Tuesday, February 1, 2011

பின்னூட்டங்கள், தெளிவுகள், விளக்கங்கள்

பின்னூட்டங்கள் ,தெளிவுகள், விளக்கங்கள் ..
-------------------------------------------------------------------...
            என் சந்தேகங்களுக்கு தெளிவு தர விழைந்த அனைத்து நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி  கலந்த வணக்கம்.
             அறியாததை  அறிந்து கொள்வதற்கும்  தெரியாததை  தெளிந்து  கொள்வதற்கும்   வயது ஒரு வரம்பா திரு.கண்ணன் அவர்களே.முன்னோர்கள் விட்டுச்சென்ற , வகுத்துச்   சென்ற அனுபவங்கள்  சாத்திரங்கள்  என்று  கூறுபவர்களுக்கு, நான் அவற்றை  சம்பிரதாயங்கள்  என்ற தலைப்பில்  காண்கிறேன். சாத்திரம் என்பது ஒரு சட்டம் போல.   கட்டாயம்  பின்பற்றப்பட  வேண்டியது. சம்பிரதாயம்  சௌகரியம்  பொறுத்தது. இரண்டையும்  குழப்பிக்கொள்ளக்கூடாது., என்பதற்காகத்தான் சாத்திரங்களுக்கு  என்ன சாங்க்டிடி என்று கேட்டேன். ஹரணி   அவர்கள்  கூறியதுபோல  குறிப்பிடப்பட்ட  சாத்திரங்கள்  குறிப்பிடப்பட்ட இடங்களின்  விதிமுறைகள்  போல உணரப்படுபவை. இது  இப்படித்தான்  அது  அப்படித்தான்  என்று    சாத்திரங்களின்  பேரால்  அடக்கிவைப்பது  கண்டு  எழுந்ததே  என் கேள்வி. பாரதியின்   சில வரிகளை  உங்கள்  முன் வைக்கிறேன்.

        சாத்திரங்கள்  பல தேடினேன் - அங்கு
        சங்கையில்  லாதன  சங்கையாம் - பழங்
        கோத்திரங்கள்  சொல்லு  மூடர்தம் - பொய்மைக்
       கூடையி லுண்மை   கிடைக்குமோ ? -நெஞ்சில்
        மாத்திர  மெந்த வகையிலும்  - சக
       மாய  முணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
       ஆத்திர  நின்ற  நிதனிடை- நித்தம்
       ஆயிரம்  தொல்லைகள்  சூழ்ந்தன.

தீபமேற்றி  ஆண்டவனை  வழிபடுதல் எனக்கு  உடன்பாடே. என் ஆதங்கமே  கருவறையில் அவனுருவை  தரிசிக்க  இயலாமல் இருட்டடிப்பு  செய்வது  ஏன்  என்பதுதான். மேலும்  கர்ப்பக்கிரகத்துக்கு  வெளியே நந்தா விளக்குக்காக எண்ணெய்  கொடுப்பதும், ராகுகால  வழிபாடு  என்று எலுமிச்சையில்  எண்ணெய் ஊற்றி  தீபமேற்றுவது என்பதெல்லாம் நம் கலாச்சார  மிச்சங்கள்  என்றுதான்  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ராகுகாலம்  என்பது  இந்தியாவில்  அனுஷ்டிக்கப்படுவதுதானே. அதை  பின் பற்று பவர்   ஏறத்தாழத்தானே செய்கிறார்கள். பலன் என்பது ஏதாவது  இருந்தாலும்  முழுமையாகக்   கிடைக்காதே.

நிவேதனம்  என்பது காண்பிக்கத்தான் , தெய்வங்கள்  உண்பதற்கு  அல்ல. அறிந்ததே.
குகன், கண்ணப்பன்  நிவேதனங்கள்  நாம் செயபவற்றோடு  ஒப்பிடக்கூடாது. நமக்குப்  பிரியப்பட்டதை  ஆண்டவனுக்கு  வைக்கலாம். இந்த  ஆண்டவனுக்கு இது பிடிக்கும்   அந்த ஆண்டவனுக்கு அது  உகந்தது  என்று பொதுவாக்குவது  பற்றியே  என் கேள்வி.
              சிவகுமாரனுக்கு  அழகாக கவிதை  தந்துள்ளீர்கள். போர்ப்படையினரின்  முழக்கமாகவே  முடித்திருந்தால்  இன்னும்  சிறப்பாக  இருந்திருக்குமோ. ?
===============================================






   

10 comments:

  1. சார்,

    உங்கள் சந்தேகங்களைப் படித்தேன். "ஓலைச்சுவடி" என்றொரு புத்தகம் உண்டு. பெரும்பாலான கோயில்களில் கிடைக்கும். அதில் 75 % நாம் பின்பற்றும் முறைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தந்துள்ளனர்.

    ReplyDelete
  2. சிவகுமாரன் கவிதை நல்லா இருக்குங்க...ஆனால் அந்த பாடல் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. அய்யா ஒரு பார்மில இருக்கீங்க போல பிளாக் கல்லாக் கட்டுது.. வாழ்த்துக்கள். இதுவும் ஒரு சம்பிராதயம் அல்ல .. இது நம் நட்பின் அடையாளமாய் இடும் வாழ்த்து

    ReplyDelete
  4. இந்த மாத இறுதியில் சென்னை செல்ல இருக்கிறேன்.அங்குள்ள கோவில்களில் ஓலைச்சுவடி கிடைகிறதா பார்க்கிறேன்நன்றி நாகசுப்பிரமணியம், சௌந்தருக்கு வருகைக்கு நன்றி. வெகு நாட்களுக்குப்பிறகு கலாநெசன். மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete
  5. பாலு சார்.நாகா சொன்ன ஓலைச்சுவடி புத்தகம் என்னிடம் உண்டு.முகவரி தந்தால் நான் உங்களுக்கு கூரியரில் அனுப்புகிறேன் உடனே.

    ReplyDelete
  6. ஜி.எம்.பி அவர்களே!எங்கள் குடும்பத்தில் தேபூஜை என்பார்கள் காலை எட்டு மணிக்கு என் தாத்தா செய்வார். அவர் வயக்காட்டிற்கு சென்றால் பாட்டி ஒன்பதுவயதான என்னை செய்யச்சொல்லுவார்.பளிங்கு பிள்ளையார். சாலிகிராமங்கள் என்று அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து அஷ்டோத்திரம் சொல்லி நைவேத்தியம் முடித்து தீபாரதனை முடிக்க ஒரு மணி. நேரத்திற்கு மேலாகிவிடும்.மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஏழுந்தாலும் ஏன் என்று கெட்காமல் பாட்டி சொன்னபடி செய்வேன்.வயது ஆக ஆக கேட்க ஆரம்பித்தேன். நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
    விவேகாந்ந்தர் கடவுளைத்தேடினார்.உண்டா இல்லையா? என்று தெரிந்து.கொள்ள. இறுதியில் அவர் பார்த்தார். கடவுளை அல்ல. ராமகிருஷ்ணர் என்ற மனிதரை. ராமகிருஷ்ணர் வேதத்தில், பைபிளில், குரானில் தேடினார். சாரதாம்பாள் என்ற மனுஷி தான் தெரிந்தாள். இவர்கள் வரலாற்றில் சமீபத்தியவர்கள் என்பதால் குறிப்பிடுகிறேன்.வள்ளலாரும் அப்படியே.
    மகரவிளக்கு பற்றிய சமீபத்தியசெய்தி அது தெவஸ்வம் ஊழியர்களால் ஏற்றப்படுகிறது என்ற அறிக்கை ஆனாலும் தேவர்கள் வந்து ஏற்றுவதாக நம்புபவர்கள் கோடியில் உள்ளனர். முதல்வர் அச்சுதனந்தரிடம் நிருபர்கள் கேட்டபொது அது நம்பிக்கை சார்ந்த விஷ்யம் என்றார்
    I am a nonbliever, but I beleive those who beleive in God because of the simple reason they are my fellow human beings.
    .சாத்திரங்களும் நம்பிக்கை சார்ந்ததே.---காஸ்யபன்

    ReplyDelete
  7. சார் நீங்கள் கேட்ட போர்ப்படையினரின் முழக்கம் இதோ. (முழக்கமா தெரியவில்லை. அவர்களைப் பற்றி நினைக்கும் போது அவர்களின் வீரத்தைக் காட்டிலும், அவர்களின் தியாகமும் அவர்களின் குடும்பங்களும் தான் என் நினைவுக்கு வருகிறது.)

    நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
    ஊடுருவும் பேர்வழிகள் வால் நறுக்குவோம்.
    பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
    எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
    பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
    இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
    பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
    நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்.
    ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
    மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்.

    ReplyDelete
  8. எது கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் எழுதித்தரும் என் அன்பு சிவகுமாரா, அருமை, அருமை. திரு. காஷ்யபன் அவர்களுக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் ஏதோ மேலோட்டமாக சந்தேகங்கள் என்ற பெயரில் சிலருடைய நம்பிக்கைகளை கேள்விகேட்கிறேனோ என்று பலரும் எண்ணுவதாகத் தோன்றுகிறது.சாத்திரம் என்ற பெயரில் காலங்காலமாக அறிவு சார்ந்த கேள்விகளை கேட்கவேகூடாது,வழிவழியாக நடந்து வருவதை பின்பற்று என்ற முறையில் வாயடைக்கப் பட்டு விட்டோமா என்ன.?எனக்கும் தெரியும் சில கேள்விகள் ரசிக்கப்படுவதில்லை என்றும், நம்பிக்கை சார்ந்த இடங்களில் அறிவுக்கு இடமில்லை என்றும். என் சந்தெகங்களையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்தால் நான் சொல்ல வந்தது புரியும். எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.

    ReplyDelete