Friday, September 27, 2013

AMMA THE LIVING LEGEND


                               அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ
                               ----------------------------------------------------------
பிறந்ததிலிருந்தே எனக்கு கடவுளின் திருநாமங்களில் ஒரு அதீத ஈர்ப்பு இருந்தது. அதுவே என்னை எப்பொழுதும் ஆண்டவனின் திருநாமத்தை அனவரதமும் , ஒவ்வொரு மூச்சின் இடைவெளியிலும், எங்கிருந்தாலும் , என்ன செய்து கொண்டிருந்தாலும் உச்சரிக்கச் செய்யும்.இந்த இடைவிடாத, அன்பும் பக்தியுடனுமான  கடவுளின் நினைவு ஆத்ம அறிவுக்கும் புரிதலுக்கும் ( DIVINE REALIZATION) வழி வகுக்கும்
                                  ( மாதா அம்ருதானந்தமயி)

இன்று மாதா அம்ருதானந்தமயியின்  அறுபதாம் பிறந்த நாள். உலகம் முழுவதிலுமிருந்தும் கூடியிருக்கும் பக்தர்களின் முன்னிலையில் “ அம்ருதவர்ஷம் 60 என்று கொண்டாடப் படுகிறது


உலகம் முழுவதும் அம்மா என்று அறியப் படுபவரைப் பற்றி பார்ப்பதற்கு முன்--- கேரளத்தில்  கொயிலோன் மாவட்டத்தில் ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு என்னும் ஒரு கிராமம்., மேற்குக் கடலோரத்திய மீனவ கிராமம். தங்களைப் பராசர முனிவரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.கடவுளர்களின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடம் என்று பெருமைப் படுகின்றனர். அதில் ஒன்று......

சிவன் பார்வதி முன்னிலையில் சுப்பிரமணியர்  ஏதோ தவறு செய்து விட
சிவனார் கோபமுற்று  சுப்பிரமணியரை மீனாகப் பிறக்கச் சாபம் கொடுத்து விட்டார். மகனுக்குப் பரிந்து பேச வந்த பார்வதியும் செம்படவப் பெண்ணாகப் பிறக்கக் கடவது என்ற சாபம் பெற்றார். சற்றைக்கெல்லாம் கோபம் தெளிந்த ஈசன் தகுந்த நேரத்தில் தானே அவர்களுக்குச் சாப விமோசனம் தருவதாகக் கூறி ஆசிர்வதித்தார். சாபப்படி சுப்பிரமணியர், ஆலப்பாடு கடற் கரையில் ஒரு பெரிய மீனாக உருவம் கொண்டார். மீனவர்களின் வலைகளை அறுத்து அவர்கள் மீன் பிடிக்கக் கடலில் போவதையே அஞ்சும் அளவுக்குப் பயமுறுத்தினார். மீனவர்கள் பயந்து கடலுக்குப் போகாததால் வாழ்வாதாரத்தையே இழக்கத் துவங்கினர். அரசனிடம் முறையிட்டார். அரசனும் ஏதும் செய்வதறியாமல் , மீனைப் பிடிப்பவருக்கு நிறைய வெகுமதியுடன் அரச குமாரியையும் கை பிடித்துத் தருவதாக அறிவித்தார். நிலைமை இப்படி இருக்க அந்த ஊருக்கு ஒரு வயதான புதியவர் ஒருவர் வந்தார். அவர் பல செடியின் கொடிகளைக் கட்டி வலைபோல் செய்து கடலில் வீசி மீன் வரும்போது அவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கூறி மீனை இழுக்கச் சொன்னார். அதன்படியே நடந்து வலையில் சிக்கிய மீன் கரையில் வந்ததும் காணாமல் போயிற்று. முதியவர் அரசனிடம் வாக்களித்தபடி அரச குமாரியைத் தரக் கேட்டார். அரசனுக்கு இக்கட்டான நிலை. அரச குமாரியே முன் வந்து அரசன் சொல் காப்பாற்றப் பட வேண்டும் என்று கூறி முதியவரின் பின் சென்றாள். அவர்களைப் பின் தொடர்ந்த மக்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள் என்று முதியவரிடம் கேட்க அவர் எங்களுக்கு என்று ஊர் எதுவும் கிடையாது “ செல்லுன்ன ஊரேஊர் என்றாராம். அவர் சென்ற ஊர்தான் மருவி செங்கண்ணூர்ஆனதாகக் கதை. அந்த ஊரை அடைந்ததும் முதியவரும் அரச குமாரியும் முறையே கிழக்கையும்  மேற்கையும் பார்த்து நின்றனராம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டதாம் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வரும்போது ஒரு வினோத நிகழ்ச்சி ஏற்படுமாம், அபிஷேக நீரில் மீன் இருக்குமாம் பிரசன்னம் வைத்துப் பார்த்ததில் முதியவருக்கு முறையாக அரசகுமாரியைத் திருமணம் செய்யாததன் விளைவு இது என்று தெரிந்ததாம். சோதிடப் பரிகாரப் படி ஆலப்பாடிலிருந்து ஒரு செம்படவப் பெண் திருமணத்துக்குத் தேவையான பரிசுப் பொருள்களுடன் செங்கண்ணூர் வந்து திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. இன்றும் அவ்வழக்கப்படி ஆலப்பாட்டு மக்கள் செங்கண்ணூர் வந்து திருமணம்
 நடத்துவது ஒரு விழாவாகவே நடக்கிறதாம். நடுவில் சிலருக்கு “ இவ்வளவு தூரத்தில் இருந்து செங்கண்ணூர் போய் நாம் ஏன் விழா நட்க்கச் செய்ய வேண்டும் “ என்ற எண்ணம் தோன்றி விழா நடக்க முடியாதபடி செய்தனராம்.
ஈசன் சிலையை தாங்கி வரவிருந்த அலங்கரிக்கப்பட்ட யானை ஓரடி கூட நடக்காமல் நின்று விட்டதாம். ஆலப்பாடில் அம்மை நோயின் அறிகுறிகள் தெரிய வந்ததாம் . இது ஒரு தெய்வக் குற்றம் என்று தெளிந்த மக்கள் பழையபடி சடங்குகளைத் தொடர எல்லாம் நல்ல படியாயிற்றாம்.

ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு ஒரு மீனவ கிராமம் இடமன்னெல் என்பது ஒரு குடும்பத்தவர்..மீன்பிடிப்பது அவர்கள் தொழில் பக்தியுடையவர்கள்.. விரத அனுஷ்டானங்கள் பல செய்பவர்.மீன் பிடித்து வந்ததும் முதலில் சில மீன்களைத் தானமாகக் கொடுத்த பின்னரே விற்பனை செய்வர்.கிடைக்கும் பணத்திலும் கைநிறையக் காசுகள் சிலவற்றை சிறார்களுக்குக் கொடுப்பார்கள். இத்தகைய குடும்பத்தில் உதித்தவர் சுகுணானந்தன்.  பண்டரத்துருத்தூ என்னும் அடுத்த கிராமத்துப் பெண் தமயந்தி என்பவரைத் திருமணம் முடித்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த பதிமூன்று குழந்தைகளில் நான்கு பிறந்ததும் இறந்தும் ஒன்று சில நாட்கள் கழித்து இறந்தும் போயின. மீதமிருந்த எண்மரில்  சுதாமணி என்ற பெண்ணே உலகம் முழுவதும் மாதா அம்ருதானந்தமயி என்று அறியப் படுபவர்.

சுதாமணி கர்ப்பத்தில் இருக்கும்போதே சுகுணானந்தன் கனவிலும் தமயந்தியின் கனவிலும் சிவனும் கிருஷ்ணரும் வர இவர்கள் ஏனென்று தெரியாமல் தவித்தனர். மீன் பிடிக்கப் போகவர என்று கடலோரத்தில் குடிசையில் இருந்தனர். சுதாமணியைப் பிரசவிக்க நேரம் நெருங்கி விட்டது தெரிந்ததும் தமயந்தி இடமன்னெல் வீட்டுக்குப் போயிருக்கிறாள பாயை விரித்து தயாராகும் போதே திடீரெனப் பிரசவம் நிகழ்ந்து விட்டது. நிகழ்ந்த
நாள் 27-09-1953. பிறந்த குழந்தை பெண். பிறக்கும் போதும் பிறந்த பின்னும் குழந்தையின் நிறம் கரு நீலம். பிறந்த குழந்தை பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டி பிறந்ததாம் பிறக்கும்போதுஇருந்த நிறமும் , உடலின் இருப்பும் விவ்ரிக்கத் தெரியாத ஏதோ வியாதியோ என்று அவர்களை அச்சமடையச் செய்தது. மருத்துவர்களிடம் காண்பிக்க அவர்கள் குழந்தையை ஆறு மாதங்கள் குளிப்பாட்ட வேண்டாம் என்று கூறினராம்.....! ஆறு மாதங்களாயும் குழந்தையின் நிறம் மாறவில்லையாம். அது கிருஷ்ணனோ காளியோ என்று நினைக்க வைத்ததாம் பிறகு மெதுவாக நிறம் கருப்பாயிற்றாம். இருந்தாலும் குழந்தை கிருஷ்ண பக்தியில் மூழ்கும் போது கரு நீலமாக மாறுமாம். இன்றும் அம்மா ஆழ்ந்த பக்தியில் கிருஷ்ணனைக் கூப்பிடும்போது நிறம் மாறுகிறது(?)
என்கிறார்கள். இந்த நிறமே குழந்தை மீது ஒரு வித வெறுப்புணர்ச்சியாக மாறி அவரை இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாக்கியது எனலாம். குழந்தைகள் பிறந்தபின் கவிழுதல் நீந்துதல் முட்டுக் குத்துதல் உட்காருதல் என்று படிப்படியாக செய்வதே முறை. ஆனால் சுதாமணி ஆறு மாதங்கள் ஆனஒரு பொழுதில் நேராகவே நிறகத் துவங்கினதும் இல்லாமல் சில நாட்களில் நடக்கவும் ஓடவும் துவங்கினாராம். ஆறு மாத முதற்கொண்டே பேச ஆரம்பித்தாராம். இரண்டு வயதுக்குள் கிருஷ்ணன் மேல் பாடத் துவங்கினாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்ததோ. ?

இன்று அம்மா அம்ருதானந்த மயியின் 60 வருட நிறைவு விழாவில் அவர் பிறப்பு குறித்த சில விஷயங்கள் படித்ததை பகிர்கிறேன்.
                                     
அம்மா குழந்தையுடன்
    
அம்மா மூதாட்டியுடன்
அம்மாவின் தொண்டு பற்றியும் தேவைப் படுபவருக்கு உதவுவது பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த மாதிரியான ஒரு பக்திக்குக் காரணம் என்ன,?ஒரு நிகழ்வு பகிருகிறேன். என் உறவினர் ஒருவரின் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்திருந்தார். காரணம் தெரியாத தலைவலி. மகன் மயக்கத்தில் இருந்தான் தந்தையையும்  ( அவரும் ஒரு டாக்டர்) அனுமதிக்காமல் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய நம்பிக்கை இழந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் இருந்து கொச்சியில் இருந்த அமிர்தானந்தமயியின் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த மருத்துவ் வளாகத்தை நெருங்கியதும் மகனின் உடலில் முன்னேற்றம் கண்டது. மருத்துவ மனையில் சேர்த்து சில தினங்களில் பூரண குணம் கிடைத்தது. அந்த மருத்துவம் படித்த M.D. டாக்டர் அது அம்மாவின் அருள என்கிறார்.

பெங்களூரில் அம்மா  வந்திருந்த போது பார்த்திருக்கிறேன். இருந்த இடம் விட்டு எழாமல் மணிக்கணக்கில் காண வரும்  பக்தர்களை ஆரத்தழுவி தரிசனம் கொடுப்பார். ஒரு கடலோரக் கிராமத்தில் பிறந்து இளமையில் பல இன்னல்களை அனுபவித்து வளர்ந்தவர் இன்று உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை கவர்கிறார் என்றால் SHE MUST BE SOME ONE SPECIAL.!     
  
 

Friday, September 20, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே......

        நெஞ்சு பொறுக்குதில்லையே...
             -------------------------- 

  
தினமும் காலையில் நடை பயில அருகிலிருக்கும் பூங்காவுக்குச் செல்வது வழக்கம். முன்பே ஒரு முறை எழுதிய நினைவு. அங்கு ஒரு எறும்புப் புற்றிருக்கிறது. சில நாட்களில் அருகில் வசிப்போர் சிலர் அந்தப் புற்றுக்குப்  பாம்புப் புற்றென நினைத்துப் பால் ஊற்றுவது கண்டு நெஞ்சம் புழுங்கும் ஆயிரக்கணக்கில் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றி ஏங்குவது தெரிந்தும்  இல்லாத பாம்புக்குப் பால் வார்க்கிறொம் என்று கூறி மண்ணில் பாலை விரயம் செய்வது எவ்வளவு அறியாமை-. மன்னிக்கவும் அறியாமை அல்ல நம்பிக்கையின் விளைவு- அது என்று பலரும் கூறலாம். இந்த மாதிரி நம்பிக்கையைத் தவறு என்று கூறப் போனால் நம்மை முட்டாள் என்று நினைப்பவரே அதிகம். அண்மைக் காலத்தில் அந்த புற்று இருக்கும் இடத்தில் ஒரு நாகரின் சிலை பிரதிஷ்டை ஆயிற்று, பாம்புக்குப் பால் ஊற்றுவோர் எண்ணிக்கை கூடியது. பாலுடன் பழவகைகளுடனும்  நைவேதனப் பிரசாதங்களுடனும் பூஜை களை கட்டத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தால் ஒரு நாகர் சிலை இருந்த இடத்தில் ஒரு கல் தளம் நிறுவி அதன் மேல் நான்கு சிலைகள் பிரதிஷ்டை ஆகி இருக்கின்றன. என்ன சிலைகள் என்று இன்னும் அருகில் சென்று பார்க்கவில்லை, இது நாகர் , இது தேவி, இது பெருமாள் , இது அடியார் என்று சொன்னால் கேள்வியா கேட்கப் போகிறோம். அப்படியே ஏதாவது கேட்கப் போய் பிறருக்கு கேடு விளைக்காத எந்த நம்பிக்கையுமே நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் என்று அறிவுறுத்தப் படுவோம். யார் எந்தப் பாம்புக்குப் பால் ஊற்றினால் என்ன யர்ர் யாரை எப்படி வழிபட்டுப் புளகாங்கிதம் அடைந்தால் என்ன.... நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை என்று ஒதுங்குவதே மேல் என்று தோன்றினாலும் இந்தப் பாழும் மனம் கேட்பதில்லை.ஒரு வேளை நக்கீரன் பரம்பரை என்ற நினைப்போ.?யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லியே இத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்டது. இனி இருக்கப் போகும் நாளில் என்னை ஏன் மாற்ற வேண்டும்....?
கோயில்கள் எங்ஙனம்  உருவாகிறது  என்று பூங்கா புற்று வழிபாடு தெரிவிக்கிறது.  இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது  யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

நாகர் சிலை
 

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு வந்து அவன் பாணியில் ஒரு பாட்டு            
       பாரதி மன்னிப்பாராக
       -------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

மந்திரம் வேதம் என்பார் சொன்ன
மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை
தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே
மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ
காரணங் கேட்டே விளங்கியதிங்கு
யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்
துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்
தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )


சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு
வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே
பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி
மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்
சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்
சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டதை வினவினால் அது
முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  


எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )
-------------------------------------------

  


                         

Wednesday, September 18, 2013

திரும்பிப் பார்க்கிறேன்

திரும்பிப் பார்க்கிறேன்

பதிவுலகில் காலடி வைத்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆரம்பத்தில் பதிவுகளில் நான் என்றோ எழுதி வைத்திருந்த சில விஷயங்களைப் பதிவாக வெளியிட்டிருந்தேன். வலை உலகுக்கு வந்த பிறகு ஒரு கவிதை (? ) ‘ விபத்தின் விளைவு ‘என்று எழுதினேன். அதற்குப் பின்னூட்டமாக சக்திபிரபா /அற்றைத் திங்கள் அன்றொரு நாள் . எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ, சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான் / என்று நான் எழுதி இருந்ததை , என் தமிழ் ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுவ்தாகக் கூறி பாராட்டியிருந்தார்.அதுவே வலை உலகில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு. அப்போதுதான் தோன்றியது நம்மாலும் பிறர் பாராட்டும்படி எழுத முடியும் என்று.


எழுதுவது வெறுமே பொழுதுபோக்குக்கு என்றல்லாமல் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தில் வழி இருக்கிறது. என்ன... நம் எழுத்தை பலர் படிக்கவேண்டும். .நான் எழுதுவதை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணியதில்லை. ஆனால் என் எழுத்துக்க்ள் சற்றே நிமிர்ந்து வைக்கத் தூண்டுபவையாய் இருக்கவேண்டும் என்று நான் எண்ணியது உண்மை. சாதாரணமான BEATEN TRACK-ல் இல்லாமல் வித்தியாசமாக சிந்திக்கும் நான், என் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான கலந்தெழுத்தாடல்களுக்கு வழி வகுக்கும் என்று நம்பினேன். .ஆனால் இணையத்தில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெரும்பாலோனோர் கருத்தாடல்களில் பங்கேற்பதில்லை. எதை எழுதினாலும் பலரும் பாராட்டல்கள் தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. அதற்காகப் பாராட்டல்கள் கூடாது என்று சொல்லவில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரை படித்ததும் என் மனசில் தோன்றுவதை கருத்தூட்டமாக இட்டுவரப் பழக்கிக் கொண்டேன். அதுவும் சிலரால் கூறப் பட்டிருக்கிறது. ஒரு முறை என் பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் (பெயர் வேண்டாமே) என் பதிவுகளுக்குக் கருத்துப் பதிக்கும்போது மிகவும் இயல்பாய் எழுதலாம்  (ரெம்பொ உறுத்தானவர் வீடுகளில் வெறும் சாரத்துடன் இருப்பதுபோல-- மிகவும் வேண்டப் பட்டவர் வீட்டில் நுழைகையில் உடுத்திக் கொண்டிருக்கும் கைலியிலேயே வரவேற்பது போல) என்று கூறி இருந்தார். ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டிருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
   /  வாழ்க்கையில்   கண்டகேட்ட, அனுபவித்த  அனுபவங்கள்   எதையும்  எளிதில்  ஏற்றுக்கொள்ளும்  மனநிலையைத்  தரவில்லை. மாறாகக்  கேள்விகளே  அதிகம்  எழுகின்றது. சில  சமயம்  நாம்  ஏன்  இப்படி மற்றவரிடமிருந்து   மாறுபட்டு  நிற்கிறோம்   என்றும்   தோன்றும். எல்லோரையும்போல்  (  எல்லோரையும்   என்றால்   எல்லோரையும்   அல்ல ) ஏன்   எதையும்   கண்மூடித்தனமாக  நம்பிக்கையுடன்  ஏற்றுக்  கொள்ள  முடிவதில்லை.?/
இந்தக் கருத்து என் தொடரும் தேடல்கள் என்னும் பதிவில் எழுதியது. எதைத்தான் எழுதினாலும் அதன் பாதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். கொள்வார் யாருமுண்டோ என்று கூக்குரலிடாத குறைதான். சரி. நான் ஆண்டுகள் பல செலவு செய்த தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுத் துறை சம்பந்தமாக எழுதலாம் என்று தரமெனப்படுவது யாதெனில் “என்று ஒரு கட்டுரை அடிப்படை விஷயங்களை விளக்கி எழுதினேன். இப்போது பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஹிட்ஸ் வாங்கிய அந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் வரவில்லை. தரம் என்பது இலவசமாகப் பெறப்படுவது என்று விளக்கியும்  எழுதிவிட்டு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டேன் எனலாம்நாம் என்ன எழுதினாலும் அது வாசிப்பவரையும் பாதிக்கும் சமாச்சாரமாக இல்லாவிட்டால் இணையத்தில் எழுதுவதில் பலன் இல்லை. ஆனால் வாசிப்பவரைக் கவர வேண்டி என் எழுத்துக்களை நான் compromise செய்ய விரும்பவில்லை. என் போன்றோர் படும் சில அவஸ்தைகளைப் பகிரலாம் என்று எழுதியது “செய்யாத குற்றம் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் என்னை நிமிர்ந்து வைக்கச் செய்தது. பதிவுலகில் பரவலாக அறியப்படும் பலரது பின்னூட்டங்கள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது அதில் எதையும் கற்பனை செய்து நான் எழுதவில்லை உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிரூட்ட முயன்றேன் அன்றிலிருந்து பெரும்பாலும் உள்ளத்து உணர்ச்சிகளே பதிவாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என் எண்ணங்கள் பலரது எண்ணப்போக்கிலிருந்து வேறு பட்டிருக்கலாம்..அதற்காக வாசிப்பாளர் பட்டியலை அதிகரிக்கச் செய்ய நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
/வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடைம் வேண்டாத போது கிடைத்த வரமும்./
/அற்புதமான எழுத்து. அனுபவம் மெருகேற்றிய கருத்துக் கோர்வை.ரசித்தேன் ஐயா/
/உங்களைவிட மூன்று வயது சிறியவன் எனக்குக் கவிதையினூடே நீங்கள் சொன்ன கருத்துபொருள் பொதிந்ததாய் இருந்தது ஐயா/
/ரசித்துப்படித்தேன். கடைசி வரிகள் கேள்வியா சவாலா?/
பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாகவே நான் உங்களைப் பார்க்கிறேன் என்று தொடங்கி ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தார் அந்தத் தமிழ் பேராசிரியர்..பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு நான் பதிலாக, “இவற்றை இந்தக் கிளிக்குக் கிடைத்த ஒரு நெல் “என்று எழுதினேன். அதையும் சிலாகித்து ஒரு கருத்து.!
இதையெல்லாம் நான் அடிக்கடி நினைவு கூறாவிட்டால் என்றோ பதிவுலகை விட்டுப் போயிருப்பேன். ஒரு முறை ஒரு நண்பர், பதிவுகளை ஒருவர் படிக்கிறார் என்றாலும் அவருக்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.
அவதாரக் கதைகள் என்று பத்து அவதாரக் கதைகளையும் எழுதி வந்தேன். ஒரு சிறு பெண் பின்னூட்டத்தில் அவள் பாட்டும் நடனமும் படித்து வருவதாகவும் அவளுக்காகவேண்டியாவது அவதாரக் கதைகளைத் தொடர்ந்து எழுதுமாறு வேண்டி இருந்தாள். நரசிம்மாவதாரத்தை குழந்தைகளுக்குச் சொல்வது எப்படி என்னும்படி எழுதி இருந்தேன். ராமனின் கதையை ஏதோ ஒரு உந்துதலில் ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கி எழுதினேன். இதுவரை கிடைக்காத பாராட்டு கிடைத்தது. பிற்காலத்தில் இதை நான் வாசித்துப் பார்க்கும்போது எனக்கே வியப்பாகி இதை நானா எழுதினேன் என்று தோன்றும்,
பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்களைப் பார்பதும் பலரது பதிவுகளைப் படிப்பதும் உற்சாகமாக இருந்தது. பதிவுகள் மூலம் நான் அறிந்திருந்த பலரது குணாதிசயங்களை அனுமானத்தின் பேரில் ஒரு பதிவு எழுதினேன்.(பார்க்க.)
கவிச்சோலைக் கவிதைப் போட்டி ஒன்று வைத்தார். திரு.எல்.கே. சங்க காலப் பாடல் ஒன்று கொடுத்து அதற்கு அர்த்தமும் கொடுத்து அதை தற்காலக் கவிதையாக எழுதக் கேட்டிருந்தார். நானும் எழுதினேன் . இரண்டு கவிதைகள். அதில் ஒன்று சென்னைத் தமிழில் “சும்மா டமாஷுக்காக “ எழுதினேன்.பாராட்டுக்கள் கிடைத்தது ஆங்கிலத்தில் வெளியான I AM OK, YOU ARE OK  என்ற புத்தகத்தின் சாராம்சத்தை “வாழ்வியல் பரிமாற்றங்கள் “என்று எழுதி இருந்தேன்,TRANSACTIONAL ANALYSIS என்ற துறையில் சிறந்தவர் ஒருவரிடமிருந்து அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த பதிவு அது. (
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற மாதிரி.)
வார்ததைகளை மடக்கிப் போட்டு எழுதும் வகைதான் என் கவிதைகள் எல்லாம். இருந்தாலும் மரபுக் கவிதை பற்றி ஓரளவாவது தெரிய வேண்டும் என்று முயன்று வெண்பா இலக்கணங்களைக் கற்றேன் ஒரு வெண்பாவும் இயற்றினேன். பின் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை. இலக்கணம் தேடும்போது வார்த்தைகள் சிதையுருதல் போல உணர்ந்தேன். ஒரு முறை ஆலய தரிசனத்தின் போது கும்பகோணக் கோவில் ஒன்றில் திருவெழுக்கூற்றிருக்கை என்று எழுதி இருந்தது கண்டேன். என்ன என்று புரியாமல் பதிவில் விளக்கம் கேட்டேன். இரண்டு மூன்று பேர் விளக்க முயன்றனர். பிறகு வலையில் மேய்ந்து பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்த ஒருவரை நாடி அது என்ன என்று தெரிந்து கொண்டேன். நானும் என் பாணியில் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை எழுதினேன். ஆனால் என் பாட்டு கடவுளிடம் கேட்பது போலல்லாமல் சக மனிதனைக் கேட்பது போல் எழுதினேன்.”இங்கேபார்க்கவும் “.
ஒரு சமயம் நான் இறந்துவிட்டேன் என்னும் நிலையை கடந்து பிழைத்தேன். எனக்கு உறுதுணையாய் இருந்த என் மனைவிக்கு பாவைக்கு ஒரு பாமாலை எழுதினேன். அது ஒரு அந்தாதிக் கவிதையாய் எழுதினேன்.
மூன்று வருடக்களுக்கும் மேலாக வலை உலகில் இருந்து வருவதைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு நிறைவு தெரிகிறது.எழுதும் முறையிலும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்தியிலும் பேறுபாடுகள் காட்டிக் கொண்டே வருகிறேன். சிறு கதைகள், என் பாணி கவிதைகள், கட்டுரைகள், நெடுங்கதை , நாடகங்கள் என்று பல்வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறேன். சுய அனுபவங்கள், பயண அனுபவங்கள் என்று வெரைட்டியாக எழுதி வருகிறேன்.
இப்படியெல்லாம் எழுதியதை நான் திரும்பிப் பார்க்கிறேன். ஏன் என்று தெரிகிறதா.?
-------------------------------------------------------
                            
 .      

    .

 

Monday, September 16, 2013

படித்ததில் பிடித்தவை


                                  படித்ததில் பிடித்தது
                                 -----------------------------புது மண ஜோடி ஒன்று குடி இருப்பு ஒன்றுக்கு குடி பெயர்கிறார்கள். ஒரு நாள் அந்த வீட்டு மனையாள் அடுத்து இருக்கும் வீடு ஒன்றில் அந்த வீட்டுப் பெண்மணி துணி துவைத்துக் காயப் போடுவதைப் பார்க்கிறாள். இந்த இளம் மனைவி “ என்னதான் துணி துவைத்திருக்கிறாளோ, ச்சே அழுக்கே போகாமல்..... அவளுக்கு ஒரு நல்ல சோப் அறிமுகம் செய்ய வேண்டும் “ என்று கூறிக் கொண்டே தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். கணவன் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அடுத்த வீட்டுப் பெண் துணி துவைத்துக் காயப் போடும்போதும் , இவள் ஏதாவது கமெண்ட் சொல்வதும், கணவன் ஏதும் பேசாமல் தலை திருப்பிக் கொள்வதும் தொடர்ந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்தப்பெண் துவைத்துப்போட்டிருந்த துணிகளைப் பார்த்ததும் இவள் “ அதோ பாருங்கள். இந்தமுறை துணிகள் எல்லாம் பளீரென்று இருக்கிறது. அவளுக்கு துணி துவைக்க யாரோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் “ என்று சொல்லி வழக்கம் போல் தன் கணவனைப் பார்த்தாள்,இந்த முறை கணவன் வாய் திறந்தான்.இன்று காலையில் சீக்கிரமாகவே எழுந்து நம் வீட்டுச் சன்னல் கண்ணாடியை நன்றாகத் துடைத்தேன்என்றான்.
வாழ்க்கையும் இதுபோல்தான். பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது நம் கண்ணோட்டம்.

முதன் முதலில் வேலைக்குப் போய் முதல் மாத சம்பளத்தில் ஒரு மணி பர்ஸ் வாங்கினான் அவன். வேலை கிடைத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக, அவனது இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்றை பர்ஸில் வைத்தான். சில நாட்கள் கழிந்ததும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் புகைப்படத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டான். சில வருடங்களில் அவனுக்கு திருமணமானது. அவனது ஆசைமனைவியின் புகைப்படத்தை பர்சில் வைக்கப் போனான்.படத்தை வைக்கக் கொஞ்ச்ம் சிரமமாக இருந்தது. அப்போது கடவுளின் படத்தை நீக்கி விட்டு மனைவியின் படத்தை வைத்துக் கொண்டான். சில வருடங்கள் கழிந்தது. அவனுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப் படத்தை வைக்கப் போகும் முன் தாய் தந்தை படங்களை நீக்கினான் இவனுக்கு வயதாகி பிள்ளைகள் வளர்ந்ததும் மனைவியின் புகைப் படத்தை அகற்றி தன் பேரக் குழந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டான். இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் தன் மக்கள் தன்னை உதாசீனப்படுத்துவதுபோல் தோன்றவே எல்லோருடைய படங்களையும் அகற்றிவிட்டு மீண்டும் தன் இஷ்ட தெய்வத்தின் படத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்டான்....!

ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லைஎன்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.”என்றார்.

Sunday, September 15, 2013

ஓணம் பண்டிகை( HOME COMING FESTIVAL)


                    
                       ஓணம் பண்டிகை (HOME COMING FESTIVAL )
                       ---------------------------------------------------------

 இவ்வாண்டு செப்டம்பர் மாதம் பதினாறாம் நாள் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாடப் படுகிறது. அனைவருக்கும் என் ஓணாஷம்சகள்” ( ஓணம் நல் வாழ்த்துக்கள்.)இந்தப் பண்டிகை கேரளாவில் எல்லோராலும் கொண்டாடப் படுகிறது ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் இப்பண்டிகை, முன்பு கேரளத்தை ஆண்ட மஹாபலி சக்ரவர்த்தியின் விருப்பமான அவரது வருடாந்திர வரவை மக்கள்  கொண்டாடுவதைக் குறிக்கிறது . மஹாவிஷ்ணுவின் வாமனாவதாரத்தைப் பின் புலமாகக் கொண்டது. முதலில் பின் புலத்தைப் பார்ப்போம்.


                  வாமனாவதாரம்
                  ---------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.


           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
          
அசுவமேத  யாகம் நடத்தி, யார்
          
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
          
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
          
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
          
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
          
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
          
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
          
அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
          
குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி


        கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
         
அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
         
துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
         
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.


மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
          
சொன்ன சொல் தவற மாட்டேன்
          
தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
          
வைக்க , யான் பெருமை கொள்வேன்
          
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
          
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           =================================

  (அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம்
       
அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது
     
கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து
      
இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும்,
      
இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப
      
முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன்
      
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான
      
அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக
      
பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த
      
உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது.
      
இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். )

சுபிட்சம் நிறைந்த ஆட்சியைத் தந்த மஹாபலி வாமனரால் பாதாளத்துக்குள் அழுத்தப் படும் முன் திருமாலிடம் ஒரு வரம் கேட்டார். ஆண்டுக்கொரு முறை தான் ஆண்ட நாட்டையும் மக்களையும் பார்க்க வர வேண்டி வரம் கேட்டார். அந்நாளே இவ்வோணம் திருநாள்.
ஓணத் திரு நாளில் பூக்களால் அலங்கரிப்பதில் விசேஷ அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்
பாரம்பரிய நடனமாகப் பெண்கள் பூக்களத்தைச் சுற்றி நடனம் ஆடுகின்றனர். கைகொட்டு களி என்னும் நடனவகையும் அதில் அடங்கும்.ஓண சத்யை ( விருந்து ) விசேஷம் ”.உள்ளப்போழ் ஓணம் இல்லெங்கில் ஏகாதசி” என்ற சொல் வழக்கும் உண்டு. எப்படிப்பட்ட இல்லாதவர்களும் ஓணத்தன்று ஒன்று கூடி விருந்துண்ணுவது  முக்கியமாகக் கருதப் படுகிறது.

பூக்களம்
ஓணம் விருந்து
ஓணம்  நடனம்

பூக்களம்
 
 


 
      கை கொட்டு களி என்று கூறப்படும்  கேரள பாரம்பரிய நடனம்