அனுபவங்கள் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2015

எண்ணங்கள் எனது மட்டுமல்ல


                     எண்ணங்கள் எனது மட்டுமல்ல
                   ------------------------------------------------------


சில நாட்களுக்கு முன் தாய்மொழி எது என்று கேட்டு எழுதி இருந்தேன். தமிழில் எழுதும் என் வீட்டில் என்னோடு தமிழும் போகும் போலிருக்கிறது என்று அங்கலாய்த்திருந்தேன்.நான் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மணந்தாலும் , என் மலையாளம் விட அவள் தமிழ் நன்றாக இருந்ததால் வீட்டில் தமிழே கோலோச்சியது.என் மகன்கள் இருவரும் மலையாளம் தாய்மொழியாகக் கொண்டு இருப்பவர்களையே மணந்தாலும் என் பேரக் குழந்தைகள் இரு மொழிகளிலும் பேச முடிந்தவர்களே. ஆனால் என் இரண்டாம் பேரன் வீட்டில் அவன் தாயுடன் மலையாளத்திலும் தந்தையுடன் ஆங்கிலத்திலும் பேசுகிறான். என் இளைய மகனும் அவன் தமிழில் பேச வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்லை. ஆனால் என் இளைய மகன் வீட்டுக்குப் போகும் போது நான் தமிழிலேயே பேசினாலும் அவனால் புரிந்து கொண்டு பதிலை ஆங்கிலத்திலேயே கூறுவான் இது இவ்வாறிருக்க ஒரு குறும்படம் என் கவனத்துக்கு வந்தது. அதில் சொல்லப் பட்ட விஷயங்கள் குறித்து வாசகர்களே அபிப்பிராயம் கூறலாம், கூறவும் வேண்டுகிறேன் நான் என்னைப் பொறுத்தவரை தமிழில் ஆர்வம் உடையவன் ஆனாலும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன் ஊமை விழிகளின் பதிவாசிரியர் சங்க காலப் பாடல்களுக்குப் பொருள் காணும் வழியைக் காட்டுகிறார். ஆனால் எனக்கோ தமிழில் உற்றாரைப் பேச வைப்பதே சவாலாக இருக்கிறது.
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு காணொளி கண்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மொழி பற்றிய இன்னொரு காணொளி. இதையும் ரசியுங்கள்



                                                --

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஒரு எழுத்தாளன் நிலை....!



                ஒரு எழுத்தாளன் நிலை......
                 _________________________



கடந்த சில பதிவுகளில் விடுப்பு பற்றியும் அனுபவங்கள் பற்றியும் எழுதி இருந்தேன். உடலுக்கு விடுப்பு என்ற போதிலும் உள்ளம் விடுப்பு எடுக்கவில்லை. எண்ணங்கள் முட்டி மோதின. அண்மையில் சில இடங்களில் சில செய்திகளைப் படிக்கும் போது என்னுடைய ரியாக்‌ஷன்கள் முட்டி மோதி என்னை வெளிப்படுத்து என்று கூறுவதை உணர்ந்தேன். ஒரு எழுத்தாளனுக்கு (நான் ஒரு எழுத்தாளன்தானே) எழுதுவதற்கு கரு சிதறிக் கிடப்பதையும் உணர்ந்தேன்.ஆனால் மனம் திறந்து எழுதுவது சில நேரங்களில் வாசிப்பவர்களுக்கு அவர்களைச் சவால் விடுவது போல் தோன்றி பின்னூட்டங்களில் தொக்கியும் துவண்டும் வெளியாகின்றன. எப்படியானால் என்ன நான் எழுதத் துவங்கி விட்டேன். இனி என்னாலேயே அதை நிறுத்த முடியுமா தெரியவில்லை.
பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளர். அண்மையில் என்றைக்கோ எழுதியதற்காக சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.அப்படி என்னதான் எழுதிவிட்டார்.?குழந்தைப் பேறு இல்லாதவர் கோவில் திருவிழாநாளில் யாருடனாவது புணர்ந்து குழந்தை பெற்று கொள்ளும் வழக்கம் ஒரு ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகக் கூறி அதையே ஒரு நாவலாக எழுதினார். பெருமாள் முருகனுக்கு ஒரு வலைத் தளமும் உண்டாம். அதில் போய்ப்பார்த்தால் எதுவுமே வரவில்லை. எப்படி வரும். மனுஷந்தான் எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டதாகவும் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் இறந்து விட்டான் என்றும் அறிக்கை விட்டிருந்தாரே.
சரி; பெருமாள் முருகன் அப்படி என்னதான் எழுதியிருந்தார்.ஊரைத் தெரிவித்து திருவிழாவைக் குறிப்பிட்டு , கடவுளின் குழந்தை என்று ஊரார் கூறுவதையும் குறிப்பிட்டு ஒரு நாவல் புனைந்தார். மெச்சும்படியாக அதில் எனக்கு ஏதும் தெரியவில்லை பெரும்பாலும் கணவன் மனைவி கூடி இருத்தலையும் 12 ஆண்டுகள் குழந்தை பெறாமல் இருந்ததையும் சற்று விளக்கமாக எழுதி இருந்தார். இது ஒரு சமூகத்தை குறிப்பிடுகிறது என்று காலங்கடந்து சில வேண்டாதவர்களுக்குப் புரிந்து. அவருக்கு ஏகப் பட்ட தொல்லைகள் தந்து போராடி இருக்கிறார்கள். சச்சரவை வளர்க்க விரும்பாத ஊர் நிர்வாகத்தலைவர் பெருமாள் முருகனிடம் மன்னிப்புக் கோரி எழுதி வாங்கி ஊராரைச் சமாதானப் படுத்தி இருக்கிறார். இதில் எது சரி எது தவறு என்று இப்போது விவாதிப்பதில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அந்த சமூகத்தின் வழக்கங்கள் தவறு என்றோ அது நிறுத்தப் பட வேண்டும் என்றோ கருத்து எங்கும் எனக்குப் புலப்படவில்லை. ஊரையும் திருவிழாவையும் குறிப்பிடாமல் அந்த நாவலை எழுதி இருக்கலாம். அவர் சொல்ல வந்ததும் சொல்லப் பட்டிருக்கும் எந்த சசசரவுக்கும் ஆளாகி இருக்க வேண்டியதில்லை.
எழுதுபவனுக்கு அவன் எழுத்தில் நம்பிக்கை வேண்டும். ஒரு crusader ஆக அவர் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால். எதிர்ப்புகளை எதிர் நோக்கும் துணிவும் இருக்க வேண்டும். சில சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் சுட்டிக்காட்ட விரும்பி சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்தால் நாவலில் வருபவை கற்பனையே என்று கூறி இருக்கவேண்டும். ஆனால் இரண்டையும் செய்யாமல் நடந்தவைகளுக்குப்பொறுப்பேற்றுக் கொண்டு ஆனால் அதே சமயம் அனுதாபம் பெறும் வகையில் அறிக்கை விடுவது சரியா தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் வழக்கங்களை ஒட்டி நானும் ஒரு சிறு கதை புனைந்திருக்கிறேன். என் சிறுகதைத் தொகுப்பான ”வாழ்வின் விளிம்பில்”  அது இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே என் வலைப்பூவில் வெளியான கதை. படிக்காதவர்களும் படிக்க விரும்புபவர்களும் ”இங்கே” சுட்டவும். சிறுகதைத்தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய தஞ்சாவூர் கவிராயர், தொகுப்பிலேயே சிறந்த கதை என்று பாராட்டிஎழுதி இருந்தார். இதிலும் சில வழக்கங்களை அடிப்படையாய்க் கொண்டு புனைந்த சிறுகதைதான் அது. இதுவரை எந்த எதிர்ப்புக் குரலும் ஒலிக்கவில்லை. யார் கண்டது ?ஆண்டுகளுக்கு பின் யாருக்காவது ஞானோதயம் ஏற்படலாம். அப்போது...?ஒரு கேள்விக்குறிதான் முளைக்கிறது...!

திங்கள், 9 செப்டம்பர், 2013

கடவுளின் வரம்.....?


                                       கடவுளின் வரம்......
                                       ------------------------



யௌவனம் இருக்கும்போதே பெண்ணாசை மிகுதியால் சாபம் பெற்று வயோதிகம் பெற்ற யயாதியின் கதை படித்துக்கொண்டிருந்தேன். அப்படியே உறங்கியும் போய் விட்டேன். திடீரென்று விழிப்பு வந்தது. சிறிது நேரத்தில் தெளிவு பிறந்தது. இருந்தாலும் கனவில் கடவுள் என்னிடம் கேட்ட கேள்விக்குப் பதிலே இந்தப் பதிவு. “ யயாதிக்குச் சாப விமோசனமாக அவரது வயோதிகத்தை யாராவது எடுத்துக் கொண்டால் அவருக்கு இளமை திரும்பி விடும் என்று படித்தாய் அல்லவா.... உனக்கு ஒரு வரம் தருகிறேன். உன் ஆயுளில் மகிழ்ந்திருந்த நாட்களில் சில வருடங்களை நீ மீண்டும் வாழ வரம் தருகிறேன் நீ  எந்த வருடங்களை மீண்டும்  வாழ விரும்புவாய்”—இதுதான் கடவுளின் கேள்வி.. உடனே பதில் சொல்லக் கூடிய கேள்வியா அது. நான் அவகாசம் எடுத்துக் கொள்வதற்குள் கடவுள் காணாமல் போய் விட்டார்.இருந்தாலும் கேள்வி சுவாரசியமாக இருந்ததால் நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஒரு திரைப் படப் பாடலில் வாழ்க்கையை எட்டு எட்டு ஆண்டுகளாகப் பிரித்து ஒரு பாடல் வரும்/ நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் என் வாழ்க்கையை எட்டெட்டு ஆண்டுகளாகப் பிரித்தால் ஒன்பது எட்டுகள் முடிந்து பத்தாவது எட்டில் இருக்கிறேன்நான். இதில் எந்த எட்டு ஆண்டுகளை மீண்டும் வாழக் கடவுளிடம் வரம் கேட்ப்பேன்.? ஒரு ஹைபோதெடிகல் கேள்விதானே. .. கடவுள் வரமா தரப் போகிறார்? அவர்தான் நான் கண் விழிப்பதற்குள் காணாமல் போய் விட்டாரே....

சரி . நான் கடந்து வந்த ஒன்பது எட்டுகளையும் சிறிது பின்னோக்கிச் சென்று ஆராயலாமா.?

முதல் எட்டு வருடங்கள் ஏதும் சரியாய் அறியாப் பருவம். இருந்தாலும் நிறையவே நினைவுகள் நிழலாடுகின்றன. அவற்றை நான் ஓரளவு பகிர்ந்து பதிவிட்டதும் நினைவில் இருக்கிறது. அரக்கோணம் நாட்கள் என்பது அந்தப் பதிவின் பெயர்.  ஆரம்பப் பள்ளிப் படிப்பு, விளையாட்டு அந்தக் காலத்து நினைவுகள் என்று இருக்கும் அந்தப் பதிவு. எந்தக் குறிக்கோளும் கவலையும் இல்லாத அந்த நாட்களை மீண்டும் வாழவா.?எல்லா எட்டுகளையும் அலசிவிட்டு முடிவெடுப்போமே.

இரண்டாம் எட்டு பள்ளிப் படிப்பு முடிப்பதில் நிறைவுற்றது. ஆனால் எங்கள் குடும்பம் மிகப் பெரிய ஒரு சரிவை சந்தித்தகாலம் உலகின் உச்சியில் இருப்பவர் என்று நாங்கள் பெருமைப் பட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தை உண்மையில் மனமொடிந்து போயிருந்தார். யார் யாரோ செய்த பிழைகளுக்கு அவர் பழி வாங்கப் பட்டு வறுமையின் பிடியில் நாங்கள் சிக்கி இருந்த நேரம். ஆனால் அதுவே என் உள்ளத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் , வென்று காட்ட வேண்டும் எனுமொரு வெறியை எழுப்பி இருந்த காலம் வாழ்க்கையின் பாடங்களை நான் கற்கத் துவங்கிய காலம்

மூன்றாம் எட்டில் பல விதமான அனுபவங்களுடனும் ஏற்றப் பட்ட மற்றும் எதிர்கொணட சுமைகளுடனும் வாழ்க்கையைத் தொடங்கி இருந்த காலம் வாழ்வின் வசந்தமாகக் காதல் அரும்பி இருந்த காலமும் அதுதான் எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட கால.ம்.
என் இருபதுகளின் தொடக்கத்தில் நான்

இருபத்து நான்கு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை திருமணம் முடிந்து எனக்கென ஒரு வாழ்க்கைத் துவங்கி இருந்தகாலம். என் தந்தையின் எச்சப் பொறுப்புகளை ஓரளவு முடித்துவிடும் நேரம் எனக்கு என்று ஒரு குடும்பம் உருவான காலம். பணி மாற்றங்களும் இட மாற்றங்களும் கூடவே ஏமாற்றங்களையும் சந்தித்த காலம்.பணியில் நல்ல பெயர் மட்டும் மிஞ்சி, பலன்கள் அறுவடையாகாத காலம்
.
ஐந்தாவது எட்டில் நாயாய்ப் பட்ட பாட்டுக்கு பலன் கிடைக்கத் தொடங்கி வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்கலாம் என்ற மன உறுதி பெற்ற காலம். ஆனால் அதற்கு நான் கொடுக்க வேண்டி இருந்த விலை மிகவும் அதிகம். பெயரும் புகழும் மரியாதையும் கிடைத்தாலும் உடல் நிலை மேலும் கடினமாக உழைக்க முடியாமல் செய்தது. பிள்ளைகளின் படிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்த இயலாதபடி பணிச் சுமை. பல விஷயங்கள் தெரியாமல் இருந்தாலும் சவாலாக ஏற்றுக் கற்று திறம்படச் செய்து காட்டி  பலன் கண்ட காலம்.

ஆறாவது எட்டு என்ன கஷ்டங்கள் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கல்விச் செல்வத்தில் குறை சொல்ல முடியாதபடி படிக்க வைத்து பலன் களை எதிர் நோக்கத் துவங்கிய காலம்

ஏழாவது எட்டில் எனக் கென்றும் என் வீட்டுக்கென்றும் முடிந்ததைச் செய்து முடித்தகாலம் ஒரு வீடு கட்டினேன். ஒரு கார் வாங்கினேன். அயல் நாட்டுக்கு பணி நிமித்தம் அனுப்பப் பட்டேன். வாழ்க்கை படகு ஓரளவு சீராக ஓடத்துவங்கியது. பிள்ளைகள் படித்து முடித்து அவர்கள் கால்களில் நிற்கத் துவங்கிய காலம் மூத்தவனுக்கு மணமுடித்து அடுத்தவனும் வரிசையில் நிற்க என்னுள் எழுந்தது ஒரு எண்ணம். இது நாள்வரை உழைத்தது போதும், மற்றவருக்காக வாழ்ந்தது போதும் ”விட்டு விலகி நில்” என்ற உள்மனசுக்குக் கட்டுப் பட்டு விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன்.

எட்டாவது எட்டு என் ஐம்பத்தாறாவது வயது முதற்கொண்டு அறுபத்துநான்கு வயது வரை எனக்கு நானே ராஜா , பொறுப்புகள் முடித்த சந்தோஷம் பேரக் குழந்தைகளுடன் காலம் கழிக்க முடிந்த காலம், உடலும் கட்டுக்குள் இருந்த காலம் பேரன் பேத்தியுடன் தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று அவர்கள் மகிழ சஷ்டியப்த பூர்த்தியை கொண்டாடியது எல்லாம் நிறைவான நாட்கள்.

இந்த ஒன்பதாவது எட்டுதான் என் சக்தியை நான் இழந்து கொண்டிருக்கிறேன் என்று உணர வைத்த காலம். இருந்தாலும் குறை என்று ஒன்றும் சொல்ல முடியாத காலம்.

இப்போது என் பத்தாவது எட்டில் மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக் காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக் கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம். உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும் கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என் வலைத் தளம் மூலம்

இந்த நேரத்தில் கனவில் கடவுள் வந்து எந்த சில வருடங்களை நீ வாழ விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு பதிலுக்கும் காத்திராமல் சென்றுவிட்டார்.. இந்தக் கேள்விக்குப் பதில், எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என் எட்டாவதெட்டு வாழ்க்கையே சிறந்தது ஆதலால் கடவுள் தருவதாகச் சொன்ன வரத்தைக் கேட்டுப்பெற அவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் வரம் அருள இன்னொரு கனவு வர வேண்டுமோ.?
( என்னை நானே அறிந்து கொள்ளவும் சவால்களைச் சமாளிக்க உறுதி பூண்ட காலமென்று இதைச் சொல்லலாம் இங்கெல்லாம் ( 1 ) (2) (3)
சொடுக்கவும்.இன்று நான் இருப்பதை இப்படி சொன்னேன் )

சனி, 20 ஜூலை, 2013

பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்


     பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்
-----------------------------------------------------------------------------



அயல் நாட்டினர் பலரைக் கண்டிருந்தாலும் சந்தித்துப் பழகியது ஒரு சிலரே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இவர்களுடைய நாட்டினரைப் பற்றி கணிக்க முடியுமா.?

அம்பர்நாத்தில் நான் பயிற்சிக்குச் சென்றபோது பயிற்சி பள்ளியின் ப்ரின்சிபால் ஒரு ஸ்விட்ஜர்லாந்துக் காரர். பெயர் AGUSTO  FREIDRICSAN ஒருவர் வேலையைத் துவங்கு முன்னே தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதில் இருந்து அவரை எடை போடலாம் என்பார். எங்கள் துரதிர்ஷ்டம் , நாங்களங்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஊர் திரும்பிவிட்டார்.

பெங்களூர் எச். ஏ. எல் –லின் ஏரோ எஞ்சின் டிவிஷன் துவக்க காலத்தில் எங்கள் பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தோம். BRISTOL SYDLEY  கம்பனியுடன் ஏரோ எஞ்சின் தயாரிக்கக் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயர்கள் பலரும் இருந்தனர். அவர்களுக்கு இந்தியர்கள் இன்னும் அடிமைகள் என்ற எண்ணத்துடன் கூடிய ஒரு சுபீரியாரிடி காம்ப்லெக்ஸ். அதற்கு தூபம் போடுவதுபோல் நம்மவர்களின் அடிவருடித்தனம். அப்போதெல்லாம் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். வெறும் அனுபவ அறிவே படைத்த சில தொழிலாளர்கள்ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூப் என்று சாதாரண லேத் மெஷினிலிருந்து கடைந்தெடுப்பார்கள். ! அவற்றை பெருமையுடன் எக்சிபிட் செய்வார்கள். ஏரோ எஞ்சின் டிவிஷனில்  முதல் ஆயுத பூஜை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. என்னையும் விழாப் பொறுப்புக் கமிட்டியில் இருக்கச் சொன்னார்கள். அலங்காரப் பொருட்கள் வாங்கும் போது நான்கைந்து பெரிய ரோஜா மாலைகள் வாங்க வேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டபோது அங்குள்ள சில ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அணிவிக்க என்றார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆயுத பூஜை ஆயுதங்களுக்கே தவிர ஆசாமிகளுக்கல்ல என்று வாதாடினேன். இந்திய அதிகாரி அவரது சொந்தச் செலவில் மாலைகள் வாங்கி அவர்களுக்கு அணிவித்தார். நாங்கள் அந்த விழாவைப் புறக்கணித்தோம். என்ன.... இந்த நிகழ்வு என் மீது அதிகாரிகளுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணிற்று.

 ஏரோ எஞ்சின் டிவிஷனுக்காக அயல் நாடுகளில் இருந்து மெஷின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் சில ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டன. உதிரி பாகங்களாக வந்த அவற்றை ஒருங்கிணைத்து முழு மெஷினாக்கி வேலை செய்யும் விதத்தையும் விளக்க ஒரு ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவர் பெயர் ஆந்த்ரே என்று ஏதோ வரும் அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. ஃப்ரென்ச் மொழி மட்டுமே தெரியும். மேலும் ஆங்கிலேயர்கள் என்றாலேயே வெறுப்பைக் கக்குவார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளாக இங்கிலாந்தும் ஃப்ரான்சும் இருந்த போது ஆங்கிலேயர்கள் ஃப்ரென்ச் படைகளை முன்னுக்கு அனுப்பி அவர்கள் தப்பித்துக் கொள்வார்களாம். ஆங்கிலேயர்கள் நம்ப முடியாதவர்கள் என்பார். சைகையினாலும் படங்களினாலுமே கருத்துப் பரிமாற்றம் நடக்கும். அப்போது அவரிடம் இருந்து சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் Very interesting personality.!( கேல வாத்ர நாம்= உங்கள் பெயர் என்ன: பான் மஜூர்= நல்லநாளாய் இருக்க: பான் மதா= குட் டே: த்ரெ பான் = வெரிகுட்: ந த்ரெ பான்= நொட் குட்: துஷ்ம = கொஞ்சம் )

எச் ஏ எல் ஐ விட்டு சென்னையில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்போது அங்கும் நிறைய ஆங்கிலேயர்கள் பணியில் இருந்தனர். அங்கே சில நூதனமான (?) வழிமுறைகளைக் கண்டேன். நான் அங்கு ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆக இருந்தேன். ஒரு மெஷினில் இருந்து உருவாகி வரும் சில பொருட்கள் அடுத்த மெஷினுக்குச் சென்று இன்னும் சில மாற்றங்களுடன் வேறு மெஷினுக்குச் செல்லும்.  இதில் எங்காவது ஒரு மெஷினில் உற்பத்தி அளவில் குறைந்தால் அது அடுத்த மெஷின்களையும் பாதிக்கும். ஆங்கிலேயர்கள் அந்த மெஷின்களின் இயக்க முறைகளை வரை வகுத்து இருந்தார்கள். அதன்படி மெஷினை இயக்கும் தொழிலாளியோ மேற்பார்வையாளரோ எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏன் எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. எனக்கு இந்த முறை புதியதாய் இருந்தது. அங்கு வேலை செய்யும் மேற்பார்வையாளர் தொழிலாளி நிறுத்தாமல் நேரத்தை வீணாக்காமல் உழைக்கிறானா என்று மட்டும் பார்க்க வேண்டும் இந்த நிலையில்  நான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஷினில் கட்டிங் டூல் வேகமாக உடைந்து கொண்டிருந்தது. அதை மாற்றி மாற்றி செயல் படுவதில் நேரம் விரயமாகியது, உற்பத்தி குறைந்தது. நான் ஆராய்ந்த அளவில் தவறு எனக்குப் பிடிபட்டது. இருந்தாலும் அங்கு நிலவிய நியதிகளின்படி நான் ஏதும் செய்யக் கூடாது. பகல் ஷிஃப்டில் ஆங்கிலேய நெறியாளரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார். நான் இரவு நேர ஷிஃப்ட் வரும்போது செய்யும் அமைப்பை மாற்றி அதிக உற்பத்தி கொடுத்துக் கொண்டிருந்தேன் வேலை முடிந்து போகும் முன் பழைய நிலையில் வைத்து விட்டுப் போவேன். இதை அவர்கள் கண்டு என்னிடம் காரணம் கேட்டார்கள். நான் எனக்கு எந்த சுதந்திரமும் இல்லாமல் பகலில் எதையும் மாற்ற முடியாமல் வேலை செய்வதையும் இரவு ஷிஃப்டில் என் விருப்பம் போல் என் முறையில் வேலை செய்வதையும் கூறினேன். அங்கிருந்த ஆங்கிலேயத் தலைமை அதிகாரி பகலில் என் செய் முறையை விளக்கக் கேட்டார். என்னைச் சுற்றி பலரும் இருக்க நான் செய்த மாற்றங்களை விளக்கிக் கூறி என் செயல் முறையில் அதிக உற்பத்தியை காட்டினேன். அனைத்து வெள்ளைக் காரர்களும் என்னை பாராட்டினார்கள் (என் மெஷினுக்கு செயல் முறை தந்திருந்த அந்த ஒரு ஆங்கிலேயர்  தவிர.)ஒரு ஷிஃப்டில்நான்கு ஐந்து டூல்கள் உடைந்து நேரம் விரயமாக்கிய நிலை போய் ஒரே டூலால் இரண்டு ஷிஃப்ட் வேலையும் தடை இல்லாமல் சென்றது..

நான் விஜயவாடாவில் இருந்தபோது ஒரு ஜெர்மன்காரர் வந்திருந்தார். அவர்களது வேலையில் ஒரு ஒழுங்கு இருக்கும். பணியில் டெடிகேஷன் இருக்கும். மற்றபடி  பணியில் இல்லாத மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் வாழ்க்கையே வேறாயிருக்கும். நான் குறிப்பிட்ட இவர் பெயர் மார்டின் வாக்னர். அவருக்கு விஜயவாடா முழுவதும் அத்துப்படி . சைகிள் ரிக்‌ஷாவில் ஊர் சுற்றுவார். எந்த இடத்தில் இரவு கேளிக்கைகள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் தெரிந்து கொண்டவர். கிருஷ்ணா நதிக்கரையில் துவைத்துக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அவர் பார்க்கும் BIGGEST WASHING MACHINE  என்பார். ஒரு முறை அவரை என் வீட்டுக்குக் காலை உணவு அருந்த அழைத்திருந்தேன். இரண்டு முட்டைகள் பச்சையாகவும் இரண்டு முட்டைகள் ஆம்லெட்டாகவும்  சாப்பிட்டார். மற்றபடி நம்
இட்லி சாப்பிட மிகவும் பயந்தார். நிறைய  தேத்தண்ணீர் அருந்தினார். அவரிடமிருந்து இரண்டு ஜெர்மன் வார்த்தைகள் கற்றேன். ‘டாங்கெ ஷான்’ பிட் அஷ்ஹன் ( thank you , no mention )

திருச்சி மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை செக்கோஸ்லவேகியா நாட்டுடனான கூட்டு முயற்சியால் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் அவர்களது பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு வரைமுறை வகுத்துக் கொண்டு பணி புரிந்தார்கள் ஒரு முறை நான் எடுத்த ஒரு முடிவு நமது டிசைன் டிபார்ட்மெண்ட்காரர்களுக்கு சரியாகப் படவில்லை. மத்தியஸ்தத்துக்கு செக் உயர் அதிகாரியிடம் சென்றது. அவர் என் முடிவு சரியென்றார். ஆனால் இதை உங்களுக்குள்ளேயே பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார். குடியிருப்பில் அவர்கள் குடும்பங்களோடு வசித்தனர். அதில் ஒருவரின் உறவுக்காரப் பெண் ஒருத்தியை நம்மவர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு பிறகு அவர்களுடனேயே செக்கோஸ்லாவேகியாவில் செட்டில் ஆனார்.

அமெரிக்கக் கூட்டுடன் (Dresser industries) வால்வுகள் தயாரிக்கப் பட்டன. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து வேறு ஒரு வால்வ் தயாரிப்பாளர் (பெயர் நினைவுக்கு வரவில்லை ) அவர்களது ப்ராடக்ட் முன்னேற்றத்துக்காக வந்திருந்தனர். நாங்கள் தயார் செய்து கொண்டிருந்த ட்ரெஸ்ஸர் வால்வுகளுடன் ஒப்பிட்டு அவர்களது தயாரிப்புகள் மேலானது என்று கூறினர். நடை முறையில் இருக்கும் ஒரு கூட்டுக் கம்பனியின் தயாரிப்புகளை ஒப்பிட்டுக் குறைகள் கூறுவது சரியா என்று கேட்டோம். Everything is fair in war and love என்றார்களே பார்க்கலாம்.!

ஜப்பானுடன் கூட்டுத்தயாரிப்பில் ஒப்பந்தம் இருந்தது. எனக்கு ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் நான் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். ஜப்பானிய மானேஜர் ஒருவர் இல்லத்துக்கு என்னை அழைத்திருந்தார். ஒரு ஜப்பானிய குடும்பத்தைக் காணும் வாய்ப்பாயிருந்தது. என்னதான் ஜப்பானியர்கள் முன்னேறியது போல் தோன்றினாலும் At least அவர்களது முந்தைய தலை முறையினர் பாரம்பரியத்தை கட்டிக்காப்பவராகவே எனக்குப்பட்டது. நான் அங்கு சென்றபோது அவரது தாயார் அவர் மணவிழாவின் போது அணிந்த பாரம்பரிய KIMONO உடையை கண்களில் ஒளி வீசக் காண்பித்துப் பெருமை அடைந்தார்.எங்களுக்கு ஒரு சிறப்பு விருந்து கொடுக்கவும் எங்களுக்கு உபசாரம் செய்யவும் ஒரு அதிகாரியிடம் கூறப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய  குடும்பத்தையும் பங்கு கொள்ளச் செய்ய விரும்பினார். மேலதிகாரிகளுக்குத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஆகவே எங்களிடம் அவர் குடும்பம் வருவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.எங்கள் தயவால் செலவில்லாமல் அவர் குடும்பத்துக்கு ஒரு விருந்து. . அடிப்படையில் ஜனங்கள் எல்லா நாட்டிலும் ஒரு போல்தான் என்று தோன்றுகிறது.
அவர்களது வழிமுறைகளை விளக்க வந்த ஒருவர் என்னைப் பற்றிக் கேட்டார். நான் இந்த துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் சடாரென்று என் காலருகில் அமர்ந்து கொண்டு எனக்கு ஏதும் சொல்ல அருகதை இல்லாதவர் என்றார்.

நம் நாட்டிலேயெ பலதரப்பட்ட மனிதர்களுடன் பழக வாய்ப்பிருந்த எனக்கு இம்மாதிரி அயல் நாட்டினருடன் பழக வாய்ப்பு இருந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவை விட இந்தியா மேல் என்றார். அமெரிக்காவில் பயம் இல்லாமல் நடமாட முடியாது என்றார். எந்த நேரத்திலும் YOU CAN BE MUGGED என்றார். அக்கரைக்கு இக்கரை பச்சை.    -