Thursday, September 27, 2012

வாழ்ந்தே தீருவேன்..( 5 )


                                        வாழ்ந்தே தீருவேன்.( 5 )
                                        ---------------------------------
                           A PLAY FROM G.M.BALASUBRAMANIAM
                            --------------------------------------------------
                                             இறுதிப் பதிவு 
                                             -------------------


காட்சி :-9
இடம் :- ரங்கதுரை பங்களா.
பாத்திரங்கள் .:-ரங்கதுரை, ராஜு, மோஹன், மாலா
( திரை உயரும்போது,, ரங்கதுரை செயலிழந்த நிலையில் :மாலா குழந்தையுடன் தந்தை அருகே. மோஹன் உள்ளிருந்து, ரங்கதுரையின் டைரியைப் புரட்டிக் கொண்டே வருகிறான். மாலா திடுக்கிட்டுப் பார்க்கிறாள். )
டைரியில்( ரங்கதுரையின் குரலில்,) “ ராஜு எப்படி வளர்ந்து விட்டான். எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. யாருமற்ற அனாதையாக சுமார் 25 வருடங்களுக்கு முன் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டவன். இன்று என்னமாக வளர்ந்து விட்டான். இவன் என் மகனல்ல என்று இன்றைக்கும் என்னால் எண்ண முடியவில்லை.யே. இருந்தாலும் ராஜு மாலாவுக்குத் தகுந்த துணைதான். .......)

மோஹன்.:- ( தனக்குள் )என்னது...? ராஜு ரங்கதுரையின் மகனல்லவா......? அப்படியானால்.........அப்படியானால்........ இப்படியும் இருக்குமோ.....?ராஜு மாலாவுக்குத் தகுந்த துணைதான்.... அப்படியானால்...இவர்களது உறவு முறை........ஐயோ.... ஒரே குழப்பமாக இருக்கிறதே.... ( ரங்கதுரையை உற்று நோக்குகிறான். அவர் பரிதாபமாகப் பார்த்து முழிக்கிறார். ..மாலாவைப் பார்க்கிறான்.... குழந்தையைப் பார்க்கிறான். அவனுள் சந்தேகத் தீ வளர்கிறது.)அப்படியும் இருக்குமோ. .. இதற்கெல்லாம் காரணம் ராஜுதானே...! நான் வந்தது முதலே அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவனிடத்தை நான் பிடித்துக் கொள்கிறேன் என்பதாலா. ? அப்படியானால் இந்தக் குழந்தை....? மணமாகி ஒருவருடம் முன்பே பிறந்த இக்குழந்தை....?( திடீரென்று சத்தமாக டைரியைக் காட்டிக்கொண்டே) மாமா........! இதெல்லாம் என்ன...? எனக்கு ஏன் எதையும் முன்பே சொல்லவில்லை...?என்னை ஏன் இப்படி ஏமாற்றினீர்கள். ?( அவரைப் பிடித்து உலுக்குகிறான்.)

மாலா.:- அத்தான்....!இது என்ன இப்படி...?அவருடைய நிலை தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கிறீர்கள்..?

மோஹன்.:- மாலா....! எவ்வளவு நாளாக இந்த நாடகம்.. ஏன் என்னிடம் எல்லாவற்றையும் மறைத்தீர்கள்...?

மாலா.:- நாடகமா.... என்ன உளறுகிறீர்கள்..?எதை உங்களுக்குத் தெரியாமல் மறைத்தோம்.

மோஹன்.:- இது என்ன....?

மாலா.:- அப்பாவின் டைரி..! அதை நீங்கள் படித்ததே தவறு....!

மோஹன்.:- தவறுதான்... தவறுதான்....படிக்காமல் இருந்தால் நன்றாக ஏமாந்த சோணகிரியாக இருந்திருப்பேன். அல்லவா....?உங்களுக்கும் உங்கள் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி இருக்கலாம் அல்லவா...?

மாலா.:- கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்.....

மோஹன்.:- புரியும்படியாவேக் கேக்கறேண்டீ...இந்த ராஜு யார்.....?

மாலா.:- என் அண்ணன்...

மோஹன்.:- கூடப் பிறந்தவன் அல்லவா.......?

மாலா.:-...............

மோஹன்.:- என்னடீ... வாயடைத்துப் போய் விட்டது...கேட்டது காதில் விழலை...?இவன் யார்.....உன் கூடப் பிறந்தவனா.... இல்லை...உன்னுடைய........

மாலா.:- அத்தான்.....! ச்சீ.. வாயைக் கழுவுங்கள்.. என்ன வார்த்தை பேசுகிறீர்கள்... ராஜு அண்ணன் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?இதைக் கேட்கும் அப்பாவின் உள்ளத்தில் ஏற்படும் கொந்தளிப்பை உங்களால் உணரமுடிய வில்லையா...? பேசும் சக்தி இழந்து கை கால் வராமல் கஷ்டப்படும் இந்த நல்லவரின் உள்ளம் எரிமலையாகக் குமுறுவதை உங்களால் உணர முடியவில்லையா...?

மோஹன்.:- டயலாக் பேசாதே....!கேட்ட கேள்விக்குப் பதில் சொல்...இந்தப் பரதேசிப் பயல் ராஜு யார்...?

மாலா.:-அதுதான் சொன்னேனே என் அண்ணன் என்று...

மோஹன்.:-அது வெளி உலகத்துக்கான உறவு. ! உனக்கும் அவனுக்கும் உள்ள 
உண்மையான உறவென்ன...?

ராஜு.:( வந்துகொண்டே ) நான் சொல்றேன் மோஹன்..இவள் என் கூடப் பிறக்காத தங்கச்சி....!

மோஹன்.:- வா... ராஜு..வா... நல்ல நேரத்தில தான் வந்திருக்கே. உனக்குமிவளுக்கும் உள்ள உண்மையான உறவை ஏன் சொல்லவில்லை...? மூடிவைக்கக் காரணம் என்ன...?

ராஜு.:- அண்ணன் தங்கை உறவை சொல்லித்தான் தெரியப் படுத்தணுமா...?

ராஜு.:( வந்துகொண்டே ) நான் சொல்றேன் மோஹன்..இவள் என் கூடப் பிறக்காத தங்கச்சி....!

மோஹன்.:- வா... ராஜு..வா... நல்ல நேரத்தில தான் வந்திருக்கே. உனக்குமிவளுக்கும் உள்ள உண்மையான உறவை ஏன் சொல்லவில்லை...? மூடிவைக்கக் காரணம் என்ன...?

ராஜு.:- அண்ணன் தங்கை உறவை சொல்லித்தான் தெரியப் படுத்தணுமா...?

மோஹன்.:-அண்ணன் தங்கை உறவென்றால்  உண்மையைத் தெரியப் படுத்தி இருக்கலாமே..! நான் சொல்றேன், நீயும் இவளும் அண்ணன் தங்கை அல்ல. அந்த உறவின் போர்வையில் நடமாடிய கள்ளக் காதலர்கள். 

ராஜு.:- YOU    YOU    . YOU   BLOODY  FOOL...! SHUT UP. ....!இந்த மாதிரி இன்னொருமுறை நீ சொன்னால்  நடக்கிற கதையே வேறாக இருக்கும். 

மாலா.:- அத்தான்..... ! எப்படி அத்தான்  உங்களால் இப்படி எண்ணவும் பேசவும் முடிகிறது. ? ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்ட பிறகு நடந்ததல்லவா நம் திருமணம்..?என்னைப் பாருங்கள்..... நம் குழந்தையின் முகத்தைப் பாருங்கள்....

மோஹன்.:- ச்சே...!சனியன்.... ! நம்ம குழந்தைன்னு இன்னொரு முறை சொல்லாதே. கலியாணம் ஆவதற்கு முன்னேயே கெட்டுப்போன உன்னை எனக்கு மணமுடிச்சு, என்னை நல்லா ஏமாத்திட்டாங்க.....யாருக்குப் பிறந்ததோ இந்தப் பாவ மூட்டை....?

மாலா.:-  அத்தான்.......!  இது என்ன அபாண்டம்... .. ஐயோ.... தெய்வமே.... இது என்ன சோதனை... எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது...? உங்களுக்கே தெரியாதா...மணமாகுமுன்பே நமக்கிருந்த உறவு...?

மோஹன்.:- மாலா..... யோசிக்க  யோசிக்க என்னால் இந்த முடிவுக்குத்தான் வர முடியுது. . இது எனக்குப் பிறந்ததல்ல.... ஏன்... இவனுக்கே பிறந்திருக்கலாம். ...!

ராஜு.:- ( அவன் தோளைப் பிடித்து உலுக்கி ) வாயை மூடுடா.... இடியட்... ...! கள்ளமில்லா உள்ளத்தோடு பழகிய எங்களை, இப்படி முறை கேடாப் பேச உனக்கு எப்படிடா முடிகிறது...? எனக்கு வர வர என்னையே அடக்க முடியாத வெறி வருகிறது. .. போ.... இங்கிருந்து  போய் விடு...!

மோஹன்.:- போக வேண்டியது நானா நீயா  என்று இப்போது தெரிந்துவிடும்...

மாலா.:-  அத்தான் நான் உங்கள் மனைவி.. என் மீது இப்படி அபாண்டமா பழி சுமத்தலாமா...? உங்களுக்கே இது நியாயமா......?

மோஹன்.: -நிறுத்துடீ... உன் நீலிக் கண்ணீரை.... ...பச்சையாகவே சொல்கிறேன்.... நீ ஒரு  விபச்சாரி.... இவன் ஒரு திருட்டு ராஸ்கல்..உன் கள்ளக் காதலன்... 

ராஜு.:- மோஹன் என் பொறுமை  எல்லை மீறிவிட்டது... அபாண்டமாகப் பேசி தூய அன்புக்குக் களங்கம் விளைவிக்கும்  உன்னை மாதிரிக்  காளான்கள் அழிக்கப்படணும்.... நீ...போ.... !    ஒழிந்து போ.....! தொலைந்து   போ.....!  ( ஆத்திரத்தில்  மேசையிலிருந்து  கைத் துப்பாக்கியை எடுத்து,  மோஹனை சுட்டு வீழ்த்துகிறான்.... )

மாலா.:- அத்தான்..... அத்தான்... ( விழுந்து அழுகிறாள். ராஜு தள்ளாடித் தள்ளாடிப் போகிறான்,  தூரத்தில் தொழிலாளிகளின் கோஷம்... “ மானேஜர்  மோஹன்....ஒழிக,,,!. மானேஜர் மோஹன் ஒழிக”.....)                                
                                                                                  ( திரை. ) 


காட்சி--10
இடம்.- ரங்கதுரையின் பங்களா.. 
பாத்திரங்கள்.- ரங்கதுரை, மாலா, சேகர், தொழிலாளிகள்

( திரை உயரும்போது  மாலா அழுது கொண்டிருக்கிறாள்)


சேகர்.:- அழாதீர்கள் அம்மா... நடக்கக் கூடாதது நடந்து விட்டது. உங்களுடைய இழப்பு ஈடு கட்ட முடியாததுதான்.தனித்து இயங்க முடியாத தந்தை. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை... செய்த கொலைக்காகக் காவலில் இருக்கும் அண்ணன்....ஹூம்...! ஆறுதல் சொல்லித் தேற்றக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை... பாவம் ஓரிடம்.... பழி ஓரிடம் என்றாகி விட்டது...

இந்த நிலையில் உங்களுக்கு நாங்கள் கூறுவதெல்லாம்... உங்கள் குழந்தைக்காக நீங்கள் வாழவேண்டும்.உங்கள் மகன் வளர்ந்து பெரியவனாகும்வரை, -- ராஜு சிறையில் இருந்து திரும்பும் வரை, இந்தத் தொழிற்சாலையைக் கட்டிக் காக்க,-- உங்களுக்கு நாங்கள் முழு மனதுடன் ஒத்துழைப்போம். இது உறுதி... முதலாளி ... நாங்கள் வரோம்.

மாலா.:-என் ஒருத்தியின் காரணமாக இந்தத் தொழிற்சாலை நிற்கக் கூடாது.ஆயிரம் தொழிலாளிகளின் வாழ்க்கை நசிக்கக் கூடாது.. நான் வாழ வேண்டும்...அவர்களுக்காகவாவது நான் வாழத்தான் வேண்டும். ஆம்...! நான் வாழ்வேன்.... வாழ்ந்தே தீருவேன்..!

                                                                    ( திரை )

                                                       நிறைவு பெறுகிறது.








5 comments:

  1. ராஜு மாலாவுக்குத் தகுந்த துணைதான். //

    மாலாவுக்கு அண்ணன் ராஜு நல்ல துணைதான் என்பதை புரிந்து கொள்ளாத மோஹன் ஆத்திரத்தில் அறிவிழந்து தன் உயிரையும் இழந்தானே!
    மாலா தொழிளார்களுக்காக , தன் குழந்தைக்காக வாழ்ந்தே தீருவேன் என்பது நல்ல முடிவு.


    ReplyDelete
  2. உங்கள் பகிர்வுக்கு நன்றி......
    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

  3. காதல் இப்படித் தடம் புரளுமா? கொஞ்சம் கூட எதிர்பார்க்காத திருப்பம், முடிவு.

    ReplyDelete
  4. மோகன் அறிவு அற்றவனாகி துணைவியை குற்றம் சாட்டி பேசுவது அவர்கள் கொண்ட காதல் உண்மையானதல்ல என்று உணர்த்துகிறது.
    துணைவிக்கு வலிக்கும் என்று தெரிந்தே செய்த அவனுக்கு கிடைத்த தண்டனையும் பெரிது தான்.
    ஆத்திரம் தவறான முடிவுகளையே எடுக்கும் என்பதும் மோகன், ராஜு பாத்திரங்களால் உறுதியாகிறது.

    ReplyDelete
  5. வாழ்ந்தே தீருவேன்..!


    நல்ல முடிவு !!

    ReplyDelete