செவ்வாய், 10 ஜனவரி, 2012

உயிலொன்று எழுத....


            உயிலொன்று எழுத்...
                --------------------
புலரி புலர்ந்தெழுந்ததும் உயில்  ஒன்று
எழுதமனம் இன்று விழைகிறது.- என்
உள்ளக்கிடக்கையினை யாவர்க்கும் அறிவிக்க.

இருக்கும் தாவர சங்கம சொத்து- சொந்த
உழைப்பில் உருவானதொரு வீடு- அதுவும்
அவள் பெயரில் அன்றே பதிவானது.

இருந்தும் ஏன் இந்த எண்ணம் எழ வேண்டும்?
எனக்கிருக்கும் சொத்துவேறென்ன என்றே
எண்ணிப் பார்த்திட இதுவும் ஒரு வாய்ப்போ?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை-நான்
செய்த காரியங்கள் அவசியம் ஈட்டியிருக்கும்
புண்ணியங்களும் பாவங்களும்

உயிலென்று ஒன்று எழுதுகையில்
உரிமை உள்ளோர் அனுபவிக்க
முறையாக உணர்த்தல் முறையேயன்றோ !

நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
சேரட்டும்,காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.

இதுவன்றி உயிலில் எழுத
எனக்கேது சொத்து.?
--------------------
          

10 கருத்துகள்:

  1. சொத்தில்லை, அய்யா
    பத்தில்லை என்றீர். பின்
    உயில் எழுத
    முயல்வானேன் .
    பாவம் நீர்,எமக்கு
    புண்ணியம் என்றீர்.
    கர்ணனிடம்
    கவச குண்டலம் பறித்த
    கண்ணன் போல்
    கலங்க வைக்காதீர்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை...நெகிழ்ந்தேன்.
    அதன் விளைவாக இருசொட்டு கண்ணீரும்.

    பதிலளிநீக்கு
  3. நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
    சேரட்டும்,காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
    ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.

    இதுவன்றி உயிலில் எழுத
    எனக்கேது சொத்து.?
    --------------------

    சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  4. //நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும் சேரட்டும்,
    காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்,
    ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.//

    அருமையான அழகான உயில் !

    அர்த்தம் புரிந்தவர் மட்டுமே இந்த உயலைப்படித்து மகிழ்வார்கள் !!

    ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று நினைப்போர் படித்தால் ஏமாற்றமே!

    பதிலளிநீக்கு
  5. @காளிதாஸ்
    @டாக்டர் கந்தசாமி,
    @சக்திபிரபா,
    @ரத்னவேல்,
    @லக்ஷ்மி,
    @இராஜராஜேஸ்வரி,
    @ரவிச்சந்திரன்,
    @அப்பாதுரை,
    @கோபு சார்

    அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னவோ என் உள்ளத்தில் சில நாட்களாகக் குடைந்து கொண்டிருந்த சங்கதி.. எழுதிவிட்டேன். இயல்புக்கு மாறாகத் தோன்றுகிறதோ.?

    பதிலளிநீக்கு
  6. "புலரி புலர்ந்ததும்" - வரி சரியா சார்? Something like 'மாலை ie evening மலர்ந்தது' போன்றதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி என்றே நினைக்கிறேன் சார் பொழுது புலர்ந்ததும் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ”புலரி புலர்ந்தது மெல்லென எழுவீர் “என்று எப்போதோ கேட்ட பாடலின் தாக்கமோ என்னவோ வருகைக்கு நன்றி சில பதிவுகளை நீங்கள் படிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் ஆனால் தெரியப்படுத்த முடியவில்லையே

      நீக்கு