Saturday, October 29, 2011

நம்பிக்கை...

                                   நம்பிக்கை...
                                  ----------------

நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.

பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.

நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------



Thursday, October 27, 2011

அனுபவி ராஜா அனுபவி....

அனுபவி   ராஜா  அனுபவி --------- ஒரு சிறு  கதை
-----------------------------------------------------------------
          "என்னடி  அம்மா இது ! இந்த  போஸ்ட்மேனை  இன்னும் காணலை. இவனும்  இவன் கொண்டுவந்து  கொடுக்கும்  பிச்சைக்காசும் ....எல்லாம்  சவம்டியோ ...”



    அவனைப்பார்த்ததும்  இந்த  டயலாக்தான்  சுந்தாவுக்கு  நினைவுக்கு  வந்தது .மேலத்தெருவில்  பக்கத்து வீட்டில்  இருந்த லட்சுமியம்மாளின்  மகனல்லவா  இது ? சதாசிவம்  என்ற பெயரை  வைத்துக்கொண்டு  சதா  எல்லோரையும்  சவமாகத்திட்டுவானே ---- ஒ  ! எத்தனை வருஷங்களாச்சு  இவனைப்பார்த்து .ஐம்பது  ஆண்டுகளுக்கு  மேலாகி  இருக்கும்.


." சதா... சதா.. " என்று சற்று  உரக்கவே  கூப்பிட்டான்  சுந்தா.
       

 "எந்த சவம்டா  என்னை  சதான்னு கூப்பிடறது ?" என்று சற்று  உரக்கவே  கூறி திரும்பியவனைப  பார்த்ததும்  சுந்தாவுக்கு அவன்தான்  என்று நிச்சயமாகத  தெரித்தது .


 “ஐயாம்  ஸாரி..... நான்தான்  மேலத்தெருவில் ...உங்க  பக்கத்து வீட்டு ...."
       

 "சுந்தா ...!  அடடா ..! நீயா    அடையாளமே   தெரியலியே ..."
       

  பின்னே ... ஐம்பது  வருஷம்னா   சும்மாவா ..வாயேன் வீட்டுக்கு  பக்கத்திலேதான்  இருக்கு ..நிறையப்  பேசலாம் "
        

 "ஹூம் , என்னத்தப் பேசப் போறோம் , சரி வா ,"  என்று சற்றே  சலிப்புடன்  கூறிய சதாசிவம் கொஞ்சமும் மாறவில்லையோ என்று தோன்றியது சுந்தாவுக்கு.

 மாசத்தின்   முதல் நாளே போஸ்ட்மேனின்  வரவை  எதிர் பார்க்க  ஆரம்பித்து  விடுவார்கள்  லட்சுமி  அம்மாளும்  பிள்ளைகளும் . அன்றைக்கு  இல்லாவிட்டால்  மறு  நாளாவது  கட்டாயமாக மணியார்டர்  வர வேண்டும் . கடன்காரர்களுக்கு  எவ்வளவு  நாள்  வாய்தா  சொல்ல முடியும் . கடன்  வாங்காமல்  இருக்கலாம்  என்றால்  முடியவா செய்யும் ? அந்த மட்டிலாவது  குடும்பம்  ஓடியது  அவர்கள்  வீட்டு  மூத்த பிள்ளை  கிச்சா அனுப்பும் ரூபாய் நூறால்தான். வீட்டிற்குப் 
 போகும்  வழியில்  பழைய  எண்ணங்களில் நினைவோடியது .
        

"என்ன ஒரு சவமடி --மாத்திக்கட்ட  நல்ல வேஷ்டியும்  ஷர்ட்டும்  இல்லாம---சே ! நான் ஒரு நல்ல ஸ்திதிக்கு  வந்து  ஒரு  டஜன்  வேஷ்டி  ஒரு டஜன் ஷர்ட்  ஒரு டஜன் பேன்ட்  எல்லாம் வாங்கி  ஆசை தீரப  போட்டுக்கணும் ...இஷ்டப்படி  சாப்பிட வேண்டும் ..வாழ்க்கையை  நன்னா  அனுபவிக்கணும் ".
   

 சதாசிவம்  இப்போது  சுமாராக  உடுத்தியிருந்தான் . பார்த்தால் ஓஹோ  என்ற நிலைக்கு  வந்த மாதிரித  தெரியவில்லை .
        

 வீட்டிற்கு  வந்ததும் , "கமலா, இது சதாசிவம் . கிராமத்தில்  எங்கள்  வீட்டுக்கு  அடுத்த  வீடு . ஐம்பது  வருஷங்களுக்குப  பிறகு  பார்க்கிறோம் .நல்ல காப்பி  போட்டுக்கொண்டுவா ", என்று கூறி மனைவிக்கு  அறிமுகப்படுத்தினான்


”சொல்லு  சதா .உன்னைப் பார்த்ததும்  அந்தக் கால நினைவுகள்  வந்து தாக்குகிறது .வீட்டில் எல்லோரும் சவுக்கியமா ....குழந்தை  குட்டிகள் ....."
       "

”நிறுத்து .. நிறுத்து ..நானே  சொல்கிறேன் . எனக்கு  வேலை  கிடைத்த  கையோடு அம்மா  போய்ச் சேர்ந்து விடடாள். என்னோட  துரதிர்ஷ்டம் நான்  நன்னா இருக்கிறதப்  பார்க்க  அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ,. என்ன  இருந்து  என்ன பயன் ? வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேணும் "


சதா பேசப்பேச  அவனுடைய  அடிப்படைப் பிரச்சினை -- எதிலும்  ஒரு விரக்தி ...கொஞ்சம்   கூட  மாறாமல்  இருந்தது சுந்தாவுக்கு  ஆச்சரியமாக  இருந்தது.  இதற்கு  என்ன காரணம்  என்று அறியும்  ஆவலும் அதிகமாயிற்று .


 “என்ன சதா  சலிச்சுகறே....வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ! பெரியவனாகி  சம்பாதிக்கும்போது  அப்படி  இருப்பேன்  இப்படி  இருப்பேன்  என்றெல்லாம்  சொல்லுவாயே ”


"இல்லை சுந்தா . அது ஒரு கதை . நான் ஏன்  இப்படி  இருக்கிறேன்  என்று எனக்கே  புரியாத  சவம் ..டா ”.


  சுந்தா  அவனே மேலும் சொல்லட்டும்  என்று மௌனமாக  இருக்க சதாசிவம்  தொடர்ந்தான்
       

 “பார் ,  எனக்கு வேலை  கிடைத்ததா ---வாழ்க்கையில்  முன்னேறணும்னு  அப்படி  ஒரு  வெறி .கண்  மண்  தெரியாமல்  உழைத்தேன் . சப்பாதிக்கும்போது  சரியாக  சாப்பிடாமல் , தூங்காமல்  வேலையே கதி என்றிருந்தேன் .அதற்கு நல்ல பலனும் கிடைத்தது .நான் இப்போது  ஒரு நல்ல நிலையில்  ஒரு கம்பெனியின் மேனேஜராக  வேலை  பார்க்கிறேன்” .


  சதாசிவம் ஒரு கம்பனியின்  மேனேஜரா ? நம்பவே முடியவில்லை சுந்தாவுக்கு . ஒட்டிய கன்னமும்  கூன் விழுந்த  முதுகும இடுங்கிய கண்களும்  பஞ்சத்தில்  பரிதவிப்பவன்  போலல்லவா  இருக்கிறான் . உடை விஷயத்திலும்  வெகு  சுமாராகத்தான் இருக்கிறான் 


 ” ஒரு கம்பனியின்  மேனேஜர் என்கிறாய் . பார்த்தால் ....."என்று சுந்தா சந்தேகம்  தெரிவிக்க 
,
       "அதுதான்  சொன்னேனே   ,வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேண்டும் என்று "


       " அது  உனக்கு இல்லையா   ஏன்?



"சுந்தா , கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமா ,  நமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் .   
 அதுவுமில்லாமல் யாராவது நல்ல முறையில்  உடுத்தினாலோ  நன்றாக சாப்பிட்டாலோ எனக்கு என்னையும் அறியாமல்  அவர்கள் மேல் கோபம்  வருகிறது. கஷ்டப்பட்டிருந்தால்தானே  சுகத்தின்  அருமை  தெரியும் . இவர்கள் எல்லாம் கஷ்டப்படாமலேயே  அனுபவிக்கிறார்கள்  என்று பொறாமையாகக்கூட  இருக்கும் . எனக்கே இது அவ்வளவு  சரியில்லையோ  என்று கூடத்தோன்றும் . இருந்தாலும் வாழ்க்கையை  அனுபவிக்க   சவம் - மனசு  வர 
மாட்டேன்  என்கிறது ”


 சதாசிவம் சொல்லச்சொல்ல  சுந்தாவுக்கு  நினைத்துப்  பார்க்கவும்  முடியாத  ஒரு கோணம்  வாழ்க்கையில்  இருப்பதும் தெரிந்தது . ஆனால்   இப்படியுமா ?
----------------------------------------------------------------------------------------
        










  








     








   



      
















      
     




    











 .
       










Monday, October 24, 2011

ஐந்தும் இரண்டும்....

ஐந்தும இரண்டும்..........( ஒரு சிறு கதை )
------------------------

       1952-ம் வருட நடுவில் அவருக்குக் கோயமுத்தூரிலிருந்து
வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது.அப்பர் கூனூரில் வீடு
SIMS PARK-ல் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.
பூங்காவின் வாயில் எதிரே PASTEUR INSTITUTE.அதே ரோடில்
கீழே இறங்கினால்சற்று தூரத்தில் வலது புறம் ஒரு பேரிக்காய்த்
தோப்பு.கூடவே நிறைய ஆரஞ்சு மரங்களும் ஸிம்ஸ் பார்க்குக்கு
சற்று மேலேஒட்டிய நிலையில் St ANTONY"S HIGH SCHOOL.
வீட்டின் எதிரே நின்று பார்த்தால் TANERIFF மலை. அதிலிருந்து
விழும் அருவி வெள்ளித் தகடுபோல் தகத்தகாயமாகப்
பிரகாசிக்கும். அதனாலேயே அந்த வீட்டிற்கு டானெரிஃப் வ்யூ
என்று பெயர். பிள்ளைகளுக்காக பள்ளியருகிலேயே வீடு
பார்த்திருந்தார்.அவருக்கு அலுவலகத்துக்கு சுமார் மூன்று
நான்கு மைல்கள் நடக்க வேண்டும்.

      வீட்டைச் சுற்றி மரங்கள்.அடுத்து வீடு என்று கிடையாது.
தோப்புக்குள்ளே சென்றால் வீட்டின் பின்புறம் ஒன்றிரண்டு
வீடுகள். பெரிய பெரிய பேரிக்காய்கள் கைக்கு எட்டிய படி
காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். தேவைப்பட்ட அளவு
பறிக்கலாம், தின்னலாம்.

      வாழ்க்கையின் மத்திய காலம் ஆனால் அனுபவம் என்னவோ
அதைப்போல் இரண்டு பாகம். என்னதான் அனுபவமிருந்தாலும்
வாழ்க்கையில் கற்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது
என்பதை உணர்த்த நடந்த நிகழ்ச்சிதான் அது.

       உடல் சற்றே நலக்குறைவாக இருந்ததால்,அலுவலகத்துக்கு
விடுப்பு எடுத்திருந்தார்.காலையிலிருந்து தலைவலி;ஜுரம்
வருவதுபோல் அறிகுறிகள். டாக்டரிடம் காண்பிக்கலாம் எனில்
எதற்கு வீண் செலவு என்ற எண்ணம். மேலும் கையில் இருப்பு
என்னவோ ரூபாய் பத்துதான். மாலைவரை பார்ப்போம்.முடியா
விட்டால் டாக்டரிடம் போகலாம்.என்றிருந்தார்.மதியம் மனைவி
வைத்துக் கொடுத்த கஞ்சியைக் குடித்துவிட்டு சிறிது படுத்து
எழலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது வாசலிலிருந்து
“ ஹர ஹர மஹாதேவ, ஓம் நமசிவாய” என்ற குரல் கேட்டு,
எட்டிப் பார்த்தார். அங்கே ஒருவர். அவரை எப்படி வர்ணிப்பது.?
பிச்சைக்காரனா, பைத்தியக்காரனா, சாமியாரா, முனிவரா,
ஒன்றும் புரியாத நிலையில் ,பட்டை பட்டையாய் விபூதியுடன்
ஜடாமுடியோடு வந்தவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் வீட்டிற்கு
உள்ளே வந்து விட்டார். என்ன செய்வது என்று தம்பதிகள் குழம்பிக்
கொண்டிருந்தபோது வந்தவர், “உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.
ஓம் நமசிவாய. நான் இவ்வளவு நாள் இமயமலையில் தபசு செய்து
கொண்டிருந்தேன். நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
தெற்கே போ ,என்று எனக்கு ஆணை கிடைத்தது.நேராக வந்து
விட்டேன். ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
முதலில் உன்னைப் போல நல்லவர்களிடம் பணம் வசூலிக்க
வேண்டும் என்ன.? தருவாயா.?” என்றுகையைப் பிடித்துக்
கொண்டு கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.

      சாமியார் வந்ததிலிருந்தே ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில்
விட்டதுபோலுணர்ந்த அவர் ஏதாலோ கட்டுண்டது போல் மேலும்
கீழும் சரியென்று தலை ஆட்டினார். அந்த சாமியார் சுவரருகே
சென்று அதைக் கொஞ்சம் கிள்ளி அதை அவரிடம் கொடுத்து,
முகர்ந்து பார்க்கச் சொன்னார். ஒரே கற்பூர வாசனை. அவருடைய
கையைப் பிடித்துக் கொண்ட சாமியார் ”என்ன....அன்னதானத்துக்கு
எனக்கு 5-/ ரூபாய் தருவாயா.?”-என்று கேட்டார். “ ஓ.! பேஷாகத்
தருகிறேனே “,என்று இவரும் ஒப்புக்கொண்டார்.

“எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம். வெறுமே உன்னை
சோதித்துப் பார்த்தேன்.அவ்வளவுதான்” என்றவர் வீட்டு
மனையாளிடம் அடுப்பிலிருந்துக் கொஞ்சம் சாம்பல் எடுத்துவரக்
கட்டளையிட்டார். அந்த அம்மணியும் ஓடிப்போய் சிறிது
சாம்பலை எடுத்துவந்து சாமியாரிடம் கொடுத்தார்.சாமியார்
அதை அவரிடமே கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். அது
வும் கற்பூர வாசனையுடன் விளங்கியது. சாமியார் அவரிடம்
அவர் கையைப் பிடித்துக் குலுக்கி, “நீ எனக்கு 2-/ ரூபாய் தருவாயா”
என்று கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார்.அவரிடமும் பணம்
வேண்டாம் என்று சொல்லி, வெளியே போகக் கிளம்பினார்.
பிறகு என்னவோ நினைத்துக் கொண்டவர் போல் “அன்னதா
னத்துக்கு உங்கள் பங்கு அவசியம். நீங்கள் தருவதாகச் சொன்ன
ரூபாய் ஐந்தும் இரண்டும் தாருங்கள் , ” என்றார்.

      மாலை டாக்டரைப் பார்க்க என்று வைத்திருந்த ரூ,10-ல் ஏழு
ரூபாயை சாமியாரிடம் கொடுத்து வணங்கி நின்றார்கள்.பணம்
பெற்றுக்கொண்ட சாமியார் போய் விட்டார்.

      சிறிது நேரம் பிரமை பிடித்தவர்கள் போல் உட்கார்ந்திருந்த
அவர்கள்சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நடந்ததை
யோசித்துப் பார்த்து தாங்கள் ஏமாந்து விட்டதை உணர்ந்தார்கள்.

     வேண்டாம் வேண்டாம் என்பவர்களைப் பார்த்தாலேயே
அவர்களுக்கு ஐந்தும் இரண்டும் ஏழு என்று நினைவுக்கு வரும்.

(வாழ்ந்த இடத்தைப் பின்புலமாக வைத்து எழுதிய சௌத்வி க சாந்த் ஹோ
என்னும் சிறுகதை என்னை மீண்டும் அதே முயற்சியில் ஈடுபட வைத்தது.
ஆனால் ஒரு வித்தியாசம்.1996-ல் வாழ்ந்த இடங்களைப் பார்க்கும் ஆவலால்
உந்தப்பட்டு அங்கே போனால் அடையாளங்கள் எல்லாம் இழந்து நின்ற
அந்த இடங்கள் மனசைப் பாரமாக்கியது நிஜம் .என் எண்ணங்களிலும் 
எழுத்திலுமாவது அவைகள் இருக்கட்டுமே. )












.


















.

   






Friday, October 21, 2011

கிருஷ்ணாயணம்....

கிருஷ்ணாயணம்.        ஒருஅவதாரக் கதை.
---------------------------------------------------------

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்
நிலமடந்தைத் துயர் துடைக்க வேண்டி
தேவர் புடை சூழ வந்த பிரம்மனிடம்
வல் அரக்கர் உயிர் எடுத்துக் குறை போக்க
யாதவ குலத்துதித்து ஆவன செய்ய
உறுதியளிக்கச் சென்றவர் மனம் தெளிந்து நின்றனர்.

     சூரசேனன் மகன் வசுதேவனுக்குத் தன் சகோதரி
     தேவகியை மணம் முடித்த மதுரா மன்னன் கம்சன்
     அவர்களைத் தேரிலேற்றிச் செல்கையில்,
     அவர்களுக்குப் பிறக்கும் எட்டாம் குழந்தை அவனைக்
     கொல்லும் என்ற அசரீரி சொல் கேட்டு ஆத்திரமடைந்து
     சகோதரியைக் கொல்லத் துணிந்தவனை,வசுதேவன்
     பெற்றெடுத்த குழந்தையைப் பெற்றவுடன் தர வாக்களிக்க
     அவர்களைக் காராக்கிரக சிறையில் அடைத்தான்.

எட்டாம் குழந்தையாய் வந்துதித்த திருமால்
கிரீடம் ,கைவளை, முத்துமாலையுடன் சங்கு சக்கர
கதாயுத பாணியாய்,தாமரை மலருடன் நீல நிற மேனியனாய்,
பெற்றோருக்குக் காட்சி தந்து ,கோகுலத்தில் நந்தகோபன்
மகளாய்ப் பிறந்திருக்கும் மாயையுடன் தன்னை இடமாற்றம்
செய்யக் கூறிப் பின் மானுடக் குழந்தையாய் மாறினான்.

      மாலவன் உதித்ததும்,காவலரும் மற்றவரும் கண்ணயர,
      பூட்டிய கதவு தானாய்த் திறக்க,வசுதேவன் தன்மகனைத்
     தலையிலேந்திக் கோகுலம் செல்ல ,ஆதிசேஷன் குடை
     விரிக்க, யமுனா நதி வழி விட்டு விலக ,நந்தகோபன்
     இல்லம் சென்றடைந்த வசுதேவன் ,அங்கிருந்த மாயையைக்
      கையிலெடுத்து, தன் மகன் மாதவனை விட்டு வந்தான்.

மாலவன் இடத்திற்கு மாயை வந்தவுடன்,
காவலர் கண்விழித்து கம்சனுக்குச் சேதி சொல்ல,
முன் பிறந்த குழந்தைகளை கொன்றவன்,பின்
பிறந்த குழவி பெண்ணென்றும் பாராமல், உயிரெடுக்க
மேல் வீசி வாள் வீச, உயரே சென்ற மாயாதேவி
தன் உருக்காட்டி எச்சரித்தாள் அவனைக் கொல்ல
இருப்பவன் இருக்குமிடம் வேறு என்று.

       தன் உயிர் எடுக்க வந்தவன் உயிர் குடிக்க
       பிரலம்பன்,பகன்,பூதனை போன்றோரை ஏவிய
       கம்சன் ஆணையை நிறைவேற்றக் கண்ணில் கண்ட
       குழந்தைகளைக் கொன்று குவித்த கொடியோரில் பூதனை
       அழகுருக்கொண்டு, இடைச்சிகளை ஏய்த்து மார்கொடுத்து
       விஷப்பால் கொடுத்துக் கொல்லவர,குழந்தைத் திருமால்
       மார் உறிஞ்சி அவள் உயிரெடுக்க வெட்டுப்பட்ட
       மரம்போல், வீழ்ந்து பட்டாள் அக்கொடிய அரக்கி.

அன்றொரு நாள்,அன்னை யசோதா சிறார்கள் மத்தியில்
அவனைக் கிடத்தி உள்ளே செல்ல, அருகிருந்த வண்டி
தானே நகர்ந்து மீதேறவர, கால் தூக்கி எட்டி விட
விழுந்த சகடாசுரன்(சகடம்=வண்டி)உடல் கண்டு
அனைவரும் திகைத்ததும், பிறிதொரு நாள் உடல் பாரம்
தாங்காது கீழே கிடத்தப்பட்ட பரம்பொருளை சுழல் காற்றின்
வடிவினனான திருணாவர்த்தன், புழுதிப் படலத்தால்
கண்மறைத்து மேலே தூக்கிச் செல்லப் பின் முடியாது
கீழேவிட முயல,அதுவும் முடியாமல் , பாரம் தாங்காது
பாறை மீது தான் விழுந்து உயிர் துறந்ததும் குட்டிக்
கண்ணனின் திரு விளையாடல்களில் சிலவே.

      யதுகுல ஆசிரியன்,கர்க்கமுனிவன்,ஜோதிடத்தில் வல்லவன்
      அளவிலடங்கா ஆயிரம் நாமங்கள் கொண்டவனுக்கு
      அழைக்க ஓர் நாமம்”கிருஷ்ணா”என்றே ஓதி, அது ”ஸத்”
      மற்றும் “ஆனந்தம்”ஆகியவை,உருவங்களுடன் கூடியும்,
      உலகப் பாவங்களை போக்கும் தன்மையையும்
      உரைப்பது என்றும் விளக்கம் கூறினான்.

பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதா,விண்ணுடன்
நீரும் நிலமும்,அண்ட அகிலமும் கண்டே மயங்கியதும்
மீண்டும் பின் மாயையால் கட்டுண்டு,வெண்ணெய் திருடிய
முகுந்தனை உரலில் கட்ட, அன்புக்குக் கட்டுப்பட்டவன் ,
கட்டிய உரலுடன் நகர்ந்து, நாரதன் சபிக்க மருத மரங்களாய்
நின்றிருந்த குபேர புதல்வர்”நளகூபரன்”  “,மணிக்கிரிவன் “
இடைபுகுந்து, சாபவிமோசனம் அளித்ததும் திரு விளையாடலே

      நிமித்தங்கள் சரியில்லை யெனக் கருதி கோகுலம் விட்டு
      இடையர்கள் புடைசூழ, பிருந்தாவனம் ஏகிக் குழலூதிக்
      கன்று மேய்த்திருந்த கண்ணனை, அதனுருவில் கொல்லவந்த
      வத்ஸாசுரனை வதைத்ததும், மலையனைய இறக்கைவிரித்து
      வந்த பகாசுரனைஅவன் அலகு பிளந்து கொன்றதும், மலைப்
      பாம்பொன்றுஏதும் அறியா இடைச்சிறாரை விழுங்க, அகாசுரன்
      அவன் என்றறிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி
      பெரிதாக்கி, அவனைப் பிளந்து அனைவரையும் காத்ததும்
      கமலக் கண்ணனின் லீலைகளன்றோ.

மாயையைப் பயன்படுத்திஆயர்குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கியது, பிரம்மதேவன்
செயலென்றறிந்து,பரம்பொருளே இடைச் சிறுவராய்
கன்றுகளாய் உருவெடுத்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்க,
மறைந்ததே யாரும் அறியாமல் காலமும் செல்ல
நான்முகன் மாயையை விலக்க, மறந்தது எது வந்தது எது
எனப் பிரித்தறிய முடியாமல் மயங்கி நிற்க, ,கணக்கிலா
நாராயண வடிவங்கள் கண்டு அவனே மாயையில் மூழ்கி
அறிவினை இழக்க, கண்ணன் மட்டும் அவனாகவே வந்த
போது, செருக்கொழிந்து பிரமன் துதித்து நின்றான்.

      தேனுவைக் (பசுக்களை) காப்பவன் தேனாசுரனைக் கொல்வது
      முறையாகாது என்றெண்ணி,அண்ணன் பலராமன் மூலம்
      கழுதை உருவிலிருந்த தேனாசுரனைக் கொல்வித்து,அவன்
      உடன் வந்த நரிக்(ஜம்புக)கூட்டத்தை அழிக்கத் துவங்க,
      அதையறிந்த வருணன் தானும் கலங்கி,தன் பெயர் (ஜம்புகன்)
      வேதத்தில் மட்டும் ஒலிக்கக் கேட்குமாறு செய்தானாம்.!

சௌபரி முனிவன் யமுனையில் பேணிக்காத்த மீன்களை
உண்டதால் சாபம் பெற்ற கருடன் வர இயலாத நதியில்
பாம்பரசன் காளியன் குடியிருந்து நீரை நஞ்சாக்க ,
நீருண்ட இடையரும் கோக்கூட்டமும் உயிர் துறக்க,
அவர்களை உயிர்ப்பித்து,காளியனை அவன் தலைமேல்
நடனமாடி வென்று, பின் கொன்று அருள் செய்து
திரும்புகையில் ,கானகத் தீயைப் பருகி மஞசள் மேனியனாய்
ஒளிர்ந்ததும், பிரலம்பாசுரனை தன்னுடன் விளையாட்டில்
பங்கேற்க வைத்துப் பின் பலராமனால் அவனைக்
கொல்வித்ததும் அவதார லீலைகளில் சிலவாம்.

      கோவிந்தன் குழல் கேட்டு மெய்மறந்த கோபியர்கள்
      அவன்பால் மையலுற்றனரா,தன்வசம் இழந்தனரா,அவனுடன்
       இணைய விரும்பினரா,அடிமையாயினரா,எதுவாயிருப்பினும்
      அவன் முன்னே,அவனைக் கண்டே,காலங்கழிக்க நினைத்தவர்
      ஆற்றங்கரையில் குளித்திருந்தோர் ஆடையெடுத்து அவனும்
      அலைக்கழிக்க, தம்மை மறந்து கை குவித்து வேண்டியவருக்கு
      அருள் புரிந்து ஆட்கொண்டவனும் கிருஷ்ணனே.

மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,
மரம் நிறைந்த மலைக்கன்றோ பலி கொடுக்க வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
பெருமழையுடன் இடியும் கூட்டிஇ டர் கொடுக்கக் கோவர்தன
 மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
 கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.

        கோகுலத்தில் கண்ணன் எனவே நாரதன் கூறக்
        கேட்ட கம்சன் வில்வேள்விகளில் பங்கு பெற
        கோவிந்தனை அழைத்துவர அக்ரூரனையனுப்ப அவனும்
        பரம்பொருளிடம் பக்தியால் கட்டுண்டு சேதி சொன்னான்.

அண்ணனுடன் கண்ணனும் மதுராபுரி சென்று
கோட்டை வாயிலில் தனை எதிர்த்த கரியின்
தந்தமதனை அடியுடன் பிடுங்கி,அதன் உயிரெடுத்துப்பின்
மற்போரில் சாணூரனுக்கும் முடிவெடுத்து மோட்சமளிக்க
நாளும் அனவரதமும் அவனையே அசரீரி சொல் கேட்ட
நாள்முதல் நினைத்திருந்த கம்சன் கோபமுற்று வாள்வீச
அசரீரி சொல்லை மெய்ப்பித்தான் கிருஷ்ணன்.

      கம்சனைக் கொன்ற கண்ணன் துவாரகையில் ஆண்டது
      ருக்குமணியைக் கவர்ந்து மணந்தது,பாரதப் போரில்
      பாண்டவருக்கு உதவியது, கீதோபதேசம் செய்தது என்றும்,
      அவதார நோக்கின்படிவதம் செய்த அரக்கர் பட்டியல்
      அவன் மணம்புரிந்தோர் கதைகளும் நிறையவே இருப்பினும்
      பிறக்கும்போதே தான் ஒரு அவதாரபுருஷன் என்றறிந்த
      கிருஷ்ணாயணத்தில் சொல்லியது குறைவு, சொல்ல
      ஏலாதது ஏராளம் இருந்தும் இத்துடன் நிறைவு செய்கிறேன்.









   























   

Tuesday, October 18, 2011

சௌத்வி க சாந்த் ஹோ.....

சௌத்வி க சாந்த் ஹோ....(சிறு கதை.)
-----------------------------------
வெல்லிங்டன் பாரக்ஸ் அடுத்த வட்டக் குடியிருப்பில் (CIRCLE
QUARTERS) வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களுடன்
எதிரே இருந்த வீட்டு மாடியில் ஒரே பெண்கள் கூட்டம்.

”இந்த டிசம்பர் குளிரிலும் இவ்வளவு பெண்கள் குவிகிறார்களே
என்ன விசேஷமாக இருக்கும்”- என்று ஆனந்திக்கு ஒரே
உளைச்சல்.

வட்டக் குடியிருப்பைச் சுற்றியிருந்த ரோடின் கீழ்ப்பகுதியில்,
விஸ்தாரமான இடத்தில், நான்கு அறைகளுடன் ஒரு குட்டி
பங்களா, குதிரை லாயமென்றுஅதிகாரக் குறிப்பேடுகளில்
பதிவாகி இருந்த இடம் ,குடித்தனக் குடியிருப்பாக, ஆனந்தியின்
கணவனுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு பணியாளர்
குடியிருப்பும் அடக்கம்.

”நேவிஸ், அங்கே வீட்டு மாடியில் ஒரே கூட்டமாக இருக்கிறதே
என்ன விசேஷம்,?”-என்று ஆனந்தி கேட்டாள். நேவிஸ்
ஆனந்திக்கு உதவியாக இருப்பவள், செர்வண்ட் குவார்டர்ஸில்
குடும்பத்துடன் குடியிருந்தாள்.

“அம்மா, அந்த வீட்டு எஜமான் பெயர் அஷோக் புய்யான்
வெல்லிங்டன் செர்விஸஸ் ஸ்டாஃப் காலேஜில் பயிற்சிக்காக
வந்திருக்கும் ராணுவ மேஜர், அஸ்ஸாம்காரர்.இன்றைக்குப்
பௌர்ணமி கழிந்து நான்காம் நாள்.அல்லவா...அவர்களுக்கு
“கர்வா சௌத் என்ற பண்டிகை. அதுதான் கூட்டம்.

அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அனாயசமாகப் பதிவு
செய்து விடுவார்கள், வீட்டுப் பணியில் இருக்கும் பெண்கள்.
அதுவும் ஒரு விதத்தில் சௌகரியம்தான். - ஒருவரைப் பற்றி
ஒருவர் தவறாகக் கூறாத வரையில்.

“கர்வா சௌத்- ஆ.நான் கேள்விப்படாத பண்டிகையாக இருக்கு”

“இளம் பெண்கள் தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க நாள்முழுதும்
விரதம் இருந்து கணவனுக்காக வேண்டிக்கொள்ளும் நாள்.
கார்த்திகை மாசம் பௌர்ணமி முடிந்த நாலாம் நாள் நிலாவைப்
பிம்பத்தில் பார்த்த பிறகுதான் உண்பார்கள். வடக்கே விசேஷமான
நாள்”

” உன் தயவில் ஒரு சமாச்சாரம் தெரிய வந்தது.

” அந்த வீட்டில் இந்த நாள் இன்னும் விசேஷமானது. அம்மா. அந்த
ஐயாவுக்கு நாளைப் பிறந்த நாள் வேறு. இன்னும் தடபுடலாகக்
கொண்டாட்டம் இருக்கும்” என்றாள் நேவிஸ்.

எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின்
நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார
விரதம், காரடையான் நோன்பு, ரக்‌ஷ பந்தன், இத்தியாதி
இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி
ஏதாவது செய்கிறார்களா என்ன.?

அடுத்த நாள் காலையும் எதிர் பங்களாவுக்கு நிறைய விருந்தினர்.

“நேவிஸ், அந்த மேஜருக்கு இன்று பிறந்த நாள் என்றாய். ஆனால்
வந்து போகிறவர்களைப் பார்க்கும்போது என்னவோ அவ்வளவு
குதூகலம் இருப்பது போல் தெரியலியே.”-அவர்கள் குதூகலமாக
இருந்தார்களோ இல்லையோ, ஆனந்திக்கு மனசில் ஏதோ நெருட
லாகவே இருந்தது.

“நான் ஒரு எட்டு போய் ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று
பார்த்துவருகிறேன் அம்மா.”-நேவிஸ் எதிர் பங்களாவை நோக்கி
நடந்தாள். சற்று நேரத்தில் திரும்பி வந்தாள்.

“அம்மா ,நீங்கள் நினைத்தது சரிதான். அந்த ஐயாவும் அம்மாவும்
கவலையாகத்தான் இருக்கிறார்கள்.” என்று விஷயத்தை
விவரமாகக் கூறத் தொடங்கினாள். அந்த மேஜருக்கு 36- வயது
முடிவதாகவும் எல்லோரும் அந்த நாள்நல்லபடியாக முடிய
வேண்டுமே என்று கவலை கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

ஒருஜோசியக்காரன் வெகு நாட்களுக்கு முன் , அந்த மேஜர் 36-/
வயதுக்கு மேல் ஒரு நாள்கூட உயிர் வாழமாட்டார் என்று கூறி
இருக்கிறான். அதை அவர்கள் அப்போது தமாஷாகவே எடுத்துக்
கொண்டு மறந்து விட்டிருந்தார்கள். ஆனால் இந்த பாழாய்ப் போன
மனம் எதைமறந்ததாக எண்ணுகிறதோ,அது ஆழ் மனதில் உறங்கி
கொண்டிருந்துவிட்டு நேரம் காலம் தெரியாமல் நினைவுக்கு
வந்துவிடுகிறது. அந்த மேஜருக்கும் அவர் மனைவிக்கும் அந்த
ஜோசியனின் பேச்சுஅன்று நினைவுக்கு வந்து அலைக்கழித்து
இருக்கிறது. வந்த நண்பர்களுடன் இதைக் கூறி, இருட்டில் பயம்
போக்க விசிலடிப்பவன் போல் ,மேலுக்கு சிரித்து மகிழ்ந்து கொண்
டிருந்தார்கள்.”ஜோசியமாவது மண்ணாவது,எல்லாமே சுத்த
ஹம்புக்.இன்றைக்கு என் முப்பத்தாறாவது பிறந்த நாள். எனக்கு
ஒரு குறையுமில்லை.நானாவது இந்த நாளைத் தாண்டாமல்
இருப்பதாவது;’”என்று தேற்றிக்கொண்டு, மாலை பார்ட்டிக்கு
ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். அவர் மனைவியும் “நான்
விரதம் இருந்து நோன்பு நோற்று, வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
எல்லாமே நன்றாகத்தான் நடக்கும்,”என்ற நம்பிக்கையில்
விருந்தாளிகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.

பார்ட்டி களை கட்டத் தொடங்கியது.பாட்டும் டான்ஸும், கேளிக்
கையுமாக உற்சாக வெள்ளத்தில் நீந்தத் துவங்கினர். விருந்தினர்
எண்ணிக்கை எதிர்பாராமல் அதிகமாகவே வாங்கி வைத்திருந்த
மதுபான வகைகள் போதாதோ என்ற சந்தேகம் மேஜர்
புய்யானுக்கு வரவே, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காரை
எடுத்துக் கொண்டு கேண்டீனுக்குப் பயணமானார்.

விருந்தினர் நடுவே மேஜர் இல்லாதது முதலில் கவனிக்கப்பட
வில்லை. கவனித்ததும் கவலை கொண்டு அவரைத் தேடத்
தொடங்கினார்கள்.தேடிப்போனவர்களுக்கு ஒரு அதிர்ச்சி
காத்திருந்தது.மேஜர் ஓட்டிச் சென்ற கார், ஒரு மலைச் சரிவில்
இறங்கி, விபத்துக்குள்ளாகி இருந்தது. மேஜர் 36-/ வயது
தாண்டாமலேயேப் போய் விட்டார்.

பங்களாவில் சேதி தெரியாமல் கிராம ஃபோனில் “ சௌதவி கா
சாந்த் ஹோ “என்ற பாட்டு ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.
-------------------------------------------------------------------------------

( கலாநெசனின் ”உதய நிலா “ பதிவு படித்ததும் தோன்றிய கற்பனைக் கதை.”   






Friday, October 14, 2011

புதிய பதிவு அல்ல...

  
கண்டவனெல்லாம்......(ஒரு சிறு கதை )
------------------------------------------------


 பஸ்ஸுக்குக் காத்திருந்து காத்திருந்து அலுத்து விட்டது ஹரிக்கு.  
."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல்    நள்ளிரவு  வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம் .  சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு . "தவிர்க்க  முடியாததை அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்


        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள் .  லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்.  அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                
 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார் 

.
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"


” கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "



” உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்.

-------------------- ---------------------------------------------------------





Tuesday, October 11, 2011

பேசாமல் பெண்ணாய்....

பேசாமல் பெண்ணாய்...
-------------------------------

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்.
வயதானால் வழுக்கை விழாது , நகரத்தில்
நமக்காகவே சிறப்புப் பேரூந்துகள் இயங்கும்
தினமும் முகச் சவரம் செய்ய வேண்டியதில்லை.
சட்டங்கள் நமக்காக சாய்ந்திருக்கும் ,எப்போதும்
நம் செல் பேசி செயல் பாட்டிலேயே இருக்கும்
சடங்கானால் ஊர் கூடி சீர் செய்துக் கொண்டாடுவார்கள்
நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் , கல்யாணம்
மருதாணி ,நலங்கு ,பட்டுப்புடவை , வளைகாப்பு என
அநேக தருணங்களில் நாயகியாய் அமர்ந்திருக்கலாம்
காமக் கவிதை எழுதினால் உலகமே திடுக்கிடும்
கணவனுக்கெதிராகப் புகார் கொடுக்கலாம் -மூத்த
இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை
அழைத்துப்போய் கடலைப் பார் எனக் காட்டுவார்-உனக்கு
இந்தக் காட்சி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்  என்பார்
முகப் புத்தகத்தில் எவனையும் கவிழ்க்கலாம் -எவனாவது
ஒருவன் நமக்குத் தாஜ்மகால் கட்டுவான் -கிழவியானாலும்
ஒருவன் அருநெல்லிக்கனி தருவான். -ஒன்பதாம் வகுப்பே
படித்திருந்தாலும் கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்.
மதுரையை எரிக்கலாம்-கூந்தல் வாசம் குறித்து ஐயம்
எழுப்பி ஆண்டவனையே அலைக் கழிக்கலாம்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்.
டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும். -அரசு
விவகார அதிகாரியானால் பத்திரிகைகள் பின்னாலேயே
ஓடிவரும். -நம் வலைப்பூவில் நிறைய வண்டுகள் திரியும்
திடீரென்று நம் புத்தகங்கள் எஸ்கிமோ மொழியில்
பெயர்க்கப் படும்.-யார் அமைச்சராக வேண்டும் என்பதை
நாம் முடிவு செய்யலாம். - பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம் -இல்லையா.?

(சத்தியமாக இது என் கற்பனை இல்லை. எனக்கு ஒரு மின் அஞ்சல் 
ஃபார்வேர்ட் செய்யப் பட்டிருந்தது. நான் பெற்ற இன்பம் பெறுக 
இவ்வையகம் என்னும் எண்ணத்தில் இதனைப் பதிவிடுகிறேன். )










Saturday, October 8, 2011

STAY HUNGRY....STAY FOOLISH..

பசித்திரு . முட்டாளாய் இரு.
--------------------------------------------
நான் பதினேழு வயதாக இருக்கும்போது படித்தது." ஒவ்வொரு
நாளையும் உன் வாழ்வின் கடைசி நாளாக நீ கருது வாயானால் 
ஏதோ ஒரு நாள் நிச்சயமாக உன் கருத்து உண்மையாகும். "என்ற 
ரீதியில் இருந்தது. அது என் மனதில் பதிந்தது. பிறகு கடந்த 33-/
வருடங்களில் தினமும் நான் கண்ணாடி முன் நின்று "இதுவே 
என் வாழ்வின் கடைசி நாளானால் இன்று நான் செய்ய 
நினைப்பதை செய்ய விரும்புவேனா "என்று கேட்டுக் கொள்வேன்
அதற்கு "மாட்டேன்" என்ற பதில் தொடர்ந்து சில நாட்கள் வரு 
மானால் நான் என்னில் சில மாற்றங்களை செய்யத் தேவை 
என்று எனக்குத் தெரிய வரும். 

கூடிய சீக்கிரமே நான் இறந்தவனாகி விடுவேன் என்ற நினைப்பே 
என் வாழ்க்கையில் நான் மிக முக்கியமான முடிவுகளை 
எடுப்பதில் மிகவும் உதவும் கருவியாக இருந்திருக்கிறது. 
ஏனெனில் எல்லா புற எதிர்பார்ப்புகளுமே , கர்வம், தோல்வியால் 
ஏற்படும் அவமானமோ பயமோ - இறப்பின் முன்னே வீழ்ந்து 
உண்மையிலேயே எது முக்கியமோ அதுவே நிலைக்கும். நீ 
இறக்கப் போகிறவன் என்ற நினைப்பே வாழ்வில் தோல்வி எனும் 
வலைக்குள் நீ சிக்காமல் இருக்க உதவும். ஏற்கெனவே அம்மண 
மாகி இருக்கும் நீ இதயத்தின் ,மனசின் எண்ணங்களை 
தொடராமல் இருப்பதற்கு நியாயம் இல்லை. 

சுமார் ஓராண்டுக்கு முன் எனக்குப் புற்று நோய் இருப்பதாக கண்டு 
பிடிக்கப் பட்டது, காலை 7-30-/ மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு 
என் பான்க்ரியாசில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
எனக்கு பான்க்ரியாஸ் என்றால் என்னவென்றே தெரிந்திருக்க 
வில்லை. மருத்துவர்கள் இது, குணப்படுத்த முடியாத புற்று நோய் 
வகையை சேர்ந்தது என்றும், மிஞ்சிப்போனால் மூன்று மாத
முதல் ஆறு மாதத்துக்குமேல் நான் உயிர் வாழ்வது எதிர்பார்க்கக் 
கூடாது என்றார்கள். என்னுடைய டாக்டர் என்னை வீட்டிற்குப்
போய் எல்லா நிலவரங்களையும் நேர் செய்ய சொன்னார். அது 
என்னை சாவதற்கு தயாராக இருக்கும்படி கூறும் டாக்டரின் 
அறிவிப்பும் கணிப்பும் ஆகும். என்னவெல்லாம் செய்வோமோ, 
சொல்லுவோமோ அவற்றை ஓரிரு மாதங்களில் பிள்ளைகள் 
இடமும் உற்றார்களிடமும் சொல்ல முயல வேண்டும்.எல்லா 
ஓட்டைகளையும் அடைத்து கூடியவரை குடும்பத்தினர் எளிதாக 
எடுத்துக்கொள்ள தயார் செய்தல் வேண்டும். அதாவது பிரியா 
விடை பெறுதல் வேண்டும் என்று பொருள். 

அந்த உடல் நிலைகுறித்த அறிவிப்புடன் நாள் பூரா இருந்தேன்
மாலையில் பயாப்சி எடுத்தார்கள். என் தொண்டை வழியாக ஒரு 
குழாயைச் செருகி வயிற்றுக்குள்ளும் குடலுக்கு உள்ளும் 
நுழைத்து பான்க்ரியாசிளிருந்து கட்டியின் சில துகள்களை ஊசி 
மூலம் எடுத்தனர். என்னை மயக்க நிலைக்கு உட்படுத்தி இருந்
தார்கள். அருகில் கவனித்துக் கொண்டிருந்த என் மனைவி அந்த 
அணுக்களை மைக்ராச்கொபில் பார்த்த டாக்டர்கள் கண்ணீர் 
(ஆனந்த) வடிப்பதைக் கண்டாள். அறுவைச் சிகிச்சை மூலம் 
குணப்படுத்தக்கூடிய அசாதாரணமான அணுக்களை பாங்கரி 
யாஸ் புற்று நோயில் கண்டனர். எனக்கு அறுவைச் சிகிச்சை 
நடந்து முடிந்தது. இப்போது நலமாக உள்ளேன். 

இதுவே இறப்பின் மிக அருகாமைக்குச் சென்றதும் இன்னும் 
பல ஆண்டுகளுக்கும் இதுவே இறப்பின் மிக அருகாமையாக 
இருக்கும் என்றும் நம்புகிறேன். இந்த அனுபவத்தினூடே 
வாழ்ந்த நான் இன்னும் சற்றே ஊர்ஜிதமாகக் கூற முடியும். 
"சாவு என்பது உபயோகமான , ஆனால் அறிவார்த்தமான ஒரு 
குறியீடு மட்டுமே. (CONCEPT)

யாருக்கும் இறக்க விருப்பமில்லை.சொர்கத்துக்கு போக 
விரும்புபவர்கள்கூட அங்கு செல்ல இறக்க விரும்புவதில்லை
ஆனால் சாவு என்பதே அனைவரும் சேருமிடம் என்பதைப் 
பகிர்ந்து கொள்கிறோம். யாராலும் தவிர்க்க முடியாதது. அது 
அப்படித்தான் இருக்கவேண்டும். ஏனெனில் இறப்பே வாழ்வின் 
மிகச் சிறந்த கண்டு பிடிப்பு. வாழ்க்கையை மாற்றிப்போடும் 
மகத்தான நிகழ்வு. வயதானவர்களை அப்புறப்படுத்தி புதிய 
வர்களுக்கு இடமளிக்கிறது. தற்சமயம் அந்த புதியவருள் நீயும் 
ஒருவன். காலப்போக்கில் நீ பழசாகி அப்புறப்படுத்தப் படுவாய். 
சொல்வதற்கு நாடகத்தன்மை கொண்டிருந்தாலும் அதுவே 
உண்மை. 

உன் காலம் வரையறுக்கப்பட்டது ஆகவே பிறரின் வாழ்க்கை
வாழ்ந்து வீணாக்காதே. மற்றவரின் சிந்தனைப்படி வாழ்ந்து 
அதன் பலனில் சிக்கும் கோட்பாடுகளில் மாட்டிக்கொள்ளாதே. 
பிறரது சிந்தனையின் சப்தம் உன் உள்ளத்து சிந்தனையின் 
அறிவுரையை மூழ்கடிக்க விடாதே. உன் உள்ளத்தின் அறிவுரை
மற்றும் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி வாழ மனோ 
திடம் கொள்ளல் அவசியம். நீ என்னவாக இருக்க வேண்டும் 
என்பதை உன் உள்மனம் அறியும். மற்றவை எல்லாமே 
இரண்டாம் பட்சம்தான். 

நான் சிறுவனாக இருந்தபோது "The whole earth catalog' என்ற ஒரு 
பிரசுரிப்பு இருந்தது. அது என் தலை முறையினரின்
வேதங்களில் ஒன்று என்ற தகுதி பெற்றிருந்தது.Stewart Brand 
என்பவரால் வாழ்க்கைக்கு ஒரு கவித்துவ உணர்வைக் 
கொண்டு வந்தது. 1960-/ களின் கடைசிக் கட்டத்தில் கணினி 
காலத்துக்கு முன்பானது. டைப்பிங் மெஷின்கள் கத்தரிக்
கோல் ,போலராய்ட் காமராக்கள் உதவி கொண்டு உருவாக்கப் 
பட்டது.கூகிளுக்கு 35-/ வருட முந்தையது. புத்தக வடிவில் 
கூகிள் என்று கூறத்தக்கது. சிறந்த கருவிகளுடனும் சீரிய 
சிந்தனைகள் வழிந்தோட உருவாக்கப்பட்டது. 

Stewart Brand -ம அவர் குழுவினரும் The whole earth catalog -இறுதிப் 
பதிப்பைக் கொண்டு வருமுன் பல வெளியீடுகளை கொண்டு 
வந்தனர் அந்த இருதிப்பதிப்பு 1970-களின் நடுவில் நான் உங்கள்
வயதினனாக இருந்தபோது வந்தது. அதன் பின் அட்டையில் 
அதிகாலை கிராம சாலையின் புகைப்படம் அச்சிடப்பட்டு 
இருந்தது. அதன் அடியில் Stay Hungry; Stay Foolish. ( அறிவுப் )
பசியுடனிரு ; முட்டாளாய் இரு. என்று எழுதி இருந்தது. அது 
அவர்கள் விடைபெறுமுன் கூறிய மொழியாக இருந்தது. 
பசித்திரு; முட்டாளாய் இரு  என்றைக்கும் நான் இருக்க 
விரும்பியது. படித்து முடித்துப்பட்டம் பெற்று வெளியேறும் 
உங்களுக்கும் நான் கூறுவதும் அதுவே. STAY HUNGRY; STAY 
FOOLISH; நன்றி 

( Stanford University -யில் 12-06-2005 -ல் STEVE JOBS. பட்டம்பெறும் 
மாணவர்களுக்கான உரையின் தொடக்கப் பகுதியின் சில 
குறிப்புகள். )

ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் STEVE JOBS தனது 56-ம வயதில் 
காலமானார். THE HINDU நாளிதழில் வெளியான ஒரு பகுதியின் 
தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பல்ல. சமீபத்தில் இறப்பு பற்றிய 
எண்ணங்களாலும் அனுபவங்களாலும் ஈர்க்கப்பட்ட எனக்கு, " இறப்பே 
வாழ்வின் சிறந்த கண்டு பிடிப்பு "என்ற தலைப்பு பிடித்திருந்தது. 
அனுபவங்கள் ஒத்துப் போனதால் தமிழாக்கம் செய்தேன். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------   







 . . 



          

Monday, October 3, 2011

அவதாரக் கதைகள்....(தொடர்ச்சி.)

 அவதாரக் கதைகள் ( தொடர்ச்சி.)
-----------------------------------------------
          நான் இதுவரை ஏழு அவதாரக் கதைகள் பதிவிட்டிருக்கிறேன்.
மீதி மூன்றில் கல்கி அவதாரம் போக இருப்பது இரண்டு அவதாரக்
கதைகள். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்து
எழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றி
பல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதார
கதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,
வழக்கம்போல் எனக்கே உள்ள சந்தேகங்கள் எழுந்து ,எழுதுவதற்கு
தடைபோடுகின்றன.

       நாம், பகவான் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றும்
இன்னும் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துடன் சேர்த்து பத்து
அவதாரம் என்றும் கேள்விப்பட்டும் சொல்லிக் கொண்டும் வந்தி
ருக்கிறோம். சில நாட்களுக்கு முன் “சோ”-வின் “ எங்கே”
பிராமணன் என்னும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் (ஜெயா
டீவியில்11-30-/ முதல்12-/வரை “)மொத்தம் பகவானின் 22-/                  அவதாரங்கள் குறித்து சோஅவர்கள் விளக்கம் கூறி, ( 22- அவதாரங்       களையும் பெயர்களுடன் குறிப்பிட்டார்.) சாதாரணமாகப் பத்து          அவதாரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் புகுந்து தெளிய தற்சமயம் எனக்கு வழியுமில்லை,
வசதியுமில்லை. ஆனால் அவதாரக் கதைகள் எழுதுவது என்று
முடிவெடுத்து எழுதி வந்தவன் முன்னேற முடியாமல் தவிக்கக்
காரணம் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் குறித்த தெளிவு
இல்லாததனால்தான்.

           பக்திமாலை என்ற ஒரு தியான ஸ்லோகத் தொகுப்பில்
தசாவதாரஸ்துதி என்று ஒரு ஸ்லோகம். பத்து அவதாரங்களின்
பெயர்களும் அந்தத் துதியில் வருகிறது.

           “மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி
            வாமன பார்கவ நமோ நமோ
            வாசுதேவ ரகுராம புத்த ஜய
            கல்கியவதாரா நமோ நமோ
            தசவித ரூபா நமோ நமோ “

என்று வருகிறது, இதன்படி புத்தன் ஒரு அவதாரமாகக் கருதப்
படுகிறார்.ஆனால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட
ஸ்ரீ தசாவதாரக் கதைகளில் பலராமனை ஒரு அவதாரமாகக்
கூறப்படுகிறது. நான் எழுதியெதெல்லாம் பெரும்பாலும் இதில்
கூறியுள்ள செய்திகளின் அடிப்படையில் அமைந்ததே.

          ” இதில் திருமால் உழு தொழிலின் மேன்மையை உலகுக்கு
உணர்த்த எண்ணினார். எனவே கலப்பையை படைக்கலமாகக்
கொண்ட பலராமர் வடிவெடுக்க நினைத்தார்” என்று கூறப்பட்டு
இருக்கிறது திருமால் தேவகியின் வயிற்றில் ஏழாவது கருக்
கொண்டதாகவும் , அக்குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு,
மகா காளிதேவி தேவகியின் வயிற்றில் இருந்த கருவை நந்த
கோபனின் இரண்டாம் மனைவி ரோகிணியின் வயிற்றில்
மாற்றி அமைத்தாள் என்றும் ,திருமால் ரோகிணியின் வயிற்றில்
பிறந்து பலராமர் என்ற பெயருடன் விளங்கினார் என்றும் கூறப்
பட்டுள்ளது.

           ஒரே நேரத்தில் திருமால் இரண்டு அவதார புருஷராக
விளங்கினாரா என்ற சந்தேகம் எனக்கெழ, அதைத் தீர்த்துக்
கொள்ளும் அவசியம் உணர்ந்தேன்.

          ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ஸ்ரீ நாராயணீயம் படித்துக்
கொண்டு வரும்போது , முப்பத்தேழாவது தசகத்தில் பத்தாம்
பாடலில் “ மாதவனே, உன் ஏவலினால் பாம்பரசனான ஆதி
சேஷன் ஏழாவது கருவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்.
பின், மாயை அவனை ரோகிணியிடம் சேர்த்தாள். அப்போது
சச்சிதானந்த வடிவமாகிய நீயும் தேவகியின் வயிற்றினுள்
புகுந்தாய்” என்ற ரீதியில் செல்கிறது.

         இப்போது பலராமனை அவதார புருஷ்னாக எடுத்துக்
கொள்வதா, புத்தனை அவதார புருஷனாக ஏற்பதா என்ற
சந்தேகம் வலுக்கிறது. பலராமர் ஆதிசேஷனின் பிறப்பா
பரந்தாமனின் அவதாரமா என்னும் கேள்விகள் எழும்போதும்
பலராமரின் அவதார நோக்கம் நான் படித்த வரையில் சரியாக
விளக்கப்படாத நிலையில் அது பற்றி எழுதுவது உசிதமாகப்
படவில்லை.

           பதிவர்களில் பல விஷயங்கள் தெரிந்தவர் இருப்பர்.
அவர்கள் இவற்றுக்கு விளக்கம் கூறினால் அதையும் சேர்த்துப்
படிக்கும்போது தெளிவுகள் பல உண்டாகலாம். ஆக, அடுத்து
கிருஷ்ணாவதாரக் கதை கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்று
கூறி முடிக்கிறேன்.
----------------------------------------------------------------