Monday, January 30, 2012

தீர்வுதான் என்ன .?


                                               தீர்வுதான் என்ன.?
                                               -------------------------

      வர்ணாசிரம தர்மங்கள் ஆதிகாலத்தில் கடைபிடிக்கப் பட்டன.
அதன் அடிப்படைக் காரணம் , சிந்திக்கப்பட்டோ சிந்திக்கப்
படாமலோ DIVISION OF LABOUR என்னும் அடிப்படையே.மக்கள்
கூட்டத்தையும்,அரசு எல்லையைப் பேணிக் காப்பவர்கள்
க்ஷத்திரியர் என்றும், மக்களை நல்வழிப் படுத்தி, அறிவுரைகள்
கூறிப் பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருப்பவர்களை
அந்தணர்கள் என்றும், பண்டமாற்றுக்கும்,வியாபாரத்துக்கும்
வைசியர்கள் என்றும் ,உடல் வருத்திப் பணி செய்பவர்களை
சூத்திரர்கள் என்றும் பிரித்தனர். ஆனால் இயற்கையிலேயே
மற்ற ஜீவ ராசிகளுக்கு இல்லாத பகுத்தறிவு என்ற ஒன்றை
இல்லாத அளவுக்கு வளைத்து , இந்த வகுப்பினரையே ஆண்டை
என்றும், அடிமை என்றும் எண்ணத் துவங்கி, எப்போதும் அவர்கள்
கை மேலோங்கி நிற்க,என்னவெல்லாம் செய்ய முடியுமோ
அவற்றைச் செய்து ,அவரவர் அதிகாரத்தை ஊர்ஜிதப்படுத்திக்
கொண்டனர். இதையே நான் என்னுடைய நாடகமொன்றில்
அரசன் ஆண்டான், பின் அவனுக்கு அறிவுரை என்று கூறி
அந்தணன் ஆண்டான், அதன் பின் பணபலம் படைத்த வைசியர்
ஆண்டனர், ஆண்டுகொண்டும் இருக்கின்றனர்.காலச் சுழலில்
இனி ஆள இருப்பவன் சூத்திரன் எனப்படும் தொழிலாளி என்ற
முறையில் வசனம் எழுதியிருந்தேன்..

       மனிதரில் ஏற்ற தாழ்வு ஏன் என்ற எண்ணம் தோன்றும்போது
இதன் அடிப்படைக் காரணமே ஒருவனை அடக்கி ஆளவேண்டும்
என்ற மனிதனின் சீர்கெட்ட குணம்தான் என்று தெரிகிறது. மனித
குலத்தில் பிறப்பால் பெரியவன் சிறியவன் என்ற பேதமே
மற்றவரின் முதுகில் சவாரி செய்ய எண்ணும் கேடு கெட்ட குணம்
தான் காரணம் என்று தோன்றுகிறது.

      எந்தக் காரணங்களுக்காக வர்ணாசிரம பேதங்கள் நடைமுறைப்
படுத்தப் பட்டனவோ அவை சமீப காலத்தில் செல்லாக் காரணம்
ஆகிவிட்டது

      அடுத்தவன், பந்தயத்தில் நம்மை முந்திவிடுவான் என்ற
எண்ணமே அவனுக்கு வாய்ப்பு கொடுப்பதைத் தவிர்த்து வந்தது.
அறிவுக்கண்ணைத் திறக்க விடாமல்,அனாவசியமான
பேதங்களைக் காட்டிஒரு சமூகத்தையே குருடாக்கி வளர்த்து
விட்டோம். இதில் ஏகத்துக்கும் அநியாயம் என்னவென்றால்
இவற்றை கடவுளின் பெயராலும் ,மதத்தின் பெயராலும் இறுக்கி
விட்டோம். நம்மிடையே இருந்த இந்த பிரித்து, பிரிந்து வாழும்
குணங்களினால் நம்மை அந்நியர் ஆதிக்கத்துக்கு அடிமைப்
படுத்தி விட்டோம். வந்தவர்களுக்கு வரவேற்பு வாசலாகி ,அவர்
உதவியுடன் இந்த வேற்றுமைகளை பயிரிட்டு உரமிட்டோம்.
அவர்களுக்கென்ன ...எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கினர் இவை
எல்லாமே கடந்த நானூறு வருடங்களுக்குள் நடந்ததே.

      இவற்றை ஆராயக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாத்திகன்,
நம் கலாச்சாரத்தை மதிக்காதவன் என்றெல்லாம் பழி வருகிறது.
ஆத்திகம் நாத்திகம் ஆன்மீகம் என்றெல்லாம் ஏதேதோ கூறி,
அறிவுக் கண்களைத் திறக்க விடுவாரில்லை.

     நடந்த தவற்றைத் திருத்த முனைவோரும், அதே தவறுகளை
செய்து தங்களுக்குச் சாதக மாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.
ஒருவனை சுயமாக சிந்திக்க விடாமல் தலைவர்கள் வழி நடத்த
தொண்டர்கள் அதே தவறான பாதையில் கொண்டு செல்லப்
படுகிறார்கள்.

     எனக்குத் தெரிந்து இந்த சாதீய வேறுபாடுகளை ஒழிப்பதில்
யாருக்கும் உடன்பாடில்லை. முக்கியமாக ,இந்த வேறுபாடுகளை
காட்டியே இன்னொரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கி
அடுத்தவன் முதுகில் சவாரி செய்ய, இன்னொரு கூட்டம் தயாராகி
வருகிறது. அறுபதுகளில் காணாத பேதங்கள் இப்போது முன்னை
விட அதிகமாக வெளிச்சத்தில் மிளிர்கின்றன.

     எல்லோருக்கும் அறிவுக்கண்களைத் திறக்க கல்வி வழங்கப்பட
வேண்டும். கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று எந்த சட்டம்
வந்தாலும் அவற்றை செயல் படுத்த விடாமல் எப்பொழுதும் ஒரு
கூட்டம் தயாராயிருக்கிறது. கல்வி லாபம் தரும் வியாபாரமாகி
விட்டது. நம் மக்களும் தனியார் பள்ளிகளே சிறந்த கல்விக்
கூடங்கள் என்று நம்பி அவற்றையே ஆதரிக்கிறார்கள். அதிகக்
கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சிறந்தது என்ற ஒரு மாயையில்
நம் மக்கள் இருக்கின்றனர். அரசு பள்ளிகளோ பெயருக்குச் செயல்
படுவதுபோல் தோற்ற மளிக்கிற்து.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25% இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.

     எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.
-----------------------------------------------------------------------------------


28 comments:

 1. ஏற்றத்தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
  என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
  அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
  அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
  வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.

  ரொம்ப சரியா சொன்னீங்க.

  ReplyDelete
 2. தனியார் பள்ளிகளை வளர்க்கவே திட்டங்கள் தீட்டபடுகின்றன..
  இந்த 25% திட்டத்துக்கு செலவு செய்வதை விட அரசு பள்ளிகளை தரம் உயர்த்தலாம்..
  அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பகுதியினர்.. வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை..
  பள்ளியில் ஆசிரியர்கள் தூங்கினால் உடனடியாக பணியிடை நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகளை செயல்படுத்தவேண்டும்
  தனியார் பள்ளிகளை முதலில் முடக்க வேண்டும்...
  முற்றிலும் அரசுடமையாக்கப்பட்ட கல்வி இருக்க வேண்டும்...
  பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும்

  ReplyDelete
 3. அன்புள்ள ஐயா...

  வணக்கம். ஒரு கல்வியாளனாக என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். மிகச் சரியான ஒரு கட்டுரையை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். இதனை வாசித்துக் கொண்டே வரும்போது இதற்கான தீர்வை நான் யோசிக்கும் அதையும் தாங்களே சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

  என்னடைய தனிப்பட்ட கருத்துக்களாக சிலவற்றை உங்கள் பதிவிற்குப் பதிலாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  1. சாதி. மதம் இவற்றைத் தாண்டி முறையான ஒழுங்குப்படுத்தப்பட்ட தரமான கல்வி எல்லா வசதிகளுடனும் எல்லோருக்கும் வழங்கப்படும் சூழலை ராணுவ நடவடிக்கை போலக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  2. எந்த சாதிசங்கங்களையும் முறைப்படுத்தக்கூடாது. அவற்றை நீக்குதல்வேண்டும். கல்வி வாயிலாகவே எல்லாவற்றையும் பெறவேண்டும். தகுதியும் தரமும் மேலெடுத்துச் செல்லவேண்டும்.

  3. புதிதாக பள்ளிகள், கல்லுர்ரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றை மேன்மேலும் தொடங்க அனுமதிப்பதை நிறுத்தி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனஙகளைக் கடுமையான விதிகளுக்குட்படுத்தி புற அமைப்பு, கட்டிடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல், வகுப்பறை, நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் முழுமைபெற்ற கல்வித்தகுதி, அவர்களின் பயிற்றுவிக்கும் தரம் இவை முறையான இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டு அவற்றினைத் தரமாய் எப்போதும் தக்கவைப்பது மிக முக்கியமானது,

  3, கல்வி உதவித்தொகை, கல்விக்கடன, இலவசங்கள் இவற்றையெல்லாம் நிறுத்தி அரசே உண்மையாகப் பொருளாதார நிலையில் கஷ்ட்ப்படுபவர்கள் யாராக இருந்தாலும் என்ன சாதியாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களின் உச்சக்கட்ட கல்வி வரை அத்தனை செலவுகளையும் ஏற்கவேண்டும். இலவசங்களுக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான தொகையை கல்விக்குச் செலவிடலாம்.

  4. கட்சி சார்புகளை எல்லாம் மறந்து தரமான மனிதர்களையும் அவர்களால் சமூகத்திற்குப் பயன்விளையும் என்று நம்புகிறவர்களையும் அரசியல் பணிக்கு தெரிவு செய்யலாம். இதெலல்லாம் நடக்குமா என்கிற கேலியைத் தாண்டி யோசிக்கவேண்டும்.

  5. மிகமிக முக்கியமான ஒன்று. விடுபாடு இல்லாமல் எல்லாப் பெண்களும் வயது வேறுபாடின்றி கல்வி அறிவு பெறுதல் கட்டாயமான பணியாக முறைப்படுத்தப்படவேண்டும். இது நல்ல சமுகத்தை வடிவமைக்கும்.

  பதிவிற்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.நிச்சயமாக..

  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. விசாலமான பார்வைகள்
  நிஜமான யோசனைகள்
  என்ன இருந்தாலும் என்று மாறும் எந்த நிலை?

  ReplyDelete
 6. ரொம்ப பெரிய சப்ஜெக்ட். கருத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.

  ReplyDelete
 7. வர்ணாசிரமம் ஜாதியாக மாறிய கொடுமையை அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கல்வியறிவு இதைப் போக்கிவிடும் என்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை.

  ReplyDelete
 8. இதில் வருத்தமளிக்கும் விஷயம்
  புறக்கணிக்கப் பட்ட பிரிவில் இருந்து
  முன்னேறியவர்கள் அவர்களை
  ஒரு புதிய உயர்ந்த ஜாதியாக
  நினைத்துக் கொண்ட அவர்கள் இனத்தவர்களையே
  தாழ்ந்தவர்களாக நடத்துவதுதான்
  சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன்.

  தொழிலின் அடிப்படையில்தான் சாதியை பிரித்தான் அன்றைய முட்டாள் மனிதன். இன்று சாதியைவைத்து யாரும் தொழில் செய்வதில்லை. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தினரின் அடுத்த தலைமுறைகள், இன்று நகரங்களில் பணிபுரிகின்றனர்.

  வெள்ளாமைக் கண்டால்தான் வாழ்க்கை என்ற நிலை மாறி இருக்கிறது. இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆள் இல்லை.

  குடுமி வைத்து புரோகிதம் பார்த்த குருக்களின் வாரிசுகள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.
  பனை ஏறி கள்ளு விற்றவர்கள் இன்று வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்.

  குலத் தொழிலைக் கொண்டுதான் சாதி பிரிக்கப்பட்டது. குலத் தொழிலை யாரும் தொடராதபோது சாதி எதற்கு...?
  சாதி சிலருக்கு வரம் சிலருக்கு அதுவே சாபம்.

  நல்லதொரு பதிவு வாழ்த்துகள் ஐயா...!

  ReplyDelete
 10. @லக்ஷ்மி
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. @குடிமகன்,
  கல்வி ஒரு லாபம்தரும் வியாபாரமாகி விட்டது. ஒரு தனியார் பள்ளி கேஜி வகுப்பில் சேர்க்க ரூ.95,000-/ வசூல் செய்கிறார்கள். அதில் சேர்க்க என்ன ஒரு போட்டி. இத்தகைய நிலைக்கு நாம்தான் காரணம். தனியார் பள்ளிகள் மேல் அப்படி ஒரு மோகம். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. @ஹரணி.ஐயா, ,
  உங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் கூறுவது குறைந்த பட்சம் பள்ளி நிலையிலாவது அமல் படுத்தப் பட வேண்டும். இங்கு அடிமட்டத்திலிருக்கும் பல மக்களிடம் பேச்சுக் கொடுத்து ப் பார்த்தேன். அநேகமாக எல்லோரும் அரசுப் பள்ளிகளில் அவர்களது குழந்தைகளைச் சேர்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்றே நம்புகிறார்கள். எல்லோருக்கும் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. கல்விக் கட்டணம் கேட்டால் மலைப்பாக இருக்கிறது. ப்ரீ ஸ்கூல் சேர்க்க மாதம் ரூ.5000-/ வசூலிக்கிறார்கள். நாம் எங்கே போகிறோம். ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் சமகல்வி அதுவும் இலவசமாக வழங்கப் பட வேண்டும் இருந்தால்தான் ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம் உருவாகும்.

  ReplyDelete
 13. @இராஜராஜேஸ்வரி,
  @டாக்டர் கந்தசாமி,
  @சிவசங்கர்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 14. @அப்பாதுரை
  ஏற்ற தாழ்வற்ற கல்வி இருந்தால் நிலைமை ஓரளவுக்குச் சீர்திருந்தும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 15. @ரமணி,
  @தோழன்.மபா.
  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. //எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
  தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
  என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
  அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
  அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
  வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.//

  மிகவும் அருமையான வாசகங்கள். நன்றி ஐயா.

  ReplyDelete
 17. //.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
  25% இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
  நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
  இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.// intha karuththai otti thaan inru en post...http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_31.html

  ReplyDelete
 18. @ ராதாகிருஷ்ணன்,
  @ மதுரை சரவணன்

  தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நான் முன்பே எழுதியுள்ள கல்வி மறுபக்கம் என்ற என்
  இது தொடர்பான ஒரு பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.
  http://gmbat1649.blogspot.in/2010/12blogspot_23.html

  ReplyDelete
 19. ஏற்ற தாழ்வுகள் என்பதே உண்மையில் இல்லை. எல்லோரும் முக்கியபங்கு வகிப்பவர்கள். நம் உடலில் உள்ள எந்த உறுப்பு உசத்தி எது மட்டம்?

  மனிதன் தாழ்வு ஏற்றம் இல்லை என்று உணர்ந்து அனைவரையும் சமமாக பாவிப்பது என்பது நடக்காது. இதற்கு தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. தனிமனிதன் வேண்டுமென்றால் மாறலாம்.

  ReplyDelete
 20. @சக்தி ப்ரபா
  ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும். இருக்கிறதா இல்லையா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் ஒரு உடலின் உறுப்புகள் என்று நினைப்பது ப்ரபாவின் உயர்ந்த மனசால் முடியலாம். என் கட்டுரையே இவற்றின் ஆதார காரணங்களை களைந்தெறிய சம கல்வி அதிலும் வேறுபாடு இல்லாத இலவசக் கல்வி உதவலாம் என்பதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரபா.

  ReplyDelete
 21. யோசிக்க வைக்கிறது.

  ReplyDelete
 22. யோசிக்க வைக்கிறது.

  ReplyDelete
 23. யோசிக்க வைக்கிறது.

  ReplyDelete

 24. தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறது ஐயா பதிவு

  ReplyDelete

 25. @ திண்டுக்கல் தனபாலன்
  @ ஸ்ரீ ராம்
  @ கில்லர்ஜி
  என் பதிவை வந்து பார்வை இட்டமைக்கு நன்றி. பின்னூட்டங்களே பதிவாக மாறி இருக்கும் போது உங்களது இந்தப் பின்னூட்டங்கள் மிகவும் சிக்கனமாக இருக்கிறது/

  ReplyDelete
 26. சாதிகளின் பெயரால் லாபம் சம்பாதிப்பவர்கள் எந்த நாளும் சாதியொழிப்புக்கு ஆதரவாய் இறங்கப்போவதில்லை. கல்வியால் அனைத்தும் வசப்படும் என்றாலும் கல்வி அனைவருக்கும் வசப்படுவதில் சிக்கல். அரசுப்பள்ளிகள் முறையாக இயங்கினாலே போதும், சாதியிலோ, பொருளாதாரத்திலோ, சமுதாயத்திலோ எந்த வகையில் பின்தங்கியிருந்தாலும் அவர்களை முன்னேற்றும் புதிய பாதை உருவாகும். அரசுப்பள்ளிகளை நெறிப்படுத்தும் செயலொன்றும் மலையைப் பெயர்ப்பது போன்ற ஆகாத காரியமில்லை. முயன்றால் முடியாததுமில்லை. வாய்ச்சொல் வீரர்களை விடவும் செயல்வீரர்களின் எண்ணிக்கை நம்மிடத்தில் குறைவு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலை நமது.

  ReplyDelete

 27. @ கீதமஞ்சரி
  உண்மைதான் வாய்ச்சொல் வீரர்களை விட செயல் வீரர்கள் நம்மிடம் குறைவேஅதைவிட துர்பாக்கியமான நிலை சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்போரே அதிகம் மனதளவில் சாதி வேறுபாடுகள்காட்டாதிருக்கும் சமுதாயம் மலரவே நான் கூறியுள்ள கருத்துக்கள் உதவும்

  ReplyDelete