திங்கள், 9 மார்ச், 2015

எண்ணங்கள் எனது மட்டுமல்ல


                     எண்ணங்கள் எனது மட்டுமல்ல
                   ------------------------------------------------------


சில நாட்களுக்கு முன் தாய்மொழி எது என்று கேட்டு எழுதி இருந்தேன். தமிழில் எழுதும் என் வீட்டில் என்னோடு தமிழும் போகும் போலிருக்கிறது என்று அங்கலாய்த்திருந்தேன்.நான் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மணந்தாலும் , என் மலையாளம் விட அவள் தமிழ் நன்றாக இருந்ததால் வீட்டில் தமிழே கோலோச்சியது.என் மகன்கள் இருவரும் மலையாளம் தாய்மொழியாகக் கொண்டு இருப்பவர்களையே மணந்தாலும் என் பேரக் குழந்தைகள் இரு மொழிகளிலும் பேச முடிந்தவர்களே. ஆனால் என் இரண்டாம் பேரன் வீட்டில் அவன் தாயுடன் மலையாளத்திலும் தந்தையுடன் ஆங்கிலத்திலும் பேசுகிறான். என் இளைய மகனும் அவன் தமிழில் பேச வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்லை. ஆனால் என் இளைய மகன் வீட்டுக்குப் போகும் போது நான் தமிழிலேயே பேசினாலும் அவனால் புரிந்து கொண்டு பதிலை ஆங்கிலத்திலேயே கூறுவான் இது இவ்வாறிருக்க ஒரு குறும்படம் என் கவனத்துக்கு வந்தது. அதில் சொல்லப் பட்ட விஷயங்கள் குறித்து வாசகர்களே அபிப்பிராயம் கூறலாம், கூறவும் வேண்டுகிறேன் நான் என்னைப் பொறுத்தவரை தமிழில் ஆர்வம் உடையவன் ஆனாலும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன் ஊமை விழிகளின் பதிவாசிரியர் சங்க காலப் பாடல்களுக்குப் பொருள் காணும் வழியைக் காட்டுகிறார். ஆனால் எனக்கோ தமிழில் உற்றாரைப் பேச வைப்பதே சவாலாக இருக்கிறது.
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு காணொளி கண்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மொழி பற்றிய இன்னொரு காணொளி. இதையும் ரசியுங்கள்



                                                --

41 கருத்துகள்:

  1. சென்னையில் இருப்பவர்களே தமிழில் பேசவில்லை - என்று தாத்தா குமுறும் இடம் அருமை!..

    தாத்தாவின் எதிர்பாப்புகளுடன் பயணித்த நான்,

    தாத்தா.. போய்ட்டு வாங்க தாத்தா!..

    - என்று பேரன் சொன்னதும் தாத்தாவுடன் நானும் கரைந்து போனேன்..

    இதற்காக கவலைப்படுகின்றீர்களே!.. - என்ற எண்ணம் மாற வேண்டும்..

    நிதர்சனத்தை உணர்த்துகின்றது - குறும்படம்..

    என்ன செய்யலாம்!..

    பதிலளிநீக்கு

  2. வணக்கம் ஐயா இந்த தமிழ் இனி... ? என்ற குறும்படம் நாளைய இயக்குனரில் முதல் பரிசு பெற்றது நான் அடிக்கடி காணும் குறும்படம் இது இதன் டைரக்டர் தமிழ் நாட்டுக்காரர் தற்போது அமெரிக்காவில் குடும்பசகிதம் வாழ்கிறார், இரண்டாவது காணொளி கண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமையான படம் ஸார்! கருத்தும், டெக்னிக்கல் விஷயங்களும், ஷாட்ஸ் எல்லாமே மிக மிக அருமை. ஸ்க்ரீன் ப்ளே சூப்பர். அதுவும் அதில் ஒரு இடம் மிககும் மனம் கவர்ந்த ஒன்று....சைனீஸ் அம்மாவும் அவரது மகளும் தங்களுக்குள் தங்கள் மொழியில் பேசுவது அந்த இடத்தில் நறுக்!!!

    கேரளத்தில் அவர்கள் தங்கள் மொழியை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. தங்கள் குழந்தைகளிடமும் மலையாளத்தில் தான் பேசுகின்றனர். கன்னடர்களும், ஆந்திரக்காரர்களும், வட இந்தியர்களும் அப்படித்தான். தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படி.

    அதே சமயம் அடுத்த காணொளியில் சொல்லப்படும் கருத்தும் மிக மிக அவசியம். ஆங்கிலமும் வேண்டும். நிச்சயமாக. அவர்கள் இறுதியில் சொல்லும் அந்தக் கருத்து அருமை. எந்த மொழி கற்க வேண்டும் என்றாலும், தாய் மொழி தெரிந்திருந்தால் மிக எளிதாகக் கற்றுவிடலாம் என்பதே எங்கள் கருத்து ஸார்.

    ஒரு குறிப்பு: ஒரு நகைச்சுவையை ரசிக்க வேண்டும் என்றால் தாய்மொழியில் சொல்லப்படும் நகைச்சுவை கூடுதல் சுவை சேர்க்கும்.

    பாரதியின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றதோ! தீர்க்கதரிசிக் கவிஞன்!

    பதிலளிநீக்கு
  4. துளசிஜியின் கமெண்ட்டை வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

    இரண்டு காணொளிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. துளசிஜியின் கமெண்ட்டை வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

    இரண்டு காணொளிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. குறும்படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா
    பார்த்துவிட்டு
    மீண்டும் தங்களின் பதிவிற்கு வருகின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. தாய் மொழி தலைமுறைதோறும் தொடர வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் ?யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன நம் தமிழ்த் தாத்தா தீர்க்கதரிசிதானே ?நாடு ,மதம் ,இனம் கடந்து மனிதனாக வாழ்ந்தால் சரிதான் :)
    த ம +1 போட வாய்ப்பு தாருங்கள் !

    பதிலளிநீக்கு
  8. அன்புக்கு எந்த மொழியானால் என்ன?

    இப்போதெல்லாம் சென்னையிலேயே தமிழ் வழக்கொழிந்து வருகிறது.

    இருந்தாலும் உங்கள் வலி புரிகிறது என்பேன்.

    பதிலளிநீக்கு
  9. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதை அமெரிக்காவில்தான் உணர வேண்டும் என்பதில்லை... நம் ஊரிலேயே ஆங்கிலத்தில்தான் பேசச் சொல்கிறார்கள்.

    இங்கு கூட மலையாளி மலையாளியைப் பார்த்தால் மலையாளத்தில்தான் பேசுவான். ஆனால் தமிழன் தமிழனைப் பார்த்தால் ஆங்கிலத்தில்தான் பேசுவான்.

    இரண்டு குறும்படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. சார் துரை சார் சொன்னதைப்போலத்தான்!
    தமிழகத்தின் திருச்சி சென்னை போன்ற பெருநகரங்களில் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் தமிழ்மொழிப்பயன்பாட்டை ஒட்டி ஒரு குறும்படம் விரைவில் வரும் என்று தோன்றுகிறது.


    தமிழ்த்தாய் வாழ்த்தை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நம் தமிழகத்தில் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறன்றன.
    யார் அதைப்பற்றிக் கவலைப்படுவது?

    அதைப்பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?

    மொழி கலாச்சாரம் பண்பாடு என்கிற பழம்புராணங்கள் பேசி என்ன பயன்?

    அது சோறு போடுமா...........?


    தொலைந்து போன தங்களின் மொழியை மீட்டெடுத்த யூதனிடம் கேட்டால் அவன் சொல்வான் தாய் மொழியை இழந்ததன் வலியையும் அதை மீட்டெடுத்தால் அடைந்த பெருமிதத்தையும்.
    ஒருவேளை இழந்த பின்தான் இருப்பதன் அருமை தெரியும் என்பது மொழிக்கும் பொருந்தும் போலும்.

    இரண்டாவது குறும்படத்தில் சொல்லப்பட்டிருப்பதை ஏற்க வேண்டியதுதான்.
    பல மொழிகளைக் கற்பது நல்லதுதான்.
    அதற்கு அடிப்படை ஒருவரின் தாய் மொழியிலிருந்து வருவது இன்னும் நல்லது.

    பொதுவாக தாய் தந்தை என்னும் இருவர் இருவேறு மொழிகளைப் பேசும் சூழலில் தாயின் மொழியையே குழந்தை தன் வழக்கு மொழியாகக் கொள்கிறது என நான் நினைக்கிறேன்.
    அதனால்தான் அது தாய்மொழி எனப்பட்டதோ?
    தமிழ் மணத்தில் தங்கள் பதிவு இன்னம் இணைக்கப்படாததால் வாக்களிக்க முடியவில்லை .

    பதிலளிநீக்கு
  12. தாய்மொழிப்பற்று பாராட்டத்தகுந்ததே. ஆனால் சூழ்நிலைகள் மாறும்போது மனிதன் மாறவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. இது இயற்கை.

    பதிலளிநீக்கு
  13. இரண்டாவது காணொளி புதிது...

    எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா ? என்றால் சந்தேகம் தான்... எல்லாவற்றையும் தாய் மொழியில் புரிந்து கொண்டு கற்கிறோம்...

    அதே சமயம் எத்தனை மொழிகள் கற்றுக் கொண்டாலும், அத்தனை பேருக்கு சமம்...

    பதிலளிநீக்கு
  14. முதல் குறும்படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இது கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டு பரிசு பெற்ற படம். இரண்டாவது காணொளியை இப்போது தான் பார்க்கிறேன். சொல்லவேண்டியதை முதல் படம் சொல்லிவிட்டது என நினைக்கிறேன். எல்லோரும் சொன்னதுபோல் தமிழன் தான் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் நலம் விசாரிப்பான். முதலில் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. ஆனால் இங்கோ பள்ளியிலேயே தமிழை விட்டுவிட்டு பிற மொழியை இரண்டாம் பாடமாக தேர்ந்தெடுப்பது வருத்தப்படக்கூடிய விஷயமே.

    பதிலளிநீக்கு
  15. இரண்டு காணொளிகளையும் முன்பே பார்த்திருக்கிறேன். வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களில் தமிழ் பேசுமொழியாக இருந்தாலும் பல குழந்தைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிவதில்லை. இங்கேயே பிறந்துவளர்ந்த குழந்தைகள் இன்னும் மோசம். பேசவும் தெரிவதில்லை. இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் மட்டுமே தமிழ்ப்பாடசாலைக்கு செல்வதையும் தமிழில் பேச எழுத பயிலவும் ஆர்வம் காட்டுகின்றனர். மற்றத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையென நினைக்கின்றனர். காணொளியில் காட்டப்பட்டிருப்பது போல மூன்றாம் தலைமுறைக்கு தாய்மொழி என்னவென்றே தெரியாத நிலை ஏற்படலாம். வருத்தம் தரும் செய்தி என்றாலும் உண்மை அதுதான்.

    பதிலளிநீக்கு
  16. இரண்டுமே பார்த்தவை தான். தமிழ் அப்படி எல்லாம் அழியாது. இலங்கைத் தமிழர் தமிழில் தான் பேசுகின்றனர். நம் தமிழ்நாட்டில் தான் ஆங்கிலத்தில் உரையாடுவது எல்லாம். :))))

    பதிலளிநீக்கு

  17. //பாரதியின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றதோ! தீர்க்கதரிசிக் கவிஞன்!//

    துளசிதரன் தில்லையகத்து, இல்லை, பாரதி அந்தப் பொருளில் சொல்லலை. தயை கூர்ந்து

    http://sivamgss.blogspot.in/2007/02/218.html

    இந்தச் சுட்டியைப் பாருங்கள். பாரதி உண்மையில் சொன்னது என்னவென்று புரியும். முதல் வார்த்தைகளை மட்டுமே எடுத்துப் பலரும் கையாளுகின்றபடியால் தவறான புரிதலுக்கு இடம் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பாரதி எழுதிய அந்தப் பாடலின் குறிப்பிட்ட சில பத்திகளைக் கீழே கொடுக்கிறேன்.

    //இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
    ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
    கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

    "புத்தம் புதியகலைகள்-பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
    மெத்த வளருது மேற்கே-அந்த
    மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை

    சொல்லவும் கூடுவதில்லை-அவை
    சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

    என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
    இந்த வசை எனக்கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    தந்தை அருள் வலியாலும் -இன்று
    சார்ந்த புலவர் தவ வலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."//

    இயன்றபோது சுட்டியையும் படியுங்கள். நன்றி. :)

    பதிலளிநீக்கு

  19. @ துரை செல்வராஜு
    குறும் படத்தின் ஆதங்கத்தை நானும் அனுபவித்து வருகிறேன் அதைத்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  20. @ கில்லர்ஜி
    காணொளியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பகிரவில்லை. அதில் சொல்ல வந்தசெய்தி என்னை பாதித்ததால் பகிர்ந்தேன். பல மொழிகள் தெரிந்திருக்கும் உங்களுக்கு இரண்டாம் குறும்படம் சொல்ல வருவது நன்கு தெரிந்திருக்கும். நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  21. @ துளசிதரன் தில்லையகத்து.
    ரசிக்க வைக்கும் குறும்படம் ஒரு செய்தியுடன் என்பதே என்னை கவர்ந்தது. பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் என் ஆதங்கம். தமிழ் இனி என்னும் தலைப்பு ஒரு எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறதுஅந்தத் தாத்தாவின் வலிகளை இந்தத் தாத்தாவும் உணர்கிறான் பிற மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு கதையாகக் கூறுகிறார் அந்த அம்மணி. மேடம் கீதா சாம்பசிவத்தின் கருத்துக்களையும் பாருங்கள் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  22. @ ஸ்ரீராம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  23. @ கரந்தை ஜெயக் குமார்
    மீண்டும் பதிவுக்கு வர வேண்டி நன்றியுடன்

    பதிலளிநீக்கு

  24. @ பகவான் ஜி
    யாதும் ஊரே யாவரும் கேளிர் சரிதான் எம்மொழியும் சம்மதந்தான். ஆனால் மொழி கலாச்சாரத்தினைக் கடத்துகிறது என்றே நினைக்கிறேன் நீங்கள் வீட்டில் பேசுவது எந்த மொழி. ? வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  25. @ A.Durai
    அன்புக்கு மொழி இல்லை எனக் கூறி சமாதானமடையலாம் என் வீட்டிலேயே தமிழ் வழக்கொழிந்து விடுமோ என்னும் அச்சம் இருக்கிறதுஇன்னும் ஒன்றிரண்டு தலை முறைகளில் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  26. @ பரிவை சே, குமார்
    தமிழை யாராலும் அழிக்க முடியாது. அயல் நாடுகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளே தமிழ்பேசப்படாததன் காரணம் என்றுதான் படம் உணர்துகிறது.வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  27. @ ஊமை கனவுகள்
    உங்கள் கவனத்தைப் பிரத்தியேகமாககவருவதன் நோக்கம் என்னவென்றால் பேச்சு வழக்கே ஒழிந்து கொண்டூ வரும் சூழ்நிலையில் சங்க காலத்தமிழ் விளங்குவதில்லை எனக் கவலைப் படுவதாபேச்சு வழக்கே தொலைந்து போகிறதே என்று கவலைப் படுவதா. தாய் பேசும் மொழி தாய்மொழி என்ற பொருள் இதுவரைக் கேள்விப்படாததுஒரு வேளை மொழியைக் கடத்தும் சக்தி தாய்க்கு இருக்கிறது என்பது வெண்டுமானால் சரியாய் இருக்கலாம் தாய் மொழி பற்றிய சந்தேகங்கள் என்று நான் முன்பே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  28. @ டாக்டர் கந்தசாமி
    மொழிப்பற்று பற்றி நான் சொல்லவில்லை. தாய்மொழியில் பேசுவார் குறைகிறதே என்பதே ஆதங்கம் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  29. @ திண்டுக்கல் தனபாலன் என் மக்கள் பல மொழி பேசும் திறன் படைத்தவர்கள் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களுக்குத் தாய் மொழியில் உரையாடும் வழக்கம் இல்லை என்றால் வருத்தமளிக்கும் வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  30. @ வே நடன சபாபதி
    வருகைக்கும் மேலானகருத்த்ப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  31. @ கீதமஞ்சரி
    அயல் நாடுகளிலேயே பிறந்து வளரும் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. வீட்டிலாவது தாய்மொழியில் பேச வைப்பது பெற்றோர் கடமை. ஆனால் என்ன செய்வது தமிழன் என்றோர் இனமுண்டு அவர்க்கே தனியே ஒரு குணமுண்டு. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  32. @ கீதா சாம்பசிவம்
    தமிழ் அழியும் என்று சொல்வது ஏற்க முடியாது. வீட்டில் பேசும் அளவுக்காவது அது இருக்கும். அயல் நாடுகளில் நிலைமை வேறு,அது பெற்றோர்களின் மைண்ட் செட் ஐப் பொறுத்தது. பாரதியின் பாடலில் ஏதோ ஒரு வரியைத் தவறாக பொருள் கொள்பவருக்கு அந்தப் பாடலை முழுதும் கொடுத்ததற்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  33. @ கீதா சாம்பசிவம்
    /சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்/எட்டு திசையும் சென்று செல்வங்கள் சேர்ப்பர். கூடவே நம் மொழியையும் மறப்பர் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. அய்யா எனது கணினியில் காணொளி தெரியலை. கண்டதும் கருத்திடுவேன் (கண்டபடி கருத்திடமாட்டேன்) நிற்க என் பக்கத்திற்கு தங்களின் வருகை + கருத்துரையும் கண்டேன் மகிழ்ச்சி. பிறரிடம் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் உண்டு,அது என்னவென்றால் ஒருத்தர் எழுதின மொய்யை விட கூட சேத்து எழுதுவதுதான் மற்றவர்கள் செய்வது ஆனா நாம கொஞ்சம் வேற மாதிரி. நீங்க தந்த தாம்பூல பையில்
    முதல்(?)வருகைக்கு நன்றி.
    அப்டின்னு இருந்தது அதையே கொஞ்சம் பட்டி பாத்து
    முதல்வருக்கு நன்றி.
    ஆ மாத்தி மறு மொய்யாக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  36. தாய்மொழியை விட்டு நாம் மிகவும் அன்னியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. தங்களின் ஆதங்கம்தான் எங்களின் ஆதங்கமும்.

    பதிலளிநீக்கு

  37. @ அன்பே சிவம்
    என் பதிவுகளுக்கு வந்து கருத்திடும் வாசகர்கள் அனைவரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடுவது சற்றி சிரமமாய் இருக்கிறது. இருந்தாலும் கூடியவரை முயற்சி செய்கிறேன் . பதிவில் காணொளிகாண்பது இயலாவிட்டால் அதை யூ ட்யூபில் பார்க்கலாம் தமிழ் இனி என்று தமிழில் தட்டச்சு செய்தால் பார்க்கலாம் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  38. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தாய் மொழியை விட்டு நாம் என்பதை விட நம் சந்ததிகள் என்பதே சரியாய் இருக்கும். கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  39. மாதங்கி அவருடைய face book-ல் சுமார் 1 1/2 வருடங்கள் முன்பு இந்த குறும் படத்தை பகிர்ந்து

    கொண்டிருந்தார்..அதை பார்த்தபோதும், அதன் பிறகு இந்த 'பிரச்னை' ஞாபகம் வரும்போதெல்லாம்

    என் நெஞ்சு கணப்பதை தவிற்க முடிவதில்லை ..இது காலச்சூழற்சியின் பாற்பட்டது..'பண்பாட்டு"

    பிரக்ஞை இழந்துவிடாத தனி மனிதர்கள் கவனமாக அவரவர் சந்ததியினரும் இந்த ஈடு செய்ய

    முடியாத இழப்பிற்கு ஆளாகாமல் காப்பாற்ற பட ஆவன செய்ய் வெண்டும்...

    மாலி.

    பதிலளிநீக்கு
  40. @ வி.மாலி
    என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. பண்பாடு மொழி இதெல்லாம் தற்கால மக்களிடையே குறைகிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது. அயல் நாடுகளிலாவது சூழ்நிலை என்று கூறலாம். ஆனால் இங்கு காலத்தின் கோலம் என்று சொல்லி சமாதானமடைய வேண்டியதுதான். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. இரண்டு காணொளிகளும் அருமை. என் பேரன் அமெரிக்காவில் சனிக்கிழமை தோறும் தமிழ் பள்ளி சென்று படித்து வருகிறான்.

    தமிழர்கள் ஒன்று சேரும் போது தாய் மொழியில் பேசினால் நல்லது.
    தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலத்திலோ அல்லது அவர்கள் மொழி தெரிந்தால் அவர்கள் மொழியில் பேசினால் பரவாயில்லை.
    தாய்மொழியை மறக்ககூடாது.

    பதிலளிநீக்கு