Tuesday, February 26, 2013

யாரிடம் எதைச் சொல்ல.....


                                யாரிடம் எதைச் சொல்ல.....
                               -----------------------------------------



நான் என்னபதிவு எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அக்கம் பக்கத்தில் நடக்கும் அநியாய நிகழ்வுகள் என்னைப் பற்றி எழுது என்று முன் வந்தது. உன்னைப் பற்றி எழுதுவதால் என்ன லாபம் என்று கேட்டால், நீ எழுதுவதால் என்ன லாபம் காண்கிறாய் என்று பதில் வரும். என் ஆதங்கங்களை எழுதுகிறேன். மனபாரத்தை இறக்கி வைக்கிறேன். அது இப்போதும் நடக்கட்டுமே.




பெங்களூரில் நான் இருக்கும் பகுதி ஓரளவுக்கு வசதிகள் நிறைந்தது. சாலை வசதிகள், போக்குவரத்துவசதிகள், பள்ளி மருத்துவ மனை வசதிகள் எல்லாம் மிகவும் குறைபட்டுக்கொள்ளும்படி இல்லை. குடி நீரும் கழிவு நீர் கடத்த சாக்கடைகளும் அநேகமாக எல்லா இடங்களிலும் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இருக்கும் கழிவு நீர் சாக்கடைகளை மீண்டும் இடுகின்றனர். எல்லா வீதிகளிலும் இருக்கும் சாக்கடை வசதிகளை மீண்டும் சாலைகளை பள்ளம் நோண்டி, இருக்கும் சாலைகளை உடைத்து. மீண்டும் குழாய்கள் பொருத்துகின்றனர். இல்லாத வசதியை செய்து தர மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தால் அர்த்தமுண்டு. இருக்கிற வசதியை இல்லாது செய்து, மீண்டும் அதைச் செய்வதில் யாருக்கோ லாபம் இருக்கிறது. இது ஃபெப்ருவரி மாதம். அடுத்த மாதத்துடன் இந்த நிதியாண்டு முடிந்துவிடும். ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்காக செலவு செய்யாவிட்டால் அந்த நிதியின் உபயோகம் காலாவதியாகும். ஒதுக்கப்பட்ட பணம் செலவு செய்ததுபோல் இருக்கவேண்டும். பலரது பைகளும் நிரம்ப வேண்டும். நான் பலரிடம் பேசிப்பார்த்ததில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தவே செய்யப் படுவதாகக் கூறப் படுகிறது. இப்படி இவர்கள் வீதிகளைத் தோண்டும்போது நீர் வரத்துக்காக போடப்பட்ட குழாய்கள் சேதமடைகிறது. இவற்றை மீண்டும் சரிசெய்வது குடி இருப்பரின் தலைவலியாகும். ஏற்கனவே பொருளாதாரம் விலை வாசி உயர்வால்( எல்லாமட்டங்களிலும் )பரிதவிக்கும் சாதாரணமானவன் இந்த எதிர்பார்க்காத உபரி செலவால் மீண்டும் வேதனைக்குள்ளாகிறான். வீதிகளில் வாகனங்கள் ஓடமுடியாது. சாலைகள் சீராக இன்னும் செலவு செய்து. இன்னும் பலரது பைகள் நிரம்ப வழிவகுக்க எவ்வளவு நாளாகுமோ. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதைப் பற்றி உரியவர்களிடம் புகார் செய்யலாம் என்றால் யாரும் முன் வருவதில்லை. ஒன்றும் செய்ய முடியாது என்றே நம்புகின்றனர். நானும் பதிவு எழுதி அங்கலாய்த்துக் கொள்கிறேன்.

கழிவு நீர் வெளியேற நம் வீட்டிலிருந்து பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்க அனுமதி வேண்டி, அதனைப் பெறவும் இணைக்கவும் ரூ. 4000/-வரை ஏற்கனவே செலவு செய்தாகி விட்ட நிலையில், இப்போது இருக்கும் சாக்கடையை மீண்டும் உடைத்துப் பொருத்தும்போது, நாம்கொடுத்த இணைப்புகளும் உடைந்து விடும். மீண்டும் இணைக்க மேலூம் செலவு. இதில் என்ன பரிதாபம் என்றால் கழிவு சாக்கடையில் மலம் உட்பட்ட கழிவுகள் ஓடிக்கொண்டிருக்க அவற்றை எடுத்து மீண்டும் வேறு குழாய்களைப் பொருத்துபவர்கள் அந்தக் கழிவுகளையே அகற்றும் செயலைப் பார்க்கும்போது இது manual scavenging தானே இன்னும் ஒழிக்கப்படவில்லையே என்று தோன்றுகிறது.



 

Thursday, February 21, 2013

இப்படியும் இருக்கலாமோ..?


                           இப்படியும் இருக்கலாமோ..? ( ஒரு சிறுகதை.)
                            -------------------------------------


இவளுக்கு பெயர் சூட்ட விரும்பவில்லை. பெயர் தெரியாமலேயே அபலையாக, ஆனால் எல்லோராலும் பேசப்படுபவர்களில் இவளும் ஒருத்தி.. இவள் இவளாகவே அறியப் படட்டும்.இவளுக்குப் பெயர்தான் கொடுக்கவில்லையே தவிர இவ்ளைப் பற்றி பலரும் பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்த விஷயங்கள் எல்லாம் இவளுக்கு மட்டும்தான் உண்மையாய்த் தெரியும். பாதிக்கப் பட்டவள் ஆயிற்றே. காலம் கடந்தபின் ஏதேதோ நிகழ்வுகளுக்குப்பின் இவளும் முக்கிய செய்தி ஆகிவிட்டாள். இவள் தைரியசாலி என்றோ வீராங்கனை என்றோ அழைக்கப் படுவதில்லை.. அப்படி அழைக்கப் படுவதை இவள் விரும்புவதுமில்லை.இவளை உபயோகித்தவர்கள் இவள் உயிரை எடுக்க வில்லையே. அப்படி நேர்ந்திருந்தால் இவளும் வீராங்கனையாகக் கருதப் படுவாளோ.? இப்போது அதுவா பிரச்சனை. ஆண்டுகள் பல கழிந்துவிட்டது. இவளையும் இவளுக்கு நேர்ந்ததையும் நாடே அசைபோடுகிறது. இதெல்லாவற்றுக்கும் ஆரம்பம்தான் என்ன.?நினைவுகள் சுழல்கிறது. 



“ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

என்று பாடவைத்தவன். பேசியே மயக்கியவன். இவளும் பெண்தானே. அம்சமாய் இருந்தாள். பருவம் பலரையும் சுண்டி இழுத்தது. ஆனால் இவள் விழுந்தது அவன் மிடுக்கில், தோரணையில்,நடையில் பேச்சில். சுருங்கச் சொன்னால் எப்போதும் அவனை நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திப் பாதுகாத்து.வந்தாள். சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலை. கனவு காணும் பருவம். அவனுக்கோ இவள் மேல் காதலிருந்தாலும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையும் இருந்தது. கண்ணும் கண்ணும் கலந்தாயிற்று. காதலின் முதல் படி அது.  கையும் கையும் சேர வேண்டும். வேகம் பிறக்க வேண்டும். உடலில் வெப்பம் ஏறவேண்டும். அவளை அடைய வேண்டும். பிறகு யோசிக்கலாம் என்ன செய்வதென்று. மனம் கணக்குப் போட திட்டங்கள் உருவாக்க வேண்டும். அவனுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும், திட்டமிட்டதைச் செய்யவேண்டும்.. இலக்கு நல்லதாக இருந்தால் நல்ல விஷயம்தான். 



அவனைப் பொறுத்தவரை முதலில் இவளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இவள் அவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றால் அவனுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் செய்து விட்டால் போயிற்று. என்று கணக்குப் போட்டவன் சாதாரணமாகப் பெண்கள் விழும் குழியைப் பறிக்கத் திட்டமிட்டான். முகஸ்துதிக்கு மயங்காதவரே இல்லாதபோது, காதலனின் புகழ்ச்சி பேச்சில் பருவப் பெண் விழுந்துவிட்டாள்.
“ உனக்கு உன் கழுத்தே அழகு சேர்க்கிறது. நீளமான கழுத்துள்ள பெண்கள் அழகானவர்கள்.
முதல் அத்திரம். பாய்ந்தது. பொதுவாக தரை நோக்கி நடப்பவள் தலை நிமிர்ந்து ( கழுத்து தெரியும்படி) நடக்க ஆரம்பித்தாள்.
பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது கூந்தல்தான்.. உனக்கென்ன..கூந்தல் இருக்கும் மகராசி. பின்னி விட்டால் என்ன... அள்ளி முடிந்தால் என்ன.எல்லாமே அழகுதான்..



“ உன் தலைக்குப் பூ வைக்காதே. பூவில் வண்டுகள் மொய்க்கும்போது உன் கண்கள் எங்கே என்று தேடவைக்கிறது.
உனக்கு இருப்பது கண்ணா ?உன் முகத்தில் வண்டுகள் ஆடுகிறதே என்றல்லவா நினைத்தேன்.
வித்தை தெரிந்தவன் ஆட்டிப் படைக்க விழுந்துவிட்டாள் பேதைப் பெண். ஓரிரண்டு நாட்கள் இவளைக்காண வராமல் இருந்தான். மனம் சஞ்சலப்பட இவளுக்கு “ வேரூன்றி  வளருமென்று விதை விதைத்தேன் இரு விழியாலெ பார்த்திருந்து நீருமிறைத்தேன், பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசிக் காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன். என்ற பாடல் பின்னணியில் இசைக்கத் தொடங்கியது.
கண்ணும் கண்ணும் பேசியது காதலிசைப் பாடல் வரை வந்துவிட்டது. பெண்மனத்தில் தீபமும் ஏற்றியாகிவிட்டது. இனி என்ன.? கையும் கையும் இணைந்து உதடுகள் உராய்ந்து தீப் பிடிக்க வேண்டும். சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் அமைக்க வேண்டும்.



ஒரு நாள் மாலை. அந்திசாயும் நேரம் வண்டாடும் விழியாலே வலைவீசி வழிநோக்கிக் காத்திருந்தாள். அவன் வருகை கண்டு இவள் எழ , தோளிலிருந்து  துகில் சரிந்து விழ. பின்னிருந்த கூந்தல் முன்னால் சரிந்து, விண்ணென்று புடைத்திருந்த சாயாத இரு கொம்புகளைக் காண விடாமல் தடுத்தது. வந்தவன் வார்த்தைகளால் விளையாடி அவளை சரித்துவிட்டான். ஏந்திழையும் தன்னை ஆட்க்கொள்ளப் போகிறவன் தானே என்று வளைந்து கொடுத்தாள். சந்தர்ப்பம் சரியாய் அமைய இவள் அவன் கைகளில். பிறகென்ன. ? உடல் சூடேற இருவரும் முனைந்து வெப்பத்தை அடக்கினர்.



அன்று நடந்ததை இவள் தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா.? ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லையே. அன்று நடந்தது இன்று நினைத்தாலும் இன்பம் தருகிறதே.விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ இணைந்தாயிற்று. இணைகையில் இன்பம் துய்த்ததும் உண்மை. காலம் கடந்து குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவதால் என்ன லாபம்.. இருந்தாலும் இப்படி ஏமாற்றப் படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“ எனக்கு நீ உனக்கு நான் என்று முடிவாகிவிட்டது.ஆனால் இந்தப் பாழும் உலகம் திருமணம் இல்லாமல் இருப்பதை ஏற்காதே. நாம் யாரும் காணாத இடத்துக்குப் போய்விடுவோம். ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் ஊரார்முன் வந்து ஊர் அறிய மணமுடித்துக் கொள்வோம்என்றான் அவன்.

 “ மணம் முடித்துக் கொண்ட பிறகு போவோமேஎன்றாள் இவள்.


“ மணம் என்பது ஒரு சடங்கு. உனக்கு என்னைவிட சடங்கில் நம்பிக்கையா.? திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்என்று ஏதேதோ கூறி இவளை சம்மதிக்க வைத்து ஊரை விட்டுக் கூட்டிப்போனான். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து விட்டது. இருக்க இடம் உண்ண உணவு மிகவும் அத்தியாவசியத் தேவை அல்லவா. நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உடலோடு உறவாடி அவனுக்கு இவள் என்று நிரூபித்துக் கொண்டிருந்தாள்.இருக்க இடத்துக்கு வாடகை கொடுக்க இயலாத போது நண்பன் ஒருவனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். வேலை தேடி ஒருநாள் வெளியே போனவன் அன்றிரவு வரவில்லை. நண்பனின் வீட்டில் அவனுடன் தனியே. இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பன் மிகவும் பதவிசாக நடந்து கொண்டான்.மறுநாளும் இவளது காதலன் வரவில்லை. இரண்டாம் நாளும் நண்பன் நல்லவனாகவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்களுமே நல்லவர்கள்தான்.ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் இருக்க நண்பன் ஒன்றும் சாமியாரில்லையே. இந்தக் காலத்தில் சாமியார்களையே நம்ப முடியவில்லையே. வயிற்றுப் பசியைத் தணிக்கும் நண்பனுக்குக் கடன் பட்டதுபோல் உணர்ந்தாள். காதலன் இன்று வருவான் நாளை வருவான் எனும் நம்பிக்கையில் நாட்கள் நகர. இவளுக்கு இவளது கடன்சுமை அதிகரிப்பதுபோல் தெரிந்தது. நெருப்பும் பஞ்சும் அருகருகே. கடனை அடைக்க தன்னையே நண்பனுக்குக் கொடுத்தாள். கரும்பு தின்னக் கூலியா. முதலில்

தான் தவறு செய்கிறோமோ என்று எண்ணியவள். தவற்றிலும் சுகம் இருப்பது உணர்ந்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். நாட்கள் வாரங்களாகியும் காதலன் வராததால் இவளும் இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.நண்பனின் குடும்பம் அவனிருக்குமிடத்துக்கு வரும் என்று தெரிந்ததும் நண்பன் இவளை இன்னோர் இடத்தில் குடியிருத்தினான். இவளுக்கும் வேறு போக்கிடம் தெரியவில்லை. ஊருக்குப் போனால் குடும்பத்தாரிடம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தும் , காதலன் வரும்வரை எப்படியாவது தன் காலிலே நிற்பதே சரி என்றும் தனக்குத்தானே வாதிட்டுக் கொண்டாள். மனசாட்சி என்பது அவ்வ்ப்போது குரல் கொடுத்து தான் இருக்கிறேன் என்று உணர்த்தும். மனசாட்சி என்பதே இஷ்டப்படி வளைந்து கொடுக்கக் கூடியதுதானே. செய்வது சரி என்று நிரூபிக்க ஆயிரம் காரணங்கள் கூறிக் கொள்ளலாம். பிறகு மனசாட்சியைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.



நண்பனுக்கு தன் குடும்பத்தையும் இவளையும் சேர்த்துப் பராமரிக்க முடியாமல் இவளை இன்னும் பலருக்கு அறிமுகப் படுத்தினான். ஒரு முறை சோரம் போனவளுக்கு மறுபடியும்  மறுபடியும் பிறருக்கு இன்பம் அளிப்பது தவறாகப் படவில்லை. பின் என்ன. ? நாளொரு கணவன் பொழுதொரு காதலன் என்று இவள் வாழ்க்கை இவள் அறியாமலேயே ஓடத்துவங்கியது. உடலின்பம் என்பது கொடுப்பது மட்டுமல்ல. பெறுவதிலும் இருக்கிறது என்பதை இவள் உணரத் துவங்கினாள். வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தினர். அவரவர்கள் காரியத்துக்கு ஈடு செய்ய இவள் பணயம் வைக்கப் பட்டாள். இள வயதினர், நடுவயதினர் முதியவர்கள் என்றும் , அதிகாரிகள். காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்றும் பலரும் இவளிடம் இன்பம் தூய்த்தனர். இவளது வாழ்க்கையும் ஒரு திசையில் போக ஆரம்பிக்க. பின் எப்போது பிரச்சனை துவங்கியது.?


ஆம். இவளால் இன்பம் அனுபவிக்க முடிந்தவர்களால் தொந்தரவு இருக்கவில்லை. ஆனால் இன்பம் அனுபவிக்க இயலாதவர்கள் வக்கிர செயல்களில் இறங்கியபோதுதான். இவளுக்கு இதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது. வேதனைதான் மிஞ்சியது. பலருடன் இவளும் சேர்ந்து இன்பம் அனுபவித்தவள்தான். ஆனால் வக்கிர செயல்கள் அத்து மீறியபோது அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அங்கிருந்து ஓடுவதுதான். எங்கு போவது.?அப்போதுதான் இவளுக்கு தன் குடும்பத்தார்பற்றிய நினைப்பு வந்தது. அவர்கள் கேள்வி கேட்பார்களே. தான் வஞ்சிக்கப்பட்டதையும் தன்னை பலரும் உபயோகித்துத் தூக்கி எறிந்ததாகவும் கூறலாம்.பெண் என்றால் பேயும் இரங்கும்.



திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் என்று பலரும் அடையாளம் காட்டப் பட்டனர். வழக்கு தள்ளுபடியாகலாம். குற்றவாளிகள் என்று கருதப் படுபவர்கள் தண்டிக்கப் படலாம். இவளுக்கு ஆதரவு வெகுவாகக் கிடைக்கலாம். உயிருடன் தப்பி வந்து விட்டதால் வீராங்கனை என்ற பட்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்னொரு வீராங்கனையின் தயவால் இவளுக்கு அபலை , ஆணாதிக்க வர்க்கத்தால் சீரழிக்கப் பட்டவள் என்ற அனுதாபம் கிடைக்கலாம். ஆனால் உண்மை இவளுக்கு மட்டுமே தெரியும்.

( அண்மையில் தலை நகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப் பட நாடே ஆர்பரித்து எழுந்தது . சட்ட திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும்என்னும் கோரிக்கைகள் பல எழுந்துள்ளன. இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. Consensual sex , prostitution,   போன்றவை பாலியல் பலாத்காரம் என்று கற்பிக்கப் படும் அபாயம் தோன்றவே இந்தக் கற்பனை எழுந்தது. .ஒரு சிறுகதை வடிவில் எழுதி இருக்கிறேன். இது முழுக்க முழுக்கக் கற்பனையே. )
-------------------------------------------------------------------------------------         .               .           .              




 

 

  




 

 

 
 

 


Tuesday, February 19, 2013


ஒரு யானை பிரசவிப்பதைகாணொளியாக கண்டதைப் பகிர்கிறேன். அரிய காட்சி.

Friday, February 15, 2013

OH, MY, MY.....


                                         OH.! MY..MY...!
                                         -----------------

நம் நாட்டின்  ிகிகுக்கிய ுள்ளிகின் பிராணப் போக்குவத்ுக்காகம்மால் ூபாய். 3600/- கோடி ெலில்ிரெண்ட
ெலிகாப்டர்கள்  வங்குகிறோம் என்றால்  OH..! MY..MY...!

   ATM-லிந்த எடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தால்....

OH.! MY MY ..! எங்கு போய் முறையிடுவது?
                       ---------------------------------------------

Wednesday, February 13, 2013

லக்ஷ்மி கல்யாண வைபோகம்


                                   லக்ஷ்மி கல்யாண வைபோகம்
                                   -------------------------------------------


திருமணமண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாயிற்று.சமையல்காரர் ஏற்பாடு செய்ய வேண்டும்.நாதஸ்வரம் மேளம், வைதீகாள் எல்லாருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாம் மலைப்பா இருக்கு. கடவுளே நீதானப்பா எல்லாம் நல்ல படியாய் நடக்க அருள வேண்டும்.
 
கலியாண நாள் குறித்து, பத்திரிக்கை அடித்து மண்டபம் ஃபிக்ஸ் ஆயிற்றே, அதுவே பெரிய வேலை. எல்லாம் நல்ல படியாய் நடக்கும். இவளுக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட அடுத்தவளுக்கும் வரன் தேட வேண்டும். நடக்க இருக்கும் திருமண நிகழ்வு பற்றியே ராகவன் தைலா தம்பதியினரின் பேச்சும் மூச்சும் இருந்தது. 



ஒரு நடுத்தரக் குடும்பத்தில் திருமணம் நடத்துவது என்பது பெரிய காரியம்தான். நல்ல வேளை .ராகவன் தைலா தம்பதியினருக்கு இரண்டு பெண்கள் மட்டும்தான். பெண்கள் காதல் கீதல் என்று எதிலும் இறங்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒரு வேளை திருமணம் நடத்துவது எளிதாயிருக்குமோ.என்னவோ. எந்த சம்பிரதாயத்தையும் விட முடியாது.. ஜாதகம் பார்ப்பது முதல் மாப்பிள்ளைக்குச் செய்ய வேண்டிய சீர் செனத்திகள் எதையும் விடமுடியாது. லக்ஷ்மிக்கு ( அதுதான் மூத்தவளுக்கு)ஜாதகப் பரிவர்த்தனை எல்லாம் முடிந்து, பொருந்தியதும், பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. லௌகீக விஷயங்கள் பேச வேண்டும். சரியாய் வந்தால் பெண்பார்க்க வருவார்களாம். There was no choice.  பெண்ணை அல்லவா பெற்றிருக்கிறார்கள். ராகவன் தன் தம்பியைக் கூட்டிக் கொண்டு கேரளத்தில் பேரவூர் ( என்ன ஊரோ ) போயிருந்தார். பிள்ளை எஞ்சினீரிங் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தார். தம்பி மூலம் விசாரித்ததில் நல்ல பையன் என்று கேள்விப்பட்டார். கேரளத்தில் வீடு தேடிப் போனபோது அவர்கள் இவர்களை வரவேற்ற விதம் திருப்தி அளிக்கவில்லை. ஏதோ இரண்டாம்தர மனிதர்கள் போல் கருதினார்கள். என்ன செய்வது .? பெண்ணைப் பெற்றவர்கள் ஆயிற்றே. பல்லைக் கடித்துக்கொண்டு ( முன் வாயால் சிரித்து கடைவாயைக் கடித்து ) எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். பையனுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தால் ( பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டாமா.?)என்ன சீர் செய்வீர்கள் என்று அவர்கள் கேட்க , என்ன எதிர்பார்க்கிறீர்கள் என இவர்கள் கேட்க சில நிமிஷ கபடி ஆட்டத்துக்குப் பிறகு குறைந்தது முப்பது பவுன் நகை போடவேண்டும்; குடித்தனம் நடத்த பாத்திரங்கள். வீட்டுக்குத் தேவையான பீரொ, கட்டில், மேசை சேர் பையனுக்கு கைக் கடிகாரம் , கோட், சூட், என்று பெரிய பட்டியலே கொடுத்தார்கள். மொத்தத்தில் பையனை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பது புரிந்தது. அப்படியே விலை கொடுத்து வாங்கினாலும் பெண்தான் பையன் வீட்டில் குடித்தன்ம் நடத்தவேண்டும். அங்கு மாமனார் மாமியார் என்று எல்லோருக்கும் செக்கு மாடு மாதிரி உழைக்கவேண்டும். ராகவனுக்குத் தலை தொங்கிவிட்டது. பரம்பரை சொத்து என்று ஏதும் கிடையாது. பெண்கள் பிறந்தது முதல் கையைக் கட்டி வாயைக் கட்டி ஏதோ கொஞ்சம் சேர்த்து வைத்தது முதல் பெண்ணுக்கே காணாது போல் தோன்றியது. இதெல்லாம் போக திருமண்ம் நடக்க வேண்டியதும் இவர்கள் செலவு. .என்ன யோசிக்கிறீர்கள். பையன் மெத்தப் படித்த எஞ்சினீயர், கை நிறைய சம்பளம் வாங்குகிறான். அவனுக்குப் பெண்கொடுக்க நீ, நான் என்று தினமும் வருகிறார்கள். நாங்கள் கேட்டதே சொல்பம்.இவ்வளவும் அதிகம் என்று தோன்றினால் நீங்கள் தாராளமாக வேறு இடம் பார்க்கலாம் “ ஏதோ பிசினெஸ் பேசுவது போல் பேசிக் கொண்டே இருந்தார். ராகவனின் தம்பிக்கு இடம் தகைந்து வராது என்று தெரிந்ததும் காட்டமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. ராகவன்தான் அடக்கினார்.. ஊருக்குப்

போய் மனைவியையும் கலந்தாலோசித்துப் பிறகு தெரியப் படுத்துவதாகக் கூறி வெளியே வந்து விட்டார். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது ராகவனின் தம்பி மூலம் வந்த வரன் ஆனதால், பின்னொரு சமயம் அந்தப் பையனிடம் அவர் பேசியபோது. பெற்றோர்களை மீறி ஏதும் செய்ய முடியாது என்று கூறி மழுப்பி விட்டார், அந்த இக்காலப் பிரதிநிதி. 




அந்த இடம் சரியாகாததால் மீண்டும் வரன் தேடி இப்போது எல்லாம் கூடி வந்து வேறு ஒரு இடத்தில் சம்பந்தம் கூடி வந்திருக்கிறது. மாப்பிள்ளை க்ராஜுவேட். ஒரு எண்ணை சுத்திகரிப்புக் கம்பனியில் நல்ல உத்தியோகம் முடிந்தவரை திருமணத்தை சிறப்பாகச் செய்யுங்கள் என்றுமட்டும் கூறினார்கள். என்ன ஒரு குறை என்று சொல்வதானால், அவர்கள் குடும்பம் பெரியது. லக்ஷ்மி திருமணம் முடிந்து போனால் மாமியார், ( மாமனார் இல்லை ) மச்சினன்மார், நாத்தனார்கள் என்று இவள் இருக்குமிடம் அடையாளம் தெரியாமல் போய்விடும். செல்லமாகச் சின்னக் குடும்பத்தில் வளர்ந்தவள்.. இவள்தான் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.




தைலாவுக்கு ஐந்து சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். ஒவ்வொருவரும் டிபிகல் கூட்டுகுடும்பப் பிரதிநிதிகள். இந்தியாவின் பலபகுதிகளில் பிழைப்புதேடிச் சென்றவர்கள். ராகவனும் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றாலும் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர் என்று சொல்ல முடியாது வயதான பாட்டியிடம் வளர்ந்தவர். ஒரே சகோதரி பெரிய குடும்பி. இந்தத் தலைமுறையில் நடக்கும் முதல் திருமணம். ஹைதராபாதில் நடக்க இருந்தது. அநேகமாக எல்லோரும் திருமணத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.




யார் என்ன திட்டமிட்டாலும் நடப்பவை எல்லாம் திட்டமிட்டபடியா நடக்கிறது.?மாப்பிள்ளைப் பையனின் தங்கையின் கணவன். சென்னையில் ரெயில் டிக்கெட் வாங்க ஆட்டோவில் ஏறி ரயில் நிலையத்துக்கு போகச் சொல்லி மிகவும் சோர்வாக இருந்ததால் சற்றே கண் அயர்ந்திருக்கிறார். ரயில் நிலையம் வந்தும் அவர் இறங்காதது கண்டு ஆட்டோ ட்ரைவர் அவரை எழுப்ப முயன்றவர் அதிர்ச்சிக்குள்ளானார் ஆட்டோவில் பயணித்தவர் எழுந்திருக்கவே இல்லை. இறந்திருந்தார். யார் என்ன என்று ஒன்றுமே தெரியாத ஆட்டோ ட்ரைவர் போலீசுக்குத் தகவல் கொடுக்க. அவர் உடைமைகளில் இருந்து ஒரு டெலிபோன் நம்பர் கிடைக்க. தொடர்பு மேல் தொடர்பு கொண்டு ஹைதராபாதில் இருந்தவர்களுக்குத் தகவல் வந்து சேர ஒரு நாள் பொழுதாகி விட்டது.




திருமண வீட்டில் அனைவரும் இடிந்துபோய் இருந்தனர். ஏதும் செய்ய அறியாதவர்கள் முதலில் உற்ற உறவினர் அனைவருக்கும் திருமணம் தள்ளிப் போடப் பட்டிருக்கிறது என்று தகவல் மட்டும் கொடுத்தார்கள். திருமணத்தின் தடைக்கான காரணம் தெரியாமல் ஆளாளுக்கு தோன்றுவதைக் கற்பனை செய்து கொண்டனர். ராகவன் தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சம்பந்திகளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. திருமணம் தள்ளிப்போவதால் ஏற்கெனவெ செய்த செலவுகள் எல்லாம் வீண் என்றாகி விட்டது. ராசி இல்லாத பெண் வருவதற்கு முன்பே ஒரு உயிரை காவு வாங்கி , நாத்தனார் ஆகப் போகிறவளை விதவை யாக்கி விட்டாள். இந்தத் திருமணம் நடக்காது என்று சொல்லி விட்டால்......ராகவன் தம்பதியரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பேசவும் முடியாமல் பேசாமல் இருக்கவும் முடியாமல், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மாப்பிள்ளையின் தாயாரைப் பார்க்கப் போனார்கள். முதலில் அந்த அம்மாள் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக எதையும் பொருட்பத்தாமல் திருமண விஷயம் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். மாப்பிள்ளையின் அம்மா எப்படி இருந்தாலும் மாப்பிள்ளையும் அவரது உடன் பிறந்தவர்களும் மிகவும் ப்ராக்டிகலாகப் பேசினார்கள். எதிர் பாராமல் நடந்த நிகழ்வுக்கு லக்ஷ்மி எப்படிப் பொறுப்பாவாள் என்று அம்மாவிடம் வாதாடினார்கள். இதில் கணவனை இழந்த அந்தப் பெண் எந்த அபிப்பிராயத்தையும் கூறாமல் இருந்தது. ராகவன் தம்பதிகளுக்கு சற்று வருத்தமாக இருந்தது. கடைசியில் இன்னொரு முஹூர்த்தம் பார்க்கப் பட்டது.
லக்ஷ்மியின் கல்யாணத்துக்கு அநேகமாக எல்லா உறவினர்களும் வந்தனர். திருமணம் நடந்த காலம் நல்ல வெய்யில் காலம். ஹைதராபாதில் காலைக் கீழே வைத்தாலெயே சுட்டது. வந்திருந்தவர்கள் உறங்க திருமணத்துக்கு முதல் நாள் தைலாவின் சகோதரர்கள் திருமண சத்திரத்தையே நிறைய தண்ணீர் விட்டுக் கழுவி ஓரளவு சூட்டைக் குறைத்தனர். கேலியும் கிண்டலுமாக யார் மனதும் புண்படாத முறையில் குறிப்பிட்ட நேரத்தில்
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்துவர
கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலைதர
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என ஆன்றோர்கள் குரல் கொடுக்க
கொட்டியதுமேளம் குவிந்தது கோடிமலர்
கட்டினான்  மாங்கல்யம் மனை வாழ்க துணை வாழ்க
குலம் வாழ்க”
என லக்ஷ்மி கலியாண வைபோகம் நடந்தேறியது. 
----------------------------------------------------
 


.
 






 





Sunday, February 10, 2013

எண்ண எண்ணத் தோன்றுவது.


                                எண்ண எண்ணத் தோன்றுவது.
                                ------------------------------------------



நிழல் ஆடியது போன்ற சொற்றொடரை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையிலேயே கண்முன்னே நிழல் ஆடுவது மிகவும் பாதிக்கும் விஷயமாகும். எனக்கு கண் பொறை ( புரை.?) நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது பற்றி எழுதி இருக்கிறேன். கண்பார்வை பளிச்சென்று ஆயிற்று. ஆனால் கடந்த சில நாட்களாக என் வலது கண்ணில் ஏதோ நிழல் ஆடுவது தெரிந்தது. பார்க்கும் பொருள் சட்டென மங்கலாகத் தெரியும். சில வினாடிகளில் சரியாகிவிடும். இது அடிக்கடி நிகழவே கண்மருத்துவரை அணுகினேன்.




என்னை சோதித்துப் பார்த்தவர்கள் எனக்கு ஒரு FFA ( fundas fluroceine angiogram ) செய்ய வேண்டும் என்றனர். இதயத்துக்கு ஆஞ்சியோகிராம் கேள்விப்பட்டதுண்டு. கண்ணுக்குமா.?கண்ணின் ரெடினா பகுதியில் ஏதாவது நரம்பு சேதமடைந்து இருக்கிறதா என்று அறிய செய்யும் சோதனை அது என்று தெரிந்து கொண்டேன். மெல்லிய நரம்பிலிருந்து உதிரப் போக்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க அந்த சோதனை. முதலில் கண்களை டைலேட் செய்கிறார்கள். பிறகு கை முட்டியில் ஒரு திரவத்தை இஞ்செக்ட் செய்கிறார்கள்.அது உடலின் இரத்த ஓட்டத்துடன் கலந்து உடல் முழுவதும் பயணிக்குமாம். அவர்கள் அப்போது கண்களை பல கோணங்களில் படம் பிடிக்கிறார்கள். படத்தைப் பார்த்து பழுது ஏதாவது தெரிகிறதா என்று கணிக்கிறார்கள் எனக்கு எந்தப் பழுதும் இல்லை என்று சொன்னார்கள். ரெடினாவின் மெம்ப்ரேன் வலுவிழந்து இருப்பதால் இந்த நிழலாட்டம் என்றார்கள். வயதின் கோளாறு, என்னதான் மனசில் இளமையாக உணர்ந்தாலும் வயது காட்டிக் கொடுக்கிறது. அப்படி ஏதாவது சேதம் இருந்தால் அந்த இடத்தை லேசர் சிகிச்சைமூலம் பொசுக்கி விடுவார்களாம். நல்ல வேளை என் கண்கள் இதுவரை நன்றாகவே இருக்கிற்து.
        -------------------------------------------------------              



கண்களில் சொட்டு மருந்து, டைலேஷனுக்காக . போட்டிருந்தபோது அங்கே இருந்த தொலைக்காட்சி ஒன்றில் ( கன்னடத்தில் )மொஹமத் அஃப்சல் குரு பற்றி செய்தி ஓடிக்கொண்டிருந்தது. செய்தி scroll ஆக ஓடிக்கொண்டிருந்தது. கன்னடம் தெரியாத தற்குறி நான். வீட்டுக்கு வந்து முதல் வேலையாக ஆங்கில செய்தி போட்டுப் பார்த்தேன். அஃப்சல் குருவை தூக்கிலிட்டார்கள் என்ற செய்தி அறிந்தேன். எனக்கு ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பது ஒவ்வாத செயல் என்றே தோன்றுகிறது. அதிலும் இந்த அஃப்சல் குரு நேரடியாக பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை. அதற்கு உடந்தை என்றே குற்றச்சாட்டு. இவனுக்கு இவனுக்காக வாதாட சரியான வக்கீல்களும் நியமிக்கப் பட்டிருக்கவில்லை. இவன் தூக்கில் தொங்கினால் நீதி தன் பணியை ஒழுங்காக செய்ததாகுமா.. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளே இம்மாதிரியான ஒரு முடிவுக்குக் காரணமோ என்று தோன்றுகிறது. அதனால் குற்ற வாளி தண்டிக்கப் படக் கூடாது என்பது என் வாதமல்ல. தூக்குத் தண்டனையில் உடன்பாடில்லை என்பதுதான் என் வாதம் . நான் என்ன எண்ணி என்ன பயன்.?ஒட்டு மொத்தமாக இந்த தூக்குதண்டனை என்பது ஒழிக்கப் படவேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன்.
                -----------------------------------------



பலரும் வரவுக்கு மீறிய சொத்து வைத்திருப்பதாகச்செய்திகள் வருகின்றன, எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம் எழுகிறது. நான் பணியில் இருந்தபோது ஒட்டுமொத்தமாக சம்பாதித்த பணம் எவ்வளவு என்று கணக்குப் பார்த்து அதையும் இப்போது என் வீட்டின் ( இடம் உட்பட )மதிப்பையும் பார்த்தால் எனக்கு நான் சம்பாதித்த பணத்தைவிட இப்போது இருக்கும் சொத்தின் மதிப்புக் கூடுதலாக இருக்கும். நான் என் வீட்டு மனையை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கினேன் . அதன் மதிப்பு இப்போது பல லட்சங்களை தாண்டி இருக்கிறது. இந்த ரீதியில் கணக்கிட்டால் அநேகம் பேர் வரவுக்கு மீறுய சொத்து வைத்திருப்பதாகவே எண்ணப் படுவார்கள். Any  opinions.?
               -------------------------------------



Cause and effect பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது மனதில் ஓடிய வரிகள் கீழே. 





கண்ணும் கண்ணும் காணும்போது  காதல் பிறக்கலாம்
கையும் கையும் இணையும் போது வேகம் பிறக்கலாம்.
உதடும் உதடும் உராயும்போது உடலில் தீ பறக்கலாம்
உடலும் உடலும் ஒன்றாயிணைந்தால் கரு உருவாகலாம்.
விளைவுகளின் காரணங்கள் இதால் இது என்றாலும்   
எல்லாம் நடந்தாலும் ஏதும் நிகழாதுமிருக்கலாம்.
--------------------------------------------------------      .           .              
 
 



Friday, February 8, 2013

சிறு பொறி காட்டுத்தீ.


                                            சிறு பொறி, காட்டுத்தீ. !
                                          -----------------------------------



எரிதழல் வாசன் AMWAY எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பனி பற்றி எழுதி இருந்தார். பலரும் அறியாமையின் விளைவாகவும் பேராசையின் காரணமாகவும் ஏமாறுகிறார்களே என்னும் ஆதங்கம் அவர் பதிவில் தெரிந்தது. அதைப் படிக்கும்போது எனக்கு இந்த மாதிரி விஷயங்களுக்கு முன்னோடி என்று நான் கருதுவதை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இந்த சிறு பொறியிலிருந்து mlm மாதிரியான வியாபார உத்திகள் உருவாகி இருக்கலாம் என்று கருதுகிறேன். 




அந்தக் காலத்தில் போஸ்ட் கார்டுகள் மூலம் பரவியது இந்த உத்தி. பத்து பேருக்கு அவர்களது முழு முகவரியுடன் கடிதம் வரும் அந்தக் கடிதத்தில் பத்து பேருடைய முகவரி இருக்கும். கடிதம் பெறுபவர் கடிதத்தில் இருக்கும் பத்து பேரின் முகவரிக்கு ஆளுக்கு ரூபாய் ஒன்று மணி ஆர்டர் செய்ய வேண்டும். பெறுபவர் இன்னும் பத்து பேருக்கு இதே மாதிரிக் கடிதம் எழுத வேண்டும். எழுதும் போது இவருக்கு வந்த கடிதத்தில் இருந்த கடைசி நபரின் பெயருக்குப் பதில் இவருடைய பெயரையும் முகவ்ரியையும் எழுதி அனுப்ப வேண்டும். இதனால் இவர் கடிதம் அனுப்பியவர்கள் மூலம் இவருக்கு ரூபாய் ஒன்று ஒவ்வொருவரிடமிருந்தும் வரும். இந்த செயினின் இணைப்பு துண்டிக்கப் படாமல் தொடர்ந்தால் சில நாட்களில் இவருக்கு முகமே தெரியாத பலரிட மிருந்தும் ரூபாய் ஒவ்வொன்றாக. வந்து கொண்டே இருக்கும். கணக்குப் போட்டுப் பாருங்கள் பத்து நூறு ஆயிரம் என்று பலரது கார்டுகளில் இவரது முகவரி இருக்கும். பணமும் வந்து கொண்டே இருக்கும். இதில் மிகவும் முக்கியம் என்னவென்றால் இணைப்பு துண்டிக்கப் படக் கூடாது.




மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், யாரும் யாரையும் ஏமாற்றுவது இல்லை. உங்களுக்கு செலவு ரூபாய் பத்தும், மணி  ஆர்டர் கமிஷனும், கார்டுக்கான செலவும் மட்டும்தான்.

ஆனால் இப்போது புரிகிறது. இது என்ன எனன விதமாகவோ பரிணாம மாற்றம் கொண்டு.மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்குக்கு வித்தாக இருந்திருக்கிறதோ என்று. பதிவைப் படிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். பகிரலாமே. 
---------------------------------------------------------    .           .              
 

 

Wednesday, February 6, 2013

அதிர்ஷ்டசாலிகள். !


                                        அதிர்ஷ்டசாலிகள்
                                         -------------------------
( பொதுவாக சில முதியவர்களின் அங்கலாய்ப்புகளில் இருந்து கிடைத்த கரு)


நாங்கள் என்று சொல்லும்போது ( 1960-க்கு முன் பிறந்தவர்கள் ) அதில் நீங்களும் ஒருவேளை அடங்கலாம். நம்மைப் பற்றி இன்றைய தலைமுறையினர் என்ன நினைத்தாலும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். WE WERE AWESOME. !



நாங்கள் தனிப் படுக்கையில் தனி அறையில் உறங்கியதில்லை. தாய் தந்தையுடன் அவர்கள் படுக்கையில் அவர்களின் கத கதப்பின் சுகம் உணர்ந்து உறங்கியவர்கள்.எந்த உணவும் எங்களுக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. எந்த உணவுக்கும் ‘தடாஇருந்ததில்லை. புத்தகங்களைச் சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை. சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து ஓட்டி விளையாடியது இல்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் விளையாட எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. எங்கள் விளையாட்டெல்லாம் திறந்தவெளியில் நிஜ நண்பர்களுடன்தான் இருந்தது. விளையாட்டுக்கள் எல்லாம் வியர்வை சிந்த வைப்பது. ஆரோக்கியமானது. கண் காணாத நண்பர்களோடோ, முகம் காணாமல் கணினி முன் அமர்ந்து இல்லாத எதிரிகளோடு சண்டையிட்டோ கழிந்ததில்லை. தாகம் எடுத்தால் தெருக்குழாய்களில் தண்ணீர் குடிப்போம். மினெரல் வாட்டர் அல்ல. ஒரே குப்பி ஜூசை நான்கு நண்பர்கள் சேர்ந்து குடித்தாலும் நோய் நொடி எங்களை அண்டியதில்லை. விரும்பிய இனிப்புகளை உண்டாலும் குண்டாகத் தெரிந்ததில்லை. காலுக்குச் செறுப்பு அணியாவிட்டாலும் எந்த பாதிப்பும் வந்ததில்லை. காடா விளக்கு வெளிச்சத்தில் படித்தாலும் கண்ணாடி அணியத் தேவை இருக்கவில்லை. ஊட்ட பானங்கள் தேவை இருக்கவில்லை. பழையதில் நீர் ஊற்றி உண்டே உடல் வலிமையுடன் இருந்தோம். எங்கள் பெற்றோர்கள் பணம் கொடுத்து எங்களைக் கெடுக்கவில்லை. அன்பை ஊட்டியே அவர்கள் அன்பை தெரியப் படுத்தினார்கள்.எங்களுக்கு உடல் நலம் சரியிருக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஓட வேண்டி இருக்கவில்லை. மருத்துவர் எங்கள் இருப்பிடம் வருவார். எங்கள் உணர்வுகளை குறுஞ்செய்திகளாகவோ போலியான முகம் காணாக் குரலினாலோ தெரிவிக்கவில்லை. உணர்வுகளை எழுத்தில் கொட்டி கடிதங்கள் மூலம் உறவாடுவோம். எங்களிடம் செல் போன், வீடியோ கேம், ப்ளே ஸ்டேஷன், கணினி.நெட் சாட் நண்பர்கள் போன்றவை இருக்கவில்லை.நிஜமான நண்பர்கள் இருந்தார்கள். நினைத்த்போது நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். டெலிபோனில் முன் அனுமதி தேவை இருக்கவில்லை. எங்கள் காலத்தில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். தங்கள் செல்வங்களை சமூகத்துக்காக செலவிட்டனர்.

சமூக செல்வங்களை அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. எங்கள் புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும்  அதில் இருந்தவர் வண்ண மயமான நல்ல எண்ணங்களோடு இருந்தனர். நாங்கள் இலவசம் பெறும் பிச்சைக் காரர்களாக இருந்ததில்லை.

இப்போது சொல்லுங்கள் WERE WE NOT AWESOME AND LUCKY.?  

( இந்தப் பெரிசுகளோட பீத்தல்கள் தாங்கலைடா சாமி “ என்றும் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது.)       .