Monday, April 29, 2013

வயது முதுமை சில விளக்கங்கள்.


                   வயது, முதுமை , -சில விளக்கங்கள்.
                  ---------------------------------------------------


மனம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்க வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடேசெய்யாத குற்றம் எனும் பதிவும்  ஏன் ஏன் என்ற பதிவும்.திண்டுக்கல் தனபாலனுக்கு, எனக்கு மனதளவில் வயோதிகம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம்.  முதுமை எனக்கு  ஒரு பொருட்டே அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இது மீள்பதிவாகிறது என்றால், மனதோடு உடலின் ஒத்துழைப்பு குறைகிறது என்றே பொருள். கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார்  .இல்லை  . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி. முதுமை பற்றிய எனது இன்னொரு பதிவும் நீங்கள் படித்தால் புரியும். உண்மையில் என் வாழ்விலேயே நான் மகிழ்வாயிருப்பதாகக் கருதுவது இப்போதுதான். இந்தியர்களின் சராசரி வயதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கிறேன். கிடைத்த அனுபவங்கள் ஏராளம். . பல செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்



ஏன் என்று பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. எல்லாம் தெரிந்ததுபோல் நினைக்கவும் முடியவில்லை. வலைத்தளம் ஒரு வரம். நினைப்பதை பகிர முடிகிறது. நான் சொல்ல வருவது சில சமயங்களில் சென்றடைகிறதா என்ற சந்தேகம் வரும். அதைப் பற்றியெல்லாம் இப்போது அதிகம் கவலை கொள்வதில்லை.


இதில் எங்கெல்லாம் தன்னிலையில் நான் என்று கூறுகிறேனோ அது என்னொத்த வயதுடையோருக்கும் பொருந்தும்.என்று நம்புகிறேன்
 இப்போது நான் மீள் பதிவுடும் முதுமையின் பரிசு எல்லோருக்கும் பொருந்துமா , தெரியவில்லை. முதுமையின் பரிசு என்னவென்றறிய  சொடுக்குங்கள் இங்கே

  
 

Saturday, April 27, 2013

ஏன்....? ஏன்....?



                                                    ஏன்.....? ஏன்.....?
                                                     ---------------



அப்போது இவனுக்கு வயது ஆறிலிருந்து  பத்துக்குள் இருக்கும் அரக்கோண வாசம். வீட்டிற்கு இரவு படுக்க வருவது மட்டும் தவிர்க்க முடியாதது எந்த தடப வெப்ப நிலைக்கும் அஞ்சியதில்லை. சுட்டெரிக்கும் சூரியனும் வீசிக் கொடுக்கும் காற்றும். மாரியின் மழை பொழிவும் எல்லாமே மகிழ்ச்சி தந்தவை.

அதன் பிறகு அங்கும் இங்கும் இருந்து மலையரசியின் மடியில் நான்காண்டுகள் ஜீவிதம். வாட்டி எடுக்கும் குளிரிலும் காலுக்கு அணி ஏதுமிருக்காது. இதமளிக்கும் கம்பளி ஆடைகள் கிடையாது.குளிர்ந்த நீரில் குளித்து அரை நிஜாரில் பவனி வந்த நாட்களின் மகிழ்ச்சி இன்றும் நினைவில்.

அதன் பின் ஓய்வு பெற்றோரின் சொர்க்கம் எனப்படும் பெங்களூர் வாசம் சில வருஷம். அப்போதெல்லாம் உஷ்ணமானி டிகிரி 3435செல்ஷியஸ் தொட்டால் வானம் இருண்டு மழை நிச்சயம்.வியர்வை சிந்த உழைத்தாலும் வியர்க்காது. அதுவும் ஒரு காலம்.


நின்றால் சுடும் , சுவரைத் தொட்டால் சுடும், சீதோஷ்ணம் அதிக வெப்பம் மிக அதிக வெப்பம் என்று வந்தபோது பயமுறுத்திய திருச்சியில் பலவருஷ வாசம். அதன் நடுவில் BLAZEWADA என்று வெள்ளையர்களால் செல்லமாக அழைக்கப் பட்ட விஜயவாடா வாசம் நான்காண்டுகள். கோடையில் வெகு சாதாரணமாக 115 டிகிரி F.  கொளுத்தும். சுற்றிலும் கருங்கல் மலைப் பிரதேசம் .பகலை விட அதிக வெப்பம் இரவில் தாக்கும். வெட்ட வெளியில் அத்தனை வெப்பத்தையும் தலையில் இறக்கி பணி புரிந்ததும். நினைவலைகளில் மோதும்.  அவ்வப்போது நடு நடுவே நாக்பூர், டெல்லி என்றெல்லாம் பயணித்திருந்த அனுபவங்களும் நினைவில் வருகிறது. அணிந்திருந்த உடைகளை துவைத்து காயப் போட்டால், குளித்து வருவதற்குள் காய்ந்திருக்கும். 


இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் தாக்க வேண்டும்..? அன்றைக்கிருந்த  உடல்தான் இன்றும். மன நிலையும் ஏறத்தாழ அதேதான். இருந்தாலும் இப்போதெல்லாம் சீதோஷ்ண நிலைகள் சமாளிப்பதே என்பாடு உன் பாடு என்றாகிறது. மனம் என்ன நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பதில்லையே. மனம் விழைவதைச் செய்ய உடல் மறுக்கிறதே மனதை இளமையாய் வைக்க முடிகிறது.உடலின் மேல் control இல்லையே.. இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்....? ஏன்...? 
-------------------------------------------------------  

 


 

Thursday, April 25, 2013

செய்யாத குற்றம்.-மீண்டும்.


                                         சில மீள் பதிவுகள்.
                                        -------------------------

சில பதிவுகள் எழுதி காலங்கள் கடந்தாலும், அன்று எழுதியபோது வாசகர்களாக இல்லாதிருந்தவர்கள் ,  இன்று அவற்றைப் படித்தால்  ரசிப்பார்கள் என்னும் நம்பிக்கையே அவற்றில் சிலவற்றை மீள்பதிவாக இடும்படித் தூண்டுகிறது. அதில் ஒன்று இதோ.

Tuesday, April 23, 2013

மனசாட்சி ( நாடகம் )-12




                       மனசாட்சி.( நாடகம் )
காட்சி.:- 13    இடம்.:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:- ரவி, ஷீலா.
( திரை உயரும்போது ஷீலா பீதியுடன் அமர்ந்திருக்கிறாள். பின்னணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை. அவளுக்கு திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருக்கிறது. அடி வயிற்றைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் மனம் பேயாய் அலைக்கழிக்கிறது. )



ஷீலா ...நீ இருக்க வேண்டிய நிலை என்ன....? இருந்த முறை என்ன.? ச்சே..... நீயும் ஒரு பெண்ணா.....?

இந்த நிலையில் இதைவிட  வேறென்ன செய்திருக்க முடியும்..? மனசாட்சிக்கு விரோதமில்லாமல்தானே இதெல்லாம் நடந்திருக்கிறது..
மனசாட்சி....... ஹஹஹஹ...மனசாட்சி...!கொண்ட கணவன் இருக்கக் கண்டவனுடன் சேர்ந்து கற்பு நெறி தவறுவதை எந்த மனசாட்சியம்மா அனுமதிக்கிறது. ...?
ஷீலா.:- இல்லை...இல்லை... ஆனால் கணவன் கணவனாக இல்லாதபோது......
(குரல்) நெஞ்சத்திலே உரம் வேண்டும்....முடிந்தால் விவாகரத்து செய்து வேறொருவனை மணந்திருக்க வேண்டும்...
ஷீலா.:- ஆனால் இந்த சமூகத்தில் அப்படி நடக்க வழியில்லையே...
(குரல்) இல்லையென்றால் கன்னியாகவே இருந்து விடுவதுதானே...? அப்படி என்னம்மா ஒரு சோரம் போன வாழ்க்கை வேண்டி இருக்கிறது....?

ஷீலா.:- ஆம்..... சோரம் போன வாழ்க்கைதான்....எல்லாம் அவருக்காகத் தானே செய்தேன். .....என்ன செய்தும் நிம்மதி இல்லையே.....ஆ...ஆ....ஐயோ ( வலியால் துடிக்கிறாள். அதைக் கண்டு கொண்டு வந்த ரவியின் மூளை மெல்லப் பேதலிக்கிறது...அவன் ஷீலாவை மெல்ல நெருங்குகிறான். அவள் அவனைக் கண்டு மிரண்டு எழுந்து ஓடுகிறாள். அவன் அருகில் வர கால் தடுக்கி கீழே விழுகிறாள். : வீல் என்று கூக்குரலிடுகிறாள். மயங்கிச் சாய்கிறாள். சிறிது நேரம் செய்வதறியாத ரவி..கீழே இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஷீலாவைப் பார்க்கிறான். பிறகு வெறி பிடித்துச் சிரிக்கிறான். )


ரவி.:- ஹஹஹஹா......நான் தந்தையாகி விட்டேன்........ஷீலா... நீயும் தாயாகி விட்டாய். ஹஹஹஹா......என்னை இப்போது ஊருலகம் ஒரு ஆண்மையுள்ள ஆண்பிள்ளைஎன்று ஒப்புக் கொள்ளும்...உனக்கு உன் சொத்தும் கிடைக்கும்... ஹஹஹஹா....இதைக் கொண்டாட எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க வேண்டாமா....ஷீலா.....Oh… my dear SHEELA….. இரு இதோ வந்திடறேன். இனிப்பு வாங்கிட்டு வரேன்.... ஹஹஹஹா.....( போகிறான் )
                  ( திரை )         ( முற்றும் )


என்னுரை:

திருமணம் பற்றி யார் என்ன சொன்னாலும் , அது ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் கூடி இன்பம் தூய்க்கவும் சந்ததிப் பெருக்கம் செய்யவும் , ஊருலகமும் சட்டமும் அனுமதி அளிக்கும் ஒரு லைசென்ஸே, என்பது மறுக்க முடியாதது. அதன் மூலம் ஒரு ஆண் தன் ஆண்மையையும் ஒரு பெண் தன் தாயாகும் தகுதியையும் நிரூபிக்கக் குறியாய் இருப்பதும் மறுக்க முடியாது. ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையுள்ளவன் என்றும் , ஒரு பெண்ணுக்கு அவள் மலடியல்ல என்றும் நிரூபிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று உறுதியாகிறது. ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையில் வம்ச விருத்தி சாத்தியமாகவில்லை என்றால் மன ஆறுதலுக்கு குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் மனசாட்சி நாடகத்தில் ரவிக்கு உடலுறவுக்கே தகுதி இல்லாதவன் எனும் அவனது குறை அவனுக்குத் தெரியும். ஆகவேதான் ஷீலாவுடன் மணவாழ்க்கைக்கு  அவன் விருப்பம் காட்டவில்லை. தன் இயலாமையை மறைக்க உடலுறவே மிருக உணர்ச்சி என்று ஏதேதோ கூறுகிறான். உடலுறவுக்குத் தான் தகுதி இல்லாதவன் என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் கூற அவனது ஈகோ அனுமதிக்கவில்லை. ஷீலாவும் மணம் என்று நடந்து முடிந்தால் ரவியும் வசப் படுவான் என்று நம்பினாள். உயிலும் அதில் கண்ட ஷரத்துகளும் கதையை நகர்த்த உத்திகளே. அதன் மூலம் குழந்தை பிறக்க வேண்டிய கட்டாயத்தை அவள் அவனுக்கு உணர்த்தியும்  மாற்றம் ஏதும் இல்லாததால் அவளுக்கு சந்தேகம் வலுத்து  பின் அதுவே அவனை உதாசீனப் படுத்தவும் செய்கிறது.
கதையின் சிக்கலான பகுதியே ரவி ஷீலாவிடம் வாழ்க்கையை அனுபவிக்கவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் சூழ்நிலைகளை
ஏற்படுத்துவதும் அவளும் அதில் விழுவதுமாகும். ரவிக்கு தன் இயலாமை ஊருலகத்துக்கு தெரியக் கூடாது என்பதும் அந்த அவமானத்தை தாங்க முடியாது என்பதும் முக்கியம் ஷீலாவும் சூழ்நிலைக் கைதியாகி வேறொருவன் மூலம் கருத்தரிக்கிறாள். இருந்தாலும் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறாள். ஏதோ உந்துதலில் அவள் கருத்தரிக்க உதவி செய்த ரவியும் மனம் பேதலிக்கிறான். ஷீலாவின் கருச்சிதைவும் ரவியின் மனச் சிதைவும் , என்னதான் வித்தியாசமாக நினைத்து செயல் பட்டாலும் அவரவர் மனமே எதிரியாகச் செயல் படுகிறது என்பதே கதை.
வேறு மாதிரிக் கற்பனை செய்து எழுதி இருக்கலாம். ரவியும் ஷீலாவும் lived happily thereafter  என்று எழுதினால் நான் சொல்ல வந்ததைச் சொல்லி இருக்க முடியாது.
நாடகத்திலேயே இவற்றை வெளிக் கொணர்ந்து இருக்கிறேன் என்றாலும் இந்த என்னுரையும் வலுவூட்டும் என்று நம்புகிறேன். 
---------------------------------------------------------  
 
 
 



Saturday, April 20, 2013

மன சாட்சி ( நாடகம் )-11





        மனசாட்சி ( நாடகம் )

காட்சி.:- 12    இடம்.:-கனகசபை வீடு.
பாத்திரங்கள்.;-கனகசபை, வேதவதி, சபாபதி, நவகோடி

( திரை உயரும்போது, கனகசபை அமர்ந்திருக்க, அவர் காலை வேதவதி பிடித்துக் கொண்டிருக்க, சபாபதி வருகிறான்.)

சபாபதி.:- போச்சுடா போச்சு....! எல்லாம் போச்சு..... கட்டியிருந்த மனக்கோட்டை எல்லாம் போச்சு....சும்மாவா சொல்லி இருக்காங்க ...பேராசை பெருநஷ்டம்னு..... அப்பா... இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். நீங்க கேட்கலை.இப்ப எல்லாமே போச்சு.....
கனகசபை.:- ஏண்டா சும்மா ஒப்பாரி வெக்கறே.... துப்பு கெட்ட பிள்ளை ஒன்னைப் பெத்ததுக்கு எல்லாமே போகாம ஏதாவது மிஞ்சுமா.....! சொல்றதை சொல்லிட்டு அப்புறம் நீ ஒப்பாரியைத் தொடர்ந்து பாடு...
வேதவதி.:- ஏங்க.. குழந்தையை சும்மா கரிச்சுக் கொட்டறீங்க....அவனே பாவம் ஏதோ நொந்து கிடக்கான்....
சபாபதி.:- கலியாணம்னு ஆரம்பிக்கறதுக்கு முந்தியே சம்பந்திச் சண்டை போட்டீங்களே...தொடர்ந்து போட்டு கல்யாணத்தையாவது முடிச்சிருக்கக் கூடாதா....?
கனகசபை.:- உன் கல்யாணத்துக்கு இப்ப என்னடா அவசரம்..

சபாபதி.:- இல்லியே... அவசரமே இல்லை... நீங்க பாட்டுக்கு சாவகாசமா என் கல்யாணத்தைப் பற்றி நெனக்கறதுக்குள்ள ஊரிலுள்ள குமரிகள் எல்லாம் கெழவிகளா மாறிடுவாங்க.
கனகசபை.:- அப்ப ஒரு கெழவியையே கட்டிக்க......
சபாபதி.:- என்னப்பா இது சமய சந்தர்ப்பம் இல்லாம ஜோக் அடிக்கிறீங்களே...
வேதவதி.:- விஷயத்தைத்தான் விளக்கமாச் சொல்லேண்டா கண்ணா....
சபாபதி.:- இப்ப அதிர்ச்சி தர செய்தி ரெண்டு சொல்லப் போறேன்......எதை மொதல்ல சொல்றதுன்னு தெரியலை. ஒண்ணைச் சொன்னா நான் மயக்கம் போடுவேன். இன்னொண்ணைச் சொன்னா நீங்க ரெண்டு பேரும் மயக்கம் போடுவீங்க. ..
கனகசபை.:- மொதல்ல இருக்கறதச் சொல்லி நீ மயக்கம் போட்டு விழு..உன் மயக்கத்தை நாங்க தெளிவிச்சப்புறம் இன்னொண்ணைச் சொல்லு. நாங்க மயக்கம் போடறோம்.
சபாபதி.:- அதுதானே நடக்காது...ஒரு சமயம் மயக்கம் போடறதுக்குப் பதிலா ‘பொட்டுன்னு போயிட்டீங்கன்னா..............உயில் எல்லாம் தயாரா சொல்லுங்க.....
வேதவதி.:- டேய்.... டேய்... விஷயத்தைச் சொல்லுடா....
சபாபதி.:- நம்ம நவகோடி சார் பொண்ணு நவநீதத்துக்குக் கல்யாணமாம்..... ஆங்.... நான் மயக்கமா விழலை......! அப்பாடா... தப்பிச்சேன்.....
கனகசபை.:-என்னடா சொல்றே....
சபாபதி>;-இன்னும் வெளக்கமாச் சொல்லணுமா......?நவகோடி அவர் பெண்ணை எனக்குக் கட்டி வைக்கப் போறதில்லை....
வேதவதி.:- ஏனாம்....?
சபாபதி.: - ஷீலாவோட சொத்தும் ,அவர் சொத்தும், நம்ம சொத்தும் எல்லாம் ஒரேயெடத்தில இருக்கணுங்கறதுக்காக நவநீதத்தை எனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கறதா ஒத்துண்டார்....இப்பத்தான் ஷீலாவோட சொத்து நம்ம கையை விட்டுப் போகப் போவுதே.......
கனகசபை.:- எப்படிடா போகும்....? உயில்ல இருக்கிற கண்டிஷன் நெம்பர் டூ நிறைவேறலியே.......
சபாபதி.:- அதுதான் சொல்ல வந்தேன்.ஷீலாவுக்குக் குழந்தை பிறக்கப் போவுது....இப்ப என்ன செய்வீங்க......?
கனகசபை.:- ஆங்........!
வேதவதி.:-என்னங்க... என்ன ஆச்சு.....?
சபாபதி.:-( ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து அவர் முகத்தில் அடிக்கிறான்) ஐயோ அப்பா... போயிட்டீங்களா....
கனகசபை.:-டேய்...டேய்..... என்னை நீயே அனுப்பிச்சுடுவே போலிருக்கே....நீதான் நாங்க மயக்கம் போடுவோம்னு சொன்னியே.....(நவகோடி வருகை ).. வாங்க சம்பந்தி வாங்க....எப்ப கல்யாணத்துக்கு நாள் வெச்சுக்கலாம்...?

நவகோடி.:- அதெல்லாம் வெச்சாச்சுப்பா....! பத்திரிக்கை கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். எம்பொண்ணு நவநீதத்துக்கு வேற இடத்திலெ கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டேன். மாப்பிள்ளை....... சும்மா சொல்லக் கூடாது.... சபாபதி மாதிரி இல்லை.... சொம்மா ராஜாவாட்டம் இருக்கான்.... ஹூம்...! எல்லாம் நவநீதத்தோட அதிர்ஷ்டம்.....இல்லேன்னா இந்த சபாபதிய இல்ல கட்டிண்டு  மாரடிச்சிருக்கணும். அப்ப நான் வரேன்... அவசியம் கல்யாணத்துக்கு வாப்பா.......( போகிறார்.)
வேதவதி.:- அடடா....என்ன மனுஷன்....என்ன மனுஷன்...... இருந்தா இப்படியில்லே இருக்கணும்.... வந்தாரு... வக்கணையாப் பேசினாரு..போனாரு.... நீங்களும் இருக்கீங்களே. ...
கனகசபை.:- என்னடீ.... இவ்வளவு நாளுக்கப்புறம் வருத்தப் படறியா,....?
சபாபதி.:- எல்லாம் காலங் கடந்த பின்தானே ஞானோதயம் வருது.... டேய்.... சபாபதி......ரெண்டு கல்யாணம்னு துள்ளினியே........ ஒண்ணுக்குக் கூட வழியில்லை போலிருக்கேடா.......!
                 ( திரை )                       ( தொடரும் )
 

..

Tuesday, April 16, 2013

மனசாட்சி (நாடகம் )-10




        மன சாட்சி (நாடகம்)
காட்சி.:-11  இடம்,:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:-ரவி, ஷீலா, மற்றும் நண்பர்கள் பலர்.






மேலோட்டமாக ஒருமித்து வாழும் ஷீலாவும் ரவியும் ஊருலகத்துக்காக நடிக்கிறார்கள். ரவி சொன்னது போல் அவன் ஷீலாவுக்குப் பழகுவதற்கு நண்பர்கள் பலரை அறிமுகப் படுத்துகிறான். இதற்காக அவன் கொடுக்கும் பார்ட்டிகளுக்கு நண்பர்கள் பலர் வருகின்றனர். திரை உயரும்போது மேற்கத்திய இசையின் பின்னணியில் , வரும் நண்பர்களை ரவி ஒவ்வொருவராக அறிமுகப் படுத்துகிறான். அவன் விழிகளில் சோகம். அவ்வப்போது தன்னை சுதாரித்துக் கொண்டு சந்தோஷமாய் இருப்பதுபோல் பாவனை செய்கிறான். அவன் ஷீலாவையும் , அவள் நண்பர்களுடன் பழகும் முறையையும் கூர்ந்து கவனிக்கிறான்.



ஷீலாவோ சற்றே கர்வமாக , ரவியை அலட்சியப்படுத்தியபடி மற்றவர்களுடன் பழகுகிறாள். பார்ட்டி முடியும் நேரம் எல்லோரும் செல்லும்போது ஒருவன் மட்டும் பின் தங்குகிறான். அவனுடன் ஷீலா கை கோர்த்து சந்தோஷமாகச் சிரித்து மகிழ்வதை ரவி ஏக்கத்துடன் பார்த்து அவர்களை தனியே விட்டுச் செல்கிறான்,.அவர்கள் தனிமையில் மகிழ்கின்றனர்.

            ( திரை )                      ( தொடரும்.) .

 

Sunday, April 14, 2013

கோபத்தின் காரணம்.

  கண்ட கண்ட கார்ட்டூன் பார்த்தா இப்படித்தான்.!


         தாய்மார்கள் கோபம்
         ------------------------------


இந்தப் படங்கள் உங்கள் இதழ்களில் நிச்சயம் 
 முறுவல் பூக்க வைக்கும். ஏன் குழந்தைகளிடம் தாயார்கள் கோபம் கொண்டு சப்தம் போடுகிறார்கள் என்று இப்போது நன்றாகப் புரியுமே. எனக்கு மின் அஞ்சலில் வந்ததைப் பகிர்ந்து கொண்டேன்.அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 
ஷாக் அடிக்கப் போகுது பார்...!
  
ச்சீ என்னத்தை வாயில போட்டுக்கறெ..!

என்னடா கோலம். இது....!

அப்படியெல்லாம் செய்யக் கூடாது....!

ரொம்பவே குறும்பு. ...!

சூடு அதிகமானா இப்படியா...!

நானும் வளர்கிறேனே மம்மி.....!

உன் தலையாடா அது...!
ஐயோ என்ன செய்யறே நீ....!                        

Friday, April 12, 2013

மன சாட்சி ( நாடகம் )-9




                                மன சாட்சி ( நாடகம் )
காட்சி.:-10    இடம்.:- கனகசபை வீடு.
பாத்திரங்கள்.:-கனகசபை, வேதவதி, சபாபதி, பத்திரிக்கை நிருபர்.

கனகசபை.:-வேதம்.......வேதம்...... ! ஏ..வேதா........! எங்கே தொலஞ்சா இவ....
வேதவதி.:- நான் எப்போ தொலைவேன்னுதானே காத்துக் கிட்டிருக்கீங்க..? அந்தப் பாழாப் போன எமனுக்குஎன்னை பார்க்க மட்டும் இன்னும் கண்ணு தெரியலை.......
கனகசபை.:-அது எப்படிம்மா தெரியும். ? ஒவ்வொருத்தி தன் புருஷன் பாத்திட்டு வான்னா பேத்துக்கிட்டு வர்றா....எள்ளுன்னா எண்ணையா இருக்கா....அப்பேர்ப் பட்டவங்களைத்தான் எமன் நல்லாப் பார்த்து வெச்சிருக்கான். .... ஆனா நீதான் கூப்பிட்ட குரலுக்கு ஏன்னுகூடக் கேட்காம புரட்சி பண்றியே....
வேதவதி.:- இப்ப நான் என்ன செய்யணுங்கறீங்க......
கனகசபை.:- தாகம் எடுத்து நாக்கு வரண்டு போகுது.குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடேன்.
வேதவதி.:- நீங்களே போய் எடுத்துக் குடிக்கறது தானே . ஏதோ உயிர் போற மாதிரி.....ரொம்பத்தான்.....
கனகசபை.:-அம்மா... தாயே....! சாவித்திரி , சத்தியவான் உயிரை எமன் கிட்டேயிருந்து மீட்டு வந்ததாகக் கதை. சொல்வாங்க.ஆனால் நீ என்னை சீக்கிரமே எமன்கிட்டெ அனுப்பிச்சுடுவே போலிருக்கு. ...........
வேதவதி.:- இருங்க வாரேன்......
கனகசபை.:- சொல்றமாதிரி சொன்னா இந்தப் பொம்பளைக்கும் சுருக்குனு குத்துது... பரவாயில்லை....பரவாயில்லை.
வேதவதி>;- ( உள்ளிருந்து ஒரு உலக்கையுடன் வருகிறாள்) ஏங்க.... நீங்க இப்ப கொஞ்சம் சாகணும்....
கனகசபை.:- சாகணுமா.... கொஞ்சம் சாகணுமா..... எதுக்கு வேதா......?
வேதவதி.:- சாகலைன்னா எப்படி உங்களை எமன் கிட்டருந்து மீட்டுட்டு வரதாம்...? கொஞ்சம் தலையைக் காட்டுங்க....! வலிக்கவே வலிக்காது.... ஒரே அடில் உங்களை க்ளோஸ் செய்துட்டு அப்புறம் உங்க உயிரை எமன் கிட்டருந்து மீட்டுட்டு வரேன்..! என்ன.....!( என்று உலக்கையை ஓங்க )
கனகசபை.:-ஐயோ  வேதா  ..வேண்டாம் வேதா...( என்று ஓட அப்போது அங்கு வந்த பத்திரிக்கை நிருபர் இருவருக்கும் குறுக்கே நின்று)
பத்திரிக்கை நிருபர்.:- உங்கள் சண்டைக்கான காரணத்தை முதல்ல சொல்லுங்க சார்... இன்னிக்கி காலைல இருந்து ஒரு நியூஸ் கூடக் கிடைக்கலை... திடீர்ன்னு உலகமே யோக்கியமா மாறிடிச்சோன்னு சந்தேகப் பட்டேன். நல்ல வேளை.... அலறல் சத்தம் கேட்டு வந்தேனோ நியூஸ் கிடைச்சுதோ. ம்ம்ம்ம்.. சொல்லுங்க சார்...(என்று பென்சில் நோட் எடுக்கிறான்.)
கனகசபை.: - உன்னை யாருய்யா கூப்பிட்டது....?
ப.நிருபர்.:=கணவனை மனைவியின் உலக்கை வீச்சிலிருந்து மீட்ட நிருபருக்கு ஏச்சு. ... ஆங்.. என்ன கேட்டீங்க .. என்னை யாரும் கூப்பிட வேண்டாம் சார்... எங்கெங்கே தர்மத்தை அதர்மம் அடிக்குதோ.....அங்கங்கே நானும் வந்து காட்சி அளிப்பேன். ...
சபாபதி.:- ( அடிபட்ட கோலத்தில் ) சார் நீங்களா....என்ன் சார் இப்படிப் புளுகறீங்க..? எங்கெங்கே  தர்மத்தை அதர்மம் அடிக்குதோ அங்கங்கே வருவீங்களா....?கொஞ்சம் முன்னாடிதான் தர்மத்தை அதர்மம் போட்டுப் போட்டு அடிச்சுதே....! நீங்க வரலியே......
ப.நிருபர்.:- நீங்க தப்பாச் சொல்றீங்க. ...தர்மம் அதர்மத்தை அடிச்சிருக்கும்.... ! இருந்தாலும் சொல்லுங்க.....! ஒரே இடத்துல ரெண்டு நியூஸ்....!
சபாபதி.:- சும்மா எழுதிக்குங்க சார்.....இப்ப வர்ற நியூசெல்லாம்தான் கண்ணு, காது, மூக்கு வெச்சு எழுதறதாச்சே. ....! இருக்கிறது ஒண்ணுன்னா இல்லாதது ஒன்பது இருக்கும்.....அது போகட்டும்...சார்... நீங்க ஒரு ஆம்பிளையா....
ப.நிருபர்.:- என்னைய்யா இது உனக்கு திடீர்னு சந்தேகம்....?என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..?
சபாபதி.:- அதெல்லாம் தெரியாது... நீங்க ஆம்பிளையா ...?
ப.நிருபர்.:- (கனகசபையைப் பார்த்து ) சார் உங்க சன் கொஞ்சம் முன்னாலே நல்லாத்தானே இருந்தார்...என்னவோ தெரியலை..ஒரேயெடத்துல நியூசுக்கு மேல நியூசா கெடைக்குது. நாளையப் பத்திரிக்கையை நெரப்ப சேதி இங்கயே கெடச்சுடும் போலிருக்கு. ...
சபாபதி.:- உங்களுக்குக் கோபமே வரலியே சார்...இந்த மாதிரித்தான் நான் கொஞ்ச நேரத்துக்கு மின்னே ஒரு ஆளைப் பார்த்து ‘ நீ ஆண்பிள்ளையான்னு கேட்டேன். சாத்து சாத்துனு சாத்திட்டான் சார்...தப்பினதே தம்பிரான் புண்ணியம்னு ஓடி வந்துட்டேன். ஆண்பிள்ளையான்னு கேட்டா கோபம் வர்ற ஆசாமியப் பத்திய நியூஸ் வேண்டாமா...?
ப.நிருபர்.:-ஆஆ......க்ராண்ட் நியூஸ்... ! முதல்ல அதைக் குறிப்பெடுத்தாகணும். நான் வரேன் பிரதர்....( சொல்லி ஓடுகிறான்)
சபாபதி.:- சார்... சார்.... இப்படித்தான் அவனவன் அட்ரஸ் இல்லாம ஓடறானுங்க... ஹும்... ஆஆ... அம்மாடி.....!பேச்சு சுவாரசியத்துல அடியையும் வலியையும் மறந்திட்டேன்.....ஹாங்... அப்பாடா....
வேதவதி.:- என்னடா.... எங்கண்ணா......! எந்தக் கட்டைல போறவண்டா இப்படி அடிச்சான் உன்னை....? ஏங்க இப்படி சிலையா நிக்கறீங்க.....( கனகசபையின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்து) அப்பாடா..... இருதயமே நின்னு போச்சோன்னு சந்தேகப் பட்டேன். .....
கனகசபை.:- நின்னாதான் என்னடீ...? நீதான் இருக்கியே.... எமன்கிட்டருந்து உயிரை மீட்டு வரதுக்கு......
சபாபதி.:- அவருக்கு எப்படிம்மா இருதயம் நிக்கும். .? அதான் கெடையவே கெடையாதே....
கனகசபை.:- கேட்டியாடி நம்ம புத்திர பாக்கியம் பேசறதை.....!
வேதவதி.:- அவனுக்கு மூளை ஜாஸ்தின்னு சும்மாவாச் சொல்றாங்க. எங்கண்ணு....!( என்று சபாபதிக்கு திருஷ்டி கழிக்கிறாள்.)
கனகசபை.:- வேற வெனையே வேண்டாம் போ.....! இப்படி ஒரு மகனும் சம்சாரமும் இருந்தா மனுஷன் தூக்கு போட்டுத்தான் சாகணும்.....!
சபாபதி.:- அப்பா.... சாகறதுதான் சாகறீங்க .. ஷீலாவோட அப்பா மாதிரி வில்லங்கம் செய்து வெக்காம என் பேருக்கு உயிலை ஒழுங்கா எழுதி வைய்யுங்க....ஆமா... நீங்க பாட்டுக்கு ‘ சபாபதி கலியாணம் செய்துக்கிட்டாதான் சொத்துன்னு ‘ எழுதித் தொலைக்காதீங்க. ....! ஏன்னா ஒரு பொண்ணாவது என்னைக் கட்டிக்குவாங்கற நம்பிக்கைஎனக்கில்லை.....!அப்படியே கட்டிக்கிட்டாலும் குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை நிச்சயமில்லை.
                  ( திரை )                      ( தொடரும்.)

Monday, April 8, 2013

மன சாட்சி ( நாடகம் )-8






                               மன சாட்சி ( நாடகம் )
காட்சி.:- 9    இடம்.:-ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:- ரவி, ஷீலா.

( திரை உயரும்போது, ஷீலா சோஃபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள். ரவி வருகிறான். ஷீலா அலட்சியமாகப் பார்த்து மறுபடியும் படிப்பைத் தொடருகிறாள். )

ரவி.:- ( மனக் குரல்.)எவ்வளவு அன்போடு பழகினவள்....!இப்ப எப்படி மாறிட்டா....குழந்தை இல்லாக் குறை இவ்வளவு மாற்றம் செய்யுமா.? அடச் சீ... பிள்ளையில்லாக் குறையாவது ஒன்றாவது....எல்லாமே வாழ்க்கையை ஒழுங்கா வாழறோம்னு காண்பிக்கத்தானே...You need the accidental by products to prove your incidental pleasures…… ஆனால் ரவி நீதான் வாழ்க்கையை வாழவே இல்லையே. உனக்குத்தான் வாழ்க்கையை வாழ முடியாதே...( மனக்குரலின் ஓலம் அதிகமாக அதிகமாக, மேசை மேல் தலையை மோதிக் கொள்கிறான். ஷீலா இதைக் கண்டு ஓடிவந்து அவனைத் தடுக்க முயற்சிக்கிறாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவள்போல மெல்லத் திரும்புகிறாள். )


ரவி.:- ஷீலா....ஷீலா.... உன்னுடைய இரக்கத்துக்கும் பச்சாதாபத்துக்கும்கூட அருகதையில்லாமப் போயிட்டேன் பார்த்தியா......ஷீலா  உண்மையாகச் சொல்லு.. உன்னை ஏமாற்றி உன் வாழ்க்கையைப் பாழ்படுத்தணும்னு நான் கனவிலும் நெனச்சிருப்பேனா.......ஆரம்பத்தில் கல்யாணம் செய்துக்கிற எண்ணமே எனக்கிருக்கலியே...... நீயல்லவா இதில் என்னை வற்புறுத்தினாய்.....ஷீலா  வாழ்க்கையில் எனக்கு வேண்டி இருந்ததெல்லாம் ஒரு துணைதாம்மா.... அந்தத் துணையிலே விளையற உறவுக்குத் தயாரா அந்த ஆண்டவன் என்னைப் படைக்கலியே.......What I needed was only a companion; and what you needed was a relationship through that…..! Oh.. what a pity….. what a pity….!
ஷீலா.:- சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லாம விட்டதுமல்லாம...... இப்ப  ஏன் வந்து எதையெதையோ பேசி என் உயிரை வாங்கறீங்க.....ஆண் ஆணாக இருந்து வாழ்க்கைச் சுமையைத் தாங்கணுங்க...... இல்லாதப்போ ஒரு பெண்ணை தன் உருவாலும் அழகாலும் ..ஏன்..மனசாலும்  ஏமாத்தக் கூடாது. அப்படி ஏமாத்தத்துக்கு ஆளான பெண் சீறியெழுந்தா.. இந்த உலகம் தாங்காதுங்க.....என்னை நானே அடக்கிக் கட்டுப்படுத்திக் கிடக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாமப் போயிடுங்க.....


ரவி.:- ஷீலா...விரும்பியோ விரும்பாமலோநாம கல்யாணம் பண்ணி இதுவரை சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது..இப்போ உனக்கு எம்மேலோ, எனக்கு உம்மேலோ கோபமோ வெறுப்போ ஏற்பட்டுப் பயனில்லை. ஒரு சமயம் வேணும்னா நாம விவாக ரத்து செய்துக்கலாம். இந்த சமுதாயத்துலெ ஒரு ஆண் வேணும்னா மறுமணம் செய்துண்டு வாழலாம்....என் சக்தி தெரிஞ்சு அதுவும் இந்த அனுபவத்துக்குப் பிறகு நான் மணப்பதுன்னு நினைப்பதே பைத்தியக் காரத்தனம். ஆனால்..நீ......? என்னதான் இந்த சமூகம் முன்னேறி இருப்பதுபோல் தோன்றினாலும் ஏற்கனவே மணந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்து வாழத் தயாராயிருப்பவர் இந்த நாட்டில் இல்லை என்று சொல்லலாம். So divorce is out of question. ..!விவாக ரத்துக்கான காரணம் நானும் என் இயலாமையும் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.அதனால் ஷீலா.... நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்....... நீ வாழ்க்கையை அனுபவிக்க முடியும்......ஷீலா....உன் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது. ...ஆனால்..... ஷீலா..... என்னுடைய இந்த நிலை உலகத்துக்குத் தெரிய வேண்டாம்மா......அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியாது.......SO PLEASE…….நான் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமச் சொல்றதை நீ கேட்கணும்....என் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டே நீ உன் விருப்பப் படி வாழ்க்கையை அனுபவிக்கிறதில் எனக்கு ஆட்சேபணை இல்லை......ஷீலா.... வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். I don’t have any objection if you want to choose a life , you like….!

ஷீலா.:-போதும் நிறுத்துங்க....வெந்த புண்ணில வேலைப் பாய்ச்சறீங்க..... நினச்சுப் பார்க்கவும் முடியாத வாழ்வை நடத்திப் பாருன்னும் உபதேசம் செய்யறீங்க. அதுவும் மனசாட்சிக்கு விரோதமில்லாத பேச்சாம்......! இவ்வளவு நாள் இல்லாத மனசாட்சி இப்போ எங்கிருந்து வந்தது....? மனசாட்சின்னு சொல்லுக்கு அர்த்தம்தான் என்னங்க....?ஒரு கொள்கை அல்லது குணம் இதன் பேரில இருக்கிற அசையாத நம்பிக்கையின் நிரந்தரத் தன்மையைக் குறிப்பிடறது அல்லவா...... அப்படீன்னா அந்தக் கொள்கையும் குணமும் ---அது தவறாக இருந்தாலும் மன சாட்சியின் பிரதிபலிப்பல்லவா..... அதாவது செய்யற எல்லாச் செயல்களுக்கும் காரணங்காட்டி ஏதாவது ஒரு கோணத்திலிருந்து மனசாட்சிக்கு விரோதமில்லைன்னு ஸ்தாபிக்க முடியும். .. அப்படீன்னுதானே நினைக்கிறீங்க..? மனசாட்சியாம்  மனசாட்சி.....அப்படீன்னு ஒண்ணு இருக்கவும் இருக்கா உங்களுக்கு....... தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கு கழுத்தை நீட்டிட்டேன்... இனிமே விதி விட்டபடி நடக்கட்டும்....என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விட்டுட்டுப் போங்களேன்.
......
ரவி.:- ஆனாலும் ஷீலா.....நான் சொல்றதும் உனக்குப் புரியும்னு 
......... 
ஷீலா.:- OH…! PLEASE LEAVE ME ALONE……..!

                    ( திரை )                    ( தொடரும் )