Saturday, October 29, 2022

எண்ணச் சிதறல்கள்

    கனவுகள் எண்ணச் சிதறல்கள்.



நண்பர்:--. இப்போதெல்லாம் வலைப் பூ பதிவுகளில் பதிவாகிக் கொண்டிருக்கும் சுவாரசியமான விஷயங்கள் என்ன என்று கூற முடியுமா.?

நான்:-- இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் பலரது துவேஷங்களையும் நான் சம்பாதிக்க வேண்டி இருக்கும். .ஒவ்வொருவர் பதிவிடும்போதும் அது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைத்துத்தான் பதிவிடுகிறார்கள்.

நண்பர்:-- அது சரி. உனக்குப் பதிவிட ஒரு தலைப்பு சொல்லட்டுமா.?

நான்:- நான் பல தலைப்புகளில் எழுதி விட்டேன். நகைச்சுவை என்னும் பெயரில் பலர் எழுதுவதுதான் எனக்கு சீரணிப்பதில்லை.என் வசப்படுவதுமில்லை.

நண்பர்:- இதிலிருந்தே தெரியவில்லையா உனக்கு வயது அதிகமாகிவிட்டது என்று.?

நான்:-ஒப்புக் கொள்கிறேன். , அதுவும் திரைப் படங்களில் நகைச் சுவை என்று அவர்கள் அடிக்கும் கூத்து சகிக்க முடியவில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர் வாய்விட்டுச் சிரித்து நோய் அண்ட விடாமல் செய்கிறார்கள்.


நண்பர்:- ஒரு அந்தரங்கக் கேள்வி. கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே.

நான்:- அது கேள்வியைப் பொறுத்தது.

நண்பர்:- உனக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப் படும்.? உனக்கு வருமானம் எவ்வளவு.?

நான்:- இரண்டு கேள்விக்குமே பதில் கிடைக்காது. இருந்தாலும் எங்களுக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதே அபத்தமானது. எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது. ஆனால் கிடைக்கும் பணம் போதுமானது.

நண்பர்:- விதண்டா வாதமான பதில் . ஒரே கேள்விக்கு எப்படி இரண்டு முரணான பதில்கள் சரியாயிருக்கும்.?

நான்:- அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்..

நண்பர்;-சற்று விளக்கமாகப் பதில் தரலாமே.

நான்:- சரி. விளக்கமாகவே கூறுகிறேன்.இங்கிருந்து சென்னைக்குப்போக வேண்டும். எப்படியெல்லாம் பயணிக்கலாம்.? சாதாரண அரசு பஸ்ஸில் செல்லலாம். தொடர் வண்டியில் பயணிக்கலாம் இரண்டாம் வகுப்பில் போகலாம் ஸ்லீப்பரில் போகலாம், குளிர்சாதன வசதியுடன் a/c யில் பயணிக்கலாம். காரில் பயணம் மேற்கொள்ளலாம். விமானத்தில் பறக்கலாம். இவற்றில் எந்த விதப் பயணம் மேற்கொள்வோம் என்பது கையிருப்பைப் பொறுத்தும் நம் மன திருப்தியைப் பொறுத்தும் அமையும். அதிக செலவு அதிக வசதி. ஆனால் இலக்கு ஒன்றுதான் சென்னை செல்ல வேண்டும். ஒரு காலத்தில் முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு ரெயிலில் பயணித்து இருக்கிறேன். இப்போது வசதி (என் மக்கள் உபயம்) கூடி விட்டதால் அதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இன்றும் அநேக மக்கள் முன் பதிவு இல்லாமல் இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் அவர்களைவிட  நான் என்னை மாறுபட்டவனாக நினைப்பதில்லை. வசதி பெருக்கத்தால் நான் என்னை வித்தியாசப் படுத்திக் காண்பித்துக் கொள்வதில்லை.

நண்பர்:- இவ்வளவு விளக்கமும் எதற்காக.?

நான்:- இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்

நண்பர்:- நீதானே contentment  smothers improvement என்று சொல்வாய்.

நான்:- அந்த context-ஏ  வேறு. அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஏற்ற தாழ்வுகள் மாற வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் எல்லாமே சரியென்று எண்ணத் துவங்கினால் முன்னேற்றம் இருக்காதுஆனால் ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும் போது இன்னும் இன்னும்  என்று தேவைகளை அதிகரித்துக் கொள்கிறோம் திருப்தி அடைந்தால் முன்னேற்றம் இல்லை.ஒரு புறம் முன்னேற்றம் கருதி திருப்தி கூடாது. இன்னொருபுறம் நிம்மதி வேண்டி திருப்தி தேவை. THAT IS THE PARADOX. இரண்டுக்கும் வரையறை  தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்:- அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.

நான்:-சில நாட்களுக்கு முன் எங்கே நிம்மதி என்று எழுதி இருந்தேன். அதில் வாழ்க்கையில் சில தேவைகள் சரியாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். அதில் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடும் தேவை என்று எழுதி இருந்தேன். நண்பர் ஜோசப் அவர்கள் அது குறித்துப் பின்னூட்டமிடும்போது நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையாஅப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையாஎன்ற கேள்வியும் எழுகிறதே. அன்றைக்கு மட்டும் உழைத்துஈட்டியதையெல்லாம் அன்றே கரைத்துவிட்டு வெட்ட வெளியில் உறங்கி எழும் பலரும் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளை விடவும் நிம்மதியாய் உறங்கி எழுகின்றனர் என்பதை மறுக்கமுடியுமாவசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை இதைத் தான் நான் PARADOX என்று சொல்கிறேன். ஏழைகள் எல்லோருமே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்றால் நிம்மதி என்பதன் பொருளே விளங்காமல் போய் விடுகிறது. அவர்களது பிரதிதின வாழ்வே ஒரே போர்க்களமாகி விடுகிறது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழி வகுக்கவே அவர்கள் படாத பாடு படுகிறார்கள். இவை இருப்பவர்களுக்குப் புரிவது கஷ்டம்.

நண்பர்:- நீ அப்ஸ்ட்ராக்ட் ஆக ஏதோ எண்ணிக்கொண்டு பேசுகிறாய்.

நான்:- உனக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா.?பசிக்கும் நேரத்தில் உண்ண ஏதும் கிடைக்காமல் யாரிடமும் கேட்க வழியில்லாமல் அவதிப் படிட்டிருக்கிறாயா.? நேரம் தாழ்ந்தாவது உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லாமல் அரை வயிறோ கால் வயிறோ கஞ்சிக்கும் அல்லாடும் பலரது வாழ்வில் நிம்மதி எங்கிருந்து வரும்? முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும்.இருந்தால்தான் மனம் அமைதியில் இருக்கும். எனக்கென்னவோ இந்த உண்மையைப் புரிந்துகொண்டுதான் இலவசமாகத் தேவைகளைக் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.என்னதான் உழைத்து முன்னேற நினைத்தாலும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இருக்கும் DISPARITY மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

நண்பர்:- இதற்கு நீயும் நானும் என்ன செய்ய முடியும்.?அதது பூர்வ ஜென்ம பலன் படி நடக்கும்.

நான்:- நீயும் நானும் என்ன செய்ய முடியும் என்பதை விட என்ன செய்யாது இருக்க வேண்டும் என்பதே முதல் காரியம். அடுத்தவன் கஷ்டப் படும்போது , உன்னுடைய பகட்டை வெளிச்சம் போட்டுக் காட்டாதே. பெரிய பெரிய மால்களிலும் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்களிலும் அதிக செலவு செய்து பொருட்களை வாங்காதே. அடுத்து இருக்கும் நாடார் கடையிலோ அண்ணாச்சி கடையிலோ கிடைக்கும் பொருட்களுக்கு ஸ்டைலாகக் காரிலோ பைக்கிலோ போய்  பெரிய கடைகளில் வாங்கினால்தான் உன் மதிப்பு உயரும் என்று நினைக்காதே. பகட்டான கட்டிடத்துக்கும் குளிர்சாதன வசதிக்கும் அவர்கள் உன்னிடம்தான் பணம் வாங்குகிறார்கள். வீதியில் வண்டியில் வரும் காய்கறிகளை வாங்கினால் அந்த ஏழையின் வீட்டில் அடுப்பெரிய நீ வழி வகுப்பாய். தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கும் வாயும் வயிறும் இருக்கிறது

நண்பர்:- பேச விட்டால் பொதுவுடமைக் கொள்கைகளை பரப்பி விடுவாய் போலிருக்கிறதே.

நான்:-நமக்கு விருப்பமில்லாதவற்றை யாரும் நம் மேல் திணிக்க முடியாது. சூழ் நிலைக்கைதிகள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. எனக்கும் உனக்கும் நன்றாகவே தெரியும். எத்தனையோ நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தில் முழங்கையில் வழிவதே நமக்குக் கிடைக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்பதை அடையாளப் படுத்த குடும்ப அட்டைகள் வழங்கப் படுகின்றன. ஆனால் புழக்கத்தில் இருக்கும் அட்டைகளோ இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இரண்டு மடங்கு. இது எப்படி சாத்தியம். நலத் திட்டங்களின் பலன் அது தேவை இல்லாதவர்களால்பறிக்கப் படுகிறது

நண்பர்: இந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தால் அநேகமாக எல்லோரையும் குற்றவாளிகளாக்கி விடுவாய்.

நான்:- என் ஆதங்கமே நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லையே என்பது தான் மீண்டும் கூறுகிறேன். இருக்கும் நிலையை இருப்பதுபோல் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்குக் குறைவு. நான் அதிகமாகக் கனா காண்கிறேனோ.?                        



 




Thursday, October 27, 2022

சிந்திக்க வேண்டிய பிரச்சனை

 


                            சிந்திக்க வேண்டிய பிரச்சனை
                            ------------------------------------------



 நான் திருச்சியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பெங்களூர் வந்தபோது ஓய்வை அனுபவிக்க வேண்டுமானால் நம் உடல் உறுப்புக்களும் புலன்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதிலிருந்தே கண்ணாடி அணியத் தேவையாகி விட்டது. பணியில் இருக்கும்போது எனக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. வேலையில் இருக்கும் போது சரியாக கவனிக்க முடியவில்லை. ஆகவே இங்கு வந்ததும் ஒரு காது நிபுணரிடம் சென்றேன். அவர் எனக்கு stapidectomy என்னும் காது ஜவ்வு இறுக்கம் இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சொன்னார். அறுவைச் சிகிச்சை செய்தால் இருக்கும் கேட்கும் திறனும் போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. நான் டாக்டரிடம் எனக்கு முழுதும் கேட்கும் திறன் கிடைக்க எத்தனை சதம் வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டேன். அவர் 90% என்றார். நமக்கு என்று அந்த மீதி பத்து சதத்தால் இருக்கும் திறனும் போய் விடுமோ என்ற பயம். எதற்கும் இன்னொரு நிபுணரைப் பார்க்கலாம் என்று தீர்மானித்து வேறொரு டாக்டரை அணுகினோம். அவரும் அறுவைச் சிகிச்சை வேண்டும் என்றார். பூரண குணம் கிடைக்க என்ன வாய்ப்பு என்று அவரிடமும் கேட்டேன். அதற்கு அவர், YOU WILL HEAR WELL  என்றார். அந்த உறுதி என்னை அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வைத்தது உஷ்... அப்பாடா.. ஒரு பதிவு எழுதுவதற்கு இவ்வளவு முன்னுரையா.....நான் இதுவரை எழுதியதற்கும் இனி எழுதப் போவதற்கும் சம்பந்தமில்லை. சம்பவ நிலைக்களனை விளக்க இவ்வளவும் தேவைப் பட்டது.( ? )
அறுவைச் சிகிச்சைக்கு நான் ஒரு நாள் மருத்துவமனையில்  இருக்க வேண்டும் என்றார்கள். என்னுடன் அன்று இரவு மருத்துவ மனையில் என் மனைவியும் தங்க முடிவாயிற்று.அங்கு இன்னொரு அறையில் இன்னொருத்தரும் சிகிச்சைக்கு இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு பெரியவரும் இருந்தார். அன்று இரவு தூங்கப் போகும்முன் அந்தப் பெரியவர் என் மனைவியிடம் தனக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறதென்றும் அதைப் பொறுத்துக் கொள்ளும்படியும் வேண்டினார்.
என் மனைவியும் “ஓ, அதனாலென்ன .... பரவாயில்லை என்றிருக்கிறார் அதுவுமல்லாமல் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் அவர் கூறியது அவர் மேல் ஒரு தனி மதிப்பே வந்துவிட்டது அவளுக்கு. ஆனால் அது அன்றைக்கு மட்டும்தான். இரவு உறங்கப்போக  ஆயத்தம் செய்ய அவளுக்கு பயம் வந்து விட்டது. நிசப்தமான இரவில் ஒரு சிங்கம் அருகில் வந்து உறுமுவதுபோல் இருந்திருக்கிறது. பிறகு அவளுக்கு  அந்தப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் இப்படி ஒரு குறட்டைச் சப்தம் இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.
மும்பை அருகே இருக்கும் உல்லாஸ் நகருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்குச் சென்றோம். முதல் நாள் இரவு ஒரு அறையில் நாங்கள் நால்வர் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இரவு அங்கு ஒரு தாளவாத்தியக் கச்சேரியே நடந்தது. என்னைத் தவிர மற்ற மூவரும் உண்மையிலேயே குறட்டை விட்டுத் தூங்கினர். அன்று சிவராத்திரியாயிருந்திருந்தால்  எனக்கு கண்விழித்த பலன் கிடைத்திருக்கும். வித விதமான ஏற்ற இறக்கங்களுடன் வெவ்வேறு சுருதிகளில் ஒரு அபஸ்வரக் கச்சேரியே இரவு முழுவதும் நடந்தேறியது.
NOW LIGHTER THINGS APART இந்தக் குறட்டை என்பது என்ன.? வியாதியா? நிறுத்த முடியுமா.?குறட்டை விட்டுத் தூங்குபவரை அவர்கள் தூக்கத்தை சற்றே குலைத்தால் ஒரு சில விநாடிகளுக்கு குறட்டை சப்தம் நிற்கலாம்
குறட்டை என்பது என்ன. ?மூச்சுப்பாதையில் ஏற்படும் சில அதிர்வுகளே குறட்டை சப்தமாகத் கேட்கிறது.நாம் உறங்கிய பின் நம் சுவாசக் குழாயில் இருக்கும் தசைகள் relax ஆகுமாம்.அந்த நேரத்தில் தொண்டை சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டையில் காற்று போய் வரும் பாதை போதுமானதாக இல்லாமல் இருக்குமாம் அழுத்தம் அடையும் தொண்டை பின் புற தசைகளை அதிரச் செய்யும்போது வெளியாகும் சப்தமே குறட்டை எனப்படுகிறது குறட்டைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக உடல் எடை.தொண்டை பலமின்மை, தொண்டைப் பகுதியில் கொழுப்பு சேகரம், தாடையின் அமைப்பு, மூக்கு துவாரத்தில் தடுப்பு மல்லாக்கப் படுக்கும்போது நாக்கு பின்னோக்கி இழுக்கப் படுவதால் தடங்கல் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம். இதுவே OSA  எனப்படும் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்னும் நோய்க்கு அடிகோலியாக இருக்கலாம் அப்னியா என்றால் தற்காலிக மூச்சு நிறுத்தம் என்று பொருள்படும் உறங்கும்போது மூச்சு நின்று நின்று தொடரும் . இதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பகல் நேரத்தில் சோர்வாகக் காணப் படலாம்
பொதுவாக வயதானவர்களுக்கு குறட்டை விடும் பழக்கம் வரலாம் குறட்டையால் வாழ்க்கை முறையே அவதிக்குள்ளாகலாம். கணவனின் குறட்டையால் உறக்கம் இழந்து விவாகரத்து கோரிய பெண்களைப் பற்றிக் கேள்விப்படும் அதே நேரத்தில் அந்த சப்தத்துக்குப் ( தாலாட்டு. ?) பழக்கப் பட்ட மனைவியர் அது இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்றும் கூறலாம் எதையும் எளிதாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்ட நாம் எப்பொழுது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருப்பதும் அவசியம். ( விக்கிப் பீடியாவுக்கு நன்றி

SNORING. NOTE that the snorting sound is most often caused by the vibration of the soft palate. and the uvula
Snoring sound production is most often from the soft palate and uvula. The black arrow points to the soft palate and the grey arrow points to the uvul


Tuesday, October 25, 2022

மறதி போற்றுவோம்

 


                                         மறதி போற்றுவோம்
                                         -----------------------------
(மறதி என்பது ஒரு உடற்கூறின் குறைபாடு என்று கூறுகிறார்கள்( ALZEIMER  வியாதி) ஆனால் மறதி என்பது பெரும்பாலும் வரம் என்றே தோன்றுகிறது. அதன் விளைவே இப்பதிவு)




அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்       
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள்
அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த  பெண்ணும்      மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
என்ன செய்வது,எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
 
வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
 
காட்டுவோம்    உலகிற்கு

நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
 மறதி     போற்றுவோம்   !

Wednesday, October 19, 2022

அடையாளங்கள்

 


உனக்கு கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா.?
“ யார்... அந்த சொட்டைத்தலை இரட்டை மண்டை கிருஷ்ண மூர்த்தியா.?
“ இல்லை ....கல்பாத்தி பாகவதர் சுந்தாவின் பிள்ளை.
எத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் தெரியும் இருந்தாலும் குறிப்பிட்டவரைத் தெரிந்து கொள்ள அடையாளங்கள் தேவைப் படுகிறது. சொட்டைத்தலைஇரட்டை மண்டைபாகவதர் பிள்ளை என்றால்மட்டும் போதாது  கல்பாத்தி பாகவதர். பிள்ளைஎன்பன போன்றவற்றால் அடையாளம் காட்டப் படுகிறது



ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகலள் மற்றும் சில விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப் பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள் இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம் பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியும்.
சிறு குழந்தைகள் என்னை எங்கள் குடும்பத்தில் மீசை தாத்தா என்று அடையாளம் காட்டுவார்கள் என் மாமியாரை என் பேரன் அந்த ஏழு பேரின் தாயா என்று கேட்டுப் புரிந்து கொள்வான்
இந்த இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும் பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது  ”அபிவாதயே சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர். பெரும்பாலும் மருமக்கத்தாய முறையைப் பின் பற்றுபவர்கள்.ஆனால் பல குடும்பங்களில் இது மாறி தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்து இனிஷியல் ஆக மாறிவருகிறது
திருச்சியில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, என் உறவினர் தீ அணைப்புப் படையின் தலைவராக திருச்சியில் பொறுப் பேற்று வந்தவருக்கு என் விலாசம் தெரிய வில்லை. BHEL தீ அணைப்பு படையில் இருந்த ஒருவரிடம் என் பெயரைச் சொல்லி  (இனிஷியல் சொல்ல வில்லை அல்லது தெரிய வில்லை?)நான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக மட்டும் தெரியும் என்றிருக்கிறார். பாவம் அந்த மனுஷன், பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ளவர்களை எல்லாம் டெலிபோன் டைரக்டரி  பார்த்துக் கூப்பிட்டு ஒரு வழியாய் என்னையும் கூப்பிட்டு தீ அணைப்பு அதிகாரியைத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் என்று சொன்னவுடன் என்னைத்தேடி ஓடி வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் பற்றிய சரியான அடையாளங்கள் தெரியாததால் மிகவும் சிரமப் பட்டு விட்டார்.
ஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர்.
என்னதான் சொன்னாலும் எல்லோருக்கும் அடையாளங்கள் தேவை என்பது மறுக்க முடியாது. சில அடையாளங்கள் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும். வீர பாண்டியக் கட்ட பொம்மனின் மீசை. சர்ச்சிலின் வெற்றியைக் குறிக்கும் V விரல் அடையாளம், ஹிட்லரின் அடையாள மீசை, காந்திஜியின் பொக்கைவாய்,கண்ணாடி கைத்தடி அரை ஆடை,, நேருவின் ஷெர்வானியும் ரோஜாவும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. .                

Sunday, October 16, 2022

மணவினை சிறை வாச ம்

  கண   கலங்கி நிற்கும்  கணவனிடம் கைப் பிடித்த மனைவி

என்னால் உன் மன அமைதி குலைந்த தென்றால்,
நீ விரும்பும் பெண்ணோடு, உனை விரும்பும் அவளோடு,
ஒரு நாளோ ஒரு வாரமோ தாராளமாய் இருந்து வா”என்றாள்.


கேட்டவன் தன் காதுகளை நம்ப வில்லை.-தன்னையே
ஒரு முறை கிள்ளிப் பார்த்தான்..மனைவியின் அனுமதி
கிடைத்தாயிற்று. நான் விரும்பி ,எனை விரும்பும்
பெண்ணின் கணவர் இதற்கு உடன்படுவாரா.?

எண்ணித் துணிக கருமம் என்றனர் ஆன்றோர்.
செயல்பட வேண்டியதுதானே.துணிந்து சென்றங்கு
அனுமதி கேட்டால் செருமுனைபோலாகுமோ-பயந்தான்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே எனத் துணிந்தான்.

வந்தவனைக் கண்டதும் வாவென்று வரவேற்றார்.
அமர வைத்து ஆசுவாசப் படுத்திய பின் கேட்டார்
வரவின் நோக்கம்தான் என்னவென்று.- தயங்கித்
தயங்கிக் கேட்டான் அவர் தாரத்தை தன்னுடன் அனுப்பச் சொல்லி.



தயக்கம் எதற்கு.? அவள் விரும்பி வருவதானால்
தாராளமாய் அழைத்துப் போ,அனுமதி எதற்கு.?
நீயாயிற்று அவளாயிற்று, நடுவில் நானெதற்கு
அன்பு நாடி நீ வர மனம் வாடச் செய்வேனா என்றார்.

அனுமதிக்குப் பங்கம் இல்லை என்றறிந்தவளும்
கண்ணசைவில் கருத்தறிந்து உடன் செல்லத் துணிந்தாள்.
நாளொரு இடமாய் பொழுதொரு விதமாய்
சின்னச்சின்ன ஆசைகள் சிறப்பாக நிறைவேற
டப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்பி
மனம் எல்லாம் றெக்கை கட்டிப் பற்ந்தவன்
ருவாரம் கழிந்தபின் தரையில் காலூன்ற
அன்று போல் என்றும் ஏன் இல்லை எனக்
கேள்வி கேட்டுப் பதில் நாட ,
தாயுடன்  தான் கழித்ததெல்லாம் மணவினைச்
சிறையில் மனைவி ஜெயிலர் தந்த பரோலே
என்றுணர்ந்தவன் துள்ளிக் குதித்தான் கண்டது
கனவென்று

Tuesday, October 11, 2022

தீபாவளி நன்று கொண்டாடுவோம்

 

பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்

எங்கள் வீட்டில் இந்த ஆண்டு என் பேத்தியின்தலை தீபாவளி  டபிள் டமாகா 

Wednesday, October 5, 2022

நிர்வாகவிளையாட்டு

 


                                          நிர்வாக விளையாட்டுக்கள்
                                          --------------------------------------
                                            (  MANAGEMENT GAMES..)

     ஒரு நிர்வாகத்தில் பல அடுக்குகளில் பணி புரிபவர் இருக்கிறார்கள்..ஒவ்வொரு நிலையில் இருக்கும் பணியாளருக்கும் ஒரு மேலதிகாரி இருப்பார். இப்படி பல அடுக்குகளிலும் பணி புரிபவர்கள் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் பணி புரிய வேண்டியது அவசியம். இதை விளக்கும் முகமாக இந்த விளையாட்டுப் பயிற்சி.


இந்த விளையாட்டை விளையாட குறைந்தது மூன்று குழுக்கள். வேண்டும்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருக்க வேண்டும். 1.மேலதிகாரி 2. மேற்பார்வையாளர். 3. தொழிலாளி. மேலதிகாரி குறியீடுகளை நிர்ணயம் செய்து, மேற்பார்வையாளர் வழிமுறைகளை வகுக்க தொழிலாளி அதை செய்து முடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் குறியீடு TARGET  என்பது எத்தனை கன சதுரங்களை (CUBES) ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும் என்பதே. மேலதிகாரி குறிப்பிடும் இலக்கை அடைய மேற்பார்வையாளர் தன் கீழ் பணியெடுக்கும் தொழிலாளிக்கு தன் கைப்பட செய்வது தவிர எல்லா உதவிகளையும் செய்யலாம். தொழிலாளியின் கண்கள் கட்டப் பட்டிருக்கும். அது தொழிலாளிக்குள்ள CONSTRAINT ஐ குறிப்பிடுவதாகும்.

இப்போது விளையாட்டைத் துவக்க ஒரு மேசை வேண்டும். தேவையான அளவு கனசதுரங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு ஒரு குழுவின் டார்கெட் மற்ற குழுவுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். மேலதிகாரி குறிப்பிடும் இலக்கு தொழிலாளிக்குத் தெரியக் கூடாது. மேற்பார்வையாளர் தொழிலாளிக்கு நிர்ணயிக்கும் இலக்கு மேலதிகாரிக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மூன்று கற்பனைக் குழுக்கள் விளையாடுவதைக் காணலாம்.

முதல் குழுவின் மேலதிகாரி-- மேற்பார்வையாளரிடம், “ இன்னும் அரை மணிநேரத்தில் 25-/ க்யூப்ஸ் அடுக்கப் பட்டிருக்க வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது I WANT THE RESULTS.  இலக்கு அடையப் படாவிட்டால் நிலைமை உங்களுக்கு எதிராக இருக்கும். YOU KNOW THAT I AM VERY STRICT. சொன்னது ந்டக்காவிட்டால் ...........

இரண்டாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம். “ உங்களுக்கு நாம் இலக்கை அடைய வேண்டிய அவசியத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நாம் எவ்வளவு க்யூப்ஸ் அடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.? நீங்கள் எதையாவது செய்து 25-/ அடுக்கிவிட்டால் எல்லோருக்கும் நல்லது. 23-ஆவது நிச்சயம் அடுக்க வேண்டும். இல்லையென்றால் முதலாளிக்கு பதில் சொல்வது கஷ்டமாகிவிடும்.

மூன்றாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம் “ கடந்த முறை
23-/ க்யூப்ஸ் இலக்கு அடைந்திருக்கிறோம். இதில் உங்கள் அனுபவமும் பங்கும் நான் சொல்லத் தேவை இல்லை.. தொழிலாளியின் திறமையும் தேவையும் உங்களுக்குத் தெரியும். 23-/ க்யூப்ஸ் அடுக்கியவர் இன்னும் சற்று முயன்றால் உங்கள் ஒத்துழைப்புடன் 25-/ அடுக்குவது முடியாததல்ல. 25-/க்கு மேல் செய்வதெல்லாம் கூடுதல் போனஸ் பெற வழிவகுக்கும். ALL THE BEST. !”

 இதை ஊன்றி கவனித்தால் நிர்வாகத்தின் மூன்று வித்தியாசமான அணுகு முறைகளைக் காணலாம்

இனி மேற்பார்வையாளர்கள் இதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

முதற்குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக மிரட்டப் பட்டிருக்கிறார், விரட்டப் பட்டிருக்கிறார். மேலதிகாரியின் இலக்கை 27-/ ஆக மாற்றினால்தான் 25-/ ஆவது செய்ய முடியும், விரட்டாவிட்டால் வேலை நடக்காது. மிரட்டி உருட்டிஎப்படியாவது இலக்கை அடைய வேண்டும் நம் இலக்கை அடையாவிட்டாலும் மேலதிகாரியின் இலக்காவது எட்டலாம்  என்று எண்ணிக் கொண்டு களத்துக்கு வருகிறார்.

இரண்டாம் குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக யோசிக்கிறார். 25-/ தான் இலக்கு என்றாலும் 23-/  அல்லது 24-/ ஆவது செய்ய வேண்டும். 22-/ ஆனாலும் எதாவது சமாதானம் சொல்லி சமாளிக்கலாம்  என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் இருக்கிறது.

மூன்றாவது குழுவின் மேற்பார்வையாளர், எந்த வழிமுறையைக் கையாளலாம் என்று யோசிக்கிறார். அவரது அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் ஒருங்கே உபயோகிக்க வேண்டும். தொழிலாளிக்கு அவரது திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். எங்கே சமயம் விரய மாகிறதோ அதை நீக்க வேண்டும். தொழிலாளியை ஊக்கப் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டும் இருக்கும் நிலையை அவருக்கும் சொன்னால் புரிந்து கொண்டு முழுத் திறமையையும் காண்பிப்பார். முதலில் ரிலாக்ஸாக  இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டு தயாரகிறார்.

எந்த மாதிரி நிலையில் மேற்பார்வையாளர்களின் செயல் பாடுகள் உருவாக்கப் படுகின்றன என்பது தெரிய வருகிறது

இனி திட்டங்களும் அணுகுமுறைகளும் என்ன பலன் தருகிறது என்று பார்க்கலாம்
முன்பே கூறியபடி தொழிலாளியின் கண்கள் கட்டப் படுகின்றன முதல் குழு தொழிலாளியிடம் கண்கள் கட்டப் படும் முன்பே தேவைகளும் இலக்குகளும் விளக்கப் படவில்லை.இலக்கு 27-/ க்யூப்ஸ் அடுக்கப் பட வேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கலாம் என்று பயமுறுத்தப் படுகிறார். ( விளையாட்டில் கண்களைக் கட்டுவது நடைமுறை குறைபாடுகளை குறிக்கவே என்று கூறி இருந்தேன். மேற்பார்வையாளரின் கைகளும் கட்டப் படும். அவர் தொழிலாளியை வேலை வாங்க வேண்டும். அவரும் சேர்ந்து செய்யக் கூடாது என்பதுதான் காரணம்.) முதல் குழுவில் அடுக்குதல் துவங்கு முன்பே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை இருக்கும். இந்தச் சூழலில் அவரது கண்கள் இன்னும் இருக்கமாகக் கட்டப் பட்டுவிடும். ( SHOWS MORE CONSTRANTS ) மேசையில் க்யூப்ஸ் ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது. இலக்கைச் சொல்லி விட்ட மேற்பார்வையாளர் தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்று கவனிக்காமல் அதை முடிக்க வேண்டியது அவன் பொறுப்பு எனும் பாவத்தில் இருப்பார் .நடுநடுவே வந்து முடிந்து விட்டதா என்று கேட்பார்.

இரண்டாவது குழுவில் மேற்பார்வையாளர் தொழிலாளியிடம் கெஞ்சாத குறையாக இலக்கினை அடைய வேண்டிய காரணத்தைக் கூறுகிறார். அடையாவிட்டால் தானும் சேர்ந்து தண்டிக்கப் படுவொம் என்று கூறுகிறார். எப்படியாவது கடந்த இலக்கான 23-/வது அடுக்க வேண்டும். ஓவர்டைம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மேசையில் எவ்வளவு க்யூப்ஸ்கள் இருக்கிறது என்று கவனிக்கவில்லை.

மூன்றாவது குழுவில் மேற்பார்வையாளரும் தொழிலாளியும் எப்படி இலக்கை அடையலாம் என்று சேர்ந்து சிந்திக்கிறார்கள். க்யூப்ஸ் அடுக்க வேண்டிய மேசை ஆடாமல் இருக்கிறதா என்று சோதிக்கப் படுகிறது. அடுக்கப் படவேண்டிய க்யூப்ஸ் தேவையான எண்ணிக்கையில் இருக்கிறதா என்று பார்க்கப் படுகிறது. கூடிய மட்டும் ஒரு ரிலாக்ஸான சூழல் கொண்டு வரப் படுகிறது. வேலை துவங்குமுன் தொழிலாளியும் மேற்பார்வையாளரும் கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

விளையாட்டு முடிந்து மூன்று குழுக்களும் அடைந்த இலக்கை கவனிக்கலாம்.
முதல் குழு 20-/ க்யூப்ஸ் அடுக்கியிருந்தது. இரண்டாவது குழு 24-/ க்யூப்ஸ் அடுக்கி யிருந்தது. மூன்றாவது குழு 27-/ க்யூப்ஸ் அடுக்கி இருந்தது.



ஒவ்வொரு குழுவையும் விசாரிக்கும்போது


குழு 1-/ன் மேலதிகாரி:-தொழில் தெரியாத தொழிலாளியும் உருப்படாத மேற்பார்வையாளரும் இருந்தால்  எப்படி இலக்கை அடைய முடியும்.?

குழு 1-/ன் மேற்பார்வையாளர் இலக்கு நிர்ணயித்து விட்டால் போதுமா.? இந்தமாதிரியான தொழிலாளியை வைத்துக் கொண்டு இதைச் செய்ததே அதிகம்.வெறுமே மிரட்டினால் வேலை நடக்குமா.?

குழு 1-/ன் தொழிலாளி. அங்கிருந்த க்யூப்ஸ்களை அடுக்கினதே என் சாமர்த்தியம். தேவையான க்யூப்ஸ்களே இல்லாதிருக்கும்போது இலக்கு மட்டும் நிர்ணயித்து எந்தக் கவலையும் இல்லாமல் குறை சொல்லும் அதிகாரிகளிடம் வேலை செய்வதே என் தலை எழுத்து.

குழு 2-/ன் மேலதிகாரி.. கடந்த முறையை விட இந்தமுறை அதிக இலக்கை அடைந்து விட்டோம் என்ன.... ஒரு குறை என்னவென்றால் இலக்கை அடைய செலவு கூடிவிட்டது

குழு 2-/ன் மேற்பார்வையாளர்.. தொழிலாளி அடுக்கும்போது கூடவே இருந்து அவரை உற்சாகப் படுத்திக் கெஞ்சிக் கூத்தாடி ஓவர்டைம் எல்லாம் கொடுத்து அப்பப்பா என் தாவு தீர்ந்து விட்டது. நானும் சேர்ந்து செய்திருந்தால் என் கை கட்டில்லாமல் இருந்திருந்தால். 30-/ க்யூப்ஸ் கூட வைத்திருக்கலாம்.

குழு 2-/ன் தொழிலாளி. ஓவர்டைம் இல்லாமல் இவர்கள் சொல்வதை செய்தால் நம் மேல் குதிரை ஏறிவிடுவார்கள். இலக்கு நிர்ணயிக்கிறார்களே , இவர்களால் இதை செய்ய முடியுமா. நம் பாடு இவர்களுக்கு எங்கே தெரிகிறது.

குழு 3-/ன் மேலதிகாரி.. ஊக்கப்படுத்தி வசதிகள் செய்து கொடுத்தால் இலக்கை அடைய முடியும். என் குழுவில் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. நான் ஒரு ஊக்குவிப்பானாக செயல்படவே விரும்புவேன்.



குழு 3-/ன் மேற்பார்வையாளர். என் மேலதிகாரிக்கு என் மேல் நம்பிக்கை. எனக்கு என்னோடு பணி செய்யும் தொழிலாளியிடம் நம்பிக்கை. திறமை இருக்கும் இடத்தில் தட்டிக் கொடுத்தால் இலக்கை அடைய முடியும்.


குழு 3-/ன் தொழிலாளி. எனக்கு வேலை செய்ய பூரண சுதந்திரம் உண்டு, என் தேவைகளை உணர்ந்து வேண்டிய சமயத்தில் உதவும் மேற்பார்வையாளர். க்யூப்ஸ் அடுக்கும்போது பக்கத்தில் இருந்து கோணலாகப் போகாமல் நேராக வர அவ்வப்போது எனக்கு உதவியது மட்டுமல்ல, மேசை ஆடாமல் இருக்கவும் கைக்கெட்டியவாறு க்யூப்ஸிருக்கும்படியும் பார்த்துக்கொண்டு ஊக்கப் படுத்தும் மேற்பார்வையாளருக்கும் இதில் பெரும் பங்குண்டு.

MANAGEMENT  என்பதில் MAN-MANAGEMENT பெரும் பங்கு வகிக்கிறது. நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து பலதரப் பட்ட அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் தொழிலாளிகள் என்று பார்த்து விட்டேன். தொழிலாளிகளை அவர்களின் திறன் அறிந்து அவர்களுடைய முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவது மேலதிகாரிகளின் கையில் இருக்கிறது. என் பழைய பதிவு ”எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் “ நான் அந்தக் காலத்தில் எழுதியது. அதில் ஓரளவுக்கு ஒரு தொழிலாளியின் மன நிலையைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறேன்.

எந்த ஒரு தொழிலாளியும் தான் வேலைவாங்கப் படுவதாக எண்ண விரும்புவதில்லை..வேலை வாங்கும்போது அது அவர்களாக விரும்பிச் செய்வதாக இருக்க வேண்டும்.அதிகாரிகள் தொழிலில் நெளிவு சுளிவுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.வேலை தெரிந்த அதிகாரிகளுக்கு தொழிலாளர் மத்தியில் என்றும் மதிப்