ஞாயிறு, 22 ஜனவரி, 2012

எழுதியது நானா........

              எழுதிய்து நானா...
                ---------------------

இந்தப் பதிவை என் எழுத்துக்களின்ஒரு சுய மதிப்பீடு என்று
கூறலாம்..நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ
அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்.இருந்தாலும் என் எழுத்து
பற்றிய என் கணிப்பு இது.

என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது
என்ற நிலையில் நான் சென்ற வீட்டின் உறவினர் ஒருவருக்கு
தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன்
நான் வலையில் தமிழில் பதிவிடுகிறேன் என்றும்,நான்
சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில்
எழுதி இருக்கிறேன் என்றும் கூறிப் படித்துப் பார்க்கச் சொன்னேன்.
“ ஒரே வாக்கியத்தில் ராமாயணமா.. எங்கே சொல்லு பார்க்கலாம்”
என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது.நான்
எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை.வீட்டிற்கு வந்து
படித்துப் பார்த்தேன்.அது எனக்கே ஒரு பெருமித உணர்வைக்
கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப் பட்டு சில நாட்கள் அதற்காக
மெனக்கெட்டு எழுதியது.இப்போது அது மாதிரி எழுத முடியுமா
என்பது சந்தேகமே.அப்போதுதான் இன்னுமொன்று புரிந்தது.என்
நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு
இதையெல்லாம் நீ எழுதினாயா, இல்லை உன்னுள் இருந்து
ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்று கேட்டான். சில
பதிவுகளைப் படிக்கும்போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது
உண்டு.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப்
போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது.

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும்
செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் மனம் வருந்தியதும்
உண்டு.அதற்கு சில வடிகால்கள் வேண்டும். எழுதுவதன் மூலம்
சிலவற்றை வெளிப் படுத்துகிறேன்.என் பதிவுகள் பல தலைப்பு
களில் இருக்கும். முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய
சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதும்
ஆக இருக்கும். இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது
தேடுதலாக வெளிப்படும்.

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்த
காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.எதையும்
எதிர்மறையாகச் சிந்திக்கும் பலரைப் பார்க்கிறேன்.என்னைப்
பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
யாக இருக்கிறது.

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர்
அதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் என்றும் சொல்லி
இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் கருத்துக்களும் வேறுபாடு
களும் உணர்த்தப் பட்டால்தான் தெரிய வருகிறது.வலையில்
அதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது அங்ஙனம்
நடைபெறுகிறதா என்றால் சந்தேகமே.

கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும்
என்று நம்புகிறவன் நான். மேலும் நான் எழுதும்போது, அந்தக்
கருத்து என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது ஆச்சரியம்
இல்லை.குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை
சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
கட்டுரை என்று நினைப்பவன் நான். ஏதாவது ஒரு கருத்து பற்றி
எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் பேனா பிடிப்பேன்.
பிறகு வந்து விழும் எழுத்துக்களும் கருத்துக்களும் உள்ளத்தில்
இருந்து வருவதே. இப்போது நான் எழுதுவதும் ஒரு உந்துதலால்
நிகழ்வதே. எல்லோருடைய உள்ளங்களிலும் சில கருத்துக்கள்
இருக்கலாம்.மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது
இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம்.ஆனால்
என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள்தானே.

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவது
குறளி எழுத வைக்கிறதா தெரிய வில்லை. ஆனால் ஒன்று ,
எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.அதைப் புரிந்து
படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. படைப்பதோடு கலைஞனின் பணி முடிந்து விடுகிறது. பார்ப்பவர் கண்ணுக்கும் படிப்பவர் நெஞ்சுக்கும் புரியும் படைப்பின் லட்சணம் படைத்தவரின் லட்சியத்தோடு ஒட்டியும் போகலாம் விலகியும் போகலாம். இடைப்பட்டதை சேர்த்துக் கொண்டு ஓடுவது நதியின் சுபாவம். நதியோட்டத்தை ரசிப்பதும் விடுப்பதும் நதிக்குத் தெரியாது.
    கருத்தோடு எழுதவேண்டும் என்ற உங்கள் நோக்கம் பாராட்டுக்குரியது. ஒன்று செயினும் நன்று செய்தல் எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை. உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. என்னைப்
    பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
    எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
    யாக இருக்கிறது.

    நல்ல பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு.
    என்னைப்
    பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. உங்கள் எழுத்துக்கு எம் போன்ற வாசகர்கள் நிச்சயம் உண்டு ஜி.எம்.பி சார்.

    பதிலளிநீக்கு
  5. @அப்பாதுரை. படைப்பதோடு ஒரு கலைஞனின் பணி முடிந்து விடுகிறது. நானும் ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் எழுத்தின் தாக்கமறிய விழைவது தவறாகாதே.பொழுது போக்குக்கு எழுதுபவர் வேண்டுமானால் எழுதும் விதத்தையும் நடையையும் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. @ரத்னவேல்.
    @லக்ஷ்மி--- போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருந்து விட்டால் வளர்ச்சியின் வேகம் குறைந்து விடும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @சக்திப்ரபா. அது எனக்குத் தெரியும் பிரபா, வலையில் நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே என்னை நீங்கள் உறசாகப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.தொடர்ந்து படிப்பீர்கள் என்று கேட்கும் போது இதமாய் இருக்கிறது. என் எழுத்தை பலர் வாசிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் ஏனோ கருத்து தெரிவிக்க முன் வருவதில்லை. ஒரு சமயம் என் கருத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பதாலோ என்னவோ. மிக்க நன்றி சக்திபிரபா.

    பதிலளிநீக்கு
  8. அனுபவம் எழுத்துக்கு மூலதனம். உங்கள் வயதுக்கு அது பெருமழை. குடைப்பிடிக்க மனமில்லை எங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  9. //குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
    ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
    கட்டுரை என்று நினைப்பவன் நான்.//

    நீங்கள் மட்டுமில்லை, எழுதுகோலைப் பிடித்த எல்லோருக்குமே இதே எண்ணம் தான். தன் கருத்தைச் சொல்ல விரும்பும் இந்தப் பிடிப்பு தான் சொல்லப் போனால் அவர்களை எழுதவே தூண்டுகிறது; பிடித்த எண்ணத்தை வெளிப்படுத்தத் தான் எழுத்தே.

    கட்டுரைகளில் எழுதுவரின் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியும். கவிதைகளிலோ, அழகுணர்வுடன் கவிதை வரிகளோடு கைகோர்த்துக்கொண்டு நடைபயிலும்.

    ஆனால் கதைகளில் மட்டும் வேறு மாதிரி. எழுதுபவர் தன் எண்ணங்களைத் தனியாகச் சொன்னால் சோபிக்காது. சில சமயம் பிரச்சாரம் மாதிரி இருக்கும்; பல சமயங்களில் அதுவே கதையோடு ஒட்டாது துண்டாகத் தெரியும். சூரணத்தைத் தேனில் குழைத்துத் தருகிற மாதிரி, கதாமாந்தரின் நடவடிக்கைகளாகவோ, அவர் தம் குணநலன்களாகவோ, இல்லை, கதையின் சம்பவப் போக்காகவோ அவற்றில் தன் எண்ணங்களைக் குழைத்துத் தந்தால் தான் அவை கலாபூர்வமாக மிளிரும். கதைகளில் மட்டும், எழுதுகிறவன் எந்த அளவுக்கு தன்னை மறைத்துக் கொண்டு, கதாபாத்திரங்களுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அந்தக் கதாமாந்தராகவே வெளிப்படுகிறானோ அந்த அளவுக்கு அந்தக் கதைகள்
    படிக்கும் வாசகர் மனதைக் கொள்ளை கொள்ளும். இப்படிப்பட்ட கதைகளில் தான் கதாமாந்தர்கள் கொள்ளும் உணர்வுகளுடன் ஒன்றரக் கலந்து அவர்களுக்காகக் கண்ணீர் சிந்துவதும், களிப்படைந்து குதூகலிப்பதுவும், அவர் கொள்ளும் இலட்சியப் பிடிப்புக்காக வீறு கொண்டு எழுவதும்-- இப்படியான எல்லாமுமே நிகழும்.

    பதிலளிநீக்கு