திங்கள், 2 ஜூன், 2014

ஈரமில்லா நெஞ்சு....?


                                ஈரமில்லா நெஞ்சு
                                --------------------------



நான்கு  நாட்களுக்கு முன் என் கடைசி தம்பி சென்னையிலிருந்து தொலை பேசினான்( லாண்ட் லைனில்) எனக்கு இடுப்பு வலி. என் மனைவி அவனிடம் பேசினாள் “ அண்ணி, சின்ன அண்ணா உடம்புக்கு முடியாமல் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்என்றான் . மனைவி விவரங்களைக் கேட்டுக் கொண்டாள். எனக்கு உடல் நலம் சரியாய் இல்லாததாலும் நடந்து வருவது பிரச்சனையாய் இருப்பதாலும் விவரங்களை என்னிடம் தெரிவிப்பதாய்க் கூறினாள். என்ன ஆயிற்று எனக்கு ? அவனைக் குறித்த நினைவுகள் மனசில் ஓடலாயிற்று. என் தந்தையின் இரண்டாம் தாரத்தின் மூன்றாவது மகன் இவன் புத்திசாலித்தனத்தில் சராசரிக்கும் குறைவானவன் என் தந்தை இறந்தபோது ஆறு வயது தந்தை இறந்தபிறகு சிற்றன்னையையும் தம்பிகளையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. நான் பயிற்சியில் சேர்ந்திருந்த நேரம் தந்தையின் இழப்பு பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன் பயிற்சி முடிந்து வந்ததும் அனைவரையும் பெங்களூர் கூட்டி வந்தேன் மூத்த இருவரது படிப்பு முடிந்து அவர்கள் தங்கள் கால்களில் நிற்கத் தயார் ஆகும் வரை நானும் பெங்களூரில் இருந்தேன் திருச்சியில் வேலை கிடைத்துப் போனபோது என்னுடன் இவனையும் என் மைத்துனன் ஒருவனையும் கூட்டிச் சென்று அவர்களைப் பள்ளியில் சேர்த்தேன் இவனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி. இவன் இப்படியாவதற்கு முதன்மை காரணம் என் சிற்றன்னைதான் இவனுக்கு தகுந்த அறிவுரை கூறுவதை விட்டு மனசளவில் என்னிடமிருந்து விலகிச் செல்லவும் காரணமாயிருந்தாள் என்ன சொல்லி என்ன பயன் . என் மைத்துனன் நன்கு படித்துவேலையில் அமர்ந்து சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றான். இவன் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒரு வேலை பெற்று இவனும் ஓய்வு பெற்றுவிட்டான். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் மிகவும் கஷ்டப் பட்டிருக்கும்
 நேற்று முன் தினம் சென்னையில் இருந்து மீண்டும் தொலை பேசி . இவன் இறந்து விட்டான் என்று. எனக்கு வருத்தமோ அழுகையோ வரவில்லை. என் மனம் மரத்து விட்டதா? நான் வளர்த்த ஒருவன் இறந்து விட்ட செய்தி கேட்டும் என் ரியாக்‌ஷன்  “ ஓ, அப்படியா “ என்பதோடு நின்றுவிட்டது
என்னகாரணம் ? ஒரு வேளை எனக்கு ஞானம் பிறந்து விட்டதா.?மஹாபாரதக் கதைகள் எழுதுவதற்காக பாரதம் படித்துக் கொண்டிருந்தேன் . அதில் பாண்டவர் வனவாசம் போது நச்சுப் பொய்கையில் யக்‌ஷனின் கேள்வியும் தருமனின் பதிலும் நினைவுக்கு வருகிறது பிறந்தவன் இறக்கத்தான் வேண்டும் அனைவரும் அறிந்ததே.  மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் வருவது தெரிந்தும் எல்லாமே சாசுவதம் போல் நினைப்பதே  உலகின் மிகச் சிறந்த ஆச்சரியம் . எனக்கு ஏன் இந்த நினைப்பு வருகிறது. நாளை என் முடிவு வந்தாலும் அநேகம் பேர் “ஓ, அப்படியா “ என்பதோடு நின்று விடுவார்களா. இந்த நிலையாமை தெரிந்து விட்டதால் நான் இறந்தபின் நான் நானாக இல்லாமல் நினைவாய் மாறிவிடுவேன் .என்று தெரிந்ததால் தானோ மற்றும். இந்த நினைப்பு அடிக்கடி வருவதால்தானோ என் நெஞ்சும் ஈரமற்றுப் போய் விட்டது.? இந்த நினைப்பே என்னை அன்று இப்படி எழுத வைத்தது . எழுதியது படிக்க இப்படியில் சொடுக்கவும் 
2011-ல் ஒரு நாள் இப்படி இடுப்பு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது உணவு உண்கையில் குப்புற வீழ்ந்தேன் .அதன் விளைவே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று எழுதி இருந்தேன். இப்போதும் அதேபோல் இடுப்புவலி. உண்ணும்போது அந்த நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.WILL HISTORY REPEAT?ஏனோ இந்த நினைவைத் தவிர்க்க முடியவில்லை. ஹிஸ்டரி படிக்க இங்கே சொடுக்குங்கள். என் பழைய பதிவில் திரு.ஜீவி பல ஆலோசனைகளைக் கூறி இருந்தார். இருந்தாலும்  சிறிது முடிந்தாலும் கணினி முன் அமர்ந்து விடுகிறேன். அப்படி அமர்வது என்னை நானே உணர மிகவும் உதவுகிறது. உடல் உபாதை தராமல் இருக்க விரும்புகிறேன்       







 














41 கருத்துகள்:

  1. இருந்தாலும் சிறிது முடிந்தாலும் கணினி முன் அமர்ந்து விடுகிறேன். அப்படி அமர்வது என்னை நானே உணர மிகவும் உதவுகிறது. உடல் உபாதை தராமல் இருக்க விரும்புகிறேன் //

    இதுவும் ஒரு நல்ல சிகிச்சைதான். மனதுக்கு பிடித்ததை செய்யும்போது உபாதைகள் குறைந்து போவதுபோல் தோன்றும்.

    நமக்கு எத்தனைதான் நெருங்கியவர் என்றாலும்
    சில சமயங்களில் அவர்களுடைய மறைவு நம்மை வெகுவாக பாதிப்பதில்லை. எனக்கும் சில சமயங்களில் அப்படி தோன்றியுள்ளது. ஏன் என்றெல்லாம் ஆய்வு செய்வதில் பயனில்லை. இதுவும் மனித மனதின் விந்தைகளில் ஒன்று.




























    பதிலளிநீக்கு
  2. நிலையாமையை உணர்ந்த பக்குவம்..

    இருக்கும் வரை திருப்தியாய் வாழ்ந்தால் போதுமே..

    இறந்தபிறகு நினைவில் வைத்திருப்பதால்
    இறந்தவருக்கு என்ன பயன்..??!

    பதிலளிநீக்கு
  3. ஐயா. தங்களின் தன்னம்பிக்கையை கண்டு வியக்கிறேன். தாங்கள் எந்த வித உடல் உபாதைகளும் இன்றி ஆரோக்கியமாய் வாழ, அருள்மிகு மருந்தீஸ்வரரை(மருந்துக்கு ஈஸ்வரர்) வேண்டிக்கொள்கிறேன். பாடல் பெற்ற ஸ்தலமான மருந்தீஸ்வரர் திருக்கோவில் சென்னை திருவான்மியூரில் உள்ளது. அடுத்த வாரம் சென்னை செல்கிறேன். அவசியம் வேண்டிக்கொள்கிறேன். __/\__

    பதிலளிநீக்கு

  4. # டி.பி.ஆர் ஜோசப்
    /மனதுக்கு பிடித்ததை செய்யும்போது உபாதைகள் குறைந்து போவதுபோல் தோன்றும்./ முற்றிலும் உண்மை. வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  5. @ இராஜராஜேஸ்வரி
    வருகை தந்து மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  6. @ இல.விக்னேஷ்
    உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச் செய்து விட்டது. மருந்தீஸ்வரர் கோவிலுக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன் நன்றி விக்னேஷ்.

    பதிலளிநீக்கு
  7. உங்களை சந்தித்து பேச வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ஐயா..
    ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நல்வாழ்வு வாழ அன்னை அபிராமி அருள் புரிவாளாக..
    தங்களுடன் இருந்து வழிநடத்துவாளாக!..

    பதிலளிநீக்கு
  9. ஜிஎம்பீ, ஐயா!

    முன்பு என்ன சொன்னேன் என்பது மறந்து விட்டதால் மறுபடியும் பழைய பதிவுக்கு சென்று படித்துப் பார்த்தேன்.

    பதிவுகளினால்பின்னூட்டங்களினால் ஆய பயன் புரிந்தது. அதனால் தாம் நாம் எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றும் ஞானம் பிறந்தது.

    அனுபவங்களின் அடிப்படையில் நம் சிந்தனையில் முகிழ்க்கும் சில எண்ண அதிர்வுகளை வெளித்தள்ளியே ஆக வேண்டும்.
    இல்லையென்றால் உடல் கழிவுகளை வெளியேற்றாதது போன்ற வேதனை ஏற்படும். அதனால் தான் எண்ணங்களை வெளிப்படுத்த எழுதுவது நமக்குத் தெரிந்த உபாயமாக இருப்பதால் எழுதுகிறோம். இந்த அனுபவத்தை ஊள்ளார நேசித்தவர்களுக்குத் தெரியும் இந்த உபாயத்தின் அருமையும்.

    அடிப்படை செய்தி என்னவென்றால் நினைப்பதை யாரிடமாவது, எங்கேயாவது சொல்லியே ஆக வேண்டும். நாம் சொல்வதை அதே அலைவரிசையில் கேட்பவர் கேட்டுக் கொள்ளாவிட்டாலும் 'கேட்டுக் கொள்வார்கள்' என்கிற நம்பிக்கையில் இந்த பதிவுலகம் அமைந்து விட்டதான பிரமையில் நாம் உழல்வதால் இந்த பதிவு ஜன்னல் வழியாக வெளியுலகத் தொடர்பை கொள்ள மனம் விழைகிறது.

    இப்பவும் பழைய பிரிஸ்கிரிப்ஷனே தான்.

    இப்போதைக்கு தொடர்ச்சியாக கணினி முன் அமர்வதால் தான் இடுப்பு வலி ஏற்பட்டிருக்கலாம்.

    1. நீங்கள் தட்டச்சு செய்கையில் அதற்கான வெளிச்சம் சரியாக
    விழுகிறதா என்று பாருங்கள். அறையிலும் புழுக்கமில்லாது இருக்கட்டும்.

    2. உட்கார்ந்திருக்கிற பொஸிஷனை கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளுங்கள்.

    3. கணினிக்கும் உங்கள் அமர்வுக்கும் ஆன இடைவெளி நீண்டு விடாமல் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    4. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உபயோகியுங்கள்.

    இடுப்பில் உபாதை சரியாகும் கால அளவிற்கு ஓய்வெடுத்தால் போதும்.

    அப்புறம் இருக்கவே இருக்கிறது. சிந்தனை சிறகடிக்க. அப்படி பறப்பதற்காகவே இந்த இடைவெளி என்று மனதார நம்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.

    இப்போதைக்கு---

    உங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொள்கிற குறைந்தபட்சம் கேட்டுக் கொள்கிற ஒருவர் உங்கள் அருகாமையில் இருந்தால் போதும்.
    அது கணினி ஜன்னல் பார்வைக்கு மாற்றாக அமையலாம்.

    இதெல்லாமே உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் இன்னொருவர் சொன்னால் நாம் நினைப்பது அடிக்கோடிட்டு மனசில் பதியும் என்பதால் தான் இதெல்லாம்.

    உற்சாகம் கொள்ளுங்கள். நாம் நம் அளவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

    அதனால்--

    உடல் நலன் சரிகொள்கிற வரையில் ஜன்னலை சாத்தி வைப்போம்; சரியானதும் கவலையே வேண்டாம். கைக்கெட்டும் தூரத்தில் தான் கதவுகள் இருக்கின்றன. ஜன்னலைத் திறந்து அன்புள்ளங்களோடு பேசிக் களிக்கலாம்.

    நான் கூட இப்படியான ஒரு இடைவெளிக்குத் தான் என் ஜன்னலை சாத்தி வைத்திருக்கிறேன்.கவனித்தீர்களா?..


    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  10. நினைவுகளே இனி நமக்குத் துணை.

    பதிலளிநீக்கு
  11. மனம் பக்குவப்படும் போது எதிலும் ஒரு பற்றற்ற நிலை வரும் என்பார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் உங்களுக்கு அந்த ஞானம் பிறந்திருக்கலாம். ஜீவி சார் சொல்வதைப் போல் நம் எண்ணங்களுக்கு எழுத்து ஒரு வடிகால். வார்த்தைகளால் பகிர முடியாத மனம் அழுத்தும் எண்ணங்களையும் எழுத்தால் பகிரமுடிவது ஒரு வரம். உங்கள் உடல்நலனைக் கருத்தில் கொண்டு கணினியின் முன் அமருங்கள். தக்க ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. நாம் விரும்பிய செயலைச் செய்யும் பொழுது சிரமங்கள் பெரிதாய் தெரிவதில்லை
    கணினி நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் ஐயா
    உடல் நலம் பேணவும்

    பதிலளிநீக்கு
  13. //இந்த நினைப்பு அடிக்கடி வருவதால்தானோ என் நெஞ்சும் ஈரமற்றுப் போய் விட்டது.?//

    நெஞ்சில் ஈரம் இல்லையென்றால் நினைப்பே வராது. தாங்கள் வளர்த்த தம்பிமேல் எவ்வளவு பாசம் இருந்ததால் அவரைப்பற்றி பதிவில் எழுதியுள்ளீர்கள்.

    ‘யாக்கை நிலையில்லாதது.’ என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

    தங்கள் தம்பியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  14. கடைசியில் வாழ்க்கையே இவ்வளவுதான் இல்லையா, ஜி.எம்.பி. சார்? இதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் உங்களுக்கு வந்ததால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். சீக்கிரம் உங்களது இடுப்பு வலி குணமாக பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  15. @ ஜீவி
    வருகைக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி./அடிப்ப்படை செய்தி என்னவென்றால் நினைப்பதை யாரிடமாவது, எங்கேயாவது சொல்லியே ஆக வேண்டும். நாம் சொல்வதை அதே அலைவரிசையில் கேட்பவர் கேட்டுக் கொள்ளாவிட்டாலும் 'கேட்டுக் கொள்வார்கள்' என்கிற நம்பிக்கையில் இந்த பதிவுலகம் அமைந்து விட்டதான பிரமையில் நாம் உழல்வதால் இந்த பதிவு ஜன்னல் வழியாக வெளியுலகத் தொடர்பை கொள்ள மனம் விழைகிறது./ சரியான புள்ளியைத் தொட்டு விட்டீர்கள். திரு டி.பி.ஆர் ஜோசப்பின் பின்னூட்டம் கவனித்தீர்களா. ? எனது மருத்துவரும் முன்பு இதே ப்ரிஸ்க்ரீப்ஷனைக் கூறி இருந்தார். விளைவு என் உறவுகள் இல்லங்களில் என் கண்ணாடி ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் சன்னலைச் சாத்திவைக்கும் அளவுக்கு உங்களுக்கு என்னாயிற்று. ஓ...that is personal..! மீண்டும் நன்றி .

    பதிலளிநீக்கு

  16. @ திண்டுக்கல் தனபாலன்
    /உங்களை சந்தித்து பேச வேண்டும் ஐயா.../எனக்கும் அந்த ஆசை உண்டு டிடி. கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். பெங்களூரில் என் வீட்டுக் கதவு என்றும் உங்களுக்காகத் திறந்திருக்கும் இல்லாவிட்டால் அக்டோபரில் மதுரை வர விருப்பம் இருக்கிறது.வர முடிந்தால் அப்போது பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

  17. @ துரை செல்வராஜு
    உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  19. @ கீத மஞ்சரி
    வருகைக்கும் அக்கறையான பின்னூட்டத்துக்கும் நன்றி. மேடம்

    பதிலளிநீக்கு

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    இப்போதெல்லாம் கணினியில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒரு முறை வந்து போவதோடு சரி. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  21. @ வே.நடன சபாபதி. பொதுவாகவே அனைவரையும் நேசிக்கும் குணம் உள்ளவன் நான். தம்பியின் மரணம் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை என்பதால் இந்தப் பதிவு ஒரு உள்நோக்குப் பார்வை

    பதிலளிநீக்கு

  22. @ எக்ஸ்பாட் குரு.
    எனக்கு இந்த வலி ஒரு க்ரோனிக் ப்ராப்ளம். ஒரு வாரமோ பத்து நாட்களோ அவதி கொடுக்கும். இந்தப் பதிவு ஒரு இண்ட்ரொஸ்பெக்‌ஷன் . அவ்வளவுதான். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நோயை மறக்க வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்துதானாகவேண்டும். எழுதுவது அத்தகையதொரு காரியம். மனத்தைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதுங்கள். நோயின் தாக்கம் குறையும்.

    பதிலளிநீக்கு

  24. @ செல்லப்பா யக்ஞசாமி.
    வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. எதையும் அதன் அதன் போக்கில்
    எடுத்துக் கொள்வதுதானே ஞானம் என்பதுவும் ?

    முடியும் என்கிற வரை முயல்வதும்
    நம் சக்தியை மீறியதாக இருக்கையில்
    ஏற்றுக் கொள்ளும் மன நிலை தானே
    முதிர்ச்சி என்பதுவும் ?

    ஏனோ பதிவை இருமுறை படிக்கவேண்டும் போல இருந்தது
    படித்தேன்.அற்புதமான பதிவு

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

  26. @ ரமணி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இப்பதிவைப் படிக்கையில் தொடர்புள்ளசுட்டி கொடுக்கப்பட்ட பதிவுகளையும் சேர்த்துப் படித்தால் முழுமையாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  27. சீக்கிரமாய் உடல் நலமாக ஆகப் பிரார்த்தனைகள். அதிகம் கணினியில் அமராமல் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி உங்கள் உள் மனதில் தம்பியின் மறைவு குறித்த வருத்தம் மறைந்திருக்கலாம். என்றாவது ஓர் நாள் வெளிப்படலாம்.

    பதிலளிநீக்கு
  28. சிறிது முடிந்தாலும் கணினி முன் அமர்ந்து விடுகிறேன்.
    >>
    உடல்நிலையை கவனத்தில் கொண்டு கணினியில் அமருங்கள். அது வேற ஒரு பிரச்சனையை கொண்டு வந்து விட்டுவிட போகிறது. நாங்க்லாம் உங்கள் அருகிலேயேதான் இருக்கின்றோம். எங்கள் பதிவுகளை எப்ப வேணுமின்னாலும் படித்துக் கொள்ள்லாம். ஆரோக்கியம்தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு

  29. @ கீதா சாம்பசிவம்
    எனக்கு இந்த back problem ஒரு chronic one. அவ்வப்போது வந்து நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போகும்சில முறைகள் அதிகம் படுத்திவிடும் நான் பிறருக்குச் சொல்வதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன் That which can not be cured , must be endured. பிரார்த்தனைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  30. @ ராஜி
    உங்கள் வருகை ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பதிவுலக நண்பர்கள் அருகிலேயே இருப்பதாகச் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது வருகைக்கும் அக்கறைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    ஐயா

    பதிவைபடிக்கும் போது என் செஞ்சை ஈரமாக்கியது...... பதிவுக்கு அமைந்தது போல தலைப்பு... நன்றாக உள்ளது.
    எல்லாம் இறைவனின் செயல்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  32. @ ரூபன்
    வருகைக்கும் மேலான கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  33. // நேற்று முன் தினம் சென்னையில் இருந்து மீண்டும் தொலை பேசி . இவன் இறந்து விட்டான் என்று. எனக்கு வருத்தமோ அழுகையோ வரவில்லை. என் மனம் மரத்து விட்டதா? நான் வளர்த்த ஒருவன் இறந்து விட்ட செய்தி கேட்டும் என் ரியாக்‌ஷன் “ ஓ, அப்படியா “ என்பதோடு நின்றுவிட்டது //

    உங்களிடமிருந்து அந்த தம்பியை பிரித்தது அந்த சிற்றன்னைதான் என்று ஆழ் மனதினில் என்றோ பதிந்துவிட்ட விரக்திதான் இதற்கு காரணம்.

    // சிறிது முடிந்தாலும் கணினி முன் அமர்ந்து விடுகிறேன். அப்படி அமர்வது என்னை நானே உணர மிகவும் உதவுகிறது. உடல் உபாதை தராமல் இருக்க விரும்புகிறேன் //

    கம்ப்யூட்டர் முன் அமர்வது உங்களுக்கு நல்லதுதான். ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும். நானும் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டாலும் வலைப்பதிவு நண்பர்களுக்காக கம்ப்யூட்டர் முன் உட்காரும்போது தனிமையை உணர்வதில்லை. நண்பர்களோடு உரையாடுவது இருப்பது போன்றே உணர்கின்றேன். எடையைக் குறையுங்கள். உடம்பு தானாக சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. வாழ்க்கையில் சட் என்று எதாவது ஒரு கணம் பிடிப்பற்றுப் போய் விடுகிறது மனம். அப்படிப்பட்ட வேளையில் இறப்பு செய்தி வந்திருக்கலாம்.

    மறுபடி நாம் நாம் நார்மல் நிலைக்கு வந்தவுடன் ஏன் அப்படி இருந்தோம் என்று நினைத்துக் கலங்குகின்றோம் அல்லவா?

    மனசு என்பதே ரொம்ப விசித்திரமான ஒன்று!

    உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம். நலம் இருந்தால்தான் கணினி.

    பதிலளிநீக்கு

  36. @ தி. தமிழ் இளங்கோ
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா. என் உயரத்துக்கு சரியான எடையில்தான் இருக்கிறேன் இடுப்புவலி உடல் எடையின் காரணத்தால் வந்ததல்ல. ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அவ்வப்போது வந்து தன் இருப்பை காண்பித்துப் போகும் சில நாட்கள் அவதி அதிகமாய் இருக்கும் அதோடு வாழப்பழகிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

  37. @ துளசி கோபால்
    மனசு பற்றிக் கூறியது நிஜமே. வருகைக்கும் அக்கறையான பின்னூட்டத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  38. அதில் பாண்டவர் வனவாசம் போது நச்சுப் பொய்கையில் யக்‌ஷனின் கேள்வியும் தருமனின் பதிலும் நினைவுக்கு வருகிறது பிறந்தவன் இறக்கத்தான் வேண்டும் அனைவரும் அறிந்ததே. மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் வருவது தெரிந்தும் எல்லாமே சாசுவதம் போல் நினைப்பதே உலகின் மிகச் சிறந்த ஆச்சரியம் .// மிக மிக உண்மையான சத்தியாமான வாக்குகள்!!!

    தங்கள் பதிவு பல விஷயங்களைக் கற்றுத் தரும் ஒரு ப்திவு ஐயா! நாம் நமக்கு விருப்பமானதைச் செய்யும் போது மனமும், உடலும் மிகவும் உயிர்புற்று இருக்கும் ஐயா! இந்த வயதிலும் தங்கள் மனவ்லிமை மெச்சப்ட வேண்டிய ஒன்று மட்டுமல்ல எங்கள் எல்லாருக்குமே ஒரு பாடமும் கூட!

    தங்களுக்காகக் கண்டிப்பாக பிரார்த்திக்கின்றோம்! ஆண்டவனை நினைக்கும் போது மனம் இன்னும் வலிமை பெரும்...யாரோ ஒருவர் நமது கஷ்டங்களைக் கேட்க இருக்கிறார் என்பதும், நமது மனச் சுமையை இறக்கி வைக்க ஒருவர் இருக்கின்றார் என்ற மன ஆறுதலும், அவர் நம்மைக் காப்பார் என்ற நம்பிக்கையுமே நமக்கு வ்லிமையைத் தந்து விடும்! அவரிடம் சொல்லுவதால் எந்த வித எதிர்மறைக் கருத்துக்களும் வராது....வம்பு தும்பு கிடையாது பாருங்கள் அதான்.....

    பிரார்த்திக்கின்றோம் ஐயா!

    பதிலளிநீக்கு

  39. @ துளசிதரன் தில்லையகத்து
    வருகைக்கும் மேலான பின்னூட்டக் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  40. எட்டி நின்று தன்னை பார்த்து தன்னையே விமர்சித்து கொள்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. உங்களின் எழுத்துக்களில் உள்ள உண்மையை(sincerity) போற்றுகிறேன்!

    பதிலளிநீக்கு

  41. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    உங்கள் வருகைகும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு