அனுபவம் -எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் -எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூன், 2012

நினைப்பது நடக்க.......


                                                   நினைப்பது நடக்க........
                                                  --------------------------- 


எண்ணங்களின் சிதற்ல்கள் இம்முறை பதிவாகிறது. எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும். ஆனால் இப்போது சுற்றிவந்த ஊர்களின் நினைவுகளைத்தான் சுற்றமுடிகிறது. ஏனென்றால் எனக்கு வயதாகி விட்டதாம். நான் எங்கும் தனியாகப் போகக் கூடாதாம். அதனால் நான் ஒரு VIRTUAL  PRISONER ஆகவே இருக்கிறேன். வயதை மூன்று விதமாக
கணக்கிடலாம். ஒன்று-CHRONOLOGICAL ( எண்ணிக்கையின் அடிப்படையில் ).இரண்டு-BIOLOGICAL ( உடல் நிலை அல்லது உடற்கூற்றுப்படி.) மூன்றாவது-PSYCHOLOGICAL ( மனநிலை அல்லது உளக்கூற்றுப்படி ) முதல் நிலை நாம் பிறந்த தேதியின் அடிப்படையில். நம்மால் ஏதும் செய்ய முடியாது. இரண்டாவது நிலையை நாம் ஓரளவுக்கு நம் பிடிப்பில் கொண்டு வரலாம். நல்ல உணவு,பழக்க வழக்கங்கள், தேகப் பயிற்சி இத்தியாதி விஷயங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும். நல்ல சிந்தனைகளும் நம்பிக்கையான நடைமுறைகளும் மூன்றாம் நிலை வயதேற்றத்தை மாற்றும். நான் எனக்கு வயதாகிவிட்டது என்று எண்ணுவதில்லை. இருக்கும் நாளையும் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறேன். நேற்று என்பது வசூலான காசோலை. நாளை என்பது ப்ராமிசரி நோட். இன்றென்பதே கையிலிருக்கும் பணம். லாபகரமாகச் செலவு செய்வோம்.

ஆனால் அதீத அன்பில் சிக்குண்டு, நிறைய நேரங்களில் என் சுதந்திரத்தை பறி கொடுக்க வேண்டி உள்ளது .என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிறேன் நான். அப்படி நடக்க விடுவது ரிஸ்க்கானது என்கிறார்கள் என் மனைவியும் மக்களும். இருதலைக் கொள்ளி எறும்பாய் நடுவில் நான்.

முதலில் கூறினேன், எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும் என்று. ஆனால் யாராவது கூட இருந்தால்தான் எங்கும் போக விடுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் ரயில்வேயில் சர்க்குலர் ட்ரெயின் டிக்கட் எடுத்து. ஜெய்ப்பூர், மதுரா, ஆக்ரா, வாரணாசி அல்ஹாபாத், ஹர்த்வார், ரிஷிகேஷ், டெல்லி என்று 22 நாட்கள் பயணித்தது நினைவுக்கு வருகிறது. எங்களுடன் என் அண்ணாவும் அண்ணியும் வருவதாக ப்ளான் செய்து டிக்கெட் எல்லாம் வாங்கிய பிறகு அண்ணா அண்ணி வர முடியவில்லை என்றார்கள். எங்கள் டிக்கெட்டையும் கான்செல் பண்ணும்படி என் பிள்ளைகள் கூறினர். நான் விடாப்பிடியாக மறுத்து பிரயாணம் மேற்கொண்டோம். மதுராவில் இருந்து என் பெரிய அண்ணாவும் அண்ணியும் சேர்வதாகக் கூறி இருந்தனர், அவர்களுக்கு நாங்களும் எங்களுக்கு அவர்களும் துணை. அந்த 22 நாட்கள் மறக்க முடியாதவை, ஜெய்ப்பூரில் எங்களை வரவேற்று எங்களுக்கு எல்லா உதவியும் செய்ய என் மூத்த மகன் ஏற்பாடு செய்திருந்தான். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜெய்ப்பூரையும் சுற்றிலும் உள்ள இடங்களையும் பார்த்தோம். அங்கு சில இடங்களைப் பார்த்துக் குறிப்புகளை படித்த போது ராஜபுத்திரர்களின் வீர தீரக் கதைகளைப் படித்திருந்த எனக்கு, ஏனோ அவர்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை போனவர்களாகவே தோன்றியது. 

மதுராவில் ஏறத்தாழ மூன்று நாட்கள் இருந்தோம். கண்ணன் பிறந்த இடம் முதல் அவனது லீலைகள் நடந்த இடங்கள் எல்லாம் பார்த்தோம். அங்கு வசிப்பவர்கள் தங்களை ப்ரிஜ்வாசி என்று அழைத்துக் கொள்கிறார்கள். அங்கு எங்கும் ஏழ்மையே தாண்டவமாடுவதைக் கண்டோம். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபடேஹ்பூர் சிக்ரி எல்லாம் பார்த்து வாரணாசி போயிருந்தோம். ஹனுமான் காட் அருகே சங்கர மடத்தில் தங்கினோம். அப்போது அங்கே ஒரே களேபரமாயிருந்தது. என்ன வென்று பார்த்தால் “சித்திராதிகா தன் கணவன் சரத் குமாருடன் தம்பதி பூஜை செய்ய வந்திருந்தார்.
பெரிய அண்ணா அண்ணியுடன் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து விட்டு, அங்கிருந்து த்ரிவேணி சங்கமத்துக்கு கையில் துழாவும் படகில் கங்கையில் பயணித்தோம். எந்த பயமும் இல்லாமல் பயணித்தது இன்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. த்ரிவேணி சங்கமத்தில் படகிலிருந்து மூங்கிலில் கால் பதித்து நிற்க வைத்து இறக்குகிறார்கள் அதுவும் மறக்க முடியாத அனுபவம். காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு  கால பைரவர் சன்னதியில் அங்கிருந்த பாண்டா பிரசாதம் தருமுன் ஒவ்வொருவரையும் குனிய வைத்து முதுகில் ஓங்கி அடிப்பதைக் கண்ட நான் என்னை அவர் முதுகில் தட்டுவதை விரும்பவில்லை என்று கூறியதை வித்தியாசமாகப் பார்த்தனர். ஹர்த்வார் ரிஷிகேஷ் என்று ஒவ்வொரு இடத்திலும் மறக்க முடியாத அனுபவங்கள். 

அந்த சுற்றுலாவில் ஒட்டக வண்டி சவாரி, டோங்கா சவாரி, படகு சவாரி, கேபிள் கார் சவாரி டெல்லியில் மெட்ரோ ரயில் சவாரி என்று எல்லாம் பயணித்தோம். சாதாரண காமிராவில் நிறைய புகைப் படங்கள்  எடுத்தோம். அந்த சமயத்தில்தான் என் அண்ணியின் ALZHEIMER நோய் தொடங்கினதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, அது தெரியாமல் பல முறை அவரிடம் கோபப்பட்டுக் கொண்டிருந்தார் பெரிய அண்ணா,

அந்த டூரில் எனக்குள் எழுந்த சந்தேகம், இதுதான். ராமர் கோயில் விஷயமாக நடந்த எல்லாக் கலவரங்களும் காசியிலும் மதுராவிலும் நிகழ வாய்ப்பிருந்தது. இந்த இரண்டு புண்ணிய ஸ்தலங்களும் அமைந்திருக்கும் இடமும் சூழலும் அப்படி இருக்கிறது. மசூதியில் கோவிலா, கோவிலில் மசூதியா என்று சந்தேகப் படும்படி அமைந்திருக்கிறது. போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்று தோன்றினாலும் அது தேவையே என்றும்  புரிந்தது

நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் என்றாலும் கிழக்கில் விசாகப் பட்டினத்துக்கு அப்பால் ஒடிஷா, வங்காளம் எல்லாம் செல்ல வில்லை. எப்படியாவது பிள்ளைகளிடம் அனுமதி பெற்று கொனாரக் கோயில்களுடன் கொல்கொத்தா நகரையும் காண ஆசை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......

ஆனால் நடப்பதெல்லாம் ஏதோ காரணம் கொண்டே நடக்கிறது., அந்த டூரில் எங்கள் இருவருக்கும் 22 நாட்கள் பயணிக்க ஆன செலவு ரூ.20,000-/ க்கும் குறைவே. ஆனால் இப்போது அதே பயணம் அதற்கு இரு மடங்குக்கும் மேலாகும் என்னால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது. இப்போது புரியும் அனுமதி ஏன் தேவை என்று. மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றங்கள் எண்ணத்தில் செயலில் புரிதலில் என்று எங்கும் இருக்கிறது.எதுவும் ஏதோ காரணத்தோடே நிகழ்கிறது என்றாவது ஒரு நாள் நாம் உயிர் துறக்கத்தான் வேண்டும் யாரும் உயிரோடு இந்த உலகை விட்டுப் போக முடியாது. இருக்கும் காலம் மகிழ்ச்சியோடு இருக்கவும் அதற்கு வேண்டியதைச் செய்யவும் அனைவரும் பாடுபட வேண்டும் அனைவரும் எனும்போது அவரவருக்கு மட்டுமல்ல அடுத்தவருக்கும் என்ற பொருளில்தான் எழுதினேன்        






ஞாயிறு, 20 மே, 2012

எழுதியது கடிதம்.....கடிதம் அல்ல.


                               எழுதியது கடிதம்....கடிதம் அல்ல.
                               -----------------------------------------------
                                   



















                                       ( நண்பனுக்குக் கடிதம் )
அன்பு நண்பா,

              சில விஷயங்கள் நேரில் பார்க்கும்போது பேச முடிவதில்லை. எண்ணங்களை ஒருமுகப் படுத்தவோ, எண்ணுவதைக் கோர்வையாகக் கூறவோ முடிவதில்லை. செயல்களினாலும் நிகழ்வுகளாலும் தாக்கப் பட்டு , அதிலிருந்து மீளவே நேரம் இருக்கவில்லை. இருந்தாலும் இப்படி எழுதுவதன் மூலம் மனதளவில் பாதிக்கப் பட்டதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உனக்கும் எனக்கும் எத்தனை ஆண்டு பரிச்சயம். ஐம்பது வருடங்களுக்கும் மேலிருக்கும். என் திருமண நாளில் மேடையில் தோழனாக நின்று ஆதரவு கொடுத்தபோது நீ எந்த பணியிலும் இருக்கவில்லை. சில நாட்கள் கழித்து பணி தேடி நீ ஒரு வளைகுடா நாட்டுக்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டேன்.
நீ பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்றவனல்ல என்று எனக்குத் தெரியும். இல்லாவிட்டால் என்ன.? உழைக்கத் தயங்காதவன், வாழ்வில் உயர்வதை தடுக்க முடியுமா.? நானும் என் அல்லல்களுக்கிடையில் உன்னைப் பற்றிய செய்திகளை தேடிப் பெறவில்லை..கிடைத்த செய்திகள் நீ வெகுவாக வளர்ந்து ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பதைத் தெரிவித்தன. நீ எந்த அளவு வளர்ந்திருக்கிறாய் என்பதை ,நான் என் நண்பன் , உன் தம்பியின் மகனுடைய திருமணத்துக்கு வந்தபோது கண்டேன். வளைகுடா வேலையை விட்டு நீ நாடு திரும்பி இருந்தாய். என்னை உன் வீட்டுக்கு அழைத்தாய். வீடா அது.? ஒரு கல் கோட்டை அல்லவா கட்டியிருந்தாய். வீட்டின் தரை எல்லாம் இரண்டு அங்குல கனத்திற்கு கம்பளம் போட்டிருந்தாய். டாய்லெட்டில் சிறு நீர் கழிக்கவே தயக்கமாய் இருந்தது..(அங்கும் கம்பளம்.)வீட்டின் முன்னால் மெர்ஸ்டீஸ் பென்ஸ் கார். மலைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் நீ மட்டும் நீயாகவே இருந்தாய். செல்வ செழிப்பை எல்லாம் பறை சாற்றி கொண்டிருந்தன, அக்றிணைப் பொருள்கள். ஆனால் ஒரு வார்த்தையாவது பெருமையாக நீ பேசவில்லை. உன் எண்ணமெல்லாம் நினைவலைகள் தவறி (ALZEIMER ) ஆதரவு இல்லாமல் இருக்கும் சாதாரண மக்களுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே இருந்தது.

 அன்று உன்னிடம் பேசும்போது அதில் எவ்வளவு ஈடுபாடு இருக்கும் என்று நானும் சிந்திக்கவில்லை. என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவன் நீ. உள்ளம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்குமா என்று நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்ய முயன்றாலும் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் எவரையும் பல முறை சிந்திக்க வைக்கும்.

கடந்த வாரம் உன்னைச் சந்தித்தபோது, என்னையே என்னால் நம்ப முடியவில்லை. நினைத்ததை சாதிக்க வேண்டிய எல்லா தொடக்கப் பணிகளையும் துவங்கி, சாதனையின் படிக்கட்டில் இருக்கிறாய். என் இள வயதில் என்னென்னவோ செய்ய எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது, என்னால் முடிந்ததெல்லாம் கனவுகளைக் கதையாக எழுதியதுதான்.

இப்பொழுது உன் அரவணைப்பில் பத்து பேர் நினைவலைகள் தவறி ஆதரவு அற்றவர்கள்  பாதுகாப்பாக இருக்கிறார்கள். நான் அங்கு வந்திருந்தபோது ஒரு மூதாட்டி அவருக்கு தேனீர் தரவில்லை என்று புகார் எழுப்பிக் கொண்டிருந்தார். உண்டதும் குடித்ததும் கூட மறந்து விடும் பாவப் பட்டவர்கள், உன் அரவணைப்பில். உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன் நண்பா.!

வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சம்பாதித்தது விரயமாகிறது என்ற எண்ணத்தில் எதிர்ப்புத் தெரிவித்த வாழ்க்கைத் துணைவியையும்  விட்டுக் கொடுக்க முடியாமல் , கொண்ட கொள்கைப் பிடிப்பிலிருந்தும் வழுவ முடியாமல் உன் சொத்தில் பெரும் பகுதியை அவருக்குக் கொடுத்து  நீ தனியாக வந்து, நீ நடத்தும் “ காருண்ய “ இல்லத்திலேயே ஒருவனாக வாழ்க்கை நடத்துவது எஙஙனம் சாத்தியமாகிறது நண்பா.? அன்று நீ கூறியது இப்போதும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “என்றாய்..எனக்கு காந்திஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “ தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான் “

இப்போது இயங்கும் காருண்ய சிறகுகள் “ இன்னும் விஸ்தரிக்கப் பட வேண்டும் என்று அதற்கான பணிகளில் நீ ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். குறைந்தது ஐம்பது பேராவது தங்கும் வசதிக்காக கட்டிடப் பணிகள் துவங்கி இருக்கிறாய். உடன் மருத்துவ வசதி இருக்க வேண்டி மருத்துவர் தங்கவும்
ஏற்பாடு செய்யும் பணியில் இருக்கிறாய். என்னதான் தனி மனிதனாக முயற்சி செய்தாலும் “ தனி மரம் தோப்பாகாது “ என்று உணர்ந்திருக்கிறாய். உன் சேவையில் ஊதியமின்றி பணி புரிய அங்கிருந்த ஒரு தம்பதியினரையும் அறிமுகம் செய்து வைத்தாய். உணவு வகையறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு தற்சமயம்  குறைந்தது ரூ 300-/ தேவைப்படுவதாகவும் மனம் உள்ளவர்கள் விரும்பி உதவினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்றும் கூறி இருந்தாய்.

குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் உன் பணிகளை குன்றின் மேல் விளக்காக்க நான் என்ன செய்ய முடியும் ? முதல் பணியாக வலையில் உனக்கெழுதும் இக்கடிதத்தை இடுகையாக இடுவேன். படிக்கும் நல்ல உள்ளங்கள் கை கொடுக்க மாட்டார்களா என்ன. ? எனக்கு நீ உன்னை  மற்றவர்கள் தொடர்பு கொள்ள சரியான விலாசம் தெரியப் படுத்தவும் இராமனின் பாலம் கட்டும் பணியில் அணிலின் பங்கு இருந்தது போல் என் பங்கு இருக்குமா.? காலம் தான் தெரியப் படுத்த வேண்டும் .உரிமை எடுத்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.தவறில்லையே.

உனக்காகவும் உன் பணிகள் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டுவேன்.
                               இப்படிக்கு உன் அன்பு நண்பன்,
                                ஜீ.எம். பாலசுப்பிரமணியம்.  

CONTACT ADDRESS:-
                  P.Madhusudhan.
                  "SIRAKUKAL"
                  C/O "KARUNYA"
                  GERIYATRIC CARE CENTER, 
                  KARUNGKANAPPALLI POST, 
                  NEAR PALGHAT POLYTECHNIC
                  PALGHAT DISTRICT,
                  KERALA.       . 


மின் அஞ்சல் முகவரியும் தொலைபேசி எண்ணும் பின்னால் சேர்க்கப்பட்டது. 


மின் அஞ்சல்  ----- madhu37@gmail.com


தொலைபேசி எண்கள் ------- 0491/2571090


                                                              09447408252


--------------------------------------------------------------------------------------------------------------



வெள்ளி, 4 மே, 2012

வேர் எங்கே....?


                                                     வேர் எங்கே.......?
                                                     ---------------------


அந்நிய  நாடுகளில் வசிப்பவர்களை ( அடிமைகளாக இழுத்துச் செல்லப் பட்டவர்கள், அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள், நாடு கடத்தப் பட்டவர்கள், மற்றும் தன்னிலை உயர்த்திக் கொள்ளத் தானாகச் சென்றவர்கள் ) எவ்வாறு அழைப்பது..? வேரற்றவர்கள் என்றா, வேரறுந்தவர்கள் என்றா, சுயம் இழந்தவர்கள் என்றா, சுறுசுறுப்பானவர்கள் என்றா,? ஏதோ ஒரு கட்டுக்குள் அடங்குகின்றனர். தங்களால் கட்டுப் படுத்த முடியாமல் கடல் கடந்து சென்றவர்களைப் பற்றி இப்போது விவாதிக்க வில்லை. தாய் நாட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றுக்காக, அயல் நாடுகளில் அடைக்கலம் நாடும் நம் நாட்டு மக்களைப் பற்றியே நினைத்து இதை எழுதுகிறேன்.

வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத போது,திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப, பொருள் சேர்க்க அயல் நாடுகளுக்குப் போகிறவர்களில் பலர், தங்கள் சுயத்தை இழந்து, அங்கேயே நிரந்தரக் குடிகளாக மாறுகின்றனரே, அவர்கள் நிலையிலிருந்து என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் அப்படிச் சென்ற சிலர்,இங்கு வரும்போது நடந்து கொள்ளும் விதம் பற்றி சில சாம்பிள்கள்,

தாய்நாட்டை தரிசனம் செய்ய வந்தவர் சிலரை சந்தித்திருக்கிறேன். அமேரிக்காவிலிருந்து வந்திருந்த ஒருவர், தன் வயதான தாயிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது..அம்மி, ( அம்மாவும் அல்ல, மம்மியும் அல்ல) எங்கள் சிறு வயதில் செய்வாயே ரைஸ் கேக்  அதை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதுஅந்தத் தாய்க்கு முதலில் விளங்காமல் போக  இவர் விளக்கிக் கூற “ அமெரிக்கா போனதும் இட்லி பெயர் கூட  ரைஸ் கேக்காக மாறிவிட்டதாஎன்று அம்மூதாட்டி வருத்தப் பட்டுக் கொண்டார்.

அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியா ஒரு பின் தங்கிய நாடு. பாம்புகளும் பாம்பாட்டிகளும் வித்தை செய்பவர்களும் நிறைந்த இடம் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து வரும்போது தங்கள் ஊரில் நல்ல சாலைகள் இல்லாதது குறித்தும் வெப்பத்தைக் குறித்தும் குறை படுவது காணும்போது, மிகையாகவே தோன்றுகிறது. திருமணத்தில் வீடியோ எடுத்து நேராகச் சின்னத்திரையில் ஒளிபரப் பாவது கண்டு “ இதெல்லாம் இங்கு வந்து விட்டதா “என்று அமெரிக்க ஸ்டைலில் ஆச்சரியப் படுகிறார்கள்.

இங்கிருந்து அங்கு சென்றவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அந்த தேசத்துக் குடி மக்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களா அமெரிக்கர்களா.? பார்ப்பதற்கு இந்தியர்கள். வாய் திறந்து பேசத் துவங்கினால் அமெரிக்கர்கள். ஒரு முறை என் நண்பனின் குடும்பத்தோடு தாஜ்மஹால் பார்க்கச் சென்றிருந்தோம்.. இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 25-/ (என்று நினைவு). வெளிநாட்டினருக்கு ரூபாய் 250-/நாங்கள் டிக்கட் எடுத்து உள்ளே செல்லும்போது, இவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட காவலாளி-கம்-டிக்கட் பரிசோதகர் அவர்கள் வெளிநாட்டினர்க்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி எங்களைத் தடுத்து நிறுத்தினார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் முரட்டுத்தனம்தான் அதிகரித்தது.அப்போது நண்பரின் மகன் ,அமெரிக்கக் குடிமகன். “ நான் ஒரு இந்தியன்;படிக்கச் சென்றிருக்கிறேன்என்று தமிழில் தட்டுத் தடுமாறி கூற, பரிசோதகர் அனுமதி அளித்தார். ஆனால் அந்தப் பையன் தன்னை ஒரு இந்தியன் என்று கூறியதற்கு மிகவும் வெட்கப் பட்டான்.

வெளிநாடுகளில் தங்கி இருக்கும் நம் நாட்டவர்கள் இங்கு வரும்போது, அரை நிஜார் போட்டுக் கொண்டும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டும் அலங்கோலமாக நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். என் நண்பரின் குடும்பம் திரும்பிச் செல்லும்போது, அவர்களுக்கு நல்ல வேட்டி, பைஜாமா, குருத்தா, போன்றவற்றை வாங்கிப் பரிசாகக் கொடுத்தேன். இதை அங்கே உடுத்திக் கொண்டால் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்றும், அநேகமாக உபயோகப் படுத்த முடியாது என்றும் கூறினர். அயல் நாட்டினர் இங்கு வந்து நம் உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். நம்மவர் நம் பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்.

என்னுடைய இன்னொரு நண்பன் மிகச் சாதாரணமான நிலையில் இருந்தவன்,துபாய் சென்று படிப்படியாய் உயர்ந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக வளர்ந்தான். அவனுக்கு மணமாகி இரு மகன்கள். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படிக்க வைத்தான். சற்று வயதான பின் இந்தியா வந்து செட்டில் ஆனான். ஒரு முறை அவனது மக்களைப் பார்த்துப் பேசும் அனுபவம் ஏற்பட்டது. சிறிதேனும் அன்போ பாசமோ அவர்கள் பேச்சில் தெரியவில்லை. வயதான பெற்றோரை அருகில் வைத்துக் கொள்ளவோ அல்லது அவர்கள் இங்கு வருவதோ அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவரவர் செயலுக்கு அவரவரே முடிவெடுக்க வேண்டும் என்றும் , உடல் நலமில்லாவிட்டால் டாக்டரைத்தான் நாட வேண்டும் என்றும் அவர்களை அல்ல என்றும் கூறினார்கள். எதிர்பாராமல் தந்தை இறந்து விட்டால் , முடிந்தால் கிரியைகள் செய்ய வர முயற்சிப்பதாகக் கூறினர். இதை நான் கூற வருவதன் நோக்கமே வாழ்வின் மதிப்பீடுகள் VALUES- மறைந்து கொண்டே வருவது குறித்த எண்ணத்தில்தான்

இன்னொரு நண்பனின் மகன் இந்தியப் பெண்ணை மணம் செய்யவே பயமாக இருக்கிறது என்றான். காரணம் கேட்டபோது, அவன் தந்தை என்னுடைய “பெண்கள் முன்னேற்றம் “என்ற பதிவு பற்றிக் கூறி இருப்பது அறிந்தேன்.

நான் என் மகனுடன் துபாயில் சில நாட்கள் தங்கி இருந்தபோது, அங்கே அடிமட்டத்தில் வேலை செய்யும் பலரைக் கண்டேன். அங்கே கிட்டத்தட்ட அடிமை மாதிரிப் பணி செய்யும் பலரும் , இந்தியாவில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்களா என்பதே சந்தேகம். வெளிநாடுகளில் இந்தியர்கள் அடங்கி ஒடுங்கி, எல்லா சட்டங்களுக்கும் கட்டுப் பட்டு வாழ்கிறார்கள். குப்பை போடுவதில்லை; எச்சில் துப்புவதில்லை. நான் துபாயிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இளைஞன் என்னருகில் அமர்ந்திருந்தான். நிறைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். அவன் ஊருக்கு அனுப்பியதுபோக சேமித்த பணத்தில் தங்கம் வாங்கிப் போவதாகக் கூறினான். கேட்க மகிழ்ச்சியாயிருந்தது. சென்னையில் விமானத்திலிருந்து வெளியே வரும்போது அவனால் இத்தனை நாள் கட்டுப் படுத்தப் பட்ட இயற்கை சுபாவம் பலமாக வெளிப்பட்டது. அவன் விமானத்திலிருந்து வெளியே வரும்போது காறி உமிழ்ந்து கொண்டே வந்தான்.
---------------------------------------------------
 .






  

திங்கள், 5 மார்ச், 2012

செயல் திட்டம் ( PROJECT WORK ) வழிகாட்டி.

                             
                                   செயல்திட்டம் -வழிகாட்டி
                                  ------------------------------------

     
( டாக்டர் கந்தசாமி அவர்கள் எழுதி இருந்த செயல் திட்டம் பற்றிய பதிவு படித்ததும் ,எண்ண அலைகள் பின்னோக்கிப் பாய, எழுந்தது இந்தப் பதிவு. )


        திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்சாலைக்கு முதுநிலை பட்டப் படிப்பு
படிக்கிறவர்கள் பலரும், தாங்கள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுக்கு வருவார்கள். அங்கு பணியிலிருக்கும் மேலதிகாரிகள் அவர்கள் படிப்புக்கான செயல் திட்டம் ( PROJECT ) கொடுத்து வழிகாட்டிகளாகவும் பணி புரிவார்கள்..MCA பட்டப் படிப்பு படிக்கும் இரு வேறு கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவனும் ஒரு மாணவியும் என்னிடம் அனுப்பப் பட்டனர். நான் அவர்களது ப்ராஜெக்டுக்கு வழிகாட்டியாக இருக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டேன். எனக்கு இது ஒரு இக்கட்டான பணியாகத் தோன்றியது. கணினியில் இன்ன பணி செய்து, இன்ன பலன் பெறலாம் என்பது எனக்குத் தெரியும்.. ஆனால் கணினி இயக்க அடிப்படை விஷய ஞானமோ, தேவைப் பட்ட மொழியறிவோ எனக்குக் கிடையாது. நான் முதலிலேயே அந்த மாணவர்களிடம் சொல்லி விட்டேன். நான் கொடுக்கும் பணியை அவர்கள் செய்ய வேண்டும். எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது. ஆனால் செய்து வந்த பலன்களை (RESULTS ) எனக்குக் காண்பிக்க வேண்டும். கிடைக்கும் பலனை வைத்து, அவர்கள் செயல் திட்டம் சரியா இல்லையா என்று நான் கூறுவேன். இதனை அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

      நான் இருந்த வால்வ் டிவிஷனில், உற்பத்தியாகும் ஒவ்வொரு வால்வுக்கும் தர சான்றிதழ் தரப் பட வேண்டும். அது தமிழக அரசின்  BOILER INSPECTORATE  இடம் ஒப்புதல் பெற வேண்டும். சுருங்கச் சொன்னால் BHEL-ம்  BOILER INSPECTORATE-ம் தரும் சான்றிதழ் அது. அந்த சான்றிதழில் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள், ஒரு வால்வ் செய்யத் தேவையான RAW MATERIALS- ன் உற்பத்தி முதல் வால்வாக மாறும்வரை நடத்தப் படும் எல்லா சோதனைகளையும் ஒருங்கிணைத்து இருப்பதாக இருக்க வேண்டும். வால்வ் தயாரிக்க ஏற்படும் கஷ்டங்களைவிட, சான்றிதழ் தருவது அதிக நேரம் எடுக்கும் பணியாக இருந்தது.. ஆயிரக் கணக்கான வால்வுகள், பல்வேறு அளவுகளில் பல்வெறு உபயோகத்துக்காகத் தயாரானவை ஆகும். ஆனால் ஒவ்வொரு சான்றிதழிலும் எல்லா விவரங்களும் இருக்க வேண்டும். அப்போதெல்லாம் இது ஒரு HERCULEAN TASK – ஆகும். இந்த சான்றிதழ்கள் ஒவ்வொன்றும்,எல்லா விவரங்களும் கொண்டு தனித் தனியாக, டைப் செய்யப் பட்டு கையெழுத்தாக வேண்டும்.இதை எளிமைப் படுத்த, இதற்காக BHEL-ல் இருந்த சிஸ்டம் எஞ்சினீர்களுடன் கணினி மூலம் சான்றிதழ்கள் பெற ஏற்பாடுகள் செய்திருந்தேன். அவை நடைமுறையில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருந்த நேரம்.

      
      இதே பணியை MCA  ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்தவருக்குக் கொடுத்து செய்யச் சொன்னேன். தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டு அவர்கள் சான்றிதழ் உருவாக்கப் பணி செய்ய வேண்டும். அவர்களும் என்னென்னவோ செய்து, ( என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது.) பலன்களை எனக்குக் காண்பிப் பார்கள். திருப்தி ஏற்பட்டால் அடுத்து ஒருங்கிணைப்பு என்று செயல் திட்டம் நடக்கும். சரியாக வர வில்லை என்றால் மறுபடியும் செய்யச் சொல்வேன். இப்படியாக ப்ராஜெக்ட் வொர்க் வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற்றார்கள்.

      இந்த செயல் திட்டம் செய்ய வந்த மாணவி ஒரு முறை சரியாக இல்லை என்று மறுமுறை செய்ய அனுப்பிய போது, அழுது , கலவரப் படுத்தி விட்டாள். அவளை சமாதானப் படுத்தி, எங்கு தவறு என்று சுட்டிக் காட்டத் தெரியாது, ,ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை என்று நன்றாக விளக்கினேன் பிறகு சரி செய்து வந்தபோது நான் பாராட்டியதும், அந்தப் பெண் முகம் மலர்ந்தது என்னை மகிழச் செய்தது.

     இப்படியாக நான் வழிகாட்டியாக இருந்து பட்டம் பெற்ற இருவரும், பிறகு வெளி நாட்டில் நல்ல பணியில் இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தது நிஜம்.
-------------------------------------------------------------------.                        
  
 .



திங்கள், 13 பிப்ரவரி, 2012

மீண்டும் கேள்வி....



                                 மீண்டும் கேள்வி.
                                 ------------------------
   ஆத்திகம் நாத்திகம் பற்றி பல பேர் பல பதிவுகள் எழுதி
விட்டார்கள். சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்கள் எழுதிய ஒரு
பதிவில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன.
இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஆனால்
அது பரவலாகப் படிக்கப் படவில்லை. ( இது மட்டும் படிக்கப்
படுமா என்ன.?) இருந்தாலும் அதை மீண்டும் பதிவிடுகிறேன்

.

நான் நாத்திகனா ஆத்திகனா..?

 நான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.
(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)

இந்தக்  கேள்விக்குப்  பதில்  தேடும்  முன்பு  ஆத்திகன்  என்பவன்  யார்  நாத்திகன்  என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன்  அல்லது  கடவுள்  இருக்கிறான்  என்று நம்புபவனை  ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை  என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக்  கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும்  அவர்கள்  கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால்  அமைந்ததே. நம்பிக்கை  என்பது உணர்வு  பூர்வமானது. இதில் எது  சரி  எது தவறு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.

ஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு
இயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும்  உணருகிறார்கள். 

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறை, கற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார் செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம். 

ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும், பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

இந்த நம்பிக்கைகளினால்   உந்தப்பட்டு, வாழ்க்கை   நடத்தும்  நாம் ஆத்திகர்களா.? ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.?கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த
புற வழிபாடு  செய்பவர்கள்  எல்லோரும்  ஆத்திகர்களா.?

காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால், செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  ஆத்திகனா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?

 நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக்  கேட்கும்  கேள்வி.   
" அப்பா,  நீங்கள் நல்லவரா ,கெட்டவரா" தந்தை  கூறுவார், " தெரியவில்லையே, அம்மா", என்று. நானும்  கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள்,  நான்  ஆத்திகனா,  நாத்திகனா?
---------------------------------------------------------------------------------

                                 

திங்கள், 16 ஜனவரி, 2012

நாவல் பிறந்த கதை...

             நாவல் பிறந்த கதை
             ----------------------------
பதிவுலகிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் கூட முடியவில்லை
என் சுய திருப்திக்காக எழுதிக் கொண்டிருந்த எனக்கு உடல்
நலமில்லாமல் தேறி வந்து கொண்டிருந்தபோது இம்மாதிரி
வலையில் எழுத முடியும் என்ற தகவல் ஆனந்தவிகடனில்
வெளியான ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்
இப்பொழுதும் எனக்கு கணினி பற்றிய ஞானம் மிகவும் குறைவு.
ஏதோ எழுதுகிறேனே தவிர இன்னும் பல சூட்சுமங்கள் பிடி
படவில்லை

1960-/ களில் எழுதத் துவங்கினேன். எந்த பத்திரிகைக்கும்
அனுப்பியது கிடையாது. காதல் வசப் பட்டிருந்தபோது கவிதை
எழுத முயற்சித்தேன். நாடகங்கள் பல எழுதி இயக்கி நடித்திருக்
கிறேன். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 1966-/ ம் வருடம்
கலைமகள் இதழில் நாராயணஸ்வாமி அய்யர் நினைவு நாவல்
போட்டி அறிவித்திருந்தார்கள். நான் ஏன் பங்கு பெறக்கூடாது
என்னும் எண்ணம் எழவே, ஒரு நாவல் எழுதினேன். பெற்ற
அனுபவங்களும் என் மன அபிலாக்ஷைகளுமாக கருஉருவாக்கி
ஒரு நாவல் எழுதினேன். அதை தபாலில் போதிய ஸ்டாம்பு
களுடன் ( அவர்கள் திருப்பி அனுப்ப ஏதுவாக )பதிவுத் தபாலில்
Ack .Due என்னும் முறையில் அனுப்பினேன். ஒரு வாரம் கழிந்தும்
அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக ACK. DUE FORM
அவர்கள் கையெழுத்துடன் வராததால் தபால் நிலையத்தில்
விசாரித்தேன். என்ன கொடுமை.!அது அனுப்பப்படாமல்
அங்கேயே இருந்தது. கடைசி நாளும் முடிந்திருந்தது. தபால்
நிலையத்தாருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். ஒரு மாதத்
துக்கு மேல் உழைத்தது வீணாகி இருந்தது. இப்போது அதனை
தூசு தட்டி என் வலைப் பூவில் பதிவிடுகிறேன். ஆதரவு இருக்கும்
என்ற நம்பிக்கையில் வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட
உத்தேசம் . முன் கூட்டியே ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
--------------------------------
  

வெள்ளி, 6 ஜனவரி, 2012

விஜயவாடா நினைவுகள்

                                        விஜயவாடா நினைவுகள்
                                       ------------------------------------

         இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “ஹலோ, அங்கிள், நேனு சலபதி ராவ் மாட்லாடுதானு, விஜயவாடலின்சி. குர்த்து ஒஸ்துந்தா.?எனக்கு யார் என்று பிடிபடவேயில்லை. அடுத்து என் மகன் பேசினான். அவன் அங்கு வேலை நிமித்தமாகச் சென்றவன் அவனுடைய மலரும் நினைவுகளால் உந்தப்பட்டு நாங்கள் 1976-/ முதல் 1980-/ வரை வாழ்ந்த வீட்டையும் அருகில் இருந்த அவனது நண்பர்களை காணவும் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தைய அவனுடைய நண்பனின் அழைப்புதான் நான் முதலில் குறிப்பிட்டது. நாங்கள் அங்கிருந்தபோது என் மகனின் வயது பத்து தொடங்கி பதிநாலு வரை.

               ஏற்கனவே என் நேரம் பழைய நினைவுகளை அசைபோடுவதில் செலவாகிறது. இந்த தொலைபேசி அழைப்பு என் விஜயவாடா நினைவுகளைக் கிளரி விட்டது. நான் BHEL-ல் இருந்தபோது என்னை புதியதாகக் கட்டவிருந்த விஜயவாடாதெர்மல் பவர் ஸ்டேஷன் கட்டுமானப் பணிகளைத் துவக்க இடமாற்றம் செய்து அனுப்பினார்கள் .இடமாற்றத்தில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இருக்கவில்லை. நான் செய்து கொண்டிருந்த பணிக்கும் அங்கு எனக்கிருக்கப்போகும் பணிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆரம்பமுதல் நான் அவ்வேலையைக் கற்று பொறுப்புகளை முடிக்க வேண்டும். பேசாமல் வேலையை ராஜினாமா செய்து ஏதாவது பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று தீவிரமாக யோசனை செய்தேன். மேலும் என் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப் படுமோ என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் எனக்குள் இருந்த போராடும் குணம், எதுவும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னுள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அப்போது துணை பொது மேலாளராக இருந்த திரு. K.P.ராஜ்குமார் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கும் இட மாற்றம் என்றும் என் மன நிலை அவருக்குப் புரிவதாகவும் சொல்லி ஒரு கதையும் சொன்னார்.

           ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். ஜனங்களால் மதிக்கப் பட்டவர். எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் அவர் முன் நின்று வழி நடத்துவார். எந்த வீட்டில் இழவு நடந்தாலும் இவர் அங்குள்ளவர்களைத் தேற்றி ஆறுதல் கூறுவார். பெரும்பாலும் ஜனங்கள் ஆறுதல் அடைந்து அவர் சொல் கேட்டு நடந்து கொள்வார்கள். ஒரு முறை அந்தப் பெரியவர் வீட்டில் ஒரு இழப்பு நேரிட்டது. கண்ணீரை அடக்க முடியாமல் அவர் தேம்பித் தேம்பி அழுவது கண்டு கூட இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள் “நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். எல்லோருக்கும் வழிகாட்டி. நீங்களேஇப்படி மனம் தளரலாமா?என்று கூறி சமாதானப் படுத்த முயன்றனர்.அவரோ, “உங்களுக்கு இழப்பு வந்தபோது ஆறுதல் சொன்ன நான் எனக்கு அது நேரும்போதுதான் உங்கள் துயரம் புரிகிறதுஎன்றாராம்

         இந்தக் கதை சொன்ன ராஜ்குமார், என் நிலை அவருக்குப் புரிகிறது என்று கூறி என்னை முதலில் விஜயவாடா சென்று நிலைமையை புரிந்து கொள்ளவும் இருக்க வீடு பார்க்கவும் பள்ளிகளில் பிள்ளைகளை ( இனி மாற்றலாகி வருபவருக்கும் சேர்த்து ) சேர்க்க வேண்டிய  ஏற்பாடுகள் செய்யவும் பொறுப்புகளை கொடுத்து அனுப்பினார். எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.

       விஜயவாடா சென்றதும் அனல் மின் நிலையம் கட்டப் படப் போகும் இடம் பார்க்கச் சென்றேன் கொண்டப்பள்ளி என்னும் ரயில் நிலையத்திலிருந்துதான் வந்து சேரும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துவரப் படவேண்டும் ஒரு சூபர்வைஸர்  ஏற்கெனவே பணியில் இருந்தார். அவருக்கு நான் அங்கு வந்ததே பிடிக்கவில்லை. என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. எனக்குக் கீழே பதில் சொல்லும் நிலை அவருக்கு ரசிக்கவில்லை.

   விஜயவாடாவில் பென்ஸ் சர்கிள் அருகே ஆஃபீஸ் அமைந்திருந்தது அருகேயே வீடு பார்த்தேன். படமட்டாவில் NSM PUBLIC SCHOOL  நல்ல பள்ளி என்றறிந்து அங்கே சென்றேன். அது மாண்ட்ஃபோர்ட் குழுமத்தாரால் நடத்தப் படுவது என்று தெரிந்தது நான் கூனூரில் படித்த பள்ளியும் அவர்கள் நிர்வாகத்துக்குட்பட்டதே. என்னை அந்த ப்ரின்ஸிபாலிடம் அறிமுகப் படுத்திப் பேசிக் கொண்டிருந்தபொது, அவர் கூனூரில் அதே பள்ளியில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர் என்று தெரிந்தது. பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தால் பள்ளிக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று அவர் பேரம் பேசினார். அந்த மாநிலத்துக்கே மின்சாரம் தரப்போகும் அனல் மின் நிலையம் நாங்கள் தருவோம் என்றெல்லாம் கூறி பள்ளியின் முன்னேற்றத்துக்கு எங்களிடமிருந்து கணிசமான உதவி எதிர் பார்க்கலாம் என்று கூறி வரப்போகும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத் திரும்பினேன்.

     பெஜவாடா என்று முன் காலத்தில் அழைக்கப்பட்ட விஜயவாடா ஒரு ப்ளேஸ்வாடா (BLAZEVAADA) அதாவது அதிக உஷ்ணமான இடம்.,வெயில் காலத்தில் சர்வசாதாரணமாக உஷ்ணமானி 115 டிக்ரி முதல் 118 டிகிரி  ஃபாரன்ஹீட் வரை காண்பிக்கும். இரவில் ரேடியேஷன் சூட்டால் வெப்பம் குறைய வாய்ப்பேயில்லை. திருச்சிக்கும் விஜயவாடாவுக்கும் நிறையவே ஒற்றுமைகள் உண்டு. திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மாதிரி  மலையில் கனகதுர்கா கோயில். காவிரி நதி மாதிரி  அங்கே கிருஷ்ணா நதி. கல்லணைபோல் கிருஷ்ணா பராஜ். இரண்டும்  விவசாய நிலங்கள் சூழ்ந்த வியாபார மையம். இந்திய ரெயில்வேயின் முக்கிய ஜங்ஷன்கள். ஃப்ளோட்டிங் பாபுலேஷன் ( வந்து போகும் மக்களின் எண்ணிக்கை ) இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

        1976- / முதல் 1980-/ வரை ( நான்கு வருடங்கள்) அங்கிருந்தேன் இரண்டு 210MW  சக்தியுள்ள அனல் மின் நிலையம் ஆரம்பத்திலிருந்து மின் உற்பத்தி துவங்கும் வரை அங்கு பணி ஆற்றினேன். திருச்சியில் கொதிகலன்கள் தயாரிக்கப் பட்டாலும் அங்கு ஒரு முழு கொதிகலனை யாராலும் பார்க்க முடியாது. அங்கு உற்பத்தியாகும் கட்டுமானப் பொருட்கள் தனித்தனியே அனுப்பப்பட்டு அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்ப்டும் ஒரு கொதிகலன் சுமார் பத்தாயிரம் டன்களுக்கும் கூடுதலாக இருக்கும். அங்கு பணி புரிந்த காலத்தில் ஆந்திராவில் கொடிய புயல் தாக்கி ஆயிரக் கணக்கானோர் மரண்மடைந்தனர், அந்த மாலை இன்றும் நினைவில் இருக்கிறது கட்டுமானப் பணியின் ஆரம்ப நிலை அது. மாலை காற்றடிக்கத் துவங்கி மழையும் வரத் தொடங்கவே சீக்கிரமே வீடு நோக்கித் திரும்பினோம் அன்று இரவு அடித்த காற்றில் கதவுகள் ஆடத் துவங்க அவற்றுக்கு கட்டில்களும் மேசைகளும் முட்டுக் கொடுத்து காற்றின் பயங்கர சப்தம் கேட்டு இரவு உறக்கம் இல்லாமல் கழித்தோம். மறு நாள் புயல் ஓய்ந்த பிறகு வெளியில் வந்து பார்த்தால் வெராந்தாவில் இருந்த ஒரு நீள மர பென்ச் காணவில்லை காற்று அதை தூக்கி முதல் மாடியிலிருந்து கீழே வீசியிருந்தது. கட்டுமான இடத்துக்குப் போகும் வழியெல்லாம் புயலின் கோர தாண்டவத்தின் அடையாளங்கள். சைட்டில் நாங்கள் ERECT செய்திருந்த STRUCTURAL  COLUMNS  எல்லாம் சரிந்து கீழே விழுந்திருந்தன. வாரக்கணக்கில் பாடுபட்டு செய்திருந்த பணிகள் எல்லாம் பாழாய்ப் போய் இருந்தன.

          அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எனக்கு எதையும் எதிர் கொள்ள வைக்கும் துணிச்சலை தந்திருந்தது. அவற்றில் ஒன்றிரண்டு சொல்லியே ஆக வேண்டும். நீளம் கருதி  அதை பின்னொரு சமயம் தனி இடுகையாக பதிவிடுவேன்.
     காலை ஏழு மணியளவில் விட்டை விட்டால் இரவு எப்போது திரும்புவோம் என்று தெரியாது வாரம் ஆறு நாட்கள்  முழுநேரப் பணியும் ஞாயிறு மதியம் வரை பணியும் இருக்கும் . ஞாயிறு மாலைக்காக மனைவியும் மக்களும் காத்திருக்க சினிமா ஓட்டல் என்று கழியும். நான் விஜயவாடா பணியிலிருந்து மறுபடியும் திருச்சிக்கு கிளம்பும்போது VTPS –ன் SUPERINTENDING  ENGINEER  சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,BALU WHENEVER I COME NEAR THESE MACHINES  I WILL HEAR THEM CALL –BALU, -BALU” இருபது வருடங்களுக்குப் பிறகு 2001-ல்
நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.
--------------------------------------------
  

  






ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பயண அனுபவங்கள் ...

                                    பயண அனுபவங்கள்.
                                   ------------------------------

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


                  என் பள்ளி நினைவுகளை ஒரு தனிப் பதிவும் , பாலக்காட்டில் ஒரு வீட்டில் எரியும் நந்தா விளக்கு பற்றிய ஒரு இடுகையும் வெளியிடஎழுதியுள்ளேன்.
---------------------------------------------------------------------------        
    
    

         

செவ்வாய், 6 டிசம்பர், 2011

சேவை மனோபாவம்..

                                        சேவை மனோபாவம்
                                         -----------------------------
  வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.

 அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.



       இப்படியாக ரூ.15-/ உடன் 1956-ம் வருடம் ஏப்ரல் 28-/ம் தேதி, பெங்களூர் வந்தேன். என்னிடம் ஒரு சிறிய ட்ரங்க் பெட்டி என் உடைமைகளுடனும், என் சான்றிதழ் , நியமன உத்தரவு போன்றவற்றுடனும் இருந்தது.

       பெங்களூரில் ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும். எங்கு போவது.?எனக்கு பெங்களூரில் கண்டோன்மெண்டில்( கொஞ்சம் முன்னே வந்து போன பழக்கத்தில் )தங்கலாம் என்றும், அதுவே எஸ். ஜே. பாலிடெக்னிக் சென்று வர சௌகரியமாக இருக்கும் என்றும் தோன்றியது. ரயிலில் வந்து கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு குதிரை வண்டிக்காரரிடம், ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் சிவாஜி நகரில் எங்காவது தங்குமிடம் காட்டுமாறும் வேண்டிக்கொண்டேன். அவர் என்னை ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடின் ஆரம்பத்தில் இருந்த அசோகா லாட்ஜ், என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில், மாதத்துக்கு தங்கும் முறை அங்கில்லை என்றும், தினமும் தங்க ரூ.30-/ க்கும் மெலாகும் என்றும் கூறினார்கள். வேறிடம் காட்டுமாறு குதிரை வண்டிக்காரரிடம் வேண்டிக்கொண்டேன் அவரும் என் நிலைமை நன்றாகப் புரிந்து கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் அருகிலுள்ள இப்ராஹிம் சாஹிப் தெருவில் இருந்த ராஜா லாட்ஜ் என்ற இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில் மூன்று பேர் தங்கும் அறையில் எனக்கு ஒரு கட்டில் தரப்படும் என்றும் மாத வாடகை ரூ.10-/ என்றும் கூறினார்கள். நானும் மாதவாடகை ரூ.10-/ அட்வான்ஸாகக் கொடுத்தேன். லாட்ஜில் காலை சிற்றுண்டிக்கும் மதிய இரவு உணவுக்குக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். என் தங்கும் பிரச்சினை முடிய என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அன்று மாலை டஸ்கர் டௌனில் இருந்த என் சகோதரி ராஜி வீட்டுக்குச் சென்று விவரங்கள் கூறினேன். என் பள்ளி நண்பன் தாமோதரன் வீட்டை விசாரித்து அவனைப் போய் பார்த்தேன். அவன் என்னை மறுநாள் வாடகை சைக்கிளில் எச்.ஏ.எல். இருக்குமிடம் காண்பிக்கக் கூட்டிச் சென்றான். நான் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் 10.. அல்லது 11 கிலோமீட்டர் தூரத்தில் எச்.ஏ. எல் இருந்தது.

                  மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல் டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும் வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின் பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன் என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தைக் கொடுத்தனர் மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம். அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை 4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும் கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில் எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் அறிந்தோம்.


 இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வாகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்குக் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலாளியை வரவழைத்து அவரைக் கடுமையாய் எச்சரித்து அனுப்பினார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது

விடுமுறைக்கு பெங்களூர் சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும் சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்  இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத திறந்த வெளியாக இருந்தது.

நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்  இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster  என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபல்கள் ஒரு வாரம்
 ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER  விவரம்.

முன்பின் தெரியாத ஒரு சிறுவனுக்கு உதவியாய் இருந்த அந்தக் குதிரை 
வண்டிக்காரரும் , ஒட்டலில் தங்கி யிருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது
ஆறுதல் கூறிஅவன் துயரங்களைத் துடைக்க உதவும் மனப் பான்மையுள்ள 
போலீஸ் அதிகாரியும் அரசின் தலைமைத் தபால் நிலையம் ஆனாலும் ஊர்
பேர் தெரியாத ஒரு இளைஞன்உதவி என்று வந்தபோது எந்த சட்டமும் 
பேசாமல் உதவி புரிந்த அந்தத் தலைமைத் தபால் நிலைய போஸ்ட் 
மாஸ்டரும் சேவை மனப் பான்மையுடனே செயல் பட்டனர் என்று எண்ணும் 
போது “ ஓ, அது அந்தக் காலம் “என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
-----------------------------------------------------------------.