Monday, January 30, 2012

தீர்வுதான் என்ன .?


                                               தீர்வுதான் என்ன.?
                                               -------------------------

      வர்ணாசிரம தர்மங்கள் ஆதிகாலத்தில் கடைபிடிக்கப் பட்டன.
அதன் அடிப்படைக் காரணம் , சிந்திக்கப்பட்டோ சிந்திக்கப்
படாமலோ DIVISION OF LABOUR என்னும் அடிப்படையே.மக்கள்
கூட்டத்தையும்,அரசு எல்லையைப் பேணிக் காப்பவர்கள்
க்ஷத்திரியர் என்றும், மக்களை நல்வழிப் படுத்தி, அறிவுரைகள்
கூறிப் பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருப்பவர்களை
அந்தணர்கள் என்றும், பண்டமாற்றுக்கும்,வியாபாரத்துக்கும்
வைசியர்கள் என்றும் ,உடல் வருத்திப் பணி செய்பவர்களை
சூத்திரர்கள் என்றும் பிரித்தனர். ஆனால் இயற்கையிலேயே
மற்ற ஜீவ ராசிகளுக்கு இல்லாத பகுத்தறிவு என்ற ஒன்றை
இல்லாத அளவுக்கு வளைத்து , இந்த வகுப்பினரையே ஆண்டை
என்றும், அடிமை என்றும் எண்ணத் துவங்கி, எப்போதும் அவர்கள்
கை மேலோங்கி நிற்க,என்னவெல்லாம் செய்ய முடியுமோ
அவற்றைச் செய்து ,அவரவர் அதிகாரத்தை ஊர்ஜிதப்படுத்திக்
கொண்டனர். இதையே நான் என்னுடைய நாடகமொன்றில்
அரசன் ஆண்டான், பின் அவனுக்கு அறிவுரை என்று கூறி
அந்தணன் ஆண்டான், அதன் பின் பணபலம் படைத்த வைசியர்
ஆண்டனர், ஆண்டுகொண்டும் இருக்கின்றனர்.காலச் சுழலில்
இனி ஆள இருப்பவன் சூத்திரன் எனப்படும் தொழிலாளி என்ற
முறையில் வசனம் எழுதியிருந்தேன்..

       மனிதரில் ஏற்ற தாழ்வு ஏன் என்ற எண்ணம் தோன்றும்போது
இதன் அடிப்படைக் காரணமே ஒருவனை அடக்கி ஆளவேண்டும்
என்ற மனிதனின் சீர்கெட்ட குணம்தான் என்று தெரிகிறது. மனித
குலத்தில் பிறப்பால் பெரியவன் சிறியவன் என்ற பேதமே
மற்றவரின் முதுகில் சவாரி செய்ய எண்ணும் கேடு கெட்ட குணம்
தான் காரணம் என்று தோன்றுகிறது.

      எந்தக் காரணங்களுக்காக வர்ணாசிரம பேதங்கள் நடைமுறைப்
படுத்தப் பட்டனவோ அவை சமீப காலத்தில் செல்லாக் காரணம்
ஆகிவிட்டது

      அடுத்தவன், பந்தயத்தில் நம்மை முந்திவிடுவான் என்ற
எண்ணமே அவனுக்கு வாய்ப்பு கொடுப்பதைத் தவிர்த்து வந்தது.
அறிவுக்கண்ணைத் திறக்க விடாமல்,அனாவசியமான
பேதங்களைக் காட்டிஒரு சமூகத்தையே குருடாக்கி வளர்த்து
விட்டோம். இதில் ஏகத்துக்கும் அநியாயம் என்னவென்றால்
இவற்றை கடவுளின் பெயராலும் ,மதத்தின் பெயராலும் இறுக்கி
விட்டோம். நம்மிடையே இருந்த இந்த பிரித்து, பிரிந்து வாழும்
குணங்களினால் நம்மை அந்நியர் ஆதிக்கத்துக்கு அடிமைப்
படுத்தி விட்டோம். வந்தவர்களுக்கு வரவேற்பு வாசலாகி ,அவர்
உதவியுடன் இந்த வேற்றுமைகளை பயிரிட்டு உரமிட்டோம்.
அவர்களுக்கென்ன ...எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கினர் இவை
எல்லாமே கடந்த நானூறு வருடங்களுக்குள் நடந்ததே.

      இவற்றை ஆராயக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாத்திகன்,
நம் கலாச்சாரத்தை மதிக்காதவன் என்றெல்லாம் பழி வருகிறது.
ஆத்திகம் நாத்திகம் ஆன்மீகம் என்றெல்லாம் ஏதேதோ கூறி,
அறிவுக் கண்களைத் திறக்க விடுவாரில்லை.

     நடந்த தவற்றைத் திருத்த முனைவோரும், அதே தவறுகளை
செய்து தங்களுக்குச் சாதக மாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.
ஒருவனை சுயமாக சிந்திக்க விடாமல் தலைவர்கள் வழி நடத்த
தொண்டர்கள் அதே தவறான பாதையில் கொண்டு செல்லப்
படுகிறார்கள்.

     எனக்குத் தெரிந்து இந்த சாதீய வேறுபாடுகளை ஒழிப்பதில்
யாருக்கும் உடன்பாடில்லை. முக்கியமாக ,இந்த வேறுபாடுகளை
காட்டியே இன்னொரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கி
அடுத்தவன் முதுகில் சவாரி செய்ய, இன்னொரு கூட்டம் தயாராகி
வருகிறது. அறுபதுகளில் காணாத பேதங்கள் இப்போது முன்னை
விட அதிகமாக வெளிச்சத்தில் மிளிர்கின்றன.

     எல்லோருக்கும் அறிவுக்கண்களைத் திறக்க கல்வி வழங்கப்பட
வேண்டும். கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று எந்த சட்டம்
வந்தாலும் அவற்றை செயல் படுத்த விடாமல் எப்பொழுதும் ஒரு
கூட்டம் தயாராயிருக்கிறது. கல்வி லாபம் தரும் வியாபாரமாகி
விட்டது. நம் மக்களும் தனியார் பள்ளிகளே சிறந்த கல்விக்
கூடங்கள் என்று நம்பி அவற்றையே ஆதரிக்கிறார்கள். அதிகக்
கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சிறந்தது என்ற ஒரு மாயையில்
நம் மக்கள் இருக்கின்றனர். அரசு பள்ளிகளோ பெயருக்குச் செயல்
படுவதுபோல் தோற்ற மளிக்கிற்து.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25% இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.

     எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.
-----------------------------------------------------------------------------------


Saturday, January 28, 2012

நினைவில் நீ..(அத்தியாயம் நான்கு.)

                           
                                நினைவில் நீ ( நாவல் தொடராக )
                               -----------------------------------------------
                                             ----- 4 -----


         ”அடடா.!இதுகள் அடிக்கிற கொட்டத்தில் அடுத்து இருப்பவர் என்ன பேசுகிறார் என்றே தெரிவதில்லை. என்ன சொன்னேள்.? கண்ணன் வீட்டை விட்டு ஓடிட்டானா.? உங்களுக்கு யார் சொன்னது.? பாட்டி ரொம்பவே நொந்திருப்பார்களே.கமலத்தின் கணவன் கொண்டு வந்த அந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, இந்தக் காலத்துப் பெண்களின் ஒரு தனிப் பிரதிநிதி இந்தக் கமலம். வாழ்க்கையில் தன் சுயப் போராட்டங்களில் கொஞ்சம் கவனமாக ஈடுபாடு கொடுத்துக் கவனித்தால் ஓரளவு நிம்மதியாய் வாழ்க்கை அமைந்திருக்கும்.. பெண்களே இல்லாத குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்து வளர்ந்தவளுக்கு பெண்மை என்பது மண வாழ்க்கை நடத்திப் பிள்ளைகளைப் பெறுவது ஒன்றுதானென்று ஐயப்படும் விதத்தில் குணம். அதைக் கொண்டவனுக்காவது மாற்றியமைக்கும் சக்தி உண்டா என்றால் அதுவும் இல்லை. கமலத்தின் குண விசேஷ வேறுபாடுகளை கண்டறிந்தவன், அதனால் தனக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று தோன்றினால் அதனை ஊக்குவிப்பவன். ஊரார் பேச்சுகள் ,உள்ளூரின் பற்று வரவுகள் இவற்றை ஒரு நீதிபதி கோர்ட்டில் விசாரித்தறிந்து தீர்ப்பு கூறுவதுபோல, வாதி, பிரதிவாதி வக்கீல்கள் இல்லாமலெயே தீர்ப்பு கூறி கமலத்தை சீண்டுவான். தன்னுடைய கணவனின் தீர்ப்பில் அலாதி நம்பிக்கை உண்டு கமலத்துக்கு. ஆனால் அதே அளவு நம்பிக்கை பாட்டியின் தீர்ப்பிலும் அவளுக்குண்டு.அதனால் பாட்டியின் தீர்ப்புகளோடு தனது தீர்ப்பும் ஒத்துப் போக வேண்டும் என்ற கவனம் கமலத்தின் கணவனுக்குண்டு.

  கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியதைப் பாட்டியாலேயே தடுத்திருக்க முடியாது இருந்திருக்க வேண்டும். இல்லை பாட்டியின் விருப்பப்படியே கண்ணன் வெளியேறி இருக்கிறான், அல்லது வெளியேற்றப்பட்டு இருக்கிறான். பாட்டியால் தடுக்க முடியாத சம்பவம் இருக்க முடியாது. அதாவது கண்ணன் வெளியேறியதில் பாட்டிக்கு ஆட்சேபணை இருந்திருக்காது. ஆகவே தவறு கண்ணன் மேல்தான் இருக்க வேண்டும். உங்கள் கண்ணன் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ நாலு பேர் மத்தியிலே நல்லது பொல்லது செய்யாமே சிவனேன்னு இருக்கத் தெரியாது.எங்கேயோ சரியா மாட்டிண்டு இருக்கான்.அப்பாவைப் பகைச்சாச்சு;இப்போ பாட்டி மாமாமார்;இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்தையே பகைச்சிட்டாலும் ஆச்சரியமில்லை..


    எங்க கண்ணன் ரொம்ப நல்லவனாக்கும். அப்பாவப் பகைச்சிட்டது அவன் தப்பில்லை.அவனாகவும் பகைச்சுக்கலை. அப்பாதான் அந்த இரண்டாம் தாரத்தோட ஆட்டத்துக்கு சரியா மாட்டிட்டார். அவளைப் பகைச்சிட்டப்போ அப்பாவும் பகையாயிட்டார். அது யார் தப்புங்கறேன்? கண்ணன் இன்னைக்கும் அப்பாவை நினைச்சுப் புலம்புவான். இந்த அப்பாவுக்கும் ஆசை அன்புங்கற்து எல்லாம் அவள் ஒருத்திகிட்ட மட்டுந்தான். எதுக்கும் இல்லாதவரைப் பத்திப் பேசறது நன்னாயில்லை. ஆனா கண்ணன் பாட்டிகிட்ட அப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.”----பாட்டியிடம் கண்ணன் பயமில்லாமல் ஏதோ தவறாக நடந்திருக்கிறான் என்பது கமலத்தின் தீர்ப்பு


    “ அதுசரி....கண்ணனும் உங்கண்ணா சுந்தரமும் நீயும் உங்க பாட்டியும்தான் உங்கப்பாவையும் உங்க சித்தியையும் பத்தித் தவறாப் பேசறேள். ஆனால் உன் தம்பி பாபு அவாளை எல்லாம் தலைமேல வெச்சு ஆடறானே. ஆமா.. உங்க சித்திக்கு என்ன வயசிருக்கும்னு சொன்னெ.?

     ஏன் என்னோட வயசைவிட ஒண்ணு ரெண்டு வருஷம் கூடுதலாயிருக்கும்.

     “ ஒரு சமயம் அப்படியுமிருக்குமோ.?

     இல்லாத ஒன்றை இருப்பதாகத் தான் முடிவு செய்து அதனை சூசகமாக வெளியிட்டால், கமலம் எப்படி புரிந்து கொள்கிறாள் என்று பார்க்கிறான்..புரியாததை புரிந்த மாதிரி காட்டிக்கொள்ளும் இனத்தவள்தானே கமலம். என்ன எழவோ யார் கண்டா.?.மருந்து கிருந்து கொடுத்து அவனைக் கைக்குள்ளே போட்டிருப்பாள் அவள். நமக்கெதுக்கு வம்பு தும்பெல்லாம். காப்பிப் பொடியில்லை, சக்கரையில்லை. காப்பியில்லாமல் உங்களுக்கும் எனக்கும் முடியாது. என்ன பண்றது.?

    என்னைக்கேட்டா...உங்க பாட்டிகிட்ட போய் ஒரு பத்து ரூபாய் வாங்கி வாயேன். மேலும் கண்ணனோட விவரங்களையும் தெரிஞ்சுண்டு வரலாம். இந்தா.. பஸ்ஸுக்கு சில்லறை.


              பொறுப்புகளை பெண்டாட்டியிடம் சுமத்திவிட்டுச்சென்றான் அந்தப் பேர்வழி. கமலத்துக்கு காப்பிப் பொடி, சர்க்கரை ஞாபகம் மறந்து விட்டது. கணவன் சொன்ன செய்தி, தங்களுக்குள் நடந்த பேச்சு இவற்றை சிறிது நேரம் அசைபோட்டாள். வானம் இருண்டு ஒன்றிரண்டு மின்னல்களும் தோன்றி,இடி இடித்ததும்தன் நிலைக்கு வரப் பெற்றவள் இருட்டி விட்டதை உணர்ந்து,கொல்லையில் காயப் போட்டிருந்த துணிகளை வீட்டுக்குள் எடுத்து வந்தாள்..சமையல் வேலை முடிந்திருந்தது.பிள்ளைகள் கும்மாளம் மழையைக் கண்டதும் அதிகரிக்க ஆரம்பித்தது.அவர்களை அடக்கி ,விளக்கைப் பொருத்தியவள் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.



          அன்றைக்கும் இதுபோல் ஒரு சாயங்காலம். கண்ணன், சுந்தரம், பாபு, கமலம் நால்வரும் வீட்டிலிருந்தார்கள். அப்பா “ அவள் “ ஊருக்குப் போயிருந்தார்.அவளது ஏதோ ஒரு பிரசவ காலம். அன்று மாலை அப்பா வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதெல்லாம் மனம் நிறைய சாப்பாடு என்ற பேச்சே கிடையாது. சாப்பாடு டிபன், காப்பி எல்லாமே வயிறு முட்டக் கஞ்சியும் கருவேப்பிலைத் துவையலும்தான். அப்பா மட்டும் இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பார்.

      எட்டுமணி வரை காத்திருக்கப் பொறுமையின்றி ஏழு மணிக்கே சாப்பாட்டை முடித்தாயிற்று. அப்பா வர இன்னும் ஒன்றிரண்டு மணி நேரமாகலாம். அதுவரை நால்வரும் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அண்ணா சுந்தரத்துக்கு வேலையில்லை.கண்ணன் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான். பாபு சின்னவன்.
கமலத்துக்குக் கலியாணப் பேச்சு துவங்கலாமா என்றிருந்த நேரம்.

 பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசப்பேச, பேசப்படும் செய்தி என்னவோ திரும்பத் திரும்ப இருக்கும் நிலையைபற்றியதாகவே இருந்தது. தூங்கப் போகலாமென்றால் தூக்கம் வரவில்லை, நேரமுமாகவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அப்பாவும் வருவார். அப்பாவின் வரவிலோ, ஊரிலிருப்பவளின் நலனிலோஅக்கறை கொண்டு யாரும் விழித்திருக்கவில்லை. அப்பா வரும்போது ஏதாவது சாப்பிடக் கொண்டு வருவாரா என்னும் நப்பாசைதான். இடியும் மின்னலும் வலுக்கவே சுந்தரம் குடையெடுத்துக் கொண்டு அப்பாவைக் காண ஸ்டேஷனுக்குக் கிளம்பினான். சென்றவன் இரண்டு மணி நேரம் கழித்துத் தனியாக வந்தான். அப்பா வரவில்லை.

       “ அப்பா இன்னிக்குத்தான் இரவு வ்ண்டியில் வருவதாகச் சொல்லியிருந்தார். நல்லாப் பார்த்தியா அண்ணா. மழை வேற பலமா இருக்கு.... “அவ்வளவு நேரம் பேச்சில் அதிகம் கலந்து கொள்ளாத பாபுதான் முதலில் சுந்தரத்திடம் கேட்டான்.

    எனக்குத் தெரியும் போடா... வெளிலே மழையில போய் வந்திருக்கேன்.எனக்கில்லாத அக்கறை உனக்கு. நல்லாத்தான் பார்த்துட்டு வந்தேன். அப்பா இன்னிக்கு வர மாட்டார். அவருக்கு அவளைப் பார்த்ததும் நம்ம ஞாபகமே மறந்திருக்கும். சே..!சுத்த யூஸ்லெஸ் அப்பா..வெறுப்பை உமிழ்ந்தான் சுந்தரம்.

        “ அப்போ, அப்பா வரலேன்னா ..அவருக்கு வெச்சிருக்கும் பால் இருக்கே..அது..கமலத்துக்கு திடீர் சந்தேகம்.

        “ ஏன்.. நம்ம நாலு பேர் இல்லையா.. ஒரு நாளைக்காவது பால் குடிக்கிறது...
இது கண்ணனின் முடிவும் அபிப்பிராயமும். .

         “ எனக்குப் பால் வேண்டாம்... .இல்லை எனக்கும் கொடுங்கள். ஒரு சமயம் அப்பா வந்தால் என் பங்காவது அவருக்கிருக்கட்டும் “ என்றான் பாபு.

     ” அதெல்லாம் முடியாது.பங்கு வேணும்னா உடனே சாப்பிடணும் இல்லைன்னா
 உன்னை கணக்கிலே சேர்க்க மாட்டோம்.”தந்தைக்குப் பிறகுள்ள தனயனின் 
 அதிகாரம் சுந்தரத்தின் வார்த்தைகளில் தொனித்தது.

  
தீர்ப்புக்குக் கட்டுப் பட்டவர் இருவருக்கும் பால் கிடைத்தது. கட்டுப்படாத பாபுவுக்கு இல்லை. இனியென்ன செய்வது.? செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிக்கப் பட்டன. எல்லோரும் படுக்கச் சென்றனர். அரை மணி நேரமிருக்கும் ரங்கசாமி மழையில் தொப்பமாக நனைந்து வந்து கதவைத் தட்டினார்.தூக்கம் வராத பாபு ஓடிச் சென்று கதவைத் திறந்தான். அப்பாவுக்குத் தலை துவட்ட டவல் எடுத்துக் கொடுத்தான். எல்லா விவரங்களையும் கேட்டான். எல்லா சம்பவங்களையும் கூறினான். ரங்கசாமிக்குப் பிரயாணக் களைப்பு. பசிபோக்கப் பாலை எதிர்பார்த்தவர் பாபு சொன்னது கேட்டு ஏமாந்தார்.தோளுக்கு மேல் வள்ர்ந்த பிள்ளைகளை எதுவும் கேட்க முடியவில்லை.ஆனால் தந்தையிடம் கோள் சொல்கிறான் பாபு என்ற ஆத்திரத்தில் சுந்தரம் பாபுவை அடித்து விடுகிறான். 
ரங்கசாமிக்கு இந்த செய்கை ஆத்திரத்தை மூட்டி விட்டது. அதை அடக்கக் கூடியவரை அடக்கினார். அடக்க முடியாதவற்றை “ ஏண்டா அவனை அடிக்கிறே. அந்த அடியை நீயே அடிச்சுக்கோ. வளர்த்துப் பெரியவனாக்கி ஆளாக்கின என்னையும் மீறி என்னடா அவ்வளவு பெரிய வயிறு உங்களுக்கு. சே...! ரோஷம் வேற வருதா இதுல.என்று கூறி வெளிப்படுத்தினார்.

   ஆமா...பெரிசா வளர்த்து ஆளாக்கிட்டீங்க . அரை வயிறு கஞ்சி கொடுக்க வக்கில்லை. ..எல்லாம் “அவமேலிருக்கிற மோகம். இருக்கிறதுக்கே சோத்துக்கு வழியில்லை. இதுல வேற அடிஷன்ஸ்  பங்குக்கு. “ கூறக் கூடாதவற்றைக் கூறினான் தனயன் பொறுக்க முடியாமல் தவித்தார் ரங்கசாமி.

        “ அவளை ஏண்டா கரிச்சுக் கொட்டறீங்க, அவ உங்க கிட்ட பரிவா அன்பா நடந்துக்கறதில்லையா.. என் போறாத காலம். வாழ்க்கையை சுகமா நடத்த முடியலெ. நான் என்ன வேணும்னா உங்களைக் கஷ்டப் படுத்தறேன். “

         “ அவள் இங்கிருக்கிறதுதான் பெரிய கஷ்டம். அவளை நீங்க கல்யணம் செய்திருக்கலைன்னா இன்னும் எவ்வளவோ சௌகரியமா இருந்திருப்போம். வந்தவளும் ஒரு எச்சிக்கலை “என்றான் கண்ணன்.

     சுந்தரம் ,கண்ணா உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன். இது என்னுடைய 
சொந்த விஷயம். இதுலெல்லாம் உங்க கிட்ட அனுமதி வாங்கத் தெவையில்லை எனக்கு. இதுல யாரும் தலையிடறது எனக்குப் பிடிக்கலை. உங்களை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தாயிற்று இல்லையா. இனிமே உங்ககிட்ட நானும் கையேந்தி நிக்கப் போறதில்லை. மனசுக்குப் பிடிக்கலைன்னா நீங்க எங்க வேண்டுமானாலும் போகலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. .

                ஆத்திரத்தில் கூறப்படும் சொற்கள், ஆத்திரம் அடங்கிய பின் நினைத்துப் பார்க்கப் பட்டால், அவற்றின் தவறுகளும் உள்ளர்த்தங்களும் எதிர்பார்க்காத அளவு தொக்கி நிற்பது தெரியும். ஆனால் அவற்றைக் கூறுவதோ கேவலம் சாதாரண மனிதர்கள் தானே.சிந்தித்துப் பேசுபவர்கள் மிகக் குறைவு. அது யாருடைய தவறு.?.

       அந்த சம்பவத்துக்குப் பிறகு சுந்தரமும் அதிக நாள் வீட்டிலிருக்கவில்லை. அந்த சம்பவத்தன்று இருந்த அந்த நான்கு பேருடைய மனநிலையும் , அந்த நால்வரின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வரும் நாலு விதம். இதில் யார் சரி, யார் தவறு.?

      கமலத்துக்கு விடை தெரியவில்லை. தெரியாதவற்றை தெரிந்ததுபோல் இந்த நிலையில் யாரிடமும் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும் கண்ணனின் விவகாரம்.........?பாட்டியிடம் பத்து ரூபாய் வாங்கப் போகும்போது தெரிந்து கொள்ளலாம்.

                                                                                                                                           ( தொடரும் )  .   .  

     ..    




































.






















Friday, January 27, 2012

நினைக்கவும் நகைக்கவும்.....


                  நினைக்கவும் நகைக்கவும்
                  ------------------------------------
                             ( கடி ஜோக்ஸ் )

    எனக்கு ஒரு நண்பன் இருக்கிறார். அவரிடம் பேசுவதில்
நேரம் போவதே தெரியாது. நொடிக்கு ஒரு ஜோக் சொல்லுவார்.
எங்கிருந்துதான் அவ்வளவு ஜோக்குகள் கிடைக்கிறதோ
தெரியாது. அவர் சொல்லி நான் ரசித்த சிலவற்றை உங்களிடம்
பகிர்ந்து கொள்ளுகிறேன்,

அதி மேதாவி ஜோக்ஸ்-----.கேள்வி பதிலாக.

கே.1.--எந்தப் போரில் நெப்போலியன் இறந்தான்.
ப.------அவனுடைய கடைசிப் போரில்.

கே.2--சுதந்திரப் பிரகடனம் எங்கு கையெழுத்திடப் பெற்றது.?
ப------பிரகடனப் பத்திரத்தின் கடைச்யில்.

கே.3--தோல்வியின் முக்கிய காரணம் என்ன.?
ப,-----பரீட்சைகள்.

கே.4--காலைச் சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது.?
ப..-----மதிய இரவு உணவுகளை.

கே5.--அரை ஆப்பிள் மாதிரித் தெரிவது எது.?
ப.------மற்ற பாதி.

கே.6--ஒரு சிவப்புக் கல்லை நீலக் கடலில் எறிந்தால் என்னாகும்.?
ப.-----அது ஈரமாகும்.

கே.7--ஒருவர் எட்டு தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும்.?
ப.------ஒன்றுமாகாது. அவர் இரவில் உறங்கலாம்.

கே.8--உன் ஒரு கையில் நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்.
             மறு கையில் மூன்று ஆப்பிள்கள் நான்கு ஆரஞ்சுகள்
             இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன.?
ப.------இரண்டு பெரிய கைகள்.

கே.9--ஒரு யானையை ஒரு கையால் தூக்குவது எப்படி.?
ப.-----ஒரு கையுள்ள யானையே கிடையாது.

கே.10-எட்டுபேர் ஒரு சுவற்றை எட்டு மணி நேரத்தில் கட்டினால்
             நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வள்வு நேரமாகும்.?
ப.-----நேரமே வேண்டாம். சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே

கே11--ஒரு முட்டையை காங்கிரிட் தளத்தில் விரிசலாகாமல்
              போடுவது எப்படி.?
ப.-----சாதாரணமாக காங்கிரீட் தளங்கள் விரிசலாவதில்லை.

கே.12.-River Raavi flows in which state.?.    
ப.------In liquid state.
------------------------------------------------------------


Tuesday, January 24, 2012

நினைவில் நீ ( அத்தியாயம் மூன்று )


                               நினைவில் நீ...( நாவல் தொடராக.)
                                ----------------------------------------------
                                                          ---3---

   ஜனவரி 26-ம் நாள். பம்பாயில் குடியரசு தின விழா கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது..எங்கு பார்த்தாலும் ஜனத் திரள், எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம்.எங்கு பார்த்தாலும் உள்ள நிறைவை பிரதிபலிக்கும் முகங்கள். உண்மையில் உள்ள நிறைவு இருக்கிறதோ இல்லையோ,குறைந்தது குடியாட்சி தினத்திலாவது மக்கள் தங்கள் முகங்களை இனிமை திகழ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறியவரும், பட்டாம் பூச்சிகளும் வண்டுகளும் என, யுவதிகளும் இளைஞர்களும் விக்டோரியா டெர்மினசிலிருந்து மலபார் ஹில்ஸ் வரை இரண்டறக் கலந்திருந்தனர்.விழாவைக் காணவென்றே முப்பது நாற்பது மைல்கள் சுற்றிலுமிருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்தில் எள் போட்டால் எண்ணையாய்த்தான் விழும். அந்த ஜனத்திரள் இந்தியாவின் ஒருமைப் பாட்டை ஒருங்கே கொணர்வது போல் எதிரி எவன் பார்த்தாலும் திகிலுறச்செய்யும் வண்ணம் இருந்தது



     கூட்டத்தில் ஒருவனாக உள்ளத்து உணர்ச்சிகளை ஓரளவு மறைத்த வண்ணம்  சென்று கொண்டிருந்த பாபுவுக்கு உண்மை எது அல்லாதது எது என்று புரியாத நிலை இந்த எக்களிப்புகளும் களியாட்டங்களும் அங்கு கூடியிருந்த லட்சோப லட்ச மக்களின் உள்ளத்தில் உருவாகியிருக்கும் உண்மையான நிலையா.?இருக்காது. இருந்திருந்தால் தன்னைப் போல ஒரு நிலை படைத்த ஒருவனுக்கு அங்கு இடமிருக்காது.இடமிருக்கிறது என்ற ஒரே காரணத்தாலேயேதன்னைப் போன்றவர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள் என்ற நிலை வெட்ட வெளிச்சம். ஒளிமயமான பம்பாய் நகரத்தின் உண்மை ஒளியை, அதாவது உள்ளத்து ஒளியை உணர்ந்தவர்களும்,உணராத தன்னைப் போன்றவர்கள் உணர முற்பட்டும் ,அங்கு விழைந்திருப்பதின் நோக்கமும் இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துணர்த்தியது பாபுவுக்கு

உள்ள நிறைவு கொண்டவர்களாவது , எல்லொரும் தங்களைப் போல் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்திக்க முற்பட்டால் குடியாட்சி உண்மையிலேயே அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தைப் பெற்று விளங்குவதாயிருக்கும். ஆனால் உலகமோ சுயநலக் கூட்டுவாதிகளின் ஏகபோக உரிமைக்கான உறைவிடம். இதில் தன்னைப் போன்றவர்கள் எந்த அளவுக்கு எண்ணப் படுவார்கள்.? ஏன் ..தன்னை போன்றவர்களாலேயேஇந்த சுயநலக் கும்பல்கள் உருப் பெறுகின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எண்ணப் படுவதும் நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று முழங்கப் படுவதும் உண்மையான நிலையாக உருவெடுத்தால்........இன்று இங்கு காணும் காட்சி உண்மையான நிலையின் பிரதி பலிப்பாக இருக்கும். ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இரக்கமும் பரிவும், ஏற்றமான வாழ்வுக்கு வழிமுறையும் அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகானசமுதாயத்துக்கு நிலைக் களனாக,நமது பாரதம் விளங்கும். அங்கு வறுமை இருக்காது, சோம்பல் இருக்காது குரோதம் இருக்காது, அன்பே சிவமாய், அருளே சக்தியாய் உண்மையான ஒளிமயமான சமுதாயமாக விளங்கும். விளங்கத காரணம் இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் குறைவு. செயல்படுபவர்கள் அதிலும் குறைவு. ஏன்...இந்தக் குறைந்த வகுப்பினரின் உருப்படியில் ஒன்று தன்னால் அதிகரிக்கட்டுமே.

     சிந்தனையில் மூழ்கியே ஜனத்திரளால் தள்ளப்பட்டு மறுபடியும் விக்டோரியா டெர்மினசின் முகப்புக்கு வந்து விடுகிறான் பாபு.
 .
பாபு, சமுதாயத்தை சீர் செய்யும் பணி பிறகிருக்கட்டும்.தந்தை இழந்த பிள்ளைகளுடன் திக்குத் தெரியாத வாழ்வின் ஒரு முனையில் நிற்கும் உன் தாயையும் உன் தம்பிகளையும் கதியேறச் செய்வது உன் முதல் கடமை.பிறகு யோசிக்கலாம் உன் புறத்தொண்டு பற்றி......

      “ அப்பா...!கத்திவிடுகிறான் பாபு. தந்தை இல்லையென்ற நிலையே உண்மை என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் கூட அடைந்திருக்கவில்லை பாபுவுக்கு.தந்தையின் குரல் கேட்டது போன்ற பிரமை. தான் கடமை உணர்ச்சி தவறி விட்டோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையின் சவுக்கடி. .

      அரே, ஏக் ஆத்மி கிர் கயா.( அடே ஒரு மனிதன் விழுந்து விட்டான் ) என்று கூட்டத்தினரின் கலவரம் மிகுந்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் இருந்தது பாபுவுக்கு. .

       அவன் விழித்தெழுந்தபோது, ஆளரவம் அடங்கிய நிலை. அறையின் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த டேபிள லாம்பின் ஒளி பரவாதிருக்க பல்பை மறைத்தபடி ஷேட் பொருத்தி வைக்கப் பட்டிருந்தது. இல்லாவிட்டாலும் ஒளி அவ்வளவு பிரகாசமாகாந்த விடிகாலை நேரத்தில் இருந்திருக்காது. விளக்கு அணைக்கப் பட்டிருந்தது. மலங்க விழித்தவனுக்கு ஏதோ கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வருவது போல் இருந்தது. அவன் புரண்டு படுத்தான், சுற்றுப்புறத்தை நோட்டம் இட. கட்டில் கிறீச்சிட்டது.

       “ அப்பா அவர் எழுந்து விட்டார் “ என்ற ஒரு கீச்சுக் குரல். உடனே சுமார் நாற்பத்தைந்து வயது நிரம்பிய ஒரு மனிதர்,லக்ஷ்மிகளையே உருவெடுத்து வந்தால் போன்ற ஒரு பெண்மணி,இவர்களுக்குப் பின்னால் மேகக் கூட்டத்திடையே புகுந்து வெளிப்படும் சந்திரன் போன்ற ஒரு முகம், இன்னும் இரண்டு மூன்று வாண்டுகள்,

எல்லோரும் கட்டிலை சூழ்ந்து கொண்டனர். எழுந்து நிற்கப் பிரயத்தனப்பட்ட பாபுவை தடுத்து நிறுத்தினார் அப்பெரியவர்.குறிப்புணர்ந்து கொணர்வது பொன்ற பாவனையில் ஒரு “சா “ கோப்பை வெளிப்பட்டது., பின்னாலிருந்த பெண்ணின் கையிலிருந்து. உடற் களைப்பு வேண்டாம் என்று சொல்லக் கூடத் தோன்றாமல் பாபுவை டீ வாங்கி குடிக்க வைத்தது.

       அவன் மயங்கி விழுந்த நிலையையும் அவர்கள் வீட்டுக்கு அவன் கொண்டு வரப்பட்டதையும் ராம்பிரசாத் (அதுதான் அந்தப் பெரியவரின் பெயர் ) விளக்கிக் கூறியவர் தன்னுடைய குடும்பத்தாரையும் பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவள் என்னுடைய மனைவி. இது என் தங்கையின் பெண்.பெங்களூரில் பெற்றோருடன் இருக்கிறவள் இங்கு கொஞ்ச காலம் எங்களுடன் இருக்க வந்திருக்கிறாள். இந்த மூன்று பெண்களும் என் குழந்தைகள்.  அறிமுகம் ஆங்கிலத்தில் நடந்தது. பாபுவும் தன்னைப் பற்றி எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவு சுருக்கமாகக் கூறினான்.தான் அங்கு ஒரு கம்பனியில் ட்ரெயினிங்காக வந்ததும்  இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினான். பெங்களூரில் எங்கே என்று அந்தப் பெண் கேட்டாள். அலசூர் என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் பாபு. இவர்களும் கேவல்ரி ரோட் அருகில்தான் இருக்கிறார்கள் என்று ராம் பிரசாத் கூறிய்தும் பாபு ஒருமுறை  அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினான்.ஒரே பார்வையே என்றாலும் யுகாந்திரகாலமாகப் பழகிப் புணர்ந்த ஒரு நேசபாவம் அதில் குடி கொண்டிருந்தது. மறு வினாடியே அந்த விரசபாவத்தை மற்றவர்கள் அறிந்து விடுவர்களோ என்ற துடிப்பில் பார்வையை மீட்டான்.இருந்தாலும் உள்ளத்தின் ஒரு பகுதி லேசாவது போன்றதொரு உணர்ச்சி. சமய சந்தர்ப்பம் இல்லாமல்

   அன்பே.! யானும் நீயும் இசைந்து
   அயல்ல் எவரும் அறியாமல்-வன்பே
   உருவாம் விதியினையும் வளைத்துள்ளாக்கி
   முயல்வோமேல், துன்பே தொடரும்
   இவ்வுலகில் துண்டு துண்டாய் உடைத்துப்பின்
   இன்பே பெருகி வளர்ந்திடுமோர்
   இடமாய்ச் செய்ய இயலாதோ.?       என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

     சிறிது நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான் பாபு. இரண்டு வருடங்களைத் தள்ளிவிட்ட பாபுவுக்கு மீதம் இருந்த ஒரு மாதத்தைப் போக்குவது என்பது மிகவும் பிரயாசையாய் இருந்தது. அம்மா எப்படி இருக்கிறார்களோ.?தம்பிகள் எல்லோரும் எப்படி இருப்பர்கள்.? இவர்கள் எல்லாம் படித்து ஒரு நிலைக்கு வர எவ்வளவு காலமாகும். எவ்வளவு காலமானால்தான் என்ன.?தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அவர் இல்லையே என்ற ஏக்கம் இல்லாதபடி அவர்கள் வளர வேண்டும். பிறகுதான் அவன் ஆசை அபிலாக்ஷைகள் எல்லாம். எண்ணக்குவியலில் மூழ்கியெழுந்து நாட்களைக் கழிக்கலானான் பாபு.
        ------------------------------------

                                                                                               ( தொடரும் )











































Sunday, January 22, 2012

எழுதியது நானா........

              எழுதிய்து நானா...
                ---------------------

இந்தப் பதிவை என் எழுத்துக்களின்ஒரு சுய மதிப்பீடு என்று
கூறலாம்..நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ
அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்.இருந்தாலும் என் எழுத்து
பற்றிய என் கணிப்பு இது.

என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது
என்ற நிலையில் நான் சென்ற வீட்டின் உறவினர் ஒருவருக்கு
தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன்
நான் வலையில் தமிழில் பதிவிடுகிறேன் என்றும்,நான்
சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில்
எழுதி இருக்கிறேன் என்றும் கூறிப் படித்துப் பார்க்கச் சொன்னேன்.
“ ஒரே வாக்கியத்தில் ராமாயணமா.. எங்கே சொல்லு பார்க்கலாம்”
என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது.நான்
எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை.வீட்டிற்கு வந்து
படித்துப் பார்த்தேன்.அது எனக்கே ஒரு பெருமித உணர்வைக்
கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப் பட்டு சில நாட்கள் அதற்காக
மெனக்கெட்டு எழுதியது.இப்போது அது மாதிரி எழுத முடியுமா
என்பது சந்தேகமே.அப்போதுதான் இன்னுமொன்று புரிந்தது.என்
நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு
இதையெல்லாம் நீ எழுதினாயா, இல்லை உன்னுள் இருந்து
ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்று கேட்டான். சில
பதிவுகளைப் படிக்கும்போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது
உண்டு.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப்
போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது.

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும்
செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் மனம் வருந்தியதும்
உண்டு.அதற்கு சில வடிகால்கள் வேண்டும். எழுதுவதன் மூலம்
சிலவற்றை வெளிப் படுத்துகிறேன்.என் பதிவுகள் பல தலைப்பு
களில் இருக்கும். முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய
சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதும்
ஆக இருக்கும். இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது
தேடுதலாக வெளிப்படும்.

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்த
காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.எதையும்
எதிர்மறையாகச் சிந்திக்கும் பலரைப் பார்க்கிறேன்.என்னைப்
பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
யாக இருக்கிறது.

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர்
அதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் என்றும் சொல்லி
இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் கருத்துக்களும் வேறுபாடு
களும் உணர்த்தப் பட்டால்தான் தெரிய வருகிறது.வலையில்
அதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது அங்ஙனம்
நடைபெறுகிறதா என்றால் சந்தேகமே.

கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும்
என்று நம்புகிறவன் நான். மேலும் நான் எழுதும்போது, அந்தக்
கருத்து என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது ஆச்சரியம்
இல்லை.குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை
சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
கட்டுரை என்று நினைப்பவன் நான். ஏதாவது ஒரு கருத்து பற்றி
எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் பேனா பிடிப்பேன்.
பிறகு வந்து விழும் எழுத்துக்களும் கருத்துக்களும் உள்ளத்தில்
இருந்து வருவதே. இப்போது நான் எழுதுவதும் ஒரு உந்துதலால்
நிகழ்வதே. எல்லோருடைய உள்ளங்களிலும் சில கருத்துக்கள்
இருக்கலாம்.மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது
இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம்.ஆனால்
என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள்தானே.

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவது
குறளி எழுத வைக்கிறதா தெரிய வில்லை. ஆனால் ஒன்று ,
எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.அதைப் புரிந்து
படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------

Friday, January 20, 2012

நினைவில் நீ......(அத்தியாயம் இரண்டு)



                                  நினைவில் நீ ( தொடரும் நாவல் )
                                   --------------------------------------------


   மதி மயங்கும் மாலை நேரம். வெள்ளி நிலா முழு ஒளி வீசி உதிக்கும் வேளை .புள்ளினங்கள் தத்தம் கூடு நோக்கி விரைகின்றன. கிராமமாக இருந்தால்தான் இயற்கையை ரசிக்க முடியுமா.?பெங்களூரில் லால்பாகில் இயற்கை எழிலும் செயற்கை எழிலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதம் ஒன்றை ஒன்று தழுவி இருப்பதில் தெரியாமல் போய்விடும். இரண்டும் லயித்திருக்கும் காட்சி கண் கொள்ளாதது. பரபரப்பற்ற ஒரு அமைதி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதை தெளிவு படுத்தியது. கண்ணனுக்கு ஏமாற்றம்.சுற்றுப் புறத்தை ரசிக்கும் சூழலில் அவனில்லை.அமைதியை நாடி வந்தான்.புற உலகு அமைதியாய் இருந்தது.உள்ளமோ புகைந்திருந்தது. ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். இர்ண்டு முறை புகை இழுத்து  வெளிவிட்டான்.ஆத்திரம் அதிகமாயிற்று. சீற்றத்தை சிகரெட்டிடம் காட்டும் முறையில் வீசி எறிந்து ஷூ காலால் நசுக்கினான். ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஏதோ தீர்மானித்தவனாய் நடக்கத் தொடங்கினான். நடந்தவனுக்கு அருகில் நடப்பவைகளில் நாட்டம் இல்லையாதலால் எதையும் காணவில்லை. “ வீட்டுக்குப் போகலமா.?அப்படி உரிமையுடன் வீடென்று சொல்லிக்
கொள்ள எந்த இடமிருக்கிறது. கையில் பணமிருந்தவரையில் சரி உற்றாரும் ஊராரும் கண்ணன் எங்கள் கண்ணன் என்று வாய் கிழியப் பேசினார்கள். இப்போது.? இப்போது மட்டுமென்ன பேச வைக்க முடியாதா.?அதையும்தான் பார்ப்போமே.

கண்ணன் எடுப்பார் கைப்பிள்ளை. இதனை அவனைச் சுற்றி இருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களின் செயல்வழிகளுக்கு கண்ணன் ஒரு கருவி. எதிரியே மறைந்து விட்ட பிறகு கருவி எதற்கு.?ஆனால் கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. நடந்து சென்றவன் கால் வலிக்கவே, அவனை அறியாமலேயே ஆட்டோவைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான். “குக் டௌன் போப்பா 

        வீடு வந்து சேர்ந்தவன் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கப் பர்சைப் பார்த்தான். அது காலியாயிருப்பதைப் பார்த்தவன், ‘ கொஞ்சம் நில் “என்று ஆட்டோ ட்ரைவரிடம் கூறி “ பாட்டீ “ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான். பாட்டி இல்லை .எங்கோ வெளியில் போயிருந்தார்கள்..மாமியிடம் கேட்கலாம் என்றால் கொஞ்சம் கூச்சம். ஆனால் அதற்குள் மாமியின் பெண் ஆஷாவே வெளிப்பட்டு “என்ன அத்தான் “ என்று கேட்கவே தன் காலி பர்சையும் வெளியில் நின்ற ஆட்டோ ட்ரைவரையும் காட்டினான். அவள் விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துத் திரும்பினாள். திரும்பினவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளம் அசுர வேகத்தில் ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வந்தது. “ஆஷாதிரும்பிச் சென்றவளின் நடை தடைபட்டு நின்றது. “ ஆஷா.. இங்கே வாயேன் ..என்றும் இல்லாத ஒரு குழைவு அந்தக் குரலில் தென்பட்டது. ஆஷாவுக்குப் புரிந்து விட்டது. அவள் தயங்கி நின்றாள். “ ஆஷா, இந்த வீட்டில் பரிவு காட்ட நீ ஒருத்தியாவது இருக்கிறாயே. !இது உணர்ந்த மாத்திரத்தில் எனக்கு வேலை போனால்தான் என்ன, பணமில்லாவிட்டால்தான் என்ன.?இரண்டும் இல்லாத என்னை நீ நேசிக்கிறாயென்ற உணர்வு போதும். ASHA, I LOVE YOU. “என்று கூறி அவளருகில் சென்றவனை மறைந்து பார்த்திருந்த ஆஷாவின் தம்பி “ அம்மா, அம்மா, அக்காகிட்ட அத்தான் சினிமால லவ் பண்ற மாதிரி என்னவோ சொல்றாரம்மாஎன்றான். ஓடி வந்து பார்த்த சரஸ்வதி, “கண்ணா.! ஆஷா !என்று இரைந்தாள்.ஆஷா ஓடி விலகி விட்டாள். கண்ணன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.மேலும் சரஸ்வதி ஏதோ கூற வாயெடுத்தவள் கண்ணனின் பாட்டி, தன் மாமியார் வருவதைக் கண்டவுடன்.,தன் எண்ணத்தை மாற்றி உள்ளே சென்று விட்டாள்.

    கண்ணன் இருந்த விதம், சரஸ்வதி நின்றிருந்த தோரணை, ஆஷாவின் தொய்ந்த நடை எல்லாவற்றையும் ஒரே வினாடியில் கணக்கெடுத்து நடந்ததை யூகித்தறிந்த பாட்டி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் ஹாலுக்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். பெரும் அமைதி புயலுக்குப் பின் தோன்றியதா, இல்லை வரப் போகும் பூகம்பத்துக்கு அறிகுறியா,?எதுவும் நிகழவில்லை.

      சில நிமிஷங்களில் சுந்தர ராமன், கோபாலன், ராகவன் ஆகிய மூவரும் அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர். வீட்டில் என்றுமில்லா அமைதி நிலவக் கண்டு அவர்களும் திடு திப்பென்று அமைதியாயினர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

 “சுந்தர ராமா ஆஷாவின் கல்யாணத்துக்கு நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா.?

யாரும் எதிர்பாராத கேள்வி. தாயிடம் இருந்து வெளிப்பட்ட கேள்விக்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ என்று சுந்தர ராமன் யோசிப்பதற்குள் ,ஆஷாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைப்பதுதான் நல்லது.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ “ என்று கூறியபடியே சரஸ்வதி வந்தாள்.கண்ணனுக்கு தீயின் மேல் நிற்பது போல் இருந்தது. வெளியே செல்ல முயன்றவனை, “ கண்ணா! நீயும் ஒரு வேலைபார்த்துக் கல்யாணத்துக்கு தயாராய் இருக்கும்போது வா. நானே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இப்போது இங்கிருந்து போய்விடு “என்ற பாட்டியின் குரல் அவனை அயர வைத்தது. தான் கேட்கும் வார்த்தைகளின் முழு அர்த்தததையும் தாங்கிக் கொள்ள அந்த வினாடியில் அவனுக்கு முடியவில்லை. ஏதோ கேட்க முயன்றவனுக்கு அர்த்தம் விளங்க ஆரம்பித்ததும் விர்ரென்று தன் உடைமைகளை பெட்டியில் போட்டுக் கொண்டு அந்த இரவில் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினான்.

       பாட்டியம்மாள் மெள்ள முறுவலித்தாள். சரஸ்வதி சந்தோஷத்தில் சிரிக்க உள்ளே சென்றாள். சுந்தர ராமனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்ததும், “நன்றாக விரட்டினீர்கள் அம்மா, அந்த தண்ட சோற்று ராமனைஎன்றார்.

பெட்டியுடன் வெளியேறிய கண்ணனுக்கு எங்கு போவதென்றே விளங்கவில்லை. எங்கு போனால் அகமும் முகமும் மகிழ்ந்து தன்னை வர வேற்பார்களோ அங்கு மட்டும் போகப் பிடிக்கவில்லை. எந்த நிலையில் இருந்தவன், எந்த மாதிரி வார்த்தைகளைப் பேசியவன், எந்த முகத்துடன்சென்று அவர்களைப் பார்ப்பது.?ஒரு சமயம் அப்படியே அங்கு போனாலும் அவர்களும் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அது சரி. தன் மிது அன்பையே பொழிந்து கொட்டிய பாட்டியும் மாமாக்களும் ஏன் தன்னை ஒதுக்குகிறார்கள்.தான் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போதுதான் தனக்கு மதிப்பா.?பணமில்லாத ஓட்டாண்டியாகி விட்டால் உலகமே தூற்றும் என்பது எவ்வளவு சரி. தான் நல்ல நிலையில் இருந்தபோது தன்னிடம் உதவி கோரி வந்தவர்களை எந்த மாதிரி எல்லாம் பேசி இருப்போம். இப்போது அடிமரமே சாய்ந்து விட்டதே. தான் பேசிய பேச்சுகள்மன்னிக்கப் பட்டிருக்குமா. ..தான் பேசிய பேச்சுகள் மன்னிக்கத்தக்கதா... ஏன்.?பேசியதிலும் நடந்ததிலும் என்ன தவறு.?எதற்கு மன்னிக்கப் பட வேண்டும்.?துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில்  மூலை முடுக்கில் பதுங்கிக் கிடக்க வேண்டி இருந்ததே. அரை வயிற்றுக்கு கிடைப்பதாயிருந்தாலும் எவ்வளவு பேர் பங்கு.?இவ்வளவு பேர் இருந்திருக்கா விட்டால் எல்லோரும் ஒன்று கூடி தலைமேல் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களோ.இந்த நிலையிலே இக்கட்டிலேயே வளர்ந்து ஏதோ சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகாவதுதன் ஆசை அபிலாக்ஷைகளை நிறைவேற்றலாம் என்றால் அதிலும் பங்கு கேட்க வந்தால் யாராயிருந்தால்தான் என்ன... ஒதுக்கித் தள்ள வேண்டியதுதான். தான் செய்த செய்கை ஒதுக்கப் பட்டவர்கள் மட்டும்தானே தவறு என்றனர். பாட்டி மாமா எல்லோரும் சரி என்றுதானே கூறினர். அன்று சரி என்று கூறி, இன்று தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் புறக்கணிக்கும் இவர்கள் தான் நல்ல நிலையில் இருந்திருந்தால், “ஆஷாவை நீயே கல்யாணம் பண்ணிக்கொள் ‘என்று போட்டி போட்டுக் கொண்டு கூறி இருக்க மாட்டார்களா...இந்த ஆஷா இல்லாவிட்டால்இன்னொரு உஷா...தான் பார்க்காத பெண்களா....இருக்கட்டும் .இப்போதைக்கு எங்கு போவது,?

      கண்ணனுக்கு தன் நண்பன் அருள் வீடு அருகிலிருப்பது நினைவுக்கு வந்ததும் அங்கேயே ஆஜரானான்.கண்ணனும் அருளும் நல்லது பொல்லாதது எல்லாவற்றிலும் சம பங்கு எடுத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள். அருளுக்கு கண்ணன் அங்கு வந்து தங்குவதில் ஆட்சேபணை இருக்கவில்லை.

                                                                (தொடரும்)                      

  


       














Wednesday, January 18, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்று)...

                                    நினைவில் நீ.( தொடரும் நாவல் )
                                    ----------------------------------------------
    (கலைமகள் நாராயணசாமி அய்யர் நினைவு நாவல்
     போட்டிக்காக 1966-/ ம் வருடம் எழுதியதை தூசு தட்டிப்
     பதிவிடுகிறேன் )
     

            மூக்கில் ஆக்ஸிஜென் ட்யூபும், உடலின் சோர்வும்,உள்ளத்தின் பளுவும், இருண்ட எதிர்காலத்தின் நினைவை ரங்கசாமியின் நினைவில் நிறுத்தியது.இருட்டில் ஒளியைத் தேட கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டவரின் கண்களில் நீர் அரும்பியது. எண்ணத் தறியில் கடந்த நிகழ்ச்சிகள் இழையோட இழையோட, எதிர்காலத்து சோபை,விடி வெள்ளிபோல் தென்படும் தறுவாயில், தறி அறுந்தது., நர்ஸின் நடையோசை கேட்டு.

                 விரிப்பை சரி செய்து, ஆக்ஸிஜென் ட்யூபை மாற்றிப் பொருத்திடக், டக்,என்ற மிதியோசை வெளிப்படக் கடந்து சென்ற நர்ஸின் விருப்பு வெறுப்பற்ற கடமை உணர்வைக் கண்டதும், காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற உண்மையும் தெள்ளெனத் தெரிந்தது. “ காலத்துடன் காலனும் போட்டி போடுகிறானோஎன்ற நினைவு உதித்ததும் உள்ளம் வெதும்பியது. “ ஆண்டவனே நான் சாகக் கூடாது.எனக்கு இன்னும் எவ்வளவொ கடமைகள் இருக்கிறதே. காலனே என்னை அண்டாதே “என்று வேண்டலும் வெதும்பலுமகக் கிடந்தவரின் நினைவுத் தறி மீண்டும் ஓட ஆரம்பித்தது. த்றியின் இழையோட்ட எண்ணங்கள் பாபுவை சுற்றியே பின்னப் படுகிறது. ஏன்.?இருண்ட எதிர்காலத்தின் விடி வெள்ளியாக பாபுவைத்தான் காண்கிறாரோ.?

     அன்று வேலை தேடிசென்ற பாபு ஒரு மாதகாலத்துக்கு திரும்பி வரவேயில்லையே. அந்த இள வயதிலேயே எதிர்பாராத ஏமாற்றத்தின் ஏகபோக உரிமைக்கு ஆளாக்கப் பட்டுவிட்டான் பாபு. வேலை தேடி வந்தவனைக் கண்டதும்  வேலை இருக்கிறது என்று சொன்னவர்கள் எள்ளி நகையாடினர். உடல் வளர்ச்சி குறைவு என்று நிராகரித்தனர். ஏமாற்றம் அவன் உள்ளத்தை வைரமாக்கியது. வேலையில்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாய் இருந்தவன் முயற்சியெல்லாம் முக்கால்தோல்விதான்,வேலை கிடைக்கவில்லை என்ற நிலையைப் பொறுத்தவரையில்.ஆனால் கால் பங்கு வெற்றி,உலகத்தின் நடவடிக்கைகளை அந்த இடைக் காலத்தில் உணரக் கிடைத்த வாய்ப்பினால்.  கடைசியில் வீடு வந்து சேர்ந்தவன் எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை உணர்த்தப் பட்டவனாக இருந்தான். தந்தையைக் கண்டதும் தாங்க முடியாத வேதனையாலும் அவமானத்தாலும் நிலை குன்றிப் போனான்.

                அப்படி அன்று மனமொடிந்து வந்தவன் இன்று வாழ்வின் அடிப்படியில் காலெடுத்து வைத்திருக்கிறான். அவனை ஒளிவட்டமாகக் காண்பதில் தான் பெரிய  தவறு செய்கிறோமோ என்று ரங்கசாமி உருகினார்.அவர் அப்படி நினைக்கக் காரணமுண்டு. தன் மூத்த பிள்ளைகளால் ஏமாற்றப் பட்டு பழிக்கப் பட்ட அவர் சுட்ட பால் குடித்த பூனையாயிற்றே. தன்னைப் பழிப்பவர் சுற்றாரும் உற்றாரும் மட்டுமா? உலகமுமா.?அப்படி என்ன பழிதான் செய்துவிட்டோம் தன் இரு மூத்த பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தான் வேண்டியதில்லை என்று நினைத்தால் நடக்காதென்ற காரியமாயிருந்தால் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே.

        கஷ்ட நஷ்டங்களைப் பற்று வரவு பார்க்கும்போதும் சில சமயங்களில் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது. நிவர்த்திக்கப்பட முடியாத காரியங்களிலும் சில நன்மைகள் தெரிகிறது. தன் காரியங்களைப் பழித்துதனக்கெதிராக கிளம்பியுள்ள பிள்ளைகளால் நன்மைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும் துன்பங்களாவது தவிர்க்கப் பட்டு விட்டதே.இல்லையென்றால் என்றும் ஒரே போராட்டமாயிருந்திருக்கும். இப்போதும் போராட்டம் இல்லையென்றல்ல. இப்போதைய போராட்டங்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் பாதையமைக்கும் பணியில்தான். மற்றபடியிருந்தால் கூடவே மனப் புகைச்சல்களும் பூசல்களும் கூடவே இருந்திருக்கும். தன் சுய கௌரவமும் எண்ண ஈடுபாடுகளும் செயல்களும்பிறருக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை

   .தான் எண்ணியபடி இரண்டாம் முறை மணந்தது தவறு என்றால், தவறு எது சரி எது என்று நிர்ணயிக்கப் படமுடியாத ஒரு சந்தர்ப்பத்தினால் ஏற்படும் ஒரு முடிவேயாயிருக்கும். எந்த ஒரு கொள்கைக்கும் இரண்டு வாதம் இருக்கும். அது சந்தர்ப்ப சூழலால் அவரவர் ஏற்கும் முடிவைப் பொறுத்தது. தான் செய்தது தவறு அல்ல என்ற எண்ணம் இறக்கும் தருவாயிலும் இருப்பது தன் கொள்கையின் , முடிவின் சரித்தன்மையைக் காட்டுகிறது. மேலும் தன் இரண்டாம் மனைவி தன் மூத்தாள் பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்தது எல்லோரும் அறிந்ததே. அறிந்ததை இல்லையென்று நிரூபிக்க முயல்வது செயல் நிகழ்த்தியவரைப் பழிப்பதற்கே ஆகும். அது யார் குற்றமுமல்ல.

            மேலும் இருந்த ஒரே பெண்ணும் மணமுடிந்து குடியும் குடித்தனமுமாக எங்கோ இருக்கிறாள். .இவர்கள் எல்லோரும் தன் சாவுக்காவது வருவார்கள். வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் அவர்களின் அறியாமையும் மன்னிக்கப்படும்.

            ஆனால் சாவை எதிர்பார்க்கும் நிலையிலா ரங்கசாமி இருந்தார்.?வளர்ந்த பிள்ளைகள் வளர்க்கப்பட்ட விதத்திலாவது வளர்ந்து வரும் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டுமே.. அதற்கு பற்றுகோல் போல் பாபுவை நாடுவது சரியா. பாபுவோ சுயமாக வாழ இப்போதுதான் வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறான். தன்னாலேயே தாங்க முடியாத வறுமைப் பிணியை அந்த இளம் பிள்ளை தாங்குமா.? தெய்வமே தனக்கு சாவு வரக் கூடாது என்ற பிரார்த்தனையே அடிக்கடி எழுந்தது. பிரார்த்திக்கும்போதெல்லாம் பாபுவையே கோடி காட்டும் தெய்வம் அவனிடமே தன் பொறுப்புகளை சுமத்தச் செய்யுமா.? சிந்தனைகள் சிக்கலில் சுழலச் சுழல எண்ணம்  தடை படுகிறது. நெஞ்சு வலிக்கிறது. இதோ....டாக்டர் போகிறாரே...அவரை கூப்பிடலாமா “ டாக்டர் “

          வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி பாபுவுக்கு அவனைப் பொறுத்தவரை அவனாகவே தேடிப் பெற்ற வேலைதான். வேலை என்பதைவிட பயிற்சி என்பதே சரியாகும் மூன்று வருஷங்களில் ஒரு வருஷத்தை ஓரளவு முடித்தாயிற்று. தான் சம்பாதிக்கும்போது தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியடையும். அப்பாவுக்கு சரி நிகராகப் பணிக்குப் போகலாம். தன்னையும் தந்தையை மதிப்பது போல் தம்பிகள் மதிப்பார்கள்.. அம்மாவும் ஒருவித ஸ்பெஷல் கவனிப்பைக் காட்டுவாள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா ரிடையர் ஆகிவிடுவாரே. அப்போது இந்தக் குடும்பம் ஒருவன் சம்பாதித்து வாழ வேண்டி இருக்குமே. வித்தியாசம் தந்தைக்குப் பதில் தான் பொறுப்புகளை ஏற்பதாகத்தான் இருக்கும். வறுமை ஒழியாது. சந்தோஷம் இருக்காது. எண்ணியது நடக்காது மொத்தத்தில் வாழ்க்கையே சுவைக்காது. நடக்காத செயல்களை நடப்பதாக பாவித்துஇன்பமும் துன்பமும் அடைபவர்கள் ஏராளம். ஆனால் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழும் பாபுவுக்கு இன்பத்தை பற்றியும் சுக வாழ்வு பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.இதனைவிட கஷ்டமில்லாமல் இருந்தால் சரி என்ற துறவு உணர்ச்சியே அந்த இள வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தை எதிர் நோக்கும்போது எதிர்பாராதது ஏதும் இருக்கலாகாது என்ற கொள்கை அவனை அறியாமலேயே அவனிடம் இருந்தது.,அவனது பிற்காலத்தில் பெரிதும் உதவியது. ரங்கசாமியும் பாபுவுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை “நல்லதை எதிர்பார். அல்லாததற்கும் தயாராய் இரு “என்பதுதான்.

         பாபு உனக்கு அர்ஜெண்டாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உன் அப்பா, ஆஸ்பத்திரியில் கொஞ்சம் சீரியசாம்...உடனே போ.செய்தி சொன்னவன் முடிக்கவுமில்லை., பாபு பறந்து விட்டான். ஆஸ்பத்திரி வாசலில் தடை செய்த காவலர்களையும் சட்டை செய்யாமல் பதறிச் சென்ற பாபுவை ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்றார்,தாயும் தம்பிகளும் இருந்தனர். பயங்கரமான சூழ்நிலையை எதிர்பார்த்துச் சென்ற பாபுவுக்கு ரங்கசாமி இருந்த விதம் ஆறுதல் தந்தது.

        “என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்.நீங்களானால் அரச தர்பாரில் இருக்கிறமாதிரி இருக்கிறீர்களே. உடம்பு பரவாயில்லையா அப்பா, டாக்டர் என்ன ச்ப்ல்கிறார்.? டாக்டர் எங்கே.?

         “டேய், டேய், பதட்டப்படாதே.!ஏதோ உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது. டாக்டரிடம் சொன்னேன். உனக்கும் செய்தி அனுப்பினார்கள்.கவலைப்பட எதுவுமேயில்லை. “

  முசு முசு என்று வரும் மூச்சுக் காற்றையும் கட்டுப்படுத்த முயன்று முழ பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் ரங்கசாமி. அணையும் தீபச்சுடர் நின்றெரியும்போது ஏற்படும் பிரகாசம் அலாதியாக அவர் முகத்தில் தெரிந்தது. தெரிவித்ததை உணரும் வயதில்லையே பாபுவுக்கு. அவனும் நம்பினான். சிறிது நேரம் எல்லோருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குப் போக நேரமாகிவிட்டது என்று உணர்த்தப் பட்டார்கள். பிக்னிக் வந்த பிள்ளைகள் போல் துரு துருவென்று இருந்தனர் தம்பிகள்.கல்யாணி அம்மாவுக்கு ஏதோ தெரிந்தும் தெரியாதது போன்ற பிரமை. அந்த பிரமையிலேயே கட்டுப்பட்டுக் கிடக்க ஏங்கியது உள்ளத்தின் ஒரு பகுதி. மூடுபனி
போன்ற சூநிலை தெளியத் தொடங்கினால் அங்கு தெரியும் காட்சி...அப்பப்பா .பயங்கரம்

  தெய்வமே.. வேண்டாம் இந்த நிலை.. எதையும் கோடி காட்டாதே எண்ணுவதெல்லாம் எண்ணமாகவே இருக்கட்டும் கணவனை மறுமுறை கூர்ந்து நோக்கினாள் கல்யாணி அம்மா. அவர் முகத்தில் கண்ட அசாதாரண அமைதி கல்யாணி அம்மாவுக்கு உறுதியைத் தந்தது. கண நேரம் தான் நினைத்து கலங்கி விட்ட பைத்தியக் காரத்தனத்தை நினைத்துச் சிரித்தாள் சிரிப்புடன் விடையும் பெற்று வீட்டுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் சிறிது தூரம் சென்றதும் பாபுவை மட்டும் விளித்தார் ரங்கசாமி. மற்றவர்கள் தயங்கி நின்று மறுபடியும் தொடர்ந்து சென்றார்கள். அருகில் வந்து நின்ற பாபுவை தன் அருகில் அமரச் செய்தார் ரங்கசாமி.

    என்னென்னவோ பேசத்துடித்தது மனம். எண்ணியதை எல்லாம் சொல்லில் கொட்டினால் கொட்டியவற்றின் முழு சக்தியையும் பாபு தாங்குவானா.?சில சமயம் தாங்கும் சக்தி இல்லாதவர்களிடமும் தாங்க முடியாத சுமைகள் தவிர்க்க முடியாத சமயங்களில் ஏற்றப்படும்போது, பெரும்பாலும் ஆண்டவனே அதை ஏற்றுக்கொள்கிறான்., ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை வேண்டும். பல விஷயங்களை மறைக்க முயன்றார் ரங்கசாமி. முடியவில்லை. ஒரு பெருங்கதையே அவனுக்குக் கூறினார்.சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் கேட்ட பாபுவுக்கு தன் தந்தை எவ்வளவு பொறுமையோடு வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறார் என்று தெரிந்தது. வறுமையிலும் வாழ்வின் எதிர்ப்பிலும் தனக்கு சரியென்று பட்டவற்றை மனிதாபிமான உணர்ச்சியுடன் செய்து வந்து  முடிக்க முடியாத நிலையில் உடலுக்குப் பிணி வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் ஏற்ற கடமையை அவர் விட்ட இடத்தில் தொடர அவர் குணம் அறிந்த ஒருவர் வேண்டும்ரங்கசாமிக்கு பாபுவிடம் ஒரு தனிப் பற்றுதல். தந்தை தனயன் என்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. தனக்கு சமமானவன் என்ற எண்ணம். இது பாபுவின் விஷயத்தில் நன்மைக்காக அமைந்தாலும் மற்றவர்கள் விஷயத்தில் , முக்கியமாக மூத்த பிள்ளைகள் விஷயத்தில் மாறாக அமைந்தது. சமத்துவம் கொடுக்கப் பட வேண்டிய இடத்தில் பெறுபவர் தன்மையறிந்து தரப்பட வேண்டும். மூத்த பிள்ளைகள் தற்கால முற்போக்கு சந்ததியினரின் பிரதிநிதிகள் தனி வாழ்வு எனும் கொள்கையில் மட்டும்.

    கடைசியாக ரங்கசாமி பாபுவிடம் கேட்டது பாபுவை அதிர வைத்து விட்டது. “ பாபு ! எனக்குப் பிறகு உன் சித்தியையும் உன் தம்பிகளையும் உன்னை நம்பித்தான் விட்டுப் போவேன். அவர்களைக் கை விட மாட்டாயே பாபு..கெஞ்சாத குறைதான்.

   ஏனப்பா இப்படியெல்லாம் கேட்டு வருத்துகிறீர்கள்.நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் இகழ்ந்தவர்கள் ஏற்றிப் பேசும் அளவுக்கு என் தம்பிகளும் தாயும் வள மடைவார்கள் வளமடையத்தான் வேண்டும். ஒரு பாவமும் அறியாதவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,அவர்களை ஆண்டவனே சோதனையிலும் வெற்றியடையச் செய்வான் என்றும் கூறியிருக்கிறீர்களே. உங்களுக்குப் பிறகு என்றெல்லாம் பேசி ஏன் மனம் உடைகிறீர்கள். நீங்கள் என்னிடம் அப்படிக் கேட்கும்போது  என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ணத்தூண்டுகிறது. உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டான்”---விம்மி வெடித்தது பாபுவின் நெஞ்சம். ஒரு சமயம் அப்படியும் நேர்ந்து விட்டால்.... ...நேர்ந்து விடாது.. நேரக் கூடாது. இது உறுதி.!இந்த உறுதி என்னிடம் கலையுமானால், நான் உங்களுக்குப் பிறக்கத் தகுதி அற்றவன் என்று இந்த உலகம் என்னை காறி உமிழட்டும். அப்போது என் உயிர் என் உடலில் தங்காது...சொல்லாத வார்த்தைகள் நினைக்கப் பட்டன.

  ரங்கசாமியும் அமைதியிலாழ்ந்தார். பேசாத நேரம் சொற்பமே ஆனாலும் பேசிய நேரத்தால் ஏற்பட்ட சோர்வு அவருடைய தளர்ந்த உடலை நித்திரையில் ஆழ்த்தியது. உறங்கி விட்ட தந்தையிடம் விழித்த மனம் பெற்ற தனயன் மானசீகமாக விடை பெற்று வெளியேறினான். 

                                                          ( தொடரும் ) ..

                         


     
  

   


















Monday, January 16, 2012

நாவல் பிறந்த கதை...

             நாவல் பிறந்த கதை
             ----------------------------
பதிவுலகிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் கூட முடியவில்லை
என் சுய திருப்திக்காக எழுதிக் கொண்டிருந்த எனக்கு உடல்
நலமில்லாமல் தேறி வந்து கொண்டிருந்தபோது இம்மாதிரி
வலையில் எழுத முடியும் என்ற தகவல் ஆனந்தவிகடனில்
வெளியான ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்
இப்பொழுதும் எனக்கு கணினி பற்றிய ஞானம் மிகவும் குறைவு.
ஏதோ எழுதுகிறேனே தவிர இன்னும் பல சூட்சுமங்கள் பிடி
படவில்லை

1960-/ களில் எழுதத் துவங்கினேன். எந்த பத்திரிகைக்கும்
அனுப்பியது கிடையாது. காதல் வசப் பட்டிருந்தபோது கவிதை
எழுத முயற்சித்தேன். நாடகங்கள் பல எழுதி இயக்கி நடித்திருக்
கிறேன். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 1966-/ ம் வருடம்
கலைமகள் இதழில் நாராயணஸ்வாமி அய்யர் நினைவு நாவல்
போட்டி அறிவித்திருந்தார்கள். நான் ஏன் பங்கு பெறக்கூடாது
என்னும் எண்ணம் எழவே, ஒரு நாவல் எழுதினேன். பெற்ற
அனுபவங்களும் என் மன அபிலாக்ஷைகளுமாக கருஉருவாக்கி
ஒரு நாவல் எழுதினேன். அதை தபாலில் போதிய ஸ்டாம்பு
களுடன் ( அவர்கள் திருப்பி அனுப்ப ஏதுவாக )பதிவுத் தபாலில்
Ack .Due என்னும் முறையில் அனுப்பினேன். ஒரு வாரம் கழிந்தும்
அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக ACK. DUE FORM
அவர்கள் கையெழுத்துடன் வராததால் தபால் நிலையத்தில்
விசாரித்தேன். என்ன கொடுமை.!அது அனுப்பப்படாமல்
அங்கேயே இருந்தது. கடைசி நாளும் முடிந்திருந்தது. தபால்
நிலையத்தாருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். ஒரு மாதத்
துக்கு மேல் உழைத்தது வீணாகி இருந்தது. இப்போது அதனை
தூசு தட்டி என் வலைப் பூவில் பதிவிடுகிறேன். ஆதரவு இருக்கும்
என்ற நம்பிக்கையில் வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட
உத்தேசம் . முன் கூட்டியே ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
--------------------------------
  

Saturday, January 14, 2012

தையலே.. தைப் பெண்ணே...


               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
                             

Thursday, January 12, 2012

நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...

                            நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...
                            ------------------------------------------------


அந்தக் காலத்தில் உலகத் தலைவர்களை ரேடியோ மூலமாகவும் ,பத்திரிகை வாயிலாகவும்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போதுபோல் தொலைக் காட்சியில் அவர்களைக் காண முடியாது.இந்த நிலையில் தலைவர்களை நேரில் சந்திப்பது என்பது அகஸ்மாத்தாகவும் எதிர்பாராததாகவும் அமைவதே. உலகம் போற்றும் உத்தமர் மஹாத்மா காந்தியை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.என் சம வயதுக்காரர்களுக்கோ இளையவர்களுக்கோஅந்த மாதிரி வாய்ப்பு அமைந்திருப்பது மிகவும் அரிதாகும்.

    
      நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்.எனக்கு எட்டு வயதிருக்கலாம் .1945-1946-ம் வருடம் என்று நினைக்கிறேன். காந்திஜி மதராஸ் வருவதாகவும் அவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றும் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, போகும்போது என்னையுமழைத்துக் கொண்டு போனார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் என்றே தோன்றுகிறது. மஹாத்மாவை சுமார் 20-30-அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.

     மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தாஎன்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக் காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை(விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.

  நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.

           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.

     
     HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

      1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
                                           ----------------------------------------------------------------------.                             






















     .         .                             


                                     

Tuesday, January 10, 2012

உயிலொன்று எழுத....


            உயிலொன்று எழுத்...
                --------------------
புலரி புலர்ந்தெழுந்ததும் உயில்  ஒன்று
எழுதமனம் இன்று விழைகிறது.- என்
உள்ளக்கிடக்கையினை யாவர்க்கும் அறிவிக்க.

இருக்கும் தாவர சங்கம சொத்து- சொந்த
உழைப்பில் உருவானதொரு வீடு- அதுவும்
அவள் பெயரில் அன்றே பதிவானது.

இருந்தும் ஏன் இந்த எண்ணம் எழ வேண்டும்?
எனக்கிருக்கும் சொத்துவேறென்ன என்றே
எண்ணிப் பார்த்திட இதுவும் ஒரு வாய்ப்போ?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை-நான்
செய்த காரியங்கள் அவசியம் ஈட்டியிருக்கும்
புண்ணியங்களும் பாவங்களும்

உயிலென்று ஒன்று எழுதுகையில்
உரிமை உள்ளோர் அனுபவிக்க
முறையாக உணர்த்தல் முறையேயன்றோ !

நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
சேரட்டும்,காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.

இதுவன்றி உயிலில் எழுத
எனக்கேது சொத்து.?
--------------------