Wednesday, July 30, 2014

நினைத்துப்பார்க்க சில காணொளிகள்


                        நினைத்துப் பார்க்க சில காணொளிகள்
                        -----------------------------------------------------
நான் பலமுறை ஆச்சரியப் பட்டதுண்டு. நம் குழந்தைகள் முதலில் கவிழும்போதும், தவழும்போதும் ,நிற்கும்போதும் நடக்கும்போதும் கண்டு பரவசமடைகிறோம். இவற்றைச் செய்து பார்க்க யாரும் பயிற்சி கொடுப்பதில்லை. விலங்கினங்களின் சில செயல்கள் கண்டும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த ஆச்சரியமும் மகிழ்வும் உங்களுக்கும் இதைக் காணும்போது நிகழலாம் .யார் கற்றுக் கொடுத்து இவை செயல்படுகின்றன. ?


ஒரு தந்தையின் அரவணைப்பைக் உணர்த்தும் ஒரு சிம்பாலிக்  காணொளி. கண்டு மகிழ.

குழந்தைகள் எது செய்தாலும் காண மகிழ்ச்சியே. உங்கள் வீட்டிலும் இம்மாதிரிக் குழந்தைகள் இருக்குமே


சாஸ்திரிய சங்கீதம் மூலம் கொடுக்கப் படும் புகார்களையும் ரசியுங்களேன்


மேலே கண்ட காணொளிகளுக்கு கவிதை புனைந்து வாசகர்களை ரசிக்க வைக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த அழைக்கிறேன் 






Sunday, July 27, 2014

வறுமைக் கோடும் புள்ளி விவரங்களும்....

         
                            வறுமைக் கோடும் புள்ளி விவரங்களும் .....
                             -----------------------------------------------------------



வறுமைக் கோடு, வறுமைக் கோடு என்கிறார்களே அது என்ன கோடு.? எனக்குப் புரிபடாத சங்கதிகளில் இதுவும் ஒன்று. அறிஞர்கள், வல்லுனர்கள் கணக்கியல் ( statistics) நிபுணர்கள் கூடி  ( சில நாட்களுக்கு முன் படித்ததாக நினைவு) ஒரு நாளைக்கு ஒருவனுக்கு வருமானம் ரூ 32/-( நகரத்தில்) அல்லது ரூ29/. கிராமத்தில் கிடைக்குமானால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவன் என்று சொன்னார்கள். அதாவது ஒருவன் நகரத்தில் ஒரு மாதத்துக்கு தலைக்கு  ரூ960/-( per capita )  ஈட்ட முடிந்தால் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவன் ஆகிறான் .இந்த அடிப்படைக் கணக்கு எட்டுவதற்கு என்ன என்ன விஷயங்களை எடுத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லவா.. தவறு ஏதும் இருக்காது. ...! ஆனால் இந்த பாழாய்ப்போன மனசு எப்படி இந்த இலக்கை நிர்ணயித்தார்கள் என்று தெரியாமல் தவித்தது.

இந்த ரூ.32/- சரியில்லை என்றால் ஒரு சரியான கணக்கு வேண்டுமல்லவா.?என் வீட்டு சாமான்கள் வாங்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றிருக்கிறாள். என் வீட்டு ஹோம் மினிஸ்டர். அவள் உதவியை நாடினேன். எனக்கு பொருட்களின் தற்போதைய விற்கும் விலைகள் தெரியாது. என் வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விலையே எனக்குத் தெரியாதபோது எப்படி இவ்வளவு பணம் தேவை என்று கூறமுடியும்.?இந்த வறுமைக் கோடினை நிர்ணயிப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆயிற்றே...!

ஒரு குத்து மதிப்பாக இருவர் வாழும் ஒரு குடும்பத்துக்கு இரண்டு வேளை உணவு உண்டு மொத்தத்தில் பசியில்லாமல் உயிர் வாழ எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்று என் மனைவியைக் கேட்டேன். அவள் உறுதியாக எதையும் சொல்ல முடியாது. மார்க்கட் நிலவரம் நாளைக்கு நாள் மாறுபடுகிறது. எதையும் குறிப்பிட்டுக் கணக்கு சொல்ல முடியாது என்றாள். ஆனால் விற்பன்னர்கள் எந்த வருடத்து விலைகளைக் கணக்கெடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பன்னர்கள் அல்லவா... அவர்கள்சொல்வது சரியாகத்தான் இருக்கும்....! இந்த மாதிரி எதையாவது சொல்லி நான் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கண்க்கு நான் போட்டு பார்க்க விரும்பினேன். இரண்டு பேர் நாளைக்கு இரண்டு வேளை உண்ண என்னென்ன பொருட்கள் தேவைப் படும். தென் இந்திய வழக்கப்படி சோறு வேண்டும். சுமார் 12 கிலோ அரிசி இருந்தால் இரண்டு வேளை சமைத்து சாப்பிடப் போதுமானதாக இருக்கும் என்று முடிவெடுத்தோம். எது போதும் எது போதாது என்று முடிவெடுக்க நீ யார் என்று என்னுள் கேள்வி எழுந்தது. சும்மா ஒரு கணக்குக்குத் தானே என்று பதிலும் வந்தது. உணவு எனும்போது அது சக்தியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் கார்போஹைட்ரேட் ப்ரொடீன் என்று ஏதேதொ தேவைப்படுமே. பசிக்கு உணவு என்றிருப்பவன் இந்தக் கணக்கெல்லாம் பார்க்கக் கூடாது. ஒரு குத்து மதிப்பாக இவையெல்லாம் தேவை என்று தோன்றியதைப் பட்டியலிடுகிறேன் அரிசி தவிர மளிகை சாமான்கள் என்னென்ன தேவைப்படும். . என்னென்ன தேவைப்படும் என்பதை விட என்னென்ன போதும் என்றுதான் பார்க்கவேண்டும் வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் பணியல்லவா....!
இந்த விளையாட்டுக்கு என் மனைவி வரமாட்டேன் என்கிறாள். இருந்தாலும் எழுதத் துவங்கி விட்டேன் ஒப்பேற்ற வேண்டாமா. பருப்புவகைகள் எல்லாம் சேர்த்து மாதம் இரண்டு கிலோ என்றால் ரூ. 100/- ஆகுமா. பால் தினம் அரை லிட்டர் என்றால் ரூ15/-சர்க்கரை எண்ணை வகையறாக்கள் ரூ.200/-காய்கறிகள் தினம் சுமார் ரூ15/- உப்பு புளி மிளகாய் வகையறாக்கள் மாதம் சுமார் ரூ150/-
இவற்றை சேர்த்துக் கணக்குப் பார்ப்போமா.?
அரிசி....       .ரூ.35x12= ரூ420/-
பால்......       .ரூ15x30-=ரூ 450/-
மளிகை.............. ரூ100+ரூ200+150=ரூ450/-
காய்கறி.................ரூ15x30= 450/-
இந்தக் கணக்கு ஒரு குத்து மதிப்புத்தான் இதையெல்லாம் கூட்டினால்ரூ1770/-

அட per capita  income மாதம் ரூ960/- என்றால் இருவருக்கு ரூ1920/- செலவைவிட வரவு அதிகம் போல் தெரிகிறதே.  இந்தக் கணக்கு வெறுமே வயிற்றுப் பாட்டுக்கு மட்டுமே. இருக்கும் இட வாடகை, மின்சாரக் கட்டணம் அடுப்பு எரிக்க எரிபொருள் போக்குவரத்துக் கட்டணங்கள் இதெல்லாம் கணக்கில் வரவில்லையே. இது தவிர குழந்தைகள் இருந்தால் அவர்களது படிப்புச் செலவு .துணிமணிகள் மருத்துவச் செலவு இதற்கெல்லாம் எங்கே போக...? வாழ்க்கை என்பது இரு வேளை உணவு மட்டுமா....? உணவைக்குச் செலவு செய்வதை விட  மனிதன் மனிதனாகக் காட்டிக்கொள்ள அதிகம் செலவாகிறது.

ஆக விற்பன்னர்களும் என்னைப் போல் வயிற்றுப் பாட்டை மட்டுமே கணக்கில் எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இதை என் மனைவியிடம் காட்டியபோது வீட்டை நிர்வகிக்கும் பணியை என்னிடமே தந்து விடுவதாக பயமுறுத்துகிறாள். என்னவோ சொல்வார்களே ...வேலியில் போகும் ஓணானை......என்று அதுபோல் இருக்கிறது. எனக்குத் தெரியும் வாசகர்கள் பலரும் என்னிடம் மல்லுக்கட்டத் தயாராய் இருப்பார்கள் என்று. என் இந்தப் பதிவின் மூலம் நானும் இந்த statistical உத்தியோகத்துக்கு முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.






      




Thursday, July 24, 2014

சரித்திரமா ...? கலாச்சாரமா....?


                             சரித்திரமா..... கலாச்சாரமா.....?
                            ----------------------------------------


அண்மையில் இந்தியன் கவுன்சில் ஆஃப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச்( ICHR) –ன் சேர்மனாக திரு. யெல்லப்ப்ரகாட சுதர்ஷன் ராவ் (Y.S.Rao ) நியமிக்கப் பட்டிருக்கிறார் என்னும் செய்தியும்  அதற்கு எதிர்ப்பாக சில குரல்களும் எழுந்தது பலரும் அறிந்திருப்பீர்கள் என்று  நினைக்கிறேன் இந்த எதிர்ப்புக் குரல்களுக்கு முக்கிய காரணம் திரு.ராவ் அவர்கள் இராமாயணமும் மஹாபாரதமும் வெறும் புராணக் கதைகள் அல்ல சரித்திர நிகழ்வுகள் என்று கூறி இருப்பதுதான். இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.பா. தங்கள் ஹிந்துத்வக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் ஒருவரை நியமனம் செய்திருக்கிறது என்ற எண்ணத்துக்கு வலு சேர்க்கிறது.

காரணம் என்னவென்று பார்க்கப் போவதற்கு முன்னால் இதிகாசக் கதைகளுக்கும்  சரித்திரத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொளல் அவசியம்  இதிகாசங்கள் புராணங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுந்தவை. நிகழ்வுகள் என்று நம்பப் படுபவற்றின் பின்னணியில் நம்பிக்கை மட்டும் போதும் ஆனால் சரித்திர நிகழ்வுகளுக்கு சான்றுகள் அவசியம் சரித்திர நிகழ்வுகளின் உண்மைத்தனத்தை தொல் பொருள் ஆராய்ச்சி, கல்வெட்டுச் சான்றுகள், நாணயங்கள் செப்பேடுகள் போன்றவற்றின் ஆதாரங்களோடு நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் இதிகாசங்களும் புராணங்களும் அதைச் சார்ந்த கதைகளும் கற்பனை ஊற்றுகளின் பிரவாகமே.. பகுத்தறிவுக்கோ காரண காரியங்களுக்கோ உட்படுத்த முடியாதவை.

சரித்திர நிகழ்வுகளும் புராண நிகழ்வுகளும் முற்றிலும் வேறான கருத்துக்களை அடிப்படையாய்க் கொண்டவை. சரித்திரமும் புராணமும் மனித கற்பனையின் விளைவே. இருந்தாலும் சரித்திரம் ஆதார பூர்வமாக நிரூபணத்துக்கு உட்படுத்தப் படுகிறது. கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கு உள்ளாவது. ஒரு ஆராய்ச்சியாளனும் இன்னொருவரும் கால நிர்ணயங்களில் மாறுபடலாம். ஆனால் புராணத்துக்கு அந்தக் கால நிர்ணயம் கிடையாது..காலமும் நேரமும் கதாபாத்திரங்களும் மனசின் உருவகமே. ( ஒரு நாவலின் உருவாக்கம்போல்)அப்படியானால் புராணம் என்பது உண்மைகளின் பிரதிபலிப்பாகாதா.?புராணம் கதை கவிதை ஓவியம் போன்றவை வேறொரு உண்மையின் வெளிப்பாடாகும். வேறு விதமாகச் சொல்லப் போனால் அவை ஒரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் இதில் மதமும் முக்கிய பங்கு ஏற்கிறது. நம் இயல்புகளைப் பிரதிபலிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகிறது. சொல்லப் போனால் இந்தக் கலாச்சாரத்தின் நீட்சி சரித்திரத்தைவிட அதிகமானது.

ராமரை ஒரு சரித்திர நாயகனாக உருவகப் படுத்தினால் அயோத்தி எனும் ஒரு சிறிய அரசின் காவலனாகப் பிரதிபலிக்கப் படுவார். அதையே பரந்து விரிந்த மௌர்ய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி அசோகரோடு இணைத்துப் பார்த்தால் சரித்திர ஏடுகளில் காணாமல் போய் விடுவார் ஆனால் ராமரின்  பெயரும் புகழும் பரவலாக எந்த சரித்திர அரசருக்கும் இல்லாத அளவு பேசப் படுகிறதென்றால்  அவர் இந்த தேசத்தின் கலாச்சார நாயகனாக இருப்பதேகாரணமாகும். ராமாயணமும் மஹா பாரதமும்  எண்ணற்ற வகையில் கூறப்பட்டிருந்தாலும் , எது உண்மையான அசல் காவியம் என்று அறியப்படாவிட்டாலும் நிலைத்து நிற்பது கலாச்சாரத்தின் கால்களில் தான் என்று புரிவது அவசியம்.
புராணங்களையும் இதிகாசங்களையும்  சரித்திர சம்பவங்களாகப் பார்ப்பதில்தான் ஹிந்துத்துவக் கொள்கையின் ஊடுருவலோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நமது இதிகாசங்கள் பலரால் பலவிதமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கும் கற்பனைக் களஞ்சியங்களே.
(இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும்  ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் உறுதியாகக் கொண்டாடப் படுவது நிச்சயம் சரித்திர அடிப்படையில் அல்ல. கலாச்சார அடிப்படையில்தான் இறை நம்பிக்கையில்தான். அதைக் கேள்வி கேட்டால் குறை கூறப் படுபவராகி விடுவோம்)        . . ,      .                                              




 


 

Monday, July 21, 2014

படித்து அறிந்ததும் பார்த்து ரசித்ததும்


                         படித்து அறிந்ததும் பார்த்து ரசித்ததும்
                         ---------------------------------------------------


படித்ததில் அறிந்து கொண்டது
----------------------------.
ஆய கலைகள்64 என்கிறார்களே, அவையாவனஅக்கர இலக்கணம்,-இலிகிதம்,-கணிதம்,- வேதம்,-புராணம்,- வியாகரணம் ,-நீதி சாஸ்திரம்,-ஜோதிட சாஸ்திரம்,-தர்ம சாஸ்திரம்- யோக சாஸ்திரம், - மந்திர சாஸ்திரம்,-சகுன சாஸ்திரம்,-சிற்பசாஸ்திரம்,-வைத்திய சாஸ்திரம் ,- உருவ சாஸ்திரம்,- இதிகாசம்,- காவியம்,-அலங்காரம் ,- மதுரபாடனம்,- நாடகம்,- நிருத்தம்,-சத்த பிரமம்,-வீணை,- வேணு,- மிருதங்கம்,-தாளம்,- அத்திரப் பரீக்ஷை,- கனகப் பரீக்ஷை,-இரதப் பரீக்ஷை,- கஜபரீக்ஷை,-அஸ்வப் பரீக்ஷை,- ரத்தினப் பரீக்ஷை,- பூபரிக்ஷை,-சங்கிராம இலக்கணம்,- மல்ல யுத்தம்,- ஆகருக்ஷணம்.-உச்சாடனம்,- வித்துவேஷணம்,-மதன சாஸ்திரம்,-மோகனம்,- வசீகரணம்,-இரசவாதம்,- காந்தர்வ வாதம்,-பைபீல வாதம்,- கௌத்துகவாதம்,-தாது வாதம்,-காருடம்,- நட்டம்,- முட்டி,-ஆகாயப் பிரவேசம்,-ஆதாயகமனம்,- பரகாயப் பிரவேசம்,-அதிரிச்யம்,- இந்திரஜாலம்,- மகேந்திர ஜாலம்,-அக்னிதம்பம்,- ஜலஸ்தம்பம்,- வாயுத்தம்பம்,-திட்டித் தம்பம்,- வாக்குத்தம்பம்,- சுக்கிலத்தம்பம்,-கன்னத் தம்பம்,- கட்கத் தம்பம்,- அவத்தைப் பிரயோகம்

சத்தியமாகச் சொல்கிறேன், பெயர்கள்தான் எழுதிவிட்டேனே அல்லாமல் அவை என்ன என்று தெரியாது ‘அபிதான சிந்தாமணியில் கலைஞானம் 64 என்னும் தலைப்பில் கொடுக்கப் பட்டவை என்று சொல்லப் படுகிறது


படித்ததில் ரசித்தது,
--------------------
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில் யார் முகத்தை கழுவுவார்கள். ?

பதில்:- அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்,

தவறு,! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார். யோசித்துப்பார். அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப்பார்த்து தன் முகமும் அதேபோல் இருப்பதாக நினைத்துக் கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக  நினைத்துக் கொள்வார்.எனவே சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்...!

மிகவும் சாமர்த்தியமான பதில்தான் இன்னொரு கேள்வி கேளுங்கள்...

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவரது முகம் அழுக்காக இருக்கிறது யார் முகத்தைக் கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வியா?இதற்கான பதில் தெரிந்ததுதானே. தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்.

தவறு, .! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமான முகத்தை உடையவர் ச்ழுக்கான முகமுடையவரைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் தன் முகத்தை கழுவுவார். அதைப் பார்த்து அழுக்கான முகமுடையவரும் தன் முகத்தைக் கழுவுவார்.எனவே இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்.

நான் இதை யோசித்துப்பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில் இப்படிஒரு தவறா.?
மீண்டும் கேள்வி கேளுங்கள்

கேள்வி:- இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள்.ஒருவர்
முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தை கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வி....! இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்.

தவறு. இருவருமே கழுவ மாட்டார்கள். அழுக்கான முகமுடையவர் சுத்தமான முகம் இருப்பவரைப்பார்த்துத் தன் முகமும் சுத்தமாக இருப்பதாகநினைத்துக் கொள்வார். சுத்தமான முகமுடையவர் மற்றவரைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார். ஆனால் அழுக்கான முகமுடையவர் தன் முகத்தைக் கழுவாதது பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே இருவருமே கழுவ மாட்டார்கள்

தயவு செது இன்னொரு முறை தேர்வு வையுங்கள்

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவர் முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவர் முகம் அழுக்காக இருக்கிறதுயார் முகத்தைக் கழுவுவார்கள்.?

பதில்:- இருவருமே கழுவ மாட்டார்கள்....!

தவறு.இரண்டுபேர் சிம்னியிலிருந்து கீழே வரும்போது ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும் மற்றவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும் .எனவே கேள்வியே முட்டாள்தனமானது. முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால் விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.

யூத மதத்தைச் சார்ந்த  ராபி ஷ்வார்ட்ஸிடம் ஸீன் கோல்ட்ஸ்டீன் என்ற 20 வயது இளைஞன்  தான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதாகவும் சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறி தால்மத் பற்றிப் படிக்கக் கருதுவதாகவும் தெரிவித்தான்
.
அதற்கு ராபி வைக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அதைச் சொல்லித் தருவதாகக் கூறி வைத்த பரீட்சையே மேலே படித்தது.
உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர  விடையைக்கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அண்மையில் இறையன்பு அவர்கள் எழுதி இருந்ததைப் படித்ததில் இருந்து
.
இன்னொரு பகுதி

காலை நேரத்தில் ஒருவர் புத்தரிடம் வந்து கடவுள் இருக்கிறார் அல்லவா “ என்று கேட்டார்.
புத்தர் இல்லைஎன்றார்
மதியம் ஒருவர் வந்து கேட்டார்கடவுள் இல்லைதானே
புத்தர் “ இருக்கிறார் “ என்று கூறினார்.
மாலையில் ஒருவர் வந்து “ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை “ என்றார்.
உடனே புத்தர் “ நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்என்றார்.
புத்தருக்கு அருகில் இருந்தவருக்கு குழப்பமாகி விட்டது. “ நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச்சொல்கிறீர்களே ஏன் “ என்று கேட்டார்.
கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் இருந்தது “என்றார் புத்தர்.
“காலையில் வந்தவர் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்து என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான்இல்லைஎன்று சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத் துவங்குவார். மதியம் வந்தவர் ‘கடவுளில்லைஎன்று முடிவு செய்துவிட்டு என்னிடம்வந்து கேட்டார்..அவரிடம் இருக்கிறார் என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ ஏற்கனவே தேடிக்கொண்டிருக்கிறார் எனவே அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.கேள்வி கேட்பவரைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன் “ என்றார்.                                             


கல்வி படிப்பு தேர்ச்சி, மதிப்பெண்கள் இவை பற்றிய கண்ணோட்டங்கள் காணொளியில்  கண்டு ரசித்தது.

  ஆசிரியர்களும் பெற்றோர்களும் உடன் படுகிறார்களா.? படிக்காதவர் எல்லோரும் மேதைகள் ஆக முடியுமா.?

.
 
 

Friday, July 18, 2014

கேள்விகளின் நாயகன்.......


                           கேள்விகளின் நாயகன் ........?
                           ----------------------------------- 


கேள்வியின் நாயகன் நான். தவறு. கேள்வியின் நாயகர்களில் நானும் ஒருவன்  திருமதி கீதாமதிவாணன் ( கீத மஞ்சரி ) என்னையும் உலகெலாம் சுற்றிவரும் கேள்விகளுக்குப் பதில் எழுதக் கேட்டுக் கொண்டபோது முதலில் பதில் எழுத ஒரு தயக்கம் இருந்தது.பலரது கேள்விக்கான பதில்களைப் படித்து வந்திருக்கிறேன் கேள்விகளெல்லாம் hypothetical  என்று தோன்றியது. இருந்தாலும் அம்மாதிரி சூழ்நிலையில் நான் எப்படி react  செய்வேன் என்பதை முடிந்தவரை உண்மையாகப் பதில் சொல்வதே நியாயம் என்று பட்டது கீத மஞ்சரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றவும் வேண்டும் அல்லவா.. ஆகவே இதோ என் பதில்கள்.

1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
எனக்கு இப்போது என் 76-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என்  பிள்ளைகள் என் நூறாவது வயதின்பொது அவர்களது எழுபதுகளின் தொடக்கத்தில் இருப்பார்கள். என் பேரக்குழந்தைகளும்  திருமணமாகி பெற்றோர்களாகி இருப்பார்கள். ஆகவே பிற்ந்த நாள் கொண்டாட்டம் என்பது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படியே இருக்கும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் கூடி இருக்கும் ஒரு மகிழ்வான நாளாக அது இருக்க வேண்டும் என்பதே விருப்பம்
இன்றுறங்கி நாளை விழிப்பதே நம் கையில் இல்லாத போது இம்மாதிரித் திட்டமிடுதல் .......... இதையே hypothetical கேள்வி என்கிறேன்
2.) என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்.?
என்னதான் கற்றாலும் கற்றது கைம்மண் அளவு என்று தெரியும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தெரிந்தது இது ,தெரியாதது இது என்று பிரித்து தெரியாததைக் கற்க முயல்வேன் ஆனால் சிலவிஷயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு mental block இருப்பதும் தெரியும்
3.) கடைசியாகச் சிரித்தது எப்போது ? எதற்காக.?
இப்போது. இக்கணமே. இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேனே என்பதை நினைத்து..
4.) 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன.?
இம்மாதிரி பவரே இல்லாமல் சிறுவயதில் வாழ்ந்திருக்கிறேன் நம் முன்னோர்களும் வாழ்ந்திருக்கின்றனர். அதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் முன்பெல்லாம் இந்தப் பவர்கட் குறித்து பலரும் பதிவுகளில் எழுதி இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னூட்டமாக இயற்கையோடு இசைந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருக்கிறேன் என்ன... இப்படி வாழப் பழகிவிட்டதால் சில அசௌகரியங்கள் தெரியும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்
இந்தக் கேள்வியே clear ஆக இல்லையோ என்று தோன்றுகிறது. பவர்கட் என்பது மின் சக்தியைத்தான் குறிக்கிறதா. இல்லை நமக்கிருக்கும் சக்தியைக் குறிக்கிறதா.?ஒரு 24 மணி நேரமா இல்லை நாளும் 24 மணி நேரமா..
5.) உங்களின் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன. ?
என் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. அந்த நாளில் நான் அவர்களிடம் எதையும் சொன்னதாக நினைவில்லை. ஆணும் பெணும் இணைந்து வாழ்வதே திருமண வாழ்வு. வாழ்க்கை என்பது அவர்களே வாழ வேண்டியது. பிறர் உபதேசித்து பின் பற்றக் கூடியது அல்ல. திருமண வாழ்வில் மகிழ்வாக நாங்கள் வாழ்ந்து வருவதை என் குழந்தைகள் பார்த்து வந்திருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையே அவர்கள் பின் பற்ற முயல வேண்டியதில் ஒன்று என்று தெரிந்து கொண்டிருப்பார்கள்.
6.) உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்.?
நான் என் பதிவுகள் பலவற்றிலும் ஆதங்கத்துடன் எழுதி வருகிற பிரச்சனை நிலவும் ஏற்ற தாழ்வுகளே. அதற்கென்று எனக்குத் தெரிந்த தீர்வுகளையும் எழுதி வந்திருக்கிறேன் முடிந்தால் நானே ஒரு அவதார புருஷனாகவந்து இவற்றைத் தீர்க்க வேண்டும் ஆனால் நான் படித்துள்ளவரை அவதார புருஷர்கள் யாரையாவது தீர்த்துக்கட்டத்தான் அவதாரம் செய்திருப்பதாகத் தெரிகிறதே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆண்டவன் என்றைக்கோ அவதாரம் எடுத்திருக்க வேண்டுமே. ஒரு hypothetical ஆன கேள்விக்கு ஒரு சர்ச்சைக்குரிய பதில்
7.) நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்.?
எனக்கு யாரிடமும் அட்வைஸ் கேட்க தயக்கமில்லை. என்னைவிட நன்றாகத் தீர்வு சொல்வார் என்னும் நம்பிக்கை இருந்தால்தான் அட்வைஸ் கேட்பேன்.
8.) உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?
என்னைப் பற்றிய தவறான தகவல் பரப்பப் படுவதாகக் கூறுபவரை முதலில் தவிர்க்க முயல்வேன் . எப்போதுமே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்னும்கொள்கை உடையவன் இருந்தாலும் ஒரு உண்மையும் சொல்ல வேண்டும் தகவல் தவறானதாக இருந்தால் மனசின் ஒரு ஓரத்தில் வருத்தம் இருக்கும் “ சீசரின் மனைவி......என்று ஏதோ எண்ணத்தோன்றுகிறது.
9.) உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்.?
கேள்வியே சரியில்லையோ.  இறந்தவரிடம் என்ன சொல்ல முடியும் ? நண்பரிடம் என்றால்... .வார்த்தைகளை விட பரிவும் புரிதலும் மேல் என்று நினைக்கிறேன்
10.) உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?
இந்த ஆண்டு ஜூன் 10-ம் நாள் ஒரு பதிவே எழுதி இருந்தேன்  என்ன செய்வீர்கள் என்பதை விட என்ன செய்தேன்  என்று எழுதி இருக்கிறேன் ப்தில் தெரிய இங்கே” சொடுக்கவும்
அப்பாடா ... ஒரு வழியாக எழுதி முடித்து விட்டேன். நான் யாரையும் தொடரக் கேட்கப் போவதில்லை.      





Tuesday, July 15, 2014

பழையன கழிதலும் புதியன புகுதலும்....


                              பழையன கழிதலும் புதியன புகுதலும்......
                             ----------------------------------------------------------


எனக்கு பழைய நிகழ்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள புகை படங்கள் பேருதவியாய் இருக்கும். எண்ண அலைகள் ABSTRACT-ஆகத் தோன்றும்போதுபுகைப்படங்கள் தெளிவாக்கும்  எனக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. என் பேரக் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது புகைப் படங்களை பத்து பனிரெண்டு வயதுவரை chronological ஆக எடுத்து வைத்திருக்கிறேன் அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது அவற்றை எடுத்த நேரங்கள் மனசில் விரியும் இதுவுமல்லாமல் என்னுடைய டேப் ரெகார்டரில் எனக்கு வேண்டியவர்களது குரலையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன் இம்மாதிரிக் குரல் பதிவுகள் ஏறத்தாழ முப்பது வருடத்தவையும் உண்டு. ஆனால் இப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் டேப் ரகார்டர்கள் காலாவதி ஆகிப் போகின்றன. என் டேப் ரெகார்டர் பழுதானபோது டாக்டர் கந்தசாமி ஐயா என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் குரலைப் பதிவு செய்யவோ ஏற்கனவே பதிவு செய்திருந்த குரல்களைப் போட்டுக் காண்பிக்கவோ முடியவில்லை. என் இருபது முப்பது வருடகுரல் பதிவுகளைக் கேட்க முடியாமல் போனதுமிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.

 இதற்கு மாற்றுவழி என்னிடம் இருக்கும் காசட் டேப்புகள் எல்லாவற்றையும் குறுந்தகடுகளாக்க வேண்டியதுதான் அந்தக் காலத்தில் முப்பது ரூபாய்க்கும் நாற்பது ரூபாய்க்கும் டேப்புகள் வாங்கி அவற்றில்குரல்களைப் பதிவு செய்து வைத்திருந்தேன் இப்போது குறுந்தகடுகளாக மாற்ற நிறையவே செலவாகலாம். நான் அந்தமாதிரி மாற்றி வைத்தாலும் அவை என் பிள்ளைகளுக்கோ அவர்களது பிள்ளைகளுக்கோ தேவை என்று உணரப்படுமா தெரியவில்லை. என் இந்த டேப்பில் பதிவான குரல்களை கணினியில் இணைக்க  டேப்பை ஓடவிட்டுக் கைபேசியில் அதைப் பதிவு செய்து கணினியில் இணைத்துப் பார்த்தால் திருப்திகரமாக இல்லை
.இதேபோல் நாங்கள் பல இடங்களுக்குச் சென்று வந்ததும் புகைபடமாக இருக்கிறது நான் இதையெல்லாம் குறிப்பிடுவதே நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஹம்பி க்கு சென்று வந்ததை எழுத முயன்றபோது படங்கள் இல்லாமல் பதிவு நிறைவைத் தராது என்று தோன்றியதே காரணம் நாங்கள் ஹம்பியில் எடுத்த புகைப் படங்களை மீண்டும் என் காமிராவில் எடுத்து அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து பதிவாக்கினேன்
தொழில் நுட்பங்கள் மிகவும் முன்னேறி வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்தில் என் போன்றோர் அன்று பெரிதாய் எண்ணி செயல் பட்டதும் காலாவதியாகப் போய் விடுகிறது. எண்ண அலைகள் மனசில் தோன்றலாம் அவற்றைப் பதிவாக்கி நான் சக பதிவர்களுடன் பகிரவும் செய்யலாம். ஆனால் குரல்கள். அந்தநாளையக் குரல்கள்....?அதில் இருப்பவர் குரல்களும் உண்டு  இருந்தவர் குரல்களும் உண்டு. என் பேரக்குழந்தைகள் மழலையில் பேசத்துவங்கியது முதல் பாடியது வரை டேப்புகளில் பதிவாகி இருக்கின்றன 
விஜயவாடாவில் இருந்தபோது நண்பர் ஒருவர் வந்து நிறையப் பாடல்கள் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.என்னைப் பார்க்க வந்திருந்த பதிவர்கள் பாடி இருப்பதும் பதிவு செய்திருக்கிறேன் டேப் ரெகார்டரைப் பழுது பார்க்கச் சொன்னால் அதெல்லாம் மிகவும் சிரமம் வேஸ்ட் என்கிறார்கள். இருந்தாலும் அதைப் பழுது பார்த்து வைத்திருக்கிறேன். அந்த மாதிரிய டேப் ரெகார்டர்கள் இப்போது யாரும் வைத்துக் கொளள விரும்புவதில்லை. வைத்துக் கொள்வதும் இல்லை. ஏதோ நான் இருக்கும்வரை கேட்டு மகிழவாவது அவை எனக்குத் தேவை
அதேபோல் என் மகன்களின் திருமண வைபவங்களை டேப்பில் பதிவாக்கி வைத்திருந்தேன் நாள்பட்டதில் fungus  வந்து கெட்டு விட்டன. இருப்பதை குறுந்தகடாக்க டேப் சரியில்லாததால் யாரும் முன் வரவில்லை. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பன் மிகவும் சிரமப் பட்டு அவற்றைக் குறுந் தகடுகளாக்கிக் கொடுத்தான் அவை அவ்வளவு தரமாயில்லை. இருந்தாலும் காட்சிகள் தெரிகின்றனவே என்று திருப்தி பெற்று கொள்கிறேன்
காமிராவில் படமெடுத்துப் பிரிண்ட் போட்டு சேமித்து வைத்திருக்கும் படங்கள் நிறைய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாளாவட்டத்தில் களை இழந்துபோய் விடுகின்றன. ஒரு முறை என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சுட்டிப் பையன்கள் இருவரை புகைப் படம் எடுத்தேன் மறு வினாடியே அவர்கள் ஓடிவந்து படத்தை காண்பிக்கச் சொன்னார்கள்.அவர்கள் இந்தக் கால டிஜிடல் காமிராக்களையே பார்த்து இருக்கின்றனர். ....!அவர்களுக்கு என் காமிரா புதிதாயிருந்திருக்க வேண்டும்....!
 


Saturday, July 12, 2014

ஹம்பி ...ஒரு விசிட்


                                            ஹம்பி ..... ஒரு விசிட்
                                            -------------------------------


முன்பெல்லாம் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது பல இடங்களுக்குப் போய் வருவதைத் தவற விட்டதில்லைஅப்போது என் மச்சினன் பெல்லாரியில் இருந்தான் நாங்கள் அவனிருப்பிடம் சென்றிருந்தோம் பெல்லாரியில் இருந்து காரிலேயே ஹம்பி சென்று வந்தோம். இன்னொரு சமயம் மந்த்ராலயா சென்று வந்தோம் இரண்டும் ஒரே நாளா என்னும் சந்தேகம் எழுந்தது. நினைவுகளை முழுவதும் நம்பமுடிவதில்லை. நாங்கள் 24-09-2005 அன்று ஹம்பி சென்று வந்தோம். 19-09-2005 அன்று மந்த்ராலயா சென்று வந்தோம். நினைவுகளை சரிசெய்ய நான் எடுத்திருந்த புகை படங்கள் உதவின இப்போது அதே புகைப்படங்களின் உதவியோடு மறுபடியும் ஹம்பி சென்றுவந்தேன் (மானசீகமாக.) அன்று எடுத்தபுகைப்படங்களை இன்று என் காமிராவில் மீண்டும் எடுத்து கணினியில் இணைத்தேன் புகைப் படங்கள் தரக் குறைவாய் இருப்பதுபோல் தோன்றினால் இதுவே காரணம். சரித்திரப் புகழ் பெற்ற இடங்களுக்குப் போனால் நானும் என்னை அந்தக் கால சூழ்நிலைக்குள் புகுத்திப் பார்ப்பேன் என் நினைவுகளை அதிகம் சோதிக்காமல் வாசகப் பதிவர்களையும் என்னுடன் ஹம்பிக்குக் கூட்டிச்செல்கிறேன் முழுவதையும் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டுமானால் ஒரு பொழுது போதாது கிடைத்த நேரத்தில் பார்த்த இடங்களை புகைப்பட வாயிலாகப் பார்க்கலாம். அப்போது என் மனைவி அவரது அக்கா ,என் மாமியார் என் மச்சினன் அவன் மனைவி இவர்களுடன் நானும் சென்றிருந்தோம். அங்கு ஒரு ம்யூசியம் இருந்ததாகவும் அதில் வரலாறுகளை ஒளி பரப்பிக் கொண்டிருந்ததாகவும் நினைவு. ஹரிஹரன் புக்கன் எனும் இரு சகோதரர்களால் ஸ்தாபிக்கப் பட்ட விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராக ஹம்பி இருந்ததாக வரலாறு.
விருபாக்ஷி கோவில் உள்ளே ஏதோ சிறப்பு செய்தி சொன்னார்கள். நினைவுக்கு வரவில்லை.கோவிலின் எதிரே ஒரு பெரிய அங்காடி இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாகவும் அறியப் படுகிறது. ஒரு பரந்து விரிந்து இருந்த சாம்ராஜ்யம் காலத்தின் கோலத்தால் சிதைவு அடைந்திருப்பது மனசை என்னவோ செய்கிறது. சரி. ஒரு புகைப்பட உலாவுக்குத் தயாராகுங்கள்.

ஹம்பி போகும் வழியில் ரகுநாத் கோவில்-- பின்னணியில்
போகும் வழியில் ஒரு குகைக் கோவில்  முன்பாக
குகைக்குள் பூசாரியுடன் . நிமிர்ந்து நிற்க முடியாது
ஹம்பியில் விட்டலா கோவில்
விட்டலா கோவில் மண்டபம் முன்னால்
விட்டலா கோவிலில் கல் ரதம் முன்னால்
விட்டலா கோவில் மண்டபத்தில் இருக்கும் கல் தூண்கள்-இசைக்க நாதம் வரும்
கல் தூணின் நாதம் -இசைத்துப் பார்க்க

விட்டலா கோவில் சிதைவுகள்.

மண்டபத்தில் இருந்து காணும் சிதைவுகள்-இடது ஓரத்தில் கல் ரதம்

ஹம்பி  புகழ் லக்ஷ்மி நரசிம்மர்
ஹம்பியில் புகழ் பெற்ற யானை கொட்டடி( லாயம்)
வாட்டர் டாங்க்
விருபாக்ஷி கோவில்
துங்கபத்திரா நதி  ஒரு காட்சி
தொல்பொருள் அகழ்வாராய்ச்சி
 
மண்டபம் முன்னால்

Wednesday, July 9, 2014

BABIES’S DAY OUT....


                                                     ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..!                                              --------------------
பிறந்த நாள் கேக்...!



கடந்து வந்த நாட்களை அசை போடுவது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுதான். சிறு வயதில்  ஓடியாடிய இடங்கள், இருந்து வளர்ந்த வீடு சென்று வந்த பள்ளிக்கூடம் எல்லாமே நினைவில் ஆடும். என் நினைவுகளை அவ்வப்போது வலையில் பகிர்ந்து வந்திருக்கிறேன் . என் மனைவிக்கும் அம்மாதிரி நினைவுகள் வருவதில் வியப்பேதுமில்லையே. நான் படித்த பள்ளி இருந்த இடம் இவற்றுக்கெல்லாம் அவளையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன். விருப்பம் இருந்ததோ இல்லையோ என் உடன் வந்திருக்கிறாள். என் உணர்வுகளை முதலில் அவளுடன்தான் பகிர்வது வழக்கம் ஆகவே அவளுக்கும் அவள் படித்த பள்ளிக்கும் அதைச் சுற்றிலும் இருக்கும் இடங்களைப் பார்க்கவும் விருப்பம் தெரிவித்தபோது நான் ரெடி என்றேன். ஆனால் நான் கூட வருவதில் அவளுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று தெரிந்தது. எனக்குப் பதில் அவளது மூத்த சகோதரியுடன் போகவே விரும்பினாள். மூத்த சகோதரிதான் என்றாலும் எதோ காரணத்த்தால் ஒன்றாகவே ஒரே வகுப்பில் படித்து ஏறத்தாழ நண்பிகளாகவே வளர்ந்திருந்தனர்.
ஜூலை இரண்டாம் நாள் அவளது சகோதரியின் பிறந்த நாள். ஜூலை மூன்றாம் நாள் என் மனைவியின் பிறந்த நாள். எனக்கு இந்த ஒரு நாள் வித்தியாசம் சற்றே வியப்பளிக்கிறது. பிறந்த நாள் என்று அவர்கள் சர்டிஃபிகேட்களில் உள்ளதுதானே செல்லுபடியாகும்.  இந்தமாதத்தில் ஜூலை இரண்டாம்நாள் அக்கா தங்கையைப் பார்க்க ஒரு திட்டத்தோடு வந்திருந்தாள். என்னைத் தவிர்த்துவிட்டு அவர்கள் கடந்த கால வாழ்க்கையை அசை போட விரும்பி வந்திருந்தாள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை குறைக்க நான் விரும்பவில்லை. இரண்டாம் தேதி அக்காள் வருகிறாள் என்றவுடன் தங்கைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள். முன்பே தன் ஆசையைத் தெரிவித்திருந்தால் நானே ஒரு கேக் செய்திருப்பேனே என்றேன். இருப்பது நாங்கள் இருவர். வருவது அக்காவும் அவரது மகளும் என்று தெரிந்தது.என் மனைவியே கடைக்குப் போய் ஒரு சிறிய கேக் வாங்கி வந்தாள். பின் என்ன. விளக்கேற்றி HAPPY  BIRTH DAY  பாட கேக் வெட்டப்பட்டது. சகோதரிகள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறந்த நாள் பரிசாக சென்ற முறை சிதம்பரம் சென்றிருந்தபோது வாங்கி இருந்த ஒரு கண்ணாடி மணியும் ( பூஜை மணி) ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் கொடுத்தாள். அப்போது எடுத்த புகைப் படத்தில் அவர்கள் மகிழ்ச்சி வெளிப்படுவது நன்றாகவே தெரிகிறது. இதுவரை நடந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அதன் பின் அவர்கள் சிறுவயதில் படித்த பள்ளிக்குச் சென்று வந்தது புகைப்படக் காட்சியாகவே. என்னென்ன நினைவுகள் பகிர்ந்து கொள்ளப் பட்டனவோ தெரியாது. நிச்சயமாக மகிழ்ச்சியானதாகத்தான் இருக்க வேண்டும் இந்த வயதிலும் குழந்தைகள்போல் மகிழ்ச்சியாக ஒரு நாள் அமைந்ததில் எனக்கும் சந்தோஷமே. 

சகோதரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
  
படித்த பள்ளியில்....?

பள்ளியின் பெயர் படத்தில் வரவில்லையே

அந்த நாள் மாணவியர் இன்றைய ஒரு மாணவியோடு...
ஸ்வீட் எடு .. கொண்டாடு..
பள்ளியின் வாசலில்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து  சாந்துவுடையவும்  நாமத்தினாலே
  
பள்ளி என்பது வாழ்க்கைப் படிக்கட்டு....!?

கொண்டாட்டம் புடவை இல்லாமலா...!

    .