Thursday, January 12, 2012

நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...

                            நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...
                            ------------------------------------------------


அந்தக் காலத்தில் உலகத் தலைவர்களை ரேடியோ மூலமாகவும் ,பத்திரிகை வாயிலாகவும்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போதுபோல் தொலைக் காட்சியில் அவர்களைக் காண முடியாது.இந்த நிலையில் தலைவர்களை நேரில் சந்திப்பது என்பது அகஸ்மாத்தாகவும் எதிர்பாராததாகவும் அமைவதே. உலகம் போற்றும் உத்தமர் மஹாத்மா காந்தியை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.என் சம வயதுக்காரர்களுக்கோ இளையவர்களுக்கோஅந்த மாதிரி வாய்ப்பு அமைந்திருப்பது மிகவும் அரிதாகும்.

    
      நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்.எனக்கு எட்டு வயதிருக்கலாம் .1945-1946-ம் வருடம் என்று நினைக்கிறேன். காந்திஜி மதராஸ் வருவதாகவும் அவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றும் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, போகும்போது என்னையுமழைத்துக் கொண்டு போனார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் என்றே தோன்றுகிறது. மஹாத்மாவை சுமார் 20-30-அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.

     மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தாஎன்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக் காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை(விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.

  நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.

           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.

     
     HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

      1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
                                           ----------------------------------------------------------------------.                             


     .         .                             


                                     

9 comments:

 1. அன்புள்ள ஐயா..

  எனக்குப் பிடித்த பதிவு இது. எதற்கு சொல்கிறேன் என்றால் எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. இவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கும் பெருமை உண்டு. பட்டிருக்கிறேன்.

  காந்தியைத் தரிசித்தது உண்மையில் கொடுப்பினைதான். உங்களின் வயது அந்தக் கொடுப்பினையைத் தந்திருக்கிறது.

  நர்ன் சிறுவயதில் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் அருகில் அண்ணாவின் பேச்சை அரைகுறையான நினைவுகளுடன் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது.

  அதேபோன்று 8ஆம் வகுப்பு படிக்கும்போது திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் (என்னுடைய தாய் மாமன் அதிமுகவில் இருந்தார்) கைமடித்துவிடப்பட்ட கருப்புச்சட்டை கழுத்தில் சிகப்புத் துண்டு பாம்புபோலத் தொங்கிக்கொண்டிருக்க எம்ஜிஆர் என் மாமா துர்க்கிக் காட்ட என் கன்னத்தில் தட்டியது நினைவுக்கு வருகிறது..

  இந்திரா காந்தியை வெகு துர்ரமாய் சென்னையில் பார்த்தது..

  இந்தப் பதிவின் இறுதி வாக்கியங்கள் நெஞ்சில் அறைகின்றன. சூயென்லாய் தட்டிய கன்னத்தில் அடித்துக்கொண்டேன் என்பது. உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 2. நிதானமான அனுபவப் பகிர்வு. உலகத் தலைவர்களை பார்க்கக் கூடிய பாக்கியம் பெற்ற நீங்கள் அதை எழுத்தில் அழகாக கொண்டுவந்திருக்கின்றீர்கள். இத்தகைய பதிவுகளே...எல்லோரும் விரும்பக் கூடியதாக அமைந்து விடுகிறது. வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
 3. நீங்கள் எழுதத் தேர்ந்தெடுத்த தலைப்பு, ஒரு புது மாதிரி தான்.

  தேசப்பிதாவை மதுரையில் சிறிய வயதில் பார்த்த நினைவு நிழலாக மனத்தில் படிந்திருக்கிறது. பிற்காலத்தில் பாடப்புத்தகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்ட உருவம், அந்தச் சிறுவயதில் நான் பார்த்தவர் மகாத்மா என்று நிச்சயப்படுத்தியது. பிற்காலத்தில் தான், மதுரைக்கு அவர் வந்த பொழுது தமுக்கம் மைதானத்தில் உரையாற்றினார் என்று தெரிய வந்தது.

  மகாத்மா சுடப்பட்டு மரணித்த நேரத்து வானொலியில் பிரதமர் நேரு ஆற்றிய உரையை குறிப்பிட்டிருக்கலாம். இன்றும் மனத்தில் நிற்கும் உரை அது. தேசமே அதிர்ச்சியுடன் குலுங்கி விம்மியது மகாத்மாவின் மறைவுக்குத் தான்.

  ReplyDelete
 4. அன்புள்ள ஹரணி ஐயா, சில நினைவுகள் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.அதில் இதுவும் ஒன்று.காந்திஜி என்றால் பென் கிங்ஸ்லி நினைவுக்கு வரும் தலைமுறைக்கு அந்த காலத்தில் காந்திஜி எந்த அளவுக்கு மதிக்கப் பட்டார் என்பது சரிதிரத்தில் படிப்பதேயாகும். அந்த சரித்திர மனிதரை நேரில் கண்டது என்றும் மகிச்சிதரும் அனுபவம்.யார் யாரையோ பார்த்திருந்தாலும் என் நினைவில் ஆடும் மூவரைப் பற்றிதான் எழுதியிருக்கிறேன் உடன் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 5. தோழன் மபா. தமிழன் வீதி. எழுதும் எழுத்துக்கள் எல்லாம் எல்லோரும் விரும்பிப் படிக்கவே எழுதுகிறேன். என் அனுபவங்கள் படிக்கும்போது ஒரு சிறுகதை படிப்பது போல் நினைத்துக் கொள்ளலாமே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. அன்புள்ள ஜீவி, நானும் வெவ்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறேன். காந்திஜியைப் பற்றி எழுதும்போது நான் அந்த வயதில் பெற்ற அனுபவத்தையே எழுதினேன். காந்திஜியின் மறைவின் போது நேரு அவர்கள் “ Friends and comrades, the light has gone out from our lives and there is darkness everywhere.I do not know what to tell you and how to say it.Our beloved leader Bapu as we called him , the father of our nation is no more.The light has gone out I said and yet I was wrong. For the light that shone in this country is no ordinary light."என்ற விதத்தில் பேசிப்போனது பிற்காலத்தில் தெரிந்து கொண்டதே. இவர் இப்படி என்றால் திரு. வல்லபப்பாய் படெல் ஹிந்தியில் மிகவும் பாமர மொழியில் “சற்று முன்புதான் பேசிக்கொண்டிருந்தார். இப்போது இல்லாமல் போய் விட்டார் “என்ற ரீதியில் பேசியதும் கெள்விப் பட்டதே. உங்கள் கருத்து என்னை மறுபடியும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டது. நன்றி

  ReplyDelete
 7. // காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.//
  அருமையாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 8. அனைவருக்கும் இப்படி அருமையான சந்தர்ப்பம்
  முயன்றால்கூட கிடைக்காது
  அதுவாக வாய்க்கவேண்டும்
  வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவானகள்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. sir,

  விவரிக்க இயலாத உணர்வுகள் எழுகிறது.............. ரொம்ப பிடித்த பதிவில் இதுவும் ஒன்றாகிப்போனது.

  //இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.//

  //அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை” (விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது//

  //ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன் //


  ரசித்தேன் என்ற வார்த்தை இங்கு எடுபடவில்லை...........உங்கள் அனுபவம் மனதில் பதிந்தது.

  ReplyDelete