Sunday, February 27, 2011

தந்தையும் மகனும்....

தந்தையும்  மகனும்.
---------------------------

             ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய். 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிட 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை. 
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன். 
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை. 

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது, 
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான். 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல், கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர். 
============================================  












Thursday, February 24, 2011

காதல்....என் கோணத்தில்.

காதல்  என்  கோணத்தில்
--------------------------------------
              காதல் . இந்த மூன்றெழுத்து வார்த்தை எத்தனை பேரையோ வாழ வைக்கிறது இல்லை வாட்டி வதைக்கிறது. காதலையும் தமிழனையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும்,ஏதோ காதல் தமிழனுக்கு மட்டுமே உள்ள உணர்வு என்பதுபோல் எல்லாம் பேசியும் எழுதியும் தங்கள் பெயரையும் புகழையும் ரொக்கத்தையும் நிரப்பிக் கொண்டவர்கள் நிறைய உண்டு. வாழ்வில் காதல்தான் தலையானது மற்றவை தேவை இல்லாதது என்று எண்ணி எழுதி படமெடுத்து பார்ப்பவர் உள்ளங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி இளைய உள்ளங்களை மாசுபட வைத்து அதனால் ஏற்படும் நிகழ்வுகள் பலவற்றைக் காணும்போது படிக்கும்போது எங்கோ -இல்லை -எல்லா இடங்களிலுமே தவறு நேர்கிறது என்றே தோன்றுகிறது. ஆகவே காதலைப் பற்றிய சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

            அன்பு பாசம் நேசம் என்பதுபோல் காதலும் ஒரு உணர்வு. ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக வளரும்போது, ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு அதனால் அறியப்படும் அன்பே பாசமே நேசமே காதல் எனப்படுவது. காதலுக்கு கண்ணில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கண்வழியே கவரப்பட்டு கருத்து வழியே அறியப்பட்டு உடல் வழியே முடிந்து போவதே பெரும்பாலும் காதல் எனப்படுகிறது. காதலுக்கு வயசு அவசியம். ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமே வயசுக்கு வந்து விடுவதால்தான் ஆண்  பெண் மணம் செய்து கொள்வதற்கும் அவர்களிடையே வயசு வித்தியாசம் தேவைப்படுகிறது.

            ஆணும் பெண்ணும் காதல் கொள்ள எந்த முகாந்திரமும் தேவை இல்லை என்றாலும் காதல் வெற்றி பெற பல விஷயங்கள் நடக்க வேண்டி உள்ளது.முதலில் ஆண் பெண் இருவருக்கும் உள்ளது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்புத்தானா இல்லை உள்ளம் ஒன்றிய  அன்பா என்று தெரிய வேண்டும்.பெரும்பாலானவர்கள் பதின்மங்களில் வரும் இயல்பான உடல் ஈர்ப்புகளை காதல் என்று தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்.இதை உணர்ந்து கொள்வது எளிது. காணும்போது மட்டும் உடலில் மனதில் ரசாயன மாற்றங்கள்  நிகழ்வதும் மற்ற நேரங்களில் மற்றவர் நினைவே இல்லாமல் இருப்பதும் இது வெறும் ஈர்ப்பு சம்பந்தப்பட்டது என்று தெரியப்படுத்தும். எனக்குத் தெரிந்த ஒருவருடைய  பழைய டைரி ஒன்றை அகஸ்மாத்தாக கண்டு படிக்க நேரிட்டது. அதில் அவர் ஒரு பெண்ணின் பெயரை மூன்று நான்கு இடங்களில் எழுதியிருந்தார். அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி யாரென்று இப்போது கேட்டால் ,சத்தியமாக அவருக்கு எதுவும் நினைவில்லை. வயசுக் கோளாறில் அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணைக் கண்டு ஈர்க்கப்பட்டு, அவளுக்கு இவராகவே ஒரு பெயரும் வைத்து என்னென்னவோ எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்.இப்போது நினைவு படுத்தினால் அவருக்கு அது தமாஷாகவே தெரிகிறது

            சில சமயங்களில் காதல் என்று எண்ணிக்கொண்டு சிலர் கவிதைகளும் எழுதித் தள்ளுவர். காதல் அரிச்சுவடி என்ற பெயரில் என் கண்ணில் பட்ட அப்படிப்பட்ட ஒரு கவிதை , இதோ.
        கனவு.
        --------
அன்ன நடையழகி,
ஆடி வந்தென்முன் நின்று,
இன்பம் சேர்த்திடவே,
ஈட்டியாம் கருவிழியால்,
உள்ளம் கவர்ந்திடவே,
ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.
என்னையே மறந்து விட்டேன்,
ஏந்திழையின்  எழிலிலே
ஐயம் தீர்ந்திடவே,
ஒரு வார்த்தை அத்தான் என்று,
ஓதினால் போதுமடி,
ஒளவை கண்ட பெண்ணே.



                   தெளிவு
                  ------------

       கன்னல் மொழியுடையாள்
       காதல்  தீ மூட்டி என்னை,
      கிறுக்கனாய்  ஆக்கிவிட்டு,
      கீழ்நோக்கும் தலை தூக்கி
      குறுநகை ஒன்றுதிர்த்து ,
      கூறிவிட்டாள் தன் கருத்தை.
      கெம்பு சிலையழகி,
      கேளடி என் கூற்றை,
      கைவிடேன் உன்னை என்றும்,
      கொஞ்சிடும் கிளியே என்றேன்.
      கோதையும் மறைந்தனள் -கண்ணைக்
      கெளவிய  தூக்கமும்  மறைந்ததடா.

இந்த மாதிரி கவிதைக் காதல்கள் பெரும்பாலும் ஒற்றைவழிப் பாதையாகவே இருக்கும்.
          
               சாதாரணமாக ஒரு பெண் ஆண்மகனின் ஆளுமையை விரும்புகிறாள். ஆளுமை என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. அன்பு நிறைந்தவனா, பண்பு நிறைந்தவனா, பொறுப்புள்ளவனா, சம்பாதிப்பவனா, பிறருடைய மதிப்பைப் பெற்றவனா என்றெல்லாம் அவளை அறியாமலேயே கணிக்கிறாள். ஏனென்றால் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காதல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் முடிந்து விடும். காதல் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும், அல்லது குறைந்துகொண்டே இருக்கும். காதலிக்கும் போது காணப்படுவதெல்லாம் நிறை குணங்களே, அல்லது நிறை குணங்களே காட்டப்படுகின்றன. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருவர் இணையும்போது, குறை குணங்கள் மிகவும் பெரிதாகத் தெரியும். ஏமாற்றப்பட்டு விட்டோமோ  என்ற எண்ணம் தலை தூக்கும்.

            காதல் என்பது தூக்கத்தில் கனா காண்பது போன்றது. வாழ்க்கை ஒரு இன்ப வெள்ளமாய்த் தோன்றும். காதலுக்குப்பின் வாழ்வு என்பது விழிப்பு நிலையில் கடமைக் கடலாக அச்சுறுத்தும்.

             விட்டுக்கொடுக்கும் சுபாவம் இயற்கையிலேயே இருந்தால்தான் காதல் வெற்றி அடையும். சாதாரணமாகவே பெண் என்பவள் ஒரு உணர்ச்சிக் குவியல.எந்த  உணர்ச்சி-  அன்பு, அச்சம், பாசம், தாய்மை, நெகிழ்ச்சி, நாணம், முதலியவைகளில் அவள் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அதை வசப்படுத்தினால் அவளை வசப்படுத்தின மாதிரிதான்.

             நல்ல பண்புதான் எவனையும் காதலுக்குத் தகுதியானவன் ஆக்குகிறது. காதலுக்கும் பக்திக்கும் அகங்காரம் கூடாது. குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும். பெரும்பாலான காதல்கள் தோல்வியில் முடிகின்றன. ஏனென்றால் ,எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துப் பின் வருவது அல்ல காதல். இருவரில் ஒருவர் தணிந்து போகும் குணமுள்ளவராக  இருக்கவேண்டும். ஒரு வீட்டின் தலைமை மதுரையாகவோ  சிதம்பரமாகவோ இருக்கலாம். இரண்டுமாக இருக்க முடியாது. அதனால்தான் நம் முன்னோர்கள் பெண் அடங்கியும் ஆண் அடக்கவும்  இருக்கவேண்டும்  என்று நினைத்தார்களோ என்னவோ. ஆண்  அதிகம் படித்தவன் அதிக வயதுடையவன் என்பதெல்லாம் அதற்குத்தானோ என்னவோ. பெற்றவர்கள் பார்த்துத் தீர்மானிக்கும் திருமணங்களில் எல்லாவித  எதிர்பார்ப்புகளும் ஒத்துப் போகின்றனவா என்று  ஓரளவுக்காவது கணிக்கப் படுகின்றன.

            இந்தக் காலத்தில் சம வயதுடையவர்கள் சம படிப்புடையவர்கள் ஆணுக்குப் பெண் குறைந்தவள் அல்ல என்ற எண்ணமுடையவர்கள் காதலித்து கலியாணம் செய்து வாழும்போது, பாழும் ஈகோ (அகங்காரம்?) எல்லாவற்றையும் கெடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். காதல்  சாதி,மதம், மொழி, இனம் இதையெல்லாம் பார்த்து வருவதில்லை. ஆனால் இவை எல்லாம் திருமணத்துக்குப் பின்  வாழும் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையே.

            இலக்கியங்களில் வரும் ஆசைகளுக்கு பெயர் காதல். அவை படிக்க ரசிக்க நன்றாக இருக்கும். வாழ்வியலில் எந்த அளவுக்கு உதவும் என்பதே கேள்வி. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ,மகாத்மா காந்தி இவர்களின் வாரிசுகள் அவர்களின் காதலைத் தெரியப் படுத்தியபோது, அவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனை, சுமார் ஒரு வருடப் பிரிவு. அதன் பின்னரும் அவர்கள் காதலில் உறுதியாய் இருந்தால் பெற்றவர்களின் சம்மதம் கிடைக்கும் என்பதே. காதலர்கள் வெற்றி பெற்றார்கள்.

            இதை எல்லாம் நான் எழுதுவதால் நான் காதலுக்கு எதிரி அல்ல. காதல் வெற்றி அடைய வேண்டும்,தோற்கக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறேன் ஏனென்றால் நானே ஒரு காலத்தில் மாய்ந்து மாய்ந்து காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டவன். இதோ நடக்கிறது, 47-ஆவது வருடம், வெற்றிகரமான குறையாத காதல் வாழ்வில். 
===============================================



 








 














   







. .   






Sunday, February 20, 2011

விடியலுக்காக காத்திருக்கிறேன்

விடியலுக்காக காத்திருக்கிறேன். 
----------------------------------------------

          எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
          ஆக்கலும்  அழித்தலும் வெறும் தோற்றமே.,
          உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
          இது விஞ்ஞானம்  கூறும் தேற்றமே. 

இருளும் ஞாயிறும் விடியலும் 
மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும், 
நேற்று போல் இன்றில்லை, இன்று போல் 
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே. 

           விஞ்ஞானக் கூற்று உண்மையாயின், 
            நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
            யாதாக மாறினான்.?உடலம் வெந்து 
            சாம்பலாயிருக்கலாம், இல்லை மண்ணில் 
            மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
           அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் 
            எங்கே என்னவாக மாறினான்,?

இன்று  நானாக அறியப்படும் நான் நாளை 
என்னாவேன், சாம்பலோ மண்ணோ  அல்லாமல்.
உயிரென்ற ஒன்று இருந்ததால்தானே 
என் அப்பன்  அப்பனாகவும், நான் 
நானாகவும் அறியப்படுகிறோம்.?
அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா என்றழைப்பின்  அதுவும் எங்கே  உள்ளது. ?
யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள் 
எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே, 
விஞ்ஞானக் கூற்றுப்படி, விஞ்ஞானம்  விளங்க வில்லை. 

            ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும், 
            ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின் 
           வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது. 

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன். 
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான். 

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம். 

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு 
அதில்  ஒளி  தருவதே ஞாயிறின் ஜொலிப்பு 
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.

             ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க 
             ஞாயிறின்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன். 
          ==============================================
 















 




 

Wednesday, February 16, 2011

இனி நீயெல்லாம் உன் நினைவுதான்.

இனி நீயெல்லாம் உன் நினைவுதான்.
-------------------------------------------------------
         இன்று நீ நிறுவியுள்ள இந்தத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா. எங்கு   பார்த்தாலும் உன் பேச்சு; எங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்; எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள். பின் எப்படித்தான் இருக்க முடியும்.? நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.
         நண்பா, சிந்திக்க வேண்டும், ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயே. நீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும், சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்  நாங்கள் இல்லையா.? இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறது. எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.
       அதெப்படி நண்பா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டிவாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்"  என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?
       அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயேநினைவிருக்கிறதா.அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
      காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  கூறுவாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயே. யார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயே. பலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும் ஏதுவாக மதம் என்றும் சாதி என்றும் கூறி,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று இருந்தோரும் உண்டு என்றெல்லாம் நீ கூறியது  நினைவுக்கு  வருகிறது. உனக்கு வராது. நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே
        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட வர்ணாசிரம தருமங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் சாத்திரம் என்றும் சாற்றி, கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு அல்லாமல்,நாத்திகன் என்ற பட்டமும் கொடுத்து, வேறுபடுத்தும் வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று முழங்குவாயே உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாயே
      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாயே, நண்பா.
      சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் இக்குழந்தைகள் காப்பகம் மூலம் நான் செய்யும் மானுடத்தொண்டு, என்றும், என்னையே நானறியவும் பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ கூறித் துவங்கிய இந்தக் காப்பகம் நீயின்றித் தவிக்கும் என்றாலும், கிளை பரப்பி நிழல் தரும் அளவுக்கு வளர்த்தி நீ விட்டுச் சென்றிருக்கிறாய்  இது மேலும் தழைக்கவும் மேன்மேலும் வளரவும் அறியாமை இருள் நீக்க நாங்கள் பாடுபடுவோம். சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.
===================================   
 


.        .  
                                                                                                                                                                                 .
 



Saturday, February 12, 2011

எழுதுவது எழுதுவதின் நிமித்தம்; படிப்பது படிப்பதின் நிமித்தம்.

எழுதுவது எழுதுவதின் நிமித்தம்; படிப்பது படிப்பதின் நிமித்தம்.
-------------------------------------------------------------------------------
          எதற்காக எழுதுகிறோம் என்ற ஒரு கேள்வி கேட்டிருந்தார் பூவனம் ஜீவி  அவர்கள் ஒரு பதிவிலே. எழுதுகோல் குறியீடு என்றும் சிந்தனைதான் மூலதனம் என்றும் கூறி, அவன் எழுத்தே அவனைப் பிரதிபலிப்பதாகவும் எழுதி இருந்தார். எண்ணத்தைக்  கடத்தத்தான்  எல்லாமே  என்றெல்லாம் எழுதியிருந்தார். யாராலும் மறுதளிக்கமுடியாது. எழுதுபவரின் எழுத்தை மேம்போக்காக மேய்ந்து விட்டு,அவருடைய உணர்வுகளைப் புரிந்து  கொள்ளாமல் போனால் எங்கோ தவறு நேருகிறது என்று  தோன்றுகிறது. படிப்பவரிடமா .. எழுதுபவரிடமா ....?

          எனக்குஒருநாளில் கணினி முன் செலவிட நேரம் போதவில்லை.நான் எழுதும்போது என் வலையின் முகப்பில் கூறியபடி, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால்  உயிரூட்டி  எழுதினால்  அது உண்மையில் ஜொலிக்கும் என்று நம்புகிறவன். மற்றவர்களின்  எழுத்துக்களைப்  படிக்கும்போது, இந்த என் எண்ணம் மேலும்  வலு  அடைகிறது. ஒவ்வொருவருடைய  எழுத்தையும் அவருடைய எண்ணங்களே  கடத்துகின்றன. இதனை நிரூபிக்க வேறெங்கும்  போகத்தேவை  இல்லை. வலையில்  எழுதும் நண்பர்களுடைய  எழுத்துகளே  அதற்கு  சாட்சி. எரிதழல்  வாசனின்  எழுத்துகள் கனன்று  கொதிக்கும் அவருடைய உள்ளத்தின்  வெளிப்பாடே. நெஞ்சு பொறுக்காமல்  எழுதிக் குவிக்கிறார். எல்லோருக்கும்  நடைமுறை  நிகழ்வுகள்  பாதிப்பு  கொடுத்தாலும் கொந்தளிப்பை அவர் கொட்டுவதில் அவர் காட்டும் வேகம், அவர்களின் வலையின்   முகப்பிலேயே  தெரியும். ஆக்க, அளிக்க, அழிக்க என்றே முழங்குகிறார்  வாசன். ஆனால்  சுந்தர்ஜி  அவர்களோ  முண்டாசுக்  கவியின் முழக்கத்தையே  முகப்பாகக்  கொண்டு  வேகம் கூடுகையில் கைகள்  அள்ளிய நீரால் சற்றே  சமனப் படுத்துகிறார் .ஒவ்வொரு பதிவையும்  புதுப்பொலிவோடு  வெளியிடுகிறார்.
இவர்  எழுத்துக்கு இருக்கும்  மவுசு  இவருக்கு வரும்  பின்னூட்டங்கள்  மூலம்  தெரியலாம். அவருடைய ஒவ்வொரு எழுத்திலும்  அவரைக்  காணலாம்.

           கதை கட்டுரை கவிதை என்ற பிரிவுகளில் எழுதுகிறார்கள். சாதாரணமாக   கதை படிப்பதில் வலையுலகில் ஆர்வம் குறைவு என்றே தோன்றுகிறது. மேலும் எழுதுபவனின் உணர்வுகளை கதாபாத்திரங்கள்  மூலம் வெளிப்படுத்த சற்றே அவகாசம் தேவைப்படும். அதனால் கதைகளின்  வடிவம்  நீண்டிருக்கும்.  இன்றைய  வேக  கலாச்சாரத்துக்கு கதை எழுதுபவர்கள்  ஈடு  கொடுக்க வேண்டும்  என்றால், தனித்திறமை  வேண்டும். என் பதிவுகளில்  நான்கைந்து  கதைகள்  எழுதியுள்ளேன். என் எழுத்துக்களில்  சிறந்ததாக  நான் கருதும் " வாழ்வின்  விளிம்பில் " என்ற சிறுகதை அநேகமாக  அதிகமானவர்களால்  படிக்கப்  படாமலேயே  போய்விட்டதாகத் தோன்றுகிறது. பெயர் பெற்ற எழுத்தாளர்களின்  கதைகளை  அனுபவித்து  விமரிசிக்கும்  ஜீவி  போன்றோர்  என் கதையை  விமரிசிக்க மாட்டார்களா  என்ற ஏக்கம் எனக்குண்டு.

          படிப்பவர்களை வசீகரிக்க கவிதைகள் பலன் தரலாம். ஆனால் கவிதைகள் மொக்கையாக இருக்கும் பட்சத்தில் சீந்துவாரற்றுப் போய்விடும். நரம்புகளின்   முருக்கேற்றம் நடத்துகிற போராட்டம் வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின்   அரங்கேற்றமாக படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் திறன் கொண்ட சிவகுமாரன்  போன்றோர் கவிதை நடையில் அட்டகாசமாக வெளிப்படுகின்றனர்.  தமிழ் அவர்களது எழுத்துக்களில் நடனமாடுகிறது. நானெல்லாம் எழுத முற்படும்போது  வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. ஆனால் சிவகுமாரனுக்கோ வார்த்தைகள் "என்னை எடுத்த்தாள் என்னை எடுத்த்தாள் " என்று ஏங்கும்  போலுள்ளது.  மரபுக்  கவிதையா புதுக் கவிதையா எது வேண்டுமானாலும் " இந்தா பிடியுங்கள் " என்று படைப்பதில்  சிறந்திருக்கிறார்.  ஒருமுறை  என்  பின்னூட்டத்துக்கு  மறு மொழியாக, " என்னிடம்  இருப்பது  தமிழ், AK 47, அல்ல" என்று மிரட்டி இருக்கிறார். அவர் எழுத்து  எனக்கு  மிகவும்  பிடிக்கும்.

          கவிதைகளில்  அசத்துபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் கலாநேசனும்  ஒருவர். அவருடைய எழுத்துக்களுக்கு  உத்தரவாதம் கொடுக்கும் முகமாக, அமைந்திருக்கிறது அவருடைய வலையின் முகப்பு வரிகள். கட்டையிலே  போகும்போது சோதித்தாலும் அவர் கண்களில் கவிதை ஜோதியாகக் கனலும்  என்கிறார். வேறொருவர் தமிழைக் கரைத்துக் குழைத்து அட்டகாசமாக  கையாளுகிறார்.  ஆனால் ஒரு குறை. அவர் எழுதுவது  பல நேரங்களில்  ஒன்றுமே  புரிவதில்லை. பாவம் என்னைப் போன்ற படிப்பவர்கள்..!

          சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிது நேரம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகளே நாமும் நம்   வாழ்வின்  ஒவ்வொரு  கணமும் என்று சாசுவதமற்ற  வாழ்வை தெளிவாக்கி  ,நம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க  வைக்கும் பதிவுகளை  படைக்கும் ஷக்திபிரபாவும், கிட்டவேதோன்றும்  என்றும்  எட்டவே  முடியாத  தொடுவானம் தொட்டு விடுவோம் என்ற நம்பிக்கை நட்ச்சத்திரமாக திரு. காளிதாஸ்,  கல்விக்காகவே சிறப்பு  வலை அமைத்து  அதற்கேற்ப  பதிவுகள்  இடும்  சரவணன், கடிக்கும் எறும்பையும் காதலிப்பேன் , அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன் என்று  அன்பின்  அடையாளமாய்  பதிவிடும் நாகசுப்பிரமணியம். தன் எழுத்தையே பொது சொத்தாக்கி மன அலைகளில் மனம்  தெளிந்து  பதிவிடும் டாக்டர்  ஐயா  போன்றவர்கள்  எழுத்தை  உடனே  படித்து  விடுவேன்.

          பேராசிரியர் ஹரணி அவர்களின்  எழுத்துக்கள் எனக்கு டானிக் போல. எப்போதாவது  எழுதுவதில் சோர்வு  தோன்றுவது  போல்  தோன்றினால், அவருடைய   பின்னூட்டங்களை  ஒரு முறை  படித்துப் பார்ப்பேன். " பூஸ்ட்  இஸ் த சீக்ரெட்  ஆப  மை எனெர்ஜி " என்பது போல் உணர்வேன்.

            திடீர் திடீர் என்று பெரிய பெரிய விஷயங்களை மிகச் சாதாரணமாகக்  கூறி  என்னை வியக்க வைப்பவர் இளைய தலைமுறை  மாதங்கி. என்னுடைய  சந்தேகங்கள்  என்ற பதிவுக்கு அவருடைய பின்னூட்டத்தின்  கடைசி வரி " நச்"  மிகச் சாதாரண விஷயங்களுக்கு அதிகம் பில்ட்  அப்  கொடுத்தும்  அசத்துகிறார். நம் எல்லா  செயல்களுக்கும்  நாமே பொறுப்பு  என்பது என் கோட்பாடு. கிட்டத்தட்ட  அதே நிலையில்  ரமணியின்   தீதும் நன்றும் பிறர் தர  வாரா, இருப்பது மகிழ்ச்சி  தருகிறது.

               வெட்டிப்பேச்சு  என்று வலையின்  பெயராக இருந்தாலும் எழுதுவது ஏதும்  வெட்டியாக  இல்லை. அவருக்கே உரிய சரளமான  நடையில் அமெரிக்காவை   அறிமுகப் படுத்துகிறார் சித்ரா. அதுவும் இல்லாமல்  நிறைய வலைகளைப்  படித்து  விஷயங்களை உள்வாங்கி கொள்ளவும்  செய்கிறார். அவருடைய சுறுசுறுப்பு  என்னை அசத்துகிறது. வலையுலகில் சற்றே அதிகமாக அறியப்படும் வலை அதீதக் கனவுகள்.  அது கண்டு சில நாட்களாகி விட்டன.

            இதையெல்லாம்  எழுதினாலும் ஒன்று மட்டும் கூறாமல்  விட்டால் அது என்னை நானே  ஏமாற்றிக்கொள்வது  போலாகும். எழுதுபவன் விமரிசனங்களுக்கு  உட்பட்டவன். பெரும்பாலான  எழுத்தாளர்கள்  விரும்புவது, புகழுரையே. தன் கருத்துகளும் எழுத்துகளும் ஏற்கப்பட  வேண்டும் என்றே  எழுத்தாளன் விரும்புகிறான். மிகவும் பவ்வியமாக  வேறுபட்டாலும் தொட்டாச் சிணுங்கி  போல் சுருங்கி  விடக்கூடாது. சிலரது  பின்னூட்டங்கள் எழுதுபவரை  புண்படுத்தும்  நோக்கம்  இருக்குமோ என்று எண்ணும் வகையில் , சில பதிவுகளின்  நகல்களை  இணைக்கிறார்கள். முற்றிலும்  மாறுபட்ட  கருத்துகள்   இருநதால்  பேசாமல்  தாண்டிப்  போவதே மேல்.

           எனக்கு என் வலையுலகத்  தொடர்பினை  விரிவு  படுத்திக் கொள்வதில் உள்ள சிக்கலே நேரமின்மையும் என் நிதானமும்தான். எழுத  நினைப்பதை  முதலில்  வெற்றுத்  தாளில்  எழுதி, பின் கணினியில்  தட்ட வேண்டும். தட்டுத் தடுமாறி  ஒவ்வொரு  எழுத்தாக தட்டி  முடிக்கவே பிரமிப்பாக  இருக்கிறது. மற்றவர்  எழுத்துக்களை  படிப்பதற்கும்  கருத்துகளை  எழுதுவதற்கும்  அதிக நேரம்  தேவைப்  படுகிறது. இந்த நிலையில்  சிலரது  சுறுசுறுப்பும்  வேகமும், என்னை அவர்களுடன்  போட்டி போடத்  தூண்டுகிறது. வெற்றி கிட்டாவிட்டாலும், I ALSO RUN....
--------------------------------------------------------------------------------.





 



Wednesday, February 9, 2011

பூர்வ ஜென்ம கடன்....

பூர்வ  ஜென்ம  கடன்
------------------------------
             பெங்களூரின்  ஏழு  அதிசயங்களை தேர்ந்தெடுக்க  ஓட்டுப்  போடவேண்டி பத்திரிகையில்  செய்தி  படித்தேன். பெங்களூரின்  அதிசயங்களில் ஒன்றாக ,எல்லோரும்  கட்டாயம் பார்க்க  வேண்டிய  ஒன்றாக, நிச்சயம்  இடம் பெரும்  இடம் கர்நாடக  அரசின்  தலைமை செயலகமும் சட்டசபை  கூட்டத்  தொடர்  நடைபெறும்  இடமுமான  விதான   சௌதா ஆகும். பிரம்மாண்டமான  கருங்கல்  கட்டிடம்  பார்க்கும்  போதெல்லாம், நானும்  இந்த  பிரம்மாண்டத்தை  கட்டியவர்களில்  பங்கு உள்ளவன் என்ற  எண்ணம் ஒரு  பெரு  மூச்சுடன்  வரும்.

            1951-ல் தொடங்கி  1956-ல்  முடிவடைந்த  இந்த  கட்டிடம்  அப்போதைய  முதலமைச்சர்  கெங்கல்  ஹனுமந்தையாவின்  முயற்சியின்  விளைவு. 1954-ல்  பள்ளியிறுதி  பரீட்சை  எழுதி  உயர்கல்வி  படிக்க  முடியாத  நிலையில்   பெங்களூரில்   என்  தாய் வழி தாத்தா பாட்டி  வீட்டிற்கு  வந்திருந்தேன் .அரை நிஜார்   போட்டு     கொண்டிருந்த    காலம். எதிகாலம்  பற்றிய  ஆயிரம்  கனவுகள்  ஓட  ஓட  விரட்டிய  நேரம். மனம்  விரும்பிய  அளவு  உடல்  வளர்ந்திருக்கவில்லை.  ஐந்தடி  உயரம்  கூட  வளர்ந்திராத  உடல். பதினாறு  பிராயமே  கடந்திராத  காலம். எனக்கு  ஏதாவது  வேலை  தேடி  சம்பாதித்து  என் தந்தையின்  சுமையைக்  குறைக்க  வேண்டும்  என்ற எண்ணம்  பிரவாகமாக  ஓடிக் கொண்டிருந்த  நேரம். ஆனால் எனக்கு  யார்  வேலை  தருவார்கள்.? என்  தமக்கையின்  மாமனார்  அந்தப்  பொறுப்பை  ஏற்றுக்  கொண்டார். என்னை  அவருடைய  நண்பர்,விதான  சவ்தாவை  கட்டும்  ஒப்பந்ததாரர்களுள்  ஒருவரிடம்  அழைத்துச்  சென்றார். அவர் கட்டிடம்  கட்டத் தேவையான  கருங் கற்களை  செதுக்கி  சீராக்கி  உருவம்  கொடுத்து  தூண்களாகவும்  விதானங்களாகவும் செய்யும்  பணிகளில்  ஒரு  பகுதியை  ஒப்பந்தத்துக்கு  எடுத்துக்கொண்டிருந்தார். அந்தக்  கற்களை  செதுக்கும்  தொழிலாளிகளுக்கு  கொடௌனில் இருந்து  கற்களை  வாங்கிக்  கொடுக்க  ஏற்பாடு  செய்து, அவர்கள்  செதுக்கும்  பணியைக்  கண்காணிப்பதும்  எனக்கு  வேலையாகக்  கொடுக்கப்பட்டது.  காலை  எட்டு  மணி  முதல்  மாலை  ஆறு  மணி  வரை வேலை.  வெயிலில் நின்று  வேலை  செய்பவர்களை  கண்காணிக்க  வேண்டும். யார்  என்ன  வேலை, எவ்வளவு  செய்தார்  என்று  கணக்கு  வைத்துகொண்டு  மாலை  வீடு  திரும்புமுன்  ஒப்பந்த தாரரிடம்  தெரிவிக்க  வேண்டும். இதுதான் என் வேலை. வாழ்வில்  என் முதல்  வேலை. நான் சம்பாதிக்கப்  போவதற்கு  பிள்ளையார்  சுழி  போட்ட  வேலை. வெயிலின்  கடுமையைக்  குறைக்க  என் தமக்கையின்  மாமனார்  எனக்கு  ஒரு HAT வாங்கிக்  கொடுத்தார். ( அதை  அணிந்துகொண்டு  முதன் முதலில்  என் தமக்கை  வீட்டுக்குச்  சென்றபோது, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த  நாய்  ஒன்று  என்னைக்  கடித்து  நான் கஷ்டப்பட்டது  ஒரு  தனிக்கதை )நானும்  கொடுக்கப்பட்ட  வேலையை  உண்மையாக, திறமையாகச்  செய்து  கொண்டிருந்தேன். ஒரு  மாதம்  கழித்து  முதல்  மாசச் சம்பளத்தை  ஆர்வமுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கையில், எனக்கு  தரப்பட்ட  சம்பளம்  பார்த்து  மிகுந்த  ஏமாற்றமடைந்தேன். ஒரு  மாதம்  வெயிலில்  நின்று  வேலை  செய்த  எனக்கு தரப்பட்ட  சம்பளம்  ரூபாய்  இருபது. நான் அது  மிகவும்  குறைவு ,இன்னும்  கூடத்தரவேண்டும்  என்று கேட்டேன். வேண்டும்  என்றால்  வாங்கிக்  கொள் . இல்லாவிட்டால்  இதுவும்  கிடையாது  என்று அவர்  கூறினார்.  நான்  என்  தமக்கையின்  மாமனாரிடம்  முறையிட்டேன். "நீ  அதை  வாங்காதே. நான்  அவனிடம் பேசி  அதிக சம்பளம்  பெற்றுத்  தருகிறேன்." என்று கூறினார். அந்த  ஒப்பந்ததாரரிடம்  அவர் சென்று  கேட்க, அவன்  மறுக்க, அவர்கள்  நட்பு  முறிந்தது. "உன்னைக்  கோர்ட்டில் நிறுத்துவேன் " என்று மிரட்டிப்  பார்த்திருக்கிறார். ஆனால் அவனோ அதற்கும்  அவரிடம் "பெப்பே" கூறிவிட்டான்.
               என் தாய்மாமா  ஒருவர்  வழக்கறிஞ்சராக  பணியாற்றிக்  கொண்டிருந்தார். அவர் மூலம்  வக்கீல்  நோட்டிசும்  அனுப்பப்பட்டது. ஆனால் அது  வாங்கப்படாமலேயே  திரும்பி   வந்தது. பின் என்ன.? நான் ஒரு மாதம் பணி செய்ததுதான்  மிச்சம். அந்த ரூபாய்  இருபது   கூட  இல்லாமல் இலவச  உழைப்பாகி  விட்டது. என் பூர்வ  ஜென்ம  கடனோ என்னவோ...?  இப்போதும்  விதான    சவ்தா  வழியாகச்  செல்லும்போது ,ஒரு  பெருமூச்சு  என்னையறியாமல்  வெளிவரும்.
------------------------------------------------------------------------                   


Saturday, February 5, 2011

வழி காட்டுவோம், வாரீர்....வழி காட்டல்கள் பாரீர்....

வழி காட்டுவோம்  வாரீர். ...வழி காட்டல்கள்   பாரீர். ....
..................................................................................................
அவலங்களையே   எழுதி  அலுத்து விட்டது.
இளமை  வேகத்தில்  துள்ளல்  இருந்த  காலத்தில்,
கவிதைகள்  காதலில்  கனிந்திருந்தன
உலகம்  சொர்க்க  பூமியாய் காட்சியளித்தது.

        நாட்கள்  சென்ற  கோலத்தில்
        நானிலம்  நாம்  காணும்  கோணத்தில்
        காலம்  போட்ட  பாட்டையில்
        கடந்து  வந்த  பாதைகளில்
        நடந்ததெல்லாம்  நன்றுதானா...

ஒன்பதில்  ஒன்றாய்ப் பிறந்து,
பட்ட பாட்டில்  நன்றாய்க்  கனிந்து,
பெற்றோர்  தவறும்  வழி காட்ட,
கற்றது  கொண்டு  பெற்றதோ  இரண்டு
இருப்பதைப்  பகிர  சேர்ந்ததும்  இரண்டு
இருப்பிடம்  உணவு  உடையுடன்
கல்வியும்  தானே  சேர்ந்தூட்ட
என்னால்  முடிந்தது  என்றால்,
எவர்க்கும் கை  கூடும்தானே. ... 

           வாழ்வின்  வளைவும்  சுளிவும்
           நாம்  காணும்  கோணத்தின்  விளைவே
           என்றே  கூறிய  எனக்கும்  கூட
           அவலங்கள்  மட்டும்  தெரிவானேன்..
           அதுவும்  என் நோக்கின்  பிழைதானோ..

அரசியலில்  அவலங்கள் அளவிலடங்க்காது
நம்  செயல் எதுவும் மாற்றாததை  இன்று...
அரசியல்  நேர்வுகள்  மட்டும்தான்  வாழ்வா..
எதிர்மறை  சிந்தனை  சீரழிக்காதா  நம்மை

           நம்மை  நாமே   தட்டிக்கொள்ள
           படித்தது   பகிர்வேன்   புவியோரே
           எழுத்தில்   சொல்லில்   குறையிருந்தாலும்
           எண்ணத்தில்   பிழையில்லை   அறிவீரே.
           இந்தியர்   நம்முடைய  பெருமை சிலதை
           ஈண்டிங்குரைப்பேன்   இங்கிதமாக.

சூரிய  ஒளி  கொண்டியங்கும்
தொடு   திரை   கணினியை,
(TOUCH  SCREEN  COMPUTER)
வடிவமைத்ததோர்  இந்திய   விஞ்ஞானி
அதன்  விலையோ  மலிவு
ஒப்பிட்டால்  I-PAD -டோடு

           பெருந்தனத்தார்   பெயர்  பட்டியலிட்டால்
           பத்தில்  நால்வர்  இந்தியரே

உலகில்   இயங்கும்   கணினிகளை
இயக்கும்   பொருளை   சிப்ஸ்   என்பர்.
அங்ஙனம்  இயங்கும்   பத்தில்   ஒன்பதும்
இந்தியன்   வடிவமைத்த   ஒன்றேயாம்.

          பெப்சிகோ   அடோபே   சிடி  பேங்க்
          (PEPSICO , ADOBE, CITY BANK )
          உலகின்  பெரிய  நிறுவனங்கள்
          பெயர் பெற்றியங்குவது  இந்தியரால்
          அதை  இயக்கி  ஆள்வதும்  இந்தியரே.

உலகின்   உயர்ந்த பாலம்
என்றே அறியப்படுவது   இமயத்தில்
ஓடும்  நதிகள் திராசும்   சுருவும் (DRAS , SURU )
இணைக்கக் கட்டியதொன்றாகும்,
கட்டிய   பெருமை கிட்டியதும்
இந்தியப்  பொறியியல்   சாதனையே

            ஆடுகளத்திலும்   சோடையில்லை
            பேரும்   புகழும்   பெற்றோரில்
            சச்சின்  ஆனந்த்  போன்றோரின்
            பெயருடன்  நீளும்   பட்டியலே.

உலகின்   பெரிய   முதலாளி
இந்தியன்   ரெயில்வே   என்றறிவோம்
பணியில்   இருப்போர்   எண்ணிக்கை
பத்து   லட்சம்   மேலாகும்.

           நோபல்   பரிசு  பெற்றோரில்
           ஒன்பது  பேர்  இந்தியராம்.

விரிந்து   பறந்து கிளைகள்   பரப்பும்
கால்குலஸ்   திரிகோணமிதி  அல்ஜீப்ரா
(CALCULAS, TRIGNOMETRY, ALGEBRA)
பிறந்து  வளர்ந்ததும்  இந்நாடே.

         அண்டவெளிக்கு   ராக்கெட்  அனுப்பும்
          திறன்  படைத்த  நாடுகளோ   நான்கு.
         அதில்  நமதும்  ஒன்றே  என்றே
          பூரிப்படைவோம்   நன்றே.

இதுவும்  கூறலாம்   இன்னும்   கூறலாம்
கூறிக்கொண்டே தலை  நிமிர்ந்து   நிற்கலாம்.
தடம் காட்ட   யாருமில்லை  என்று
இருக்கக்கூடாது   அந்த குறை
தடம்   படைத்தோர்  சாதனைகள்  சில
காட்டிவிட்டேன்   அடையாளம்.

           எண்ணில்  அடங்கா  வாய்ப்புகள்
           கண்  முன்னே  நிற்பதறியாமல்
           முடங்கிக்  கிடத்தல்  சரிதானோ. ..

அரசியல்  நடத்தும்  அநியாயம்
ஊழல்   சாக்கடை   என்றெல்லாம்
எதிர் மறை  எண்ணங்கள்
கோஷம்  இட்டே  வந்தாலும்
உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால்
அடைவோம்   இலக்கை   நிச்சயமாய் .

            காணும்   கனவுகள்  நனவாக,
            வேணும்   உறுதி   உள்ளத்தில்
            இருப்போம்  நாமும்  நல்லவராய்
            அதுவே  வழி  காட்டும்  இளையோரை.
========================================









 

















































.    .  

Tuesday, February 1, 2011

பின்னூட்டங்கள், தெளிவுகள், விளக்கங்கள்

பின்னூட்டங்கள் ,தெளிவுகள், விளக்கங்கள் ..
-------------------------------------------------------------------...
            என் சந்தேகங்களுக்கு தெளிவு தர விழைந்த அனைத்து நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி  கலந்த வணக்கம்.
             அறியாததை  அறிந்து கொள்வதற்கும்  தெரியாததை  தெளிந்து  கொள்வதற்கும்   வயது ஒரு வரம்பா திரு.கண்ணன் அவர்களே.முன்னோர்கள் விட்டுச்சென்ற , வகுத்துச்   சென்ற அனுபவங்கள்  சாத்திரங்கள்  என்று  கூறுபவர்களுக்கு, நான் அவற்றை  சம்பிரதாயங்கள்  என்ற தலைப்பில்  காண்கிறேன். சாத்திரம் என்பது ஒரு சட்டம் போல.   கட்டாயம்  பின்பற்றப்பட  வேண்டியது. சம்பிரதாயம்  சௌகரியம்  பொறுத்தது. இரண்டையும்  குழப்பிக்கொள்ளக்கூடாது., என்பதற்காகத்தான் சாத்திரங்களுக்கு  என்ன சாங்க்டிடி என்று கேட்டேன். ஹரணி   அவர்கள்  கூறியதுபோல  குறிப்பிடப்பட்ட  சாத்திரங்கள்  குறிப்பிடப்பட்ட இடங்களின்  விதிமுறைகள்  போல உணரப்படுபவை. இது  இப்படித்தான்  அது  அப்படித்தான்  என்று    சாத்திரங்களின்  பேரால்  அடக்கிவைப்பது  கண்டு  எழுந்ததே  என் கேள்வி. பாரதியின்   சில வரிகளை  உங்கள்  முன் வைக்கிறேன்.

        சாத்திரங்கள்  பல தேடினேன் - அங்கு
        சங்கையில்  லாதன  சங்கையாம் - பழங்
        கோத்திரங்கள்  சொல்லு  மூடர்தம் - பொய்மைக்
       கூடையி லுண்மை   கிடைக்குமோ ? -நெஞ்சில்
        மாத்திர  மெந்த வகையிலும்  - சக
       மாய  முணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
       ஆத்திர  நின்ற  நிதனிடை- நித்தம்
       ஆயிரம்  தொல்லைகள்  சூழ்ந்தன.

தீபமேற்றி  ஆண்டவனை  வழிபடுதல் எனக்கு  உடன்பாடே. என் ஆதங்கமே  கருவறையில் அவனுருவை  தரிசிக்க  இயலாமல் இருட்டடிப்பு  செய்வது  ஏன்  என்பதுதான். மேலும்  கர்ப்பக்கிரகத்துக்கு  வெளியே நந்தா விளக்குக்காக எண்ணெய்  கொடுப்பதும், ராகுகால  வழிபாடு  என்று எலுமிச்சையில்  எண்ணெய் ஊற்றி  தீபமேற்றுவது என்பதெல்லாம் நம் கலாச்சார  மிச்சங்கள்  என்றுதான்  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ராகுகாலம்  என்பது  இந்தியாவில்  அனுஷ்டிக்கப்படுவதுதானே. அதை  பின் பற்று பவர்   ஏறத்தாழத்தானே செய்கிறார்கள். பலன் என்பது ஏதாவது  இருந்தாலும்  முழுமையாகக்   கிடைக்காதே.

நிவேதனம்  என்பது காண்பிக்கத்தான் , தெய்வங்கள்  உண்பதற்கு  அல்ல. அறிந்ததே.
குகன், கண்ணப்பன்  நிவேதனங்கள்  நாம் செயபவற்றோடு  ஒப்பிடக்கூடாது. நமக்குப்  பிரியப்பட்டதை  ஆண்டவனுக்கு  வைக்கலாம். இந்த  ஆண்டவனுக்கு இது பிடிக்கும்   அந்த ஆண்டவனுக்கு அது  உகந்தது  என்று பொதுவாக்குவது  பற்றியே  என் கேள்வி.
              சிவகுமாரனுக்கு  அழகாக கவிதை  தந்துள்ளீர்கள். போர்ப்படையினரின்  முழக்கமாகவே  முடித்திருந்தால்  இன்னும்  சிறப்பாக  இருந்திருக்குமோ. ?
===============================================