எண்ணங்கள் கவிதை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் கவிதை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பணம் என்ன செய்தது.?


                                   பணம் என்ன செய்தது.?
                                   --------------------------------

ஒரு சிற்றூரில் தங்குமிடம் தேடி வந்தான் ஒருவன்.
தங்கும் விடுதி ஒன்றில் ஒரு நூறு ரூபாய் தாளெடுத்து
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.

மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.

பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.

கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்

அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.

அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.

அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.

கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?

உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------

சனி, 29 அக்டோபர், 2011

நம்பிக்கை...

                                   நம்பிக்கை...
                                  ----------------

நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.

பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.

நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------



திங்கள், 12 செப்டம்பர், 2011

காலத்தின் கோலம்...

காலத்தின் கோலம்....
---------------------------

ஆடவும் பாடவும் ஓடவும் ஒன்றாய்க்
கூடவும் ஆசை இருந்தென்ன லாபம் 
உள்ளத்தின் ஆவல் உடலு ணர்ந்து 
செயல்பட்டி ருந்ததந்தக் காலம்.  

நேற்றைய நாளில் நினைவைக் கடத்தியும் 
கூற்றுவன் எண்ணமென் நெஞ்சினில் நீங்கா 
திருக்கவே அறிந்தேன்நான் காலனின் வரவை 
தவிர்த்தல் இயலா தெனவே. 

பல்வேறு எண்ணங்கள் சிந்தையி லழுத்த 
சொல்லொணாத் துன்பங்கள் ஆட்டிப் படைப்பினு 
மெல்லாம் மறக்கவே செய்ததென் பேரன் 
செல்லம் அவன்சொன்ன சொல். 

படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை 
பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை 
ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்
மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்

( எதுவும் கடந்து போகும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் நான் நலமாக 
இருக்கிறேன் என்று எண்ணும்போது என் உபாதையில் முக்கிய பங்கேற்ற இடுப்பு 
வலி “ நான் எங்கும் போகவில்லை” என்று கூறும் வகையில் அவ்வப்போது 
வந்து வருகையை பதிவிட்டுச் செல்லும் என்று எழுதியிருந்தேன். அவர் இந்த 
முறை வந்து உன்னை விடுவேனா என்று வந்து பாடாய்ப் படுத்துகிறார் வலி 
காரணமாக வலைப் பக்கமே வர முடிய வில்லை. இதையும் மிகவும் சிரமத்
துடன் எழுதுகிறேன். பதிவு முன்பே எழுதியிருந்தது. இப்போது பிரசுரிக்கிறேன். 
முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன். அதுவரை மற்ற பதிவர்களின் 
பதிவுகளுக்கு பின்னூட்ட மிடாதது பற்றி தவறாக எண்ணவேண்டாம் என்று 
கேட்டுக் கொள்கிறேன். நன்றி.) 
 .  





.    

புதன், 31 ஆகஸ்ட், 2011

உன் விருப்பமா...?

உன் விருப்பமா .?
-----------------------

எங்கும் நிறைந்தவன் 
எல்லாம் உணர்ந்தவன் 
எதற்கும் காரண கர்த்தா 
என்றறியப்படும் உன்னை 
பண்டைய பாவலர் அரசனை 
புகழ் பாடி பரிசில்பெற்றதுபோல் 
உன் புகழ் பாடிபோற்றி குறை தீர்க்க 
வேண்டுதல் உன் விருப்பமோ .?

ஆயிரம் நாமங்கள் கொண்டு 
பாயிரம் பல பாடி
அறியாத ஆயிரம் நிகழ்வுகள் 
கதையாகக் கேட்டு அதையே 
நிஜமென்று நம்பி உன்னை
ஏற்றிப் பாடுதல் உன்விருப்பமோ.?

ஆக்கல் காத்தல் அழித்தல் 
அனைத்தும் உன் செயல் 
என்றறிந்தும் உன் புகழ்
நீ கேட்டால்தான் உன்செயல்
சீராக இருக்கும் என்று எம்மைப் 
பாட விடல் உன் விருப்பமா.?

அழகு தமிழில் எண்ணங் கோர்த்து 
இனிதாய் பாட்டெழுதி இன்புற்று 
கேட்டது கிடைக்கும் என வேண்டி 
விழைந்து கேட்போருக்கு மட்டும்தான் 
அருளா; இல்லை மென்குரல் 
கொண்டு சுருதி பிறழாது 
இசை கொண்டு உன்புகழ் இசைப்போர்க்கு 
மட்டுமே அருளல் உன் விருப்பமா.?

செய்யும் செயல் எதற்கும்
சரியாக,நேராக எதிர்மறை 
இருக்கும் என்பது விஞ்ஞான கணிப்பு 
வாழ்வின் நெறியும் முறையும் 
முற்பிறப்பின் விளைவு இப்பிறப்பில் 
என்றெண்ணுவது மெய்ஞ்ஞான தெளிவா.? 
செயலும் விளைவும் அவரவர் பொறுப்பு 
என்று எண்ணல்தவறெனக் கூறல் உன் விருப்பமா.?

இல்லாத ஒன்றையும் 
இருப்பதாக பாவித்து 
இரண்டையும் ஒன்றாய் எண்ணி 
பகுத்தறிவால் பாகம் பிரிக்க 
முற்படும் என் போன்றோர் 
உணராத ஒன்றிடம் முறையீடல் 
கேட்பதும் உன் விருப்பமோ .?
-------------