ராமன் எத்தனை ராமனடி......
---------------------------------------
அவதாரக் கதைகளில் அவதார புருஷர்களின் தோற்றம் பற்றி மட்டுமே சேதி இருக்கிறது கிருஷ்ணர் தவிர மற்றவர்களின் மறைவு பற்றி எங்கும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . திருமதி கீதா சாம்பசிவம் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் அவரே எழுதி இருப்பதாகவும் எழுதி இருந்தார்.திரு அப்பாதுரை அத்யாத்ம ராமாயணத்தில் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் பின்னூட்டம் எழுதி இருந்தார். அதில்லாமல் துளசிதரன் மற்ற அவதாரங்கள் கடவுளாகவே தோன்றியதால் மறைவு இல்லை என்றும் ராமனின் மறைவு பற்றி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார்கள். இந்த செய்திகள் என் சந்தேகத்தைப் போக்கவில்லை. அப்பாதுரை கூறி இருந்த அத்யாத்ம ராமாயணம் பற்றிய விவரங்களுக்காக கூகிளில் தேடினேன் அப்படித் தேடி அறிந்த சில விஷயங்களைப் பகிர்கிறேன்
ராமாயணக்கதை என்பது பொதுவாக ராமர் சீதையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் விஷயங்கள் கதைசொல்லிகளைப் பொறுத்து மாறுபட்டிருக்கிறது முதன் முதலில் வால்மீகி ராமாயணம் எழுதினார் என்றும் அது 24000 பாடல்கள் கொண்டது என்றும் பலருக்கும் தெரிந்திருக்கும் இந்த ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல ராமாயணங்கள் எழுதப் பட்டது என்றும் தெரிகிறது.சம்ஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் , அத்யாத்ம ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் அகஸ்தியராமாயணம், ஆநந்த ராமாயணம் போன்றவைகளும் தமிழில் கம்பராமாயணம், தெலுங்கில் ரங்கநாதராமாயணம் , ஹிந்தியில் துளசி ராமாயணம் அல்லது ராமசரித மனசா, பெங்காலியில் கீர்த்திவாச ராமாயணம் , மற்றும் மலையாளத்தில் துஞ்ச்த்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயண மொழி பெயர்ப்பும் பிரசித்தி பெற்றவை. இவை எல்லாவற்றுக்கும் மூலமாகக் கருதப் படுவது வால்மீகியின் ஆதி காவ்யம் எனக் கருதப் படும் ராமாய்ணமே.
ராமனின் மறைவு பற்றிய செய்திகள் தேடப்போன இடத்தில் அது பற்றிய கதை ஏதும் கிடைக்கவில்லை. அத்யாம ராமாயணத்தில் இருக்கலாம் என்றால் எனக்கு சம்ஸ்கிருதமோ மலையாளமோ எழுதப் படிக்கத் தெரியாது. இருந்தாலும் இந்த ராமாயணங்களுக்குள்ளான வேறுபாடுகளைக் கண்டறிய ஒரு வாய்ப்பாயிருந்தது
அத்யாத்ம ராமாயணம் பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது இதை எழுதியவர் வேதவியாசர் என்றும் இது பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையிலான சம்பாஷணையை பிரம்மா நாரதருக்குக் கூறியதாகவும் சொல்லப் படுகிறது ஏற்கனவே வால்மீகியின் ராமாயணம் இருக்கும் போது இது ஏன் என்னும் கேள்விக்குப் பதிலாக, இது அத்வைத மார்க்கத்தின் ஒரு நீட்சியாகவே கருதப் படுவதாலேயே வியாச ராமாயணம் என்பதற்குப்பதிலாக அத்யாம ராமாயணம் என்று அழைக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது 24000 பாக்களின் சாரத்தை 4000 பாக்களிலேயே சொல்லியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் வரும் பாக்கள் மந்திரங்களாக எண்ணப் படுவதால் இதை மந்திர சாஸ்திரம் என்றும் சொல்கிறார்கள் இதை முறைப்படி பாராயணம் செய்வது பக்தியின் வெளிப்பாடு என்றும் எண்ணப்படுகிறது
அதனால்தானோ என்னவோ கேரளமக்கள் மலையாள கர்க்கடகமாதத்தை (ஆடி) ராமாயண மாதமென்று கூறி துஞ்சத்து எழுத்தச்சனின்அத்யாத்ம ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வார்கள்
கதை சொல்லிகள் அவரவர் பண்புகளின் படி சில சம்பவங்களை வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டு எழுதி இருப்பார்கள். சரி. வால்மீகி ராமாயணத்துக்கும் அத்யாத்ம ராமாயணத்துக்குமான சில்முக்கிய வேறுபாடுகளைக் காண்போம்
வால்மீகி ராமாயணத்தில் ராமன் ஒரு சிறந்த மனிதப்பிறவியாக, எல்லா ஆசாபாசங்களுடனும் சித்தரிக்கப்படுகிறான் அத்யாத்ம ராமாயணத்தில் ராமனை விஷ்ணுவின் அவதாரமாகவே சித்தரிக்கிறார்கள்.வால்மீகி நாரதரிடம் எல்லா நல்ல குணநலன்களுடனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமாயணமாக வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது இந்த இரு ராமாயணக்கதையில் முக்கியமாக உள்ள வேற்றுமைகள் சில
.வால்மீகி ராமாயணத்தில் சீதை சீதையாகவே கடத்தப் படுகிறாள் அத்யாத்ம ராமாயணத்தில் சீதை கடத்தப் படுவாளென்பது ராமனுக்கு முன்பே தெரிந்து சீதையை அக்னிப் பிரவேசம் செய்ய வைத்து அவள் இடத்தில் ஒரு நிழல் சீதையை உருவாக்க அவள் கடத்தப் படுகிறாள் இது லக்ஷ்மணனுக்கும் தெரியாமல் செய்தது. போர் முடிந்தபின் அக்னிப் பிரவேசம் செய்வது நிழல் சீதை. அதில் இருந்து மீண்டு வருவது உண்மை சீதை.அத்யாத்ம ராமாயணத்தில் ராவணனுக்கு ராமன் யார் என்று தெரிந்து அவர் கையால் இறப்பது முக்தி என்று தெரிந்திருந்தது. லங்கைக்குப் போகும் முன் ராமேஸ்வரத்தில் லிங்க்த்தை ஸ்தாபித்து வண்ங்கியது வால்மீகி ராமாயணத்தில் இல்லையாம்அத்யாத்ம ராமாயணத்தில் ராவணன் சீதையை ஒரு தாயைப் போல் மரியாதையுடன் நடத்தினான் என்று சொல்லப் படுகிறது அத்யாதம ராமாயணத்தில் ராமன் நான்கு கைகளுடன் ஒரு அவதார புருஷனாகவே பிறக்கிறான் கௌதம முனிவரின் மனைவி அஹல்யா வால்மீகி ராமாயணத்தில் உருவமில்லாதவள். அத்யாத்ம ராமாயணத்தில் கல்லாகக் காட்டப் படுகிறாள்.அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் வனவாசத்துக்குக் காரணமாக சரஸ்வதி தேவியே மந்தரை கைகேயி ரூபத்தில் செயல் படுகிறார் என்று சொல்லப் படுகிறது. அத்யாத்ம ராமாயணத்தில் வால்மீகி முனியின் பின்னணி விவரிக்கப் படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் அது இல்லை அத்யாத்ம ராமாயணத்தில் வாலியின் மனைவியை ஆறுதல் படுத்துவது ஹனுமான். ஆனால்வால்மீகிராமாயணத்தில் ராமனே தாராவுக்கு ஆறுதல் கூறுகிறான் மாயையால் ஒரு சீதையை உருவாக்கி அவளை இந்திரஜித் கொல்வது போல் சொல்லப்பட்டிருப்பது வால்மீகி ராமாயணத்தில் அத்யாம ராமாயணத்தில் அது போல் இல்லை போருக்குப் போகும் முன் அக்னி யாகம் செய்து சிரஞ்சீவித்தனமையை அடைய ராவணன் சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படி முயற்சிப்பதும் அது வானரங்களால் முறியடிக்கப் படுவதும் அதயாம ராமாயணத்தில் உண்டு. வால்மீகியில் இல்லை
அத்யாம ராமாயணத்தில் ராமன் ஒரு அவதார புருஷனாகவே ஆரம்பத்திலிருந்தே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் வால்மீகியில் அது
இலைமறை காய் மறையாகவே கூறப்பட்டிருக்கிறது
நாம் கேள்விப்பட்டிருக்கும் கதைகள் எல்லாம் எல்லா ராமாயணங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப் பட்டவையே
எததனை ராமாயணங்கள் இருந்தாலென்ன. தாத்தா பாட்டி சொல்லிய கதைகளின் ராமாயணம்தான் மனசில் நிற்கும்அவர்களும் எல்லாக் கதைகளையும் கலந்து கட்டித்தான் சொல்கிறார்கள் ஏறத்தாழ எல்லாவிதக் கதைகளையும் கேட்டிருந்தாலும் அவற்றின் துவக்கம் எங்கே என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. ராமனின் மறைவு பற்றித் தேடப் போன எனக்கு அது பற்றிய செய்தி மாத்திரம் கிடைக்கவில்லை. நானிது வரை திரட்டியசெய்திகள் ஹிந்து பிடியாவின் வெளியீட்டிலிருந்துதான்.
கடைசியில் மனிதனாக சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு குறித்து வால்மீகியில் இல்லை. ஆனால் அவதாரமாகவே சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு பற்றி அத்யாத்ம ராமாயணத்தில் இருப்பதாக அப்பாதுரை சொன்னார்.படித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லையே.
-