Monday, June 30, 2014

ஒன்றில் இரண்டு


                                                    ஒன்றில் இரண்டு
                                                      ------------------------



 ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...சில அத்வைதக் கருத்துக்களும்
                                 ----------------------------------------
கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா என்றேன்.
எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய்.
அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே.
சரி. உண்மைதான் என்ன.? “
உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.?
பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள்.
கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
இறந்தவனாகக் கருதப் படுவான்.
மூச்சு என்பது என்ன.?
சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம்.
எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன.
உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான்

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்று ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்து எழுதியதைப் படித்தவுடன்  எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டேன். அத்துவைதக் கருத்துக்களுக்கு அது வேறு ஒரு வியாக்கியானமாகத் தோன்றியது. இம்மாதிரி சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் என்ன காரணமிருக்கும் என்று யோசித்தேன். தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள நினைக்கும் மனமே காரணம் என்று புரிந்தது. இந்தக் கேள்வியும் தேடலும் ஒன்றும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது போலவும் அதை புரிந்துகொண்டு அனுஷ்டிக்கத் தெரியாததாலோ, முடியாததாலோதான் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எழுகிறது போலவும் தோற்றமும் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் கீழ்ப்பாக்கம் போன்ற இடத்துக்குத்தான் போக வேண்டும் என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

முதலில் நான் என்பது யார்.?கண்ணும் , காதும் , மூக்கும் இன்ன பிற உறுப்புகளும் கொண்ட உடலா.? அப்படியானால் இறந்தவுடன் பேரென்ற ஒன்று இருந்ததையெ மறந்து பிணம் என்று அழைப்பார்களா.?நான் இருக்கிறேன் இல்லை இறந்துவிட்டேன் என்று தெரியப் படுத்துவதேநான் விடும் மூச்சுக் காற்றுதான் அல்லவா?அதையே நான் ஜீவாத்மா என்றும் இறந்தபிறகு அது பரமாத்மாவுடன் கலக்கிறது என்றும் வியாக்கியானித்தேன். அண்மையில் சங்கராச்சாரியாரின் தெய்வக் குரல் எனும் நூலை படித்துக் கொண்டிருந்தேன்

.ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் சங்கரர். அதாவது நாம்தான் கடவுள் என்கிறார். தன்னைத் தவிர வேறு கடவுளே கிடையாது என்ற ஹிரண்யகசிபு அகங்காரத்தில் சொன்னான்.ஆனால் கடவுள் தவிர வேறெதுவும் கிடையாது என்பதால் நாமும் கடவுளே என்கிறார். ஜீவன் ஆனது நான் என்னும் எண்ணத்தைவிட்டுவிட்டு  பிரம்மத்துடன் கலந்தால் அதுவும் பிரம்மமாகிவிடும் என்கிறார். நாம் இப்போது உத்தரணி ஜலத்தைப் போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஆண்டவன் அகண்ட சக்தியுடன் சமுத்திரம்போல் இருக்கிறார்.அந்த சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணிஜலம் தான் தனி என்னும் அகங்காரம் நீக்கிசமுத்திரத்துடன் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும் என்கிறார்.( கவனிக்கவும்: நான் மூச்சுக் காற்று என்றேன், அவர் உத்தரணிஜலம் என்றார். நான் அகண்டவெளிக் காற்று என்றேன். அவர் சமுத்திரம் என்றார். நான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்துவிடும் என்றேன். அவர் சமுத்திரமாக மாற வேண்டும் என்கிறார்.) இப்படி எழுதுவதன் மூலம் நான் என்னை அவருடன் ஒப்பிடுகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். There was a striking similarity which prompted me to compare


நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, 'ஸ்வாமியே நாம்' என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப்பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, 'ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு' என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத்தான் இருந்தாக வேண்டும்.

வர் எல்லாப் பொருட்களிலும் இருந்தாலும் மனிதனாக இருக்கும்போது மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதை பாப புண்ணியங்களில் ஈடுபடுத்தி பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

கடவுள் என்னும் தத்துவத்துக்கு எல்லா சக்திகளும் உண்டென்று எண்ணி பாப புண்ணியங்கள் அதன் பலன்கள் கொடுப்பவர் என்று நம்பினால் அவர் ஏன் நம்மில் இருந்து கொண்டே அந்தத் தவறுகளைச் செய்ய வேண்டும்.?கடவுளுக்கு நிர்க்குணன் என்றொரு பெயருண்டு, எந்த குணமும் இல்லாதவன் என்று பொருள். ஒரு நிர்க்குணன் மனிதரில் ஏன் பலரையும் சற்குண , துர்குணராகப் படைக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும்?இதற்குப் பதிலாக கர்ம வினைகள் என்று காரணம் கூறுவொருமுண்டு.,

ஜீவன் என்பது பரம் பொருளின் ஒரு பாகமே என்றால் இவ்வுலகில் ஏற்ற தாழ்வுகள் ஏன்.? மனிதனின் ஆதிக்கக் குணமே இம்மாதிரியான ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம். இகமும் பரமும் ஒன்றானால் அப்படி இருக்கக் கூடாதே, ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.

நம் மனம்தான் நாம் படைத்த கடவுளிடம் சேர்க்கிறது, இல்லாவிட்டால் பிரிக்கிறது. அழிந்து போகப் போகும் உடலே சாசுவதம் என்பதுபோல் எண்ணுகிறோம். வாழ்க்கையின் மதிப்பீடுகளைத் தொலைத்துக் கொண்டு வருகிறோம். எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் இருக்க வேண்டும் அதுவும் சமமாகவும் நேர் எதிராகவும் இருக்க வேண்டும் என்பதுதானே விஞ்ஞானவிதி..அப்படி என்றால் எல்லோர் உள்ளும் இருக்கும் கடவுளுக்குள்ளும் ஏற்ற தாழ்வு இருக்கக் காரணம் என்ன..

நான் முன்பெ எழுதி இருந்தேன். கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான புனைவுகள்

என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?

மனதில் தோன்றும் எண்ணங்கள் பகிரப் படுகின்றன. இவை யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க அல்ல. ஒரு அறிவு பூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கலாம் என்னும் நம்பிக்கையே காரணம்.








  




Friday, June 27, 2014

கேள்வி பதில்கள் என் வழியில்


                               கேள்விபதில்கள் -என் வழியில்
                                ----------------------------------------------                                                                   
அது என்னவோ தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே ஏன் எப்படி எதற்கு என்று கேள்விகேட்டே பழகிவிட்டதுசிறுவயதில் சாக்ரடீசைப் படித்ததின் தாக்கமோ தெரியவில்லை. ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் ஏற்க முடிவதில்லை சில விஷயங்களைத் தெளிவிக்க நானே என்னையே கேள்வி கேட்டு பதில்களையும் கூற முயல்வேன்  நான் கற்றது அதனால் பெற்றது எல்லாவற்றையும் கூறி ஏதாவது தெளிவு கிடைக்கிறதா என்று பார்ப்பேன். அதே உத்தியை பதிவிலும் கொண்டுவர இதை எழுதுகிறேன் இந்தமுறை சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம். என்ன செய்வது என் வழி தனி வழி.ஆனால் எழுதியது வெறும் பொழுது போக்குக்கல்ல என்று உறுதி அளிக்கிறேன் ஊன்றிப் படியுங்கள் நண்பர்களே. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்  

 

கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயுதங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?

பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்

கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?

பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்றஆரம்பித்து விடுகின்றன. உருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றிய எண்ணங்கள் நம் மனதில் நிலையாகஇருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.
கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.


கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.


எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?

கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .  
 

 
 

Tuesday, June 24, 2014

வலையில் பிரச்சனை


                                வலையில் பிரச்சனை.
                                 --------------------------------
மூன்று நான்கு நாட்களாக இண்டெர்நெட் உபயோகிக்க முடியாமல் BSNL-ல் பிரச்சனை இருந்தது. பிரச்னை தீர்ந்து வலைக்குள் வந்தால் டாஷ் போர்டில் பதிவுகள் பற்றிய விவரங்கள் வருவதில்லை.இதே பிரச்னை குறித்து திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் எழுதி இருந்தார். தீர்வு கிடைத்ததா தெரியவில்லை. என் கணினி ஞானம் மிகக் குறைவு. எளிதான தீர்வைப் பதிவர்கள் கூற வேண்டுகிறேன் நன்றி

Thursday, June 19, 2014

இனிதான ஒரு காலை வேளையில்


                                இனிதான ஒரு காலை வேளையில்
                                  --------------------------------------------------


(உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. அம்மாதிரியான விளக்க முடியாத எண்ணங்களை ஓரளவு எழுத்தில் வடிக்க முயன்றேன் எனக்கேத் தெரிகிறது .முக்காலும் abstract என்று. என் வலையின் முகப்பில் உள்ள வாசகங்கள் துணை நிற்கின்றன).  

பொழுது விடியும் நேரம் கீழ்த் திசையில்
செக்கர் வானம் நிறம் மாறிக் கண் கூசும் வெளிச்சம்
உயிர்த்தெழலும் இனிதே நிகழ இன்றொரு நாளும்
புதிதாய்ப் பிறக்க எண்ணச் சிறகுகள் விரிக்கின்றன.
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்...!

பதில் அறியாக் கேள்விகள்.
பதில் கூற முயன்றாலும் பதிலும் கேள்விகளே

ஏன் இங்கு வந்தாய் நீ இருந்த இடம் ஏது?.
ஏதோஒரு குயவனின் கைவினையோ நீ
அன்றவன் கை செய்த பிழைக்கு நீயோ பொறுப்பு
எவரது கைவினையும் அல்ல நீ
உந்தை தாயின் மகிழ்வின் விபத்து நீ
யாரும் உனை வேண்டி வந்தவன் அல்லநீ

இருள் நீங்கி விடியும் நேரம் எண்ணச் சிறகுகளே
அசைந்துன்னை அலைக்கழிப்பதேனோ...?
எண்ணச் சிறகசைப்பில் அன்றோ உன்னிருப்பு
உன் உயிர்ப்பு எல்லாம் தெரிகிறது

எத்தனை விடியல் எத்தனை காலை
என்றெல்லாம் மதிமயங்கிக் கழித்துவிட்டாய்
பாலனாம் பருவம் செத்தும் காளையாந்தன்மை
செத்தும் காமுறும் இளமை செத்தும் மேல் வரும்
மூப்புமாகி உனக்கு நீயே அழலாமா.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தாயோ?
நீயும் ஓர்க்கால் வெளியேற எங்குதான் ஏகுவையோ.?
கண்ணிற் காணா சொர்க்கமா இங்கில்லாத நரகமா?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்காச் சீரின் கண்மணி போல்
வாழ்ந்த வாழ்வின் முடிவில் என்னதான் காண்பையோ?

இன்று விடிந்தது, புதிதாய் உயிர்த்தாய்
எங்கும் எதிலும் காணும் காட்சியில் எதிலும் இன்பம்
நினைப்பினில் இன்பம் எனவே பொங்கி வழிந்தால்
இன்று நீ பிறந்ததே இவற்றைத் தூய்க்கவே
என்று உணர் போதும் எண்ணச் சிறகுகள் அசையட்டும்
திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில். 

( குயவன் = கடவுள் என்று நினைக்கப் படுபவர்)  

25-ல்
  
75-ல்

  





Monday, June 16, 2014

இன்னொரு கதையல்ல ...நிஜம் .!


                          இன்னொரு கதையல்ல .....நிஜம்...!
                          ----------------------------------------------


சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள் கற்பனைக் கதைகளையும் விஞ்சி விடுகின்றன. அண்மையில் செய்தித்தாளில் படித்தது எனக்குள் பல கேள்விகளை எழுப்பிச் சென்றது.. இதைப் படித்து முடித்தபிறகு  இதன் காரண காரியங்கள் என்ன என்று வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாமே
தன்னுடைய இரு மகள்களைக் கற்பழித்தக் குற்றத்துக்காக நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட்டவர் விடுவிக்கப் பட்டார்.வழக்கின்போது புகார் கொடுத்த பெண்கள் புகாரை வாபஸ் வாங்கி விட்டனர்.
இரண்டு பெண்களும் அவர்களது தாயும் நீதிபதி முன் கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தில் அந்தத் தந்தை தன் பெண்களை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசார்ணைக்கு வந்தபோது அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்ததை உறுதி செய்யவில்லை. கற்பழிப்புக்காகவும் protection of children from sexual offences (POCSO)சட்டத்தின் கீழும் வழக்கு பதிவாகி இருந்தது.
பெண்களில் இளையவள் 2013-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவள் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய தந்தை தன்னைக் கற்பழிப்பது உண்டு என்றும்  தன் அக்காவையும் கற்பழித்திருக்கிறார் என்றும் , எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இரண்டு பெண்களுடையவும் அவர்களது தாயுடையவையுமாக வாக்கு மூலங்கள் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவாக்கப் பட்டது அதன்படி குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் பட்டது.
வழக்கின் போது பெண்களின் தாய் கொடுக்கப்பட்ட எல்லாப் புகார்களையும் மறுத்தார். மூத்த பெண்ணுக்கும் அவர்களது தந்தைக்கும் சிற்சில சின்ன மனஸ்தாபங்களும் சண்டைகளும் இருந்ததென்றும் கூறினார். வழக்கின் போது இரண்டாவது மகளும் தாய் சொன்னதையே கூறினார். தந்தையிடம் ஏற்பட்ட சண்டை ,மனஸ்தாபத்தில் அக்கா காவல் நிலையத்துக்குப் போனபோது தானும் கூடப் போனதாகவும் அங்கு ஒரு NGO வில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதாகவும் அவர் ஆலோசனைப் படி தந்தைக்கு எதிராகப் புகார் கொடுத்ததாகவும் சொன்னார். தந்தை தன்னைக் கடிந்து கொண்டதாகத் தமக்கையும் கூறினார்.
வழக்கு விசாரணையில் தள்ளி வைக்கப் பட்டது
பத்திரிக்கையில் வந்த ஒரு inocuous செய்தியாக இல்லாமல் தற்காலப் பெண்கள் நினைத்தால் யாரையும் குற்றம் சாட்டலாம் என்றும் தோன்றுகிறது. உண்மையிலேயே தந்தை தவறாக நடந்து கொண்டாரா.? நடந்தது என்ன.?நிஜ நிகழ்ச்சி ஒரு நல்ல கற்பனைக் கதைக்கு வழி வகுக்கலாம் என்றே தோன்றுகிறது. வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன் 
இந்தப் பதிவை வெளியிடும் முன் இன்றைய (16-06-2014) ஆங்கில ஹிந்துவில்(பெங்களூர் பதிப்பு )இன்னுமொரு செய்தி மனசை வெகுவாக பாதித்தது.முன்பொரு முறை இங்கிலாந்தில்  இந்தியர் ஒருவர் தன் பெண்ணையே ( குழந்தையையே ) பலாத்காரம் செய்து , மனைவி போலீசில் புகார் கொடுத்தபோது வழக்குக்காக ரிமாண்டில் வைக்கப் பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டதை கதையல்ல நிஜம் என்று பதிவெழுதி இருந்தேன் தான் பெற்ற பெண்ணையே பலாத்த்காரம் செய்பவரின் மனம் எத்தனை வக்கிரமாக இருக்கவேண்டும். இன்றைய செய்தியில் தந்தை ஒருவன் தன் 18 வயது பெண்ணை கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பலவந்தப் படுத்திப் புணர்ந்து வந்ததும் அவளை மிரட்டி வெளியே சொல்லாமல் இருக்க வற்புறுத்தியதும் கடைசியில் குடி போதையில் பலர் முன்னே பலாத்காரம் செய்ய முயன்றபோது அகப்பட்டுக் கொண்டதாகவும் செய்தி. 
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.? நான் என் முந்தைய பதிவில் முதன்மையாகக் குறிப்பிட்டிருந்த நன்மொழிப் படி நடப்பதில்லை என்பது தெளிவாகிறது .      






Friday, June 13, 2014

சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்


                                  சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்.
                                  -----------------------------------------------  


பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? தலைப்பின் மூலம் வாசகர்களைக் கவர முடியுமா? வாசகர்களைக் கவர்வதா நோக்கம்? உனக்குத் தெரிந்ததை உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அனுபவங்களைப் படிக்கும் போது சிறு கதை படிப்பது போல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. பத்து கட்டளைகள் என்று தலைப்பிட்டால் இவன் யார் நமக்குக் கட்டளையிட என்று பதிவைச் சீந்தாமலே போகலாம் பத்து அறிவுரைகள் என்று தலைப்பிட்டாலும் எழுதுபவன் உயர்ந்த நிலையில் இருக்கும் தோற்றமளிக்கும்  இருந்தாலும் ஒரு தலைப்பு வேண்டுமே. நான் கற்றவற்றையும் என் மக்களுக்குக் கற்பிக்க முயன்றதையும் கூறும் இப்பதிவு சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் என்று இருந்தால் தவறாய் இருக்காது என்று நம்புகிறேன்

நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன, சிலவற்றை அடியோடு மாற்ற வேண்டும் போல் இருக்கும் . மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் மாற்றக் கூடியவற்றை மாற்றும் உறுதி வேண்டும். மாற்ற முடியாதது எது மாற்றக் கூடியது எது என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்                                                                 
நாம் பேசும் வார்த்தைகளில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும்.பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. பேசப்பட்ட வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியாது ஆனால் நடப்பது என்னவென்றால் அதிகமாகத் தவறுதலாகத் திறக்கப் படுவது வாயே..
             
இன்றென்பது நேற்றைய திட்டமிடப்படாத நாளை .நாளை என்ற ஒன்றே நிச்சயமில்லை என்றும் இன்றையப் பொழுதை நலமாகச் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை சுவைக்காது. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை நல்லது நடக்கும் என்று நம்பு. அல்லது நடந்தாலும் ஏற்கத் தயாராய் இரு Hope for the best and be prepared for the worst ஆகவே எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் .திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்

வாழ்வில் குறிக்கோள் என்று ஒன்று இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோளும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும் என் மக்களிடம் நான் கூறுவது உன் குறிக்கோள் நட்சத்திரத்தை எட்டுவதாக இருக்கட்டும் முயற்சி செய்யும்போது குறைந்த பட்சம் மர உச்சியையாவது அடையலாம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவிருந்தாகுமா என்றுஒரு சொல் வழக்கில் உண்டு, அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளத்தான் வழிவகுக்கும்  பருந்துகள் மிக உயரத்தில் பறக்கின்றன ஏன் என்றால் அவை தம்மால் முடியும் என்று நம்புகின்றன.

என்னதான் திட்டமிட்டாலும் தன் திறமையில் நம்பிக்கை வைத்தாலும் கடின உழைப்பின்றி அவை சாத்தியமாகாது கடின உழைப்புக்கு மாற்று இல்லை மனிதன் ஒரு தனித்தீவாக இயங்க முடியாது அடுத்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளரை தன் முதலாளி போன்று நினைக்க வேண்டும் என்பார்கள். நம்மை அடுத்தவன் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் அடுதவரையும் நாம் நடத்த் வேண்டும் தன்னை தனக்கு மேலிருப்பவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் நமக்குக் கீழ் இருப்பவரையும் நாம் பாவிக்க வேண்டும்
எதுவும் செய்யாது இருப்பவர்கள் செய்யும் பணியில் அவர்களை அர்ப்பணித்துக் கொண்டால் சும்மா இருப்பது என்ற ஒன்றே இருக்காது. செய்யும்பணியின் மேல் காதல் கொள்ள வேண்டும் செய்யும் பணி எதுவாயிருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க விரும்பவேண்டும் தோட்டி வேலை செய்தாலும் தோட்டிகளில் சிறந்தவனாய் இருக்க வேண்டும்
இருந்த நாட்களை விட வர இருக்கும் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்னுடைய மேற்கூறிய நன்மொழிகளின்படி நடந்தால் என்று கூறிக் கொள்கிறேன்
என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்

1) Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
.
2.) Nothing is opened more often by mistake than the mouth
3.) Today is the tomorrow you didn’t plan for yesterday.

4.) Plan your work and work your plan

5.) Aim at the stars then atleast you can reach the tree top

6.) They fly high because they think they can

7.) There is no substitute for hard work

8.) What a man dislikes in his superiors, let him not display in his treatment to his inferiors  
      
9.)   Work is the refuge of people who have nothing better to do

10.)  In those days , he was wiser than he is now;;he used to frequently take my advice






     


Tuesday, June 10, 2014

என்றென்றும் எப்பொழுதும் என்னருகே


                         என்றென்றும் எப்பொழுதும் என்னருகே
                         -------------------------------------------------------



ஔவையார் “இனிது இனிது ,ஏகாந்தம் இனிதுஎன்று கூறியதாகப் படித்த நினைவு. ஔவையர்ர் தனித்தே இருந்ததால் அதுவே அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம் இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது “தனிமையிலே இனிமை காண முடியுமாசரி இப்போது இந்த ஆராய்ச்சிக்குக் காரணம் என்ன. இரண்டு மூன்றாம் முறையாக என்னைத் தனியே விட்டு விட்டு என் மனைவி பெங்களூர் இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு “லலிதாசஹஸ்ரநாம“ பாராயணம் செய்யப் போயிருக்கிறாள்.இராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஒரு மில்லியன் முறை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள் இந்த ஆண்டு ஜூலை மூன்றாம் தேதியுடன் முடிவடைகிறது இதில் இவள் பங்காக ,சேது கட்டும்போது அணிலின் சேவை போல பாராயணத்தில் பங்கு கொள்ள விரும்புகிறாள். அவள் என்னிடம் அருகில் ஐயப்பன் கோவிலிலிருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. முப்பது நாற்பது பேர் போகிறார்கள் நானும்போகட்டுமா.?என்று கேட்டபோது நானும் மிகப் பெருந்தன்மையாகஉன் மனசுக்குப் பிடித்ததை நீ செய்ய நான் என்றும் தடை சொல்லமாட்டேன்என்று கூறினேன் . அவளுக்கு என்னைப் பற்றிய கவலை. காலை உணவு மதிய உணவு எல்லாம் செய்துவிட்டுத்தான் போவாள். நானே பார்த்துக் கொள்கிறேன் என்றாலும் அவளுக்கு மனசு கேட்காது. நேரத்துக்கு எடுத்துப் போட்டு நான் உண்ண வேண்டும் என்னும் கவலை. அவளுக்குத் தெரியும் உணவு விஷயங்களில் நான் எப்போதுமே கவனம் செலுத்தியது கிடையாது. ஆக்கிப் போட்டு எடுத்து உண்ண சோம்பல்படுவேன் என்பது அவள் கணிப்பு. இருந்தாலும் மனசில் ஆண்டவன் பெயர்பாட ஆவலும் அதிகம்.என்னைத் தனியே விட்டுப் போக மனசில்லாமல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கிளம்பினாள். முதல் முறை போனபோது உண்மையைச் சொல்லப்போனால் ஒரு படத்தில் ஜனகராஜ் தங்கமணி ஊருக்குப் போயிட்டாஎன்று கூவுவாரே அதுபோல் இருந்தது. ஆனால்..........போனபிறகு ஒரு வெறுமையை உணர்ந்தேன்
காலை ஏழரை மணிக்குக் கிளம்பினாள் நான் எழுந்து காலைக் கடன்களை மட்டும் முடித்திருந்தேன் குளிக்க வேண்டும் காலை உணவு உண்ண வேண்டும். வேலைக்காரி எந்நேரத்திலும் வரலாம் அவளுக்குக் குறிப்பிட்ட நேரம் இல்லை. நான் குளிக்கச் செல்லும் போது அவள் வந்தால்.....அவள் வந்து போனபிறகு குளிக்கலாம் . அதற்குள் காலை உணவு நேரம் தவறலாம். காலை எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் தினமும் அழைக்கும் என் மகன்களின் தொலை பேசி அழைப்பு வரும்போது அதை அட்டெண்ட் செய்யாவிட்டால் கலவரமடைவார்கள். நான் குளிக்கச் சென்றிருக்கும்போது அழைப்பு வந்தால்...?என் கேட்கும் திறன் பற்றி நான் கூறத் தேவையில்லை குளியலைத் தள்ளிப் போட்டேன். குளிக்காமல் உண்ணும் பழக்கமில்லாததால் காலை உணவு உண்பதையும் தள்ளிப் போட்டேன். எதிலும் மனம் ஒட்டவில்லை. சரி சிறிது நேரம் கணினியில் மெயில் பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். மகனின் அழைப்பு வந்தது. வேலைக்காரி இன்னும் வரவில்லை. சரி, வழக்கத்துக்கு விரோதமாக காலை உணவு உண்டேன். வேலைக்காரி வந்தாள். ஒன்பதே முக்கால் மணி. அவள் வேலை செய்து போனபின் குளிக்கப் போனேன். குளிக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஏதும் வரக்கூடாதே என்று எண்ணியே குளியல் முடித்தேன் காஃபி டிகாக்‌ஷன் இருந்தது.கலந்து குடித்தேன். ஒரு வழியாக பதினோரு மணி ஆயிற்று, வாஷிங் மெஷினில் அன்றைய உடுப்புகளை இட்டேன். ஒரு மணிநேரம் ஆகும் முடிய. காலையில் இருந்து தினசரி வாசிக்கவில்லை. தினசரி வாசிக்காவிட்டால் நாளே சரியாக இருக்காது பதினொன்றரை மணிக்கு மனைவி தரும் ஓட்ஸ் இன்று கிடையாது. இருந்தாலும் அவள் தொலைபேசியில் அழைத்து ஓட்ஸ் குடித்தீர்களா என்று கேட்பாள். இல்லை அதற்குப் பதில் பிஸ்கட்டுகள் தின்றேனென்று சொல்ல வேண்டும் பொய் சொல்லக் கூடாது அல்லவா. இரண்டு பிஸ்கட்களைத் தின்றேன் எது செய்யும்போதும் ஒரு ரெஸ்ட்லெஸ்னெஸ் ஏற்படுகிறது. இத்தனைக்கும் நான் சமைக்க வேண்டாம் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டுப் போயிருக்கிறாள். தினசரியைப் புரட்டுகிறேன். மனம் செல்லவில்லை. ஒரு வேளை என் மனைவி அருகில் இல்லாததே எனக்கு இவ்வளவு குறையாகத் தெரிகிறதே ! ஒரு வேளை........ நினைக்கவே மனம் அஞ்சுகிறது மதிய உணவுக்குப் போகுமுன் மனசில் இருப்பதைஎழுத்தில் கொட்டி விட்டேன். ஏறத்தாழ ஐம்பதாண்டு கால மண வாழ்வில் அவளைப் பிரிந்து நான் தனியே இருந்தது கணக்குப் பார்த்தால் சில மணித் துளிகளே இருக்கும் .அன்றொரு நாள் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது படித்துப்பார்க்கிறேன் அதைப் பகிரவும் மனம் விழைகிறது அது இங்கே .  

ஒருவருக்குள் ஒருவர்
படம்:- நன்றி இணையம்   .      
     .