வறுமைக் கோடும் புள்ளி விவரங்களும் .....
-----------------------------------------------------------
வறுமைக்
கோடு, வறுமைக் கோடு என்கிறார்களே அது என்ன கோடு.? எனக்குப் புரிபடாத சங்கதிகளில்
இதுவும் ஒன்று. அறிஞர்கள், வல்லுனர்கள் கணக்கியல் ( statistics) நிபுணர்கள் கூடி ( சில நாட்களுக்கு முன் படித்ததாக நினைவு) ஒரு
நாளைக்கு ஒருவனுக்கு வருமானம் ரூ 32/-( நகரத்தில்) அல்லது ரூ29/. கிராமத்தில்
கிடைக்குமானால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவன் என்று சொன்னார்கள். அதாவது
ஒருவன் நகரத்தில் ஒரு மாதத்துக்கு தலைக்கு ரூ960/-( per capita ) ஈட்ட முடிந்தால் வறுமைக் கோட்டுக்கு மேல்
இருப்பவன் ஆகிறான் .இந்த அடிப்படைக் கணக்கு எட்டுவதற்கு என்ன என்ன விஷயங்களை
எடுத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்
அல்லவா.. தவறு ஏதும் இருக்காது. ...! ஆனால் இந்த பாழாய்ப்போன மனசு எப்படி இந்த
இலக்கை நிர்ணயித்தார்கள் என்று தெரியாமல் தவித்தது.
இந்த
ரூ.32/- சரியில்லை என்றால் ஒரு சரியான கணக்கு வேண்டுமல்லவா.?என் வீட்டு சாமான்கள்
வாங்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றிருக்கிறாள். என் வீட்டு ஹோம் மினிஸ்டர். அவள்
உதவியை நாடினேன். எனக்கு பொருட்களின் தற்போதைய விற்கும் விலைகள் தெரியாது.
என் வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விலையே எனக்குத் தெரியாதபோது எப்படி இவ்வளவு
பணம் தேவை என்று கூறமுடியும்.?இந்த வறுமைக் கோடினை நிர்ணயிப்பவர்கள் எல்லாம்
தெரிந்தவர்கள் ஆயிற்றே...!
ஒரு குத்து மதிப்பாக இருவர் வாழும் ஒரு குடும்பத்துக்கு
இரண்டு வேளை உணவு உண்டு மொத்தத்தில் பசியில்லாமல் உயிர் வாழ எவ்வளவு ரூபாய்
தேவைப்படும் என்று என் மனைவியைக் கேட்டேன். அவள் உறுதியாக எதையும் சொல்ல முடியாது.
மார்க்கட் நிலவரம் நாளைக்கு நாள் மாறுபடுகிறது. எதையும் குறிப்பிட்டுக் கணக்கு
சொல்ல முடியாது என்றாள். ஆனால் விற்பன்னர்கள் எந்த வருடத்து விலைகளைக்
கணக்கெடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பன்னர்கள் அல்லவா... அவர்கள்சொல்வது
சரியாகத்தான் இருக்கும்....! இந்த மாதிரி எதையாவது சொல்லி நான் தப்பித்துக் கொள்ள
விரும்பவில்லை. நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கண்க்கு நான் போட்டு
பார்க்க விரும்பினேன். இரண்டு பேர் நாளைக்கு இரண்டு வேளை உண்ண என்னென்ன பொருட்கள்
தேவைப் படும். தென் இந்திய வழக்கப்படி சோறு வேண்டும். சுமார் 12 கிலோ அரிசி
இருந்தால் இரண்டு வேளை சமைத்து சாப்பிடப் போதுமானதாக இருக்கும் என்று
முடிவெடுத்தோம். எது போதும் எது போதாது என்று முடிவெடுக்க நீ யார் என்று என்னுள்
கேள்வி எழுந்தது. சும்மா ஒரு கணக்குக்குத் தானே என்று பதிலும் வந்தது. உணவு
எனும்போது அது சக்தியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் கார்போஹைட்ரேட் ப்ரொடீன்
என்று ஏதேதொ தேவைப்படுமே. பசிக்கு உணவு என்றிருப்பவன் இந்தக் கணக்கெல்லாம்
பார்க்கக் கூடாது. ஒரு குத்து மதிப்பாக இவையெல்லாம் தேவை என்று தோன்றியதைப்
பட்டியலிடுகிறேன் அரிசி தவிர மளிகை சாமான்கள் என்னென்ன தேவைப்படும். . என்னென்ன
தேவைப்படும் என்பதை விட என்னென்ன போதும் என்றுதான் பார்க்கவேண்டும் வறுமைக் கோட்டை
நிர்ணயிக்கும் பணியல்லவா....!
இந்த விளையாட்டுக்கு என் மனைவி வரமாட்டேன் என்கிறாள்.
இருந்தாலும் எழுதத் துவங்கி விட்டேன் ஒப்பேற்ற வேண்டாமா. பருப்புவகைகள் எல்லாம்
சேர்த்து மாதம் இரண்டு கிலோ என்றால் ரூ. 100/- ஆகுமா. பால் தினம் அரை லிட்டர்
என்றால் ரூ15/-சர்க்கரை எண்ணை வகையறாக்கள் ரூ.200/-காய்கறிகள் தினம் சுமார் ரூ15/-
உப்பு புளி மிளகாய் வகையறாக்கள் மாதம் சுமார் ரூ150/-
இவற்றை சேர்த்துக் கணக்குப் பார்ப்போமா.?
அரிசி.... .ரூ.35x12= ரூ420/-
பால்...... .ரூ15x30-=ரூ
450/-
மளிகை.............. ரூ100+ரூ200+150=ரூ450/-
காய்கறி.................ரூ15x30=
450/-
இந்தக் கணக்கு ஒரு குத்து மதிப்புத்தான் இதையெல்லாம்
கூட்டினால்ரூ1770/-
அட per capita income மாதம் ரூ960/- என்றால் இருவருக்கு
ரூ1920/- செலவைவிட வரவு அதிகம் போல் தெரிகிறதே.
இந்தக் கணக்கு வெறுமே வயிற்றுப் பாட்டுக்கு மட்டுமே. இருக்கும் இட வாடகை,
மின்சாரக் கட்டணம் அடுப்பு எரிக்க எரிபொருள் போக்குவரத்துக் கட்டணங்கள் இதெல்லாம்
கணக்கில் வரவில்லையே. இது தவிர குழந்தைகள் இருந்தால் அவர்களது படிப்புச் செலவு
.துணிமணிகள் மருத்துவச் செலவு இதற்கெல்லாம் எங்கே போக...? வாழ்க்கை என்பது இரு
வேளை உணவு மட்டுமா....? உணவைக்குச் செலவு செய்வதை விட மனிதன் மனிதனாகக் காட்டிக்கொள்ள அதிகம் செலவாகிறது.
ஆக விற்பன்னர்களும் என்னைப் போல் வயிற்றுப் பாட்டை மட்டுமே
கணக்கில் எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
இதை என் மனைவியிடம் காட்டியபோது வீட்டை நிர்வகிக்கும் பணியை
என்னிடமே தந்து விடுவதாக பயமுறுத்துகிறாள். என்னவோ சொல்வார்களே ...வேலியில் போகும்
ஓணானை......என்று அதுபோல் இருக்கிறது. எனக்குத் தெரியும் வாசகர்கள் பலரும்
என்னிடம் மல்லுக்கட்டத் தயாராய் இருப்பார்கள் என்று. என் இந்தப் பதிவின் மூலம்
நானும் இந்த statistical உத்தியோகத்துக்கு முயற்சி செய்யலாம்
என்று தோன்றுகிறது.