Thursday, January 31, 2013

பெண்களே என்ன நினைக்கிறீர்கள்?


                           பெண்களே என்ன நினைக்கிறீர்கள்?
                           ---------------------------------------------------



2011-ம் வருடம் மார்ச் மாதம் “அன்புடன் மலிக்காவின் விருப்பத்திற்கிணங்க “பெண் எழுத்து “ என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். .எழுத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்று ஏதாவது உண்டா என்றும் எழுதி இருந்தேன். பெரும்பாலும் பெண்கள்.கோயில்கள் , இறைவன், சமையல் , என்றும் யாருடைய எண்ணத்துக்கும் பங்கம் வராத முறையில் கவிதைகளும் , சுற்றுலா விஷயங்களுமே எழுதுகிறார்களோ என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். .எதை எழுதினாலும் யார் மனதும் புண்படாத விதத்தில் யார் எழுதுவதானாலும் இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தேன்.




கடந்த மாதம் தலைநகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப்பட . நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க, இங்கே நம் பெண் பதிவர்கள் அவர்களிடைய எண்ணங்களைப் பதிவுசெய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வலைப் பயணம் மேற் கொண்டேன். வலையுலகில் பெண்பதிவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பில் ஒரு பொதுக் கருத்துருவாக்கம் செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால், நான் படித்தவரை அவர்களுடையது என்னும் அபிப்பிராயங்கள் எங்கும் பதிவு செய்யக் காணோம்.(மறுபடியும் சொல்கிறேன். நான் படித்தவரை )




பெண்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தொ கிடையாது என்று எண்ணுகிறார்களா.?பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாது என்று எண்ணுகிறார்களா.? இந்த மாதிரி சீர்கேடான சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள்.?மனிதனாகப் பிறந்தால் வளர்ந்ததும் மணம் முடிப்பதும் சந்ததி வளர்ப்பதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிப்பதில் அவர்களுக்கு எந்த அளவு உடன்பாடு. ஒவ்வொருவருக்கும் குடும்பம் வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. இதில் யார் பங்கு எவ்வளவு என்று எந்த முடிவில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் நடை உடை பாவனையெல்லாம் அவர்கள் இப்பேர்ப்பட்டவர் என்று அனுமானிக்கும் வகையில் இருக்கிறதா.?




சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்மகனும் விலங்காகி விடுகிறான் என்ற கருத்தில் ஒருவரது( பிரபல எழுத்தாளரின்) எழுத்தைப் படித்தேன். அதில் பெண்களுக்கு உடன்பாடா.?தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில் இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.?பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?அந்தப் பிரபல எழுத்தாளர் தவறு செய்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக எழுதி இருந்தார். இதில் பெண்களுக்கு உடன்பாடா, திருப்தி அடைந்து விடுவார்களா.?

கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமையில் அவள் விரும்பாத போது புணர்ச்சியில் ஈடுபடுவது கற்பழிப்பு என்று எண்ணுகிறார்களா?.அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து தண்டனை பெற்றுத் தருவார்களா.?.
ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியில் சுஜாதா எழுதி இருந்த “முதல் மனைவிஎன்ற கதை படித்தேன். அதில் வரும் கணவனும் மனைவியும் போல்தான் பலரும் இருக்கிறார்களா.?(அந்தக் கதையை எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் கதையை எழுத வில்லை)




எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , பெண்கள் மனதில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்( பாரத நாரி.?) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.?பெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏதோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்ன? PROCREATION-க்காக மட்டுமே வித்தியாசமாய் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.உண்மையைச் சொல்லப் போனால் ஆண்களைவிடப் பெண்களே சிறந்தவர்கள் என்னும் என் கருத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.




தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டியதும் போராட வேண்டியதும் பெண்கள் உணர்ந்தது டெல்லி சம்பவங்கள் எடுத்துக்காட்டின. என் ஆதங்கமே வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் மற்றபடி போராட முடியாதவர்கள் வெளிப்படுத்தவில்லையே என்பதுதான். பெண்களின் உலகம் கடவுள் கோயில் சமையல் இவற்றையும் மீறி வியாபித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.



கேள்வி:- அது சரி. இந்தமாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்று நீ நினைக்கிறாய்.?
பதில்:- ஒன்றா இரண்டா, சொல்லிக் கொண்டே போகலாமே. இருந்தாலும் முக்கியமாக நான் கருதுவதைச் சொல்கிறேன். முதலாவதாக நம் கலாச்சாரம். நம் மூதாதையர்கள் உடன் இருப்பவர்களை வர்ணாசிரம தர்மத்தின் மூலம் மட்டும் அடக்கி வைக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்காததன் மூலமும் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு பெரிய ஸ்தானம் தந்ததுபோல் தோன்றும். எந்த செயலிலும் பெண்ணுக்குப் பங்கு இருப்பது போல் காண்பித்து உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பங்குதான் கொடுத்திருக்கிறார்கள். நம் கதைகளிலும் புராணங்களிலும் பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளென்றும் (பாஞ்சாலியைப் பணையம் வைத்தது), ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதுதான் ( ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி) தர்மம் என்றும் போதிக்கப் பட்டு அந்த போதனையே இரத்தத்தில் ஊறி அதுவே பாரத நாரியின் குணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆணுக்கு பெண் ஒரு போகப் பொருள் என்பது கலாச்சார உணர்வாகவே மாறிவிட்டது. அவற்றை மீறி ஒரு பெண் வெளியில் வருவது ஆணுக்குச் சமம் என்று நிலை நாட்டுவது பொதுவாக ஆண் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பே பெண்களைப் பற்றிய அண்மையில் சில பிரபலங்கள் வெளியிட்டக் கருத்துக்கள். நம்முடைய patriarchial சொசைட்டியில்  பெண்கள் உரிமை கொண்டாடுவது முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.



இதையெல்லாம் மீறித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்களும் தங்கள் சுயம் அறிந்து நடக்க வேண்டும். தங்களை போகப் பொருளாகக் கருதும் ஆண்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் நடை உடை பாவனைளால் கவர்வது பாதுகாப்பல்ல என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். வண்ணம் நிறைந்த மலரை அதன் தேனைப் புசிக்க வண்டுகள் வருவது இயல்புதானே. ஆண்கள் வண்டுகள் போல் மொய்ப்பதில் பெண்கள் மனம் மகிழ்வடைவதும் இல்லையென்று சொல்ல முடியாது.




என்னவெல்லாமோ எழுதினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாதது பச்சிளங்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு எப்படி உட்படுத்துகிறார்கள் என்பதுதான். அதில் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது. வெறும் வக்கிர புத்தியின் வெளிப்பாடல்லவா.?நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு உண்மைக்கதை. பிறகு அந்தக் கதையை எழுதி இருக்க வேண்டாமோ என்று தோன்ற பரிகாரம் என்று இன்னொரு பதிவும் எழுதினேன்.




ஆண்களின் பாலியல் கொடுமைகளின் கீழ் கணவன் மனைவியை அவள் விரும்பாத நேரத்தில் புணர்வது கொண்டு வருவதானால் , எனக்குத் தோன்றுகிறது, பெரும்பாலான ஆண்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் ஆவார்கள்.ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. ?  

எழுத எழுத மனம் குமைகிறது. தலைநகரில் நடந்த ஆர்பாட்டங்கள் பலரது குமுறலின் வெளிப்பாடே. ?நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே நம் கடமை என்று கூறத்தானே முடியும் என் போன்றவர்களால். வலையில் எழுதுவதன் மூலமாக நாட்டு நடப்புகள் நம்மையும் பாதிக்கின்றன என்று தெரிவிக்கலாமே என்னும் ஆதங்கமே இப்பதிவு. 
--------------------------------------------------------        


 

 


 

 

 

 

 

 

 

Tuesday, January 29, 2013

கனவிலிருந்து கற்றதும் மற்றதும்.


                           கனவிலிருந்து கற்றதும் மற்றதும்.
                          ------------------------------------------------


கனவொன்று கண்டேன். அதிலிருந்து பாடம் ஒன்று கற்றேன்.கற்றதைப் பகிர்கிறேன்.

நான் சொர்க்கத்துக்கு (?) அழைத்துச் செல்லப் படுகிறேன். தேவதை ஒன்று ( ஒருத்தி.?) எனக்கு வழிகாட்டி. முதலில் ஒரு அலுவலகம் போல் இருக்கும் இடம். அங்கே பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இது என்ன ஆஃபீஸ் ?என்று கேட்டேன். கத்தை கத்தையாக மனுக்கள். ஆயிரக்கணக்கில் அவை தர வாரியாகப் பிரிக்கப் படுகிறதாம். உலகில் மக்கள் ஆண்டவனுக்கு அனுப்பும் வேண்டுதல்கள். பலப்பல வகைகள்.

அங்கிருந்து இன்னொரு அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லப் படுகிறேன். அங்கேயும் பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருந்தார்கள். ‘இது என்ன ஆஃபீஸ்? என்று கேட்டேன். முந்தைய அலுவலகத்தில் வந்த மனுக்கள் தீர்வு செய்யப் பட்டு , மனு கொடுத்தவர்களுக்கு ஆசிர்வாதங்களும் அனுக்கிரகங்களும் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கும் இடமாம்.


மூன்றாவது இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அந்த அலுவலகம் எந்த சுறுசுறுப்பான இயக்கமும் இல்லாமல் ஏதோ ஒன்றிரண்டு தேவதைகளே பணியில் இருந்தனர். இது என்ன ஆஃபீஸ்?என்று கேட்டேன். அனுப்பிய மனுக்களுக்குண்டான ஆசிர்வாதங்களையும் அனுக்கிரகங்களையும் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement களை வாங்கும் இடம்.

”மனுக்களை அனுப்புகிறார்கள். அருளை அனுபவிக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தெரியப் படுத்துவதில்லை” என்று என்னைக் கூட்டிப் போன வழிகாட்டி தேவதை வருத்தப் பட்டுக் கொண்டது. ”எப்படித் தெரியப் படுத்துவது?” என்று கேட்டேன். ஆண்டவனே நன்றி “என்று நினைக்கலாமல்லவா” என்றது அந்தத் தேவதை.

எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது ?என்றுகேட்டேன்.

”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,
உலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன் இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி, சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன் தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள் இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால் அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல்

அதெல்லாம் சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.?

இந்தப் பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப் படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”

விழித்துப் பார்த்தால் கனவுதான் என்றாலும் கற்றது நிறைய என்று அறிந்தேன்.
                -----------------------
மற்றது.
------- 
எனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. அதுவும் இந்த வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு கணினியில் வரும் பல விஷயங்கள் புரிவதில்லை
பதிவுகள் எழுதுகிறேன். அதைப்படிக்கும் விருப்பமுள்ள தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் அதே போல் நானும் பலரது பதிவுகளுக்குத் தொடர்பாளனாய் இருக்கிறேன். நான் தொடர்பாளனாய் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் என் கணினியில் டாஷ் போர்டில் வரும். இப்படியிருக்க இதே பதிவர்களின் பதிவுகள் எனக்கு மெயிலிலும் வருகிறது. இது ஏதோ google+ ன் அனுக்கிரகம் போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.?யாராரிடமிருந்தோ எனக்கு மெயில்கள் வருகிறது. ஆனால் அனுப்பியவர்கள் என்று நான் நினைக்கும் அவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை.Google+ என்றும்  Norply.என்றும் twoo என்றும் linked in என்றும் skill pages என்றும்  இன்னும் என்னவெல்லாமோ இடங்களிலிருந்தும் யார் யார் பெயரிலோ ( அறிந்தவர் அறியாதவர்) வருகிறது.. யாராவது விளக்கம் சொன்னால் நன்றாயிருக்கும்.
                                                          -----------------------------------
இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும் இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்
பகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்

அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள் பலன் குறித்து தெரியப் படுத்தலாமே
                       ---------------------


 


Sunday, January 27, 2013

நான் ஒரு ஏகலைவன்



                     
                                          நான் ஒரு ஏகலைவன்
                                        -----------------------------------



என் மகன் சென்னையில் இருந்தபோது என் மருமகள் ஒரு ஓவியம் வரைந்திருந்ததைக் கண்டேன். அழகான அந்த ஓவியம் என்னுள் ஒரு பொறியைக் கிளப்பியது. ஏன் நாமும் அந்த மாதிரி ஓவியம் வரையக் கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது.. அவளிடம் விசாரித்தேன். அதை தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றும் அதை வரைய அவள் ஒரு ஆசிரியரிடம் ரூ. 3000/-கொடுத்துக் கற்றுக் கொண்டாள் என்றும் சொன்னாள். அதை வரையும் வழிமுறைகளை அவள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொண்டேன். பிறகு நான் பெங்களூர் திரும்பி வந்ததும் அதற்குத் தேவைப் பட்ட பொருள்களை வாங்கி வந்தேன். எனக்குத் தெரியும் நுண்கலைகள் பயில்பவர்கள் கையில் விரல்கள் நீளமாக இருக்கும்நளினமாக இருக்கும் .ஆனால் என்கையோ குட்டையானது. விரல்கள் லாகவமாகப் பணி புரியாது. இருந்தாலும் I wanted to have a go at it. முதலில் fabric paint  வாங்கி என் பேரனின் பனியனில் ஒரு பிள்ளையார் படம் ட்ரேஸ் செய்து பெயிண்ட் செய்தேன். சுமாராக இருந்தது. அதைவிட அவன் அதை என் தாத்தா வரைந்ததுஎன்று பெருமைப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. பிறகு என் பேத்தியின் பாவாடைத் துணியில் ஒரு டிசைன் வரைந்து பெயிண்ட் செய்தேன்..அதை தையல் செய்யக் கொடுத்தபோது டெயிலர் அது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது  என் மீதே எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.


அடுத்து ஒன்றிரண்டு பிள்ளையார் படங்கள் துணியில் பெயிண்ட் செய்து ஃப்ரேம் செய்தேன். அப்போது அதைப் பார்த்து என் பேத்தி ‘பிள்ளையார் முறைப்பது போல் இருக்கிறார் என்று விமரிசித்தாள். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைய முயற்சித்தேன். இந்த ஓவியம் வரையும் முன்பாக வரைய வேண்டிய plywood பலகையைத் தயாரிக்க வேண்டும் படத்தின் சைசுக்குத் தக்கபடி இருக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளைத் துணியை சுருக்கமில்லாமல் ஒட்ட வேண்டும். அதன் மேல் சாக் பவுடரை ஃபெவிகாலுடன் கலந்து ஒருவித மாவு பதத்தில் தயாரித்துக் கொண்டு ஒட்டிய துணி மேல் சமமாக மெழுக வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் பாலிஷ் செய்ய வேண்டும் அதன் பிறகு அந்தத் துணிமேல் வரைய வேண்டிய படத்தை ட்ரேஸ் செய்ய வேண்டும். பிறகென்ன..? யாராவது வரைய முயற்சி செய்வதாக இருந்தால் விளக்கமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். தஞ்சாவூர் ஓவியத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ஆபரணங்கள் அதை வைக்க மக் வர்க் செய்ய வேண்டும். 22 காரட் தங்கப் பேப்பர்கள் கிடைக்கின்றன. விலைதான் அதிகம். ஆபரணத்துக்குண்டான பல நிற மணிகளும் கிடைக்கின்றன. கற்களை ஒட்டுவது, தங்கப் பேப்பர்களை ஒட்டுவது போன்ற வேலைகள் பொறுமையுடன் செய்ய வேண்டியவை. அதன் பிறகு பெயிண்டிங்.

நான் முதலில் செய்த படம் தஞ்சாவூர் ஓவியம் என்று சொல்லலாம் என்பதுபோல்தான் இருந்தது. போகப் போக என் ஓவியங்கள் சுமார் என்னும் வகைக்கு வந்திருக்கிறது. ஆனால் வரையத் துவங்கும் முன்பாகவே அதை என் உறவினர்கள் ரிசர்வ் செய்து விடுவார்கள். பெங்களூரில் எனக்கு உறவினர்கள் அதிகம் ஒவ்வொருவர் வீட்டிலும் என்னுடைய ஒரு படமாவது இருக்கும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் இந்த ஓவியங்கள் வரைவதில் அக்கரை காட்டுகிறேன் என்று தெரிந்த டாக்டர் . எனக்கு அப்போதிருந்த urological problems –ஐ படம் வரைவதில் கவனம் செலுத்துவதால் குறைக்கலாம் என்று கூறி ஊக்குவித்தார். அவருக்கு ஒரு கிருஷ்ணர் படம் வரைந்து பரிசாகக் கொடுத்தேன். மிகவும் appreciate செய்தார்.

சாதாரணமாகக் கடவுளர் படங்கள் தான் வரைந்திருக்கிறேன். வரைய ஆரம்பிக்கும்போது பாதங்களில் இருந்துதான் தொடங்குவேன். வரைந்த படங்களில் என் பெயரை எழுதுவதே இல்லை.


பிறகு கண்ணாடி ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். கண்ணாடி ஓவியங்களை வரையும் போது வலது இடதாகவும் இடது வலதாகவும் வர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.
இப்போதெல்லாம் ஓவியம் வரைவது மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் ஒரு கண்ணாடி ஓவியம் வரைந்தேன். நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவதாகக் கூற் இருந்தார். அவருக்குப் பரிசளிக்க வேண்டி வரைந்தேன். நண்பரும் வரவில்லை. நான் பரிசாகக் கொடுக்கவும் முடியவில்லை.! ( முகப்பில் இருக்கும் படம்.)
எனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர  வேண்டும். பார்ப்போம். 

வரைந்த படங்கள் சில. 
---------------------


 


 



Tuesday, January 22, 2013

இன்பம் தரும் இலக்கியம்


                                          இன்பம்-தரும் இலக்கியம்
                                          -----------------------------------



கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ....


என்ன..... மூளையில் ஏதோ பல்ப் எரிகிறதா.? எரியாவிட்டாலும் பரவாயில்லை.படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். அந்தக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு தன் மனைவியிடம் கூடி இருந்தபோது ஒரு சந்தேகம் வந்ததாம்.தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் சுகந்த மணம் இயற்கையிலேயே உள்ளதா இல்லை அவள் அணிந்திருந்த மலர்களால் வந்ததா என்று.. அந்தக் காலத்து ராஜாக்களுக்கு சந்தேகம் வந்தால் மந்திரிப் பிரதானிகளோ புலவர்களோதானே தீர்க்க வேண்டும். அரசன் தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி பரிசாக அறிவிக்கிறான். மந்திரிகளோ புலவர்களோ அந்தப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. தாங்கள் கூறும் பதில் அரசனுக்கு ஒப்பவில்லை என்றால்.... எதற்கு வம்பு என்று வாளாவிருந்து விட்டனர்.


அங்கே வறுமையில் வாடும் ஒரு புலவன்,தருமி என்று பெயர் தனக்கு அந்தப் பொற்கிழி கிடைக்காதா என்று ஏங்குகிறான். மதுரை சொக்கனாதருக்கு அந்தப் புலவனுக்கு உதவ எண்ணம்.அரசனின் ஐயத்தைத் தீர்க்கும் ஒரு பாடலை எழுதி தருமியிடம் கொடுத்து அரசனுக்குக் காட்டிப் பொற்கிழி பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்.தருமி அதனை எடுத்துக் கொண்டு போய் அரசனிடம் வாசித்துக் காட்டுகிறான் என்ன... இப்போது நினைவுக்கு வருகிறதா.? திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? திரைப்படம் மூலம் கதை விளங்கி விட்டது. அந்தப் படத்தின் மூலம் ஒரு அழகான பாடலும் பொதுமக்கள் பார்வைக்கும் கவனத்துக்கும் கொண்டு வரப் பட்டது. அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.




கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி                                            
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியக் கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

தருமி பாடிய அப்பாடலில் குற்றம் இருக்கிறது என்று கூறி


சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான நக்கீரர் சிவனாரின் மூன்றாவது கண்ணால் எரிக்கப் படுகிறார். பொருட்குற்றம் இருக்கிறது என்ற நக்கீரருக்கு அது இல்லை என்று நிரூபிப்பதல்லவா அந்த ஆலவாயன் செய்திருக்க வேண்டியது.? ஆனால் அவர் செய்தது என்ன. ? கோபம் கொண்டு 




அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கம் பட இரண்டு கால் பரப்பிசங்கைக்
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்
என்று சாடுகிறார். சொன்னதை நிரூபிக்க இயலாதவர் கோபம் கொள்வது முறையல்ல என்று எண்ணும் நக்கீரனும்



சங்கறுப்ப தெங்கள் குலம்  சங்கரனார்க்கு ஏது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்  அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில்லை
என்று பதிலடி கொடுக்கிறார்

தன் பாடல் தானே முக்கண்ணனே பாடியதில் ஒரு நரன் குற்றம் காண்பதா என்று பொறுக்க இயலாமல் அரன் அவனை நெற்றிக்கண்ணைத் திறந்து பொசுக்குகிறார். 
யாராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம். 

. எனக்குத் தமிழ் தெரியாது என்ற   என் பதிவில் குறிப்பிட்ட அகப் பொருளுரை  எழுதிய நக்கீரரும் இவரும் ஒன்றா எனும் ஐயம் இன்னும் இருக்கிறது
                         ----------------------


அரசர்களுக்கு சந்தேகம் எழுவதும் அதை அறிந்தோ அறியாமலோ தீர்ப்பதன் மூலம் புலவர்கள் வெகுமதி பெறுவதும் குறித்து நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தெரிய வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்
ஒன்றும் அந்த வகையைச் சேர்ந்ததே. அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். உயரே ஒரு நாரைக் கூட்டம் பறந்து செல்கிறது. அவற்றின் சிவந்த அலகுகள் எதற்கு ஒப்பாகும் என்னும் நினைவில் வரும் அரசன் ஒரு புலவனின் அவலப் பாட்டைக் கேட்கிறான். பொதுவாகவே துன்பத்தில் இருக்கும் போது பாடல்களும் கவிதைகளும் அழகாக வந்து விழும். இந்த என் அனுபவம் அந்தக் காலக் கவிகளுக்கும் பொருந்தும்போல. கவிதையைப் பார்ப்போம்.



நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய்
(அரசனுக்கு ஒரு அழகான உவமை கிடைத்து விட்டது)


நீயும் நின் பெடையும் தென் திசைக் குமரியாடி
வடதிசைக் காவிரிக் கேகுவீராயின்
எம்மூர் சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனை குரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழூஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.



இதைவிடத்



தெளிவாக அழகாக அவலத்தை வெளிப்படுத்த முடியுமா.?எவரிடமும் சொல்லிப் புலம்ப முடியாததை நாரைகளிடம் சொல்லிப் புலம்பும் இப்புலவன் அதைக் கெட்ட அரசன் இவனுக்கு வெகுமதி  அளித்தாராம். அதன் பிறகு  அவரை குடிதாங்கி என்பவர் ஆதரித்தாராம் அப்போது இவர் பாடுவதாகக் கூறப்படும் இந்தப் பாடலையும் கவனியுங்கள்.




" வெறும்புற்கையும் அரிதாங
கிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,
எறும்புக்கும் ஆர்பதமில்லை
முன்னாள் என்னிருங் கலியாம்,
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்
சென்று கூடிய பின்,
தெறும்புற் கொல் யானை கவளம்
கொள்ளாமற் றெவிட்டியதே."


வெறுஞ் சோறும் இருக்கவில்லை, என் வீட்டுக் கிளியும் பசியால் வாடித் தளரும்..எறும்புக்கும் ஏதுமிருக்கவில்லை. . பின் என் குறை தீர்த்த குடிதாங்கியை சென்றடைந்தபிறகு, யானையும் வாய்கொள்ளாக் கரும்புக் கழிகளை உமிழ்ந்து  சிதறடித்தது.
மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.
------------------------------------------------    ,