Thursday, July 2, 2015

எண்ணச் சிறகாட்டம்


                        எண்ணச் சிறகாட்டம்
                         -------------------------------


எனக்கு என்ன நேர்கிறது நானறியாமல் கீழே வீழ்கிறேன்
மனைவி கலங்குகிறாள் இது மூன்றாம் முறையென்று
மூன்றாண்டுகளுக்கு முன் குப்புற நான் வீழக் காலனைக்
காலால் உதைக்கிறேன் வாடா என்றேன்

காலால் மிதிபட்ட காலன் கழுத்தில் தொற்றிக்
காதில் முணுமுணுக்கிறான் உன்
காலம் கணக்கிடப் பட்டுவிட்டது என்கிறான்

நான் என்ன உலகம் தெரியாதவனா
வாழ்வின் நிலையாமை அறியாதவனா?
நாளும் உறங்கி விழிக்கும் போது
இது இன்னும் ஒரு நாள் என்றே அறிந்தவனே

காலனுடன் சண்டைகளில் வெல்லலாம்
இறுதிப் போரின் வெற்றி அவனுக்குத்தானே

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

 
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
 
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
 
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
 
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
 
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.?

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் துய்த்தாயிற்று ;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

என் உயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
ழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
 
மூடிய கண்கள் விழித்து விட்டால்
 
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.

46 comments:

 1. என்ன ஆச்சு? நலம்தானே?

  ReplyDelete
 2. நிலையாமையை கூறும் கவி அருமை! நலம் தானே ஐயா!

  ReplyDelete
 3. எதார்த்தம் கூறும் கவிதை அருமை ஐயா....

  நலம்தானே ஐயா...?

  ReplyDelete
 4. கடந்தது தான்... மாற்ற இயலாது தான்...

  உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

  ReplyDelete
 5. ஏனிந்த திடீர் கவிதை!?வாழ்க வளமுடன்!

  ReplyDelete

 6. @ ஸ்ரீராம்
  @ தளிர் சுரேஷ்
  @ உமையாள் காயத்ரி
  @ கில்லர்ஜி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ புலவர் இராமாநுசம்
  அனைவரது அன்புக்கும் நன்றி.ஏன் என்று தெரியவில்லை. நிகழ்ந்தது நடந்தவாறு பதிவில் எழுத வேண்டும் போலிருந்தது. எழுதி விட்டேன் ஒரு நாள் நடக்க வேண்டியதுதானே இப்போது நான் நலமே

  ReplyDelete
 7. சற்று முன்பு எங்களை வாழ்த்திய தாங்கள்,
  மேலும் பல்லாண்டுகள் நீடூழி வாழ வேண்டும்
  என இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 8. யதார்த்தம்.. எல்லாருக்கும் உள்ளது.. ஆனாலும்,
  இதிலெல்லாம் - ஏன் சிந்தையை செலுத்தவேண்டும்?..

  வாழக.. வாழ்க.. பல்லாண்டு!..

  ReplyDelete
 9. மெய்ஞானத்தேடல்!!!!
  இதுபோன்றதொரு குரலை இதற்குமுன் எங்கோ கேட்டிருக்கிறேன்.

  சட்டென நினைவு வரவில்லை.

  நமக்கான தூண்டில் விழும் இடமும் காலமும் நாம் அறியாததே!

  நன்றி

  ReplyDelete
 10. வாழ்வின் நிலையாமையைப் புரிந்து கொண்டால் மரண பயம் விலகி விடும்.

  ReplyDelete
 11. அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! நலம்! நலனறிய ஆவல். என்ன ஆச்சு உங்களுக்கு? திடீரென்று உங்களுக்கு இந்த சிந்தனை. முன்பு ”வீழ்வேனென்று நினைத்தாயோ.?” என்ற பதிவிலும் // “ காலா, என்னருகே வாடா, ;உன்னை
  சற்றேமிதிக்கிறேன் என் காலால்” என்று அடிக்கடி நினைப்பதும்
  கூறுவதும் எழுதுவதும் உண்டு. எனக்கே தெரியாமல் என்னை
  அழைக்க வந்தவனை நிஜமாகவே நான் உதைத்து விட்டேனா.? //
  என்று எழுதி இருந்தீர்கள். (Thursday, September 22, 2011)

  ரிலாக்ஸ் ப்ளீஸ். வலைப்பக்கம் வாருங்கள் எப்போதும் போல மற்றவர்களுக்கு உற்சாகம் தாருங்கள்.

  ReplyDelete

 12. @ கோபு சார்
  உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

  ReplyDelete

 13. @ துரை செல்வராஜு
  சிந்தனையை யார் செலுத்துகிறார்கள்? சில நிகழ்வுகள் சிந்திக்க வைக்கின்றன. யதார்த்தம் அறிந்ததால் எதையும் சிந்திக்க முடிகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 14. @ ஊமைக்கனவுகள்
  மெய்ஞானத் தேடலா.? நிச்சயம் இல்லை. தேடித்தெரிவதற்கு ஏதுமில்லை. எங்கோ கேட்ட குரல் என்னை மாதிரி யாராவது எழுதி இருக்கக் கூடும் வருகைக்கு நன்றி ஐயா.?

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  பதிவிலேயே எழுதி இருக்கிறேனே வாழ்வின் நிலையாமை பற்றி. மரண பயம் எள்ளளவும் இல்லை. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 16. @ தி தமிழ் இளங்கோ
  என்ன ஆச்சு எனக்கு. அதுதானே பதிவில். இதைவிட தெளிவாக இருக்க முடியுமா. வழக்கம் போல் என் பதிவுகள் வரும். பலரையும் சிந்திக்கத் தூண்டும் உற்சாகம் தருமா தெரியாது. அன்புக்கு நன்றி. மூன்று முறை வீழ்ந்தவன் வீழ்ந்தால் எழாமல் போகவும் வாய்ப்பு உண்டு அல்லவா வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 17. இதில் விரக்தி இருப்பதாகத் தெரியவில்லை
  எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும்
  தைரியமும் அல்லவா தெறித்து வீழ்ந்திருக்கிறது

  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 18. நிலையாமையை சுய அனுபவத்தின் பாதிப்புகள் மூலம் மிக அழகாக கூறியுள்ளீர்கள் அய்யா! எல்லோரும் ஒரு காலத்தில் கண்டிப்பாக அனுபவித்து உணரவேண்டிய அனுபவம்தான். ஆனாலும் நம்முடன் பழகியவர்களுக்கு நேரும் போது மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. கவனமாக உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
 19. சார்! வழக்கமாக நீங்கள் மிகவும் வீறு கொண்ட சிங்கம் போல் போல்டாக மிக அழகாக பாசிட்டிவாக, நல்ல சிந்தனைகளைத் தூண்டும் விதமாக எழுதுவீர்கள். இது நீங்கள் முன்னம் ஒரு முறை எழுதியிருக்கின்றீர்களோ? இல்லை இது போன்று பொருளில் எழுதி இருக்கின்றீர்களோ..வாசித்த நினைவு...ஏதோ ஒரு நாள் எல்லோருமே இந்த பூமியை விட்டுச் செல்லத்தான் வேண்டும்...என்றாலும்.....

  ஏன் திடீரென்று என்று ஆச்சரியமாகிவிட்டது......நீங்கள் இன்னும் முன்பு போல் போல்டாக எழுத வேண்டும்....சார் ...அதுதான் உங்களது அக்மார்க்!! அதுதான் ஜிஎம்பி சார்!!

  ReplyDelete
 20. யதார்த்தத்தை மிகவும் யதார்த்தமாகப் பகிர்ந்துகொள்ளும் தங்களது பாணி அனைவரையும் கவர்ந்ததாகும். இருப்பினும் படிக்கும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தது. தங்களது மறுமொழியைக் கண்டதும் சற்றே நிம்மதி.
  வாய்ப்பிருக்கும்போது தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண வாருங்கள்.

  ReplyDelete
 21. விழுவது எழுவதற்கே என்பதை அறியாதவரல்ல தாங்கள். நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

 22. @ ரமணி
  புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 23. @ செந்தில் குமார்
  உடல் நலம் பேணல் ஒரு அளவுக்குத்தான் சாத்தியம் அன்புக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @ துளசிதரன் தில்லையகத்து
  செர்டெம்பர் 2011--ல் முதல் முறை வீழ்ந்தபோது “ வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று எழுதி இருந்தேன் கடந்த ஆண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் விழுந்த பின் எழுதியது நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பதிவு. செய்தி ஒன்றே மூன்றாம் நிகழ்வு இப்பதிவின் காரணகர்த்தா. நிகழ்வுகள் சொல்லும் மனநிலைகள் பதிவாக. நான் எப்போதும் போல்தான் இருக்கிறேன் அன்புக்கு நன்றி.

  ReplyDelete

 25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ வே.நடனசபாபதி
  சரியாகச் சொன்னீர்கள் ஐயா. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 27. உடல் நலம் பேணவும். எங்கள் பிரார்த்தனைகள் உங்களூக்காக.

  ReplyDelete

 28. @ கீதா சாம்பசிவம்
  உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 29. எதார்த்தம் எழுத்தாய் இருந்தாலும் தங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

  ReplyDelete

 30. @ பரிவை சே குமார்
  அன்புக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 31. தாங்கள் மீண்டும் விழுந்தாலும் நல்லது தான். இன்னொரு அழகான கவிதை கிடைக்குமே! (2) இதுபோன்ற. 'கடைசி' கவிதைகளை நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள். எனினும் தங்கள் எழுத்தின் தரமே தனி!

  ReplyDelete
 32. தாங்கள் மீண்டும் விழுந்தாலும் நல்லது தான். இன்னொரு அழகான கவிதை கிடைக்குமே! (2) இதுபோன்ற. 'கடைசி' கவிதைகளை நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள். எனினும் தங்கள் எழுத்தின் தரமே தனி!

  ReplyDelete

 33. @ செல்லப்பா யக்ஞசாமி
  விழுந்து எழுந்தால் கவிதை எழுதலாம் தான் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 34. பிறப்புண்டேல் இறப்புண்டு
  என்பது தமிழின் அமுத மொழி
  இயற்கை அனுமதிக்கும் வரை செயலாற்றுவோம்
  பிறகு இயற்கையோடு இரண்டறக் கலப்போம்
  அதனால் இப்பொழுது அதனைப் பற்றிக் கவலைப் பட தேவை இல்லைஎன்பது
  என் கருத்து, ஒவ்வொரு நாளையும் புதுநாளாக போற்றுவோம்
  மகிழ்வோம்
  வலைப் பூ இருக்க தனிமை என்பதுதான் ஏது
  வலைப் பூ உறவுகளோடு உறவாடுங்கள்
  இன்பமாய் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியினையும்
  புத்தம் புதிதாய் உணருங்கள்

  ReplyDelete

 35. @ கரந்தை ஜெயக்குமார்
  என் பதிவின் எழுத்து நான் கவலைப் படுவதுபோல் காட்டுகிறதா.?கவலை ஏதும் இல்லை ஐயா நிகழ்வுகளும் சிந்தனைகளும் யதார்த்தமாகச்சொல்ல முயன்றிருக்கிறேன் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 36. பிறப்பிருக்கும் வரை இறப்பும் இருக்கும் எனும் யதார்த்தம்.....

  நல்ல கவிதை.

  தற்போது நலம் தானே.... கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்....

  ReplyDelete
 37. கடைசி ஏழு வரிகள் அற்புதம் . இன்னும் அற்புதமான கவிதைகள் ,
  இன்னும் இன்னும் எண்ணற்ற எண்ண சிறகுகள் சிறகடிக்க வேண்டி கொள்கிறோம் . Take care.

  ReplyDelete

 38. @ வெங்கட் நாகராஜ்
  யதார்த்தம் அறிந்ததின் விளைவே இப்பதிவு. நான் நலமே. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 39. @ சசிகலா
  என் பதிவுகள் இப்போதெல்லாம் எண்ணங்கள் சிறகடிப்பாலேயே எழுதப் படுகின்றன. அனுபவங்கள் பகிரப் படுகின்றன. சிலநேரங்கள் வரிகள் வசமாய் வந்துவிழும்/ நான் எதற்கும் மெனக்கெடுவதில்லை. ஒரு கவிதாயினியின் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது. நன்றி மேடம்

  ReplyDelete
 40. sir,
  Again I bring to your knowledge that Iam not poet Sasikala.

  ReplyDelete

 41. @ சசிகலா
  இனிமேல் கவனமாக இருப்பேன் மேடம் சுட்டிக்காட்டியதற்கு நன்றி

  ReplyDelete
 42. பதிவு அருமை. மனதில் ஏனோ பாரம் குடிகொள்கிறது. இதுவே சாஸ்வதம் என அறிந்த பின்னும்...

  ReplyDelete

 43. @ ஷக்திப்ரபா
  இறக்கி வையுங்கள் நான் நலமாகவே இருக்கிறேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 44. என்றோ ஒருநாள் போவோம் என்பது உறுதியாகத் தெரிஞ்ச உண்மைதானே!

  அதுக்காக பயந்து பயந்து இப்போ இருக்கும் வாழ்க்கையை ரசிக்க முடியாமல் போனால்..... நல்லாவா இருக்கும்?

  எல்லாத்தையுமே மனோ தைரியத்துடன் எதிர்கொள்ளும் உங்க உறுதி எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு!

  வாழும்வரை நலமுடன் வாழ ப்ரார்த்திக்கலாம், நாம்!

  ReplyDelete

 45. @ துளசி கோபால்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete