டி மருத்துவர் தங்கவும்
ஏற்பாடு செய்யும் பணியில் இருக்கிறாய். என்னதான் தனி மனிதனாக முயற்சி செய்தாலும் “ தனி மரம் தோப்பாகாது “ என்று உணர்ந்திருக்கிறாய். உன் சேவையில் ஊதியமின்றி பணி புரிய அங்கிருந்த ஒரு தம்பதியினரையும் அறிமுகம் செய்து வைத்தாய். உணவு வகையறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு தற்சமயம்  குறைந்தது ரூ 300-/ தேவைப்படுவதாகவும் மனம் உள்ளவர்கள் விரும்பி உதவினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்றும் கூறி இருந்தாய்.

குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் உன் பணிகளை குன்றின் மேல் விளக்காக்க நான் என்ன செய்ய முடியும் ? முதல் பணியாக வலையில் உனக்கெழுதும் இக்கடிதத்தை இடுகையாக இடுவேன். படிக்கும் நல்ல உள்ளங்கள் கை கொடுக்க மாட்டார்களா என்ன. ? எனக்கு நீ உன்னை  மற்றவர்கள் தொடர்பு கொள்ள சரியான விலாசம் தெரியப் படுத்தவும் இராமனின் பாலம் கட்டும் பணியில் அணிலின் பங்கு இருந்தது போல் என் பங்கு இருக்குமா.? காலம் தான் தெரியப் படுத்த வேண்டும் .உரிமை எடுத்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.தவறில்லையே.

உனக்காகவும் உன் பணிகள் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டுவேன்.
                               இப்படிக்கு உன் அன்பு நண்பன்,
                                ஜீ.எம். பாலசுப்பிரமணியம்.  

CONTACT ADDRESS:-
                  P.Madhusudhan.
                  "SIRAKUKAL"
                  C/O "KARUNYA"
                  GERIYATRIC CARE CENTER, 
                  KARUNGKANAPPALLI POST, 
                  NEAR PALGHAT POLYTECHNIC
                  PALGHAT DISTRICT,
                  KERALA.       . 


மின் அஞ்சல் முகவரியும் தொலைபேசி எண்ணும் பின்னால் சேர்க்கப்பட்டது. 


மின் அஞ்சல்  ----- madhu37@gmail.com


தொலைபேசி எண்கள் ------- 0491/2571090


                                                              09447408252


--------------------------------------------------------------------------------------------------------------Friday, May 18, 2012

கடின உழைப்பிற்கு மாற்றில்லை..


                                 கடின உழைப்பிற்கு மாற்றில்லை...
                                    -----------------------------------------


அவன் வேலை தேடி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்றான்.அவனை ஆஃபீஸ் பாய் வேலைக்காக சோதித்த மனிதவள மேலாளர், அவனை அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னார். அவன் அவருக்குத் திருப்தியாகச் செய்து முடிக்கவே வேலையில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி நியமன ஆர்டர் அனுப்ப அவனது ஈ-மெயில் முகவரி கேட்டார். அவன் தன்னிடம் கணினி இல்லையென்றும் மின் அஞ்சல் முகவரி இல்லையென்றும் கூறினான்..மின் அஞ்சல் முகவரி இல்லாதவன் இருப்பவனே அல்ல என்று கூறி அவனுக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டார்.

அவன் கையில் இருந்ததோ வெறும் பத்து டாலர். யோசித்துக் கொண்டே சென்றவன் சூப்பர் மார்க்கெட் போய் ஒரு பெரிய கூடைத் தக்காளி வாங்கினான். அதை வீடு விடாகச் சென்று இரண்டு மணி நேரத்தில் விற்று முடித்து கையிருப்பைப் பார்த்தபோது அது இரட்டிப்பாகி இருந்தது கண்டான். மறுமுறையும் சென்று இன்னுமிரு கூடைத் தக்காளி வாங்கி இன்னும் பல வீடுகளுக்கும் சென்று விற்றான்.கையிருப்பு மும்மடங்காகி இருந்தது. மறு நாளும் அதற்கு பின் வந்த நாட்களிலும் அதிகாலை சென்று பின் மாலை வரை தக்காளி வியாபாரம் செய்தான். வெகு சீக்கிரத்தில் ஒரு வண்டியும் , பின் ஒரு வானும் வாங்கி தக்காளி வாங்கி டெலிவரி செய்தான். ஐந்து வருட காலத்தில் அவன் உழைப்பின் பலனாக நிறைய டெலிவரி வான்கள் வாங்கி , வியாபாரத்தின் மூலம் கணிசமாக சம்பாதித்திருந்தான்

அவன் சம்பாத்தியத்துக்கு காப்பீடு செய்ய வேண்டி ,ஒரு இன்சூரன்ஸ் ப்ரோக்கரை அணுகினான்..அந்த ஏஜெண்ட் பதிவுப் பத்திரங்களை அனுப்ப அவனது மின் அஞ்சல் முகவரி கேட்டான்.அவன் தனக்கு மின் அஞ்சல் முகவரி இல்லை என்றான். இதைக் கேட்டதும் அந்த ஏஜெண்ட் மின் அஞ்சல் முகவரி இல்லாமலேயே இவ்வளவு பணம் சேர்க்க முடிந்ததென்றால்  மின் அஞ்சல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று ஆச்சரியத்தோடு வினாவினான்.

அவன் சற்று நேரம் சிந்தித்து “ மின் அஞ்சல் முகவரி இருந்திருந்தால் நான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாக இருந்திருப்பேன் “ என்று கூறினான்.

( எனக்கு மின் அஞ்சலில் வந்திருந்த கதையை தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கிறேன். THERE  IS  NO  SUBSTITUTE  FOR HARD WORK ! )
-------------------------------------------------------  .

Wednesday, May 16, 2012

வாசமில்லா மலரிது...


                                               வாசமில்லா மலரிது...
                                              -------------------------------


முன்பொரு நாள் வெட்டிப் பின் நட்ட
மல்லி, முல்லை, வெள்ளை ரோஜா செடிகள்.
பூக்காதது கண்டு, செடிகளிலும் மலடு உண்டா
என்றே நான் அங்கலாய்த் திருந்தேன்.
ஒரே ஒரு செந்நிற ரோஜா பூத்தது
கண்டு பூரித்தது மனம்.

வீட்டில் இருப்பதோ சொற்ப இட்ம்
தோட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
அரளி செம்பருத்தியுடன் பெயர் தெரியாச்
செடிகளும் உண்டு.பூக்கும் ஓரிரு பூக்களும்
கொள்ளை போகின்றன. பூப்பதே என்னைப் பறி
என்பதற்காகவா.? பூப்பறித்து செடி அழுவதைவிட
பூக்காமல் இருப்பதே நலம் என்றொரு
பின்னூட்டம் இருந்ததாக நினைவு.
பன்னிரு ஆண்டுகளுக்கொரு முறை பூக்குமாம்
குறிஞ்சி மலர்.செடிவைத்து பூ பூத்துக் கண்டதில்லை.
ஆனால் நான் நடாமலேயே எனக்கேத் தெரியாமல்
ஒரு செடி பூக்கிறது;வருடம் ஒரு முறை; ஒரே ஒரு பூ.!
ஆண்டு முழுதும் செடியே காணாது;
ஏப்ரல் முடிவில் செடி துளிர் காட்டும்.
வளரும் வேகம் நினைப்பில் அடங்காது.
மே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்
பின் வாடிச் சுருங்கி விடும்.
யார் சொல்லிக் காலம் அறியும் அச்செடி.?
யார் சொல்லி ஒரே பூ பூக்கும் அச்செடி?
காணக் கொள்ளை அழகு.மே மாதம் பூப்பதால்
மே மலரே என்றழைக்கட்டுமா.?


மதில் ஓரம் வாழை இலையின் தங்கை போல்
சிறு இறகிட்டு வளரும் ஒரு செடிக் கூட்டம்.
பூவின் லட்சணம் இதுதான் என்று யாரால் கூற இயலும்.?
வாசமில்லா மலரது, வெட்ட வெட்ட துளிர் விட்டு
வளர்ந்து பூக்கும் இதன் பெயரும் எனக்குத் தெரிய வில்லை.

அதிகாலை நான்கு மணிக்கு மலரும் பூ ஒன்று கண்டேன்.
பகலில் வாடி நிற்கும் அது விடியலில் நிமிர்ந்து நிற்கும்.
விசாரித்தறிந்தேன் , அதன் பெயர் பிரம்ம கமலமாம். !

பூவையருள் ஒரு தோழி சசிகலா,பூ பற்றி பதிவு எழுதி
இருந்தார்,படங்களுடன் பார்ப்பதற்கும் இனிதாக.
அதில் இல்லாப் பூக்கள் என் பதிவில்.
படம் கண்டு பெயர் சொன்னால் கூடுதலாய்
ஒரு தகவல் அறிந்தவன் ஆவேன். 
----------------------------------------
( மே மலரின் முதல் படம் நன்கு விரிவதற்கு முன் எடுத்தது.) 


Monday, May 14, 2012

முயற்சி திருவினையாக்கும்...


                                      முயற்சி திருவினையாக்கும்...
                                     ----------------------------------------


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், சிறப்பான முறையில் வாழ்வதற்கும் உதவுவது VALUE SYSTEMS என்று சாதாணமாகச் சொன்னால் அது பலன் தருமா என்பது சந்தேகமே..இதை உணர்ந்த நம் முன்னோர்கள் நம் புராணங்களின் மூலமும், இதிகாசங்களின் மூலமும் ( வாழ்வியலைப் பயனுள்ளதாக இருக்கச் செய்ய ) ஏராளமான கதைகளைச் சொல்லிச் சென்றுள்ளார்கள். கதைகளை கதைகள் என்ற மட்டில் அல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உறுதுணைகள் என்று கொண்டோமானால் பலன் நமக்கே.

முயற்சி திருவினையாக்கும் என்ற படிப்பினையை ஒரு கதை மூலம் விளக்கி இருப்பதை இங்கே காணலாம்.

ஒரு காலத்தில் சகரர் என்ற மன்னர், தன் ஆளுமையயும் பராக்கிரமத்தையும் காண்பிக்க அசுவ மேத யாகம் செய்தார்.யாகம் பூர்த்தியாக அவர் அனுப்பும் குதிரை உலகில் வலம் வரும்போது யாராலும் கட்டப் படாமல் இருக்க வேண்டும். த்ரிடதன்வா என்ற மாவீரனுடன் குதிரை பவனி வர அனுப்புகிறார். அவரிடம் பொறாமை கொண்ட இந்திரன் மாயமாக அந்தக் குதிரையைக் கடத்திச் சென்று கபில வாசுதேவர் எனும் முனிவரின் ஆசிரமத்தில் விட்டு விடுகிறான்.

காணாமல் போன குதிரையைத் தேட சகர மன்னர் தன் 60,000-/புத்திரர்களைப் பணிக்கிறார். அவர்கள் அவர்களது சக்தி மதர்ப்பில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் துன்புறுத்துகிறார்கள். முனிவர்கள் பிரம்ம தேவனிடம் முறை இடுகிறார்கள்..பிரம்ம தேவன் இந்த சகர புத்திரர்கள் கபில முனிவரின் கோபாக்கினிக்கு இரையாகி சாம்பல் ஆவார்கள். என்று கூறுகிறார். யாக குதிரையைத்தேடி பாதாளம் சென்ற சகர புத்திரர்கள் கபில வாசுதேவ முனிவரின் ஆசிரமத்தில் குதிரையைக் காண்கிறார்கள். கண்டு கபில முனிவரைத் தாக்கத் துவங்குகிறார்கள். அவர் தவ வலிமையால் தன் உக்கிரப் பார்வையாலேயே அவர்களை எரித்துச் சாம்பலாக்குகிறார்.

சகர மன்னர் தன் பேரன் அம்சுமானை யாகக் குதிரையையும் புத்திரர்களையும் தேட அனுப்புகிறார். அம்சுமான் யாகக் குதிரையும் சாம்பல் குவியலையும் கண்டு குதிரையுடன் திரும்பி வர அசுவமேத யாகம் பூர்த்தி செய்யப் படுகிறது
சாம்பலான சகர புத்திரர்களைக் கரையேற்ற கங்கா தீர்த்தத்தால் சம்ஸ்காரம் செய்யப் பட வேண்டும். கங்கையைக் கொண்டு வருவது சாமான்யமா.?அம்சுமானுக்குப் பிறகு அவன் மகன் திலீபன் பின் அவன் மகன் பகீரதன் எனக் காலம் கழிய பித்ரு கடன் நிறைவேறாத நிலையை மாற்ற
பகீரதன் பிரம்மனை வேண்டி பஞ்சாக்கினி தவம் செய்கிறான். ஆகாய கங்கை பூமிக்கு வந்தால் அதன் வேகத்தை கட்டுப் படுத்த முடியாது. அதற்கு சிவ பெருமானின் உதவி வேண்டும் என்று அறிந்து மீண்டும் கடுந்தவம் இயற்றுகிறான்.இறங்கி வரும் கங்கையை தன் ஜடாமுடியில் தாங்குவதாக சிவபெருமான் கூற மஹா கர்வத்துடன் எல்லாவற்றையும் அழிக்கும் நோக்கில் கங்கை பாய , மஹேஸ்வரன் தன் ஜடாமுடியில் கட்டி விடுகிறார். சிவனின் தலையில் கட்டுண்ட கங்கை வராமல் தங்களது பித்ருக்களுக்கு நீர்க்கடன் கழிக்க முடியாமல் மீண்டும் பகீரதன் சிவனை வேண்ட, கங்கையை ஏழு கிளைகளாக  சிவபெருமான் வெளியேற்ற, கிழக்கு நோக்கி ஹலாதினீ,பாவனீ, நளினீ என்றும் மேற்கு நோக்கி சுசக்ஷி,ஸீதா, ஸிந்து என்றும் கங்கை பிரிந்து பாய ஒரு கிளை பகீரதனைத் தொடர்ந்து பாகீரதியாகப் பாய்ந்தது. பிந்துசரசில் பாய்ந்து வந்த கங்கை வரும் வழியில் முனிவர்களின் ஆஸ்ரமங்களை மூழ்கடிக்க ஜஹனு என்னும் முனிவர் கோபம் கொண்டு கங்கையைக் குடித்துவிட  பிறகு அனைவரின் பிரார்த்தனையை ஏற்று  காது வழியே வெளி யேற்றுகிறார். இதனால் கங்கைக்கு ஜாஹன்வீ என்ற பெயரும் உண்டு,.பகீரதனால் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு கொண்டு வரப் பட்ட கங்கை சகர புத்திரர்களின் அஸ்தியில் பாய்ந்து முக்தி அளிக்கிறாள். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு பகீரதப் பிரயத்தனம் ஒரு எடுத்துக் காட்டு.

கொசுறு:-1935-ல் ஜகத் குரு சங்கராச்சாரியார், கபிலாரண்யா என்று புராணங்களில் கூறப்படும் இடம் அமெரிக்காவின் தற்போதைய CALIFORNIA வைக் குறிக்கும் என்றும், சகர புத்திரர்கள் சாம்பலான இடமே ASH ISLANDS என்றும் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார். கலிஃபோர்னியாவின் அருகே இருக்கும் ஹார்ஸ் ஐலாண்ட்ஸ்-- , பூமிப்பந்தில் இந்தியாவில் இருந்து ஒரு ஊசியை நுழைத்தால் அது நேராகக் கலிஃபோர்னியாவின் வழியாக வெளிவரும், என்றும் , இது சகர புத்திரர்கள் பூமியைத் தோண்டி  பாதாளத்தில் கபிலாரண்யத்தில் யாக குதிரையைக் கண்டனர் என்னும் கதையுடன் ஒத்துப்போவது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம் அல்லவா.! இக்காலத்தில் சாதுக்களுக்கு கலிஃபோர்னியாவில் மதிப்பு அதிகமாமே...       

  

Tuesday, May 8, 2012

தரம்....வாழ்க்கைத் தரம்.

                                                 
                                                 தரம் ....வாழ்க்கைத் தரம்.
                                                 ---------------------------------

ஒரு நிலைக் கண்ணாடி முன் நகர்ந்து செல்பவர்கள், தங்களை ஒரு முறையேனும் பார்க்காமல் நகர்கிறார்களா என்பது சந்தேகமே.இப்படி இருக்கும்போது, நம்மைச் சுற்றிலும் கண்ணாடிகள் பதித்திருக்க நம் முக, வடிவ அழகை ஆராதிக்காமல் இருக்க முடியுமா என்ன.? இன்று காலை நான் முடி வெட்டிக்கொள்ள ஒரு முடி திருத்தும் அழகு நிலையத்துக்கு ( பார்பர் ஷாப் ) சென்றிருந்தேன். எனக்கு முன்னே இன்னும் இருவர் காத்திருந்தனர். என் முறை வரக் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். சும்மா உட்கார்ந்திருக்கும்போது ஏகப்பட்ட எண்ணங்கள். முடி திருத்தகங்களில் எத்தனை வகைகள். இருந்தாலும் கடைசியில் நாம் இழக்கப் போவது என்னவோ நம் முடியும் சில ரூபாய்களும். இழக்கும் முடி வேண்டுமானால் ஒரே அளவு இருக்கலாம்.ஆனால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய பணம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. நான் என் வீட்டருகே இருக்கும் பார்பர் ஷாப்புக்கு வாடிக்கையாகச் செல்வேன். வெறுமே முடி வெட்ட ரூபாய் 30-/ வசூலிப்பார். முக ஷவரமும் சேர்த்து ரூ. 50-/ எப்போதுமே நான் செல்ஃப் ஷேவிங்.ஆதலால் வெறுமே முடி மட்டும் திருத்திக் கொள்வேன்.கவனித்து நன்றாகச் செய்யுங்கள்என்று மட்டும் கூறுவேன். வேறு ஏதாவது சொல்ல முனைந்தால் அவர் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வாரோ, இருக்கும் நான்கு முடிகளும் பார்க்க சகிக்காமல் போய்விடும். முடி திருத்தப் போகும் போது சாதாரணமாகவே என் ஒரு பக்கத்தில் அதிக முடி வளர்ந்திருப்பதுபோல் இருக்கும் .போனதடவை போனபோது சரியாகச் செய்யாததன் விளைவே என்று நமக்குத் தெரியும். இதை அவரிடம் ( மொழி சரியாகத் தெரியாத நிலையில் )சொல்லப் போனால் அவருடைய திறமையை நாம் குறை கூறுகிறோமோ என்று நினைத்துக் கொள்வார்.அதன் பலனாகத் திருத்தப் பட்ட உடனேயே அந்த வித்தியாசம் தெரியும்படி முடி வெட்டி இருப்பார். ஆகவேதான் பொதுவாக நன்றாகச் செய்யுங்கள் என்று கூறுவேன். சரி இவர்தான் இப்படி என்றால் ஒரு முறை என் மகனுடன் அவனிருக்குமிடத்தில் முடி திருத்தப் போனேன்.எப்போதும் போல்தான் திருத்திய பிறகு என் தலையும் முடியும் இருந்தது.ஆனால் என் மகன் அதற்குக் கொடுத்தது ரூ.100-/.
இந்த அளவு வித்தியாசம் ஏன் என்று யோசித்தபோது உண்மையிலேயே எனக்குத் திருப்திகரமான பதில் கிடைக்க வில்லை. அங்கும் சுழலும் நாற்காலி, கண்ணாடி, கத்திரி, சீப். வகையறாக்கள். இங்கும் அதுதான். அங்கும் துணி சுற்றி, ஆடாது அசையாது உட்கார வேண்டும். இங்கும் அதுதான். என் மகனோ, என் பேரனோ, இங்கு வந்து முடி திருத்த மாட்டார்கள். ரூ. 30-/ வாங்கித் திருத்தப் படுவதால் அது சரியாக இருக்காது என்ற எண்ணம். தரம் என்பது வாடிக்கையாளரின் திருப்தி என்று சொல்லிக் கொடுக்கப் பட்டவன் நான். அதிக பணம் கொடுத்து சேவை பெறுவதுதான், திருப்தி அளிக்கிறதோ.?

எனக்கு சாதாரணமாகப் பிடித்த நிறத்தில் நல்ல துணி வாங்கித் தைத்து உடுத்துவது பிடிக்கும். சாதாரணமாக உடுத்த மீட்டர் ரூ.200-/ லிருந்து ரூ.250-/க்குள் துணி கிடைக்கும். ஒரு ஷர்ட் தைக்க என்னுடைய வாடிக்கை டைலர் அதிக பட்சமாக ரூ75=/ ம்.ஒரு பேண்ட் தைக்க ரூ.150-/ ம் வாங்குவார். நம் அளவுக்குத் தைத்துக் கொடுப்பார். இதையே ஆயத்தக் கடையில் வாங்கினால், ஒரு ஷர்ட்டுக்கு ரூ. 200-/ க்கு மேலும் ஒரு பேண்ட்டுக்கு ரூ.250-/ க்கு மேலும் செலவு செய்ய வேண்டி வரும். என் மக்கள் ஆயத்த உடைகளையே விரும்புகிறார்கள்.அதிலும் ப்ராண்டெட் உடைகள் இன்னும் விலை அதிகம். அதிக பணம் கொடுத்து பொருளை வாங்குவதுதான் திருப்தி தருகிறதோ.?

நாம் சாதாரணமாக உண்ணும் இட்லி, தோசை போன்றவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டால், ஐந்து ஆறு என்று உள்ளே போகும். ஒரு மாற்றத்துக்கு ஓட்டலில் போய் உண்டால் இரண்டு இட்லியுடனோ, ஒரு தோசையுடனோ திருப்தி அடைந்து திரும்பி விடுகிறார்கள்.  மத்திய தர ஓட்டல்களில் ஒரு தோசை ,காப்பி குடித்துரூ.200-/ ( நான்கு பேருக்கு ) கொடுத்து திருப்தியடைந்து வயிறு நிறைந்தவர்கள் போல் வருகிறார்கள். இதுவே சற்று POSH ஆன ஓட்டல்களுக்குப் போனால் நம் சொத்தின் கையிருப்பு குறையும். ஒரு முறை வலைப்பூவில் ஒருவர், சென்னையில் உணவு மிகவும் சீப் என்றும் ஒரு வேளைச் சாப்பாடு இருவருக்கு ரூ.600-/க்குள்தான் என்றும் எழுதி இருந்தார்.அதற்கு நான் பின்னூட்டமிடும்போது, ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக வருமானமே ரூ.300-/ க்கும் குறைவு எனும்போது ,அது எப்படி சீப்பாகும் என்று எழுதினேன். அதற்கு பதில் கூறும் வகையில் நான் குறிப்பிடும் ஏழைகள் ஒரு நாளைக்கு டாஸ்மாக்கில் ரூ.600-/ க்கு மேல் செலவு செய்கிறார்கள் என்று பதிலடி இருந்தது. அதிக பணம் கொடுத்து சேவை பெறுவதுதான் திருப்தி தருகிறதோ.?

ஒரு கிலோமீட்டர், இரு கிலோமிட்டர் தூரத்தை நடந்து செல்வதை விட ஆட்டோவில் அல்லது காரில் போவதே திருப்தி தருவதாக எண்ணுகிறார்கள்.

ஏறத்தாழ ஒரே வித சேவைக்கும் அதிகப் பணம் கொடுத்துப் பெறுவதே, தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும் என்று எண்ணுகிறார்களோ. ? ஆரம்பக் கல்விக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வதைப் பெருமையுடன் எண்ணும் இவர்கள்தான் அரசு நடத்தும் பள்ளிகளை உதாசீனப் படுத்துகின்றனர். அரசு நடத்தும் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் தரக் குறைவானவர்கள் என்று எண்ணுகிறார்களா.?

ஏதாவது சொல்லப் போனால், உனக்கு வயதாகிவிட்டது, புரியாது. இது தலைமுறை இடைவெளி என்று ஒதுக்குகிறார்கள்.

வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் எனக்கு திருப்தியின் CRITERIA புரிய மாட்டேன் என்கிறது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------  .


( 2010-ம் ஆண்டு நவம்பரில் “ தரம் எனப்படுவது யாதெனில் “ என்ற பதிவும் நான் எழுதியதே.! )
  

Sunday, May 6, 2012

மணவினை சிறைவாசம்.?


                                            மணவினை சிறைவாசம்..?
                                           ----------------------------------------


கண் கலங்கி நிற்கும் கணவனிடம் கைப் பிடித்த மனைவி
என்னால் உன் மன அமைதி குலைந்த தென்றால்,
நீ விரும்பும் பெண்ணோடு, உனை விரும்பும் அவளோடு,
ஒரு நாளோ ஒரு வாரமோ தாராளமாய் இருந்து வா”என்றாள்.


கேட்டவன் தன் காதுகளை நம்ப வில்லை.-தன்னையே
ஒரு முறை கிள்ளிப் பார்த்தான்..மனைவியின் அனுமதி
கிடைத்தாயிற்று. நான் விரும்பி ,எனை விரும்பும்
பெண்ணின் கணவர் இதற்கு உடன்படுவாரா.?

எண்ணித் துணிக கருமம் என்றனர் ஆன்றோர்.
செயல்பட வேண்டியதுதானே.துணிந்து சென்றங்கு
அனுமதி கேட்டால் செருமுனைபோலாகுமோ-பயந்தான்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே எனத் துணிந்தான்.

வந்தவனைக் கண்டதும் வாவென்று வரவேற்றார்.
அமர வைத்து ஆசுவாசப் படுத்திய பின் கேட்டார்
வரவின் நோக்கம்தான் என்னவென்று.- தயங்கித்
தயங்கிக் கேட்டான் அவர் தாரத்தை தன்னுடன் அனுப்பச் சொல்லி.தயக்கம் எதற்கு.? அவள் விரும்பி வருவதானால்
தாராளமாய் அழைத்துப் போ,அனுமதி எதற்கு.?
நீயாயிற்று அவளாயிற்று, நடுவில் நானெதற்கு
அன்பு நாடி நீ வர மனம் வாடச் செய்வேனா என்றார்.

அனுமதிக்குப் பங்கம் இல்லை என்றறிந்தவளும்
கண்ணசைவில் கருத்தறிந்து உடன் செல்லத் துணிந்தாள்.
நாளொரு இடமாய் பொழுதொரு விதமாய்
சின்னச்சின்ன ஆசைகள் சிறப்பாக நிறைவேற
டப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்பி
மனம் எல்லாம் றெக்கை கட்டிப் பற்ந்தவன்
ருவாரம் கழிந்தபின் தரையில் காலூன்ற
அன்று போல் என்றும் ஏன் இல்லை எனக்
கேள்வி கேட்டுப் பதில் நாட ,
தாயுடன்  தான் கழித்ததெல்லாம் மணவினைச்
சிறையில் மனைவி ஜெயிலர் தந்த பரோலே
என்றுணர்ந்தவன் துள்ளிக் குதித்தான் கண்டது
கனவென்று அறிந்து நொந்தான் (தெளிந்தான். )       
       
  

Friday, May 4, 2012

வேர் எங்கே....?


                                                     வேர் எங்கே.......?
                                                     ---------------------


அந்நிய  நாடுகளில் வசிப்பவர்களை ( அடிமைகளாக இழுத்துச் செல்லப் பட்டவர்கள், அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள், நாடு கடத்தப் பட்டவர்கள், மற்றும் தன்னிலை உயர்த்திக் கொள்ளத் தானாகச் சென்றவர்கள் ) எவ்வாறு அழைப்பது..? வேரற்றவர்கள் என்றா, வேரறுந்தவர்கள் என்றா, சுயம் இழந்தவர்கள் என்றா, சுறுசுறுப்பானவர்கள் என்றா,? ஏதோ ஒரு கட்டுக்குள் அடங்குகின்றனர். தங்களால் கட்டுப் படுத்த முடியாமல் கடல் கடந்து சென்றவர்களைப் பற்றி இப்போது விவாதிக்க வில்லை. தாய் நாட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றுக்காக, அயல் நாடுகளில் அடைக்கலம் நாடும் நம் நாட்டு மக்களைப் பற்றியே நினைத்து இதை எழுதுகிறேன்.

வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத போது,திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப, பொருள் சேர்க்க அயல் நாடுகளுக்குப் போகிறவர்களில் பலர், தங்கள் சுயத்தை இழந்து, அங்கேயே நிரந்தரக் குடிகளாக மாறுகின்றனரே, அவர்கள் நிலையிலிருந்து என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் அப்படிச் சென்ற சிலர்,இங்கு வரும்போது நடந்து கொள்ளும் விதம் பற்றி சில சாம்பிள்கள்,

தாய்நாட்டை தரிசனம் செய்ய வந்தவர் சிலரை சந்தித்திருக்கிறேன். அமேரிக்காவிலிருந்து வந்திருந்த ஒருவர், தன் வயதான தாயிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது..அம்மி, ( அம்மாவும் அல்ல, மம்மியும் அல்ல) எங்கள் சிறு வயதில் செய்வாயே ரைஸ் கேக்  அதை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதுஅந்தத் தாய்க்கு முதலில் விளங்காமல் போக  இவர் விளக்கிக் கூற “ அமெரிக்கா போனதும் இட்லி பெயர் கூட  ரைஸ் கேக்காக மாறிவிட்டதாஎன்று அம்மூதாட்டி வருத்தப் பட்டுக் கொண்டார்.

அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியா ஒரு பின் தங்கிய நாடு. பாம்புகளும் பாம்பாட்டிகளும் வித்தை செய்பவர்களும் நிறைந்த இடம் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து வரும்போது தங்கள் ஊரில் நல்ல சாலைகள் இல்லாதது குறித்தும் வெப்பத்தைக் குறித்தும் குறை படுவது காணும்போது, மிகையாகவே தோன்றுகிறது. திருமணத்தில் வீடியோ எடுத்து நேராகச் சின்னத்திரையில் ஒளிபரப் பாவது கண்டு “ இதெல்லாம் இங்கு வந்து விட்டதா “என்று அமெரிக்க ஸ்டைலில் ஆச்சரியப் படுகிறார்கள்.

இங்கிருந்து அங்கு சென்றவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அந்த தேசத்துக் குடி மக்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களா அமெரிக்கர்களா.? பார்ப்பதற்கு இந்தியர்கள். வாய் திறந்து பேசத் துவங்கினால் அமெரிக்கர்கள். ஒரு முறை என் நண்பனின் குடும்பத்தோடு தாஜ்மஹால் பார்க்கச் சென்றிருந்தோம்.. இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 25-/ (என்று நினைவு). வெளிநாட்டினருக்கு ரூபாய் 250-/நாங்கள் டிக்கட் எடுத்து உள்ளே செல்லும்போது, இவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட காவலாளி-கம்-டிக்கட் பரிசோதகர் அவர்கள் வெளிநாட்டினர்க்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி எங்களைத் தடுத்து நிறுத்தினார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் முரட்டுத்தனம்தான் அதிகரித்தது.அப்போது நண்பரின் மகன் ,அமெரிக்கக் குடிமகன். “ நான் ஒரு இந்தியன்;படிக்கச் சென்றிருக்கிறேன்என்று தமிழில் தட்டுத் தடுமாறி கூற, பரிசோதகர் அனுமதி அளித்தார். ஆனால் அந்தப் பையன் தன்னை ஒரு இந்தியன் என்று கூறியதற்கு மிகவும் வெட்கப் பட்டான்.

வெளிநாடுகளில் தங்கி இருக்கும் நம் நாட்டவர்கள் இங்கு வரும்போது, அரை நிஜார் போட்டுக் கொண்டும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டும் அலங்கோலமாக நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். என் நண்பரின் குடும்பம் திரும்பிச் செல்லும்போது, அவர்களுக்கு நல்ல வேட்டி, பைஜாமா, குருத்தா, போன்றவற்றை வாங்கிப் பரிசாகக் கொடுத்தேன். இதை அங்கே உடுத்திக் கொண்டால் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்றும், அநேகமாக உபயோகப் படுத்த முடியாது என்றும் கூறினர். அயல் நாட்டினர் இங்கு வந்து நம் உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். நம்மவர் நம் பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்.

என்னுடைய இன்னொரு நண்பன் மிகச் சாதாரணமான நிலையில் இருந்தவன்,துபாய் சென்று படிப்படியாய் உயர்ந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக வளர்ந்தான். அவனுக்கு மணமாகி இரு மகன்கள். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படிக்க வைத்தான். சற்று வயதான பின் இந்தியா வந்து செட்டில் ஆனான். ஒரு முறை அவனது மக்களைப் பார்த்துப் பேசும் அனுபவம் ஏற்பட்டது. சிறிதேனும் அன்போ பாசமோ அவர்கள் பேச்சில் தெரியவில்லை. வயதான பெற்றோரை அருகில் வைத்துக் கொள்ளவோ அல்லது அவர்கள் இங்கு வருவதோ அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவரவர் செயலுக்கு அவரவரே முடிவெடுக்க வேண்டும் என்றும் , உடல் நலமில்லாவிட்டால் டாக்டரைத்தான் நாட வேண்டும் என்றும் அவர்களை அல்ல என்றும் கூறினார்கள். எதிர்பாராமல் தந்தை இறந்து விட்டால் , முடிந்தால் கிரியைகள் செய்ய வர முயற்சிப்பதாகக் கூறினர். இதை நான் கூற வருவதன் நோக்கமே வாழ்வின் மதிப்பீடுகள் VALUES- மறைந்து கொண்டே வருவது குறித்த எண்ணத்தில்தான்

இன்னொரு நண்பனின் மகன் இந்தியப் பெண்ணை மணம் செய்யவே பயமாக இருக்கிறது என்றான். காரணம் கேட்டபோது, அவன் தந்தை என்னுடைய “பெண்கள் முன்னேற்றம் “என்ற பதிவு பற்றிக் கூறி இருப்பது அறிந்தேன்.

நான் என் மகனுடன் துபாயில் சில நாட்கள் தங்கி இருந்தபோது, அங்கே அடிமட்டத்தில் வேலை செய்யும் பலரைக் கண்டேன். அங்கே கிட்டத்தட்ட அடிமை மாதிரிப் பணி செய்யும் பலரும் , இந்தியாவில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்களா என்பதே சந்தேகம். வெளிநாடுகளில் இந்தியர்கள் அடங்கி ஒடுங்கி, எல்லா சட்டங்களுக்கும் கட்டுப் பட்டு வாழ்கிறார்கள். குப்பை போடுவதில்லை; எச்சில் துப்புவதில்லை. நான் துபாயிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இளைஞன் என்னருகில் அமர்ந்திருந்தான். நிறைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். அவன் ஊருக்கு அனுப்பியதுபோக சேமித்த பணத்தில் தங்கம் வாங்கிப் போவதாகக் கூறினான். கேட்க மகிழ்ச்சியாயிருந்தது. சென்னையில் விமானத்திலிருந்து வெளியே வரும்போது அவனால் இத்தனை நாள் கட்டுப் படுத்தப் பட்ட இயற்கை சுபாவம் பலமாக வெளிப்பட்டது. அவன் விமானத்திலிருந்து வெளியே வரும்போது காறி உமிழ்ந்து கொண்டே வந்தான்.
---------------------------------------------------
 .


  

Wednesday, May 2, 2012

சிந்தனைப் பரிணாமங்கள்...


                                             சிந்தனைப் பரிணாமங்கள்----
                                             -------------------------------------

                                   (  கேள்வியும் நானே...பதிலும் நானே ..!

கேள்வி:- சிந்தனைப் பரிணாமங்கள் என்று நீ சொல்ல வருவதுதான் என்ன.?

பதில்:-   உலகில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன.எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னாலும் ஏதோ காரணம் இருக்கும். பெரும்பாலும் அந்தக் காரணங்களின் பின் புலத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, சிலரதோ பலரதோ சிந்தனைகள் இருக்கும். இந்த சிந்தனைகளின் காரணங்களைக் கொஞ்சம் விவாதிக்கலாம் என்றுதான் சொல்ல வந்தேன்..

கேள்வி:- நிகழ்வுகளுக்குக் காரணம் சிந்தனை. சிந்தனைகளுக்குக் காரணம் என்று தொடர்ந்து குழப்ப மாட்டாயே..?

பதில்:-   சில புரியாத விஷயங்கள் குழப்பம் போலத் தோன்றும். ஆனால் குழப்பும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை.

கேள்வி:- சரி, எந்த நிகழ்வுக்கு எந்த சிந்தனை என்று குழப்பப் போகிறாய், மன்னிக்கவும் விளக்கப் போகிறாய்.?

பதில்::-   பல காலமாக என் மனசில் இருந்து வரும் ,நம்முள் இருக்கும் ஏற்ற தாழ்வுகள், நிகழ்பவை என்றும், அதற்குக் காரணம் காணும் முயற்சியே இது என்றும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி:- ஏற்ற தாழ்வென்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரு போலத்தான். ஆனால் வளரும்போது, வளர்க்கப் படும்போது ஏற்ற தாழ்வுகள் பல ரூபங்களில் தென்படுகின்றன.

கேள்வி:- பிறக்கும்போதே குழந்தைகள் ஏற்ற தாழ்வுடன் தானே பிறக்கின்றன, வசதியான குடும்பம், வசதி இல்லாத குடும்பம், படித்த குடும்பம், படிக்காத குடும்பம் என்ற பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது.இதற்கான காரணங்களை ஆராயப் போய், விடை காண முடியாமல் அவரவர் விதி, பூர்வ ஜென்மபலன் என்று எதையாவது சொல்லித் தப்பிக்காதே. இதற்கும் மேற்பட்ட காரணங்களை கண்டு பிடித்துச் சொல்லப் போகிறாயா.?

பதில்:-  விடை காண முடியாத கேள்விகள் என்று கூறித் தப்பித்துக் கொண்டால், இதற்குத் தீர்வு இருக்க முடியாதே. இத்தனை வருட வாழ்விலும்,அனுபவத்திலும் நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல முயற்சிக்கிறேன். பிறக்கும்போது இல்லாத சமத்துவத்தை வளரும்போது ஏற்படுத்திக் கொடுத்தால் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் போகலாம்.

கேள்வி:- அது நடக்கக்கூடிய காரியமா.?

பதில்:-   அதைத்தான் சிந்தனைகளின் பரிணாமத்தை அறிந்து கொள்வதன் மூலம் தீர்க்கலாம் என்கிறேன்.

கேள்வி:- சரி, காரண காரியங்கள் என்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   இதற்கு நாம் கொஞ்சம் பழைய காலங்களில் சஞ்சரிக்க வேண்டும். மனிதன் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறிய காலத்துக்குச் செல்வோம். உலகின் பல பாகங்களில் மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நம் புரிதலுக்கு அது தேவை இல்லாதது. மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட்டு, குழுக்களாக மாறி வசிக்கத் தொடங்கிய காலத்தில் எதிர்பட வேண்டிய இடர்கள் ஏராளம் இருந்தன. உணவின்றி ,உடையின்றி எக்காலமும் அதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். விலங்குகளை வேட்டையாடி காய் கனி குருக்களை உண்டு வாழ்க்கை நடத்தியவனுக்கு இயற்கையே எதிரியாகத் தோற்றமளித்தது. மழையும் பனியும் வெயிலும் அவனுக்குப் புரியாததாயிருந்தது. அந்தப் புரியாத காரியங்களை நிகழ்த்துபவனுக்கு ப்ரீதி செய்ய வேட்டையாடி, பொறுக்கிக் கண்டெடுத்த பொருட்களை, இனம் தெரியாத , முகம் தெரியாதவனுக்குப் படைத்தளித்தனர். அவன் மகிழ்ந்து இன்னல்களைத் தவிர்ப்பான் என்று நம்பினர்.

கேள்வி:- சிந்தனைகளின் பரிணாமம் என்று தொடங்கி மனிதனின் பரிணாமம் பற்றிக் கூறுகிறாயோ.?

பதில்:-   ஆதிகால மனிதனின் சிந்தனைகள் எவ்வாறு செயல்பட்டு, பிற்காலத்திய நிகழ்வுகளுக்கு அஸ்திவார மிட்டது என்று சொல்ல வரும்போது,மனித இனத்தின் பரிணாமம் கூறாமல் விளக்கினால் விளங்காது

கேள்வி:- சொல்ல வருவதை முடிந்தவரை சுருக்கமாய்ச் சொல். கேட்பதற்கும் படிப்பதற்கும் பொறுமை உள்ளவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

பதில்:-   புரிந்து கொள்ள முடியாத,புதிரான நிகழ்வுகளை நிகழ்த்துபவனை வணங்கவும் வழிபடவும், அவனுக்கு உருவம் தேவைப் பட்டது. ஆதியில் இருந்த உருவங்கள் அநேகமாக பயமுறுத்தும் வகையில் இருந்திருக்கும். பல இடங்களில் பிற்காலத்தில் விலங்குகளின் உருவத்தை மீன், ஆமை. பன்றி, குரங்கு, சிங்கம்,பாம்பு ,மற்றும் விலங்கும்மனிதனும் கலந்த உருவம் என்றும்.பிறகு காலப் போக்கில் நலம் செய்யும் மனித உருவத்துடனும் வழிபட்டனர். சுருங்கச் சொன்னால் உலகின் எல்லா ஜீவ ராசிகளும் கடவுள் அந்தஸ்தைப் பெற்றன. அவற்றை திருப்தி செய்ய அவற்றுக்குப் பலிகள் கொடுத்து ப்ரீதி செய்தனர். திருப்தி செய்யாவிட்டால் அவை நம்மை அழித்துவிடும்,என்று நம்பினர். இந்த ரீதியிலான சிந்தனைகள் மதங்கள் தோன்றுவதற்கு அடி கோலியிருக்கும். அண்மைக் காலம் வரை இந்த பலி கொடுக்கும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. இதுவே சற்று மேம்பட்டு கடவுள்களை சாத்வீகமாக அணுகிய போது, நிவேதனம் படைப்பதாக மாறி இருக்கக் கூடும்.

கேள்வி:-  பயத்தின் விளைவே மதங்களின் தோற்றம் என்றா கூறுகிறாய்.?

பதில்:-    கிட்டத்தட்ட அப்படித்தான். மதங்களும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் எல்லா மதங்களும் தவறு செய்தால் தண்டிக்கப் படுவாய் என்று முக்காலும் பறை சாற்றுகின்றன. தண்டனைக்கு எதிர்ப்பு பரிசு என்ற விதத்தில் நரகம், சொர்க்கம் போன்ற சிந்தனைகள் உருவாகி இருக்க வேண்டும். அதேபோல், இனங்காண முடியாத அழிக்கும் சக்தி இருப்பது போல் ஆக்கும் சக்தியும் இருக்கும் என்று நம்பி, நல்லது செய்யும் கடவுள்களையும் மனிதன் படைத்தான்.

கேள்வி:- அந்தக் காலத்திலேயே எந்த வினைக்கும் எதிரான ,நிகரான செயல் நடக்கும் என்பதைச் சொல்லாமலேயே ஆதிமனிதன் தெரியப் படுத்தினான் என்கிறாயா.?

பதில்:- பரவாயில்லையே. கொஞ்சம் புரிந்து கொள்கிறாய்.ஆதிமனிதன் தனியாக வேட்டையாடி உணவு தேடி வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப் பட்டான். குழுக்களாக இருந்து செயல் பட்டால் திறமை அதிகரித்து கஷ்டங்கள் குறைவதை உணர்ந்தான். எதேச்சையாக தீ வளர்க்கவும் சமைத்து உண்ணவும் கற்றவன், எறும்புகளிடம் இருந்து வேளாண்மை பற்றி அரிச்சுவடிப் பாடம் கற்றிருக்கலாம் என்று எங்கோ படித்தேன். எறும்புகள் நிலத்தை உழுது, விதை விதைத்து அறுவடை செய்யவில்லை. எறும்புகள் உண்ணும் விதைகள் உள்ள செடிகளைச் சுற்றி இருக்கும் புற்களை அகற்றி அச்செடி வளர உதவுவதைக் கண்ட மனிதன், நீண்ட காலக் கணிப்பில், வேளாண்மை குறித்து அறிந்து விதை விதைத்துப் பயிரிடத் துவங்கி இருக்கலாம்.

கேள்வி:- எதையும் திட்ட வட்டமாகக் கூறாமல் இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று கூறுவது சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றி செல்கிற மாதிரித் தெரிகிறது.

பதில்:-   ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையிலும் சில அனுமானங்களின் அடிப்படையிலும்தான் இருக்க முடியும். 


 கேள்வி:- இதில் சிந்தனையின் பரிணாமம் எங்கு வந்தது.?

பதில்:-   ஆதிமனிதன் குழுக்களாகக் கூடிப் பயிரிட்டு, வேட்டையாடி வசித்தபோது, அதே மாதிரி பல குழுக்கள் இருந்திருக்கும். அதைக் கொண்டு நடத்தத் தலைவன் ஒருவன் தேவைப் பட்டான். ஆதியில் குழுக்களின் அளவு சிறிய தாய் இருந்தபோது, தலைவனும் எல்லாப் பணிகளிலும் ஈடுபட்டான். குழுக்களின் அளவு பெரிதாகிப் போனபோது அதை நிர்வகிக்கவே நேரம் போதாமல், தலைவன் அரசனாக்கப்பட்டான்.அவனுக்கு அதிகாரம் தேவைப் பட்டு அநேக உதவியாளர்களுடன் குழுக்களைக் காப்பதே பணி என்றாகிவிட்டது. அவனுக்கு உதவி செய்பவர் பெரும்பாலும் அவனது உறவினராகவே இர்ந்தனர்.

கேள்வி:- மனிதன் குழுக்களாக வசித்ததும், வேளாண் தொழிலில் ஈடுபட்டதும்  செய்யும் தொழிலிலும் மாற்றம் வந்ததா.?

பதில்.:-  ஆம். தனிமனிதனாக வேட்டையாடி உண்டவரை, அவன் தேவைக்கு மேல் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை.ஆனால் குழுக்களாக சேர்ந்து வேளாண்  தொழிலில் ஈடுபட்ட போது, தேவைக்கு மீறி விளைந்த பொருட்களைக் காக்கவும், பூர்த்தியடையாத மற்ற குழுக்களுக்குக் கொடுக்கவும் வியாபாரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆக நிலத்தில் வேலை செய்து பயிரிட சிலர்,குழுக்களைக் காக்க சிலர், என்று வேலைகள் பங்கிடப் பட்டன. ஆக செய்யும் தொழிலைப் பிரித்துப் பங்கு போட்டுக் கொண்டவர்கள் அத்தொழில் செய்வதற்கென்றே அடையாளப் படுத்தப் பட்டனர். ஆதியில் இனந்தெரியாத சக்தியைத் திருப்தி படுத்த ஏற்பட்ட இடங்கள் கோயில்களாகவும், அந்த வேலையில் ஈடுபட்டவர்கள் பூசாரிகள், அந்தணர்கள் என்று அறியப் பட்டு சக்தி மிகுந்தவர்களாக விளங்கினர். ஆனால் குழுக்களை நிர்வகிக்கத் தலைவன் தேவைப் பட்டபோது, அவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலைக்கு மாறினர். ஆக மனித இனம், நான்கு குழுக்களாகப் பாகு படுத்தப் பட்டு, க்ஷத்திரியர், பிராம்ணர், வைசியர் , சூத்திரர் 
என்று அறியப் பட்டனர்.கேள்வி:- அப்படிச் செய்யும் தொழில் மூலம் அடையாளப் படுத்தப் பட்டதில் உள் நோக்கம் இருந்ததா.? இல்லை இந்த முறையே தவறாக இருந்ததா.?

பதில்:-   இரண்டும் இல்லை. ஆனால் மனிதனின் சிந்தனைப் பரிணாமங்கள் சரியான திக்கை நோக்கிப் பயணப் பட்டதா என்பதே கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆதியில் குழுக்களுக்குத் தலைவனாய் இருந்தவன் சகல அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு, குழுவில் இருந்த மற்றவர்களை அடக்கி ஆண்டான். பாதுகாப்புக் கருதி மற்றவர்களும் அடங்கி இருந்தனர். மக்களின் அறியாமையைப் பகடையாகப் பயன் படுத்தி இனங் காண முடியாத சக்தியை திருப்திப் படுத்தவென்றே, சில சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி மற்றையோரை பயமுறுத்தியே, சக்தி பெற்ற பூசாரிகளும் அந்தணர்களும், பலம் படைத்த அவர்களுடன் கூட்டு சேர்ந்து, மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நினைக்கத் துவங்கினர். அடக்கி ஆள்வதும், பிறரது அறியாமையில் பலம் கொள்வதுமாக இருந்த இந்த இருவகைப் பிரிவினர், மற்றவர்கள் மேலே வர இயலாத அளவுக்கு அதிகாரப் பிரயோகம் செய்தனர். விளைந்த  மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை விற்று, அரசுக்குப் பங்கு கொடுத்து, காண இயலாத சக்திகளை, திருப்தி செய்ய, உதவி, தங்களுக்கென ஒரு இடம் மூன்றாவது பிரிவினர் தக்க வைத்துக் கொண்டனர்..இதில் எதிலுமே அடங்காத நான்காவது பிரிவு, தானாக சிந்திக்காமல், சிந்திக்க முடியாமல், உழைத்து உருக்குலைந்து, குழுக்களின் அடிமட்டத்திலேயே இருந்தனர்.

கேள்வி:- எல்லோருமே ஒப்புக் கொண்ட ஒரு முறை எப்படித் தவறாகும்.?

பதில்:-   இங்குதான் சிந்தனைப் பரிணாமங்களின் வளர்ச்சியையோ, தேக்க நிலையையோ காண முடியும்.. எவனாவது சிந்திக்கத் துவங்கி விட்டால், தம் நிலைக்கு ஆபத்து என்று உணர்ந்து, சிந்திக்க இயலாத கட்டுப்பாடுகளை நடை முறைப் படுத்தி, பிறர் மேல் ஆண்டவர், ஆண்டை அடிமை என்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கேள்வி:- இன்ன வேலை இன்னவனுக்கு என்று நடைமுறைப் படுத்தப் பட்ட பிறகு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கிருந்து வரும்.?

பதில்:-   சரியான கேள்வி. ஆனால் ஆதியில் தற்செயலாக அமைந்த பாகு பாடுகள் ,மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்திருந்தால், யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கு வேண்டு மானாலும் உயரலாம். ஆனால் தற்செயலாகப் பிரிக்கப்பட்ட, ஏற்படுத்தப் பட்ட பாகு பாடுகளை, ஏதோ இனம் காண முடியாத சக்தியின் சித்தம் என்று ஒரு கோட்பாட்டை மற்றவர்கள் மேல் திணித்து, தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டார்கள். இதை கேள்வி கேட்க சிந்திக்க வேண்டும்.ஆனால் ஒரு சாராருடைய சிந்தனைகளை வளர விடாமல், மழுங்கடித்து, அவர்களது வளர்ச்சியைக் கட்டுப் படுத்த ஆதிக்கச் சக்திகள், மதம் என்றும், கடவுள் என்றும் ,சாஸ்திரம் என்றும் பலவாறு கூறி, எண்ணவே விடாமல் செய்தது. ஒரு விதச் சிந்தனைப் பரிணாமம் வளர்ச்சி என்றால், அதில் அடங்கிப் போனது இன்னொரு பரிணாமம்.

கேள்வி:- என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைக் கொஞ்சம் தெளிவு படுத்து.

பதில்:-  மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிய போது நிகழ்ந்த மாற்றங்கள் அண்மைய சரித்திர நிகழ்ச்சிகள். அரசுகளும் அரசர்களும் காணாமல் போய் விட்டனர். கேள்வி கேட்பதால்தானே மாற்றங்கள் வருகின்றன. கேள்வியே கேட்க முடியாதபடி செய்து விட்டால், கேள்வி கேட்பதற்குரிய கல்வியறிவை மறுதளித்து விட்டால்......இருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளலாமே.

கேள்வி: தற்காலத்திலும் இந்தப் பிரிவுகள் இருப்பது ( பிறப்பினால் வருவது ) தேவையில்லாததுதானே. எல்லோரும் எல்லா வேலைகளும் செய்கிறார்களே இந்தப் பிரிவுகளுக்கு இப்போது அர்த்தம் இருக்கிறதா.?

பதில்:- மேலோட்டமாகப் பார்க்கும்போது உண்மை போல் தோன்றலாம். ஆனாலும் மக்கள் மனசளவில், ஏற்ற தாழ்வுகளை இன்னும் பார்க்கிறார்கள்.

கேள்வி:- இதற்குத் தீர்வுதான் என்ன.?

பதில்-   கல்வியறிவு. எல்லோருக்கும் கல்வியறிவு. நடைமுறையில் நடப்பது போல் தோன்றினாலும், உண்மையில் நடை முறைப் படுத்தப் படாதது. நடைமுறைப் படுத்த சாத்தியப் படாதது.

கேள்வி:-ஏன் யார் வேண்டுமானாலும் கல்வியறிவு பெறலாமே.

பதில்:-  உண்மைதான். ஆனால் இது ஒரு மாயத் தோற்றம். கல்வியறிவு என்பது வெறுமே எழுதப் படிக்கத் தெரிவது மட்டுமல்ல. சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல் படுபவன், பசியாறுவதைப் பற்றி சிந்திப்பானா, ஏற்ற தாழ்வற்ற கல்வி பற்றி சிந்திப்பானா. கிடைக்கும் கல்வியறிவிலேயே எவ்வளவு வித்தியாசம்.இரண்டு விதக் குழந்தைகள் பள்ளி செல்வதைப் பார்த்தாலேயே தெரிந்து விடுமே கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வுகள். ஒரு குழந்தை மற்றதை சமமாகப் பாவிக்கச் சந்த்ர்ப்பமே இருக்காதே.

கேள்வி:-இதையெல்லாம் நீ சிந்திப்பது போல் அரசாங்கம் சிந்திக்காதா.?
பதில்:- நிச்சயம் சிந்திக்கிறது. முதலில் வயிற்றுப் பசி அடங்கினால்தான் கல்விக் கண் திறக்கும் என்று அறிந்துதான் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.கற்பிக்கும் கல்வியின் தரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், எல்லாக் கல்வி நிறுவனங்களும் ஒரே பாட திட்டம் கொள்ள வேண்டும்.இன்னும் ஒருபடி மேலே போய் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதையும் அமல் படுத்த சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

கேள்வி:- பின் பிரச்சனைதான் என்ன .?

பதில்:-  கல்வி வியாபார மாகிவிட்ட நிலையில் கல்வி வியாபாரிகள் இவற்றை நடைமுறைப் படுத்த எல்லா முட்டுக் கட்டைகளையும் போடுகிறார்கள்..வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியவர்கள் கல்வி கற்பிப்பதையும் அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அரசே எல்லோருக்கும் இலவச கல்வி, சமகல்வி கட்டாய மதிய உணவு அளிக்க வேண்டும். பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், சாதாரணமாகப் படிப்பவன், என்ற பாகு பாடுகள் ஒழிய வேண்டும். அப்போதுதான், வளரும் பிள்ளைகள் மனசில் சிந்தனை மாற்றங்கள் துவங்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் மேலோங்கும். குறைந்தது அடுத்த தலைமுறைகளிலாவது ஏற்ற தாழ்வுகள் இருக்காது.அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் தீர்வையும் கூறி இருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........!  
---------------------------------------------------------------    .       

       


     
   .    .   .

.