வெள்ளி, 27 ஜூலை, 2012

கர்நாடக இசையும் என் கனவும்...


                                       கர்நாடக இசையும் என் கனவும்....
                                           -------------------------------------

இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. I KNOW I AM DIGRESSING



கர்னாடக இசையை முறையாகப் பயிலலாம் என்றால் என் பணி நேரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும் என் குரல் வளத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை ஒரு விதூஷிகியாக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த முயன்றேன். என் வீட்டில் நான் என் மனைவி, இரு குழந்தைகள், அவள் தம்பி என, எல்லோர் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியவள் மேல் இன்னொரு பாரமும் ஏற்றப் பட்டது. பாட்டுக் கற்றுக் கொள்வது பாரமா எனக் கேட்பவர்கள் அந்த சூழ்நிலை உணர்ந்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள், சரி தீர்மானம் எடுத்தாய்விட்டது. யாரிடம் பாட்டு கற்றுக் கொள்வது?. எங்கள் நல்ல காலம் திருச்சி ஆண்டாள் தெருவிலிருந்து ஒருவர் பீ.எச்.இ.எல்  டௌன்ஷிப்புக்கு வந்து சிலருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார் என்று கேள்விப் பட்டோம். மதியம் வேலை எல்லாம் முடிந்து சற்று அக்கடா என்று என் மனைவி இருக்கும் நேரமே பாட்டு கற்க உகந்த சமயம் என்று முடிவாயிற்று.

வைத்தியநாத பாகவதர் என்பது பாட்டு வாத்தியார் பெயர். 45-/வயதிருக்கலாம் சுமாரான உயரம். சற்றே மெலிந்த தேகம். பார்த்த உடனே சொல்லி விடலாம்
தேவைகளைப் பூர்த்திசெய்ய அல்லாடுபவர் என்று. காலையில் திருச்சியிலிருந்து டௌன்ஷிப்புக்கு வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்ப மாலை விளக்கு வைக்கும் நேரமாகி விடும்..வாரம் இரண்டு நாள் பயிற்சி. சும்மா சொல்லக் கூடாது . அபார ஞானம் உள்ளவர். எந்த ஸ்தாயியிலும் அசாதாரணமாகப் பாடுவார். அவரை ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமுன் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றும் அவர் பாடிய அந்தப் பாட்டு என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “பஞ்சாட்சத்  பீட ரூபிணி ,மாம்பாஹி. ஸ்ரீராஜராஜேஸ்வரி “என்று உச்சஸ்தாயியில் ஆபேரி ( ? ) ராகத்தில் பாடக் கேட்டதும் , இவர்தான் என் மனைவிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் போகும் குரு என்று தீர்மானித்து விட்டோம்..அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அலசூரில் இருந்தவர் என்பதும், சற்றுக் காலங்கடந்து மணம் முடித்தவர் என்பதும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறத் தெரிந்து கொண்டோம். எங்கள் ஒரு வீட்டுக்காக வர வேண்டியவருக்கு எங்கள் எதிர் வீட்டு நண்பரின் மனைவியும் பாட்டுக் கற்றுக் கொள்வதன் மூலம் இன்னொரு பயிற்சியாளராகச் சேர, கொஞ்சம் அதிக வருவாய்க்கு வழி கிடைத்தது. அப்பொழுது ட்யூஷன் ஃபீஸாக மாதம் 20-/ ரூபாய் கொடுத்த நினைவு. ஒரு ஹார்மோனியப் பெட்டி மாத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவருக்கு நூற்றுக் கணக்கான கிருதிகள் மனப் பாடமாகத் தெரியும். ஸ்வரம் ,எழுதி, சாஹித்தியமும் எழுதிக் கொடுப்பார்
.
எந்தப் புத்தகமும் பார்க்க மாட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் என் மனைவி அவரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார். என் மனைவியின் ஆர்வம் அதிகரித்ததுபோல் எதிர்வீட்டு நண்பரின் மனைவியின் ஆர்வம் குறைந்து அவர் விலகிக் கொண்டார். எங்கள் துர திர்ஷ்டம் எனக்கு விஜயவாடாவுக்கு மாற்றல் ஆகி என் மனைவியின் பாட்டு கற்கும் படலம் முற்றுப் புள்ளி பெற்றது. அதற்குள் ஒரு நாள் டௌன்ஷிப் கோயிலில் பக்க வாத்தியங்களுடன் இரண்டு மூன்று பாட்டுகள் என் மனைவியை பாட வைத்தார். அப்போது என் மனைவி பாடிய “நகுமோமு கனலேனி  நாஜாலி தெலிசி “என்ற பாட்டு நல்ல வரவேற்பு பெற்ற்து.

என்ன சொல்லி என்ன பயன்.?என் மனைவி பாட்டில் விதூஷிகியாகக் கொடுத்து வைக்கவில்லை. சும்மாவா சொல்லிப் போனார்கள் பாடப் பாட ராகம், மூட மூட ரோகம் என்று. விஜயவாடா சென்றதும் தோதாக வாத்தியார் கிடைக்காததால் மேலும் கற்கவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் போயிற்று. சொல்லப் போனால் என்னுள் அவளை பெரிய பாட்டுக்காரியாக்க வேண்டும் என்ற நெருப்பும் அணைந்து விட்டது. அவள் பாட்டுக் கற்றதும், பாடியதும் எல்லாம் வெறும் நினைவாகி விட்டது.

நான்கு ஆண்டுகள் கழிந்து மீண்டும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபிறகு பல நாட்கள் கழித்து வைத்தியநாத பாகவதரைச் சந்தித்தோம். அவர் மிகுந்த சிரம தசையில் இருந்தார். உடல் நலமும் சீராக இருக்கவில்லை. மறுபடியும் அவரை ட்யூஷனுக்காகக் கூப்பிட்டோம். சில நாட்கள் வருவார். பல நாட்கள் வர மாட்டார். அவர் குரலும் அதிலிருந்த கம்பீரமும் காணாமல் போயிருந்தது. அதற்குள் டௌன்ஷிப்பிலேயே ஒரு பாட்டு ஸ்கூல் ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கட்டான அமைப்புடன் போட்டி போட முடியாமல் வைத்தியநாத பாகவதர் காணாமல் போய்விட்டார்.

என் பிள்ளைகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். அவர்களது நாட்டம் மெல்லிசையின்பால் சென்றது. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது. நானும் என் பங்குக்கு வீட்டில் ஏதாவது பாட்டுப் பாடினால் அவர்களின் எதிர்ப்பு இருந்தது. என் சாரீரம் ( ? )
கன கம்பீரமாக இருக்கும். டீக்கடையில் பாட்டு போட்டது போல் இருக்கிறது, என்றும் என் குரல் தொலைதூரம் வரைக் கேட்கிறது என்றும் கூறி கண்டித்து என் வாயை அடைப்பார்கள். பாட்டுக் கேட்பது மட்டும்தான் எனக்குக் கொடுத்து வைத்தது. 

வெகு நாளைக்குப் பிறகு மீண்டும் என் வீட்டில் ஒரு பாடகரை உருவாக்கும் ஆசை எழுந்தது. என் மூத்த மருமகளைப் பிடித்தேன். ஆரம்ப பாடங்களை என் மனைவி கற்பிக்க தயாராயிருந்தாள். ஒரு நல்ல நாள் பார்த்து குரு தட்சணை எல்லாம் கொடுத்து பாடம் கற்கத் தயாரானாள் என் மருமகள். சரளிவரிசை, ஜண்டை வரிசை என கம்பீரமாக என் மனைவி பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை. அது முடியாதென்று தெரிந்ததும் அவளுடைய ஆர்வமும் நீரூற்றிய நெருப்புபோல் பிசு பிசுத்து விட்டது.அத்துடன் ஒரு சங்கீத கலாநிதியை உருவாக்கும் என் கனவும் காணாமல் போயிற்று. 
----------------------------------------------------         .       .   .


 .









17 கருத்துகள்:

  1. சங்கீதமாய் இசைத்த மலரும் நினைவுகளின் ஆலாபனை ரசிக்கவைத்தது..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் சங்கீத அபிமானம் இப்படி ஆகிப்போனதே?

    பதிலளிநீக்கு
  3. LOL! My music classes experiences were confined to playing with my music teachers' kitten- Thilo...

    Self-interest is extremely important for becoming good in music.

    A relative of ours'-- he learnt music by listening to AIR Wednesday music classes. He sang so well! I was surprised when he told me how he used to learn.

    My father has a gr8 voice... had he learnt- he'd have been very good... but he chose to be a 'rasika'...

    Depends on the person!

    பதிலளிநீக்கு
  4. ஒரு சிறுகதைக்கான இல்க்கணங்களுடன் அழகான ஒரு அனுபவப் பகிர்வு. சிலருக்கு வாய்ப்பிருந்தால் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வமிருந்தாலும் வாய்ப்பு அமைவதில்லை. இரண்டும் அமைந்தால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முனைப்பு நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் சங்கீத ஆர்வமும் ,மனைவியை சங்கீத கற்க வைத்த அனுபவமும் அருமை.
    மருமகளிடம் சங்கீதக்கலையை வளர்க்க முடியவில்லையென்றால் என்ன! நம் பேரக் குழந்தைகள் இருக்கிறார்களே அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். சிறு வயதில் சொல்லிக் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.

    பதிலளிநீக்கு
  6. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது.//

    உங்கள் விருப்பம் கர்நாடக இசை என்றாலும் உங்கள் குழந்தைகள் பாட்டு பாடுகிறார்கள், வாத்தியம் இசைக்கிறார்கள் அதுவே மகிழ்ச்சிதானே!

    பதிலளிநீக்கு
  7. நிறைய பொறுமையும் டெடிகேஷனும் வேண்டியிருக்கும் வித்தை. என் மகள் எட்டு வருடமாக கற்று வருகிறாள். அதற்க்கு முன் நான் பாடினால் ரசிப்பாள். இப்போது பாடினால், சுருதி சரியில்லை. பாட்டை கெடுக்கற.. நான் வேணும்னா கத்து தர்றேன். ஒழுங்கா கத்துண்டு பாடேன் என்கிறாள்!

    பதிலளிநீக்கு
  8. நான் இந்த விஷயத்தில் சுத்த ஜீரோ
    இப்போது கூட அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள
    ஆவலாகத்தான் இருக்கிறேன்
    எப்படியெனத்தான் தெரியவில்லை
    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு
  9. //இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது//

    அப்படியே எனக்கும் பொருந்தும், ஆனால் நான் என்ன நினைப்பேனெனில் , விமானம் பற்றிய விபரம் அறிந்து தான் விமானத்தில் பறப்பேனென்பதும், சில சாப்பாட்டைச் சமைப்பது பற்றி அறிந்தே சாப்பிடுவேன் என்பது போன்றது, அதனால் நம் இசையை 10 வயதில் கோவிலில் நாதஸ்வர இசையுடன் அனுபவிக்கத் தொடங்கி, இன்று, இதை இப்போது எழுதும் போது musicindiaonline-ல் மெடலின் சிறீநிவாஸ் இன் கச்சேரி, கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்.
    அவர் வாசிக்கும் ராகம் மத்யமாவதி என எழுதியுள்ளார்கள். அது சரியா? தவறா? எனக்குத் தெரியாது. அந்த ஆய்வில் ஈடுபட்டு , இந்த அருமையான இசைத் தருணத்தை இழக்க விரும்பவில்லை. அப்படி உருக்கமாக வாசிக்கிறார்.
    ' ஆனாலும் உந்தன் அதிசயங்கள் தன்னிலே ,கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தையடா???
    இனி என்னால் இதைக் கற்க முடியாது, இருக்கும் வரை கேட்பதே போதும்.
    எப்படியோ இசை ஆர்வலர்களை உருவாக்கியுள்ளீர்கள். போதுமையா?

    பதிலளிநீக்கு
  10. @ இராஜராஜேஸ்வரி,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ லக்ஷ்மி,
    @ மாதங்கி மாலி,
    @ கீதமஞ்சரி,
    @ கோமதி அரசு,
    @ பந்து,
    @ ரமணி,
    @ யோகன் பாரிஸ்
    வருகை தந்து கருத்து
    இட்டவர்களுக்கு என் நன்றி.
    LOL என்றால் என்ன மாதங்கி.
    என் எழுத்து சத்தமாக சிரிக்க
    வைக்கிறதா.? பாடலை அதன்
    இசை/ஓசை இனிமைக்காக
    அனுபவிப்பதும்,நெளிவு சுளுவு
    தெரிந்து அனுபவிப்பதும் வேறு.
    வெகு நாட்களுக்குப் பிறகு
    வருகை தரும் யோகன் பாரிசுக்கு
    ஒரு ஸ்பெஷல் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. நல்ல தரமான சிறுகதை போல இசை கச்சேரி நடத்தி உள்ளீர். நான் ஒன்றும் இசையில் பெரிய மேதாவி இல்லை, ஆயினும் என்னை முழுமையாக படிக்க வைத்த தங்கள் நகைச்சுவை இழையோடிய செய்தி, பதிவு என்னை பரவசப் படுத்தியது.. இசை பற்றிய நுணுக்கங்கள் படிக்க, கேட்க ஆவலாக உள்ளேன்

    பதிலளிநீக்கு
  16. நல்ல தரமான சிறுகதை போல இசை கச்சேரி நடத்தி உள்ளீர். நான் ஒன்றும் இசையில் பெரிய மேதாவி இல்லை, ஆயினும் என்னை முழுமையாக படிக்க வைத்த தங்கள் நகைச்சுவை இழையோடிய செய்தி, பதிவு என்னை பரவசப் படுத்தியது.. இசை பற்றிய நுணுக்கங்கள் படிக்க, கேட்க ஆவலாக உள்ளேன்

    பதிலளிநீக்கு