Thursday, February 24, 2011

காதல்....என் கோணத்தில்.

காதல்  என்  கோணத்தில்
--------------------------------------
              காதல் . இந்த மூன்றெழுத்து வார்த்தை எத்தனை பேரையோ வாழ வைக்கிறது இல்லை வாட்டி வதைக்கிறது. காதலையும் தமிழனையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும்,ஏதோ காதல் தமிழனுக்கு மட்டுமே உள்ள உணர்வு என்பதுபோல் எல்லாம் பேசியும் எழுதியும் தங்கள் பெயரையும் புகழையும் ரொக்கத்தையும் நிரப்பிக் கொண்டவர்கள் நிறைய உண்டு. வாழ்வில் காதல்தான் தலையானது மற்றவை தேவை இல்லாதது என்று எண்ணி எழுதி படமெடுத்து பார்ப்பவர் உள்ளங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி இளைய உள்ளங்களை மாசுபட வைத்து அதனால் ஏற்படும் நிகழ்வுகள் பலவற்றைக் காணும்போது படிக்கும்போது எங்கோ -இல்லை -எல்லா இடங்களிலுமே தவறு நேர்கிறது என்றே தோன்றுகிறது. ஆகவே காதலைப் பற்றிய சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

            அன்பு பாசம் நேசம் என்பதுபோல் காதலும் ஒரு உணர்வு. ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக வளரும்போது, ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு அதனால் அறியப்படும் அன்பே பாசமே நேசமே காதல் எனப்படுவது. காதலுக்கு கண்ணில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கண்வழியே கவரப்பட்டு கருத்து வழியே அறியப்பட்டு உடல் வழியே முடிந்து போவதே பெரும்பாலும் காதல் எனப்படுகிறது. காதலுக்கு வயசு அவசியம். ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமே வயசுக்கு வந்து விடுவதால்தான் ஆண்  பெண் மணம் செய்து கொள்வதற்கும் அவர்களிடையே வயசு வித்தியாசம் தேவைப்படுகிறது.

            ஆணும் பெண்ணும் காதல் கொள்ள எந்த முகாந்திரமும் தேவை இல்லை என்றாலும் காதல் வெற்றி பெற பல விஷயங்கள் நடக்க வேண்டி உள்ளது.முதலில் ஆண் பெண் இருவருக்கும் உள்ளது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்புத்தானா இல்லை உள்ளம் ஒன்றிய  அன்பா என்று தெரிய வேண்டும்.பெரும்பாலானவர்கள் பதின்மங்களில் வரும் இயல்பான உடல் ஈர்ப்புகளை காதல் என்று தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்.இதை உணர்ந்து கொள்வது எளிது. காணும்போது மட்டும் உடலில் மனதில் ரசாயன மாற்றங்கள்  நிகழ்வதும் மற்ற நேரங்களில் மற்றவர் நினைவே இல்லாமல் இருப்பதும் இது வெறும் ஈர்ப்பு சம்பந்தப்பட்டது என்று தெரியப்படுத்தும். எனக்குத் தெரிந்த ஒருவருடைய  பழைய டைரி ஒன்றை அகஸ்மாத்தாக கண்டு படிக்க நேரிட்டது. அதில் அவர் ஒரு பெண்ணின் பெயரை மூன்று நான்கு இடங்களில் எழுதியிருந்தார். அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி யாரென்று இப்போது கேட்டால் ,சத்தியமாக அவருக்கு எதுவும் நினைவில்லை. வயசுக் கோளாறில் அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணைக் கண்டு ஈர்க்கப்பட்டு, அவளுக்கு இவராகவே ஒரு பெயரும் வைத்து என்னென்னவோ எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்.இப்போது நினைவு படுத்தினால் அவருக்கு அது தமாஷாகவே தெரிகிறது

            சில சமயங்களில் காதல் என்று எண்ணிக்கொண்டு சிலர் கவிதைகளும் எழுதித் தள்ளுவர். காதல் அரிச்சுவடி என்ற பெயரில் என் கண்ணில் பட்ட அப்படிப்பட்ட ஒரு கவிதை , இதோ.
        கனவு.
        --------
அன்ன நடையழகி,
ஆடி வந்தென்முன் நின்று,
இன்பம் சேர்த்திடவே,
ஈட்டியாம் கருவிழியால்,
உள்ளம் கவர்ந்திடவே,
ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.
என்னையே மறந்து விட்டேன்,
ஏந்திழையின்  எழிலிலே
ஐயம் தீர்ந்திடவே,
ஒரு வார்த்தை அத்தான் என்று,
ஓதினால் போதுமடி,
ஒளவை கண்ட பெண்ணே.                   தெளிவு
                  ------------

       கன்னல் மொழியுடையாள்
       காதல்  தீ மூட்டி என்னை,
      கிறுக்கனாய்  ஆக்கிவிட்டு,
      கீழ்நோக்கும் தலை தூக்கி
      குறுநகை ஒன்றுதிர்த்து ,
      கூறிவிட்டாள் தன் கருத்தை.
      கெம்பு சிலையழகி,
      கேளடி என் கூற்றை,
      கைவிடேன் உன்னை என்றும்,
      கொஞ்சிடும் கிளியே என்றேன்.
      கோதையும் மறைந்தனள் -கண்ணைக்
      கெளவிய  தூக்கமும்  மறைந்ததடா.

இந்த மாதிரி கவிதைக் காதல்கள் பெரும்பாலும் ஒற்றைவழிப் பாதையாகவே இருக்கும்.
          
               சாதாரணமாக ஒரு பெண் ஆண்மகனின் ஆளுமையை விரும்புகிறாள். ஆளுமை என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. அன்பு நிறைந்தவனா, பண்பு நிறைந்தவனா, பொறுப்புள்ளவனா, சம்பாதிப்பவனா, பிறருடைய மதிப்பைப் பெற்றவனா என்றெல்லாம் அவளை அறியாமலேயே கணிக்கிறாள். ஏனென்றால் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காதல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் முடிந்து விடும். காதல் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும், அல்லது குறைந்துகொண்டே இருக்கும். காதலிக்கும் போது காணப்படுவதெல்லாம் நிறை குணங்களே, அல்லது நிறை குணங்களே காட்டப்படுகின்றன. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருவர் இணையும்போது, குறை குணங்கள் மிகவும் பெரிதாகத் தெரியும். ஏமாற்றப்பட்டு விட்டோமோ  என்ற எண்ணம் தலை தூக்கும்.

            காதல் என்பது தூக்கத்தில் கனா காண்பது போன்றது. வாழ்க்கை ஒரு இன்ப வெள்ளமாய்த் தோன்றும். காதலுக்குப்பின் வாழ்வு என்பது விழிப்பு நிலையில் கடமைக் கடலாக அச்சுறுத்தும்.

             விட்டுக்கொடுக்கும் சுபாவம் இயற்கையிலேயே இருந்தால்தான் காதல் வெற்றி அடையும். சாதாரணமாகவே பெண் என்பவள் ஒரு உணர்ச்சிக் குவியல.எந்த  உணர்ச்சி-  அன்பு, அச்சம், பாசம், தாய்மை, நெகிழ்ச்சி, நாணம், முதலியவைகளில் அவள் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அதை வசப்படுத்தினால் அவளை வசப்படுத்தின மாதிரிதான்.

             நல்ல பண்புதான் எவனையும் காதலுக்குத் தகுதியானவன் ஆக்குகிறது. காதலுக்கும் பக்திக்கும் அகங்காரம் கூடாது. குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும். பெரும்பாலான காதல்கள் தோல்வியில் முடிகின்றன. ஏனென்றால் ,எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துப் பின் வருவது அல்ல காதல். இருவரில் ஒருவர் தணிந்து போகும் குணமுள்ளவராக  இருக்கவேண்டும். ஒரு வீட்டின் தலைமை மதுரையாகவோ  சிதம்பரமாகவோ இருக்கலாம். இரண்டுமாக இருக்க முடியாது. அதனால்தான் நம் முன்னோர்கள் பெண் அடங்கியும் ஆண் அடக்கவும்  இருக்கவேண்டும்  என்று நினைத்தார்களோ என்னவோ. ஆண்  அதிகம் படித்தவன் அதிக வயதுடையவன் என்பதெல்லாம் அதற்குத்தானோ என்னவோ. பெற்றவர்கள் பார்த்துத் தீர்மானிக்கும் திருமணங்களில் எல்லாவித  எதிர்பார்ப்புகளும் ஒத்துப் போகின்றனவா என்று  ஓரளவுக்காவது கணிக்கப் படுகின்றன.

            இந்தக் காலத்தில் சம வயதுடையவர்கள் சம படிப்புடையவர்கள் ஆணுக்குப் பெண் குறைந்தவள் அல்ல என்ற எண்ணமுடையவர்கள் காதலித்து கலியாணம் செய்து வாழும்போது, பாழும் ஈகோ (அகங்காரம்?) எல்லாவற்றையும் கெடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். காதல்  சாதி,மதம், மொழி, இனம் இதையெல்லாம் பார்த்து வருவதில்லை. ஆனால் இவை எல்லாம் திருமணத்துக்குப் பின்  வாழும் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையே.

            இலக்கியங்களில் வரும் ஆசைகளுக்கு பெயர் காதல். அவை படிக்க ரசிக்க நன்றாக இருக்கும். வாழ்வியலில் எந்த அளவுக்கு உதவும் என்பதே கேள்வி. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ,மகாத்மா காந்தி இவர்களின் வாரிசுகள் அவர்களின் காதலைத் தெரியப் படுத்தியபோது, அவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனை, சுமார் ஒரு வருடப் பிரிவு. அதன் பின்னரும் அவர்கள் காதலில் உறுதியாய் இருந்தால் பெற்றவர்களின் சம்மதம் கிடைக்கும் என்பதே. காதலர்கள் வெற்றி பெற்றார்கள்.

            இதை எல்லாம் நான் எழுதுவதால் நான் காதலுக்கு எதிரி அல்ல. காதல் வெற்றி அடைய வேண்டும்,தோற்கக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறேன் ஏனென்றால் நானே ஒரு காலத்தில் மாய்ந்து மாய்ந்து காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டவன். இதோ நடக்கிறது, 47-ஆவது வருடம், வெற்றிகரமான குறையாத காதல் வாழ்வில். 
=============================================== 
 


   . .   


19 comments:

 1. "காதல் தோன்றுவதற்கும், மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும்.
  அது மேன்மையுருவதும், மலினமாவதும்
  சம்பந்தப்பட்ட இரு நபர்களை சார்ந்த விஷயம்"
  - ஜெயகாந்தன்

  ReplyDelete
 2. மற்றெல்லா உணர்ச்சிகளையும் போலத்தான் காதலும்.

  காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.

  இந்த மாதிரியான குணங்கள் கொண்ட இருவரில் ஒருவர் பேசினால்-ஒருவர் சிந்தித்தால்-போதும் என்ற அளவில் ஒத்த சிந்தனை நிலவும்.

  ஆதலினால் மானிடரே எல்லாவற்ரையும் காதல் செய்வீர்.காதல் என்ற வார்த்தைக்குள் அடைபடாத காதல் செய்வீர்.

  நல்ல பகிர்வு பாலு சார்.

  ReplyDelete
 3. நல்ல பதிவு ஐயா.
  நன்றி.
  வாழ்த்துங்கள்.

  ReplyDelete
 4. க்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ,மகாத்மா காந்தி இவர்களின் வாரிசுகள் அவர்களின் காதலைத் தெரியப் படுத்தியபோது, அவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனை, சுமார் ஒரு வருடப் பிரிவு. அதன் பின்னரும் அவர்கள் காதலில் உறுதியாய் இருந்தால் பெற்றவர்களின் சம்மதம் கிடைக்கும் என்பதே. காதலர்கள் வெற்றி பெற்றார்கள்.//
  இளைய தலை முறை யோசிக்க வேண்டிய விஷயம்.

  ReplyDelete
 5. நாகசுப்பிரமணியம், சுந்தர்ஜி, ரத்னவேல், மற்றும் ராஜராஜேஸ்வரிக்கும்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வந்து ஊக்கமளியுங்கள்

  ReplyDelete
 6. இதை எல்லாம் நான் எழுதுவதால் நான் காதலுக்கு எதிரி அல்ல. காதல் வெற்றி அடைய வேண்டும்,தோற்கக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறேன் ஏனென்றால் நானே ஒரு காலத்தில் மாய்ந்து மாய்ந்து காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டவன். இதோ நடக்கிறது, 47-ஆவது வருடம், வெற்றிகரமான குறையாத காதல் வாழ்வில்.


  ...That is lovely! சந்தோஷமான விஷயம்... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அருமையான பதிவுங்க...

  ReplyDelete
 8. தெளிவான பதிவு. ஒருவர் விட்டுக்கொடுப்பதில் தான் இருவர் வாழ்வின் வெற்றி உள்ளது

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு ஐயா
  ம் மிக எளிமையான தங்கள் பார்வையில்
  அனைவரின் எண்ணமும் அழக சொல்லி இருக்கீங்க.
  விட்டு கொடுத்தல் ...
  காதல்...
  காதலை விட்டு கொடுக்காமல்

  ReplyDelete
 10. காதல்...
  காதலை விட்டு கொடுக்காமல்
  அழக சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 11. சித்ராவுக்கு வாழ்துக்களுக்கு நன்றி. சிவாவுக்கும் கலாநேசனுக்கும் என்நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. அந்த கவிதைகள் எல்லாம் நீங்கள் காதலிக்கும் பொது எழுதியது தானே.

  ReplyDelete
 13. நல்ல பதிவு. "காதல்" என்ற வார்த்தையைக் கண்டதும் உங்கள் பதிவின் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை..காதல் என்ற வார்த்தைக்கே அத்தனை வலிமை இருக்காக்கும் :))

  ReplyDelete
 14. //குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.//

  இது உண்மை ஐயா...ஜெமினி கணேஷன் முதல் மனைவி பாப்ஜி அவர்கள் கிட்டே அவங்க பெரிய பொண்ணு கமலா கேட்டு இருக்காங்க..."எப்படியம்மா ...இந்த அப்பாகிட்டே சகிச்சுட்டு குடும்பம் நடத்தின...உன் காதலை துச்சமாக்கிட்டு எத்தனை பொண்ணுங்களை கட்டிக்கிட்டு வரார் னு"...அதுக்கு பாப்ஜியம்மா சொல்லி இருக்காங்க..." நான் அவரை மிகவும் காதலிக்கிறேன்...காதல் என்பது குறைகளையும் தாண்டி நேசிப்பது தான்....பெண்களிடம் சபலப்படுவது அவர் குறை...ஆனால் அந்த குறையவும் தாண்டி அவரை காதலிக்கிறேன்..." அப்படி னு சொல்லி இருக்காங்க...(இதை நான் ஒரு புத்தகத்தில் படிச்சேன் பாலு ஐயா...நீங்க அந்த வரிகளை சொல்லும்போது இந்த சம்பவம் தான் மனதில்...

  ReplyDelete
 15. நிறையவே யூகிக்கிறீர்கள் சிவகுமாரன்.!

  ReplyDelete
 16. காதல் என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் என் பதிவுகளைப் படியுங்கள் ஷக்திபிரபா. முதலில் இருந்தே என்னை ஊக்கப்படுத்தியவர் அல்லவா.?

  ReplyDelete
 17. அனுபவத்தில் அறிந்ததைத்தான் பகிர்ந்து கொ ள்கிறேன் ஆனந்தி.தொடர்ந்து வாருங்கள். நன்றி.

  ReplyDelete
 18. ஐயா... கொட்டியிருக்கிறீர்கள். அன்பின் வழியது உயர்நிலை என்பார்கள் ஆன்றோர்கள். அன்புதான் அழியாக் காதல். அது மனதின் ஊடாட்டத்தால் வருவது. யாயும் யாயும் யாராகியரோ...குறுந்தொகைப் பாடல் அற்புதமாய் காதலுக்கு விளக்கம் கூறும். இப்போது அதிக விழுக்காடு மெய்யின் புணர்ச்சிக்காகவே அலைபாய்கிறது காதல் எனும் பெயர் சூட்டி. இதுதான் இப்போது காணும் மெய். பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் பிள்ளைகளை ரவுடிகள் காதல் கொள்வதுபோல பல படங்கள் இந்த மண்ணில் காதலைக் குழிதோண்டிப் புதைக்க வழி செய்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எனும் பெயரால் அவை சீரழிவைத் தொடங்கி வைத்துவிட்டன கேவலமாய் பணத்தை ஈட்டிக்கொண்டு.
  அன்பே சிவம் என்று திருமூலர் இன்னும் உயர்வாக உயர்த்தி வைத்தார். 47 வருட உங்கள் காதல்வாழ்விற்கு என்னுடைய பெருமைமிகு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள். காதல் இல்லாமல் காதலின் பொருண்மை புரியாமல் காதலை பெருமைப்படுத்தாமல் கௌரவப்படுத்தால் உயர்த்திப் பிடிக்காமல் அந்தப் பெயரை பலிபீடமாக வைத்துக்கொண்டு பல உயிர்கள் வதைபடுகின்றன நாள்தோறும். வருத்தம். மிக வருத்தம். சரியான நேரத்தில் சரியான பதிவு. இளையவர்கள் படிக்கவேண்டும். அனுபவம் நல்ல இலக்கைக் காட்டும் பாதையாகும்.

  ReplyDelete
 19. கடந்த மூன்று நான்கு பதிவுகளில் ஹரணி அவர்களை காணவில்லையே என்றிருந்தேன். நல்ல வேளை இந்தப் பதிவில் உங்கள் கருத்துகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களைப் போன்றோரின் ஆதரவே எனக்கு ஊக்கம். நன்றி ஐயா.

  ReplyDelete