Saturday, September 29, 2012

சிந்தனைத் துளிகள்.


                                               சிந்தனைத் துளிகள்
                                               ---------------------------


அண்மையில் ஒரு பத்திரிக்கை  செய்தியில் பிரபல எழுத்தாளர் R.K. நாராயணனின் , அவரது மைசூர் இல்லம் அவரது நினைவாலயமாக மாற்றப் படுகிறது என்று படித்தேன்., கூடவே. ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்தில் எழுதியவர். சென்னைக்கு குடிபோனவர். பிரபல கன்னட எழுத்தாளரும் நாடகாசிரியருமான T.P.கைலாசத்துக்கு உரிய மரியாதை தரப் படவில்லை,என்பது போன்ற சர்ச்சைகளும். .தியாகராஜ பரமசிவம் கைலாசம் என்னும் திரு. T.P. கைலாசம் ஒரு பிரபல கன்னட எழுத்தாளர். பூர்வீகத்தில் தமிழர். கன்னட நாடக உலகில் பெயர் பெற்றவர். ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறார். அவரது சமகால நண்பரான திரு. பாலசுந்தரம் ஐயருடனான ஒரு நகைச்சுவை மோதல் ( WITTY  REPARTEE ) நினைவுக்கு வந்தது. ஒரு முறை திரு. பாலசுந்தரம் ஐயர் கைலாசத்தைக் காண வந்தபோது “ HOW  ARE YOU , TYPICAL  ASS.?” (டி.பி. கைலாஷ் என்பதைச் சுருக்கி ) என்று விசாரித்தாராம். மறுவினாடியே இவரும் சளைக்காமல் “ I AM GOOD BALLS  UNDER MAIR “ என்றாராம். . கீழே திரு .கைலாசம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கவிதை.
DRONA

THY flaunted virgin phalanx cleft a two

By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,

Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!













.



  திரு. T.P, கைலாசம். 
திரு. கைலாசம் அவர்களின் மேற்கண்ட ஆங்கிலக் கவிதையை என்னால் இயன்ற அளவு தமிழாக்கம் ( மொழிபெயர்ப்பு அல்ல.) செய்திருக்கிறென்.


பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.


யாராவது எப்பொழுதாவது ‘சும்மா; இருக்கிறார்களா.? சும்மா இருப்பது என்பதே இல்லை. ஏதும் செய்யாதபோதும் சிந்தனைகளின் ஓட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது. SCOUTS  பயிற்சியின் போது ஒரு விளையாட்டு
( அது விளையாட்டா. ?) நடக்கும். சுமார் இருபது முப்பது பேர் வரிசையாகவோ  வட்டமாகவோ , ஒருவர் பேசுவது மற்றவர் கேட்காத தூரத்தில் அமர்த்தப் படுவார்கள். முதலில் இருப்பவரிடம் ஒரு செய்தி சொல்லப் படும். அதை அவர் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். இப்படி சொல்லப் பட்ட செய்தி கடைசியாக கேட்பவரிடமிருந்து முதலில் ஆரம்பித்தவருக்கு வரும்போது செய்தி மாறி இருக்கும். செவி மூலம் பரவும் செய்திகளுக்குக் காதும் கண்ணும் சேர்க்கப் பட்டிருக்கும். இதை யோசிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. முன் காலத்தில் எழுதும் முறையும் அதைப் பாதுகாக்கும் முறையும் இல்லாதிருந்த காலத்தில் செவி வழியாகவே செய்திகள் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஏன், நம்முடைய வேதங்களும் இம்முறையில்தான் தலைமுறை தலைமுறையாக சொல்லப் பட்டு வந்திருக்க வேண்டும். அவை ஆதியில் சொல்லியபடியே நமக்குக் கிடைத்திருக்கிறதா.. அவற்றின் நம்பகத் தன்மை எவ்வளவு. இதனால் தானோ என்னவோ வடக்கில் கார்த்திகேயன் எனப் படும் முருகன், பிரம்மசாரி.... விநாயகருக்கு இரண்டு மனைவிகள். . தெற்கே நேர் எதிரான கதை. ..! சந்தேகங்கள் என்னும் என் முந்தைய பதிவொன்றில், சாஸ்திரம் என்கிறார்களே , அது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா, என்று கேட்டிருந்தேன்.மனு சாஸ்திரமும் அர்த்த சாஸ்திரமும் கேள்விப்பட்டது. படித்ததில்லை. அவையும் செவி வழிச் செய்திகள்தானா. ? இன்று நிலவும் பேதங்களுக்கு அந்த மனுநீதிதான் முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது.  

ஆனால் இப்போதெல்லாம் எந்த செய்தியானாலும் உம்.. என்பதற்குள் சொல்லியபடியே எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் போய்ச் சேரும். தவறான செய்திகள் போய்ச் சேருவதால் மக்கள் பயந்து கூட்டங் கூட்டமாக அடித்துப் பிடித்து வெளியேறுகிறார்கள்.

 வலையில் எழுதுவது பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுபவனின் எண்ணங்களைக் கடத்த எழுதும்போது, எண்ணங்கள் கடத்தப் படுகிறதோ இல்லையோ, எழுதுவது சரியென்று எண்ணாதவர் யாருமில்லை. மாற்றுக் கருத்துக்களை சொல்பவர் , முதலில் ஏதோ தவறு செய்வதுபோல்  எண்ண வேண்டுமா. “ நீங்கள் அப்படி நினைத்தால் நான் இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதில் என்ன தயக்கம். இருந்தால்தானே எந்தவிதமான எண்ணங்கள் நிலவுகின்றன என்பது தெரியும். புகழாரம் இல்லாவிட்டால் இகழாமல் கருத்து சொல்லப் பட வேண்டும் என்பது என் எண்ணம். நூறு பேர் படித்தால் மூன்றோ நான்கோபேர் கருத்திடுகிறார்கள். புகழ்ந்துதான் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம். செய்தியில் உடன்பாடு இல்லை என்றால் ஏதும் கூறாமல் இருப்பது உத்தமம் என்று நினைக்கிறார்கள் போலும். அப்படிப் பார்க்கும்போது எழுதுவதில் உடன்பாடு அடுத்தவருக்கு இல்லை என்றே கொள்ள வேண்டுமா. ?

சில விஷயங்கள் விவாதிக்கப் படும்போது கருத்துக்கள் வெளிப்பட்டால்தான் விவாதம் முற்றுப் பெறும். அதாவது எழுதுவது முகம்நோக்காத க்ரூப் ஸ்டடி. !பங்கேற்றல் அவசியம். 

                      சரணாகதி- ஒரு கதை.
                      -----------------------                        
உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ? பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும். ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை  தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் இதுதான். 

              பாட்டியும் முட்டைத் தலையும்
              ------------------------------- 


..பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.

படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.

சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “


“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?


“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “

“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....

அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?

“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!


(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .
     
          
  






Thursday, September 27, 2012

வாழ்ந்தே தீருவேன்..( 5 )


                                        வாழ்ந்தே தீருவேன்.( 5 )
                                        ---------------------------------
                           A PLAY FROM G.M.BALASUBRAMANIAM
                            --------------------------------------------------
                                             இறுதிப் பதிவு 
                                             -------------------


காட்சி :-9
இடம் :- ரங்கதுரை பங்களா.
பாத்திரங்கள் .:-ரங்கதுரை, ராஜு, மோஹன், மாலா
( திரை உயரும்போது,, ரங்கதுரை செயலிழந்த நிலையில் :மாலா குழந்தையுடன் தந்தை அருகே. மோஹன் உள்ளிருந்து, ரங்கதுரையின் டைரியைப் புரட்டிக் கொண்டே வருகிறான். மாலா திடுக்கிட்டுப் பார்க்கிறாள். )
டைரியில்( ரங்கதுரையின் குரலில்,) “ ராஜு எப்படி வளர்ந்து விட்டான். எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. யாருமற்ற அனாதையாக சுமார் 25 வருடங்களுக்கு முன் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டவன். இன்று என்னமாக வளர்ந்து விட்டான். இவன் என் மகனல்ல என்று இன்றைக்கும் என்னால் எண்ண முடியவில்லை.யே. இருந்தாலும் ராஜு மாலாவுக்குத் தகுந்த துணைதான். .......)

மோஹன்.:- ( தனக்குள் )என்னது...? ராஜு ரங்கதுரையின் மகனல்லவா......? அப்படியானால்.........அப்படியானால்........ இப்படியும் இருக்குமோ.....?ராஜு மாலாவுக்குத் தகுந்த துணைதான்.... அப்படியானால்...இவர்களது உறவு முறை........ஐயோ.... ஒரே குழப்பமாக இருக்கிறதே.... ( ரங்கதுரையை உற்று நோக்குகிறான். அவர் பரிதாபமாகப் பார்த்து முழிக்கிறார். ..மாலாவைப் பார்க்கிறான்.... குழந்தையைப் பார்க்கிறான். அவனுள் சந்தேகத் தீ வளர்கிறது.)அப்படியும் இருக்குமோ. .. இதற்கெல்லாம் காரணம் ராஜுதானே...! நான் வந்தது முதலே அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவனிடத்தை நான் பிடித்துக் கொள்கிறேன் என்பதாலா. ? அப்படியானால் இந்தக் குழந்தை....? மணமாகி ஒருவருடம் முன்பே பிறந்த இக்குழந்தை....?( திடீரென்று சத்தமாக டைரியைக் காட்டிக்கொண்டே) மாமா........! இதெல்லாம் என்ன...? எனக்கு ஏன் எதையும் முன்பே சொல்லவில்லை...?என்னை ஏன் இப்படி ஏமாற்றினீர்கள். ?( அவரைப் பிடித்து உலுக்குகிறான்.)

மாலா.:- அத்தான்....!இது என்ன இப்படி...?அவருடைய நிலை தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கிறீர்கள்..?

மோஹன்.:- மாலா....! எவ்வளவு நாளாக இந்த நாடகம்.. ஏன் என்னிடம் எல்லாவற்றையும் மறைத்தீர்கள்...?

மாலா.:- நாடகமா.... என்ன உளறுகிறீர்கள்..?எதை உங்களுக்குத் தெரியாமல் மறைத்தோம்.

மோஹன்.:- இது என்ன....?

மாலா.:- அப்பாவின் டைரி..! அதை நீங்கள் படித்ததே தவறு....!

மோஹன்.:- தவறுதான்... தவறுதான்....படிக்காமல் இருந்தால் நன்றாக ஏமாந்த சோணகிரியாக இருந்திருப்பேன். அல்லவா....?உங்களுக்கும் உங்கள் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி இருக்கலாம் அல்லவா...?

மாலா.:- கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்.....

மோஹன்.:- புரியும்படியாவேக் கேக்கறேண்டீ...இந்த ராஜு யார்.....?

மாலா.:- என் அண்ணன்...

மோஹன்.:- கூடப் பிறந்தவன் அல்லவா.......?

மாலா.:-...............

மோஹன்.:- என்னடீ... வாயடைத்துப் போய் விட்டது...கேட்டது காதில் விழலை...?இவன் யார்.....உன் கூடப் பிறந்தவனா.... இல்லை...உன்னுடைய........

மாலா.:- அத்தான்.....! ச்சீ.. வாயைக் கழுவுங்கள்.. என்ன வார்த்தை பேசுகிறீர்கள்... ராஜு அண்ணன் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?இதைக் கேட்கும் அப்பாவின் உள்ளத்தில் ஏற்படும் கொந்தளிப்பை உங்களால் உணரமுடிய வில்லையா...? பேசும் சக்தி இழந்து கை கால் வராமல் கஷ்டப்படும் இந்த நல்லவரின் உள்ளம் எரிமலையாகக் குமுறுவதை உங்களால் உணர முடியவில்லையா...?

மோஹன்.:- டயலாக் பேசாதே....!கேட்ட கேள்விக்குப் பதில் சொல்...இந்தப் பரதேசிப் பயல் ராஜு யார்...?

மாலா.:-அதுதான் சொன்னேனே என் அண்ணன் என்று...

மோஹன்.:-அது வெளி உலகத்துக்கான உறவு. ! உனக்கும் அவனுக்கும் உள்ள 
உண்மையான உறவென்ன...?

ராஜு.:( வந்துகொண்டே ) நான் சொல்றேன் மோஹன்..இவள் என் கூடப் பிறக்காத தங்கச்சி....!

மோஹன்.:- வா... ராஜு..வா... நல்ல நேரத்தில தான் வந்திருக்கே. உனக்குமிவளுக்கும் உள்ள உண்மையான உறவை ஏன் சொல்லவில்லை...? மூடிவைக்கக் காரணம் என்ன...?

ராஜு.:- அண்ணன் தங்கை உறவை சொல்லித்தான் தெரியப் படுத்தணுமா...?

ராஜு.:( வந்துகொண்டே ) நான் சொல்றேன் மோஹன்..இவள் என் கூடப் பிறக்காத தங்கச்சி....!

மோஹன்.:- வா... ராஜு..வா... நல்ல நேரத்தில தான் வந்திருக்கே. உனக்குமிவளுக்கும் உள்ள உண்மையான உறவை ஏன் சொல்லவில்லை...? மூடிவைக்கக் காரணம் என்ன...?

ராஜு.:- அண்ணன் தங்கை உறவை சொல்லித்தான் தெரியப் படுத்தணுமா...?

மோஹன்.:-அண்ணன் தங்கை உறவென்றால்  உண்மையைத் தெரியப் படுத்தி இருக்கலாமே..! நான் சொல்றேன், நீயும் இவளும் அண்ணன் தங்கை அல்ல. அந்த உறவின் போர்வையில் நடமாடிய கள்ளக் காதலர்கள். 

ராஜு.:- YOU    YOU    . YOU   BLOODY  FOOL...! SHUT UP. ....!இந்த மாதிரி இன்னொருமுறை நீ சொன்னால்  நடக்கிற கதையே வேறாக இருக்கும். 

மாலா.:- அத்தான்..... ! எப்படி அத்தான்  உங்களால் இப்படி எண்ணவும் பேசவும் முடிகிறது. ? ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்ட பிறகு நடந்ததல்லவா நம் திருமணம்..?என்னைப் பாருங்கள்..... நம் குழந்தையின் முகத்தைப் பாருங்கள்....

மோஹன்.:- ச்சே...!சனியன்.... ! நம்ம குழந்தைன்னு இன்னொரு முறை சொல்லாதே. கலியாணம் ஆவதற்கு முன்னேயே கெட்டுப்போன உன்னை எனக்கு மணமுடிச்சு, என்னை நல்லா ஏமாத்திட்டாங்க.....யாருக்குப் பிறந்ததோ இந்தப் பாவ மூட்டை....?

மாலா.:-  அத்தான்.......!  இது என்ன அபாண்டம்... .. ஐயோ.... தெய்வமே.... இது என்ன சோதனை... எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது...? உங்களுக்கே தெரியாதா...மணமாகுமுன்பே நமக்கிருந்த உறவு...?

மோஹன்.:- மாலா..... யோசிக்க  யோசிக்க என்னால் இந்த முடிவுக்குத்தான் வர முடியுது. . இது எனக்குப் பிறந்ததல்ல.... ஏன்... இவனுக்கே பிறந்திருக்கலாம். ...!

ராஜு.:- ( அவன் தோளைப் பிடித்து உலுக்கி ) வாயை மூடுடா.... இடியட்... ...! கள்ளமில்லா உள்ளத்தோடு பழகிய எங்களை, இப்படி முறை கேடாப் பேச உனக்கு எப்படிடா முடிகிறது...? எனக்கு வர வர என்னையே அடக்க முடியாத வெறி வருகிறது. .. போ.... இங்கிருந்து  போய் விடு...!

மோஹன்.:- போக வேண்டியது நானா நீயா  என்று இப்போது தெரிந்துவிடும்...

மாலா.:-  அத்தான் நான் உங்கள் மனைவி.. என் மீது இப்படி அபாண்டமா பழி சுமத்தலாமா...? உங்களுக்கே இது நியாயமா......?

மோஹன்.: -நிறுத்துடீ... உன் நீலிக் கண்ணீரை.... ...பச்சையாகவே சொல்கிறேன்.... நீ ஒரு  விபச்சாரி.... இவன் ஒரு திருட்டு ராஸ்கல்..உன் கள்ளக் காதலன்... 

ராஜு.:- மோஹன் என் பொறுமை  எல்லை மீறிவிட்டது... அபாண்டமாகப் பேசி தூய அன்புக்குக் களங்கம் விளைவிக்கும்  உன்னை மாதிரிக்  காளான்கள் அழிக்கப்படணும்.... நீ...போ.... !    ஒழிந்து போ.....! தொலைந்து   போ.....!  ( ஆத்திரத்தில்  மேசையிலிருந்து  கைத் துப்பாக்கியை எடுத்து,  மோஹனை சுட்டு வீழ்த்துகிறான்.... )

மாலா.:- அத்தான்..... அத்தான்... ( விழுந்து அழுகிறாள். ராஜு தள்ளாடித் தள்ளாடிப் போகிறான்,  தூரத்தில் தொழிலாளிகளின் கோஷம்... “ மானேஜர்  மோஹன்....ஒழிக,,,!. மானேஜர் மோஹன் ஒழிக”.....)                                
                                                                                  ( திரை. ) 


காட்சி--10
இடம்.- ரங்கதுரையின் பங்களா.. 
பாத்திரங்கள்.- ரங்கதுரை, மாலா, சேகர், தொழிலாளிகள்

( திரை உயரும்போது  மாலா அழுது கொண்டிருக்கிறாள்)


சேகர்.:- அழாதீர்கள் அம்மா... நடக்கக் கூடாதது நடந்து விட்டது. உங்களுடைய இழப்பு ஈடு கட்ட முடியாததுதான்.தனித்து இயங்க முடியாத தந்தை. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை... செய்த கொலைக்காகக் காவலில் இருக்கும் அண்ணன்....ஹூம்...! ஆறுதல் சொல்லித் தேற்றக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை... பாவம் ஓரிடம்.... பழி ஓரிடம் என்றாகி விட்டது...

இந்த நிலையில் உங்களுக்கு நாங்கள் கூறுவதெல்லாம்... உங்கள் குழந்தைக்காக நீங்கள் வாழவேண்டும்.உங்கள் மகன் வளர்ந்து பெரியவனாகும்வரை, -- ராஜு சிறையில் இருந்து திரும்பும் வரை, இந்தத் தொழிற்சாலையைக் கட்டிக் காக்க,-- உங்களுக்கு நாங்கள் முழு மனதுடன் ஒத்துழைப்போம். இது உறுதி... முதலாளி ... நாங்கள் வரோம்.

மாலா.:-என் ஒருத்தியின் காரணமாக இந்தத் தொழிற்சாலை நிற்கக் கூடாது.ஆயிரம் தொழிலாளிகளின் வாழ்க்கை நசிக்கக் கூடாது.. நான் வாழ வேண்டும்...அவர்களுக்காகவாவது நான் வாழத்தான் வேண்டும். ஆம்...! நான் வாழ்வேன்.... வாழ்ந்தே தீருவேன்..!

                                                                    ( திரை )

                                                       நிறைவு பெறுகிறது.








Tuesday, September 25, 2012

புலன்கள்.....


                                                    புலன்கள்.
                                                    -------------


பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம்  என்று கூறுவார்கள். (நிலம், நீர்,நெருப்பு, காற்று ,ஆகாயம் )இதேபோல் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம் என்பார்கள். இந்தப் பூவுலகில் இன்ப துன்பங்களை துய்க்க ஐம்புலன்களின் பணி மகத்தானது. இந்தப் புலன்களின் செயலில் குறைகள் இருந்தால், வாழ்வு நிறைவாவதில்லை. சிலருக்கு சில புலன்களின் பயனே கிடைக்காமல் போகும். பார்வையற்ற , காது கேட்காத, வாய்பேசாத, பலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியுமென்பார்கள். சிலருக்கு இந்தப் புலன்கள் இருந்தும் , குறைவான செயல்திறம் கொண்டிருப்பார்கள். சிலருக்கு வயதாக வயதாக, இப்புலன்களின் செயல் திறமை குறைந்து கொண்டு வரும். இருந்தாலும் மருத்துவத் துறை முன்னேறி இருப்பதால் இப்புலன்களின் செயல் திறனை மேம்படுத்த முடிகிறது. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

வை. கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஒரு பதிவில் , பல்லைப் பிடுங்கி புதுப் பல் கட்டும் , அதன் சாதக பாதகங்களோடு நகைச்சுவையாக எழுதி இருந்தார். அத்தனையையும் அனுபவித்தவர்களுக்குப் புரியும் ஒரிஜினலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசம். இதேவரிசையில் காது மந்தமாகும் போது ஒரு செவிட்டு மெஷின் பொருத்தப் படுகிறது. ஆனால் என் போன்றோரால் காதில் எதையாவது வைத்துக் கொள்வது என்பது சிரமமாக இருக்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித்தான் சதா சர்வ காலமும் இந்த ஒலி பெருக்கி சாதனத்தைக் காதில் வைத்துக் கொண்டு இந்த உலகையே மறக்கிறார்களோ தெரியவில்லை. பிறர் பேசும்போது சரியாகக் காதில் விழாமல் 
மலங்க மலங்க விழிப்பது எவ்வளவு பரிதாபமானது என்பது நமக்குத் தெரிவதில்லை. அனுபவித்தால்தான் தெரியும். சற்றே உரக்கப் பேசினால் காதில் விழும். ஆனால் சிலர் அவர்களுக்குள்ளாகவே முணுமுணுப்பது போலிருக்கும். ஒருவர் பேசுவது காதில் விழாவிட்டால் அவர் முகம் நோக்கி சரியாகக் கேட்கவில்லை என்றால் அவர்கள் காதருகே வந்து சத்தமாகப் பேசுவது கேட்பவருக்கு அவமானமாக இருக்கும் என்பது தெரிவதில்லை. 1991-ம்  ஆண்டு எனக்கு காது கேட்பது சிரமமாக இருந்ததால் ENT ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை அணுகினேன். அவர் இது STAPIDECTAMI  என்றும் அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்கும் என்றும் கூறினார். எனக்கோ பயம் . இருக்கும் கேட்கும் சக்தியும் போய்விட்டால்... ஆகவே அவரிடம் சிகிச்சை வெற்றியடைய வாய்ப்பின் விழுக்காடு என்ன என்று கேட்டேன். , அவர் 90-லிருந்து 95 சதம் வெற்றிவாய்ப்பு உண்டு என்றார். எனக்கு அந்த ஐந்து பத்து சதமே பயம் கொடுத்தது. வேறு ஒரு பிரபல மருத்துவரிடம் சென்றேன். அவரும் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார். அவரிடம் வெற்றி வாய்ப்புபற்றிக் கேட்டேன். அவர், சிகிச்சை முடிந்தபிறகு உங்களுக்குக் கேட்கும் என்றார். சதவீதத்தில் பதில் சொல்ல வில்லை. அவ்வளவு கான்ஃபிடெண்ட். நான் அவரிடம் சிகிச்சை பெற்று பலன் அனுபவித்தேன். கேட்டே இராத சப்தங்கள் கேட்கத் துவங்கின. இருபது வருடங்கள் ஆயிற்று. இப்போது கேட்கும் திறன் குறைவது உணர்கிறேன்.

சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடால் கண்ணாடி அணிந்து வந்தேன். இப்போது தூரத்தில் தெரிபவை மங்கலாகத் தெரிவதால் மருத்துவ செக் அப் செய்தேன். CATARACT. அறுவை சிகிச்சை வேண்டுமென்றார்கள். முதலில் ஒரு கண் என்றும் இரண்டு மாதங்கள் கழிந்து மற்ற கண்  என்றும் ஆலோசனை கூறினார்கள். ஒரு கண் ஆப்பரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. இப்போது நன்றாகத் தெரிகிறது. ஆனால் இன்னொரு கண்ணின் குறை பாட்டால் பக்கத்தில் இருப்பது படிக்க எழுத சிரமமாய் இருக்கிறது. எல்லாம் இரண்டு மாதங்களில் சரியாககி விடும் என்று நம்புகிறேன். கண் ரிபேர், காது ரிபேர் , வாய் ( பல் ) ரிபேர். இருந்தால் என்ன வாழ்க்கையை துய்க்க முடிகிறதே. எல்லாப் புலன்களும் சிறப்பாய் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். சில புலன்கள் உபயோகமில்லாமல் இருப்பவரிடம் கனிவாய் இருப்போம்.   




Sunday, September 23, 2012

வாழ்ந்தே தீருவேன்-( 4-)


                                               வாழ்ந்தே தீருவேன் -(-4--)

                                  A PLAY FROM G.M..BALASUBRAMANIAM


காட்சி7
இடம்.- மோஹன் ஆஃபீஸ் ரூம்.
பாத்திரங்கள்.- மோஹன், சேகர், ஆஃபீஸ் பையன், தொழிலாளிகள்

ஆஃபீஸ் பையன்.- சார், யூனியன் பிரெசிடெண்ட் சேகர் நீங்க கூப்பிட்டதாச் சொல்லி வந்திருக்காங்க.

மோஹன்:- வரச் சொல். ( சேகரும் மற்றவரும் வருகின்றன்ர்.)

சேகர்:- குட் மார்னிங் சார். கூப்பிட்டீங்களாமே

மோஹன்.:- யெஸ்.! உன்னை மட்டும்தான் வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் போகலாம்.

சேகர் :- மன்னிக்கணும் சார்..!தொழிலாளிகளைப் பற்றி தொழிற்சங்கத் தலைவர் மட்டும் பேசறதுக்கு எங்க சங்க ஆணைகள் இடங் கொடுக்காது. சங்கப் பிரதிநிதிகளும் இருப்பாங்க.

மோஹன் :- பட்... ஐ ஆம் நாட் இண்டெரெஸ்டெட்டு ஹாவ் எ க்ரௌட் இன் மை ஆஃபீஸ்..!

சேகர். :- அப்போ வேற எங்காவது பேசலாமே சார்.

மோஹன்:_ ஆர் யூ ஜோக்கிங்.! நீ யார்னு உணர்ந்தும் , யார்கிட்ட பேசறேன்னு தெரிஞ்சும் பேசு...

சேகர் : நான் யார்ன்னு எனக்கு விளங்குது. யாரிட்டப் பேசறேங்கறதும் புரியுது..தயவு செய்து நீங்கள் கூப்பிட்டதன் காரணத்தை தெரியப் படுத்துங்க .

மோஹன் :- சேகர் உன்னைக் கூப்பிட்டது உன்னை எச்சரிக்கத்தான்.நீ உன்னோட வேலைல போதிய கவனம் காட்டாம, வேலை நேரங்களில் சங்க காரியங்களுக்காக அலைகிறாய்ன்னு தகவல் வந்திருக்கு. இது அமலில் உள்ள ஸ்டாண்டிங்  ஆர்டர்ஸ்படி குற்றமாகும். இதுவே உனக்குக் கடைசி எச்சரிக்கை. நிலைமை இப்படியே தொடர்ந்து போனா உனக்கு நல்லதல்ல.

தொழிலாளி 1 :- நீங்க வீணா பயமுறுத்தறீங்க சார். தொழிலாளிகளை மிரட்டிப் பணிய வைக்கலாம்னு  மட்டும் நினைக்காதீங்க. பாட்டாளிகள் நாங்க பொங்கினா, எங்கள் உள்ளம் குமுறி எரிமலை வெடிச்சா, அதன் விளைவு, இந்தத் தொழிற்சாலைக்கு நல்லதில்லைன்னு நாங்க நினைக்கிறோம்.

மோஹன் :- ஷட் அப்..! குற்றம் சாட்டப் பட்டிருப்பது சேகர். பதில் சொல்ல வேண்டியது அவன். நீ குறுக்கே பேசாதே ஜாக்கிரதை...!

தொழி..2 :-தொழிலாளர்களைப் பிரிச்சுப்பேசி நீங்க மிரட்ட முயல்றது இந்த தொழிற்சாலை காணாத வரலாறு.

சேகர் :- உற்பத்தி பெருக , அதனால் அதிக லாபம் கிடைக்க இதுகாறும் எங்க ஒத்துழைப்பைக் கொடுத்து வந்திருக்கோம். இனியும் அந்த நிலை நீடிக்கவே விரும்பறோம். தொழிற்சாலை நல்ல முறையில் நடந்தாத்தானே எங்களுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது , இந்த நாட்டுக்கும் நல்லது. உற்பத்தியைப் பெருக்க வேண்டிய தொழிலாளிகளிடம் தயவு செய்து பகைமை உணர்ச்சியை உண்டாக்காதீங்க. வேறுபாடுகள் இருந்தா சமரசமாப் பேசித் தீர்ப்போம். முதலாளியால் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கத்தின் தலைவன் நான், பிரதிநிதிகள் இவர்கள் சுமூக வழியையே விரும்புகிறோம்.

மோஹன் :- ஹா... ஆஆஅ. ! அங்கீகரிக்கப்பட்ட யூனியன்... !முதலாளி அங்கீகரித்திருக்கலாம்... அது அப்போது. இப்போது நான் அங்கீகரிக்கவில்லை., உங்கள் யூனியனை. நாந்தான் முதலாளி இப்போது. . நான் கொடுக்கும் ஊதியத்தில் வயிற்றைக் கழுவும் நீங்களெனக்கே அறிவுரை கூறுகிறீர்களா ..! பேஷ்...பேஷ் ! அன்றைக்கே சொன்னேன். உங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென்று. அவர் கேட்கவில்லை.. அதனாலென்ன.. இப்பொழுது ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடவில்லை. . உங்களை நான் அங்கீகரிக்கவில்லை... புரிகிறதா..?அங்கீகாரமாம்... யூனியனாம்... தலைவனாம்... கேட்டுக்கேட்டுப் புளித்துப் போய்விட்டது... நீங்கள் போகலாம். 

சேகர் :- மன்னிக்க வேண்டும் சார். .ஒரே ஒரு விளக்கம். “ நான் கொடுக்கும் ஊதியத்தில் வயிற்றைக் கழுவும் நீங்கள் “என்று சொன்னது சரியில்லை. அது எங்களை அவமானப் படுத்துவதுபோல் இருக்கிறது. அவசரப் பட்டு நீங்கள் தெரியாமல் வாய் தவறி சொல்லியிருந்தால் தெரியப் படுத்துங்கள் . நாங்கள் பெரிதுபடுத்தாமல் போய் விடுகிறோம்.

மோஹன் :- தெரியாமல் வாய் தவறிச் சொல்லியிருந்தால்......ஹ ஹ ஹ ஹ்ஹ்ஹஹா. ! நன்றாக இருக்கிறது தமாஷ்.!சேகர், நன்றாக உணர்ந்து , தெரிந்து ஆணித்தரமாகச் சொல்லுகிறேன். நான் கொடுத்து நீ பெறுபவன், அதனால் உன் வயிற்றைக் கழுவுபவன்.

தொழி. 1 :-முதலில் உங்கள் வாயைக் கழுவுங்கள்.

தொழி .2:- நான் கொடுத்து நீ பெறுபவன் என்று சொன்னதை வாபஸ் வாங்கு..!

சேகர் :- மானேஜர், தொழிலாளர்களின் மென்மையான உணர்ச்சிகளை சுடு சொற்களினால் புண் படுத்தாதீர்கள் செய்வது தவறு என்று உணர்ந்து அந்தத் தவறைத் திருத்திக்கிறதால ஒருவன் என்றைக்கும் மதிப்பில் குறைவதில்லை. தயவு செய்து நீங்க சொன்னத வாபஸ் வாங்கிடுங்க.

மோஹன் :- என்ன... மிரட்டறீங்களா...?மறுபடியும் மறுபடியும் சொல்றேன். கொடுப்பவன் நான்.. பெறுபவன் நீ... நான் கொடுத்து நீ பெறுபவன்.

சேகர் :- யார் கொடுத்து யார் பெறுகிறார்கள் என்று நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் மானேஜர் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். எங்கள் உடலின் ரத்தம் , வியர்வையாக மாறி , ஆறாகப் பெருகி ஓடும்வரை உழைக்கிறோமே, அந்த உழைப்புக்கு ஊதியம் பெறுகிறோம். அது நாங்கள் உழைத்துப் பெறுவது. நீ கொடுத்துப் பெறுவ்தல்ல. பாட்டாளிகளின் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காமல் மாட மாளிகைகளிலும் , கூட கோபுரங்களிலும் வாழும் உல்லாச வாழ்க்கை நாங்கள் கொடுத்து நீங்கள் பெறுவது. எங்கள் உழைப்பு என்னும் நீர் பாய்ச்சப்பட்டு, தழைத்து வளர்ந்திருக்கிறது உங்கள் வாழ்க்கை. அது நாங்கள் கொடுத்து நீங்கள் பெறுவது.

மோஹன் :- போதும் நிறுத்து. .. பணம் எங்களிடம் பதவியும் எங்களிடம் நாங்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும்.


சேகர் :_ ஒரு காலத்தில்  நாட்டை அரசன் ஆண்டான். பின் அந்தணன் ஆண்டான், பின் பெருந்தனக் காரன் ஆண்டான், ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் நான்கு சாதியினரில் மூவரின் காலம் சிறந்திருக்கிறது இதுவரை. இப்போது, இது , எங்கள் காலம், ஏழைத் தொழிலாளிகளின் காலம். நிறம் மாறும் பச்சோந்திப் பண மூட்டைகளுக்கு சாவு மணி அடிக்கும் எங்கள் காலம்..பாட்டாளிப் பெரு மக்களின் பொற்காலம். மாறிவரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் கொடுப்பவன் நான் என்று மமதையால் கொக்கரிக்காதே. ! ONE HAS TO GIVE FIRST TO TAKE. !

மோஹன் :- அன்னக் காவடிகளாக வேலை தேடி  காலைப் பிடிக்க வருவது. .ஐயோ பாவம்னு இரக்கப் பட்டு வேலை கொடுத்து ஊதியமும் கொடுக்கும்போது கழுத்தை பிடிப்பது. இதுதானே உங்கள் தொழிலாள வர்க்கத்தின் தன்மை. எதை எதை, எப்படி எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியும். வழியை விடுங்கள் நான் போக வேண்டும்.

தொழி .! :- அதிகார வெறியில் அள்ளிக் கொட்டிய வார்த்தையை வாபஸ் பெறா விட்டால் உங்களை நாங்கள் போக விட மாட்டோம்.

மோஹன் :- YOU ARE TRYING TO THREATEN  ME YOU FOOL.! ( அடிக்கிறான்.)

சேகர் :- மானேஜர்... உன்னைத் திருப்பி அடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும். ..?ஆனால் அந்த இழி நிலைக்கு நாங்கள் போனால் எங்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். .! நண்பர்களே ... அமைதியாய் இருங்கள். முதலாளி நல்லவர்... அவரிடம் நியாயம் கேட்போம்.
 .
                                                                           ( திரை )



காட்சி _ 8

இடம் :- ரங்கதுரை பங்களா.
பாத்திரங்கள்._ரங்கதுரை, ராஜு, மோஹன், சேகர். தொழிலாளிகள், மாலா ( குழந்தையுடன் )
( திரை உயரும்போது மோஹன் ஆத்திரத்துடன் உலாவுகிறான். )
ரங்க :- இப்போது என்ன குடி முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப் படுகிறீர்கள் மாப்பிள்ளை. ....

மோஹன்.:- இனியும் குடி முழுக என்ன இருக்கிறது. நான் அன்றைக்கே சொன்னேன். தொழிலாளிகள் என்றால் அவர்களுக்குக் கூடவே குறைகளும் இருக்கும் கோரிக்கைகளும் இருக்கும், இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கக் கூடாதென்று. .கேட்டீர்களா..?இப்போது நமக்கே அறிவுரை வழங்கு கிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள்.

ராஜு.: - அறிவுரை யார் வழங்கினால் என்ன....ஏற்றதாக இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை... மோஹன்.

மோஹன்.:- உனக்கு ஒன்றும் தெரியாது ராஜு. நீயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை அவமானப் படுத்தப் பார்க்கிறாய்.

ராஜு.:- காமாலைக்காரன் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தெரியுமாம். உனக்கு யாரிடமும் நம்பிக்கை இல்லை. எல்லோரையும் சந்தேகிக்கிறாய். யார் என்ன செய்ய முடியும்..? அது உன் குணம்....

மோஹன் :- என் குணத்தைப் பற்றி உன்னிடம் விளக்கம் கேட்க வரலை.

ரங்க :- அடடடடா.. ! சற்று நேரம் கூட ஒத்துப் போக மாட்டேங்கறீங்களே. உஷ்... ! அது என்ன சத்தம் ..?( தொழிலாளிகளின் கோஷம்... தலைவர் சேகர்--- வாழ்க..! மானேஜர்  மோஹன் ஒழிக.!).

மோஹன். :_அன்னக்காவடிகளின் ஊர்வலம். இங்கேயும் வந்துட்டாங்க..! மாமாஅ... அவர்களை இங்கு வந்து பேச விடாதீர்கள்.

ராஜு.:- நன்றாக இருக்கிறது. நீ சொல்வது. நம் தொழிலாளர்களிப்படி ஆர்பரித்து ஊர்வலம் வருவது இதுவரை நாங்கள் காணாத ஒன்று. இதை இப்படியே விட்டால், அவர்கள் குறைகளை கவனிக்காது விட்டால், நாளை தொழிற்சாலை படுத்துவிடும். அவர்க்ளை நானே எதிர் கொண்டழைக்கிறேன்.வா.. சேகர்... வாருங்கள் வாருங்கள்... என்ன இது ..? என்றைக்குமில்லாதபடி இந்த ஆர்பாட்டமெல்லாம். .....?

சேகர்..:- வணக்கம் சார். எந்தக் காரியம் நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடக்கிறது. தொழிலாளர்களை தன்மானமுள்ள மனிதர்களாகப் பாவிக்கவேண்டும்.நாங்கள் தொழிலாளிகள்தான்..... ஆனால் அடிமைகள் அல்ல. ஏழிகள்தான். ...ஆனால் ஏமாறுபவர்கள் அல்ல. இவ்வளவு நாள் உங்களுக்காக, உங்கள் நல்ல குணத்துக்காகப் பொறுத்திருந்தோம். இனி அது நடக்காது.

ரங்க.:- அமைதியாப் பேசப்பா. ஆத்திரப்படாதே... ஆத்திரம் கண்களை மறைக்கும். அறிவை மயக்கும்.

தொழி. 1 :-தொழிலாளர்களை அவமதிச்சதுக்குமானேஜர் எங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். மானேஜர் மோஹன்  ஒழிக. ...!

மோஹன்.:- நான்சென்ஸ்....மன்னிப்பாவது, நானாவது , இவர்களிடமாவது , கேட்பதாவது.... !ச்சே..! இம்பாசிபிள். ஒருக்காலும் முடியாது... !

ராஜு.:- சேகர் என்ன நடந்ததுன்னு விவரமாகச் சொல்லேன்.

சேகர்.:-தொழிலாளர் யூனியன் நடவடிக்கைகள் இருக்கக் கூடாதாம். தனிப்பட்ட முறையில் எங்களைக் கூப்பிட்டு மிரட்டுகிறார். நியாயம் கேட்கப் போனால் நாயினும் கீழாக நடத்துகிறார். கை நீட்டி எங்களில் ஒருவரை அடித்தும்விட்டார். இதையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா...?நாங்கள் என்ன  மனிதர்களில்லையா.... எங்களுக்கும் மானம் ரோஷம் எதுவுமில்லையா....?

மோஹன்.:- மானம் ரோஷம் ஏதாவது இருந்தால் வேலையை ராஜினாமா செய்திட்டுப் போங்க. இல்லையென்றால் நானே உங்களை வேலையில் இருந்து நிறுத்திடுவே.

தொழி.2.:- நாங்கள் உன்னுடன் பேச வரவில்லை. முதலாளியிடம் பேசுகிறோம்.

மோஹன்.:- முதலாளியே நான் தானே. எங்கிட்டப் பேசாம வேறு யார் கிட்டப் பேசினாலும் பிரயோசனப் படாது.

ராஜு. :- மோஹன்.. என்ன பேசறேன்னு எண்ணிப் பேசு. நீ இந்தத் தொழிற்சாலைல ஒரு அதிகாரி. அவ்வளவுதான். முதலாளி அல்லன்னு உனக்கே தெரியும்.எல்லோருக்கும் தெரியும்.

மோஹன்.:- ராஜு நான் முதலாளியா அல்லவாங்கறதப் பார்க்கணுமா... இந்த நிமிஷத்தில் இருந்து ‘ யூ ஆர் டிஸ்மிஸ்ட். உனக்கும் இந்த தொழிற்சாலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ( அப்போது அங்கு வந்த மாலா )

மாலா.:- அத்தான்... என்ன இது...?

மோஹன். :- யூ கீப் கொயட்.ஆண்கள் விவகாரத்துல நீ தலையிடாதே. என்ன மாமா... நன் சொல்றது சரிதானே. ...?

ரங்க.:- மாப்பிள்ளை...! நீங்க என்ன பேசறீங்கன்னு உங்களுக்குப் புரியுதா...?

மோஹன்.:- சர்டென்லி.. நன்றாகப் புரிகிறது. நான் இந்த நிமிஷம் முதல் இந்த பங்களா தொழிற்சாலைன்னு எல்லாத்துக்கும் சொந்தக் காரன். மறுத்துப் பேச உங்களால் முடியாது. ..
ராஜு. :- ஏன் முடியாது...?

மோஹன். :- அது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவர்தானே தந்தை.... பெரியவர்.... நாலும் தெரிந்தவர்.....மறுத்துப் பேசினால் அவருடைய மகளின் வாழ்வு ஒரு பெரிய பிரச்சனை ஆகிவிடும். ..மாமா.....! மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு உங்கள் மகளின் மீது அக்கறை இருந்தால்நான் தான் இந்தத் தொழிற்சாலையின் தனி முதலாளின்னு இவங்களுக்குச் சொல்லுங்க. இல்லைன்னா..... அதன் பலா பலன்களை நான் சொல்லத் தேவையில்லை.

தொழிலாளிகள்( ஒருமித்து) சார் இதுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள் சார்... மானேஜர் மோஹன் ஒழிக....!

மோஹன்.:-   ஷ் ஷ்ஷ்/// ம்ம்ம்ம்... மாமா சீக்கிரம் சொல்லுங்க...!

ரங்க. :- ஆம்... இந்தத் தொழிற்சாலை முதலாளி இனி மோஹந்தான். ( அதிர்ச்சியில் கீழே விழுகிறார்.)

ராஜு.:- ஓ...மை காட்....!யாராவது டாக்டரைக் கூப்பிடுங்களேன். .. அப்பா....அப்பா..... ( ரங்கதுரை முழித்து முழித்துப் பார்க்கிறார். அவரால் ஏதும் பேச முடியவில்லை. பராலிடிக் ஸ்ட்ரோக் ஆனதால் ஒரு பக்கம் இழுத்துக் கொள்கிறது )

                                                                      ( திரை )  


  








Friday, September 21, 2012

சில பகிர்வுகள்.


                                        சில பகிர்வுகள்.
                                        ---------------------


அண்மையில் திருமணம் ஒன்றுக்குச் சென்று வந்தேன். சாதாரணமகவே திருமண விருந்துகளுக்குச் சென்றால் என்னால் பசியாறச் சாப்பிட முடியாது. குறை என்னிடம்தான். நான் உண்பதில் வெகு நிதானம். பந்தியில் ஒரு முறை பரிமாறியதை நான் சுவைக்கத் துவங்கும் முன் அடுத்து பரிமாற வந்து விடுவார்கள். நான் சாம்பார் போட்டு உண்பதற்கு முன் பந்தி முடிந்து எல்லோரும் போகத் துவங்கி விடுவார்கள். நான் மாத்திரம் உட்கார்ந்து உண்டு கொண்டிருப்பது நான் விரும்பாதது மட்டுமல்ல. அநாகரிகமாகவும் தோன்றும். இது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இம்மாதிரியான விழாக்களில் விரயமாகும் உணவு குறித்தும் சிந்தனை சென்றது. நண்பன் ஒருவன் கூறிய செய்தியைப் பகிர்ந்து கொள்வது பலரது  சிந்தனைக்கு விருந்தாகலாம் !

நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?
                           ---------------

இனி சில பறவைகள் பற்றிய தகவல்கள்.

ஹோமா என்னும் பறவையைப் பற்றி வேதத்தில் சொல்லி இருக்கிறதாம் .அது வானத்தில் வெகு உயரத்தில் வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு போதும் வருவதில்லை. வானத்திலேயே அது முட்டை இடுகிறது. அம்முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் பெற்றுக் குஞ்சு பொரித்து விடுகிறது. விழும் வேகத்தில் குஞ்சு கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது. .பூமி க்கு வந்து விழுந்தால் அது சிதறடைந்து செத்துப் போகும். ஆனால் அதற்கு முன்பே அக்குஞ்சுக்கு தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் ஞாபகம் வருகிறது. அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.

சாதகப் பறவைமழை நீரை மட்டும் அருந்தும். புண்ணிய நதிகள் அனைத்திலும் ஏராளமாக நீர்ப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தாலும்பூமியில் படிந்த நீரை அப்பறவை அருந்தாது.

அசுணம் என்றொரு பறவை இருந்ததாம். அதன் செவிகள் நளினமான இதமான ஓசையே  கேட்குமாம். விகாரமான நாராசமான ஓசை கேட்டால் துடிதுடித்து இறந்து போகுமாம்.

பாலிலிருந்து நீரைப் பிரித்து எடுத்துக் குடிக்கும் சக்தி வாய்ந்த அன்னம் எனும் பறவை பற்றி அநேகமாக அனைவரும் கேள்விப் பட்டிருக்கலாம். 

                       ----------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார். அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான். அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத் தகுதி யில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.

ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தான்.

நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற  எந்த முயற்சியும் தேவை
இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும். 






                
                                 பகிர்வுகளில்  புகைபடங்கள்  இல்லாவிட்டால் சோபிக்காதல்லவா.!
                               ------------------------------------------------------------------------------------------------------------------         

இது புகைப் படமல்ல.. ஓவியம் என்றால் ஆச்சரியம் இல்லையா.























Wednesday, September 19, 2012

வாழ்ந்தே தீருவேன் -(-3 )


                                 வாழ்ந்தே தீருவேன் --( 3 )
                        
                             A PLAY FROM.G.M.BALASUBRAMANIAM  



காட்சி5
இடந்- பூங்கா
பாத்திரங்கள்-மாலா, மோஹன், ராஜு.
( திரை உயரும்போது மாலா மோஹனுக்காகக் காத்திருக்கிறாள் )


மாலா:- ( தனக்குத்தானே ) சேச்சே..! மேனேஜர் வேலை வேலை கிடைச்சாலும் கிடைச்சது, இவருக்காக நான் காத்திருப்பதே வேலையாய் விட்டது. வரட்டும் வரட்டும்,வந்ததும் என்னமாச் சண்டை பிடிக்கப் போகிறேன் பார். ( கைக் கடிகாரம் பார்த்து அலுத்துக் கொள்கிறாள்..மோஹன் பின்னால் வந்து விசில் சப்திக்கிறான். அவள் திரும்பிப் பார்க்கிறாள். )

மோஹன்:- ஹாய்... டார்லிங்...!எங்கெங்கோ பார்க்கிறாயே... நாந்தான் உன் பின்னாலேயே இருக்கிறேனே.

மாலா:- போங்க மோஹன். வர வர உங்களுக்கு எம்மேல இருக்கிற இதுவே போயிடுத்து.

மோஹன்:- இதுவேன்னா எது..?

மாலா.:- அதுதான் இது...

மோஹன்:- லவ்வா..?

மாலா:- யார் கண்டா.. அக்கறையும் பிடிப்பும் குறையறதப் பார்த்தா அதுவு குறையுதோ என்னவோ...

மோஹன்:- மாலா எது குறஞ்சாலும் உம்மேல இருக்கிற இது மட்டும் குறையாது.

மாலா:- இதுன்னா எதுவாம்..!

மோஹன்:- அதுதான் இது...

மாலா:- லவ்வா.. ?


மோஹன்:- லவ்வோ, பிடிப்போ, அக்கறையோ எது வேணா நெனச்சுக்கோ, மோஹனுக்கு மாலாவிடம் உள்ள மோஹம் மட்டும் குறையாது. மோஹனின் மோஹத்தைப் பார்க்கணுமா..( அருகில் இழுக்க அவள் நாணி விலகுகிறாள் )

மாலா,:- நீங்க வந்ததும் உங்ககிட்ட சண்டை போடணும்னுதான் நெனச்சிட்டிருந்தேன். நீங்க வந்ததும், உங்களைப் பார்த்ததும், மோஹனின் மோஹத்தைக் கண்டதும்,, என்னையே நான் உங்ககிட்ட இழந்திருக்கிறதத் தான் உணர்ரேன்.

மோஹன்:- மாலா, கனவிலும் நெனவிலும் என் மனசுல ஆதிக்கம் செலுத்தறவ நீ.. நீ எங்கிட்ட உன்னை இழந்திருக்கியா இல்லை நான் என்னை உங்கிட்ட இழந்திருக்கேனா ஒண்ணும் புரியலை.

மாலா: - கனவிலும் என்னை நீங்க பார்க்கறீங்களா...?கனவில் வரும் நான் எப்படி இருக்கேன். .?

மோஹன்:- ஏன்.... இப்படித்தான்...

மாலா:- இப்படித்தான்னா ..எப்படி... சொல்லுங்களேன்.

மோஹன்:-ஆஹா....! உன்னை வர்ணிக்கச் சொல்கிறாயா... நான் உள்ளதை உள்ளபடி சொன்னால் எனக்கு என்ன தருவீர்கள் மிஸ் மாலா.

மாலா:- போங்க மோஹன்... என்றைக்கும் இல்லாமல் மிஸ்ஸும் கிஸ்ஸும் வெச்சுக் கூப்பிடறீங்களே....

மோஹன்: -மிஸ் வெச்சுக் கூப்பிட்டேனே தவிர கிஸ் வெச்சுக் கூப்பிட்டேனா...

மாலா:- போங்க மோஹன். கனவைக் கேட்டா என்னென்னவோ பேசிக் கொண்டு.....

மோஹன்:- சரி மாலா... கனவில வந்த மாலா என்ன தந்தாளோ அதையே நீயும் தர வேணும்.

மாலா:- எது வேண்டுமானாலும் தருவேன் மோஹன். என்னையே உங்களுக்குத் தர நான் சித்த மாயிருக்கிறேன்.

மோஹன்:- டார்லிங்  எனக்குச் சற்று அவகாசம் கொடு. LET ME GET INTO THE MOOD OF MY DREAM AND THE GIRL. …YES..! நிலவைப் பழிக்கும் முகம், அதில் நினைவைப் பதிக்கும் கண்கள், நிலமடந்தை நாணும் எழில், முத்துச்சரம் விரித்த முல்லைச் சிரிப்பு, கமலமலர் செவ்விதழ் விரிப்பு,படர்கொடி வெல்லும் துடியிடை, என் இடர் சேர்க்க இடையிடையாட, மென்னடை நடந்தென் முன் நின்றாள் நிற்கின்றாள் , இன்பக் கனவினை நனவாக்க யெண்ணி- வந்த கற்பனைக் கண்கண்ட கன்னி.
கண்ட கனவு நினைவாக இன்று என் முன் நிற்கும் காரிகையே ..மாலா..உன்னை அழைக்கின்றேன், அன்புக் கயிற்றால் பிணைக்கின்றேன், கண்ணே கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி ( கூறிக் கொண்டே  மெய்மறந்து அணைக்க , அணைப்பினில் சில வினாடிகள் கழிய முதலில் தன்னிலை வரப் பெற்ற )

மாலா:- அடடே... நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவும் அண்ணாவும் காத்திருப்பார்கள். லேட்டானால் அண்ணா கோபிப்பான். நான் வரேன்.... டாட்டா...!
( மோஹனும் மாலாவும் பிரிய , ராஜு மாலாவின் முன் எதிர்படுகிறான்.)

ராஜு :- மாலா  நீ நடந்து கொள்ளும்முறை உனக்கே சரியாகத் தோன்றுகிறதா..? மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு பெண் சுதந்திரமாக வளர்ந்தாலும் பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி., வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு.

மாலா:- போதும் நிறுத்துங்க அண்ணா... !ஏதோ தகாத காரியத்தை நான் செய்து விட்டதுபோல பிரலாபிக்கிறீங்களே. ஆணும் பெண்ணும் மனம் இணைந்து பழகறதும் சேருவதும் தவறா.?

ராஜு:- அது அப்படிப் பழகும் ஆணையும் பெண்ணையும் பொறுத்தது. அழகு நிறைந்த சந்ததியினரும் வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் திருமணங்கள் பெரிதும் உதவுகின்றன. வாஸ்தவம்தான். ஆனால் கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபல உணர்வு கொண்ட பெண்ணும், வாழ்வில் மாறிவரும் மதிப்புகளைப் புரிந்துகொள்ளாமல் பணத்தின் அடிப்படையிலும் காழ்ப்பின் அடிப்படையிலும் மாற்றம் காண விரும்பும் ஒரு ஆணும், சேருதல் நன்றா என்றுதான் கேட்கிறேன். சரி சரி பெரிய பிரச்சனைகளை அணுகும் இடமும் சந்தர்ப்பமும் இது அல்ல. வீட்டுக்கு வா போகலாம். பிறகு பேசிக் கொள்ளலாம்...

                                                                    ( திரை )   



காட்சி6

இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- மாலா, ரங்கதுரை, ராஜு, மோஹன், டாக்டர்.
( திரை உயரும்போதுரங்கதுரை அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார். அவர் கண்களில் கலக்கம். டாக்டரை அழைத்துக் கொண்டு ராஜு வருகிறான்.)

ரங்க :-வாங்க டாக்டர்...!வாங்க...!காலையிலேயிருந்து என் பெண் மாலா ஒரேயடியா வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். மயக்கமா இருப்பதாகவும் சொல்கிறாள். வந்து பாருங்கள் ப்ளீஸ்  இதோ இந்த அறையில்தான் இருக்கிறாள். ( டாக்டரை அழைத்துக் கொண்டு அறையில் விட்டுவிட்டு வெளியே வருகிறார்.) டாக்டர் எதுவும் பயங்கரமாச் சொல்லாம இருக்க வேண்டும்.



ராஜு:- டாக்டர் என்ன சொல்வார்ன்னு என்னால் யூகிக்க முடியுது அப்பா.!அப்படி மட்டும் இருந்துட்டா  ஆஆஆஅ அப்படியே அவ்ளை.... ஹூம்.!

டாக்டர்:- ( உள்ளிருந்து வந்து கொண்டே)கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் ரங்கதுரை.. சாதாரணமா பெண்களுக்கு வரும் மார்னிங் சிக்னஸ் தான். உங்கள் பெண் தாயாகப்போறா. அவளுக்கு நல்ல ஓய்வும் ஊட்டமுமான உணவும் தேவை.இந்த டானிக்குகளை வாங்கிக் கொடுங்க. நான் வரேன்...

ரங்க:- ( திடுக்கிட்டு திக்பிரமையோடு நிற்கிறார், )டாக்டர்....டாக்டர்.... நீங்க சொல்றது உண்மையா டாக்டர்...?

ராஜு: - டாக்டர் ப்ளீஸ் கீப் திஸ் வெரி கான்ஃபிடென்ஷியல்.(டாக்டர் போகிறார்.)நான் நெனச்சது சரிதான். இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேட்டீங்களா..? இப்போ அவதிப் படறது யாரு...இந்த மாதிரி ஒரு தங்கச்சி இருந்தா என்ன.... செத்தா என்ன... இப்பவே அவளை ஒரு வழியாத் தீர்த்துடறேன்.  மாலா.... மாலா.... !

ரங்க:- ராஜு...! ஆத்திரத்தில் அறிவிழக்காதே. தவறு நடந்துடுத்து. We must try to do the best out of the worst situation… அவளை கூப்பிடு . நான் விசாரிக்கிறேன்.

ராஜி:- மாலா..... கூப்பிடறது காதிலெ விழலை...? வா... இப்படி.. !

ரங்க:- மாலா.... என்னம்மாஇது.... டாக்டர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போறாரே...!உண்மையாம்மா....? எனக்கு எப்படி உங்கிட்டக் கேக்கறதுன்னு விளங்களையேம்மா.. தாயார் இல்லாத குறை தெரியாம இருக்க , உன்னை ஒரு ஆணைப் போல வளர்த்தேனே. என் நம்பிக்கை, மானம் மரியாதை எல்லாம் தவிடு பொடியாகி விட்டதேம்மா...மாலா... இதன் விளைவு உனக்குத் தெரிகிறதாம்மா...?

ராஜு:- அப்பா கேட்டுட்டே இருக்கார், நீ பாட்டுக்கு நீலிக் கண்ணீர் வடிச்சிட்டிருந்தா என்ன அர்த்தம். ...சொல்.. மாலா... சொல்..! உன்னைக் கெடுத்தக் கயவன் யார்..?யார்.. மாலா யார்.. அந்த மோஹன் தானே....!

மாலா.:- அவரைக் கயவர்னு நீங்க சொல்லத் தேவை இல்லை.. அவர் என்னைக் கை விட மாட்டார். எனக்கு நல்லாத் தெரியும்

ராஜு: - கயவனில்லையா... நான் அப்படிச் சொல்லக் கூடாதா ? என்ன தைரியமிருந்தா  தவறு செய்யறதையும் செய்திட்டு எதிர்த்து வேறப் பேசறே.( அவளை அடிக்கக் கையை ஓங்க, அவனைத் தடுத்து )

ரங்க :- ராஜு... இப்பதானே சொன்னேன்.. ஆத்திரப் படாதேன்னு.. மாலா.. ! மோஹனுக்குத் தெரியுமாம்மா, உன்னோட இந்த நிலைமை...?

மாலா.: - தெரியாதுப்பா.. தெரிஞ்சாலும் என்னை ஏத்துக்க அவர் தயங்க மாட்டார் அப்பா. .!

ராஜு.:- ஷட் அப்..! நீ பேசாதே... அப்பா எனக்கு ஒண்ணு தோணுது. அவனுக்கும் இவள் மேல ஒரு கண். இவளை கலியாணம் செய்துக்க விருப்பமான்னு கேட்போம். விஷயத்தை விளக்க வேண்டாம் விஷயம் தெரிஞ்சா ஒரு சமயம் மணக்க ஒத்துக்க மாட்டான். அவனை அவன் வழியிலேயே மடக்கணும். மாலா...! நீயும் அவனிடம் இது பற்றி ஏதும் பேசாதே...!பிறகு பார்த்துக் கொள்ளலாம்...

ரங்க: - அதுதான் சரின்னு எனக்கும் தோணறது. போ ..மாலா.. போ .. ஓய்வெடுத்துக் கொள்..இந்த நிலை உனக்கு வந்திருக்கத் தேவை இல்லை. ஹூம்...! மோஹனும் வர நேரம்தான்.. அவனையும் கேட்போம்.

மோஹன்:- ( வந்துகொண்டே )அதுதான் வந்திட்டேனே .என்ன கேட்கப் போறீங்க...? என்ன பதிலை எதிர் பார்க்கறீங்க....?

ரங்க:- இல்லை மோஹன்.... எங்கள் மாலாவின் திருமண விஷயமாப் பேசிண்டிருந்தோம்.. நான் மாலாவை உங்களுக்குத் திரு மணம் செய்து வைக்கலாம்னு சொன்னேன். அதற்கு ராஜு நீங்க ஒப்புக் கொள்வீங்களோ என்னவோன்னு சொன்னான். நீங்க வர நேரம்தான் உங்களையே கேட்டுடலாம்னேன். மிஸ்டர் மோஹன் எங்கள் மாலாவை திருமணம் செய்துக்க விருப்பமா..?

மோஹன் :- போங்க சார், இதையெல்லாம் எங்கிட்டக் கேட்கணுமா. பெரியவங்க நீங்க பார்த்துச் சொன்னா நான் மறுக்கவாப் போறேன்.

ராஜு :- உங்களுக்கு இந்தத் திருமணத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லையே.....

மோஹன்.: - கரும்பு தின்னக் கூலியா.... இந்த ராஜுவுக்கு என் மேல் எப்பவும் எதிலும் நம்பிக்கை இல்லை ... மாமா...!

ரங்க :- ஹாங்.......! ராஜு  அப்ப உடனடியாகக் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கணும்.. இல்லையா மிஸ்டர்... ஹாங்... மாப்பிள்ளை..!

                                                                                     (திரை).