Wednesday, August 31, 2011

உன் விருப்பமா...?

உன் விருப்பமா .?
-----------------------

எங்கும் நிறைந்தவன் 
எல்லாம் உணர்ந்தவன் 
எதற்கும் காரண கர்த்தா 
என்றறியப்படும் உன்னை 
பண்டைய பாவலர் அரசனை 
புகழ் பாடி பரிசில்பெற்றதுபோல் 
உன் புகழ் பாடிபோற்றி குறை தீர்க்க 
வேண்டுதல் உன் விருப்பமோ .?

ஆயிரம் நாமங்கள் கொண்டு 
பாயிரம் பல பாடி
அறியாத ஆயிரம் நிகழ்வுகள் 
கதையாகக் கேட்டு அதையே 
நிஜமென்று நம்பி உன்னை
ஏற்றிப் பாடுதல் உன்விருப்பமோ.?

ஆக்கல் காத்தல் அழித்தல் 
அனைத்தும் உன் செயல் 
என்றறிந்தும் உன் புகழ்
நீ கேட்டால்தான் உன்செயல்
சீராக இருக்கும் என்று எம்மைப் 
பாட விடல் உன் விருப்பமா.?

அழகு தமிழில் எண்ணங் கோர்த்து 
இனிதாய் பாட்டெழுதி இன்புற்று 
கேட்டது கிடைக்கும் என வேண்டி 
விழைந்து கேட்போருக்கு மட்டும்தான் 
அருளா; இல்லை மென்குரல் 
கொண்டு சுருதி பிறழாது 
இசை கொண்டு உன்புகழ் இசைப்போர்க்கு 
மட்டுமே அருளல் உன் விருப்பமா.?

செய்யும் செயல் எதற்கும்
சரியாக,நேராக எதிர்மறை 
இருக்கும் என்பது விஞ்ஞான கணிப்பு 
வாழ்வின் நெறியும் முறையும் 
முற்பிறப்பின் விளைவு இப்பிறப்பில் 
என்றெண்ணுவது மெய்ஞ்ஞான தெளிவா.? 
செயலும் விளைவும் அவரவர் பொறுப்பு 
என்று எண்ணல்தவறெனக் கூறல் உன் விருப்பமா.?

இல்லாத ஒன்றையும் 
இருப்பதாக பாவித்து 
இரண்டையும் ஒன்றாய் எண்ணி 
பகுத்தறிவால் பாகம் பிரிக்க 
முற்படும் என் போன்றோர் 
உணராத ஒன்றிடம் முறையீடல் 
கேட்பதும் உன் விருப்பமோ .?
-------------
  

Monday, August 29, 2011

கவிதைகற்கிறேன்

கவிதை கற்கிறேன்


உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களுக்கு வார்த்தைகளைக்
கோர்வையாகக் கட்டி கவிதை என்று நான் எண்ணி எழுதிக்
கொண்டிருந்தாலும்,என் அடி மனசில் அது திருப்தி தருவதாய்
இருக்கவில்லை. இதையே எது கவிதை என்று ஒரு பதிவு
எழுதினேன். பலரும் பலவிதக் கருத்துக்களைக் கூறி இருந்தனர்
எது எப்படியாயினும், நான் எப்படி எழுதி இருந்தாலும், எனக்கு
மரபு வழிக் கவிதைகளின் விதிகளாவது தெரிந்திருக்க வேண்டும்
என்ற உந்துதலில், கணினியில் பல இடங்களில் தேடினேன்.
அதற்கு முதல் தூண்டுதலாக “ நாட்டாமை “ அவர்களின் பின்னூட்
டத்தில் ,நான் படிக்க ஒரு முகவரி கொடுத்திருந்தார். அதிலும்
இன்னும் பல வலைகளிலும் கொடுக்கப் பட்டிருந்த விபரங்கள்
என் ஆர்வத்தை இன்னும் தூண்டியது. அப்படிப் படித்துக் கொண்டு
வரும்போது ஓரிடத்தில் நான் எழுதிக் கொண்டிருந்ததைப்போல்
எழுதுவதை சாடியிருந்தார்கள். உரைநடை ஆளுமை, 
எழுத்தாண்மை, கருத்தாண்மை ,வசன நடை என்று கூறலாம். 
கவிதை என்று சொல்லாதீர்கள்.அது யாப்பிலக்கணம் படைத்த 
தமிழனுக்கு இழுக்கு என்று சற்று காட்டமாகவே எழுதியிருந்தனர்

தொடர்ந்து படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதைப் பார்த்த
என் மனைவி அன்றே அறிந்திருக்க வேண்டியது அல்லவா என்று
பழித்துக் காட்டினார். என்னதான் வலையில் படித்து தெரிந்து
கொண்டாலும் என் தவறுகளைத் திருத்த ஓர் ஆசிரியர் தேவை
என்று உணர்ந்து கொண்டேன். நான் திரு ரஜினி ப்ரதாப் சிங் அவர்
களை நாடினேன். நான் எழுதியவற்றின் குறைகளை சுட்டி காட்டி
என்னால் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்தார். நான் கீழே
எழுதி இருப்பது இன்னும் திருத்தப் படாதது. குறைகளை பதிவின்
பின்னூட்டத்தில் குறிப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான்
அறிந்து கொண்ட சில பாடங்களையும் விதிகளையும் கூடவே
பதிவிடுகிறேன். ஆர்வம் இருப்பவர் அறிந்து கொள்ளலாம். .  

அசைகள் நேரசை, நிரையசை எனப் பிரிக்கப்பட்டுள்ளது


குறில் தனித்தும் (எ.கா.--” க” )
குறில் தனித்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”கல்” )
நெடில் தனித்தும் ( எ.கா,--”நா” )
நெடிலுடன் ஒற்றடுத்தும் ( எ.கா.--” நாள்” )   வருவது 
நேரசையாகும். 


குறிலிணைந்தும்( எ.கா.--”பல” )
குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”களம்”)
குறில் நெடில் இணைந்தும் ( எ.கா.--”பலா” )
குறில்நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”விளாம்” )
வருவது நிரையசை ஆகும்

அசை பிரிக்க சில உதாரணங்கள் 


மன்/னன்----- மெய்யெழுத்து வந்தால் ஒரு கோடு.
மா/ னம்------ஒரு நெடில் வந்தால் ஒரு கோடு. 
மரு/ து-------இரண்டு குறில் வந்தால் ஒரு கோடு.
வரா/ மல்----ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும்
மருந்/து ------இரு குறிலும் ஒரு மெய்யும்
பராத்/ பர---குறிலுடன் நெடில் பின் மெய்
பிறர்க்/கு--இரு மெய்களுக்குப் பிறகு

தளை தட்டுதல் 


தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் 
நிரை கொண்டு துவங்க வேண்டும். மற்ற சமயங்களில்
 நேர்கொண்டு துவங்க வேண்டும் 

சீர்கள்
நேர் நேர்---தேமா 
நிரை நேர்---புளிமா
நேர் நிரை ---கூவிளம்
நிரை நிரை ---கருவிளம் 
நேர் நேர் நேர்---தேமாங்காய்
நிரை நேர் நேர்--புளிமாங்காய்
நிரை நிரை நேர்--கருவிளங்காய்
நேர் நிரை நேர்---கூவிளங்காய்
நிரை நிரை நிரை--கருவிளங்கனி
நேர் நிரை நிரை --கூவிளங்கனி
நேர் நேர் நிரை --தேமாங்கனி
நிரை நேர் நிரை --புளிமாங்கனி  


இது தவிர இன்னும் பல விதிகள் சொல்லப் பட்டுள்ளது.
ஏதோ ஆர்வக் கோளாரால் நானும் இவற்றைப் படித்து
புரிந்து எழுத முயற்சி செய்து ஒரு சில தவறுகள் செய்து
திருத்திக் கொண்டுள்ளேன் என நினைத்து எழுதியதைப்
பதிவிடுகிறேன். ஒன்று நன்றாகப் புரிந்து கொண்டேன்.
மரபுக் கவிதையின் விதிகள் தெரிந்திருந்தாலும்
எண்ணங்களைக் கவிதையாய் வடிக்க கூடவே வார்த்தை
களும் எழுத்தும் நம் வசப்பட வேண்டும். அது படைத்தவர்கள்
தமிழன்னையால் அனுக்கிரகிக்கப் பட்டவர்கள்.

                இது என் கவிதை.
             

எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
ஏதும் சரியே எனவே இயம்பினர்
ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல் 
கற்றுத் தெளிதல் சிறப்பு. 


மரபியலில் பாட்டெழுதக் கற்க அலகிட்டு
சீர்பிரித்தால் மாமுன் நிரையும் விளமுன்நேர்
சீராய் வருதல் தளைதட்டா திருத்தல் 
வேண்டும் புரிந்து கொள் 


எது/தான்--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
கவி/தை--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
என/நான்-நிரை நேர்--புளிமா---(மாமுன் நிரை )
எழு/தி/னேன்-நிரை நேர் நேர்--புளிமாங்காய்(காய் முன் நேர் )


ஏ/தும்--நேர் நேர்--தேமா--(மாமுன் நிரை )
சரி/யே--நிரை நேர்--புளிமா--( மாமுன் நிரை )
என/வே--நிரை நேர்--புளிமா (மாமுன் நிரை )
இயம்/பி/னர்--நிரைநேர்நேர்- புளிமாங்காய் (காய் முன் நேர் )


ஏற்/கா/த-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )
உள்/ளம்--நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
உணர்ந்/தது-நிரைநிரை--கருவிளம்--( விளமுன் நேர் )
யாப்/பி/யல் நேர்நேர்நேர்--தேமாங்காய் (காய் முன் நேர் )


கற்/றுத் நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
தெளி/தல்--நிரைநேர்--புளிமா (மாமுன் நிரை )
சிறப்பு (ஈற்றடி கடைசி சீர்.)


மர/பிய/லில்-நிரைநிரைநேர்-கருவிளங்காய்(காய் முன் நேர் )
பாட்/டெழு/தக் நேர்நிரைநேர்-கூவிளங்காய் (காய் முன் நேர் )
கற்/க --நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
அல/கிட்/டு-நிரைநேர்நேர்--புளிமாங்காய்--(காய்முன் நேர் )


சீர்/பிரித்/தால்--நேர்நிரைநேர்--கூவிளங்காய்( காய் முன் நேர் )
மா/முன்--நேர்நேர்--தேமா (மாமுன் நிரை )
நிரை/யும்--நிரைநேர்--புளிமா--(மாமுன் நிரை )
விள/முன்/நேர் --நிரைநேர்நேர்--புளிமாங்காய்(காய்முன்நேர் )


சீ/ராய்--நேர்நேர் -தேமா--( மாமுன் நிரை )
வரு/தல்--நிரைநேர்--புளிமா ( மாமுன் நிரை )
தளை/தட்/ டா--நிரைநேர்நேர்-புளிமாங்காய்--( காய் முன் நேர்)
தி/ருத்/தல்-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )


வேண்/டும்--நேர்நேர் --தேமா -( மாமுன் நிரை )
அவ/சியம்-நிரை நிரை --கருவிளம் ( விளம் முன்நேர் )
கல் ( ஈற்றடி கடைசி சீர் )


    ( வலையுலகுக்கு வந்து ஓராண்டு 28-08-2011 -டன் முடிகிறது, 
        ஒரு தேர்வு எழுதியதுபோல் இருக்கிறது. தேறினேனா இல்லையா
        என்பது ஆசிரியர்கள் கையில் )
           

             -
Thursday, August 25, 2011

அவதாரக்கதை-பரசுராமர்

அவதாரக் கதை --பரசுராமர்.
--------------------------------------
(அவதாரக் கதைகளில் அதிகம் கூறப்படாத கதைகளை எழுத எண்ணி, 
 பதிவிட்டு வந்தேன். ஆறு அவதாரக் கதைகள் எழுதப்பட்டிருந்த நிலையில் 
AHTHERAI என்ற பெண் நான் தொடர்ந்து எழுத வேண்டுகோள் வைத்திருந்தார்
இளைய சந்ததிகள் இக்கதைகளை படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. மேலும் 
படிக்க வேண்டுகோள் வைக்கிறார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த 
தாத்தாவிடம் கதை கேட்கும் பேத்தி ஆதெரைக்காக இது. )


பரசுராமர் கதை அறியும் முன் அவர்
பரம்பரையும் தெரிதல் நன்று.
புரூர வசு வம்சத்தில் காதி என்பவரின்
மகள் ,சத்தியவதி என்னும் பெயர் கொண்ட
மங்கை நல்லாளை மணக்க ரிசீகர் எனும்
தவச்சீலர் விருப்பம்தெரிவிக்க ,மகளை மணக்க,
காதொன்று கருப்புடனும் உடல் வெண்மையும்
கொண்ட குதிரைகள் ஆயிரம் சீராகக் கொணர்தல்
வேண்டும் என்றொரு நிபந்தனை காதி வைத்தார்

தவ வலிமை கொண்டு வருணனிடமிருந்து
ஆயிரம் குதிரைகள் பெற்றுத் தந்து சத்தியவதியை
மணந்து இனிதே நடத்திய இல்லறம் கொடுத்த
மகன் ஜமதக்கினிக்கு அவன் பெற்றோர், ரேணுகா
எனும் மாதரசியை மணம் செய்வித்தனர்.

ஜமதக்கினி ரேணுகா தம்பதிகள் பெற்ற
பிள்ளை செல்வங்கள் ஐந்தில் கடைக்குட்டி
பரசுராமர் இவரே பரந்தாமனின் அம்சம். அவரும்
பரமசிவனிடம் தவமியற்றிப் பெற்றார் ஒரு கோடரி
அதுவே அவர் பெயருக்கும் காரணம் கூறியது.
( பரசு = கோடரி ).

ரேணுகா அதிகாலை விழித்தெழுந்து
கங்கையில் நீராடி,நீரில் விரலால் வட்டம்
வரைய, நீர்க் குடமொன்று மேல் வரும் ;அது கொண்டு
அவள் கணவன் காலைக் கடன்கள் முடியும்.
தொடர்ந்து வரும் வழக்கம் போல் ஒரு நாள்
பத்தினியவள் நீரில் வட்டம் வரைய , அப்போது
பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய
தோற்றம் நீரில் தெரிய, சற்றே மனசில் சஞ்சலம்
ஏற்பட , வெளிப்படும் நீர்க்குடம் வராமல் நின்றது.
பலமுறை முயன்றும் நீர்க்குடம் வராதது
கண்டு திகைத்து நின்றாள் ரேணுகா.

நேரம் கடந்தும் நீர் வராத காரணம் தவவலிமை
கொண்டறிந்த தபசி ஜமதக்கினி கோபம் கொண்டு,
கங்கைக் கரையில் இருந்த அவர் மனைவியை
வெட்டி வீழ்த்த ஆணையிட,மூத்த நால்வரும்
தாயைக் கொல்ல இசையாமல் மறுக்க,ஐந்தாம் மகன்
பரசுராமரிடம் அவர் தாயை வெட்டப் பணித்தார்.
தந்தை சொல் தட்டாத தனயன் தன் கைப் பரசுவால்
தாயின் தலை துண்டித்து தாதையை வணங்கி நின்றான்.

தன் சொல் தட்டாத மகனிடம் வேண்டியது கேட்கப்
பணித்த முனிவரிடம் ,தாயின் உயிர் வேண்டியும்
சோதரர் சாபம் நீங்கவும் வரம் வேண்டிப் பணிந்தார் பரசுராமர்.

கங்கை சென்று வெட்டிய தலையும் உடலும்
 பொருத்தி அவளை அழைத்தால் உயிர்
 பெற்று வருவாள் என வரமருளினார்.

கங்கைகரை சென்ற பரசுராமர் தாயின்
தலைகண்டு உடல்காணாது வருந்த, பின்
அங்கிருந்த வேறோர் உடலில் தலை பொருத்தி
அழைக்க ரேணுகா உயிர் பெற்றெழுந்தாள்,

மகனுடன் வந்த ரேணுகாவைக் கண்ட
ஜமதக்கினி இனி அவள் காளி மாரி எனும்
பெயருடன் வாழ்வாள் என வாழ்த்தினார்.

ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன்,
காட்டில் வேட்டையாடிக் களைத்து வந்தவன்
தனித்திருந்த ஜமதக்கினி முனிவரிடம் தம் பசி
போக்க வேண்டி நிற்க, கேட்டது தரும் பசு காமதேனு
அவர் வந்தோர் அனைவர் பசியைப் போக்கினார்.

காமதேனுவிடம் ஈர்ப்பு கொண்ட கார்த்த வீரியன்
முனிவரைக் கேளாது அதனை ஓட்டிச்சென்றது
அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார்.

தெய்வாம்சம் கொண்டவன் மன்னன், அவன் தவற்றை
மன்னிப்பதே சிறந்தது, மீறிக் கொல்லல் பாவம், அது
போக்கப் புனித நீராடச் சென்றுவர மகனைப் பணித்தார் .

முனிவர் மகன் நீராடச் சென்றதறிந்த கார்த்தவீரியன்
மைந்தர் தனியே தியானத்தில் இருந்த ஜமதக்கினி
முனிவரை வெட்டி வீழ்த்திக் கொன்றனர்.

கட்டிய கண்வன் மறைவு கண்டு மார்பில் மாறி மாறி
மூவேழு முறை அன்னைக் காளி மாரி அறைந்தது கண்ட,
பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர் குலம்
அழித்தொழிப்பேன் என சூளுரைத்து அன்று முதல்
நீதி நெறி தவறிய மன்னர்களை கொன்று சபதம் முடித்தார்

பின்னாளில் மிதிலையில் மைதிலி கை பிடித்து
திரும்பும் இராமனுக்குத் தன் தவ வலிமைகளைக்
கொடுத்துக் கடமை முடிந்ததென சென்றார் பரசுராமர். .
Tuesday, August 23, 2011

ஜப்பானில் நான்...

 

       
என்னுடைய ஜப்பான் பயணத்தை இருபத்தைந்து வருடத்துக்குப்
பிறகு நினைவு கூர்ந்து பதிவில் எழுதுவேன் என்று எண்ணி
யிருந்தால் அப்போதே நிறையக் குறிப்புகள் எடுத்து வைத்து
இருப்பேன்.நான் திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்
சாலை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாளனாக
இருந்த சமயம் அது.கொதிகலன் தொழிற்சாலையிலேயே தனிப்
பட்டு இயங்கக்கூடிய சாத்தியக் கூறுகள் வால்வ் டிவிஷனுக்கு
இருந்தது. அதாவது அது மற்ற உற்பத்திகளிலிருந்து வேறுபட்டு
இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் கூறுவதல்ல இப்பதிவின்
நோக்கம் BHELதன் உற்பத்திப் பொருட்களுக்கு நிறைய வெளிநாட்டு
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. வால்வ்
டிவிஷனுக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இருந்தது. அதில் ஒனறு ஜப்பானில் இருந்த TOA VALVE கம்பனி.
அவர்களுடைய உற்பத்தியின் நெளிவு சுளிவுகளை அறியவும்
நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் BHEL சிலரை
ஜப்பானுக்கு அனுப்பியது.

வாழ்க்கையில் முதன் முறையாக ஆகாய விமானத்தில் பறக்கும்
அனுபவம். அதுவும் வெளிநாட்டுக்குச் செல்லும் அனுபவம்
அடியேனுக்கு வாய்த்தது சென்னை வரை ரயிலில் சென்று,அங்கு
பயண ஏற்பாடுகள் செய்து, விமானத்தில் டெல்லி சென்று,
அங்கிருந்து, ஒசாகா செல்ல வேண்டும். நாங்கள் செல்ல
வேண்டிய விமானம் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட
வேண்டும். ஆனால் பதினொரு மணியாகியும் புறப்படத் தாமத
மானது. விமான நிலையத்திலோ, விமானத்திலோ BOMB இருப்
பதாக செய்தி வந்ததாகவும்,அதனால் தாமதமானதாகவும் பிற்பாடு
அறிந்தோம்.ஏகப்பட்ட ஆர்வத்துடனும், பயத்துடனும் விமானம்
ஏறினேன்.இவனுக்கு எதுவும் தெரியாது, உடன் வந்தவர் வழி
 நடத்திச் செல்லவேண்டும் என்று வந்திருந்த உறவினர்கள்
ஒருவரை ஒருவர் வேண்டிக் கொண்டனர். என்னை வழியனுப்ப
யாரும் வர முடியவில்லை. மற்றவர்கள் செய்வது கண்டு அதே
போல் நானும் சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு, விமானப் பணிப்பெண்
சொல்லும் விதிமுறைகளையும் ஆபத்து காலத்திய வழிமுறை
 களையும் பயத்துடன் கேட்டுக் கொண்டேன் தலை சுற்றலாம்
 வாந்தி வரலாம் என்று ஏகத்துக்கு பயமுறுத்தி இருந்தார்கள்.
எதுவுமே நிகழவில்லை வானத்திலிருந்து இரவில்சென்னையைக்
கண்ட போது,கீழே கண்ட விளக்குகள், வைரங்களை வாரி
இரைத்தது போல் காட்சியளித்தது.இரவு நேரமானதால் சென்னையை   பார்க்கமுடிய வில்லை.

டெல்லி சென்றதும் விமான நிலையத்தருகில் ஐந்து நட்சத்திர
ஓட்டலான HOTEL CENTAUR-ல் தங்க வைக்கப் பட்டோம்.பின்
ஜப்பான் செல்லும் விமானம் ஏறினோம். BHEL-நிறுவன அதிகாரி
என்ற முறையில் எங்களுக்கு CLUB என்ற BUSINESS CLASS ஏற்பா
டாகியிருந்தது. டெல்லியிலிருந்து பாங்காக் வழியாக ஒசாகா
செல்லவேண்டும்..முதலில் எங்களுக்கு எகனாமி வகுப்பில் இடம்
கொடுத்து பாங்காக் சென்று மாற்றுவதாக உறுதியளித்தனர்.
பாங்காக் வரையிலான பயணம் எனக்கு, திருச்சியிலிருந்து
துவாக்குடி செல்லும் பஸ் பயணத்தையே நினைவு படுத்தியது.
பயணிகள் பெரும்பாலோர் நம் நாட்டு கிராம வாசிகளைப்போல்
தோற்றமளித்தனர். நிறைய பேர் இஸ்லாமிய சமூகத்தினர்போல்
இருந்தனர். பாங்காக்கில் பிசினெஸ் வகுப்புக்கு இடம் மாற்றிக்
கொடுத்தனர் வசதியான இருக்கை Slumberette like Hot drink இலவச
விநியோகம்.சாப்பாடுதான் பெரிய பிரச்சினையாய் இருந்தது.

மறுநாள் என் வாட்சில் காலை பதினொரு மணியென்று காட்ட
நாங்கள் ஒசாகாவி ல் இறங்கினோம் எங்களை வரவேற்க
வந்திருந்த டோவா பிரதிநிதி கொடி பிடித்து அடையாளம்
காட்டினார். அப்போது அங்கே மதியம் இரண்டு மணி என்று
இருந்ததாக நினைவு. எங்களை நாங்கள் தங்கும் இடத்துக்கு
அழைத்துச் சென்றார். பல மாடிக் கட்டிடம்,அது ஒரு ஓட்டல்
போல் இருக்கவில்லை. ஹாஸ்டல் போல இருந்தது. அதை
பராமரிப்பவர் முதலில் எங்களுக்கு ஒரு பாடமே எடுத்தார்.
அந்த இடத்தின் விதி முறைகளை விளக்கிக் கூறினார் என்று
பிற்பாடு புரிந்து கொண்டோம். வசதியான தனி அறை. ஒரு
நாளைக்கு 40- டாலர் வாடகை என்று நினைவு. அவர்கள்
கொடுக்கும் உணவு எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.நானோ
முட்டைகூட சாப்பிடாத 100% சைவம். எதையும் கேட்டுத்
தெரிந்து கொள்ள முடியாதபடி மொழிப் பிரச்சனை. அங்கிருந்த
வெண்டிங் மெஷினில் க்ரீன் டீ எப்போதும் கிடைக்கும்.
சாப்பிடுவது என்ன என்று தெரியாமல் சாப்பிட முடியாததால்
பெரும்பாலும் காலையில் ப்ரெட் சாப்பிடுவேன். அங்கிருந்தவரை
உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது. ஜப்பானியர்கள்
அரிசி சாப்பிடுவர்ர்கள் என்று கேட்டறிந்து வீட்டிலிருந்து பருப்புப்
பொடிவகைகள் எடுத்துச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில்
அவை ஏதேனும் போதைப் பொருள்வகையைச் சேர்ந்ததா என்று
சந்தேகப்பட்டுக் கேட்டனர். அவர்கள் கொடுக்கும் சாதம் குழைந்து
இருக்கும். பருப்புப் பொடிகளும் அதிகம் உதவ வில்லை. இதனால்
நான் புகைத்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக்கூடியது
மாலைநேரங்களில் இந்திய ரெஸ்டாரண்ட் தேடி அலைந்து
உண்ண ஆரம்பித்தோம். எதிர்பார்க்காத அளவுக்கு செலவு எகிர
ஆரம்பித்தது.

அங்கிருந்தபோது இந்த ஜப்பானியப் பெண்கள் குறித்து எப்போதும்
ஒரு சந்தேகம் வரும். அவர்களுடைய வயதைக் கணிப்பதே மிகக்
கஷ்டம். எல்லோரும் மெழுகு பொம்மைகள் போல் தோற்றம்
கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு விதமாகக் குதித்துக் குதித்து
நடப்பார்கள். சாதாரணமாக நடக்கும்போது அவர்களது முடி பின்
பக்கம் மேலும் கீழும் பறந்து அடங்கும்.

ஒரு முறை ஒரு உயரமானக் கட்டிடத்திலிருந்து ஒசாகா நகரைக்
காண்பிக்க டோவா பிரதிநிதி அழைத்துச் சென்றார். நாங்கள் லிஃப்ட்
அருகே சென்றதும் அதை இயக்கும் ஒரு பெண் ஏதோ கூறி
எங்களை ஏற்றவில்லை.சற்றுப் பொறுத்து வந்து ஏதோசொல்ல
நாங்கள் லிஃப்டில் நுழைந்தோம். நாங்கள் வெளியேறும்போதும்
ஏதோ கூறினார். எதைச் சொல்லும்போதும் சிரித்துக்கொண்டே
கூறினார்.எங்களுடன் வந்தவரிடம் இது பற்றிக் கேட்டோம்.
முதலில் நாங்கள் ஏறமுற்பட்டபோது லிஃப்டில் இடமில்லாததால்
எங்களை ஏற்றமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தும் , மறுபடி
வந்தபோது எங்களை வரவேற்றும், நாங்கள்இறங்கும்போது
நாங்கள் லிஃப்ட் பயணம் ரசித்ததாக நம்புவதாகவும் தெரிவித்த
தாகவும் விளக்கம் கூறினார். இது மாதிரி லிஃப்டில் ஏறி இறங்கும்
அத்தனை வாடிக்கையாளர்களிடமும் இன்முகமாக பேசிப் பணி
புரியும் அந்தப் பெண்ணின் நினைவு எனக்கு வெகு நாட்களுக்கு
இருந்தது. அந்தப் பெண்ணையும் நம்மிடையே பணியாற்றும்
பலரையும் ஒப்பிட்டு நோக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களை TOA-வின் மேலதிகாரி அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார்
ஒரு ஜப்பானிய குடும்பத்துடன் ஒரு நாள் கழித்ததும் ஒரு
அனுபவம் அவருடைய தாயார் அவருடைய மண நாள் உடுப்பான
KIMONO-வைக் காட்டி மகிந்தார்.எல்லா நாட்டிலும் முதியோர்
குணம் ஒரேபோல் இருக்கிறது.எங்கள் தேவைகளைக் கவனித்துக்
கொள்ள நியமிக்கப் பட்டிருந்த அந்த இளம் அதிகாரி எங்களை ஒரு
ஓட்டலுக்குக் கூட்டிப்போய் ட்ரிட் கொடுக்க விரும்புவதாகக்
கூறினார்,நாங்கள் சரியென்றதும் அவருடைய மனைவியையும்
குழந்தையையும் கூட்டிவரலாமா என்று எங்களிடம் ஒப்புதல்
கேட்டது எங்களுக்கு எங்கோ நெருடியது. எல்லாம் முடிந்து
போகும்போது இது பற்றி அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது அவர் எதோ தவறு செய்
கிறார் என்று எங்களுக்கு உணர்த்தியது.

நாங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பி அவரால் எங்களுடன் கூட வர
இயலாத நிலையில் அவர் ஒரு உபாயம் சொன்னார்.ஜப்பானில்
பெரும்பாலோருக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. ஆங்கிலத்தில்
ஏதாவது கேட்டால் அரண்டு ஓடுகிறார்கள். இதைத் தவிர்க்க. சில
பொதுவான கேள்விகளை ஆங்கிலத்தில் நாம் கேட்க அதை எழுதி
அதன் கீழே அதையே ஜப்பானிய மொழியில் எழுதிகொடுத்தது
ஓரளவுக்கு உதவியாக இருந்தது கடைகளில் நாம் ஒரு பொருளை
கையில் எடுத்து பேரம் பேச முற்பட்டால் , முதலில் அந்தப்
பொருளை நம் கையிலிருந்து வாங்கி வைத்துக் கொண்ட பிறகே
பேச ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு
ஓடிவிடுவோமோ என்ற பயமாயிருக்கும்.

வால்வ் ஷாப்பில் ஒரு மெஷின் வாங்குவதற்கு ஏதோ திட்டம்
இருந்திருக்கும் போலிருக்கிறது அந்த மாதிரி மெஷின் தயாரிக்கும்
ஒரு கம்பனியிலிருந்து ஒருவர் எங்களை சந்தித்து உரையாடிக்
கொண்டிருந்தார். எங்களுக்கும் அந்த மெஷினுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்று அறிந்திருந்தும் அவர் எங்களை
உபசரிக்க ஒரு ஓட்டலுக்குக் கூட்டிப் போனார். அதில் உணவு
பரிமாறியவர்கள் எல்லோரும் பெண்கள். அரைகுறை ஆடைகள்
அணிந்து முயல் வேஷத்துடன் இருந்தனர். அது ஒரு வித்தியாச
மான அனுபவம்.

ஒசாகாவில் ஒரு துணி கடை வைத்திருந்த ஒரு சர்தார்ஜி
எங்களிடம் நல்ல சாரிகள் சிலவற்றை விற்றார். இன்னும்
அந்த சாரிகள் என் மனைவியிடம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒசாகாவில் இருக்கும்வரை அநேகமாக மெட்ரோ ரயிலில்தான்
பயணம். அங்கு எல்லோரும் ரயிலில்தான் பயணம் செய்கிறார்
கள். ரயிலில் நல்ல கூட்டமிருந்தாலும் எல்லோரும் ஒரு
ஒழுங்கை கடைபிடிப்பதால் நெரிசலிருந்தாலும் தெரிவதில்லை.
ரயில்பெட்டியின் கதவு வரும் இடங்களில் அடையாளம்
இட்டிருக்கிறார்கள். சரியாக அங்கே மக்கள் நிற்க ரயில் வருவதும்
மக்கள் ஏறி இறங்குவதும் எந்தக் களேபரமும் இல்லாமல்
நிகழ்கிறது. ரயில் வருவதும் போவதும் துல்லியமாக சரியான
நேரத்தில் நிகழ்கிறது. ரயிலின் வரவை வைத்து கடிகார நேரம்
செட் செய்து கொள்ளலாம்.  ஒரு இடத்தின் தூரத்தைக் குறிப்பிட
அவர்கள் ரயிலில் பத்து நிமிஷம் ரயிலில் இருபது நிமிஷம்
 என்றே கூறுகிறார்கள்.

ஒசாகாவிலிருந்து டோக்கியோவுக்கு JAL  ( ஜப்பான் ஏர்லைன்ஸ்)
-ல் பிரயாணம் செய்தோம். விமானத்தின் உள்ளிருந்தே விமானம்
டேக் ஆஃப் செய்வதையும் லாண்ட் ஆவதையும் ஓடு பாதை
தெரியுமாறு இருக்கையில் இருந்தே காணுமாறு CCTV அமைத்து
ஒளிபரப்புகிறார்கள். டோக்கியோவில் டிஸ்னி லாண்ட் கண்டு
களித்தோம். அமெரிக்காவில் இருப்பதன் டிட்டோ பிரதியாம்.


                      ஒசாகாவில் ஒரு சிற்றுண்டி சாலையில்

                              டோக்கியோ நகர வீதி ஒன்றில்

நாங்கள் டிஸ்னி லேண்ட் அவசியம் பார்க்க வேண்டும் என்று
அதற்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து தந்தனர். HATO BUS
என்னும் டோக்கியோவின் சுற்றுலா பேரூந்தில் எங்களை ஏற்றி
அனுப்பி வைத்தனர் டிஸ்னி லேண்ட் முக்கியமாக ஐந்து பிரிவுகள்
கொண்டது Adventure land Western land Fantasy land Tomorrow land
 World  Bazaarஎன்பவற்றில் நாம் எல்லாவற்றையும் ஒரு நாளில்
 காண இயலாதுஅதுவும் எங்களைப் போல் மொழி தெரியாமல்  
ருப்பவர்கள் எங்கு போவது எதை விடுவது என்று குழப்பமடைவது சகஜம்தானே ஒவ்வொரு பகுதியிலும் எதாவது ஒன்றிரண்டு
இடங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். முதலில்  
 அட்வென்சர் லெண்டில் Western river rail road என்று கூறப்பட்ட
ரயிலில் ஏறினோம்.அதில் பயணப்பட்டபோது ஆதிகால அமெரிக்க
காடுகளை சுற்றிப் பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென
ஆதிவாசிகள் தோன்றுவதும் நம்மை பயமுறுத்துவதும்
நம்மைக் கண்டு பயந்து ஓடுவதும் எல்லாம் எதிர்பாரா
அனுபவங்கள்.வெஸ்டெர்ன் லேண்டில் மார்க் ட்வேய்ன் ரிவர்
போட் பயணமும், ஃபண்டசி லேண்டில் சிண்டெரெல்லா காசிலும்
கண்டோம். ஆனால் மறக்க முடியாத அனுபவம் என்றால் அது,
டுமாரோ லேண்டில் ஸ்பேஸ் மௌண்டன் பயணம்தான். இதய
பாதிப்பு உள்ளவர், ஸ்பாண்டிலிடிஸ் மற்றும் பேக் பிரச்சினை
உள்ளவர் அதில் பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பு
இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விட எங்க்ளுக்கு மனசில்லை. ஏறிவிட்டோம். அது
எங்களை இருண்ட அண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதி
வேகபயணம். எதிரில் நட்சத்திரங்களும் கிரகங்களும் வேகமாக
எங்களை நோக்கி வருவது போல் பக்கத்தில் பறக்கும் இருட்டில்
அந்த பயணம் ஐந்து நிமிடத்துக்குள் இருக்கும். அதை விட்டு
நாங்கள் இறங்கும் போது எங்கள் கால்கள் தரையில் பாவாமல்
நாங்கள் மிதப்பது போல் உணர்ந்தோம். என் உடன் வந்த நண்பன்
நடக்க முடியாமல் தலை சுற்றல் வந்து அங்கேயே உட்கார்ந்து
விட்டான். அவன் சகஜ நிலைக்கு வர ஒரு மணி நேரத்துக்கும்
மேலாயிற்று. ஊர்பேர் தெரியாத வெளிநாட்டில் மிகவும் பயந்து
விட்டேன்.

இந்த பயணத்தின் கடைசி கட்டமாக இந்தியா திரும்பினோம்.
சென்னை விமானத்துக்கு நிறைய நேரம் இருந்ததால் டெல்லி
சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தோம். செண்டார் ஓட்டலில்
இருந்து வெளியே வரும்போது என் நண்பன் எதிரே கண்ணாடி
சுவர் போல் இருப்பது கவனிக்காமல் அதன் ஊடே நடக்க அவன்
மேல் அந்தக் கண்ணாடிச் சுவர் தப தப வென விழ, தலையில்
இருந்து ரத்தம் ஆறாகக் கொட்ட யார்யார் உதவியையோ நாடி,
அவனை மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் சிகிச்சைஅளித்து
தலையில் ஏகப்பட்ட தையல்களுடன் ஓட்டலுக்கு வந்தது ஒரு
மறக்க முடியாத அனுபவம்.

ஏதுமே அறிந்திராத நான் எப்படியெல்லாமோ அனுபவப்பட்டு என்
நண்பனை அவன் வீட்டில் சேர்ப்பித்தபோது நன்றியுடன் அவன்
பெற்றோர் என்னிடம் பேசியதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம்
மற்ந்து ஏதோ சாதித்தது போல் உணர்ந்தேன்.
-------------------------------------------------------------
 (பழைய புகைப் படங்களை மொபைல் கேமராவில் படம் பிடித்து 
    கணினியில் ஏற்றியது.)
                                                                                     Saturday, August 20, 2011

ஊழலுக்கெதிராக....பாகம்..2.

ஊழலுக்கெதிராக ...பாகம் 2..
-------------------------------------
என் பதிவினைப் படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
நான் எந்த கட்சியையோ பிரிவையோ ஆதரிக்க வில்லை. என்
கவனமெல்லாம் நாம் வெறுமே உணர்ச்சி வசப்பட்டு, உண்மை
நிலவரங்களைக் கோட்டை விடக் கூடாது என்பதுதான்,நான்
என் பதிவுகளில் என் ஆதங்கங்களை எழுதி வந்திருக்கிறேன்.
என் எழுத்து எனக்குத் தெரிந்தவரை அதற்கான காரணங்களை
வெளிப்படுத்தி வந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையை,
ஏற்ற தாழ்வுகளைப் பயன் படுத்திஅவர்களுடைய சின்ன ஆசை
அபிலாக்‌ஷைகள் நிறைவேற்றுவதாக அவர்களை நம்ப வைத்து
ஏமாற்றி லாபமடைந்தவர்கள் இன்று அரசியல் வாதிகளாகவும்
தலைவர்களாகவும்பவனி வருகிறார்கள்.அடக்கி வைத்திருக்கும்
உணர்ச்சிகளுக்கும் கோப தாபங்களுக்கும் வடிகால் கிடைக்காமல்
ஏங்கித் தவிப்பவர்கள்நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணா ஹசாரே
வந்துள்ளார் என்று நானும் முதலில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால்....

நம்பிக்கை நட்சத்திரம் எரி நட்சத்திரமாக மாறிவிடுகிறதோ என்ற
என் அச்சத்தின் வெளிப்பாடே, என் முந்தைய பதிவு. ஊழல் என்பது
சட்டம் போட்டு மாய்த்து விடலாம் என்று யாரும் தவறாகக் கனா
காணக் கூடாது. ஆனால் கடுமையான சட்டம் நிச்சயமாக ஒரு
DETERENT-ஆக இருக்கும் என்று நம்பலாம். கடுமையான சட்டம்
இயற்றும்போது  நடை முறைக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்க
வேண்டும். இனி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை கொஞ்சம் அலச
லாம். ஹசாரே அவர்கள் முதலில் உண்ணாவிரதம் இருந்தபோது
அவர்களும் அரசும் கலந்து ஒரு மசோதா தயாரிக்கலாம் என்ற
முடிவு எடுக்கப்பட்டு எண்ணப் பரிமாற்றங்களும் தொடங்கின.
சந்தடி சாக்கில் பாபாவும் புகுந்து அவரும் கருப்புப் பணம் வெளிக்
கொண்டுவர உண்ணா விரதம் இருந்தார் எதிர்பாரா விளைவுகளை
எதிர்பார்த்து அரசு சில நடவடிக்கைகள் எடுத்தது.பகலில் எடுக்கும்
நடவடிக்கை ஏடாகூடமான விளைவை உண்டாக்கலாம் என்று
பயந்தோ என்னவோ இரவில் ராம் தேவ் பாபாவை அப்புறப்
படுத்தினார்கள். அதுவும் எதிர்பாராத விளைவையே கொடுத்தது.
Once bitten twice shy -என்பது போல அண்ணாவை உண்ணாவிரதம்
துவங்க விட்டு தடுப்பதைவிட Prevention is better than cure -என்று
எடுத்த நடவடிக்கையும் அரசுக்கெதிராகவே முடிந்து விட்டது. யார்
என்ன நடவடிக்கை எப்போது எடுக்க வேண்டும் எடுத்திருக்க
வேண்டும் என்பதெல்லாம் நடந்து முடிந்த பிறகு அலச முடியும்.
நடவடிக்கை எடுப்பவர் எதையும் தவறு என்று தெரிந்து செய்வது
இல்லை. எதையும் சரி தவறு என்று சொல்வதல்ல என் நோக்கம்.
நடந்தவற்றை எனக்குத் தோன்றியபடி எழுதுகிறேன். எல்லாக்
கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசை ஏறி மிதிக்க ஒரு சான்ஸ்.
அவ்வளவுதான்.

ஜன் லோக் பால் மசோதாவுக்கும் அரசின் மசோதாவுக்கும் நிறைய
வித்தியாசங்கள் இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து
அமல் செய்யும் சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதே மக்கள் நலனில்
அக்கரை இருப்பவர்கள் செய்ய வேண்டியது. அரசின் மசோதாவா
இல்லை சிவில் சொசைட்டியின் மசோதாவா இல்லை அமல்
படுத்தக்கூடிய இரண்டுக்கும் நடுவிலான ,வேறு ஒரு மசோதாவா
என்பதைத் தீர்மானிக்க வேண்டும்

சரி. இப்போது இருக்கும் சாத்தியக் கூறுகள் என்னென்ன.?இந்த
நிலைமைக்கு கொண்டு வந்த அரசு அவர்களுடைய மசோதாவை
திரும்பப் பெறலாம். அப்படித் திரும்பப் பெற்றாலும் முதுகெலும்பு
இல்லாத அரசு என்று பழிக்கப் படும் அப்படி திரும்பப் பெறாமல்
சிவில் சொசைட்டியின் மசோதாவை இவர்கள் தாக்கல் செய்ய
முடியாது. அதை அமல் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன
என்பதால்தானே இவ்வளவு சங்கடங்களும்.  இருக்கும் கட்சிகள்
எல்லாம் இந்த அரசு கவிழவே முயற்சி செய்கிறார்கள். சரி. அரசு
கவிழ்க்கப்பட்டோ, ராஜினாமோ செய்தாலோ பிரச்சினைகள்
தீருமா. ? மற்ற கட்சிகளின் நிலைப்பாடென்ன. ?ஜனாதிபதி ஆட்சி
அல்லது தேர்தலுக்குப் பிறகான ஆட்சி என்பது பிரச்சனைகளுக்கு
தீர்வு கொடுக்குமா.?நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று
பிடிவாதம் பிடிக்காமல் தங்கள் அணுகுமுறையில் மாற்றம்
கொண்டு வருவதுதான் அண்ணா ஹசாரேவுக்கும் நாட்டுக்கும்
நல்லது..ஊடகங்களைப் பார்க்கும்போது அருமையாகக் கிடைத்த
சந்தர்ப்பத்தை அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டுஅறிவுக்கு
விடைகொடுத்து இழக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

பாராளுமன்றத்தை மதிக்காமல் சட்டம் கொண்டு வருவது
இயலாது. ஒத்த கருத்தை உருவாக்குவதே பலன் அளிக்கும்.
அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டைப் பார்க்கும்போது
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே துடிக்கிறார்கள் என்று
தெளிவாகிறது. இரண்டு மசோதாக்களுக்குமான வித்தியாசங்
களும்  இருவருடைய நிலைப் பாடுகளையும் உணர்ச்சிக்
கொந்தளிப்பில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் உணர
வில்லை என்றே தோன்றுகிறது.

முத்தாய்ப்பாக மீண்டும் கூறுகிறேன் கிடைத்த சந்தர்ப்பத்தை
தங்கள் அணுகுமுறையில் சற்று மாற்றம் கண்டு நழுவ விடா
மல் இருப்பதே அண்ணா ஹசாரே குழுவினருக்கும் நாட்டுக்கும்
நல்லது.
    
..  

Tuesday, August 16, 2011

ஊழலுக்கெதிராக....

ஊழலுக்கெதிராக....
-------------------------

நாட்டில் ஊழலில்லாத அரசும் அதிகாரிகளும்வேண்டும் என்பதில்
யருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் ஊழலுக்கு
எதிராக செயல்படும் ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக்
கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியா
யத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள். .
ஊழலுக்கெதிரான பலமான சட்ட அமைப்புகள் இல்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. உண்மையில் அந்த மாதிரி ஒரு பலமான
சட்ட மசோதா கொண்டு வரஅல்லவா இவர்கள் பாடுபடவேண்டும்
லோக்பால்போன்ற சட்டமசோதாக்கள் பாராளுமன்றத்தால் நிறை
வேற்றப்பட வேண்டும். பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட 540-க்கும் மேற்பட்ட அங்கத்தினரைக் கொண்டது..இவர்கள்
பல்வேறு கட்சிகளையும் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். .
இப்போது UPA-ல்பிரதான அங்கம் வகிக்கும் காங்கிரஸ்பெரும்
பான்மைக் கட்சியல்ல. அவர்கள் மட்டும் நினைத்து எந்த சட்டமோ
திருத்தமோ கொண்டு வர முடியாது. லோக்பால் மசோதா போன்ற
எதுவும் ,பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் படாமல் நிறைவேற்ற
முடியாது. தங்களைக் CRUSADER- களாகப் பாவித்துக்கொண்டு,
அகில இந்தியாவுக்கும் சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த பஞ்ச
பாண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.?அரசாங்கம் தயாரித்துள்ள
மசோதாவில் இன்ன குறை, இது சரியில்லை, இது மாற்றப்பட
வேண்டும் என்று பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் பேசி, ஒத்தக்
கருத்தை உருவாக்க வேண்டும். அதை விட்டு, பார்லிமெண்டில்
நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை
இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?

நாடு இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்
டியது மிகமுக்கியமானது இன்னிலையில் மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல்பேசுவதும் நடந்து கொள்வதும்
தலைவர்கள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்
செய்யும் செயலாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்து
தெரிவிக்க, கூட்டங் கூட்டி உண்ணாவிரதம் இருப்பதுதான்
வழியா.?

நாம் சுதந்திரம் பெற்று 64- வருடங்கள் முடிந்து விட்டது.உண்மை
யில் ஏழ்மையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஜாதி மத இன
பேதங்களிலிருந்தும் ,போட்டி பொறாமை, பேராசையிலிருந்தும்
சுதந்திரம் பெறவில்லை. அதற்கான வழிமுறைகளில் ஆக்க
பூர்வமாகத் தொண்டு செய்பவர்களை, நிறைகுடங்களாய்த்
தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல்
வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப் படுத்துவது
தவறு என்றே தோன்றுகிறது,

காங்கிரஸைத் தவிர இருக்கும் மற்ற கட்சிகள் அவர்களது
அபிப்பிராயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்களா?ஒத்த
கருத்து ஏதேனும் இருக்கிறதா.?பாராளுமன்ற Standing Committee-ல்
அங்கம் வகிக்கப் போகிறவர்கள் தானே மாற்றுக் கட்சியினரும்.

தீவிரவாதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

முன்பே நான் கூறியுள்ளபடி ஊழலுக்கான அடிப்படைக்
காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.    
   

Saturday, August 13, 2011

தகுதிக் கேற்றபடி.....

தகுதிக்கேற்றபடி....
-----------------------

சாதாரணமாக எனக்கு அரசியல் பற்றி எழுதுவதில் ஈடுபாடு
கிடையாது. ஏனென்றால் இப்போதெல்லாம் அரசியல் கொள்கை
சார்ந்து நடத்தப் படுவது இல்லை.சந்தர்ப்ப வாதிகள் லாப நோக்கம்
கொண்டே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.மக்கள் சேவை மகேசன்
சேவை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்ட கோஷமே. அரசியல்
முழுக்க முழுக்க சுயலாபத்தை எண்ணியே நடத்தப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஆட்சி நடை
பெறுவதாக அரசியல் சாசனப்படிஇருக்கவேண்டும் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடுவது வெறும்50%க்கும் குறைவானவர்
களே.( சராசரி )தேர்தலுக்கு நிற்பவர் எண்ணிக்கை சட்டமன்றம்
என்றால் ஏழெட்டுபேருக்கும் அதிகமாகவே இருக்கிறார்கள். 50%
ஓட்டு இந்த ஏழெட்டு பேர்களுக்குள் பிரிக்கப்பட்டு 25% ஓட்டு
வாங்கினவர்வெற்றி பெருகிறார் இவர் எப்படிமற்ற75% பேர்களால்
ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்சட்டமன்ற தேர்தலுக்கு நிற்க வெற்றி
பெறவோ, தோல்வியடையவோ செய்யப்படும் செலவு தலை
கிறுகிறுக்கவைக்கிறது இவ்வளவு பணம் செலவுசெய்து தேர்தல்
நிற்பவர் இதை ஒரு முதலீட்டாகவே கருதி லாபமடைய நினைக்
கிறார்சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு சம்பளமாகக் கிடைக்கும் பணம்
அவர்கள் செலவு செய்ததில் ஒரு சதவீதம் கூடத் தேறாது.இங்கே
ஊழலுக்கான விதை ஊன்றி விதைக்கப் படுகிறது. போட்ட பணம்
திரும்ப எடுப்பதிலும் லாபம் சம்பாதிப்பதிலுமே எல்லா முயற்சி
களும் நடைபெறும்.இவர்களாவது மக்கள் சேவை பற்றி
சிந்திப்பதாவது..!

தன் வாழ்வில் சம்பாதித்த பணம் அத்தனையும் நாட்டுக்காகக்
கொடுத்த நேரு குடும்பத்தினர் போலவோ, தனக்கென எதையுமே
வைத்துக்கொள்ளாத காமராசர் போலவோ இக்காலத்தில்
அரசியல்வாதிகள் இருப்பது மிகவும் அரிது. அப்படியிருக்கும்
ஒன்றிரண்டு பேரும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின்
கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நல்லது எதுவும் செய்ய இயலாத
கண்ணுகளாக இருக்கிறார்கள்.

அடிப்படையே இப்படித் தவறாக இருக்கும்போது அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் தானே இவர்கள் சம்பாதிக்க
கைகொடுக்கும் ஆதாரங்கள்.?அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள்
ஒழுங்காக நிறைவேற்றப்பட்டால் பலனடைவது நிச்சயம் அதன்
தேவை உணர்ந்தவனாகவே இருப்பான். இலவசங்கள் முதல் ,
மதிய உணவு திட்டம் முதல்கொண்டு குறைந்த பட்ச வருமான
உறுதி திட்டம்வரை , மக்களுக்குச் சேருவது என்னவோ,
அரசியல் வாதி யுடையவும் ,அதிகாரிகளுடையவும் புறங் கையில்
இருந்து வழிவதுதானே.

லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கள்
தவறு செய்ய வழிமுறைகளை வாரி வழங்கி விட்டு ,குற்றம்
செய்ய அனுமதித்துவிட்டு ,நாற்சந்தியில் மடக்கும் காவ்லாளிகள்
போல்தான் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்வதை எப்படித் தடுப்பது
என்பதே முக்கியம். அதைவிட்டு குற்றம் இழைக்க வழி வகுத்து
தண்டிக்க வழிமுறைகள் நாடுவது, எதிர்பார்க்கும் பலன் தராது.
நம்மிடையே ஒரு சொலவடை உண்டு. “கோலத்தில் போனால்
தடுக்கில் போவதும் ,தடுக்கில் போனால் கோலத்தில் போவது
போல” என்பார்கள். நம் மக்கள் அதில் நன்றாகவே தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள்.

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுத்து காரியங்கள் சாதித்துக்
கொள்வதைத் தவறாகக் கருதாத நாம்,மற்றவர்களால் காரியம்
நடக்க லஞ்சம் கொடுப்பதைப் பெரிய தவறாகக் கருதாதவர்கள்.

இந்த நிலையில் நாட்டையே லஞ்ச லாவண்யத்திலிருந்து
காப்பாற்ற வென்றே அவதரித்தவர்கள் போல் எண்ணுபவர்கள்
உண்மையிலேயே அந்த எண்ணம் கொண்டிருந்தால் நான்
என்ற அகந்தையும் மமதையும் இல்லாமல் உண்மையை
விளங்கும் விதத்தில் பேசி, சுமூகமான ஒரு முடிவுக்கல்லவா
வரவேண்டும்.?சரியோ தவறோ நாம் இப்போது இருக்கும்
அரசியல் சட்டத்துக்குள்தான் செயல்பட வேண்டும். நம்மால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் சட்டமியற்றி செயல்படுத்த
வேண்டும். அதற்கும் மீறிய செயல்களை கட்டாயப்படுத்தி
நிறைவேற்ற ,மக்களுக்கு உண்மை நிலையைப் புரிவிக்காமல்
அவர்களைத் தூண்டிவிட்டு, காந்தி அவதாரமெடுத்தவராகக்
காட்டிக் கொள்ளுதல் பச்சோந்தித்தனம் ஆகும். இவர்களுக்கு
ஆதரவாகக்குரல் கொடுக்கும் கட்சிகளோ, பிரதமர் இந்த
சட்டத்தின் பிடியில் இருப்பவராக இருந்தால் போதும் என்று
நினைக்கிறார்கள்அதற்கு மாறாகக் கூறப்படும் கருத்துக்களை
காது கொடுத்துக் கேட்கவும் இவர்கள் தயாராயில்லை. எதிர்க்
கட்சிகள் என்றைக்கும் எதிலும் எதிரிக் கட்சிகள்தானா.?

நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன். WE GET
WHAT WE DESERVE. THAT"S ALL.
---------------------------------------------------------------------

        

Monday, August 8, 2011

தணிக்கை ஏன்.?

 தணிக்கை ஏன்.?
---------------------

ஊழலுக்கெதிரான லோக்பால் மசோதா குறித்து அனுதினமும்
ஊடகங்களில் செய்திகள் அலசப்படுகின்றன.சாதாரணமானவரின்
கருத்துக்கள் எப்படியாவது உலகுக்கு உணர்த்தப்பட வேண்டும்
என்றால்நாம் நினைப்பது பத்திரிகைகளிலோ தொலைக்காட்சி
யிலோ வரவேண்டும். வலையுலக எழுத்தும் ஒரு கருவியாக
இருந்தாலும், பத்திரிகைகளில் கருத்து வெளியிட ஆசிரியருக்கு
கடிதம் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆவலால் உந்தப்பட்டு
THE  HINDU பத்திரிகைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அது
இந்த மாதம் 6-ம் தேதி வெளியாயிற்று. பத்திரிகையில் என் கடிதம்
வெளிவந்த செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் அதனைக் கண்டபோது
மகிழ்ச்சி பாதியாகக் குறைந்து சற்றே கோபம் தலைதூக்கியது.
கருத்துக்களைத் தெரிவிக்க கடிதம் எழுதுகிறோம். .அதில் கத்திரி
போட இவர்களுக்கென்ன உரிமை.?வாக்கியப் பிழையோ எழுத்துப்
பிழையோ இருந்தால் திருத்தலாம். எழுதியவற்றில் ஓரிரு
வாக்கியங்களை எடுக்கக் காரணம் என்ன.?இது இது இப்படி இப்படி
இருக்கிறது ,இன்னாரது செயல்கள் சில திருப்தி தருவதில்லை
என்று எழுதுவது குற்றமா.?நாகரிகமான மொழியில் நமக்குத்
தோன்றிய கருத்துக்களை வெளியிடத்தானே பத்திரிகைக்கு
எழுதுகிறோம். அப்படியானால் பத்திரிகையில் பிரசுரிக்க
இவர்களது தணிக்கைக்கு உட்பட வேண்டுமா.?நான் எழுதியதில்
நீக்கப்பட்ட முதல் வாக்கியம் இது
.
While due appreciation has to be given to the civil society members,
for awakening the conscience of the government to fight corruption
and present a Lok pal bill  their" holier than thou "attitude deserves
chiding.

பிரசுரிக்கப்பட்டது இது.

To say the lok pal bill presented by the government , is designed to protect the
corrupt and punish those who raise their voice against corruption is to take the
common man for granted. There may be some deficiencies ,but that has to be
ironed out by discussion and educating the public about where and what these
are.This is a government which has brought in the RTI the RTE and the rural
employment guarantee scheme and can not be just brushed aside.

நீக்கப்பட்ட கடைசி வாக்கியம் இது.

and to question their intention is deplorable. On the surface of it ,if the
prime minister brought under the ambit of the bill, they will be satisfied ,
or so it looks.To lead common man with jargon and jingoism, and to
take him for granted is not good either for the government or the
Anna led civil society.

இதைக் கண்டதும் என் மனதில் தோன்றியது

நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
--------------------------------------------    

Saturday, August 6, 2011

மொழியின் அழுகை...

மொழியின் அழுகை......!
-------------------------------

கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
----------------------------------------------------------------------


Thursday, August 4, 2011

நினைவலைகள் தடைபட்டால்....

டெமென்ஷியா எனும் மறதி நோய்.
-----------------------------------------------

அந்தக் கலியாண வீட்டில், அங்கும் இங்குமாய்,பரபரப்பாக
ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.பக்கத்தில் போவோரைப்
பார்த்து ஒரு ஸ்நேகபாவத்துடன் ஒரு புன் முறுவல். அவரை
எனக்கு அறிமுகப்படுத்துகிறான் என் நண்பன்.அவர் அவனுடைய
மாமனார். என் பெயரைச் சொல்லி என்னை அவருக்கு அறிமுகம்
செய்கிறான்.அதே ஸ்நேகபாவச் சிரிப்பு, ஒரு சிறு தலையசைப்பு.
பிறகு எங்கோ சென்று விடுகிறார். சற்றுப் பொறுத்து வந்து என்
நண்பனிடம் என்னை யார் என்று கேட்க, மறுபடியும் அறிமுகம்
செய்யப்படுகிறேன். ஒரு புன் சிரிப்புடன் சென்றவர்சிறிது நேரம்
கழித்து வந்து மீண்டும் விசாரிக்கிறார். நான் யாரென்று. என்
நண்பனும் சளைக்காமல் என்னை மீண்டும் அறிமுகப்படுத்து
கிறான்.அவரை மறுபடியும் நான் பார்க்கும்போது அவர் இடுப்பில்
கட்டியிருந்த வேட்டி, நழுவுவது கூடத் தெரியாமல் நடந்து
கொண்டிருந்தார்.கால் இடறிக் கீழே விழுந்து அடிபட்டு காயமாகி
சிராய்ப்புகள் தெரிந்தும் ஒன்றுமே நடவாததுபோல் எழுந்து ஒரு
புன்சிரிப்புடன் சென்றார். அவருடைய வேட்டியை சரியாகக் கட்டி
வேறொருவரை உதவிக்கு இருக்கும்படி கூறினான். என் முக
பாவங்களைக் கண்ட என்நண்பன் தன் மாமனார் அல்ஜிமர் எனும்
நோயால் தாக்கப் பட்டிருப்பதாகக் கூறினான்.

ஹரித்துவாரில் கங்கைக் கரையில் கங்கா மாதாவுக்கு தீப
ஆராதனை தினம் விமரிசையாய் நடக்கும். நூற்றுக்கணக்கானோர்
பார்த்துப் பங்கு கொண்டு மகிழ்வார்கள். அங்கு அருகிலேயே
சிறு கோவில் இருக்கிறது. கோவிலை வலம் வந்து கங்கா
மாதாவை தரிசனம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும்
காலணிகளுடன் இருந்தோம். அவற்றை பாதுகாப்பாக அங்கு
வைக்க இடமில்லை. இருவர் காலணிகளுக்குப் பாதுகாப்பாக
அங்கிருப்பது ,மற்றவர் தரிசனத்துக்கு செல்வது என்று ஏற்பாடு.
நானும் என் மனைவியும் இருக்க மற்றவர் தரிசனத்துக்குச்
சென்றனர். சற்று நேரம் கழித்து வந்தவர்களில் ஒருவரைக்
காணோம். கூட்ட நெரிசலில் கூட வர முடியவில்லைபோலும்
என்று நாங்கள் அவருக்காகக் காத்திருந்தோம்..முன்பின்
தெரியாத இடம், மொழியும் புரியாது என்ற நிலையில் அவரைத்
தேட நாங்கள் கிளம்பினோம். சுற்றி சுற்றி வந்தும் அவர் தென்
படாததால், ஆளுக்கொரு பக்கம் தேட ஆரம்பித்தோம். சற்றுத்
தொலைவில் எதையும் கவனிக்காமல் அவர் சென்று கொண்டு
இருந்தார்.ஓடிப்போய் அவரைப் பார்த்து அழைத்து வரும்போது
அவர் பின்னால் ஏன் வந்தோம் என்று எங்களைக் கடிந்து
கொண்டார். தரிசனம் எல்லாம் முடிந்து உணவு தேடி
அலைந்தோம்.தென்னிந்திய உணவு கிடைக்கும் இடம் தேடி
உண்ணத்துவங்கினால் அவர் மட்டும் எதுவும் வேண்டாம்
என்று கூறுகிறார்.பசியில்லை என்றார். கட்டாயப்படுத்தி
கொஞ்சம் உணவருந்தச் செய்தோம். எங்கள் அறைக்கு வந்த
அவர் , அவருடைய காலணிகளை எங்கள் அறையில் தேடத்
துவங்கினார். அங்கு இல்லையென்று சொல்லியும் நம்பாமல்
எல்லா இடமும் தேட ஆரம்பித்தார். கூடவே தான் காலணிகளை
அங்குதான் விட்டதாகவும் அடம் பிடிக்கத் துவங்கினார்.ஒருவாறு
சமாதானப்படுத்தி அவர் அறையிலேயே அவர் கட்டிலருகேயே
அவர் காலணிகள் இருப்பதைக் காண்பித்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நான் பதிவிடும் காரணம் அவர்களுக்கே
தெரியாமல் அவர்கள் அல்ஜீமர் நோயால் ( பெரும்பாலும் மறதி
நோய் என்று அறியப்படுகிறது)பாதிக்கப் பட்டிருந்தார்கள் என்று
தெரியப் படுத்தவும், குறிப்பிட்ட சம்பவங்கள் நோயின்
அறிகுறிகளே என்று தெரியப்படுத்தவுமேதான்.

இந்த நோய் அநேகமாக வயதாகும்போது சுமார் அறுபது வயதுக்கு
மேல் தாக்குகிறது. நோய்க்கான காரணம் குறிப்பிட்டுச் சொல்லும்
படியாக ஏதுமில்லை. சாதாரணமாகவே வயதாகும்போது ஞாபக
மறதி எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் கூடவே வார்த்தைகள்
தடுமாற்றம், புரிந்து கொள்ளாமை, நடவடிக்கைகளில் மாற்றம்,
செயல் திறனிழத்தல், பசியின்மை, தூக்கமின்மை,என்று அடுத்து
அடுத்து வருவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாய்
இருக்கக்கூடும்.

டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடுபடுகையில் ஒருவரை அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.

இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
--------------------------------------------------------------

.

.

Monday, August 1, 2011

என்ன நீதி..?


என்ன நீதி.?
---------------
-

ஒன்றென்று சொன்னால் நினைவுக்கு வருவது
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை.
ஆனால் அறிந்தும் உணர்ந்தோர் அவ்வொருவனுக்கு
ஆயிரம் நாமங்கள்,உருவங்கள் கொடுத்து, உள்ளம்
மகிழ்தல் பொறுக்கலாம்,அவரவர் விருப்பம். ஆனால்
அவன் படைப்பினிலே ஆயிரம் உண்டிங்கு சாதி
என்று ஓங்கி உரைத்தல் சரியோ, இது என்ன நீதி.?

            சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்
            மேதினியில் மேவு பொருள் அனைத்தும்
            இரண்டிரண்டாய் இலங்குதல் காணீரோ.!
            உண்மை பொய், ஆண் பெண் ஒளி இருட்டு,
            என்றெங்கும் எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று
            ஊடே இருப்பினும், ஒன்றில் ஒன்றை பிரித்து
            உணரும் நாம் நம் செயல்களில் நன்றெது என்றும்
            தீதெது என்றும் உணராதிருத்தல் கண்டிங்கு
            ஏதும் கேளாதது என்ன நீதி..?

அநீதி எதிர்க்க இரு கண் போதாதென்றோ
முக்காலம், முப்பரிமாணம் என்று எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மும்மூர்த்தியில்
ஒரு மூர்த்தி, முக்கண் கொண்டெரித்தான்,
அவன் தவம் கலைத்த இந்திரனுக்கும்
ஓராயிரம் கண்ணளித்தான். அவன் படைத்த
உலகில் அவலங்களுக்கெதிராய் ஒரு
கண்ணும் திறவாதது என்ன நீதி.?

           வாழும் நிலத்தை நால்வகைப் படுத்தினான்.
           வாழும் நெறிக்கு நான் மறையென்றான்.
           வர்ணங்கள் நான்கும் செய்தொழில் வகுக்க
           இருபிறப்பெடுத்தவன் உயர்ந்தவன் என்றான்.
           பிறப்பொக்கும் என்று உணர்ந்தும் வகுத்தது
           கொண்டு பிரித்திடல் என்ன நீதி.?

புலன்கள் ஐந்து,பஞ்சபூதங்கள் ஐந்து என்று
பூவுலகில் பிறந்த அனைவருக்கும் பொது
என்று படைத்த இறையா, இயற்கையா
வாய்ப்பென்று வரும்போது வித்தியாசம் காட்டுதல்
பூர்வ ஜென்ம வாசனையின் பலன் என்று கூறல்,
இப்பிழைப்பில் இழைக்காத பிழைப்புக்கு முற்பிறப்பை
காரணங் காட்டுதல் -இது என்ன நீதி.?

           பகிர்ந்துண்ணும் பறவையினங்கள் விலங்கினங்கள்
           பசிக்கு உணவைத் தேடி அலையும் அவை
           அடுத்த வேளைக்கே பதுக்கி வைக்காது.
           ஆவி பிரிந்தால் ஆறடி நிலமே சொந்தமில்லை
           என்றறிந்தவர் சேருமிடத்துக்கு கொண்டா செல்ல
           முடியும் ,தேவைபோய் மீந்தவற்றை
           ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
           அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது, எண்ணத்தில் ஓடியது.
எண்ணில் எழுத்தில் இறைபுகழ் பாட என்னால்
இயலவில்லை.கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவந்தானே. தீயவை தலை தூக்க
தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி.?
-------------------------------------------------------------