ஓ.....அந்தக் காலம் (தொடர்ச்சி)
------------------------------------------
அந்தக் கால நினைவுகள் சிலவற்றைப் பதிவாக்கி வருகிறேன் இதற்கு முன் வெளியிட்டிருந்த FROM ADOLESCENSE TO ADULTHOOD என்னும் பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்களில் கூனூர் மைசூர் லாட்ஜில் நான் பதினாறு வயது பிராயத்திலேயே வேலைக்குச் சென்றேனா என்னும் ஆச்சரியம் சிலரிடமிருந்து எழுந்தது. அது என் முதல் பணி அல்ல என்றும் முதல் பணி பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் என்றும் மறு மொழி கொடுத்த நினைவு.என் முதல் பணி பற்றிய பதிவை மீண்டும் பதிக்கிறேன்
பூர்வ ஜென்ம கடன்
------------------------------
பெங்களூரின் ஏழு அதிசயங்களை தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடவேண்டி பத்திரிகையில் செய்தி படித்தேன். பெங்களூரின் அதிசயங்களில் ஒன்றாக ,எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாக, நிச்சயம் இடம் பெரும் இடம் கர்நாடக அரசின் தலைமை செயலகமும் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் இடமுமான விதான சௌதா ஆகும். பிரம்மாண்டமான கருங்கல் கட்டிடம் பார்க்கும் போதெல்லாம், நானும் இந்த பிரம்மாண்டத்தை கட்டியவர்களில் பங்கு உள்ளவன் என்ற எண்ணம் ஒரு பெரு மூச்சுடன் வரும்.
1951-ல் தொடங்கி 1956-ல் முடிவடைந்த இந்த கட்டிடம் அப்போதைய முதலமைச்சர் கெங்கல் ஹனுமந்தையாவின் முயற்சியின் விளைவு. 1954-ல் பள்ளியிறுதி பரீட்சை எழுதி உயர்கல்வி படிக்க முடியாத நிலையில் பெங்களூரில் என் தாய் வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்தேன் .அரை நிஜார் போட்டு கொண்டிருந்த காலம். எதிகாலம் பற்றிய ஆயிரம் கனவுகள் ஓட ஓட விரட்டிய நேரம். மனம் விரும்பிய அளவு உடல் வளர்ந்திருக்கவில்லை. ஐந்தடி உயரம் கூட வளர்ந்திராத உடல். பதினாறு பிராயமே கடந்திராத காலம். எனக்கு ஏதாவது வேலை தேடி சம்பாதித்து என் தந்தையின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த நேரம். ஆனால் எனக்கு யார் வேலை தருவார்கள்.? என் தமக்கையின் மாமனார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னை அவருடைய நண்பர்,விதான சவ்தாவை கட்டும் ஒப்பந்ததாரர்களுள் ஒருவரிடம் ( அவர் பெயர் விலாஸ்ராவ் நாய்க் என்று நினைவு) அழைத்துச் சென்றார். அவர் கட்டிடம் கட்டத் தேவையான கருங் கற்களை செதுக்கி சீராக்கி உருவம் கொடுத்து தூண்களாகவும் விதானங்களாகவும் செய்யும் பணிகளில் ஒரு பகுதியை ஒப்பந்தத்துக்கு எடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் கற்களை செதுக்கும் தொழிலாளிகளுக்கு கொடௌனில் இருந்து கற்களை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்து, அவர்கள் செதுக்கும் பணியைக் கண்காணிப்பதும் எனக்கு வேலையாகக் கொடுக்கப்பட்டது.
காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. வெயிலில் நின்று
வேலை செய்பவர்களை கண்காணிக்க வேண்டும். யார் என்ன வேலை, எவ்வளவு
செய்தார் என்று கணக்கு வைத்துகொண்டு மாலை வீடு திரும்புமுன் ஒப்பந்த
தாரரிடம் தெரிவிக்க வேண்டும். இதுதான் என் வேலை. வாழ்வில் என் முதல்
வேலை. நான் சம்பாதிக்கப் போவதற்கு பிள்ளையார் சுழி போட்ட வேலை.
வெயிலின் கடுமையைக் குறைக்க என் தமக்கையின் மாமனார் எனக்கு ஒரு HAT
வாங்கிக் கொடுத்தார். ( அதை அணிந்துகொண்டு முதன் முதலில் என் தமக்கை
வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த நாய் ஒன்று
என்னைக் கடித்து நான் கஷ்டப்பட்டது ஒரு தனிக்கதை )நானும்
கொடுக்கப்பட்ட வேலையை உண்மையாக, திறமையாகச் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு மாதம் கழித்து முதல் மாசச் சம்பளத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கையில், எனக்கு தரப்பட்ட சம்பளம் பார்த்து மிகுந்த
ஏமாற்றமடைந்தேன். ஒரு மாதம் வெயிலில் நின்று வேலை செய்த எனக்கு
தரப்பட்ட சம்பளம் ரூபாய் இருபது. நான் அது மிகவும் குறைவு ,இன்னும்
கூடத்தரவேண்டும் என்று கேட்டேன். வேண்டும் என்றால் வாங்கிக் கொள் .
இல்லாவிட்டால் இதுவும் கிடையாது என்று அவர் கூறினார். நான் என்
தமக்கையின் மாமனாரிடம் முறையிட்டேன். "நீ அதை வாங்காதே. நான் அவனிடம்
பேசி அதிக சம்பளம் பெற்றுத் தருகிறேன்." என்று கூறினார். அந்த
ஒப்பந்ததாரரிடம் அவர் சென்று கேட்க, அவன் மறுக்க, அவர்கள் நட்பு
முறிந்தது. "உன்னைக் கோர்ட்டில் நிறுத்துவேன் " என்று மிரட்டிப்
பார்த்திருக்கிறார். ஆனால் அவனோ அதற்கும் அவரிடம் "பெப்பே" கூறிவிட்டான்.
என் தாய்மாமா ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவர் மூலம் வக்கீல் நோட்டிசும் அனுப்பப்பட்டது. ஆனால்
அது வாங்கப்படாமலேயே திரும்பி வந்தது. பின் என்ன.? நான் ஒரு மாதம் பணி
செய்ததுதான் மிச்சம். அந்த ரூபாய் இருபது கூட இல்லாமல் இலவச
உழைப்பாகி விட்டது. என் பூர்வ ஜென்ம கடனோ என்னவோ...? இப்போதும்
விதான சவ்தா வழியாகச் செல்லும்போது ,ஒரு பெருமூச்சு என்னையறியாமல்
வெளிவரும்.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
வேதனையான நினைவுகள்.
பதிலளிநீக்குஆனால் 1954 இல் இருபது ரூபாய் பெரிய தொகை இல்லையோ? உங்கள் டிமாண்ட் எவ்வளவு?
சில சமயம் இப்படித் தான் ஏமாற்றப்படுவோம். என்ன செய்வது? நான் ட்யூஷன் எடுக்கும்போது பலரும் பதினைந்து தேதிக்குள்ளாகச் சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லிக் குழந்தைகளைக் கொண்டு வந்து விடுவார்கள். எங்கே? யாரும் கொடுத்ததில்லை. எங்க பொண்ணு ஒரு பையரோடு ஆறு மாதம் மன்றாடிவிட்டு ஒரு பைசாக் கூட ஊதியமாகப் பெறவில்லை. :( என்ன தான் படிப்புச் சொல்லிக் கொடுத்தோம் என்றாலும் நமக்கும் பணம் தேவை என்பதால் தானே சொல்லிக் கொடுக்க முயன்றோம்! அதை யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். வெறுமனே பாடத்தைப் படிக்கச் சொல்பவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை என்பதே என் அனுபவம்.
பதிலளிநீக்குஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்திருக்கின்றது..
பதிலளிநீக்குமாதம் முடிந்த பின் சம்பளம் கொடுத்தபோது பேசியபடி இல்லாமல் - குறைவாக இருந்தது. நான் வாங்குவதற்கு மறுத்தபோது நாளை வந்து வாங்கிக் கொள் - என்றான்.
இதற்கு முன் இதே மாதிரி சொல்லி - வேலையாள் ஒருவனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்தவன் - அவன்.. அது சட்டென நினைவுக்கு வர தப்பித்துக் கொண்டேன்..
காலம் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கும்!..
சம்பளத்தை முன்னமே பேசியிருந்திருக்கலாம்... மறக்கவே முடியாத நினைவு ஐயா...
பதிலளிநீக்குNinaivukal Todarattum....
பதிலளிநீக்குமறக்க முடியாத வேதனை தரும் நினைவுதான். உங்களை ஏமாற்றியவன் நிச்சயம் வேறு எங்காவது அதிகம் இழந்திருப்பான்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
டிமாண்ட் என்று ஏதும் இருக்கவில்லை. செய்த வேலைக்கேற்ற கூலி அல்ல என்று தோன்றியதுவருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம். உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி மேம் .
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அது ஒரு அனுபவம். அதுவும் வாழ்வின் முதல் பணியில் ஏற்பட்ட அனுபவம். வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
அந்தவேலை என் அக்காவின் மாமனார் மூலம் வந்தது. எல்லாம் நடந்து முடிந்தபின் அப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றுவதும் ஒரு அனுபவமே. வருகைக்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
இப்போதெல்லாம் நினைவுகளே வாழ்க்கை ஜி. வருகைக்கு நன்றி.
உழைப்பு வீணாகப் போவதும், உரிய அங்கீகாரம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதும் வேதனை.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி.
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி
ஏமாற்றினான் என்று சொல்லமாட்டேன் நான் எதிர்பார்த்தது கூருதல் என்று அவன் நினைத்துவிட்டான் இருந்தால் என்ன.? அதுவும் அனுபவம்தானே. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஊமைக்கனவுகள்.
என் பணிக்கு நான் எதிர்பார்த்த அங்கீகாரம்/ கூலி கிடைக்கவில்லைஎன்று வேண்டுமானால் சொல்லலாம் எதிர் பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றமும் இல்லை. வருகைக்கு நன்றி சார்.
இனி விதான் சௌதாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் பெருமூச்சு காற்றே என்னைத் தொடும் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
எப்பொழுது பெங்களூர் பார்க்க வருகிறீர்கள் விதான சௌதாவைப் பார்க்க.? வருகைக்கு நன்றி ஜி.
அனுபவம் பெற எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது?
பதிலளிநீக்குதந்தைக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இள வயதில் தோன்றியது பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குசுவாரசியமான அனுபவம். வக்கீல் நோட்டீஸ் அனுப்ப எவ்வளவு செலவானது.?
பதிலளிநீக்குவேதனையான விஷயம் என்றாலும் தந்தைக்கு உதவ நினைத்து வேலைக்குச் சென்ற தங்களை நினைத்து சந்தோஷம் ஐயா...
பதிலளிநீக்குஅனுபவங்கள் எப்படி எல்லாம் உள்ளன..சம்பளத்தில் ஏமாற்றப்படுவது இப்போதும் நடைக்கின்றது. தனியார் பள்ளிகளில் சில எழுதுவது ஒன்று ஆனால் சம்பளம் எழுத்தில் இருப்பது போலில்லாமல் குறைவாகத்தான் இருக்கும்......20 ரூபாய் அப்பொது பெரிய தொகை என்று நினைத்திருந்தோம். 20 ரூபாயின் மதிப்பு குறைவா?
பதிலளிநீக்குவீட்டின் நிலை அறிந்து வேலைக்கு செல்வது என்பது உங்கள் பொறுப்பைக் காட்டுகிறது சார். ஆனால் மனதில் படிக்க இயலவில்லையே என்ற வருத்தமும் இருந்திருக்கும் இல்லையா....வேதனைதான்.....
விதான் சௌதா கட்டிடத்தில் தங்களின் உழைப்பும்அடங்கியிருப்பது அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குஅக்காலத்தில் ரூ.20 என்பதே பெரிய தொகைதானே?
நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
இருப்பதை விட்டுக் கொடுத்தால்தானே தியாகம்.? வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டி என் முரளிதரன்
தந்தைக்கு உதவியாய் இருப்பது தனயனின் கடமைதானே. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
வக்கீல் நோட்டிசுக்கு செலவு ஏதுமில்லை. என் வக்கீல் மாமா அனுப்பினார் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
வேலைக்குப்போவது வேதனையாகத் தோன்றவில்லை.ஆனால் எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது ஏமாற்றம் இருந்தது. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசிதரன்
20 ரூபாய்க்கு மதிப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு போல் இருக்கவில்லை வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
பெங்களூர் வந்துவிதானசௌதா பார்த்திருக்கிறீர்களா.? எனக்கும் பெருமை உண்டு அணில் பங்களிப்பில். வருகைக்கு நன்றி ஐயா
உங்களது அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. தாங்கள் அவற்றை நினைவுகூர்ந்து எழுதும் விதம் அந்த பாதிப்பினை எங்களால் முழுமையாக உணரமுடிகிறது.
பதிலளிநீக்கு