புலன்கள்.
-------------
பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்று கூறுவார்கள். (நிலம், நீர்,நெருப்பு,
காற்று ,ஆகாயம் )இதேபோல் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம் என்பார்கள். இந்தப்
பூவுலகில் இன்ப துன்பங்களை துய்க்க ஐம்புலன்களின் பணி மகத்தானது. இந்தப் புலன்களின்
செயலில் குறைகள் இருந்தால், வாழ்வு நிறைவாவதில்லை. சிலருக்கு சில புலன்களின் பயனே
கிடைக்காமல் போகும். பார்வையற்ற , காது கேட்காத, வாய்பேசாத, பலரும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியுமென்பார்கள்.
சிலருக்கு இந்தப் புலன்கள் இருந்தும் , குறைவான செயல்திறம் கொண்டிருப்பார்கள்.
சிலருக்கு வயதாக வயதாக, இப்புலன்களின் செயல் திறமை குறைந்து கொண்டு வரும்.
இருந்தாலும் மருத்துவத் துறை முன்னேறி இருப்பதால் இப்புலன்களின் செயல் திறனை
மேம்படுத்த முடிகிறது. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.
வை. கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஒரு பதிவில் , பல்லைப்
பிடுங்கி புதுப் பல் கட்டும் , அதன் சாதக பாதகங்களோடு நகைச்சுவையாக எழுதி
இருந்தார். அத்தனையையும் அனுபவித்தவர்களுக்குப் புரியும் ஒரிஜினலுக்கும்
நகலுக்கும் உள்ள வித்தியாசம். இதேவரிசையில் காது மந்தமாகும் போது ஒரு செவிட்டு
மெஷின் பொருத்தப் படுகிறது. ஆனால் என் போன்றோரால் காதில் எதையாவது வைத்துக்
கொள்வது என்பது சிரமமாக இருக்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித்தான் சதா
சர்வ காலமும் இந்த ஒலி பெருக்கி சாதனத்தைக் காதில் வைத்துக் கொண்டு இந்த உலகையே
மறக்கிறார்களோ தெரியவில்லை. பிறர் பேசும்போது சரியாகக் காதில் விழாமல்
மலங்க மலங்க விழிப்பது எவ்வளவு பரிதாபமானது என்பது நமக்குத் தெரிவதில்லை. அனுபவித்தால்தான் தெரியும். சற்றே உரக்கப் பேசினால் காதில் விழும். ஆனால் சிலர்
அவர்களுக்குள்ளாகவே முணுமுணுப்பது போலிருக்கும். ஒருவர்
பேசுவது காதில் விழாவிட்டால் அவர் முகம் நோக்கி சரியாகக் கேட்கவில்லை என்றால்
அவர்கள் காதருகே வந்து சத்தமாகப் பேசுவது கேட்பவருக்கு அவமானமாக இருக்கும் என்பது
தெரிவதில்லை. 1991-ம் ஆண்டு எனக்கு காது
கேட்பது சிரமமாக இருந்ததால் ENT ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை அணுகினேன். அவர் இது STAPIDECTAMI என்றும் அறுவை சிகிச்சை செய்தால் பலன்
கிடைக்கும் என்றும் கூறினார். எனக்கோ பயம் . இருக்கும் கேட்கும் சக்தியும்
போய்விட்டால்... ஆகவே அவரிடம் சிகிச்சை வெற்றியடைய வாய்ப்பின் விழுக்காடு என்ன
என்று கேட்டேன். , அவர் 90-லிருந்து 95 சதம் வெற்றிவாய்ப்பு உண்டு என்றார். எனக்கு
அந்த ஐந்து பத்து சதமே பயம் கொடுத்தது. வேறு ஒரு பிரபல மருத்துவரிடம் சென்றேன்.
அவரும் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார். அவரிடம் வெற்றி வாய்ப்புபற்றிக் கேட்டேன். அவர், சிகிச்சை முடிந்தபிறகு உங்களுக்குக்
கேட்கும் என்றார். சதவீதத்தில் பதில் சொல்ல வில்லை. அவ்வளவு கான்ஃபிடெண்ட். நான்
அவரிடம் சிகிச்சை பெற்று பலன் அனுபவித்தேன். கேட்டே இராத சப்தங்கள் கேட்கத்
துவங்கின. இருபது வருடங்கள் ஆயிற்று. இப்போது கேட்கும் திறன் குறைவது உணர்கிறேன்.
சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடால் கண்ணாடி அணிந்து வந்தேன்.
இப்போது தூரத்தில் தெரிபவை மங்கலாகத் தெரிவதால் மருத்துவ செக் அப் செய்தேன். CATARACT. அறுவை சிகிச்சை வேண்டுமென்றார்கள். முதலில் ஒரு கண் என்றும்
இரண்டு மாதங்கள் கழிந்து மற்ற கண் என்றும்
ஆலோசனை கூறினார்கள். ஒரு கண் ஆப்பரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. இப்போது
நன்றாகத் தெரிகிறது. ஆனால் இன்னொரு கண்ணின் குறை பாட்டால் பக்கத்தில் இருப்பது படிக்க
எழுத சிரமமாய் இருக்கிறது. எல்லாம் இரண்டு மாதங்களில் சரியாககி விடும் என்று
நம்புகிறேன். கண் ரிபேர், காது ரிபேர் , வாய் ( பல் ) ரிபேர். இருந்தால் என்ன
வாழ்க்கையை துய்க்க முடிகிறதே. எல்லாப் புலன்களும் சிறப்பாய் இருப்பவர்கள்
பாக்கியசாலிகள். சில புலன்கள் உபயோகமில்லாமல் இருப்பவரிடம் கனிவாய்
இருப்போம்.
உங்கள் கண்கள் விரைவில் சீரடையப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களின் இந்த “புலன்கள்” பற்றிய பதிவு அருமை.
பதிலளிநீக்குபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா? என்ற தலைப்பில் “பல்” பிரச்சனைகள பற்றி நான் எழுதியிருந்த நகைச்சுவையான சம்பவங்களைக் குறிபிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.
அதன் இணைப்புகள் இதோ:
ப ல் லெ ல் லா ம்
ப ஞ் சா மி யி ன்
ப ல் லா கு மா ?
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html பகுதி 1 / 2
http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி 2 / 2
தங்கள் கண் ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கட்டும். பிரார்த்தனைகள், ஐயா.
பகிர்வுக்கு ந்ன்றிகள்.
அன்புடன்
VGK
எல்லாப் புலன்களும் சிறப்பாய் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். சில புலன்கள் உபயோகமில்லாமல் இருப்பவரிடம் கனிவாய் இருப்போம்.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள். ஒளவை கூட கூன் ,குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது என்று பாடி உள்ளார். ஏதாவது குறையோடு பிறப்பவர்களை அன்போடும், ஆதரவோடும், கருணையோடும், , கனிவாய் பார்ப்போம்.
பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி போட்டுக் கொள்வது ஒரு காலத்தில் கேலிக்கு உரியதாய் இருந்தது.
இப்போது சிறு குழந்தைகூட கண்ணாடி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சினிமாவிலும், நாடகங்களிலும் குறைபாட்டை வைத்து நகைச்சுவை காட்சிகள் சித்தரிப்பார்கள்.
இவை எல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.
ஒரு கண் ஆப்ரேஷன் செய்து கொண்ட கண் நன்றாக தெரிகிறது அல்லவா! மகிழ்ச்சி.
மற்றொரு கண்ணை இரண்டு மாதங்களில் செய்து கொண்ட பின் நன்றாக எழுதலாம், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்ததால் எல்லாவற்றுக்குமே மாற்று உறுப்புக்கள் பொருத்திக் கொள்ள முடிகிறது. ஐம்புலன்களில் குறைபாட்டை சரி செய்ய முடிகிறது.
இறைவனுக்கு நன்றி.
உங்களின் புலன்கள் பதிவு மிக மிக அருமை.....பகிர்வுக்கு நன்றி.......
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நானும் உங்க கேஸ் தான். வயதாக வயதாக உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் தன் திட நிலையை இழப்பது இயற்கையே. எனக்கு பல், காது, கண், மூக்கு எல்லாமே பிரச்னை.
பதிலளிநீக்குபற்கள் எட்டு ஒன்பது லே மேனேஜ் செய்துகொண்டிருந்தேன். என் போதாத காலம். ஒரு டென்டிஸ்டிடம் சென்று ஒரு இருக்கும் எட்டிலும்
ரூட் கனால் ட்ரீட்மென்ட் செய்தார். பிறகு, க்ரௌன், பிரிட்ஜ், செயற்கை பற்கள் எனப் பலவிதமாகச் சொல்லி ஒரு ஐம்பது அழச்செய்தார்.
ஒரு வருடம் நன்றாகத்தான் இருந்தது. இப்ப ரூட் கனால் ட்ரீட்மென்ட் செய்து அதன் மேலே இருக்கும் க்ரௌனில் என்ன பிரச்னையோ
அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். பிரிக்கிங் பைன். பல்லே இல்லையே ! ஏன் டாக்டர் வலிக்கிறது ? கேட்டேன். "அது ஒண்ணுமில்ல. சுத்தி இருக்கிற ஃபைப்ரஸ் டிஸ்யூ கொஞ்சம் ஸ்ட்ரெஸ்"
அவ்வளவு தான். என்றார். இரண்டு எக்ஸ் ரே எடுத்தார். திரும்பவும் சொல்கிறார்: ஒன்றுமில்லை .
நான் சொன்னேன். பற்கள் ஒன்றுமே இல்லாமல் இருந்தபோது சோறு தின்பதில் தான் கஷ்டம் இருந்தது. இப்ப இருபத்தி நாலு
நேரமும் வலி இருக்கிறதே என்றேன்.
ஒன்றுமில்லை. சரியாய் விடும் என்கிறார்.
எல்லாமே எல்லாருக்குமே ஒரு நாள் சரியாகிவிடும்.
சுப்பு ரத்தினம்.
எல்லாப் புலன்களும் சிறப்பாய் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
பதிலளிநீக்குசில புலன்கள் உபயோகமில்லாமல் இருப்பவரிடம் கனிவாய் இருப்போம்.
தாங்கள் விரைவில் நலமடைவீர்கள் ஐயா.
பதிலளிநீக்குபுலன்களின் முதிர்ச்சியும், தளர்ச்சியும், தவிர்க்க முடியாதவை தானே ஐயா.
பதிலளிநீக்குஇளம் தளிராய் துளிர்த்து, தளைத்து, பச்சையம் சேர்த்து பலமாகி, பலப்படுத்திப்
பின் பழுப்பாகி (பழுதாகி) விலகுதல் இயற்கையின் சரியான சுழற்சிதான் என்றாலும்,தற்கால மாசு கலந்த உணவும், காற்றும், நீரும், நம் அவயங்களை அதிவிரைவில் அயர்ச்சியுற செய்து விடுகின்றன.
நாம் வாழ்வை, அதை சீராக வாழும் (முன்னோர் சொன்ன எளிமை) சூத்திரத்தை தொலைத்துவிட்டு, மேற்கத்திய நாகரீக வாழ்வை (செல்வம் சார்ந்த) நோக்கி நகர்ந்து, புலன்களை அதிகம் பயன்'படுத்தி விடுகிறோம்'. மவுன விரதம், மனஅடக்கம், தியானம், விரதம், இயற்கை சார் வாழ்வு என் பலவற்றை மறந்து / விலக்கி விட்டு விட்டோம். "வலியற்ற வலுப் பெற்ற வாழ்வே நல(ல்)வாழ்வு.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி,
@ கோபு சார்,
@ கோமதி அரசு,
@ ஈசி ப்ரியா,
@ சூரி சிவா,
@ முனைவர் இரா. குணசீலன்,
@ வாசன்
பதிவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. என் உடல் நலத்தில் அக்கறை கொண்ட எல்லோருக்கும் நன்றி. எனக்குப் பெரிய பிரச்சனை ஏதுமில்லை. வாசன் எழுதியுள்ள புலன்களைப் பயன்படுத்தலால் பிரச்சனை உண்டா தெரியவில்லை, அதிகம் பார்ப்பது, கேட்பது சுவைப்பது நுகர்வது உணர்வது போன்றவைகளில் தகாத முறை உபயோகம்.....?முதன் முதலாக ( ? ) வருகை தரும் முனைவரை வர வேற்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து கருத்துக்ள் கூற வேண்டுகிறேன்.
கவலை வேண்டாம். அறிவியல் துணையால் இன்னும் சில ஆண்டுகளில் எந்த உறுப்பு கேட்டு போனாலும் மாற்றி கொள்ள முடியும்.
பதிலளிநீக்குமுதலில் மிருகங்களின் துணையுடன் அவற்றின் உறுப்புகள் நமக்கு மாற்றப்படும்.
பின்பு, சோதனை கூடத்தில் வளர்க்கப்பட்ட உறுப்புக்கள் நம் பொருத்தி கொள்ளலாம்.
இதெல்லாம் ஓரளவிற்கு இப்போதே உள்ள நடைமுறை தான். பணம் தான் தேவை.
http://www.youtube.com/watch?v=o1ewAheYSXs&feature=related
இதற்கு பின் உடம்பே தேவை இல்லை. உடல் இல்லாமல் மனம் மட்டும் இயங்கும் நிலை வரும்.
உடல் இல்லாமல் வெறும் மனதுடன் நம்மால் இயங்க முடியும் என்பதை நினைக்கும் போது, அந்நாளும் சீக்கிரம் வாராதோ என்று தோன்றுகிறது.
மொத்ததில் கடவுளுக்கு வேலை இருக்காது. அதை சொல்லி சக மனிதரை ஏமாற்றி வருவது நிற்கலாம்.