Tuesday, July 31, 2012

PARANOID ( பாரநாய்ட் )


                                             PARANOID ( பாரநாய்ட் )
                                             ------------------------------


என் கால்கள் என்னை என் கட்டுப்பாட்டில் இருக்க விடாமல் எங்கோ அழைத்துச் செல்கிறது.நான் போகுமிடம் இவ்வளவு நாட்கள் உழைத்து உருவாக்கிய என் தொழிற்சாலை அல்லவா. யாரோ என்னைக் கூப்பிடும் சப்தம் கேட்டுத் திரும்பினால் அது என் தொழிற்சாலையில் என்னுடன் தோள் கொடுத்து நின்ற குமரன் அல்லவா.நீயும் வா, என்னுடன் ‘ என்று அவனையும் அழைத்துக் கொண்டு விரைகிறேன்.ஏன் இவ்வளவு அவசரம் ‘என்று கேட்கிறான். அவனுக்குத் தெரியுமா என் மனம் என்னைப் படுத்தும் பாடு..இப்போதே நான் என் தொழிற்சாலைக்குள் இருக்கவேண்டும். இதோ வந்து விட்டோம். உள்ளே போக எத்தனிக்கும் என்னை ஒரு காவலன் தடுக்கிறான். குமரன் அவனிடம் ஏதோ கூற உள்ளே அனுமதிக்கப் படுகிறேன். என் தொழிற்சாலைக்குள் போக எனக்கு சிபாரிசு தேவைப் படுகிறது.

உள்ளே நுழைந்ததும் ஆ ! அந்த சூழ்நிலையே புத்துணர்ச்சி தருகிறது.நேராக என் இருப்பிடத்துக்குப் போகிறேன். அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறது. என் இடத்தில் இருந்து என் இருக்கையை எடுத்தது யார் என்று சத்தமிடுகிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்னை யார் என்று கேட்கிறான். ‘ நான் தான் ஜீ.எம். பாலசுப்பிரமணியம் என்று கத்துகிறேன். குமரன் அவர்களிடம் ஏதோ பேசி சமாதானம் சொல்கிறான் வேலை செய்யாமல் நேரம் கடத்தும் அவர்களுக்கு அன்றைய சம்பளம் கட் என்று குமரனிடம் சொல்கிறேன். பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த
தொழிற்கூடத்தில் பணி செய்யாமல் காலம் கழிக்கிறார்கள் என்றால் தவறு எங்கே என்று என்னையே உரக்கக் கேட்கிறேன். என்னுள் இருந்து ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்கிறது. ‘ மடையா, நீவிட்டுச் சென்ற தொழிற்கூடமல்ல இது.தெரியவில்லையா என்கிறது. நான் இருந்த காலத்தைய அடையாளங்களை முற்றிலும் தொலைத்து நிற்கும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன். குமரனும் என்னுடன் வருகிறான். ‘உன் பணியை விட்டு விட்டு என்னுடன் ஏன் வருகிறாய்.? நீ போஎன்று அவனைக் கடிந்து கொள்கிறேன். விரட்டினாலும் விசுவாசமாகத் தொடரும் நாய்க் குட்டி போல் அவன் என்னைத் தொடருகிறான்.

மானியமாக பெருந்தொகை செலவு செய்து சலுகைக் கட்டணத்தில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அது எப்படி செயல்படுகிறது என்று காண உணவுக் கூடத்துக்குப் போகிறேன். தலை வாழை இலையில் பல் வேறு வகையான உணவு பறிமாறப் பட்டது. சலுகை கட்டணம் கொடுக்கப் போனால் என்னை அடிக்கக் கை ஓங்குகிறான் ஒருவன். விளங்காது விழித்த என்னைக் காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு வருகிறான் குமரன்.

எனக்கு ஏதும் புரிவதில்லை. எத்தனையோ பாடு பட்டுக் கட்டிக் காப்பாற்றிய என் தொழிற்கூடம் என் கண் முன்னே சிதைந்து இருப்பது போல் தோன்றுகிறது. என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுகிறேன். குமரன் என்னை என்னென்னவோ சொல்லித் தேற்றுகிறான். கார் வைக்கும் கராஜுக்குப் போய் என் காரைத் தேடுகிறேன். காரில் வரவில்லை. நடந்துதான் வந்தோம் என்று குமரன் கூறுகிறான். என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணி விட்டான் போலும். கார் கிடைக்காமல் போனால்தான் என்ன. எனக்கு நடக்க முடியுமே என்று கூறி சிரிக்கிறேன்.வேலை பார்த்தது போதும் வீட்டுக்குப் போகலாம் என்று என்னை அழைத்துச் செல்கிறான் குமரன். நான் வீடு வந்து சேரும்போது வீட்டு வாசலிலேயே என் மனைவியும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள். என்னைக் கண்டதும் என் மனைவி ஓ வென அழுகிறாள். பைத்தியக்காரி!


 

Sunday, July 29, 2012

முதுமையின் பரிசு.?


                                         முதுமையின் பரிசு.?
                                         ---------------------------


சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.

என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும் வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?..

சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்.

சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்த் வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.

உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.
-------------------------------------------








Friday, July 27, 2012

கர்நாடக இசையும் என் கனவும்...


                                       கர்நாடக இசையும் என் கனவும்....
                                           -------------------------------------

இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. I KNOW I AM DIGRESSING



கர்னாடக இசையை முறையாகப் பயிலலாம் என்றால் என் பணி நேரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும் என் குரல் வளத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை ஒரு விதூஷிகியாக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த முயன்றேன். என் வீட்டில் நான் என் மனைவி, இரு குழந்தைகள், அவள் தம்பி என, எல்லோர் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியவள் மேல் இன்னொரு பாரமும் ஏற்றப் பட்டது. பாட்டுக் கற்றுக் கொள்வது பாரமா எனக் கேட்பவர்கள் அந்த சூழ்நிலை உணர்ந்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள், சரி தீர்மானம் எடுத்தாய்விட்டது. யாரிடம் பாட்டு கற்றுக் கொள்வது?. எங்கள் நல்ல காலம் திருச்சி ஆண்டாள் தெருவிலிருந்து ஒருவர் பீ.எச்.இ.எல்  டௌன்ஷிப்புக்கு வந்து சிலருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார் என்று கேள்விப் பட்டோம். மதியம் வேலை எல்லாம் முடிந்து சற்று அக்கடா என்று என் மனைவி இருக்கும் நேரமே பாட்டு கற்க உகந்த சமயம் என்று முடிவாயிற்று.

வைத்தியநாத பாகவதர் என்பது பாட்டு வாத்தியார் பெயர். 45-/வயதிருக்கலாம் சுமாரான உயரம். சற்றே மெலிந்த தேகம். பார்த்த உடனே சொல்லி விடலாம்
தேவைகளைப் பூர்த்திசெய்ய அல்லாடுபவர் என்று. காலையில் திருச்சியிலிருந்து டௌன்ஷிப்புக்கு வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்ப மாலை விளக்கு வைக்கும் நேரமாகி விடும்..வாரம் இரண்டு நாள் பயிற்சி. சும்மா சொல்லக் கூடாது . அபார ஞானம் உள்ளவர். எந்த ஸ்தாயியிலும் அசாதாரணமாகப் பாடுவார். அவரை ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமுன் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றும் அவர் பாடிய அந்தப் பாட்டு என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “பஞ்சாட்சத்  பீட ரூபிணி ,மாம்பாஹி. ஸ்ரீராஜராஜேஸ்வரி “என்று உச்சஸ்தாயியில் ஆபேரி ( ? ) ராகத்தில் பாடக் கேட்டதும் , இவர்தான் என் மனைவிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் போகும் குரு என்று தீர்மானித்து விட்டோம்..அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அலசூரில் இருந்தவர் என்பதும், சற்றுக் காலங்கடந்து மணம் முடித்தவர் என்பதும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறத் தெரிந்து கொண்டோம். எங்கள் ஒரு வீட்டுக்காக வர வேண்டியவருக்கு எங்கள் எதிர் வீட்டு நண்பரின் மனைவியும் பாட்டுக் கற்றுக் கொள்வதன் மூலம் இன்னொரு பயிற்சியாளராகச் சேர, கொஞ்சம் அதிக வருவாய்க்கு வழி கிடைத்தது. அப்பொழுது ட்யூஷன் ஃபீஸாக மாதம் 20-/ ரூபாய் கொடுத்த நினைவு. ஒரு ஹார்மோனியப் பெட்டி மாத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவருக்கு நூற்றுக் கணக்கான கிருதிகள் மனப் பாடமாகத் தெரியும். ஸ்வரம் ,எழுதி, சாஹித்தியமும் எழுதிக் கொடுப்பார்
.
எந்தப் புத்தகமும் பார்க்க மாட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் என் மனைவி அவரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார். என் மனைவியின் ஆர்வம் அதிகரித்ததுபோல் எதிர்வீட்டு நண்பரின் மனைவியின் ஆர்வம் குறைந்து அவர் விலகிக் கொண்டார். எங்கள் துர திர்ஷ்டம் எனக்கு விஜயவாடாவுக்கு மாற்றல் ஆகி என் மனைவியின் பாட்டு கற்கும் படலம் முற்றுப் புள்ளி பெற்றது. அதற்குள் ஒரு நாள் டௌன்ஷிப் கோயிலில் பக்க வாத்தியங்களுடன் இரண்டு மூன்று பாட்டுகள் என் மனைவியை பாட வைத்தார். அப்போது என் மனைவி பாடிய “நகுமோமு கனலேனி  நாஜாலி தெலிசி “என்ற பாட்டு நல்ல வரவேற்பு பெற்ற்து.

என்ன சொல்லி என்ன பயன்.?என் மனைவி பாட்டில் விதூஷிகியாகக் கொடுத்து வைக்கவில்லை. சும்மாவா சொல்லிப் போனார்கள் பாடப் பாட ராகம், மூட மூட ரோகம் என்று. விஜயவாடா சென்றதும் தோதாக வாத்தியார் கிடைக்காததால் மேலும் கற்கவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் போயிற்று. சொல்லப் போனால் என்னுள் அவளை பெரிய பாட்டுக்காரியாக்க வேண்டும் என்ற நெருப்பும் அணைந்து விட்டது. அவள் பாட்டுக் கற்றதும், பாடியதும் எல்லாம் வெறும் நினைவாகி விட்டது.

நான்கு ஆண்டுகள் கழிந்து மீண்டும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபிறகு பல நாட்கள் கழித்து வைத்தியநாத பாகவதரைச் சந்தித்தோம். அவர் மிகுந்த சிரம தசையில் இருந்தார். உடல் நலமும் சீராக இருக்கவில்லை. மறுபடியும் அவரை ட்யூஷனுக்காகக் கூப்பிட்டோம். சில நாட்கள் வருவார். பல நாட்கள் வர மாட்டார். அவர் குரலும் அதிலிருந்த கம்பீரமும் காணாமல் போயிருந்தது. அதற்குள் டௌன்ஷிப்பிலேயே ஒரு பாட்டு ஸ்கூல் ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கட்டான அமைப்புடன் போட்டி போட முடியாமல் வைத்தியநாத பாகவதர் காணாமல் போய்விட்டார்.

என் பிள்ளைகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். அவர்களது நாட்டம் மெல்லிசையின்பால் சென்றது. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது. நானும் என் பங்குக்கு வீட்டில் ஏதாவது பாட்டுப் பாடினால் அவர்களின் எதிர்ப்பு இருந்தது. என் சாரீரம் ( ? )
கன கம்பீரமாக இருக்கும். டீக்கடையில் பாட்டு போட்டது போல் இருக்கிறது, என்றும் என் குரல் தொலைதூரம் வரைக் கேட்கிறது என்றும் கூறி கண்டித்து என் வாயை அடைப்பார்கள். பாட்டுக் கேட்பது மட்டும்தான் எனக்குக் கொடுத்து வைத்தது. 

வெகு நாளைக்குப் பிறகு மீண்டும் என் வீட்டில் ஒரு பாடகரை உருவாக்கும் ஆசை எழுந்தது. என் மூத்த மருமகளைப் பிடித்தேன். ஆரம்ப பாடங்களை என் மனைவி கற்பிக்க தயாராயிருந்தாள். ஒரு நல்ல நாள் பார்த்து குரு தட்சணை எல்லாம் கொடுத்து பாடம் கற்கத் தயாரானாள் என் மருமகள். சரளிவரிசை, ஜண்டை வரிசை என கம்பீரமாக என் மனைவி பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை. அது முடியாதென்று தெரிந்ததும் அவளுடைய ஆர்வமும் நீரூற்றிய நெருப்புபோல் பிசு பிசுத்து விட்டது.அத்துடன் ஒரு சங்கீத கலாநிதியை உருவாக்கும் என் கனவும் காணாமல் போயிற்று. 
----------------------------------------------------         .       .   .


 .









Wednesday, July 25, 2012

இன்னார்க்கு இன்னார்......


                                                     இன்னார்க்கு இன்னார்.....
                                                     -------------------------------


ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார். அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார். குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது கணிப்பு. உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று
எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார், எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.


ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.?          
   .  .            .
      


Tuesday, July 24, 2012

பொழுது போக்க -2.


படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா.? விடை கடைசியில்.


அதற்கு முன் மனதில் தோன்றும் சில எண்ணங்களை கொட்டி விடுகிறேன். கல்வி பற்றி இதற்கு முன்பே எழுதி இருக்கிறேன். ஆண்டை அடிமைக் காரணங்களால் பெருவாரியான மக்கள் கல்வி அறிவு கொடுக்கப் படாமலேயே, கிடைக்கப் பெறாமலேயே சீர் குலைக்கப் பட்டு வந்துள்ளனர். முன்னுரிமை, ஒதுக்கீடு என்று பல சீர்திருத்தங்கள் ( ? ) வரத்தலைப் பட்டாலும் அடிப்படைக் காரணங்களைக் களையாமல் ஏற்ற தாழ்வுகள் குறைக்க முடியாது. அண்மையில் அரசாங்கம் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து அமல் படுத்த ஏகப் பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்பு இப்போது ஒரு புதிய சாதியினரிடமிருந்து. அவர்களே கல்வி வியாபாரிகள். சட்டத்தால் பள்ளியில் அனுமதி பெற்றவர்களை அவமானப் படுத்தும் வகையில், அவர்களை வேறுபடுத்திக் காட்ட சிறார்களின் முடி கத்தரிக்கப் பட்ட கொடுமை. பெங்களூரில் நடந்திருக்கிறது. எல்லோருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாத சமகல்வி வேற்பாடின்றிக் கிடைக்க கல்வியை , பள்ளியிறுதிப் படிப்புவரை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும். அதுவும் அக்கல்வி உயர்வு தாழ்வு எதுவும் இன்றி சமமாக எல்லோருக்கும் இலவசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இள வயதிலிருந்தே வேற்றுமை பாராட்டாத இளைய சமுதாயம் உருவாகும். சில பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய வாய்ப்பு அதிகரிக்கும்
                           ------------

ஒருவருடைய வயதைக் கண்டு பிடிக்க, அவரிடம் அவர் வயதை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள். அத்துடன் பத்தை கூட்டச் சொல்லுங்கள். வந்த விடையை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள்வந்த விடையுடன் அவருடைய மனைவியின் வயதை கூட்டச் சொல்லுங்கள்.. கிடைதத விடையில் இருந்து நூறைக் கழிக்கச் சொல்லுங்கள். கடைசியாகக் கிடைத்த விடையை கேளுங்கள். அதில் முத்ல் இரண்டு எண்கள் அவருடைய வயது. அடுத்த இரண்டு எண்கள் அவருடைய மனைவியின் வயது.
குழந்தைகள் சுவாரசியமாகக் கேட்பார்கள்.
                           --------------   

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு BLACK MAJIC ஷோ..குறைந்தது மூன்று பேர் வேண்டும். ஒருவர் ஒரு அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை நினைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவரிடம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் கூற வேண்டும். இப்போது இரண்டாமவர் மூன்றாம் நபரை அந்தப் பொருளை அடையாளம் காண்பிக்க வைப்பார். அறையில் இருக்கும் பொருளின் பெயரைச் சொல்லி இதுவா இதா என்று கேட்டுக் கொண்டே வருவார். முதலாமவர் சொன்ன பொருளின் பெயரை குறிப்பிட்டுக் கேட்கும் முன் ஒரு கருப்பு நிறமுடைய பொருளைக் காட்டி இதுவா என்பார். இல்லை என்று பதில் வரும் அடுத்து முதலாம் நபர் குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி இதுவா என்று கேட்பார். ஆம் என்று பதில் வரும் பொருளை நினைத்துக் கொண்டவர் ஆச்சரியப் படுவார். இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு கருப்பு நிறப் பொருளுக்குப் பிறகு சரியான பொருள் காட்டப் படவேண்டும். இரண்டு குழந்தைகள் சேர்ந்து மற்றவரை வியப்பில் ஆழ்த்தலாம்.
                           ---------------   

சில எளிமையான கேள்விகள்.

1.) ஒரு பொருளை 16 அடி உயரத்தில் இருந்து போட்டால் அது தரையைத் தொட ஒரு செகண்ட் ஆகும். அதே பொருளை 64 அடி உயரத்தில் இருந்து போட்டால் தரையைத் தொட நான்கு செகண்டுகள் ஆகும். சரியா தவறா.,ஏன்.?

2) ஒரு பேக்கர்ஸ் டஜன் என்பது எவ்வளவு.?

3) ரெயில்வே தண்ட வாளங்களில் நேரோ கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 0.76 மீட்டர். ப்ராட் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 1.67 மீட்டர்.  மீட்டர் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி என்ன.?

4 ) எட்டு பேர் பதினாறு குழிகளை வெட்ட 32 தினங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.  நான்கு பேர் எட்டு குழிகளை வெட்ட எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.?

5 ) இதில் எந்த எண்ணில் ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப் பள்வும் சமமாக இருக்கிறது. ?
   a) 25   b)16    c)64    d)121

6 ) ஒரு பெரிய மரத்தை 12 அடி நீளங்களாக அறுக்கிறார்கள். ஒரு துண்டு அறுக்க ஒரு நிமிஷமாகிறது. 12 துண்டுகள் அறுக்க எவ்வளவு நேரமாகும்.?

7 ) எந்த எண்கள் தலை கீழாக நிறுத்தினாலும் ஒரு எண்ணாக இருக்கும். ?

8 ) ஒரு மைல் தூரத்தை நான்கு வினாடிக்குள் ஓடிய முதல் வீரர் யார்.?

9 ) முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் யார்.?
                     ------------------------

ஒரு கணவன் மனைவியின் ஊடல் காரணமாக அவளிடம் பேசாமல் இருந்தான். ஒரு முக்கிய வேலையை கவனிக்க வேண்டி இருந்ததால் அவன் மனைவியின் பார்வையில் படும்படி “ என்னைக் காலையில் 7-/ மணிக்கு எழுப்பவும் “என்று ஒரு கடிதம் வைத்தான். அடுத்த நாள் அவன் மனைவி அவன் படுக்கை அறையில் அவன் பார்வையில் படும்படி ஒரு குறிப்பு எழுதி வைத்தாள்.அதில் “ 7-/மணியாகிவிட்டது. எழுந்திருக்கவும்.என்று எழுதி இருந்தது.
                    -----------------------------
( இவரை அடையாளம் தெரியவில்லையா. ? இவர்தான் உலகப் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர். சச்சின் டெண்டுல்கர்.! மற்ற கேள்விகளுக்கான பதில் பின்னூட்டங்கள்  பார்த்த பிறகு. )
                   ----------------------------------
( பின்னூட்டங்கள் பார்த்தபின் பதில் என்று எழுதி இருந்தேன். அதன்படி இதோ. )

பெண்வேடமிட்ட சச்சின் தெண்டுல்கர் கல்லூரியில் மாறுவேடப் போட்டியில் பங்கெடுத்தபோது எடுத்த படம் என்று சொல்லப்படுகிறது.

இனி கேள்விகளுக்கான பதில்கள்.

கே. 1.  பதில் .. தவறு. ஒரு பொருள் பூமியை நெருங்கும்போது அதன் வேகம் அதிகரிக்கும். ( A falling body naturally accelerates its velocity.)

கே. 2.  பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..

கே.3  பதில்.   ஒரு மீட்டர். 

கே.4.  பதில்.. 32 நாட்கள்.

கே.5 . பதில்..   16.

கே.6  பதில்    11  நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.

கே.7  பதில்.   0, 1, 6, 8, 9.

கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
             என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று 
             இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )

கே.9 பதில்.  டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க 
            மருத்துவர். 


           (பின்னூட்டங்களில் ஒருவரே பதில் கூறி இருந்தார். பாராட்டுக்கள் )
                    --------------------------------------    
.
.

Saturday, July 21, 2012

நான் ஒரு ஹிந்து.


                                                          நான் ஒரு ஹிந்து
                                                          -------------------------

என்னால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  எழுத முடிகிற அளவுக்கு கிடைக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா.? உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு ”நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம். என் எண்ணங்களுக்குத் துணை போவதால் இந்தப் பதிவு பகிர்வு. 


கென்னடி விமான நிலையத்திலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோ விமான நிலையத்துக்குப் பறந்து கொண்டிருந்தேன். என் அடுத்த இருக்கையில் ஒரு அழகான அமெரிக்கப் பெண் கையில் பைபிள் புத்தகம். அமெரிக்க யுவதி  பைபிள் படிப்பது எனக்கு சற்று வினோதமாகப் பட்டது.சிலமணிநேரப் பயணம் என்பதால் பரிச்சயப் படுத்திக் கொண்டேன்.நான் இந்தியாவிலிருந்து வருவதாகக் கூறினேன். அவள் உங்கள் நம்பிக்கை எது என்று கேட்டாள் புரியவில்லை என்றேன்.’  உங்கள் மதம் ( RELIGION)  எது ? நீங்கள் கிருஸ்துவரா, இஸ்லாமியரா?

நான் ‘ இரண்டும் இல்லை என்றேன்.

“ அப்படியானால், நீங்கள் யார் ?
நான் ஒரு ஹிந்து
 
ஒரு சராசரி அமெரிக்கருக்கோ, ஐரோப்பியருக்கோ, கிருத்துவமும். இஸ்லாமுமே கேள்விப் பட்டதும் பிரதானமுமான மதங்கள்.
“ ஹிந்து என்ன.?

நான் அவளுக்கு விளக்கினேன். “நான் ஒரு ஹிந்து தந்தைக்கும் ஒரு ஹிந்து தாய்க்கும் பிறந்ததால் பிறப்பாலேயே ஒரு ஹிந்து “

உங்கள் மத குரு யார்?

“மதகுரு என்று யாரும் கிடையாது.

“உங்கள் புனித நூல் எது.?

எங்களுக்கு புனித நூல் ஒன்று என்று ஏதும் கிடையாது. நூற்றுக்கணக்கான வேதாந்த எண்ணங்களும் எழுத்துக்களும் அடங்கிய நூல்கள் ஏராளம் உண்டு

“ உங்கள் கடவுள்தான் யார் என்றாவது சொல்லுங்களேன்.

“ என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள். 
எங்களுக்கு ஏசுவும், இஸ்லாமியருக்கு அல்லாவும் இருப்பதுபோல் உங்களுக்கு என்று கடவுள் கிடையாதா.?

நான் ஒரு சில வினாடிகள் சிந்தித்தேன். கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒரு கடவுள் ( ஆண் ) இந்த உலகை சிருஷ்டித்ததாகவும் அவர் இவ்வுலகில் வாழும் மனிதர்கள்பால் அக்கறை கொண்டுள்ளவர் என்னும் போதனையில் வளர்ந்தவர்கள்.ஹிந்துமதம் குறித்து அறியாதவர்களுக்கு ஒரு மதகுரு, ஒரு புனித நூல், ஒரு கடவுள் என்னும் கோட்பாடு தவிர மற்றவை புரிந்து கொள்ள முடியாதது, தெரியாதது.

நான் அவளுக்கு விளக்க முயன்றேன்.ஒருவன் ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்

இந்தமாதிரியான எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத ஒரு மதம் மாற்றாரின் தாக்குதலைதாங்கி இத்தனை வருடங்கள் இருக்க முடியுமா என்னும் வியப்பு அவள் முகத்தில் தெரிந்தது
 

“ வித்தியாசமாகவும் இண்டெரெஸ்டிங் ஆகவும் இருக்கிறது நீங்கள் பக்தி உள்ளவரா.?

நான் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்வதில்லை. எந்த வழிபாட்டு முறையையும் செய்வதில்லை. சின்ன வயதில் செய்திருக்கிறேன்.இப்போது  சில நேரங்களில் செய்யும்போதும் விரும்பிச் செய்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கும்.

“ விரும்பிச் செய்கிறீர்களா.? கடவுளிடம் உங்களுக்கு பயம் இல்லையா.?

“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை. மேலும் இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாரும் எப்போதும் கட்டாயப் படுத்துவதில்லை.“

சிறிது நேர யோசனைக்குப் பிறகு மதம் மாற வேண்டும் என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா?என்று கேட்டாள்.

நான் ஏன் மாற வேண்டும்.? எனக்கு சில சடங்குகளும் கோட்பாடுகளும் உடன் பாடில்லை என்றாலும் என்னை யாரும் மத மாற்றம் செய்ய முடியாது. ஹிந்துவாக இருப்பதால் எனக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகவும் முடியும். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் நான் ஹிந்துவாக இல்லை. விரும்பியே இருக்கிறேன்.

நான் அவளுக்கு விளக்கினேன். ஹிந்துயிஸம் என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறியும் முறையும் என்று. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் போல் எந்த ஒரு தனி மனிதராலும் தோற்றுவிக்கப் படவில்லை. எந்த அமைப்போ குழுவோ சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை

“ அப்படியானால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.?

“ நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு தெய்விக சக்தியை மறுத்து ஒதுக்கவும் இல்லை. எங்கள் நூல்கள், ஸ்ருதிக்களும், ஸ்மிருதிக்களும், வேதங்களும், கீதையும் உபநிஷத்துக்களும் கடவுள் இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்றே கூறுகின்றன. ஆனால் நாங்கள் எங்கும் நிறைந்த, சர்வ சக்தி மிகுந்த அந்த பரப் பிரும்மத்தை இந்த பிரும்மாண்டத்தை சிருஷ்டி செய்தவராக வணங்குகிறோம்.

“ நீங்கள் ஏன் ஒரு தனிப்பட்ட கடவுளை வணங்கக் கூடாது.?

எங்களுக்கு கடவுள் என்பது ஒரு கோட்பாடு. நம்பிக்கை. விவரிக்க இயலாத எங்கும் விரவி இருக்கும் அரூபம். ஒரு குறிப்பிட்ட கடவுளின் பின் மறைந்து அவரை நம்பாவிட்டால் தண்டனைஎன்றெல்லாம் பயமுறுத்தி அவரை வணங்க வைக்க அவர் ஒன்றும் கொடுங்கோலர் இல்லை. பயத்தையும் மரியாதையையும் திணிப்பவர் அல்ல. ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களை ஏமாற்றி , மூட நம்பிக்கைகளை வளர்த்து ,மதம் குறித்த சிந்தனைகளையே தடம் மாறச் செய்பவர்களும் அவர்கள்போதனையில் மயங்கி ஏமாறுபவர்களும் இருக்கலாம். ஆனால் வேதாந்த ஹிந்துமதம் இவற்றை எல்லாம் மறுதளிக்கிறது.

“ நல்லது கடவுள் இருக்கலாம் என்று நம்பி வழிபடுகிறீர்கள். வேண்ட்வும் செய்கிறீர்கள்..உங்கள் வேண்டுதல்தான் என்ன.?

லோக சமஸ்த சுகினோ பவந்து. ஓம் ஷாந்தி ஷாந்தி.”( அமைதியுடன் வாழ்க வையகம்.)

“ வியப்பாயிருக்கிறது. இந்த வேண்டுதலின் பொருள் என்ன. ?

இந்த உலகும் அதில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் எங்கும் அமைதி நிலவட்டும்

இந்த மதம் பற்றிய விஷயங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது. ஜனநாயக முறையில் இருக்கிறது.பரந்த விசாலமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

“ உண்மையில் ஹிந்துயிசம் என்பது வேதங்களிலும் பகவத் கீதை போன்ற நூல்களிலும் வேர் விட்டுக் கிளர்ந்த ஒரு தனி மனிதனின் மதம்..அவனது வாழ்வியலுக்கும், எண்ண ஓட்டத்துக்கும் சித்தாந்தங்களுக்கும் ஈடு கொடுத்து அவன் விரும்பும் பாதையில் அவனுடைய கடவுளை அடைய வழி வகுக்கும் மிக எளிமையான மதம்

“ ஒருவன் ஹிந்து மதத்துக்கு மாறுவது எப்படி.?
“ யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி
எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனையும் அவனது சிருஷ்டியையும் நேசிப்பதேஅவனைத் தேடும் முயற்சியின் முதல் படி. இசவஸ்யம் இதம் ஸர்வம் ( ISAVASYAM  IDAM  SARVAM ) எங்கும் நிறைந்திருக்கும் அவனை எதிலிருந்தும் பிரித்து அறிய முடியாது. உயிருள்ள மற்றும் ஜடப் பொருளை கடவுளாக மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது ஹிந்துயிசம் .அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது. வாழ்வின் நியதிகளைக் கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது. அவனவனுக்கு உண்மையாக இருப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.ஹிந்துயிசத்தில் கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரமில்லை. எல்லோருக்கும் பொதுவானது. ஹிந்துக்கள் ஒரு ஆண்டவனை பல உருவங்களில் பல நிலைகளில் வழிபடுகிறார்கள் அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
எம்மதமும் சம்மதமே என்றே முன்னோர்கள் அறிவிறுத்தினர். ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.



நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.  
  
    ( ஆங்கிலத்தில் இருந்த பதிவைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன்.) 
      ------------------------------------------------------          .





Thursday, July 19, 2012

பார்வையும் மௌனமும்.


                                           பார்வையும் மௌனமும்.
                                           -----------------------------------
                                                      ( ஒரு சிறு கதை.)


ஹரே ராம, ஹரே ராம, ராமராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே வாய் ஓயாமல் ஈசுவரன் நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கட்டும். மனம் அலைபாயாமல் ஒரு நிலைப் படும். உன் துன்பங்களை மறக்க இதுதான் சிறந்த வழி என்று , அன்று யாரோ சொல்லிச் சென்றதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தாள் காமுப்பாட்டி.வாய் ஓயாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கலாம். மனம் ஓயாமல் சிந்திப்பதை தடுக்க முடியுமா.? பாட்டி என்று எல்லோரும் அழைக்கின்றனரே. அப்படி அவளுக்கு என்னதான் வயதாகிவிட்டது.ஒரு முப்பத்தைந்து இருக்குமா. ? முப்பத்தைந்து வயதில் பாட்டியா.? திருமணமே ஆகாதவள் எப்படிப் பாட்டியாக முடியும்.?

சிறு வயதில் வைசூரி வந்து பார்வை போனவளை அவளது தமையன் சுந்தா எனும் சுந்தரேசன்தான் பராமரித்து வந்தார். ஒரு கப்பல் கம்பனியில் ஸ்டூவர்ட் ஆகப் பணியாற்றி அப்போதைய ரங்கூனில் பணியாற்றி வந்தவர் நல்ல நிலையில்தான் இருந்தார். எப்போதும்போல் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமைவதில்லையே. இரண்டாம் உலகப் போர் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. அவரவர் உயிர் தப்பிப் பிழைக்க இடம் பெயர்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆங்கிலேயரதும் ஜப்பானியரதும் குண்டு மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போயிற்று. ஆயிரக் கணக்கானோர் உழைத்து சேர்த்த பொருளைத் துறந்து உடல் ஆவி  காக்க நடந்தே தூரத்தைக் கடக்கச் செய்த முயற்சியில் மனம் உடைந்தவர் பலர் .பல சமயங்களில் எடுக்கும் முடிவு சரியா தவறா என்று சிந்திக்கக் கூட முடியாத நேரத்தில் எடுக்கப் படுகிறது.கட்டிய மனைவி,பெற்ற பிள்ளைகள் இருவர் கண்
தெரியாத சகோதரி; மணமாகாதவள்  யௌவனம் குன்றாதவள் . உயிருக்குப் பயந்து ஓடும்போது அவளைச் சேதமில்லாமல் ஊர் கொண்டு போய்ச் சேர்க்க அவளது தலை மழிக்கப் பட்டது. மணமேயாகாதவளுக்கு விதவைக் கோலம் போடப் பட்டது. உயிர் பிழைக்க மெய் வருந்தி வந்து சேர்ந்தபோது அவளுக்குச் சற்றே மனம் பிறழ்ந்திருந்தது.,சிறிது சப்தம் கேட்டாலும் நிலை குலைந்து போய்விடுவாள் ஆகாய விமானங்கள் குண்டு மாரி பொழிகின்றன என்றே பயந்து அலறுவாள்.

”‘ராம ராம ராம ராம’ சுந்தா, பேப்பர் பையன் பேப்பர் போட்டுட்டு போய் விட்டான். மதிலோரத்தில் விழுந்திருக்கு பார்” கண் தெரியாதவ.ள்தான். ஆனாலும் வந்தது பேப்பர் பையன், வீசி எறிந்த பேப்பர் மதிலோரத்தில் வீழ்ந்திருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லுவாள், காமுப் பாட்டி. அவளைப் போய் பாட்டி என்று சொல்ல மனம் வருவதில்லை. ஆகவே இனி அவள் வெறும் காமுதான். கண்புலன் இல்லாதிருந்தாலும் காமுவுக்கு, மீதி எல்லாப் புலன்களும் மும்மடங்கு கூர்மையானவை. அவளது எல்லா வேலைகளையும் அவளே செய்து கொள்வாள். அடுப்பு மூட்டி வென்னீர்போட்டு குளித்து, துணி துவைத்து என்று எல்லாப் பணிகளும் செய்வாள். அவளுக்கு சப்தம் சிறிது அதிகமானாலும் துடித்து விடுவாள். ‘ என் ஆயுசை எடுத்துக் கொள். குண்டு போடாதே’ என்று வானம் பார்த்து ( ? ) அலறுவாள். அந்த நேரம் மாத்திரம் மட்டுமே அவள் வித்தியாசமாய் நடந்து கொள்வாள். அதனால் அந்த வீட்டில் ஒருவர் பேசுவது அடுத்தவருக்குக் கேட்பதே கடினம் என்றவகையில் மெதுவாகவே உரையாடுவார்கள்

.
காமு அந்த வீட்டில் இன்னொரு பொருள் என்ற நிலையிலேயே கருதப் பட்டு வந்தாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா.?உடலும் மனதும் துணைக்காக ஏங்காதா.?. சுந்தரேசன் மனைவிக்கு இந்த எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தன் கணவனிடம் அன்பாகப் பேசவே தயங்குவாள். காமுவுக்குத்தான் பாம்புச் செவியாயிற்றே. சிறிது சலனம் ஏற்பட்டாலும் ‘ என்னஎன்று கேட்டுவிடுவாள். அந்த வீட்டுக்கு வந்து போகிறவர் யார் யார் என்று காமுவுக்கு நன்றாகத் தெரியும் காலடி ஓசையிலேயே வித்தியாசம் கண்டு கேள்விகள் கேட்கத் துவங்கி விடுவாள்.

சுந்தரேசனின் மனைவியின் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி வந்து போவார்கள் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார். இவர்கள் எல்லோரையும் காமுவுக்கு அடையாளம் ( ? ) தெரியும். காமுவுக்கு நல்ல குரல் வளம். அவளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தால். இசையில் மனம் லயித்து அவளைப் பற்றிய சிந்தனைகள் அவளை அதிகம் வாட்டாது என்று எண்ணி காமுவுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க ஏற்பாடாயிற்று. மதியம் பாட்டு சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வரும் சமயம் அநேகமாக வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.உச்சஸ்தாயியில் வரும் பாட்டை தவிர்க்க ஆசிரியரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டது. ஒரு விதத்தில் அது சுந்தரேசனின் மனைவிக்கு அனுகூலமாக இருந்தது. அவருடைய மதிய உறக்கம் கெடாது அல்லவா.

வீட்டில் போதிய மனிதர்கள் இருந்தும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்வதில்லை. என்னதான் பேச முனைந்தாலும் ஒரு இறுக்கச் சூழல் இருந்து கொண்டே இருந்தது. மனதில் தோன்றும் எண்ணங்கள் வெளிப்படுத்தப் படாமல் அநேகமாக சருகாகவே உதிர்ந்து விடுவதுண்டு. காமுவுக்கு சில நேரங்களில் எல்லாவற்றின் மீதும் ஆத்திரம் வரும். அப்போதெல்லாம் அவள் ஏதாவது சொல்ல வரும் போது கிருஷ்ணா, ராமா “ என்று ஜபித்துக் கொண்டிரு. மனசை அலைய விடாதே என்று அடக்கி விடுவார் சுந்தரேசன். அவருக்குப் பதில் தெரியாக் கேள்விகள் கேட்டுவிடுவாளோ என்னும் பயம்.. ஒன்றுமே தெரியாமல் பார்வையே இல்லாமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு மனதை எதில் லயிக்கச் செய்யமுடியும். ?கிருஷ்ணனையும் ராமனையும் வெறும் வார்த்தைகளால் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்களே என்று கோபம் வரும் அந்த உணர்ச்சியையும் யாரிடமும் காட்ட முடியாது.

ஒரு முறை பாட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது எங்கோ ஒரு பட்டாசுச் சத்தம் கேட்டு அல்றினாள். ” என் ஆயுசை எடுத்துக் கொள்; குண்டு போடாதே” என்று துடித்தவளை அனிச்சையாக பாட்டு வாத்தியார் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் காமுவுக்குள்  என்னவோ சலனங்களை ஏற்படுத்தியது. எதுவோ தனக்கு மறுக்கப்பட்டு இப்போது அறியாமல் பெறப் படும்போது சற்றே மனமும் உடலும் குறு குறுத்தது. என்னவோ தவறு செய்கிறோமோ என்று தோன்றினாலும் அந்தத் தவறை செய்வதில் அலாதி இன்பம் இருப்பதை உணர்ந்தாள்..பாட்டு ஆசிரியரும் சற்றும் யோசிக்காமல் ஆறுதலாக அணைத்தவர், யாராவது பார்த்து விடுவார்களோ என்றுதான் பயந்தார். கண் தெரியாவிட்டால்தான் என்ன. ?அவளது உடலில் ஓடிய உணர்ச்சிகள் அவரால் உணரப் பட்டதே. ” வெறும் வெடிச்சத்தம்தான். யாரும் குண்டு போடவில்லை “என்று ஆறுதலாகக் கூறியவர் அவளுடைய இந்த பயம் போக்கும் மருந்து தன்னிடம் இருப்பதை உணர்ந்தார். 

அடுத்த சில நாட்களில் காமுவிடம் சற்று மாற்றம் இருப்பதை சுந்தரேசன் உணர்ந்து கொண்டார் .ராம ராமாவுக்குப் பதில் சில பாட்டுக்கள் முணுமுணுக்கப் பட்டன.ஆசை முகம் மறந்து போச்சே “ என்றும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் “ என்றும் அவளது பாட்டு சத்தம் இயல்புக்கு முரணாக ஒலிக்கக் கேட்க சுந்தரேசன் தன் மனைவியிடம் இது பற்றிக் கேட்டார். ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத் தெரியலாம் அல்லவா.

“காமுவின் சுபாவத்தில் என்னவோ மாற்றம் தெரிகிறதே ,கவனித்தாயா.

“ அவள் முன்னைப் போல் இல்லை. நானும் கவனித்தேன்..அவகிட்ட இது பற்றி எப்படிக் கேட்பது “

“ நீ எதையும் கேட்டு வைக்காதே. ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தானாத் தெரியறது.என்று மனைவிக்கு கடிவாளம் போட்டார். சுந்தரேசன்.

அந்த நாள் சீக்கிரமே வந்தது. காமு ஒரு நாள் “வெண்ணிலவு நீ எனக்கு;
மேவுகடல் நான் உனக்கு; பண்ணின் சுதி நீ எனக்கு; பாட்டினிமை நான் உனக்கு “ என்று பாடிக் கொண்டிருந்தாள்.

“ ஹாய் ! அத்தைப் பாட்டி நல்லாப் பாடறாங்களேஎன்று குழந்தைகள் பாராட்ட வந்ததே கோபம் காமுவுக்கு

.
“ நான் என்ன பாட்டியா உங்களுக்கு. கிருஷ்ணா ராமா ன்னு இருந்தா பாட்டியாகி விடுவேனா. காலா காலத்துல எனக்கும் கலியாணம் கார்த்தின்னு இருந்தா இப்படிக் கூப்பிடுவேளா..எல்லாம் ஒங்கப்பாவச் சொல்லணும் “ என்று பிலு பிலுக்க துவங்கி விட்டாள். யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரச்சனையாகி விட்டது. காமுவை பாட்டி என்று நம்பச் செய்தது.

அதன் பின் எல்லோரிடமும் காமு சிடுசிடுவெனவே இருந்தாள் சுந்தரேசனும் அவன் மனைவியும் கலந்தாலோசித்தனர். காமுவின் மனம் முன்னைப் போல் ஈஸ்வர நாமத்தில் லயிக்கவில்லை. எப்போதும் பாடிக்கொண்டே இருந்தாள். காமுவை எப்படியாவது பாட்டுப் பாடுவதை நிறுத்தச் செய்ய வேண்டும்.பாடும் பாட்டு வேறு எண்ணங்களுக்கு வித்திடலாம் அதனை நிறைவேற்றும் உத்தியாக பாட்டு ஆசிரியரை வர வேண்டாம் என்று சொன்னார்கள். பாட்டுவாத்தியாருக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் , கொஞ்சம் புரியாதது போலவும் இருந்தது. எதையாவது கேட்கப் போய் எங்காவது கொண்டு விட்டால் என்ன செய்வது.? ஏதும் கேட்காமல் அவரும் நின்றுவிட்டார். பாட்டு நிறுத்தினது காமுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கேட்டாள். லௌகீகப் பாடல்கள் கற்றுக் கொள்வதால் மனம் 
கட்டுக்கடங்காமல் போய்விடும்.. அதனால் அவளுக்கும் மற்றவர்களுக்கும் மன அமைதி குறையும் என்றும் கூறி அவளை அடக்கப் பார்த்தனர். பாட்டு வாத்தியாரால்தான் எல்லாம் கெட்டுப் போவதாகவும் அதனால்தான் அவரை நிறுத்திவிட்டதாகவும் கூறினர். காமுவுக்கு எதையும் ஜீரணிக்க முடியவில்லை. என்னவென்று சொல்ல முடியாத ஒரு வைராக்கியம் அவளது உள்ளத்தில் எழுந்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விடாமல் பாடத் துவங்கி விட்டாள். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும் கதையாய் தோன்றியது சுந்தரேசனுக்கும் அவர் மனைவிக்கும்.

இவ்வளவு நாள் இல்லாத பிரச்சனை இப்போது தலை தூக்குவது தெரிந்தது.
கண் தெரியாதவள், வேண்டாத எண்ண்ங்களுக்கு அடிமையாய் கெட்டுத் தொலந்தால் என்ன செய்வது. எதையாவது சொன்னால் எதிர்த்தல்லவா பேசுகிறாள். கண் தெரியாதது போல் வாயும் ஊமையாய் இருந்தால் எவ்வளவு நல்லதாயிருக்கும்.கணவன் மனைவி பேசிக்கொண்டதைக் காமு கேட்டு விட்டாள். என்னவென்று சொல்ல முடியாத பாரம் அவளை அழுத்திற்று. குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா என்ன.?ஒரு இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். ‘ கண் தெரியாமல் இருப்பது போல் பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்என்று முடிவெடுத்துவிட்டாள் காமு.

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இருண்ட உலகில் பல்வேறு  சப்தங்களுக்கிடையில் நிரந்தர மௌனத்தின் ஓசையிலேயே காலம் கடத்திய காமுவின் நினைவுகள் சுந்தரேசனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
“ மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் “எங்கோ ஒலிக்கும் பாடலும் அதன் முரணும் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது
-------------------------------------------------











.