கடவுளின் வரம்......
------------------------
யௌவனம் இருக்கும்போதே பெண்ணாசை
மிகுதியால் சாபம் பெற்று வயோதிகம் பெற்ற யயாதியின் கதை படித்துக்கொண்டிருந்தேன்.
அப்படியே உறங்கியும் போய் விட்டேன். திடீரென்று விழிப்பு வந்தது. சிறிது நேரத்தில்
தெளிவு பிறந்தது. இருந்தாலும் கனவில் கடவுள் என்னிடம் கேட்ட கேள்விக்குப் பதிலே
இந்தப் பதிவு. “ யயாதிக்குச் சாப விமோசனமாக அவரது வயோதிகத்தை யாராவது எடுத்துக்
கொண்டால் அவருக்கு இளமை திரும்பி விடும் என்று படித்தாய் அல்லவா.... உனக்கு ஒரு
வரம் தருகிறேன். உன் ஆயுளில் மகிழ்ந்திருந்த நாட்களில் சில வருடங்களை நீ மீண்டும்
வாழ வரம் தருகிறேன் நீ எந்த வருடங்களை
மீண்டும் வாழ விரும்புவாய்”—இதுதான்
கடவுளின் கேள்வி.. உடனே பதில் சொல்லக் கூடிய கேள்வியா அது. நான் அவகாசம் எடுத்துக்
கொள்வதற்குள் கடவுள் காணாமல் போய் விட்டார்.இருந்தாலும் கேள்வி சுவாரசியமாக
இருந்ததால் நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.
ஒரு திரைப் படப் பாடலில்
வாழ்க்கையை எட்டு எட்டு ஆண்டுகளாகப் பிரித்து ஒரு பாடல் வரும்/ நினைவுக்கு
வரவில்லை. இருந்தாலும் என் வாழ்க்கையை எட்டெட்டு ஆண்டுகளாகப் பிரித்தால் ஒன்பது
எட்டுகள் முடிந்து பத்தாவது எட்டில் இருக்கிறேன்நான். இதில் எந்த எட்டு ஆண்டுகளை
மீண்டும் வாழக் கடவுளிடம் வரம் கேட்ப்பேன்.? ஒரு ஹைபோதெடிகல் கேள்விதானே. ..
கடவுள் வரமா தரப் போகிறார்? அவர்தான் நான் கண் விழிப்பதற்குள் காணாமல் போய்
விட்டாரே....
சரி . நான் கடந்து வந்த ஒன்பது
எட்டுகளையும் சிறிது பின்னோக்கிச் சென்று ஆராயலாமா.?
முதல் எட்டு வருடங்கள் ஏதும்
சரியாய் அறியாப் பருவம். இருந்தாலும் நிறையவே நினைவுகள் நிழலாடுகின்றன. அவற்றை
நான் ஓரளவு பகிர்ந்து பதிவிட்டதும் நினைவில் இருக்கிறது. அரக்கோணம் நாட்கள் என்பது
அந்தப் பதிவின் பெயர். ஆரம்பப் பள்ளிப்
படிப்பு, விளையாட்டு அந்தக் காலத்து நினைவுகள் என்று இருக்கும் அந்தப் பதிவு.
எந்தக் குறிக்கோளும் கவலையும் இல்லாத அந்த நாட்களை மீண்டும் வாழவா.?எல்லா
எட்டுகளையும் அலசிவிட்டு முடிவெடுப்போமே.
இரண்டாம் எட்டு பள்ளிப் படிப்பு
முடிப்பதில் நிறைவுற்றது. ஆனால் எங்கள் குடும்பம் மிகப் பெரிய ஒரு சரிவை
சந்தித்தகாலம் உலகின் உச்சியில் இருப்பவர் என்று நாங்கள் பெருமைப்
பட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தை உண்மையில் மனமொடிந்து போயிருந்தார். யார் யாரோ
செய்த பிழைகளுக்கு அவர் பழி வாங்கப் பட்டு வறுமையின் பிடியில் நாங்கள் சிக்கி
இருந்த நேரம். ஆனால் அதுவே என் உள்ளத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் , வென்று காட்ட
வேண்டும் எனுமொரு வெறியை எழுப்பி இருந்த காலம் வாழ்க்கையின் பாடங்களை நான் கற்கத்
துவங்கிய காலம்
மூன்றாம் எட்டில் பல விதமான
அனுபவங்களுடனும் ஏற்றப் பட்ட மற்றும் எதிர்கொணட சுமைகளுடனும் வாழ்க்கையைத் தொடங்கி
இருந்த காலம் வாழ்வின் வசந்தமாகக் காதல் அரும்பி இருந்த காலமும் அதுதான் எந்த
பயமும் தயக்கமும் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட கால.ம்.
![]() |
| என் இருபதுகளின் தொடக்கத்தில் நான் |
இருபத்து நான்கு வயது முதல்
முப்பத்திரண்டு வயது வரை திருமணம் முடிந்து எனக்கென ஒரு வாழ்க்கைத் துவங்கி
இருந்தகாலம். என் தந்தையின் எச்சப் பொறுப்புகளை ஓரளவு முடித்துவிடும் நேரம் எனக்கு
என்று ஒரு குடும்பம் உருவான காலம். பணி மாற்றங்களும் இட மாற்றங்களும் கூடவே
ஏமாற்றங்களையும் சந்தித்த காலம்.பணியில் நல்ல பெயர் மட்டும் மிஞ்சி, பலன்கள்
அறுவடையாகாத காலம்
.
ஐந்தாவது எட்டில் நாயாய்ப் பட்ட
பாட்டுக்கு பலன் கிடைக்கத் தொடங்கி வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்கலாம் என்ற
மன உறுதி பெற்ற காலம். ஆனால் அதற்கு நான் கொடுக்க வேண்டி இருந்த விலை மிகவும்
அதிகம். பெயரும் புகழும் மரியாதையும் கிடைத்தாலும் உடல் நிலை மேலும் கடினமாக
உழைக்க முடியாமல் செய்தது. பிள்ளைகளின் படிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த
இயலாதபடி பணிச் சுமை. பல விஷயங்கள் தெரியாமல் இருந்தாலும் சவாலாக ஏற்றுக் கற்று திறம்படச்
செய்து காட்டி பலன் கண்ட காலம்.
ஆறாவது எட்டு என்ன கஷ்டங்கள்
இருந்தாலும் பெற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கல்விச் செல்வத்தில் குறை
சொல்ல முடியாதபடி படிக்க வைத்து பலன் களை எதிர் நோக்கத் துவங்கிய காலம்
ஏழாவது எட்டில் எனக் கென்றும் என்
வீட்டுக்கென்றும் முடிந்ததைச் செய்து முடித்தகாலம் ஒரு வீடு கட்டினேன். ஒரு கார்
வாங்கினேன். அயல் நாட்டுக்கு பணி நிமித்தம் அனுப்பப் பட்டேன். வாழ்க்கை படகு ஓரளவு
சீராக ஓடத்துவங்கியது. பிள்ளைகள் படித்து முடித்து அவர்கள் கால்களில் நிற்கத்
துவங்கிய காலம் மூத்தவனுக்கு மணமுடித்து அடுத்தவனும் வரிசையில் நிற்க என்னுள்
எழுந்தது ஒரு எண்ணம். இது நாள்வரை உழைத்தது போதும், மற்றவருக்காக வாழ்ந்தது போதும் ”விட்டு விலகி
நில்” என்ற
உள்மனசுக்குக் கட்டுப் பட்டு விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன்.
எட்டாவது எட்டு என் ஐம்பத்தாறாவது
வயது முதற்கொண்டு அறுபத்துநான்கு வயது வரை எனக்கு நானே ராஜா , பொறுப்புகள் முடித்த
சந்தோஷம் பேரக் குழந்தைகளுடன் காலம் கழிக்க முடிந்த காலம், உடலும் கட்டுக்குள்
இருந்த காலம் பேரன் பேத்தியுடன் தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று அவர்கள் மகிழ
சஷ்டியப்த பூர்த்தியை கொண்டாடியது எல்லாம் நிறைவான நாட்கள்.
இந்த ஒன்பதாவது எட்டுதான் என்
சக்தியை நான் இழந்து கொண்டிருக்கிறேன் என்று உணர வைத்த காலம். இருந்தாலும் குறை
என்று ஒன்றும் சொல்ல முடியாத காலம்.
இப்போது என் பத்தாவது எட்டில்
மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக்
காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக்
கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு
நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம்.
உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும்
கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என்
வலைத் தளம் மூலம்
( என்னை நானே அறிந்து கொள்ளவும் சவால்களைச் சமாளிக்க உறுதி பூண்ட காலமென்று இதைச் சொல்லலாம் இங்கெல்லாம் ( 1 ) (2) (3)
சொடுக்கவும்.இன்று நான் இருப்பதை இப்படி சொன்னேன் )
