Friday, July 31, 2015

ஏன் ஏன் ஏன்.....?


                                  சில ஏன்கள்
                                  -------------------


 எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. .ஆங்கிலத்தில். அதைத் தமிழில் எழுத முனைந்தால் அதன் வீச்சு குறைந்து விடும் இருந்தாலும் பகிர விருப்பம் ஆகவே அது ஆங்கிலத்திலேயே..
 .       
Why do banks leave vault doors open and then chain the pens to the counters?
Why do we leave cars worth thousands of dollars in our driveways and put our useless junk in the garage?

EVER WONDER...

Why the sun lightens our hair, but darkens our skin?

Why can't women put on mascara with their mouth closed?

Why is 'abbreviated' such a long word?

Why is it that doctors and attorneys call what they do 'practice'?

Why is lemon juice made with artificial flavoring, and dish washing liquid made with real lemons?

Why is the man who invests all your money called a broker?

Why is the time of day with the slowest traffic called rush hour?

Why isn't there mouse-flavored cat food?

Why didn't Noah swat those two mosquitoes?

Why do they sterilize the needle for lethal injections?

You know that indestructible black box that is used on airplanes? Why don't they make the whole plane out of that stuff??

Why don't sheep shrink when it rains?

Why are they called apartments when they are all stuck together?

If flying is so safe, why do they call the airport the terminal?

God promised that good and obedient wives will be found in all corners of the world.

And then he made the world round and laughed and laughed. !
   

Tuesday, July 28, 2015

ஒரு குதூகலப் பயணம்-3


                              ஒரு பயணமும் பேருவகையும் -3
                             ------------------------------------------------

சென்றபதிவில் எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது என்று எழுதி இருந்தேன் என் மனைவியையும் என்னுடன் பயணத்தில் வரச்செய்ய ஆலய தரிசனங்களும் உண்டு என்று சொன்னேன். அவளுக்குக் குருவாயூர் செல்ல எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் விடமாட்டாள் என்று எனக்குத் தெரியும் ஆகவே இந்தப் பயணத்தில் குருவாயூரும் இடம் பெறும் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு வந்தாள். 18-ம் தேதி காலையில் அவளது குலக் கோவில் பரியானம்பத்தைக் காவுக்கு முதலில் சென்று பின் அங்கிருந்து குருவாயூர் செல்லத் திட்டமிட்டோம் . பாலக் காட்டில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் அந்தக் கோவில் இருந்தது. காலையில் காப்பி அருந்தி கோவிலுக்குப் பயணப் பட்டோம் ஏற்கனவே பலமுறை அந்தக் கோவிலுக்குப் போய் வந்ததில் கோவில் அருகே இருந்த டீ ஸ்டாலில் காலை உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவாயிற்று. அந்த இடத்தில் சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும் எங்கள் நால்வருக்கும் காலை உணவுக்கு ரூ150 மட்டுமே ஆயிற்று, பிறகென்ன கோவில் தரிசனம்தான் கர்க்கடக மாதம் ஆனதால் கோவிலில் கூட்டமும் அதிகம். ஆனால் வளாகம் பெரிதாக இருந்ததால் தெரியவில்லை. நம் ஊரில் அம்மனுக்கு ஆடிக் கூழ் ஊற்றுவது போல் அங்கும் கர்க்கடகக் கஞ்சி வினியோகிக்கப் பட்டது. வீட்டில் இருந்த அனைவர் பெயரிலும் அர்ச்சனை செய்யப் பட்டது.
அங்கிருந்து குருவாயூருக்கு சுமார் எண்பது கிலோமீட்டர் தூரம்  போகும் வழியில் எங்கள் கார் சிலரால் வழிமறிக்கப் பட்டது.  காரை நிறுத்தியதும் சில இஸ்லாமிய நண்பர்கள் எங்களுக்குப் பாயசம் கொடுத்து ரம்சான் பண்டிகை அன்று என்பதை நினைவு படுத்தினார்கள் பஞ்சாபிலும் தீவிர வாதிகளின் தாக்கம் அதிகமாயிருந்த போது நான் போனதும் அங்கும் எங்கள் கார் சீக்கியர்களால் வழிமறிக்கப் பட்டதும் அவர்கள் எங்களுக்கு ரோட்டி சப்ஜி கொடுத்து உபசரித்ததும் நினைவுக்கு வந்தது. இது பற்றி “பஞ்சாபில் நான்என்னும் பதிவு எழுதி இருக்கிறேன் 
கேரளத்தில் பெருவாரியானவர்கள் ஏதாவது கேட்டால் சைகையிலேயே பதில் சொல்கிறார்கள் இன்ன இடத்துக்குப் போகும் வழி கேட்டால் திசை நோக்கிக் கை காட்டுகிறார்கள் அவர்களது செய்கை நாம் போக வேண்டிய இடம் வெகு அருகில் இருப்பதுபோல் நினைக்கத் தோன்றுகிறது ஒரு மலையாளத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது:இதோ இவிடம் வரை “ என்று சொல்லியே அதிக தூரத்தையும் கடக்க வைப்பார்கள். போகும் வழியில் என் மாமனாரின் ஊர் அருகே சென்ற போது அங்கிருந்த மாங்கோட்டுக்காவுக்கும் போகலாம் என்று மனைவி அபிப்பிராயப் பட்டாள். நானும் மச்சினனும் பேண்ட் போட்டிருந்ததால் அனுமதி இருக்கவில்லை, அவளுக்கென்ன  கோவில் உள்ளே போய் தொழுது வந்தாள்.

அங்கிருந்து வழி கேட்டு கேட்டு குருவாயூர் வந்து சேர்ந்தோம்.ஏற்கனவே ஹோட்டல் நியூ ஹொரைசன்  இண்டர் நேஷனல் ல் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம் அன்று ஒரு இரவு அங்கு தங்கி மறு நாள் பெங்களூர் திரும்பத் திட்டம்
 அங்கு மதிய உணவு உண்டபின் ஷாப்பிங் பிறகு மாலை சீனியர் சிடிசன் வரிசையில் நின்று தரிசனம் என்று ப்ளான் நாங்கள் அனைவரும் மச்சினன் மனைவி தவிர்த்து சீனியர் சிடிசன்களே. கேட்டால் நிரூபிக்க ஏஜ் ப்ரூவ் செய்யவேண்டி இருந்தால் காண்பிக்க தேவைப்பட்டபேப்பர்கள்.என வரிசையில் நிற்கும் போது மச்சினன் மனைவிக்கு ஒரே சந்தேகம்  தன்னை அங்கு அனுமதிப்பார்களோ என்று. . வயதானவர் தனியாக வர முடியாது , கூடத் துணை என்று சமாளிக்கலாம்  என்று சொன்னோம் . இருந்தும் நிம்மதி இல்லாமல் வரிசையில் நின்றாள். வரிசையில் அவளை விட இளையவர்கள் நின்றிருந்தது தெம்பு கொடுத்தது. நான்கரை மணிக்கு நடை திறப்பார்கள் என்று கூறி பலத்த சோதனைகளுக்குப்பின் கோவில் வளாகத்துக்குள் அனுப்பப் பட்டோம் வரிசையில் நின்றிருக்கும் போது சீவேலி எனப்படும் கிருஷ்ண விக்கிரகத்தை யானைமேல் வைத்து மூன்று முறை வலம் வரும் சடங்கு நடை பெறு கிறது. அதன் பின் கோவில் கர்ப்பக்கிரகம் திறக்கப் பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஒரு வரிசை சீனியர்களுக்கு என்றால் மறுபக்கம் எல்லோருக்கும் ஆன வரிசையும் இருக்கிறது. வரிசை ஒன்று மூன்று நான்காக மாறுகிறது. இருந்தாலும் கூட்டத்தை முண்டி அடித்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசித்தோம்  சின்ன விக்கிரகம் ஊன்றி கவனித்தால் மட்டுமே உருவம் தெரியும் நடையைக் கடக்கும் போது பக்தர்கள் நடையில் பணத்தை வைக்கிறார்கள். அவை அங்கு பூசை செய்யும் நம்பூதிரிகளுக்கு நல்ல வருமானமாகிறது. ஒவ்வொரு நடையிலும் பணம் வைத்தோருக்கு இலையில் சந்தணப் பிரசாதம் கொடுக்கப் படுகிறது. ஏனையோர் வெளியே பிரசாத வினியோகம் செய்யும் இடத்தில் தூக்கிப் போடுவதைப் பிடித்துக் கொள்ளவேண்டும்  என் மனைவிக்கு மிகவும் சந்தோஷம் திவ்ய தரிசனம் என்று மகிழ்ந்து கொண்டாள்.
மதிய உணவுக்கும் தரிசன வரிசையில் நிற்கும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சில புகைப் படங்கள் எடுத்தோம் என் மச்சினன் ஒரு யானைப் பட்டம் வாங்கினான் இம்மாதிரிப் பொருட்கள் வாங்க நாங்கள் எப்போதும் ஐயப்பன் ஸ்டோர்ஸ் எனப்படும் கடைக்குச் செல்வது வழக்கம் இம்முறையும் அப்படியே.

பரியானம் பத்தக் காவு -முகப்பு

 
பரியானம் பத்தக்காவில்

வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும் விசேஷ  வழிபாடுகள்
கோவில் அலுவலகம்
மாங்கோட்டுக்காவு -முன்பு எடுத்தபடம் 
குருவாயூரில் தங்கிய ஹோட்டல் 
ஹோட்டல் முகப்பு
ஹோட்டல் வரவேற்பில்
வரவேற்பில் பிள்ளையார்
ஹோட்டலில் ஒரு ஓவியம் 
ஐயப்பன் ஸ்டோர்ஸ் 
ஹோட்டல் அருகே -சிவனும் யானையும் பின்னே
தரிசனம் முடிந்து  இரவு உணவு உண்டு ஓய்வாக ஓட்டல் வராந்தாவில் அமர்ந்திருந்தோம் எதிரே ஒரு திரை அரங்கம், ரம்சான் பண்டிகை முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் தெரு முழுதும் நிரம்பி வழிந்தது. வராந்தாவில் அமர்ந்து இருந்த இடத்தில் தலை தூக்கிப் பார்த்தபோது கண்ட ஓவியம் வெளிச்சம் சரியாக இல்லாததால் சரியாக வரவில்லை.
வளைந்த ஓட்டுப் பிறையின் கீழ்கண்ட ஓவியம்
 மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம் மாலை ஆறு மணி அளவில் பெங்களூரு வந்து சேருவோம் என்று கணித்தோம் சீரான வேகத்தில் வரும் போது சேலம் ஐந்து ரோட் அருகே இருந்த ஹோட்டல் சரவண பவானில் மதிய உண்வு.வரும் வழியில் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. ஒன்று பயணம் சுமூகமாக முடிந்தது. இரண்டு நான்கு நாட்கள் பயணத்திலும் என் உடலில் தெம்பு நன்றாகவே இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் இருக்க உடலும் ஒத்துழைத்ததுதான் நிம்மதி. வரும்வழியில் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தோம் மலை முகட்டில் மேகங்கள் தவழ்வது கண்டதும் என் கைப்பேசியில் சிறை பிடித்தேன் 
 இப்பயணப் பதிவுகளில் என் கூடவே பயணித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
மலையில் தவழும் மேகங்கள்
    

Saturday, July 25, 2015

ஒரு குதூகலப் பயணம் -2


                        ஒரு பயணமும் பேருவகையும் -2
                        ----------------------------------------------------


17-ம் தேதி ----இந்த பயண நிகழ்ச்சி நிரலில் எனக்காக ஒதுக்கப் பட்ட நாள். அன்று நாங்கள் போக வேண்டிய இடங்கள் சந்திக்க வேண்டிய நண்பர்கள் என்று துல்லியமாகத் திட்டமிட்டுக் கொண்டோம் போக வேண்டிய ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு திசையில் பழக்கப்படாத இடத்தில் வழி கேட்டுப் போவதென்றால் நேரம் அதிகமாகும் ஆகவே பாலக்காட்டு  டௌனில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் போய் வந்து  பிற இடங்களுக்குக் காரில் போகத் தீர்மானித்தோம். பெங்களூரை விடும்பொது என் அண்ணாவிடம் பாலக்காடு போவதாகச் சொன்னேன். குலதெய்வக் கோவிலுக்கும் சென்று வருமாறு அண்ணா கூறி இருந்தார். என் மனைவியும் முதலில் அங்கு போய் வரலாம் என்று சொல்லிவிட்டாள். மணப்புளிக் காவு பகவதி கோவிலே எங்கள் குலதெய்வக் கோவில் 
குலதெய்வக் கோவில்
நாம் ஆடி மாதம் என்று சொல்வதைக் கேரளாவில் கர்க்கட மாதம் என்கிறார்கள். இந்தக் கர்க்கட மாதத்தில் கள்ள மழை பொழியும் என்றும் சொல்கிறார்கள். கள்ள மழை என்றால் திடீரென்று பெரிய மழை வரும். ஒரு சில நிமிடங்களிலேயே பளிச் சென்று நின்றுவிடும் இதை நாங்கள் அங்கிருந்த மூன்று நாட்களிலும் அனுபவித்தோம் நாங்கள் கோவிலுக்குப் போன நாள் கர்க்கடக மாத முதல் நாள். கோவில்களில் எல்லாம் நல்ல ‘தெரக்கு(கூட்டம்) கோவிலில் தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து என் நண்பன் மதுசூதனன் நடத்தும் காருண்யா இல்லத்துக்குச் சென்றோம்

காருண்யா இல்லத்தின் முகப்பு.


நாங்கள் போனநேரம் அங்கே இருப்பவர்களுக்கு ஒரு யோகா ஆசிரியர் வந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்சிறிது நேரத்தில் அங்கிருந்து மது அவர்கள் வந்து எங்களை வரவேற்றார். என் மச்சினன் அங்கு வருவது முதல் தடவை. காருண்யா இல்லம் முதலில் துவங்கப் பட்டபோது நினைவலை தவறியவர்களுக்காகவே இருந்தது. அப்படி ஒரு இல்லம் நடத்த பணபலம் மட்டுமல்லாமல் ஆள் பலமும் தேவை. ஏறத்தாழ ஒரு அல்ஜிமர் நோயாளிக்கு ஒருவர் தேவைப்படும் என்பதால் அந்த இல்லம் இப்போது கைவிடப் பட்ட முதியோர்களுக்காகவே நடத்தப் படுகிறது இப்போது அங்கு சுமார் இருபது பேர்கள் இருக்கிறார்கள் இவர்களில் ஓரிருவர் ஆல்ஜிமர் நோயாளிகள்.  இவர்கள் உடல் நலம் பேண ஒரு மருத்துவ மனையும் பூர்த்தியாகும் நிலையில் இருக்கிறது பணம் படைத்தோர் பெற்றோரைப் பேணமுடியாமல் இங்கு விட சிலர் வந்தபோது மது மறுத்து விட்டார்.ஆதரவற்றோரையும் பணம் கொடுப்போரையும் ஒரேமாதிரி ட்ரீட் செய்ய முடியாது என்பதே முதல் காரணம்  இவர்களைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ. 1500/- தேவைப்படுகிறதாம்  வயதானவர்கள் பலரும் குழந்தைகள் போல் பராமரிக்கப் படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதன் லிங்க் இதோ  
நானும் மதுவும்
அன்று காலை உணவு தோசையும் ப்ரெட்டும் அவர்களுடனேயே உண்டோம் என் மாமியாரின் நினைவு நாள் அன்று ஆகும் ஓரு நாள்செலவை என் மச்சினன் கொடுத்தான்  நானும் என்னால் இயன்ற தொகையைக் கொடுத்தேன் நாங்கள் வந்த ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே அறைக்குத் திரும்பினோம் 

முதியோர்கள் காலை உணவு
மெடிகல் செண்டர்முடிவடையும் நிலையில்
அங்கிருந்துஅடுத்ததாக என் தம்பி இருக்கும் ஆலத்தூருக்குப் போனோம் சுமார் 20கி.மீ. தூரம் மதிய உணவுக்கு அங்கு இருப்போம் என்று சொல்லி இருந்தோம் ஆலத்தூரில் இருக்கும் க்ரெசெண்ட் ஆஸ்பத்திரியில் தரப் பிரிவின் பொது மேலாளராக என் தம்பி இருக்கிறான்  குடியிருப்பில் அந்த வளாகத்திலேயே இருக்கிறான் அவனது இரண்டாம் மகள் தன் மகனுடன் ஸ்வீடனிலிருந்து வந்திருந்தாள அவளது திருமண நாளில் பார்த்தது, ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அயல் நாட்டில் வசிப்போரின் குழந்தைகளை போலவே அவளது மகனுக்கும் ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியவில்லை.சிறிது நேரம் குடும்ப விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம் தம்பியின் மனைவி வடை பாயசத்துடன் சமையல் செய்திருந்தாள். அவன் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் முதலில் எங்கள் கேரளப் பயணத்தை அந்த வீட்டுக் கிரகப் பிரவேசம் போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம் ஆனால் வாய்ப்பு வந்தபோது எனக்கு நழுவ விட மனசிருக்கவில்லை. கிளம்பி வந்து விட்டோம்

உணவு முடிந்ததும் புதியங்கம் எனப்படும் இடத்தில் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைப் பார்க்கப் போனோம் கேரளத்தில் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடிவதில்லை என்றும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே பாடாக இருக்கிறது என்றும் குறை பட்டுக் கொண்டான் 


தம்பி என் மனைவி தம்பி மகள் என் மச்சினன் மனைவிஎன் தம்பி மனைவி
தம்பியின் பேரனுடன்

 
கட்டப் படும் தம்பியின் வீடு
  
அடுத்து என்னுடன் பி.எச்.இ. எல்-ல் பணி புரிந்து கொண்டிருந்த வேணுகோபாலன் ஆலத்தூரிலிருந்து 15-16 கி.மீ தூரத்தில் வல்லேங்கி எனும் இடத்தில் இருக்கிறார், இவர்தான் திடீரென்று தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு என்னை இந்தப் பயணம் மேற்கொள்ள முதல் காரணமாயிருந்தவர் கள்ளமழையில் இடம் தேடி ஒருவாறு அவர் வீட்டுக்குச் சென்றோம்  பலரும் மனதளவில் வயதை உணரத் தொடங்கினால் ஆன்மீகப் பக்கமும் பக்தி மார்க்கம் தேடியும் செல்கின்றனர். என் நண்பரும் விதி விலக்கல்ல. ஏதோ சாமியாரிடம் தீட்சை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். என் வழக்கம் போல் அவரது சிந்தனைகள் எதிர்மறையாய் இருப்பதால்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்றேன் உடல் நலம் குறையும் போது பயம் வந்து விடுகிறதோ என்னவோ. இவர் என்னிலும் ஒரு ஆண்டு மூத்தவர் நிறையவே பேசினோம் அவரது கணினியை உறவினர் வீட்டில் மறந்து விட்டு வந்ததாகக் கூறினார். கணினி வந்தபின் எனக்குச் சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறேன் நான் எழுதி உள்ள சில பதிவுகளை அவருக்கு  அனுப்பிக் கொடுக்கலாம் என்றுதான் ‘ இதனிடையில் என் மனைவி பல்ல சேனா என்னும் இடம் எங்கிருக்கிறது என்றும் அதற்குப் போகும் வழியையும் விசாரித்துக் கொண்டிருந்தார் பல்லசேனா மீன் குளத்துக் காவு பற்றி முன்பே என்னிடம் சொல்லி இருக்கிறாள் வாய்ப்பு கிடைத்தால் போகலாம் என்றும் சொல்லி இருந்தேன் இப்போது அந்த நினைவில் விசாரித்துக் கொண்டிருந்தாள் அங்கிருந்து சுமார் பனிரெண்டு கி.மி தூரத்தில்தான் அந்தக் கோவில் என்றதும் அங்கு  போக முடிவு செய்தோம்  

நண்பர் வேணு கோபாலுடன்

. 
என் மச்சினன் மனைவி என் மனைவி திருமதி வேணு. வேணு கோபால் என் மச்சினன்
கள்ள மழை நன்கு பெய்யத் துவங்கி விட்டது. மாலை ஆறு மணி அளவில் கோவிலுக்குச் சென்றோம் நானும் மச்சினனும் பேண்ட் அணிந்திருந்ததால் எங்களுக்கு அனுமதி இல்லை. என் மனைவியின் நீண்டநாள் ஆசை நிறைவேற அவளும் மச்சினன் மனைவியும் கோவிலுக்குச் சென்று தொழுதனர். மழை காரணமாக குளத்துக்குச் செல்ல இயலவில்லை 

மீன் குளத்துக்காவு
  
மீன் குளத்துக்காவு  இன்னொரு படம்
கோவிலில் தொழுகை முடிந்ததும் காரை நேராகப் பாலக் காட்டுக்கு விடச்சொன்னேன் ஹோட்டல் அறைக்குப் போய்ச்சேரும்போது மணி ஏழரை ஆகி இருந்தது. ஆக எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது. அடுத்தநாள் 18-ம் தேதி மனைவியின் குலக் கோவில் பரியானம்பத்தக் காவுக்கும் அங்கிருந்து குருவாயூருக்கும் போக திட்டம் இட்டிருந்தோம் ( குதூகலப் பயணம் தொடரும்) 
 
  

Wednesday, July 22, 2015

ஒரு குதூகலப் பயணம்


                                ஒரு பயணமும் பேருவகையும்
                                -----------------------------------------------

நான் அடிக்கடி கூறுவது “திட்டமிட்டுச் செய், திட்டமிட்டதைச் செய்என்பதாகும். ஆனால் சிலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிவதில்லை. திட்டங்களுக்குப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல நாட்களாகத் திட்டமிட்டு வந்தேன். முதலில் என் பயணம் சென்னைக்கு என்றிருந்தது. ஆனால் அங்கு வெயிலின் தாக்கம் கூடுதல் என்பதால் அது நிறைவேற்றப் படாமல் போய் விட்டது. நான்தான் விடாக்கண்டனாயிற்றே. காலம் கனியக் காத்திருந்தேன் என் மனைவிக்கு என்னுடன் தனியே பயணிக்க மிகவும் பயம். கடந்தமுறை பயணத்தின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் நான் விழுந்ததே முக்கிய காரணம். யாராவது கூட இருந்தால் அவளுக்கு பயம் சற்றுக் குறையும் சில நாட்களுக்கு முன் என் மச்சினனிடம்( எனக்கு அவன் மூத்தமகன் போல ) என்னை எங்காவது அழைத்துப் போகக் கேட்டேன். அவனும் சரி என்றான். நடுவில் அவனும் அவன் மனைவியும் மலேசியா பயணம் மேற்கொள்ள இருப்பதால் அது முடிந்து வந்து போகலாம் என்றான் இதனிடையே சற்றும் எதிர்பாராமல் என் பழைய நண்பன் ஒருவன் தொலை பேசியில் அழைத்துப் பேசினான்  இன்னொரு அறுபது வருட நட்புக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. என் தம்பி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் வீட்டு கிரகப் பிரவேசத்துடன் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவன் வீடு கட்டி முடிக்க இன்னும் காலதாமதம் ஆகும் என்று தோன்றியதால் என் பயண திட்டத்தை அதற்கு முன்பே நிறைவேற்ற எண்ணினேன். என் மனைவியை இதற்கு உடன் படச் செய்ய என்னிடம் இருந்த துருப்புச்சீட்டை போட்டேன் அவள் விரும்பும் குருவாயூர் பயணத்தையும் செய்து விடலாம் என்றேன். என் மச்சினனும் மலேசியப் பயணம் முடித்து வந்து விட்டான் ஜூலை 15 தேதிக்குப் பின் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்றான் ரயில் டிக்கெட் எடுப்பதோ முன் பதிவு செய்வதோ ஏற்புடையதாய் இல்லை. விரும்பும் இடத்துக்கு விரும்பும் நேரத்தில் செல்ல மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும் சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள். பாலக்காட்டில் பதிவுலக நண்பர் துளசிதரனையும் சந்திப்பது என்பது தீர்மானமாயிற்று. 16-ம் தேதி காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டால் மாலை நான்கு மணிக்குள் பாலக் காடு சென்று விடலாம் பால்க் காட்டில் மத்திய கேரள பேரூந்து நிலையம் அருகில் ஹோட்டல் கபில வாஸ்துவில் அறைகள் முன் பதிவு செய்தோம் என் பழைய நண்பன் மனைவியுடன் மாலை ஐந்து மணிக்கு வருகிறென் என்று கூறினான் நண்பர் துளைதரனின் இருப்பிடம் பற்றி விசாரித்தால் அவரும் என்னை ஹோட்டலில் வந்து சந்திப்பதாகக் கூறினார். இங்கிருந்து பாலக் காட்டுக்குக் சாலை வழியே சென்றால் 430 கி.மீ. தூரம் என்று தெரிந்தது.எந்த சிக்கலும் இல்லாமல் மதியம் ஒன்றரை மணி அளவில் நேராக ஓட்டலுக்குச் சென்று உணவருந்தி சற்றே ஓய்வாக இருந்தோம் மாலை நான்கு மணியிலிருந்தேமனம் எதிர்பார்ப்பில் நிலை கொள்ளாமல் இருந்தது,  சரியாக ஐந்து மணிக்கு என் நண்பன் சுந்தரேஸ்வரன் மனைவியுடன் வந்தான் அவனுக்கு இதய அறுவைச் சிகிச்சை முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்றான் இவனும் நானும் அறுபது ஆண்டுகளாக நண்பர்கள். ஒரே நாளில் எச்.ஏ எல் -லில்  பயிற்சியில் சேர்ந்தோம் ஊர்ப்பட்ட விஷயங்கள் இருந்தது பேசுவதற்கு. எந்நேரமும் நண்பர் துளசிதரன் வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ரிசெப்ஷன் இலிருந்து துளசிதரன் கூப்பிட்டார், அவர் வரும் போதே எதிர் கொண்டு வரவேற்றேன் பரஸ்பர அறிமுகப் படலம் முடிந்தது, ஏதோ காலம் காலமாகப் பரிச்சயப்பட்டநட்புபோல் இருந்தது, நண்பர் துளசிதரனை இதுவே முதன் முறையாகப் பார்க்கிறேன் ஏதோ சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். சில நொடிகள் மண்டைக் குடைச்சலுக்குப் பின் தெரிந்தது. அவரது குறும் படம் போயட் தெ கிரேட் இல் மொட்டை அடித்துப் பார்த்தது. இப்போது வலது பக்கம் வகிடு எடுத்த தோற்றம் . வந்தவர் என் பதிவுகள் சிலவற்றிலிருந்த விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ,என் பதிவுகள் சிலவற்றை நினைவில் கொண்டு வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் என் பதிவுகள் எல்லாவற்றையும் என் மனைவி படிப்பதில்லை. அண்மையில் எழுதி இருந்த எண்ணச் சிறகாட்டம் என்னும் பதிவில் இருந்த விஷயங்களைப் பற்றி அவளுக்கு ஏதும் தெரியாது. எனக்கோ துளசிதரன் அது பற்றிப் பேசிவிடுவாரோ என்னும் பயம் இருந்தது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டாம் இல்லையா.?என் நண்பன் சுந்தரேஸ்வரனின் அண்ணா மதுசூதன் துளசிதரன் பணிசெய்யும் பள்ளிக்கு வேண்டப் பட்டவர் என்று தெரிந்தது. ஏறதாழ இரண்டு மணி நேரத்தில் துளசிதரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் கவனித்தது , ஆங்கில ஆசிரியரான அவர் பேச்சில் ஆங்கில வார்த்தைகளே வரவில்லை....!சற்றே பின் தங்கிய இடத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் சற்றே பின் தங்கிய மாணவர்கள் துளசிதரன் மாதிரியான ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என் சிறுகதைத் தொகுப்பான வாழ்வின் விளிம்பில் புத்தகத்தை அவருக்குக் கொடுத்தேன் உடன் இருந்த நேரத்தில் அவரது பணிவும் அடக்கமும் என்னைக் கவர்ந்தது. பல காலம் பழகியவர்கள் பிரியும் போது ஏற்படும் pangs of parting  எனக்கிருந்தது. பிரியா விடை பெற்றவர் இன்னும் மூன்று மணிநேரம் மோட்டார் சைக்கிளில் பயணப் பட்டு அவர் இல்லத்துக்கு நீலாம்பூர் செல்ல வேண்டும் என்றார் வழியில் மழையில் அகப்படக் கூடாதே என்று என் மனைவி வருத்தப்பட்டாள்


நண்பர் துளசிதரனுடன்

 ( என் காமிராவில் எடுத்தது, வெகு சுமார் ரகம் .என் மச்சினன் அவனது டிஜிடல் காமிராவில் எடுத்த படங்கள்  கீழே)

துளசிதரனுடன் நான்
என் சிறுகதைத் தொகுப்பு  துளசிதரனுக்குசுந்தரேஸ்வரன் நான் துளசிதரன் 
 அறுபது ஆண்டுகால நண்பன் சுந்தரேஸ்வரனின்  அண்ணாதான் காருண்யா இல்லம் நடத்தும் மதுசூதனன். அந்த இல்லத்துக்கு நண்பர் துளசிதரனைக் கூட்டிக் கொண்டு போக விரும்பினேன்.  உலகம் மிகவும் சிறியது.பாருங்கள் துளசிதரன் பணிசெய்யும் பள்ளியின் ஆதரவாளர்களுள் ஒருவர்தான் மதுசூதனன் என்பது தெரிந்ததாலும் , ஏற்கனவே அவரைப் பற்றி துளசிதரனுக்குத் தெரியும் என்பதாலும் நேரம் காலம் லாஜிஸ்டிக்ஸ் சரிப்பட்டு வராததாலும் அங்கு அவரைக் கூட்டிப் போகும் எண்ணத்தைக் கைவிட்டேன்

இன்று 22-ம் தேதி பதிவர் கில்லர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் துளசிதரனைப் பாலக்காட்டில் சந்திக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்திருந்தால் அவரும் வந்து துளசிதரனை சந்தித்து இருக்கலாம் என்று கூறினார். துளசியை சந்திக்கும் ஆர்வம் தெரிந்தது. 

(குதூகலப் பயணம் தொடரும்)

Tuesday, July 21, 2015

நாயும் நிகழ்வுகளும்


                                   நாயும் நிகழ்வுகளும் 
                                  --------------------------------


என் மகன் வீட்டில் ஒரு நாய்க்குட்டி (கோல்டென் ரெட்ரிவர்) வாங்கி இருக்கிறான் என்று நான் முன்பே எழுதி இருக்கிறேன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் செல்ல நாய்களை வளர்ப்பதில் இருக்கும் சங்கடங்களை நாங்கள் சொல்லியும் தெரிந்தே வாங்கி வளர்க்கிறார்கள். மகன் வேலைக்குப் போய் விடுவான் மருமகள் ஆசிரியை. பேத்தி கல்லூரி மாணவி. பேரன் பள்ளி செல்பவன் செல்லங்களை வளர்ப்பது ஒரு கஷ்டமான காரியம் அதுவும் குட்டி வளர்ந்து பெரிதாகும் போது சிரமங்கள் அதிகம் என் மகன் வீட்டு நாய்க்குட்டிக்கு இப்போது நான்கு மாதங்கள் வயது. வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அதைப் பராமரிப்பதுபோல் இதையும் கவனிக்க வேண்டும் அது வளரும்போது செய்யும் சேட்டைகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு பல் துரு துருக்கும் எல்லா இடங்களையும் கடித்துப் பார்க்கும் கதவோரம் சோஃபா செட், மேசை ஓரம் வீட்டில் இருக்கும் காலணிகள் நடக்கும் போது புடவை ஓரம்  சில நேரங்களில் நம் கால்களையும் கடித்துப் பார்க்கும். மிகவும் சாக்கிரதையாகக் கையாள வேண்டும். செல்ல நாயைக் கட்டிப் போடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் அதிக சுதந்திரம் . சொல்லிச்சொல்லி இப்போது அதற்கு லீஷ் வாங்கி இருக்கிறார்கள் இப்போது அதை வெளியில் உலவக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். என் மகன் என் வீட்டுக்கு வருவதும் பிரச்சனையாக இருந்ததால் நான் அவர்கள் வரும்போது நாய்க் கூட்டியையும் அழைத்து வரச்சொல்லி இருக்கிறேன் ஒரு நாளைக்கு நாய்க்குட்டிக்காகச் செய்யும் செலவு மனிதருக்காவதை விட அதிகம். இதல்லாமல் தடுப்பூசி ரெகுலர் மருத்துவ செக் அப். வகையறா. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் ஆனால் நான் சொல்லப் போவது எதிர்பாரா ஒரு நிகழ்வு.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏழெட்டு அடுக்குகள் உண்டு. ஒவ்வொரு அடுக்கிலும் பத்து தளங்கள் ஒரு தளத்தில் நான்கு வீடுகள் என் மகன் ஏழாவது மாடியில் இருக்கிறான் இரண்டாம் தேதி என் பேத்தி நாயை வாக்கிங் கூட்டிப் போயிருக்கிறாள் அங்கிருந்த நீச்சல் குளம் அருகே யாரோ நீச்சல் தொப்பியை மடித்து வைத்துப் போய் இருக்கிறார்கள் வாக்கிங் போகும் போது இந்த நாய்க்குட்டி அந்த தொப்பியைக் கௌவி இருக்கிறது.பேத்தி அதைப்பிடுங்கும் முன் அதை முழுங்கி விட்டது. பேத்தி சற்றும் எதிர்பார்க்காதது. வீட்டில் வந்து சொல்லி அழுதிருக்கிறாள். விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார்கள். அவர் அதை பரிசோதித்து ஓரிரண்டு நாளில் மலத்துடன் வெளி வந்து விடும் என்றும் அது உண்பது, மலம் கழிப்பது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கும் படியும் கூறினார் அது உண்பதில் ஏதும் மாற்றம் இருக்கவில்லை. ஒழுங்காகவே மலமும் கழித்தது மூன்றாம் தேதி அனைவரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள், அன்று என் மனைவியின் பிறந்த நாள் மறுநாளும்  வெளியே வரவில்லை. அத்தனை பெரிய தொப்பி வயிற்றினுள்ளேயே இருந்தால் செல்லத்துக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்று எல்லோரும் பயந்திருக்கிறார்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தார்கள் வயிற்றில் அது இருப்பது தெரிந்தது. அடுத்த நாள் பேரியம் மீல் கொடுத்துப் பார்த்தார்கள். அந்த தொப்பி சற்றே இடம் மாறிய நிலையில் தெரிந்ததாம் அறுவைச் சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அபிப்பிராயப்பட்டார். என்னிடம் மகன் சொன்னபோது நான் வேண்டாம் இன்னும் ஓரிரு நாளில்  அது வெளியே வரலாம் என்று சொன்னேன் . நாய்க் குட்டியாய் இருந்தபோதிலிருந்து அதைக் கவனித்துக் கொண்ட மருத்துவரிடம் மீண்டும் காட்டி அவரது ஒபினியன் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒரு இஞ்செக்‌ஷன் போட்டுப்பார்ப்பதாகவும் அதனால் அது சற்றே மயக்கமாக இருக்கக் கூடும் என்றும் அந்த இஞ்செக்‌ஷன் வாந்தி எடுக்க வைக்கலாம் என்றும்  கூற அந்த இஞ்செக்‌ஷன் போடப் பட்டது. அங்கேயே அவர்கள் இருந்த அரைமணி நேரத்தில் நாய்க்குட்டி வாந்தி எடுக்க ஹுர்ராஹ் அந்த தொப்பி வெளியே வந்து விட்டது. இவர்கள் அனைவருக்கும்  மிகவும் மன ஆறுதல் கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா?
 ஐந்தாம் தேதி டாக்டர் கந்தசாமி ஐயாவும் அவரது துணைவியாரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது தொப்பி வெளியே வந்த விஷயம் எங்களுக்கும் தெரிவிக்கப் பட்டது ஆறாம் தேதி நாய்க்குட்டியைப் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் அதற்குள் ஆளுக்கு ஒரு வேண்டுதல் அவரவருக்கு இஷ்டப்பட்ட கோவிலுக்கு . இந்த நாய்க்குட்டியின் விளையாட்டால் ரூ மூவாயிரத்துக்கும் அதிகம் செலவாயிற்று, வேண்டுதலை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு செலவோ.? செலவைப் பற்றி என்னைத்தவிர யார் கவலைப்பட்டார்கள்?
நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது எடுத்த புகைப்படமும்  ஒரு காணொளியும் இத்துடன் 

 என் மகனும் நானும்  நாய்க்குட்டியுடன் 
                        என் மகன் வீட்டில் எடுத்த காணொளி


இது இன்னொரு நிகழ்வு. நாய் சம்பந்தப்பட்டதுதான் என் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு நாய் வளர்க்கிறார்கள் சைபீரியன் ஹஸ்கி வகையைச் சேர்ந்தது, அதை ஒரு நாள் மச்சினியின் பெண்வீட்டில் எதிரில் இருந்த காலி இடத்தில் யாருக்கோ சொந்தமானது .அங்கு நாயை உலவ விட அனுமதி கேட்டிருக்கிறாள் அவர்களும் சரியென்று சொல்ல நாயை விட்டிருக்கிறாள், சிறிது நேரத்டில் அந்த வீட்டின்  சொந்தக் காரரின் மாங்கிரல் நாய் ஒன்று இந்த நாயை அட்டாக் செய்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பெந்தன் நாயைக் காப்பாறப் போக இவளை அந்த நாய் கடித்து விட்டதாம் அந்த நாயின் சொந்தக்காரர்களிடம் நாய்க்குத் தடுப்பு ஊசி போடப்பட்டிருக்கிறதா என்று கேட்க அவர்கள் சரியாகப் பதில் சொல்லாமல் ஆறு மாதம் முன்பு போட்டதாகக்  கூறினார்களாம்  பின் என்ன இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூற ஐந்து ஊசி போட வேண்டுமாம். ஒன்றோ இரண்டோ முடிந்திருக்கிறது. 
ZUKO The Siberiyan  Hasky மச்சினியின் மகள் வீட்டு நாய்
நாய் வளர்ப்போர் ஜாக்கிரதை...!

. 


     

Wednesday, July 15, 2015

ஒரு இனிமையான சந்திப்பு


                                        ஒரு இனிமையான சந்திப்பு
                                       ------------------------------------------


டாக்டர் கந்தசாமிக்கும் எனக்கும் ஒரு அபூர்வ நட்பு இருக்க வேண்டும் முதலில் கோவையில் அவரது இல்லத்தில் என் மனைவி தம்பி , தம்பி மனைவியுடன் சந்தித்தேன் நான் எழுத ஆரம்பித்தகாலத்திலேயே. பதிவுலகில் என்னை ஒரு பிரபல பதிவராக்குகிறேன் என்று சொல்லி இருந்தார். நான்தான் என் எழுத்து என்னைப் பிரபலம் ஆக்குவதையே விரும்புவேன் என்று கூறி விட்டேன். திருச்சிக்குச் சென்று வை.கோபால கிருஷ்ணனை சந்தித்ததாக எழுதி இருந்தபோது என்னை சந்திக்க வரமாட்டீர்களா என்று கேட்டேன்  என்னைச் சந்திக்கவே பெங்களூர் வந்திருந்தார். அது பற்றி எழுதி இருந்தேன் எங்கள் நட்பு மோசி கீரனார் முரசுகட்டிலில் என்பது போல் இருப்பதாக திரு, ஜீவி பின்னூட்டம் எழுதிய நினைவு இப்போது அது சரித்திரமாகி விட்டது.
ஐயாவின் பேரன் பெங்களூரில் பிடியாட்ரிக் மருத்துவம் ஸ்பெஷலைஸ் செய்கிறார். போன மாதம் பேரனைப் பார்க்க கோவையிலிருந்து காரில் துணைவியாருடன் வர இருப்பதாகவும்  ஜூலை ஏழாம் தேதி வாக்கில் வருவதாகவும் அஞ்சல் அனுப்பி இருந்தார். நான் வரும் தேதியை உறுதி செய்யக் கேட்டு எழுதி இருந்தேன் ஐந்தாம் தேதி காலை பெங்களூர் வருவதாகவும் காலை சுமார் பதினொரு மணி அளவில் என் வீட்டுக்கு வருவதாக்வும் கூறினார். காலை பதினொரு மணி என்பதால் என் மனைவியிடம் மதிய உணவுக்கு அவர்கள் இருப்பார்கள் என்று கூறி விட்டேன் கலாசிபாளையம் பேரூந்து நிலையத்துக்கு ஆம்னி பஸ்ஸில் வந்து அவர்களது பேரனை மருத்துவமனையில் பார்த்துவிட்டு. சிடி மார்க்கெட் பஸ்நிலையத்திலிருந்து பஸ் ஏறி வீட்டுக்கு ஒன்றரை கி. மீ/ தூரத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ ஏறி துணைவியாருடன் எங்கள் வீட்டுக்கு வந்தவரை வீடு அடையாளம் தெரிய வீட்டு வாசலில் நின்று வரவேற்றேன் காரில் வருவதற்கு /ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது என்றும் அதனால் பஸ்ஸில் வந்ததாகவும் கூறினார் என் வீட்டில் மராமத்து வேலைகள் நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டார் வந்தவர் சீக்கிரமே திரும்புவதில் குறியாய் இருந்தார். என் மனைவி திருமதி கந்தசாமியுடன் உரையாடத் தொடங்கி நல்ல நட்பைப்பெற்று விட்டார். மதிய உணவை சுமார் பனிரெண்டு மணிக்குப் பறிமாறினாள். அதற்குள் நான் ஐயாவை எங்கள் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று சில புகைப்படங்கள் எடுக்கக் கேட்டுக் கொண்டேன் அவரை நான் மொட்டை மாடிக்குக் கூட்டிப் போனதற்கு என் மனைவி பிற்பாடு கடிந்து கொண்டாள். அவர் மாடியேறி இறங்கி வந்ததும் களைத்து இருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லை,மதியம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் இன்னும் சில இடங்களுக்குப் போக வேண்டும் என்றும் கூறினார். இதன் நடுவில் என் பேத்தி அவர்கள் வீட்டு நாய்க்குட்டி முழுங்கி இருந்த நீச்சல் தொப்பியை நாய் வெளியேற்றி விட்டது என்ற சந்தோஷ சமாச்சாரத்தைத் தெரிவித்தாள்,( அது பற்றி பிறிதொரு பதிவில் )உணவு முடிந்து ஒரு ஆட்டோவில் அவரை பஸ் ஏறும் இடத்துக்கு அனுப்பி வைத்தோம் என்னைவிட மூத்தவர் சிரமம் பாராது எங்களைப்பார்க்க வந்தது எங்களைப்  நெகிழச் செய்துவிட்டது.
இனி சில புகைப் படங்கள் திரு, கந்தசாமியின் காமிராவில் எடுத்தது

 என் மனைவியும் கந்தசாமி தம்பதியரும்
நானும் கந்தசாமித் தம்பதியரும்

எங்கள் வீட்டுத் தென்னை--கந்தசாமி ஐயா எடுத்த படம்
( ஏற்கனவே டாக்டர் கந்தசாமி பதிவிட்டு இருக்கிறார், இது என் பங்குக்குமூன்று நான்கு நாட்கள் பதிவுப் பக்கம் வர இயலாது. நான் பயணிக்கப் போறேனே,,,!)