திங்கள், 9 செப்டம்பர், 2013

கடவுளின் வரம்.....?


                                       கடவுளின் வரம்......
                                       ------------------------



யௌவனம் இருக்கும்போதே பெண்ணாசை மிகுதியால் சாபம் பெற்று வயோதிகம் பெற்ற யயாதியின் கதை படித்துக்கொண்டிருந்தேன். அப்படியே உறங்கியும் போய் விட்டேன். திடீரென்று விழிப்பு வந்தது. சிறிது நேரத்தில் தெளிவு பிறந்தது. இருந்தாலும் கனவில் கடவுள் என்னிடம் கேட்ட கேள்விக்குப் பதிலே இந்தப் பதிவு. “ யயாதிக்குச் சாப விமோசனமாக அவரது வயோதிகத்தை யாராவது எடுத்துக் கொண்டால் அவருக்கு இளமை திரும்பி விடும் என்று படித்தாய் அல்லவா.... உனக்கு ஒரு வரம் தருகிறேன். உன் ஆயுளில் மகிழ்ந்திருந்த நாட்களில் சில வருடங்களை நீ மீண்டும் வாழ வரம் தருகிறேன் நீ  எந்த வருடங்களை மீண்டும்  வாழ விரும்புவாய்இதுதான் கடவுளின் கேள்வி.. உடனே பதில் சொல்லக் கூடிய கேள்வியா அது. நான் அவகாசம் எடுத்துக் கொள்வதற்குள் கடவுள் காணாமல் போய் விட்டார்.இருந்தாலும் கேள்வி சுவாரசியமாக இருந்ததால் நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஒரு திரைப் படப் பாடலில் வாழ்க்கையை எட்டு எட்டு ஆண்டுகளாகப் பிரித்து ஒரு பாடல் வரும்/ நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் என் வாழ்க்கையை எட்டெட்டு ஆண்டுகளாகப் பிரித்தால் ஒன்பது எட்டுகள் முடிந்து பத்தாவது எட்டில் இருக்கிறேன்நான். இதில் எந்த எட்டு ஆண்டுகளை மீண்டும் வாழக் கடவுளிடம் வரம் கேட்ப்பேன்.? ஒரு ஹைபோதெடிகல் கேள்விதானே. .. கடவுள் வரமா தரப் போகிறார்? அவர்தான் நான் கண் விழிப்பதற்குள் காணாமல் போய் விட்டாரே....

சரி . நான் கடந்து வந்த ஒன்பது எட்டுகளையும் சிறிது பின்னோக்கிச் சென்று ஆராயலாமா.?

முதல் எட்டு வருடங்கள் ஏதும் சரியாய் அறியாப் பருவம். இருந்தாலும் நிறையவே நினைவுகள் நிழலாடுகின்றன. அவற்றை நான் ஓரளவு பகிர்ந்து பதிவிட்டதும் நினைவில் இருக்கிறது. அரக்கோணம் நாட்கள் என்பது அந்தப் பதிவின் பெயர்.  ஆரம்பப் பள்ளிப் படிப்பு, விளையாட்டு அந்தக் காலத்து நினைவுகள் என்று இருக்கும் அந்தப் பதிவு. எந்தக் குறிக்கோளும் கவலையும் இல்லாத அந்த நாட்களை மீண்டும் வாழவா.?எல்லா எட்டுகளையும் அலசிவிட்டு முடிவெடுப்போமே.

இரண்டாம் எட்டு பள்ளிப் படிப்பு முடிப்பதில் நிறைவுற்றது. ஆனால் எங்கள் குடும்பம் மிகப் பெரிய ஒரு சரிவை சந்தித்தகாலம் உலகின் உச்சியில் இருப்பவர் என்று நாங்கள் பெருமைப் பட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தை உண்மையில் மனமொடிந்து போயிருந்தார். யார் யாரோ செய்த பிழைகளுக்கு அவர் பழி வாங்கப் பட்டு வறுமையின் பிடியில் நாங்கள் சிக்கி இருந்த நேரம். ஆனால் அதுவே என் உள்ளத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் , வென்று காட்ட வேண்டும் எனுமொரு வெறியை எழுப்பி இருந்த காலம் வாழ்க்கையின் பாடங்களை நான் கற்கத் துவங்கிய காலம்

மூன்றாம் எட்டில் பல விதமான அனுபவங்களுடனும் ஏற்றப் பட்ட மற்றும் எதிர்கொணட சுமைகளுடனும் வாழ்க்கையைத் தொடங்கி இருந்த காலம் வாழ்வின் வசந்தமாகக் காதல் அரும்பி இருந்த காலமும் அதுதான் எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட கால.ம்.
என் இருபதுகளின் தொடக்கத்தில் நான்

இருபத்து நான்கு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை திருமணம் முடிந்து எனக்கென ஒரு வாழ்க்கைத் துவங்கி இருந்தகாலம். என் தந்தையின் எச்சப் பொறுப்புகளை ஓரளவு முடித்துவிடும் நேரம் எனக்கு என்று ஒரு குடும்பம் உருவான காலம். பணி மாற்றங்களும் இட மாற்றங்களும் கூடவே ஏமாற்றங்களையும் சந்தித்த காலம்.பணியில் நல்ல பெயர் மட்டும் மிஞ்சி, பலன்கள் அறுவடையாகாத காலம்
.
ஐந்தாவது எட்டில் நாயாய்ப் பட்ட பாட்டுக்கு பலன் கிடைக்கத் தொடங்கி வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்கலாம் என்ற மன உறுதி பெற்ற காலம். ஆனால் அதற்கு நான் கொடுக்க வேண்டி இருந்த விலை மிகவும் அதிகம். பெயரும் புகழும் மரியாதையும் கிடைத்தாலும் உடல் நிலை மேலும் கடினமாக உழைக்க முடியாமல் செய்தது. பிள்ளைகளின் படிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த இயலாதபடி பணிச் சுமை. பல விஷயங்கள் தெரியாமல் இருந்தாலும் சவாலாக ஏற்றுக் கற்று திறம்படச் செய்து காட்டி  பலன் கண்ட காலம்.

ஆறாவது எட்டு என்ன கஷ்டங்கள் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கல்விச் செல்வத்தில் குறை சொல்ல முடியாதபடி படிக்க வைத்து பலன் களை எதிர் நோக்கத் துவங்கிய காலம்

ஏழாவது எட்டில் எனக் கென்றும் என் வீட்டுக்கென்றும் முடிந்ததைச் செய்து முடித்தகாலம் ஒரு வீடு கட்டினேன். ஒரு கார் வாங்கினேன். அயல் நாட்டுக்கு பணி நிமித்தம் அனுப்பப் பட்டேன். வாழ்க்கை படகு ஓரளவு சீராக ஓடத்துவங்கியது. பிள்ளைகள் படித்து முடித்து அவர்கள் கால்களில் நிற்கத் துவங்கிய காலம் மூத்தவனுக்கு மணமுடித்து அடுத்தவனும் வரிசையில் நிற்க என்னுள் எழுந்தது ஒரு எண்ணம். இது நாள்வரை உழைத்தது போதும், மற்றவருக்காக வாழ்ந்தது போதும் விட்டு விலகி நில்என்ற உள்மனசுக்குக் கட்டுப் பட்டு விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன்.

எட்டாவது எட்டு என் ஐம்பத்தாறாவது வயது முதற்கொண்டு அறுபத்துநான்கு வயது வரை எனக்கு நானே ராஜா , பொறுப்புகள் முடித்த சந்தோஷம் பேரக் குழந்தைகளுடன் காலம் கழிக்க முடிந்த காலம், உடலும் கட்டுக்குள் இருந்த காலம் பேரன் பேத்தியுடன் தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று அவர்கள் மகிழ சஷ்டியப்த பூர்த்தியை கொண்டாடியது எல்லாம் நிறைவான நாட்கள்.

இந்த ஒன்பதாவது எட்டுதான் என் சக்தியை நான் இழந்து கொண்டிருக்கிறேன் என்று உணர வைத்த காலம். இருந்தாலும் குறை என்று ஒன்றும் சொல்ல முடியாத காலம்.

இப்போது என் பத்தாவது எட்டில் மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக் காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக் கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம். உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும் கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என் வலைத் தளம் மூலம்

இந்த நேரத்தில் கனவில் கடவுள் வந்து எந்த சில வருடங்களை நீ வாழ விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு பதிலுக்கும் காத்திராமல் சென்றுவிட்டார்.. இந்தக் கேள்விக்குப் பதில், எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என் எட்டாவதெட்டு வாழ்க்கையே சிறந்தது ஆதலால் கடவுள் தருவதாகச் சொன்ன வரத்தைக் கேட்டுப்பெற அவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் வரம் அருள இன்னொரு கனவு வர வேண்டுமோ.?
( என்னை நானே அறிந்து கொள்ளவும் சவால்களைச் சமாளிக்க உறுதி பூண்ட காலமென்று இதைச் சொல்லலாம் இங்கெல்லாம் ( 1 ) (2) (3)
சொடுக்கவும்.இன்று நான் இருப்பதை இப்படி சொன்னேன் )

18 கருத்துகள்:

  1. கடவுள் நிச்சயம் வருவார். நிறைந்த வரங்களைத் தருவார்!..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பல்வேறு எட்டுக்களை பெருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. // எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என் எட்டாவதெட்டு வாழ்க்கையே சிறந்தது ஆதலால் கடவுள் தருவதாகச் சொன்ன வரத்தைக் கேட்டுப்பெற அவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் வரம் அருள வர வேண்டுமோ.?//

    ஐயா, அப்படியே அவர் வருகை தந்தால் மிகவும் கவனமாக வரம் கேளுங்கள் ஐயா.

    கவனமில்லாமல் அவசரப்பட்டு ஒருவர் வரம் கேட்டுவிட்டு பின் வருந்தினார்.

    அதைப்பற்றிய விபரம் இதோ என் பதிவினில் உள்ளது.

    உடனே படியுங்கள். ;)))))

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html

    பதிலளிநீக்கு

  4. @ துரை செல்வராஜ்
    @ கோபு சார்
    உங்கள் விரைந்த வருகைக்கு நன்றி. கோபு சார் இக்கதையை நான் முன்பே படித்திருக்கிறேன், கடவுள் கனவில் தருவதாகச் சொன்ன வரம் நான் எந்த வருடங்களை மீண்டும் வாழ விரும்புவேன் என்பதே. என் ஆசையெல்லாம் நான் வாழ்ந்த அதே வாழ்க்கையை மீண்டும் வாழவிரும்பியே வரம் கேட்பேன். எச்சரிக்கைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் ஒன்றுதான் அனுபவிக்காதது.
    (தியானயோகம் இல்லீங்க, இது வேற) அதைக்கேட்டுப் பெறவும். இல்லையென்றால் கடவுளை என்னிடம் அனுப்பவும். என்கிட்ட நெறய வேண்டுதல்கள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்து அழகாய் ஒரு டேப்லெட் வடிவில் கொடுத்து விட்டீர்கள்.
    கடவுள் என்னிடம் இப்படிக் கேட்டால் என்ன கேட்கலாம் என்று மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது.
    ஒரு introspection செய்வதற்கு என்னை தூண்டியது உங்கள் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கனவுக்குள் கனவு காணும் பெரியவரே.. பத்தாவது எட்டு பெரிய சாதனை. அதற்கே வாழ்த்தியாக வேண்டும் உங்களை.

    அந்த சினிமாப்பாட்டு புதிரா குடையுதே சார்?

    பதிலளிநீக்கு
  8. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையிலேயே இப்போதிருக்கும் எட்டுதான் சிறந்தது என்பேன். ஊன் வலிமையிழந்துவிட்டாலும் உள்ளம் இப்போதும் வலிமையுடன் உள்ளதே. இது நீங்கள் இதற்கு முந்தைய எல்லா எட்டிலும் வாழ்ந்த வாழ்க்கையில் கடைபிடித்த ஒழுக்கம்தான் காரணம். இந்த எட்டில்தான் நீங்கள் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத நண்பர்களை சம்பாதித்துள்ளீர்கள் என்பதும் உண்மைதானே. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செவ்வனே ஆற்றி முடித்துவிட்ட நிம்மதி, பேரப்பிள்ளைகளால் கிடைக்கும் ஆனந்தம்... இதற்கு இணை வேறேதும் உண்டா... ஆகவே இனியும் இதே மனநிறைவோடு இன்னும் பல ஆண்டுகள் வாழ வரம் வேண்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. முதிர் பருவம்தான் அழகானது. நிதானமாக எல்லாப் பருவங்களையும் அசை போடச் செய்யும் காலம்.

    அருமையாக உங்கள் பாணியில் எல்லா எட்டையும் எட்டியிருக்கிறீர்கள்.

    உங்கள் 20ன் புகைப்படம் மிடுக்கு. இப்போதைய உருவத்தின் நிழலாய் அது.

    அப்பாதுரை குடைச்சலுக்கு நிவாரணம்.
    http://www.youtube.com/watch?v=K0eN_hhGg6w

    பதிலளிநீக்கு
  10. ஒருக்கால் நிவாரணமே குடைச்சலாகும் அபாயம் உண்டானால் அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை அப்பாதுரை.

    அதுக்கு ஸ்ரீமான். பாட்ஷா மற்றும் பாலு சார்தான் பொறுப்பு.

    பதிலளிநீக்கு

  11. @ டாக்டர் கந்தசாமி
    கடவுளிடம் கேட்டுப் பெறக் கூடியது
    ( பெறக் கூடியது என்றால் ) ஒன்றுதான் . என்னைக் கலாய்க்காதீர்கள் டாக்டர். இதுவரை பெற்றதெல்லாம் கேட்காமலேயே பெற்றது. வேண்டுதல்கள் என்று எனக்கு ஏதும் இல்லை. யாருக்கும் எந்தப் பிரச்சனையும் தராமல் நிரந்தரக் கண்மூடல் வேண்டும்

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    என் பதிவு உங்களை இண்ட்ரொஸ்பெக்‌ஷன் செய்யத் தூண்டுகிறது என்பது நிறைவைத் தருகிறது.

    @ அப்பாதுரை
    பதிவில் கடவுள் கனவு எல்லாம் சுவை சேர்க்கவே. கடந்தகாலத்தை எண்ணி அசை போட்டதன் விளவுதான் இப்பதிவு உங்கள் குடைச்சலுக்கு சுந்தர்ஜியின் பின்னூட்டம் பதில் தருகிறது.

    @டி.பி.ஆர்.ஜோசப்
    இப்போதிருக்கும் எட்டு குறை சொல்லும்படி இல்லை. ஆனால் மிகச் சிறந்த எட்டு 56-64 தான் (எனக்கு)

    @சுந்தர்ஜி
    பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும் கலையை நான் உங்களிடம் கற்க வேண்டும்.
    வருகை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நானும் எட்டாம் எட்டில் இருப்பவன் என்கிற வகையில்
    அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டதால்
    உடலும் படுத்தாமல் இருப்பதால் இதுதான்
    சரியான சுவையான வயதாகவும் படுகிறது எனக்கும்
    உணரவைத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு. பதிலுக்கு எனக்கும் ஒரு சினிமாப்பாட்டு ஞாபகம் வருது. 'இன்னொரு பிறவி நானெடுத்தால், என்றும் குழந்தையாய் வாழ விடு'

    பதிலளிநீக்கு

  14. @ ரமணி. எட்டாம் எட்டில் இருக்கும் உங்களுக்கு நிறை வாழ்வு வாழ வாழ்த்துக்கள். கடந்து வந்த பாதையை அசை போட வைத்ததில் மகிழ்ச்சி. முன்பே ஒரு பதிவு முதுமை பற்றி எழுதி இருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. இதோ சுட்டி. படித்துப் பாருங்கள்.
    gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html வருகைக்கு நன்றி

    @ உமேஷ்ஸ்ரீநிவாசன்
    என்றும் குழந்தையாய் இருந்தால் வாழ்வின் ஒரு சுவை மட்டுமே தெரியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பட்டினத்தார் தனது ” ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி” என்று தொடங்கும் “உடல் கூற்று வண்ணம்” என்னும் ஒரே பாடலில் மனிதனின் வாழ்க்கையை காட்டுவார். அதுபோல ஒரே பதிவில் கனவாய் மறைந்த உங்கள வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லி விட்டீர்கள்.
    உங்கள் கனவில் மறுபடியும் கடவுள் வருவார். நீங்கள் விரும்பும் வாழ்வை கனவில் தருவார். வாழ்க்கையே கனவுதானே!

    பதிலளிநீக்கு
  16. தங்கள் வாழ்க்கையை அழகான கட்டங்களாய் வரிசைப்படுத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா. ஒவ்வொருவரும் முதுமையில் தாங்கள் வாழ்ந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது பொற்காலம் என்றொரு காலகட்டம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் தங்கள் எட்டாம் எட்டே பொற்காலமென்று அறிகிறோம்.

    தங்கள் இளவயது புகைப்படம் அசத்தல். வாசிக்கும் ஒவ்வொருவரையும் திரும்பிப்பார்க்கச் செய்யும் அருமையான பகிர்வு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. முன்னே இப்படித் தான் அவங்க அவங்க வாழ்க்கையை எட்டாய்ப் பிரிச்சு முக்கிய நிகழ்வுகளை எழுதச் சொன்ன தொடர் பதிவுகள் நினைவில் வந்தன. எல்லா எட்டுக்களுமே அனுபவங்களைத் தந்தவை என்ற வகையில் முக்கியம் பெற்றவையே!

    பதிலளிநீக்கு

  18. @ தி.தமிழ் இளங்கோ
    வாழ்க்கை ஒரு கனவு என்பதல்ல. அது ஒரு அனுபவப் பாடம். நிஜம். வருகைக்கும் கருத்துக்கும்நன்றி
    @ கீதமஞ்சரி
    உங்கள் வருகைக்கும் தெளிவான கண்ணோட்ட்க் கருத்துக்கும் நன்றி.
    @ கீதா சாம்பசிவம்.
    தொடர் பதிவுக்கான தலைப்பாய் இருந்திருக்கிறதா.?தெரியவில்லையே, வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு