ஓ.....அந்தக் காலம் (தொடர்ச்சி)
------------------------------------------
அந்தக் கால நினைவுகள் சிலவற்றைப் பதிவாக்கி வருகிறேன் இதற்கு முன் வெளியிட்டிருந்த FROM ADOLESCENSE TO ADULTHOOD என்னும் பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்களில் கூனூர் மைசூர் லாட்ஜில் நான் பதினாறு வயது பிராயத்திலேயே வேலைக்குச் சென்றேனா என்னும் ஆச்சரியம் சிலரிடமிருந்து எழுந்தது. அது என் முதல் பணி அல்ல என்றும் முதல் பணி பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் என்றும் மறு மொழி கொடுத்த நினைவு.என் முதல் பணி பற்றிய பதிவை மீண்டும் பதிக்கிறேன்
பூர்வ ஜென்ம கடன்
------------------------------
பெங்களூரின் ஏழு அதிசயங்களை தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடவேண்டி பத்திரிகையில் செய்தி படித்தேன். பெங்களூரின் அதிசயங்களில் ஒன்றாக ,எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாக, நிச்சயம் இடம் பெரும் இடம் கர்நாடக அரசின் தலைமை செயலகமும் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் இடமுமான விதான சௌதா ஆகும். பிரம்மாண்டமான கருங்கல் கட்டிடம் பார்க்கும் போதெல்லாம், நானும் இந்த பிரம்மாண்டத்தை கட்டியவர்களில் பங்கு உள்ளவன் என்ற எண்ணம் ஒரு பெரு மூச்சுடன் வரும்.
1951-ல் தொடங்கி 1956-ல் முடிவடைந்த இந்த கட்டிடம் அப்போதைய முதலமைச்சர் கெங்கல் ஹனுமந்தையாவின் முயற்சியின் விளைவு. 1954-ல் பள்ளியிறுதி பரீட்சை எழுதி உயர்கல்வி படிக்க முடியாத நிலையில் பெங்களூரில் என் தாய் வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்தேன் .அரை நிஜார் போட்டு கொண்டிருந்த காலம். எதிகாலம் பற்றிய ஆயிரம் கனவுகள் ஓட ஓட விரட்டிய நேரம். மனம் விரும்பிய அளவு உடல் வளர்ந்திருக்கவில்லை. ஐந்தடி உயரம் கூட வளர்ந்திராத உடல். பதினாறு பிராயமே கடந்திராத காலம். எனக்கு ஏதாவது வேலை தேடி சம்பாதித்து என் தந்தையின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த நேரம். ஆனால் எனக்கு யார் வேலை தருவார்கள்.? என் தமக்கையின் மாமனார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னை அவருடைய நண்பர்,விதான சவ்தாவை கட்டும் ஒப்பந்ததாரர்களுள் ஒருவரிடம் ( அவர் பெயர் விலாஸ்ராவ் நாய்க் என்று நினைவு) அழைத்துச் சென்றார். அவர் கட்டிடம் கட்டத் தேவையான கருங் கற்களை செதுக்கி சீராக்கி உருவம் கொடுத்து தூண்களாகவும் விதானங்களாகவும் செய்யும் பணிகளில் ஒரு பகுதியை ஒப்பந்தத்துக்கு எடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் கற்களை செதுக்கும் தொழிலாளிகளுக்கு கொடௌனில் இருந்து கற்களை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்து, அவர்கள் செதுக்கும் பணியைக் கண்காணிப்பதும் எனக்கு வேலையாகக் கொடுக்கப்பட்டது.
காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. வெயிலில் நின்று
வேலை செய்பவர்களை கண்காணிக்க வேண்டும். யார் என்ன வேலை, எவ்வளவு
செய்தார் என்று கணக்கு வைத்துகொண்டு மாலை வீடு திரும்புமுன் ஒப்பந்த
தாரரிடம் தெரிவிக்க வேண்டும். இதுதான் என் வேலை. வாழ்வில் என் முதல்
வேலை. நான் சம்பாதிக்கப் போவதற்கு பிள்ளையார் சுழி போட்ட வேலை.
வெயிலின் கடுமையைக் குறைக்க என் தமக்கையின் மாமனார் எனக்கு ஒரு HAT
வாங்கிக் கொடுத்தார். ( அதை அணிந்துகொண்டு முதன் முதலில் என் தமக்கை
வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த நாய் ஒன்று
என்னைக் கடித்து நான் கஷ்டப்பட்டது ஒரு தனிக்கதை )நானும்
கொடுக்கப்பட்ட வேலையை உண்மையாக, திறமையாகச் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு மாதம் கழித்து முதல் மாசச் சம்பளத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கையில், எனக்கு தரப்பட்ட சம்பளம் பார்த்து மிகுந்த
ஏமாற்றமடைந்தேன். ஒரு மாதம் வெயிலில் நின்று வேலை செய்த எனக்கு
தரப்பட்ட சம்பளம் ரூபாய் இருபது. நான் அது மிகவும் குறைவு ,இன்னும்
கூடத்தரவேண்டும் என்று கேட்டேன். வேண்டும் என்றால் வாங்கிக் கொள் .
இல்லாவிட்டால் இதுவும் கிடையாது என்று அவர் கூறினார். நான் என்
தமக்கையின் மாமனாரிடம் முறையிட்டேன். "நீ அதை வாங்காதே. நான் அவனிடம்
பேசி அதிக சம்பளம் பெற்றுத் தருகிறேன்." என்று கூறினார். அந்த
ஒப்பந்ததாரரிடம் அவர் சென்று கேட்க, அவன் மறுக்க, அவர்கள் நட்பு
முறிந்தது. "உன்னைக் கோர்ட்டில் நிறுத்துவேன் " என்று மிரட்டிப்
பார்த்திருக்கிறார். ஆனால் அவனோ அதற்கும் அவரிடம் "பெப்பே" கூறிவிட்டான்.
என் தாய்மாமா ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவர் மூலம் வக்கீல் நோட்டிசும் அனுப்பப்பட்டது. ஆனால்
அது வாங்கப்படாமலேயே திரும்பி வந்தது. பின் என்ன.? நான் ஒரு மாதம் பணி
செய்ததுதான் மிச்சம். அந்த ரூபாய் இருபது கூட இல்லாமல் இலவச
உழைப்பாகி விட்டது. என் பூர்வ ஜென்ம கடனோ என்னவோ...? இப்போதும்
விதான சவ்தா வழியாகச் செல்லும்போது ,ஒரு பெருமூச்சு என்னையறியாமல்
வெளிவரும்.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------


